Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யெகோவாவின் தயவைத் தேடினார்’

‘யெகோவாவின் தயவைத் தேடினார்’

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

‘யெகோவாவின் தயவைத் தேடினார்’

“என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது” என்று ஒருவர் சொன்னார். அவர் சிறுவயது முதல் கடவுளுடைய நீதிநெறிகளை அறிந்திருந்தார்; என்றாலும், அதன்படி வாழாமல் விட்டுவிட்டார். பிறகு, தவறை உணர்ந்து தன் பாதையை மாற்றிக்கொள்ள அவர் முயற்சி செய்தபோது, கடவுள் தன்னை மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்தார். ஆனால், பைபிளிலிருந்து மனாசேயின் பதிவை வாசித்தபோது அவருடைய மனதில் நம்பிக்கை துளிர்த்தது; இந்தப் பதிவு 2 நாளாகமம் 33:1-17-ல் உள்ளது. கடந்த கால பாவங்களை நினைத்து நீங்களும் இவரைப் போலவே உணர்ந்தீர்கள் என்றால், மனாசேயின் வாழ்க்கைச் சரிதையைப் படிப்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.

மனாசே கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டார். அவருடைய அப்பா எசேக்கியா, யூதாவின் தலைசிறந்த ராஜாக்களில் ஒருவராக இருந்தார். எசேக்கியாவின் ஆயுளைக் கடவுள் அற்புதமாகக் கூட்டியதற்குப் பிற்பாடு, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து மனாசே பிறந்தார். (2 இராஜாக்கள் 20:1-11) அதனால், கடவுள் தன்மீது இரக்கப்பட்டு தனக்கு இந்த மகனைப் பரிசாகத் தந்திருப்பதாக எசேக்கியா கருதினார்; தன் மகனுக்கு உண்மை வழிபாட்டின்மீது அன்பை ஊட்டி வளர்க்க முயன்றார். ஆனால், பெற்றோருக்குக் கடவுள் பயம் இருந்தால் பிள்ளைகளுக்கும் கடவுள் பயம் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. மனாசேயின் விஷயத்திலும் இதுவே உண்மை.

மனாசேவுக்குக் கிட்டத்தட்ட 12 வயதாக இருந்தபோது அவருடைய அப்பா இறந்துவிட்டார். வருத்தகரமாக, ‘அவர் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்.’ (வசனங்கள் 1, 2) உண்மை வழிபாட்டைத் துளியும் மதிக்காத ஆலோசகர்களின் செல்வாக்கால் இந்த இளம் ராஜா இப்படிச் செய்தாரா? அதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், மனாசே சிலை வழிபாட்டிலும் கொடூரச் செயல்களிலும் மிதமிஞ்சி ஈடுபட்டார் என்பதை பைபிள் ஒத்துக்கொள்கிறது. அவர் பொய்க் கடவுட்களுக்குப் பலிபீடங்களைக் கட்டினார், சொந்த மகன்களையே பலியிட்டார், ஆவியுலகத் தொடர்பிலும் ஈடுபட்டார், எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்திலேயே அருவருப்பான உருவச் சிலையை நிறுவினார். யெகோவா அவருக்குக் கொடுத்த எச்சரிப்புகளுக்கெல்லாம் தன் காதுகளை அடைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அவருடைய அப்பாவின் ஆயுளை யெகோவா அற்புதமாகக் கூட்டியதால்தான் அவரே இந்தப் பூமியில் பிறந்தார்; அப்படியிருந்தும் யெகோவாவின் எச்சரிப்புகளை உதறித்தள்ளினார்.—வசனங்கள் 3-10.

அதனால், பாபிலோனியர் அவரைச் சங்கிலியால் கட்டி நாடுகடத்த யெகோவா விட்டுவிட்டார். அங்கே சிறையிலிருந்த மனாசேவுக்குத் தன் வாழ்க்கையைப் பின்நோக்கிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. உயிரோ சக்தியோ இல்லாத அந்த சிலைகளால் தன்னைக் காப்பாற்ற முடியவில்லை என்பதை அவர் புரிந்துகொண்டாரா? கடவுள் பயமுள்ள தன் அப்பா சிறுவயது முதல் தனக்குக் கற்பித்த விஷயங்களை அசைபோட்டு பார்த்தாரா? இப்படியெல்லாம் செய்தாரா இல்லையா என்று நமக்குத் தெரியாது; ஆனால், அவருடைய மனம் மாறியது என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும். பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவர் தன் கடவுளாகிய யெகோவாவின் தயவைத் தேடி தன்னை மிகவும் தாழ்த்தினார். . . . அவர் தொடர்ந்து ஜெபம் செய்தார்.” a (வசனங்கள் 12, 13, NW) என்றாலும், இப்படிப்பட்ட படுமோசமான பாவங்களைச் செய்த ஒருவரைக் கடவுள் மன்னிப்பாரா?

மனாசே காட்டிய உள்ளப்பூர்வமான மனந்திரும்புதலைப் பார்த்து யெகோவா மனமுருகிப்போனார். இரக்கம் காட்டும்படி அவர் கெஞ்சியதை யெகோவா கேட்டு, ‘அவரை எருசலேமுக்குத் திரும்ப வரப்பண்ணி அரசதிகாரத்தைத் தந்தார்.’ (வசனம் 13) மனாசே தான் மனந்திரும்பியதை எப்படிக் காட்டினார்? தான் செய்திருந்த தவறுகளைச் சரிசெய்ய எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தார்; தன்னுடைய தேசத்திலிருந்து சிலை வழிபாட்டை அகற்றி, ‘யெகோவாவைச் சேவிக்கும்படி’ மக்களுக்குக் கட்டளையிட்டார்.—வசனங்கள் 15-17.

கடந்த கால தவறுகள் காரணமாக ‘கடவுளுடைய மன்னிப்பைப் பெற எனக்கு அருகதையில்லை’ என நீங்கள் நினைத்தால், மனாசேயின் உதாரணம் உங்கள் மனதுக்குத் தெம்பூட்டும். இவரைப் பற்றிய பதிவு கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளில் உள்ளது. (ரோமர் 15:4) ஆம், யெகோவா “மன்னிக்கத் தயாராய் இருக்கிறார்” என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். (சங்கீதம் 86:5, NW) ஒருவர் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்திருக்கிறார் என்பதை அல்ல, அவர் எந்தளவு மனந்திரும்பியிருக்கிறார் என்பதையே யெகோவா பார்க்கிறார். எனவே, தன்னுடைய பாவங்களை நினைத்து மனம் வருந்தி ஜெபம் செய்கிற ஒருவர், தவறான வழிகளை மாற்றிக்கொண்டு, சரியானதைச் செய்வதற்கு பெருமுயற்சி செய்தால் மனாசேயைப் போல, ‘யெகோவாவின் தயவை’ பெறலாம்.—ஏசாயா 1:18; 55:6, 7. (w11-E 01/01)

[அடிக்குறிப்பு]

a யங்ஸ் லிட்ரல் டிரான்ஸ்லேஷன் இவ்வாறு சொல்கிறது: “அவர் தன் . . . கடவுளாகிய யெகோவாவின் கோபத்தைத் தணித்தார்.”