Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளை வணங்க சரியான வழியை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

கடவுளை வணங்க சரியான வழியை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

கடவுளை வணங்க சரியான வழியை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. கடவுளை வணங்க ஒரே வழிதான் இருக்கிறதா?

ஆம். இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு ஒரே ஒரு வழியை, உண்மை வணக்கத்தை, பற்றிக் கற்றுக்கொடுத்தார். அதுவே வாழ்வுக்கு வழிநடத்தும் பாதை. “அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:14) பைபிள் சொல்வதுபோல் வணங்கினால்தான் கடவுள் ஏற்றுக்கொள்வார். உண்மை வணக்கத்தார் அப்படித்தான் செய்கிறார்கள், அவர்கள் மத்தியில் பிரிவினை இல்லை, எல்லாரும் ஒரே விசுவாசம் உடையவர்கள்.—யோவான் 4:23, 24; 14:6-ஐயும் எபேசியர் 4:4, 5-ஐயும் வாசியுங்கள்.

2. கிறிஸ்தவ மதத்தில் ஏன் இவ்வளவு பிரிவுகள் இருக்கின்றன?

இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, பொய் போதகர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ மதத்தைத் தங்களுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இயேசு சொன்னது போலவே தங்களை, அவரது ‘செம்மறியாடாக’ காட்டிக்கொண்டார்கள். ஆனால், பசிவெறிபிடித்த ஓநாய்களைப் போல் செயல்பட்டார்கள். (மத்தேயு 7:13-15, 21, 23) குறிப்பாக, இயேசுவுடைய அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப் பிறகே பல பொய் போதனைகள் கிறிஸ்தவத்தில் பரவ ஆரம்பித்தன.அப்போஸ்தலர் 20:29, 30-ஐ வாசியுங்கள்.

3. உண்மை வணக்கத்தை அடையாளங்காட்டும் சில விஷயங்கள் யாவை?

உண்மை வணக்கத்தார் பைபிளைக் கடவுளுடைய புத்தகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ கடுமையாக முயற்சி செய்கிறார்கள். ஆகவே, மனிதர்களுடைய எண்ணங்களால் உருவான மதங்களிலிருந்து உண்மை மதம் வித்தியாசப்பட்டிருக்கிறது. (மத்தேயு 15:7-9) உண்மை வணக்கத்தார் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வதில்லை, தாங்களும் அதைக் கடைப்பிடிக்கிறார்கள்.யோவான் 17:17-ஐயும் 2 தீமோத்தேயு 3:16, 17-ஐயும் வாசியுங்கள்.

உண்மை மதம் கடவுளுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறது, அவருடைய பெயர் யெகோவா. கடவுளுடைய பெயரை இயேசு மற்றவர்களுக்குச் சொன்னார். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவினார்; கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்று ஜெபம் செய்யவும் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) நீங்கள் வசிக்கிற இடத்தில், யெகோவா என்ற பெயரைப் பயன்படுத்துகிறவர்கள் இருக்கிறார்களா?யோவான் 17:26-ஐயும் ரோமர் 10:13, 14-ஐயும் வாசியுங்கள்.

4. உண்மை வணக்கத்தாரை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

உண்மை வணக்கத்தார் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். இந்த அரசாங்கத்தைப் பற்றி அறிவிக்கவே இயேசுவைக் கடவுள் அனுப்பினார். கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே மனிதர்களுடைய பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்கும். இயேசு, இறுதி மூச்சுவரை அதைப் பற்றியே மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். (லூக்கா 4:43; 8:1; 23:42, 43) தம்மைப் பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவர் சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி உங்களிடம் வந்து பேசுகிறவர்கள் யார்?மத்தேயு 10:7; 24:14-ஐ வாசியுங்கள்.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் இந்தப் பொல்லாத உலகத்தைப் பின்பற்ற மாட்டார்கள். அரசியல் விவகாரங்களிலும் சண்டைச் சச்சரவுகளிலும் அவர்கள் கலந்துகொள்வதில்லை. (யோவான் 17:16) இந்த உலக மக்களுடைய மோசமான மனப்பான்மையையோ கெட்ட பழக்கவழக்கங்களையோ அவர்கள் பின்பற்றுவதில்லை.யாக்கோபு 1:27; 4:4-ஐ வாசியுங்கள்.

5. உண்மை வணக்கத்தாரின் முக்கிய அடையாளம் எது?

உண்மை வணக்கத்தார் ஒருவர்மேல் ஒருவர் அளவில்லா அன்பைக் காண்பிப்பார்கள். எல்லா இனத்தாரையும் மதிக்க வேண்டும் என்பதைக் பைபிளிலிருந்து அவர்கள் கற்றிருக்கிறார்கள். நாடுகளுக்கிடையே நடக்கும் போர்களைப் பொய் மதம் அடிக்கடி ஆதரித்திருக்கிறது; ஆனால், உண்மை வணக்கத்தார் போர்களை ஆதரிப்பதில்லை. (மீகா 4:1-4) தங்களுடைய நேரம், திறமை, பணம், பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்தி சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவுகிறார்கள், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.யோவான் 13:34, 35-ஐயும் 1 யோவான் 4:20, 21-ஐயும் வாசியுங்கள்.

இன்றைக்கு யார் எல்லாவற்றையும் பைபிள் சொல்கிறபடி போதிக்கிறார்கள்? கடவுளுடைய பெயருக்கு யார் புகழ் சேர்க்கிறார்கள்? கடவுளுடைய அரசாங்கம் மட்டுமே மனிதர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று யார் அறிவிக்கிறார்கள்? போரில் கலந்துகொள்ளாத மக்கள் யார்? ஒருவருக்கொருவர் அன்பைக் காட்டுகிறவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே என்பதை யாராலும் மறுக்க முடியாது.—1 யோவான் 3:10-12. (w11-E 08/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் 15-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்.

[பக்கம் 16-ன் படம்]

“கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வெளிப்படையாய் அறிவித்தாலும், தங்கள் செயல்களால் அவரை நிராகரித்துவிடுகிறார்கள்.”—தீத்து 1:16