பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
என் வாழ்க்கையை மாற்றிய வாக்குறுதி!
பிறந்த வருடம்: 1974
சொந்த நாடு: லாட்வியா
முன்பு: ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டவர்
என் கடந்த காலம்:
லாட்வியாவின் தலைநகர் ரிகாவில் நான் பிறந்தேன். என்னையும் அக்காவையும் அம்மாதான் வளர்த்து ஆளாக்கினார். அம்மா கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பண்டிகை நாட்களில் மட்டும்தான் நாங்கள் சர்ச்சிற்குப் போவோம். கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி இருக்கிறது என்று மட்டும் நான் எப்போதும் நம்பினேன். வளர வளர மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் பெருகியதால் கடவுளைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.
கண்ணில் படும் பொருள்களையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, திரும்பவும் எப்படி இருந்ததோ அப்படியே பொருத்திவிடும் திறமை எனக்குள் இயல்பாகவே இருந்தது. அதைக் கவனித்த அம்மா என்னை வீட்டில் தனியாக விடவே பயப்படுவார். இருந்தாலும், என் திறமையை வளர்க்க எனக்கு ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கித் தந்தார். அதன் பாகங்களை ஒன்றோடொன்று பொருத்தி வித்தியாசமான வடிவங்களாகச் செய்தும், திரும்பவும் தனித்தனியாகப் பிரித்தும் விளையாடுவேன். அதில் எனக்கு அலாதி சந்தோஷம்! அதேசமயம், நான் ஒரு பைக் பைத்தியம். அதனால் அம்மா என்னை செல்டா மொப்பட்ஸ் (தி கோல்டன் மொப்பட்) என்ற மோட்டார் பைக் ரேஸில் சேர்த்துவிட்டார். ஆரம்பத்தில் சிறிய பைக் (மொப்பட்) போட்டிகளில் கலந்துகொண்டு, போகப்போகப் பெரிய ரேஸ் பைக் போட்டிகளில் கலந்துகொண்டேன்.
நான் எதையும் சட்டெனக் கற்றுக்கொள்வதால் இந்த ஆபத்தான விளையாட்டையும் சீக்கிரமே கற்றுக்கொண்டேன். மூன்று முறை லாட்வியன் சாம்பியன்ஷிப்பை வென்றேன், இரண்டு முறை பால்டிக் ஸ்டேட் சூப்பர்பைக் சாம்பியன்ஷிப்பை வென்றேன்.
பைபிள் என்னை மாற்றிய விதம்:
பைக் ரேஸில் சிகரத்தை எட்டியிருந்த சமயத்தில் என் காதலி ஈவியாவுக்கு (பின்னர் என் மனைவியானாள்) யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் கிடைத்தது. சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதற்காக அதிலிருந்த கூப்பனைப் பூர்த்தி செய்து அனுப்பினாள். சீக்கிரத்தில், இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவளைச் சந்தித்து பைபிளைப்பற்றி சொல்லிக்கொடுத்தார்கள். எனக்கு மதத்தில் எந்த ஈடுபாடு இல்லாவிட்டாலும் அவள் கற்றுக்கொள்வதை நான் தடுக்கவில்லை.
ஒருநாள், சாட்சிகள் ஈவியாவோடு பைபிளைப்பற்றி கலந்துபேசிய சமயத்தில் என்னையும் உட்கார்ந்து கேட்கும்படி சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கவனமாகக் கேட்டேன், அது எனக்கு மிகவும் பிடித்தது. பூமி சீக்கிரத்தில் ஒரு பூஞ்சோலையாக மாறும் என்ற பைபிளின் வாக்குறுதி என் மனதைத் தொட்டது. முக்கியமாக, சங்கீதம் 37:10, 11-ல் “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்ற வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தது.
அதுமுதல் கடவுளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. என் மதம் கற்பித்த விஷயங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதைக் கவனித்தேன். ஆனால், பைபிளிலுள்ள விஷயங்கள் எந்த முரண்பாடும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக இருந்ததைப் பார்த்து நான் அசந்து போனேன்.
