கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
யெகோவாவுக்கு உங்கள்மீது நிஜமாகவே அக்கறை இருக்கிறதா?
“நான் எதற்குமே லாயக்கற்றவள் என்ற எண்ணம்தான், யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது; அதை எதிர்த்து நான் போராடிக்கொண்டிருக்கிறேன்.” இப்படித்தான் ஒரு பெண் சொன்னாள். தன்மீது யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறது என்பதையே அவளால் நம்ப முடியவில்லை. நீங்களும் அந்தப் பெண்ணைப் போலவே உணருகிறீர்களா? ஒருவேளை நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘யெகோவா தம் வணக்கத்தார் ஒவ்வொருவர்மீதும் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறாரா?’ ‘ஆம்’ என்பதே அதற்குப் பதில்! நம் ஒவ்வொருவர்மீதும் யெகோவா தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதற்கு இயேசுவின் வார்த்தைகள் அத்தாட்சி அளிக்கின்றன.—யோவான் 6:44-ஐ வாசியுங்கள்.
யெகோவாவின் குணங்களையும் அவருடைய விருப்பு வெறுப்புகளையும் பற்றி வேறு எவரைக் காட்டிலும் அதிகமாகத் தெரிந்திருந்த இயேசு என்ன சொன்னார்? (லூக்கா 10:22) “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் [“இழுத்துக்கொள்ளாவிட்டால்,” BSI] எவனும் என்னிடம் வர முடியாது” என்று சொன்னார். அப்படியானால், நம் பரலோகத் தகப்பனான யெகோவா தனிப்பட்ட விதத்தில் நம்மை இழுத்துக்கொள்ளாவிட்டால் நாம் கிறிஸ்துவின் சீடராகவும், யெகோவாவின் வணக்கத்தாராகவும் ஆகவே முடியாது. (2 தெசலோனிக்கேயர் 2:13) இயேசுவின் வார்த்தைகளை நாம் புரிந்துகொண்டோமானால், கடவுள் நம்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியைக் காண்போம்.
யெகோவா எந்த அர்த்தத்தில் நம்மை இழுத்துக்கொள்கிறார்? ‘இழுத்துக்கொள்ளுதல்’ என்பதற்கான கிரேக்க வினைச்சொல் மீன்கள் நிறைந்த ஒரு வலையைப் பிடித்து இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (யோவான் 21:6, 11) அப்படியானால், யெகோவா நம்மை வலுக்கட்டாயமாகத் தம் பக்கம் இழுக்கிறாரா? தம்மைச் சேவிக்கும்படி கட்டாயப்படுத்துகிறாரா? இல்லை. சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தை அவர் நமக்குக் கொடுத்திருப்பதால் நம் இருதயக் கதவை அவர் வலுக்கட்டாயமாகத் திறப்பதில்லை. (உபாகமம் 30:19, 20) “நம் இருதயக் கதவை வெளியே இருந்து திறக்க கைப்பிடி எதுவுமில்லை. அதை உள்ளே இருந்துதான் திறக்க வேண்டும்” என்று ஓர் அறிஞர் சொன்னார். யெகோவா இந்த உலகில் கோடிக்கணக்கானோரின் இருதயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கிறார், தம்மைச் சேவிக்க விருப்பமுள்ள இருதயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார். (1 நாளாகமம் 28:9) அப்படிப்பட்ட இருதயமுள்ள ஒருவரை அவர் கண்டுபிடிக்கும்போது, அன்பான விதத்தில் செயல்படுகிறார். எப்படி?
“முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உடைய” இருதயத்தை யெகோவா தம் பக்கம் பூப்போல் மென்மையாக ஈர்க்கிறார். (அப்போஸ்தலர் 13:48) இரண்டு வழிகளில் அவ்வாறு செய்கிறார். ஒன்று, பைபிளிலுள்ள நற்செய்தியின் மூலமாக; மற்றொன்று, தம் சக்தியின் மூலமாக. பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிற ஓர் இருதயத்தைப் பார்க்கும்போது, யெகோவா தம் சக்தியைப் பயன்படுத்தி பைபிள் சத்தியத்தைப் புரிந்துகொள்வதற்கும், அதைக் கடைப்பிடிப்பதற்கும் அந்த நபருக்கு உதவுகிறார். (1 கொரிந்தியர் 2:11, 12) யெகோவாவின் உதவியில்லாமல், அவருடைய உண்மை வணக்கத்தாராகவும் இயேசுவின் உண்மைச் சீடர்களாகவும் நம்மால் ஆகவே முடியாது.
“நம் இருதயக் கதவை வெளியே இருந்து திறக்க கைப்பிடி எதுவுமில்லை. அதை உள்ளே இருந்துதான் திறக்க வேண்டும்”
அப்படியானால், யோவான் 6:44-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் யெகோவா தேவனைப் பற்றி என்ன கற்பிக்கிறது? மக்களுடைய இருதயத்திலுள்ள ஏதோ நல்லதை யெகோவா பார்க்கிறார் என்றும், அவர்கள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்றும் கற்பிக்கிறது. முதல் பாராவில் குறிப்பிடப்பட்ட பெண், நம்பிக்கையூட்டும் இந்த உண்மையைப் புரிந்துகொண்டபோது ஆறுதலடைந்தாள். அவள் சொல்கிறாள்: “யெகோவாவின் ஊழியராக இருப்பதே ஈடிணையில்லாத மாபெரும் பாக்கியம். யெகோவா என்னை அவருடைய ஊழியக்காரியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால், நிச்சயமாகவே நான் அவருடைய கண்ணில் விலையேறப்பெற்றவள்தான்.” நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? யெகோவா தம் வணக்கத்தார் ஒவ்வொருவர்மீதும் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதைத் தெரிந்துகொண்டது, அவருக்காக இருதயக் கதவைத் திறக்க உங்களைத் தூண்டுகிறதா? ▪ (w13-E 05/01)
பைபிள் வாசிப்பு