Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் யார்?

கடவுள் யார்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுள் யார்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுள் யார்?

எல்லாவற்றையும் படைத்தவரே உண்மையான கடவுள். அவரை, “நித்திய ராஜா” என பைபிள் அழைக்கிறது. இதன் அர்த்தம், அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதே. (வெளிப்படுத்துதல் 15:3) உயிருக்கு மூல காரணர் கடவுள் என்பதால், நாம் அவரை மட்டுமே வணங்க வேண்டும்.வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.

2. கடவுள் எப்படிப்பட்டவர்?

கடவுளை யாருமே பார்த்ததில்லை. ஏனென்றால், அவர் காண முடியாதவர். பூமியில் வாழும் உயிர்களுக்கு அப்பாற்பட்டவர். (யோவான் 1:18; 4:24) கடவுளுடைய சுபாவம் அவருடைய படைப்புகளில் பளிச்சிடுகிறது. விதவிதமான பழங்களை, வண்ண வண்ணப் பூக்களை, அவற்றின் வடிவமைப்புகளை நாம் பார்க்கும்போது, அவருடைய அன்பையும் ஞானத்தையும் புரிந்துகொள்கிறோம். பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது அவருடைய வல்லமையை உணர்ந்துகொள்கிறோம்.ரோமர் 1:20-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய சுபாவத்தை பைபிளிலிருந்து நாம் இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, கடவுளுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது; மக்களை அவர் எப்படி நடத்துகிறார், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பற்றியும் அது சொல்கிறது.சங்கீதம் 103:7-10-ஐ வாசியுங்கள்.

3. கடவுளுக்குப் பெயர் இருக்கிறதா?

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:9) கடவுளுக்குப் பல்வேறு பட்டப்பெயர்கள் இருந்தாலும், அவருக்குத் தனிப்பட்ட ஒரு பெயர் இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அது வித்தியாசமாக உச்சரிக்கப்படுகிறது. தமிழில், ‘யெகோவா’ என உச்சரிக்கப்படுகிறது.சங்கீதம் 83:17-ஐ வாசியுங்கள்.

கடவுளுடைய பெயர் அநேக பைபிள்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது; அதற்குப் பதிலாக கர்த்தர் அல்லது ஆண்டவர் என்ற பட்டப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், பைபிள் எழுதப்பட்டபோது, கடவுளுடைய பெயர் சுமார் 7,000 இடங்களில் இருந்தது. இயேசு வேதவசனங்களை மக்களுக்கு விளக்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினார். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார்.யோவான் 17:26-ஐ வாசியுங்கள்.

4. யெகோவாவுக்கு நம்மீது அக்கறை இருக்கிறதா?

யெகோவா நம் ஜெபங்களைக் காதுகொடுத்துக் கேட்பதே அவருக்கு நம்மீது அக்கறை இருப்பதைக் காட்டுகிறது. (சங்கீதம் 65:2) இந்த உலகில் துன்ப துயரங்கள் அதிகரித்துவருவதால், கடவுளுக்கு நம்மீது அக்கறை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? நம்மைச் சோதிப்பதற்காகவே கடவுள் கஷ்டங்களைத் தருகிறார் என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால் அது உண்மையல்ல. ஏனென்றால், “உண்மைக் கடவுள் தீங்கு செய்யவே மாட்டார்” என்று பைபிள் சொல்கிறது.—யோபு 34:10, NW; யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.

கடவுள், தெரிவு செய்யும் சுதந்திரத்தை மனிதர்களுக்கு அளித்திருக்கிறார். கடவுளை வழிபடுகிற விஷயத்திலும் நமக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறது; இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம், அல்லவா? (யோசுவா 24:15) ஆனால், தெரிவு செய்யும் சுதந்திரத்தை மக்கள் தவறாகப் பயன்படுத்தி, சக மனிதருக்குத் தீங்கு செய்கிறார்கள்; அதனால்தான் உலகில் துன்ப துயரங்கள் அதிகரித்திருக்கின்றன. இப்படிப்பட்ட அக்கிரம அநியாயங்களைக் கண்டு யெகோவா மன வேதனைப்படுகிறார்.ஆதியாகமம் 6:5, 6-ஐ வாசியுங்கள்.

துன்ப துயரங்களையும் அவற்றுக்குக் காரணமானவர்களையும் இயேசுவின் மூலமாக யெகோவா சீக்கிரத்தில் ஒழித்துக்கட்டுவார். அதுவரை துன்பங்களை யெகோவா தற்காலிகமாக அனுமதிப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. இத்தொடரில் இனி வரும் ஒரு கட்டுரை அதை விளக்கும்.ஏசாயா 11:4-ஐ வாசியுங்கள்.

5. நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார்?

நம்மால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், அவர்மீது அன்பு காட்டவும் முடியும்; அந்தத் திறனோடுதான் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். அதனால், தம்மைப் பற்றிய சத்தியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4) பைபிளை நாம் ஆழ்ந்து படித்தால், கடவுளைப் பற்றி அறிந்துகொண்டு அவருக்கு நண்பராகலாம்.நீதிமொழிகள் 2:4, 5-ஐ வாசியுங்கள்.

யெகோவா நமக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார்; ஆகவே, நாம் வேறு யாரையும்விட அவரைத்தான் அதிகமாக நேசிக்க வேண்டும். அவரிடம் ஜெபம் செய்வதன் மூலமாகவும், அவர் எதிர்பார்க்கிற காரியங்களைச் செய்வதன் மூலமாகவும், அவர்மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டலாம். (நீதிமொழிகள் 15:8) மற்றவர்களிடம் நாம் அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.மாற்கு 12:29-31-ஐயும் 1 யோவான் 5:3-ஐயும் வாசியுங்கள். (w11-E 02/01)

கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் முதலாம் அதிகாரத்தைப் பாருங்கள்.

[பக்கம் 23-ன் படம்]

துன்பங்களை யெகோவா தற்காலிகமாக அனுமதித்திருப்பதற்கு நியாயமான காரணம் இருக்குமா?