பைபிளைப் படிக்க படிக்க, யெகோவா தேவன் உயிரை எந்தளவு உயர்வாகக் கருதுகிறார் என்பதையும், அது அவருக்கு எவ்வளவு அருமையானது என்பதையும் தெரிந்துகொண்டேன். (சங்கீதம் 36:9) அப்படியென்றால், உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது சரியில்லை என்று புரிந்துகொண்டேன்; பைக் ரேஸை விட்டேன். அதில் கிடைத்த பணம், புகழ், வெற்றியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். அதற்குப் பதிலாக என் உடல், பொருள், சக்தியெல்லாம் யெகோவாவுடைய சேவைக்காகச் செலவிட ஆசைப்பட்டேன்.
உயிர் கொடுத்த கடவுளுக்குத்தான் என் உயிர் சொந்தம் என்பதை புரிந்துகொண்டேன்
அதன்பின் 1996-ல் எஸ்டோனியாவிலுள்ள டல்லினில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டேன். (அதற்குப் பக்கத்திலிருந்த அரங்கிற்கு அநேக முறை பைக் ரேஸுக்காக வந்திருந்தேன்.) அந்த மாநாட்டிற்குப் பல நாடுகளிலிருந்து சாட்சிகள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பம்போல் சந்தோஷமாக, ஒற்றுமையாக இருந்ததைப் பார்த்தேன். அங்கு ஒரு யெகோவாவின் சாட்சி தன் பையைத் தொலைத்துவிட்டார். தொலைந்தது தொலைந்ததுதான், அது நிச்சயம் கிடைக்காது என்று நினைத்தேன். ஆனால், வேறொரு சாட்சியின் கண்ணில்பட்ட அந்தப் பையை அவர் பத்திரமாக எடுத்துவந்து கொடுத்தார். அதிலிருந்த ஒரு பொருள்கூட காணாமல் போகவில்லை. அதைப் பார்த்தபோது ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். யெகோவாவின் சாட்சிகள் பைபிள் நெறிகளின்படி வாழ்கிறவர்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். அதன்பின் நானும் ஈவியாவும் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப்பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொண்டோம், 1997-ல் ஞானஸ்நானம் எடுத்தோம்.
நான் பெற்ற பலன்கள்:
ஆபத்தான மோட்டார் பைக் ரேஸில் என் நண்பர்கள் சிலர் பலியானார்கள். ஆனால், பைபிளைப் படித்த பிறகு என் உயிரைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும் என்பதையும், உயிர் கொடுத்த யெகோவாவுக்குத்தான் அது சொந்தம் என்பதையும் புரிந்துகொண்டேன். இந்த உண்மையைப் புரிந்துகொண்டதால் என் உயிரைக் காப்பாற்றிக்கொண்டேன்.
நானும் என் மனைவியும் ரிகாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் நான்கு வருடங்கள் கடவுளுக்கு முழு நேரமாகச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றோம். இப்போது எங்கள் ஆசை மகள் ஆலிஸை யெகோவாவுக்குப் பிரியமாக வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்கு ரிகாவில் உள்ள மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் வாரத்திற்கு ஒரு நாள் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்குள்ள கார்களைப் பழுது பார்த்து, உடைந்த பொருள்களை ரிப்பேர் செய்கிறேன். சிறுவயதில் நான் கற்றுக்கொண்ட திறமையை இப்போது கடவுளுக்காகப் பயன்படுத்துவதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். இன்றும் நான் பொருள்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, திரும்பவும் அது எப்படி இருந்ததோ அப்படியே பொருத்துகிறேன்.
ஒரே உண்மையான கடவுளைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க குடும்பமாக உழைக்கிறோம். இது எங்களுக்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம். இதற்குப் பைபிள் சத்தியங்களே காரணம். பூமி சீக்கிரத்தில் பூஞ்சோலையாக மாறும் என்ற பைபிள் வாக்குறுதி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது! ▪ (w14-E 02/01)