நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகளை நீங்களும் கேட்டிருக்கலாம். பைபிள் சொல்லும் பதில்களைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை வாசியுங்கள். அதைப் பற்றி உங்களுக்கு விளக்க யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.
1. நண்பர்களை ஏன் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
மற்றவர்கள் நம்மை நண்பராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று பொதுவாக எல்லாருமே விரும்புவோம். இதனால் நாமும் அவர்களைப் போல நடந்துகொள்ள ஆசைப்படுகிறோம். ஆம், நம் இருதயத்தின் எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிவிடும் சக்தி நண்பர்களுக்கு இருக்கிறது. நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்துதான் நாம் எப்படிப்பட்டவர்களாக ஆவோம் என்று சொல்ல முடியும்.—நீதிமொழிகள் 4:23; 13:20-ஐ வாசியுங்கள்.
பைபிள் எழுத்தாளர்களில் ஒருவரான தாவீது நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுத்தார். கடவுளுக்கு உண்மையாய் இருக்க உதவியவர்களோடு மட்டுமே நட்பு வைத்திருந்தார். (சங்கீதம் 26:4, 5, 11, 12) உதாரணமாக, தாவீது யோனத்தானோடு நட்பு வைத்திருந்தார். ஏனென்றால் யோனத்தான் யெகோவா மீது நம்பிக்கை வைக்க உதவினார்.—1 சாமுவேல் 23:16-18-ஐ வாசியுங்கள்.
2. நீங்கள் எப்படி கடவுளுடைய நண்பராகலாம்?
யெகோவா சர்வ வல்லவராக இருந்தாலும் நாம் அவருடைய நண்பராக முடியும். உதாரணமாக, ஆபிரகாம் கடவுளுடைய நண்பரானார். ஆபிரகாம் யெகோவாவை நம்பினார், அவருக்குக் கீழ்ப்படிந்தார். அதனால்தான் அவர் ஆபிரகாமை நண்பராக ஏற்றுக்கொண்டார். (ஆதியாகமம் 22:2, 9-12; யாக்கோபு 2:21-23) யெகோவாமேல் நம்பிக்கை வைத்து அவர் சொல்படி நடந்தால் நாமும் அவருடைய நண்பராகலாம்.—சங்கீதம் 15:1, 2-ஐ வாசியுங்கள்.
3. நல்ல நண்பர்களால் எப்படிப் பயனடையலாம்?
நல்ல நண்பர்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்பார்கள், சரியானதைச் செய்ய உதவுவார்கள். (நீதிமொழிகள் 17:17; 18:24) யோனத்தானை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தாவீதைவிட சுமார் 30 வயது மூத்தவர், இஸ்ரவேலில் அடுத்த ராஜாவாகும் உரிமை பெற்றவர். ஆனாலும் கடவுளால் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவீதுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தார். நீங்கள் தவறான வழியில் போகும்போது நல்ல நண்பர்கள் உங்களை நல்வழிப்படுத்துவார்கள். (சங்கீதம் 141:5) கடவுளை நேசிக்கும் நண்பர்கள் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவுவார்கள்.—1 கொரிந்தியர் 15:33-ஐ வாசியுங்கள்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் உங்களைப் போலவே நல்லதைச் செய்ய விரும்பும் ஜனங்களைப் பார்க்க முடியும். கடவுளுக்குப் பிரியமாக நடக்க ஊக்கப்படுத்தும் நல்ல நண்பர்கள் அங்கே கிடைப்பார்கள்.—எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.
கடவுளை நேசிக்கும் நண்பர்கள்கூட சில சமயங்களில் நம்மைப் புண்படுத்திவிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் சட்டென எரிச்சல் அடைந்து விடாதீர்கள். (பிரசங்கி 7:9, 20-22) ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்: தவறே செய்யாத நண்பர்கள் யாருமே இல்லை; என்றாலும், கடவுளை நேசிக்கும் நண்பர்கள் நமக்கு பொக்கிஷம் போன்றவர்கள். சக கிறிஸ்தவர்களின் குறைகளைப் பொறுத்துக்கொள்ளும்படி கடவுளுடைய வார்த்தை நமக்கு அறிவுரை கொடுக்கிறது.—கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.
4. “நண்பர்கள்” எதிர்த்தால் என்ன செய்வது?
ஒருவரின் உதவியோடு நீங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பிக்கும்போது நண்பர்கள் சிலர் உங்களை எதிர்க்கலாம். ஏனென்றால், பைபிள் தரும் நல்ல ஆலோசனைகளையும் எதிர்கால நம்பிக்கையையும் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.—கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.
இன்னும் சில “நண்பர்கள்” பைபிளில் உள்ள அருமையான சத்தியங்களைக் கேலி செய்யலாம். (2 பேதுரு 3:3, 4) நல்லதைச் செய்ய நீங்கள் முயலும்போது சிலர் கிண்டல் செய்யலாம். (1 பேதுரு 4:4) அந்த சமயத்தில் அவர்களோடுள்ள நட்பா அல்லது கடவுளோடுள்ள நட்பா, எது முக்கியம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், கடவுளுடைய நட்பை தேர்ந்தெடுப்பதுதான் மிகச் சிறந்த தீர்மானமாக இருக்கும்.—யாக்கோபு 4:4, 8-ஐ வாசியுங்கள். (w11-E 12/01)
கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தில் 12, 19 அதிகாரங்களைப் பாருங்கள்.