பைபிள் தரும் பதில்கள்
கடவுள் எப்படிப்பட்டவர்?
கடவுள் கண்ணுக்குத் தெரியாத உருவத்தில் இருக்கிறார். வானத்தையும் பூமியையும் சகல உயிரினங்களையும் அவரே படைத்தார். ஆனால், அவரை யாரும் படைக்கவில்லை. எனவே, அவருக்கு ஓர் ஆரம்பம் இல்லை. (சங்கீதம் 90:2) மக்கள் அவரை நாடித்தேட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தம்மைப் பற்றிய உண்மைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.—அப்போஸ்தலர் 17:24-27-ஐ வாசியுங்கள்.
கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். கடவுள் படைத்தவற்றை உற்று கவனிக்கும்போது அவருக்கு இருக்கும் தலைசிறந்த குணங்கள் சிலவற்றை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். (ரோமர் 1:20) ஆனால், அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள அவருடைய வார்த்தையாகிய பைபிளை நாம் படிக்க வேண்டும். அவர் எப்படிப்பட்டவர், அவருக்கு இருக்கும் முத்தான குணங்கள் என்ன என்பதை நன்கு தெரிந்துகொள்ள பைபிள் உதவும்.—சங்கீதம் 103:7-10-ஐ வாசியுங்கள்.
அநியாயத்தைப் பார்க்கும்போது கடவுள் எப்படி உணர்கிறார்?
நம்மைப் படைத்த யெகோவா தேவன் அநியாயத்தை அறவே வெறுக்கிறார். (உபாகமம் 25:16) அவருக்கு இருக்கும் அதே குணங்களோடு நம்மைப் படைத்திருக்கிறார். அதனால்தான் நம்மில் அநேகர் அநியாயத்தை வெறுக்கிறோம். இன்று உலகில் நடக்கும் அநியாயத்திற்குக் கடவுள் காரணமல்ல. சுயமாகத் தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தைக் கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், அநேகர் அந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களை அநியாயமாக நடத்துகிறார்கள். இதைப் பார்க்கும்போது யெகோவாவின் ‘இருதயத்திற்கு விசனமாய்’ இருக்கிறது.—ஆதியாகமம் 6:5, 6-ஐயும் உபாகமம் 32:4, 5-ஐயும் வாசியுங்கள்.
யெகோவா நீதியை நேசிக்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. அநியாயத்தை அவர் பொறுத்துக்கொண்டே இருக்க மாட்டார். (சங்கீதம் 37:28, 29) அநியாயத்தைக் கடவுள் முற்றிலும் துடைத்தழிப்பார் என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—2 பேதுரு 3:7-9, 13-ஐ வாசியுங்கள். (w14-E 01/01)
சீக்கிரத்தில் எல்லோருக்கும் நீதியை வழங்கப்போவதாக பைபிளில் கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார்