Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மோசே—மனத்தாழ்மைக்குப் பேர்போனவர்!

மோசே—மனத்தாழ்மைக்குப் பேர்போனவர்!

மனத்தாழ்மை என்றால் என்ன?

மனத்தாழ்மை என்பது அகம்பாவமும் பெருமையும் இல்லாத குணம். மனத்தாழ்மையுள்ள ஒரு நபர் மற்றவர்களை மட்டமாகக் கருத மாட்டார். தன்னிடமும் குறைகள் இருப்பதை நினைவில் வைப்பார், தன்னுடைய வரம்புகளை மனதில் வைத்து அடக்கமாக நடந்துகொள்வார்.

மோசே எப்படி மனத்தாழ்மை காட்டினார்?

அதிகாரம் கிடைத்தவுடன் மோசேக்கு அகம்பாவம் வந்துவிடவில்லை. பெரும்பாலும், ஒரு நபருக்குக் கொஞ்சம் அதிகாரம் கிடைத்தவுடன் அவர் மனத்தாழ்மையுள்ளவரா இல்லையா என்பது வெட்டவெளிச்சமாகிவிடும். “ஒருவர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள விருப்பமா? அப்படியானால் அவர் கையில் அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர் ராபர்ட் இங்கர்சால் எழுதினார். ஆனால், மோசே அதற்கு விதிவிலக்கு. மனத்தாழ்மைக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். எப்படி?

இஸ்ரவேலரை வழிநடத்திச் செல்ல மோசேயை யெகோவா நியமித்ததால், அவருக்கு நிறைய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. என்றாலும், அவர் தலைக்கனம் அடையவில்லை. உதாரணமாக, சொத்துரிமை சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலான வழக்குக்குத் தீர்வுகாணும்போது எப்படித் தாழ்மையாக நடந்துகொண்டார் எனப் பார்ப்போம். (எண்ணாகமம் 27:1-11) அது ஒரு முக்கிய வழக்காக இருந்தது; ஏனென்றால், அவர் எடுக்கவிருந்த தீர்வு, அதுபோன்ற பிற்கால வழக்குகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக இருந்தது.

அப்போது மோசே என்ன செய்தார்? ‘நான் இஸ்ரவேலரின் தலைவன், என்ன தீர்ப்பு வழங்க வேண்டுமென எனக்குத் தெரியும்’ என்று நினைத்தாரா? தன் சொந்தத் திறமையிலோ நீண்டகால அனுபவத்திலோ நம்பிக்கை வைத்தாரா? ‘யெகோவா எப்படித் தீர்ப்பு வழங்குவார் என எனக்கு நன்றாகத் தெரியும்’ என்று நினைத்தாரா?

பெருமைபிடித்த ஒருவர் அப்படித்தான் நினைத்திருப்பார். ஆனால், மோசே அப்படி நினைக்கவில்லை. “மோசே அவர்களுடைய வழக்கை யெகோவாவிடம் கொண்டுபோனார்” என்று பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 27:5, NW) இதை யோசித்துப் பாருங்கள்: இஸ்ரவேல் மக்களை வழிநடத்துவதில் 40 ஆண்டுகால அனுபவம் இருந்தபோதிலும், மோசே தன்மீது அல்ல யெகோவா மீதே சார்ந்திருந்தார். மோசே எந்தளவு மனத்தாழ்மையுள்ளவர் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?

எல்லா அதிகாரமும் தனக்கே இருக்க வேண்டும் என்ற எண்ணம் மோசேயின் மனதில் எட்டிகூட பார்க்கவில்லை. தீர்க்கதரிசிகளாகச் செயல்பட இன்னும் சில இஸ்ரவேலருக்கு யெகோவா வாய்ப்பளித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார். (எண்ணாகமம் 11:24-29) சில வேலைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும்படி அவருடைய மாமனார் ஆலோசனை கொடுத்தபோது அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (யாத்திராகமம் 18:13-24) தன் கடைசி காலத்தில், திடகாத்திரமாக இருந்தபோதிலும், தனக்குப்பின் இஸ்ரவேலரை வழிநடத்த யாரையாவது நியமிக்குமாறு கடவுளிடம் கேட்டார். யெகோவா யோசுவாவை நியமித்தபோது, அந்த இளைஞரை மோசே உள்ளப்பூர்வமாக ஆதரித்தார், யோசுவாவின் தலைமையில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குச் செல்லும்படி மக்களை ஊக்கப்படுத்தினார். (எண்ணாகமம் 27:15-18; உபாகமம் 31:3-6; 34:7) இஸ்ரவேலரை ஆன்மீக ரீதியில் வழிநடத்துகிற பாக்கியத்தை மோசே உயர்வாய் மதித்தார். ஆனால், அதிகாரம்... அதிகாரம்... என்று அதையே பிடித்துக்கொண்டு மற்றவர்களுடைய நலனை அவர் அசட்டை செய்யவில்லை.

நமக்குப் பாடங்கள்:

அதிகாரம் இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதற்காக தலைக்கனம் நமக்குள் தலைகாட்ட அனுமதிக்கக் கூடாது. நினைவில் வையுங்கள்: நாம் யெகோவாவின் கையில் நல்ல கருவியாக இருக்க வேண்டுமானால், திறமையைவிட தாழ்மைதான் நமக்கு அவசியம். (1 சாமுவேல் 15:17) நாம் உண்மையில் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தால், பைபிளிலுள்ள இந்த ஞானமான அறிவுரையைப் பின்பற்ற கடினமாக முயற்சிப்போம்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து.”—நீதிமொழிகள் 3:5, 6.

இன்னொரு பாடம்: அந்தஸ்துக்கோ அதிகாரத்துக்கோ நாம் அளவுக்கதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.

மோசேயைப் போல மனத்தாழ்மை காட்டினால் நாம் பயனடைவோமா? ஆம், சந்தேகமே இல்லை! அப்படிக் காட்டினால், மற்றவர்கள் நம்மோடு பழகப் பிரியப்படுவார்கள், நாமும் அவர்களுடைய பிரியத்துக்குரியவர்களாய் ஆவோம். அதைவிட முக்கியமாக, இந்த அருமையான குணத்தை வெளிக்காட்டுகிற யெகோவா தேவனுக்குப் பிரியமானவர்களாய் ஆவோம். “கர்வமுள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அளவற்ற கருணையை அருளுகிறார்.” (1 பேதுரு 5:5) மோசேயைப் போல் மனத்தாழ்மை காட்ட இதைவிட வேறு காரணம் நமக்கு வேண்டுமா? (w13-E 02/01)