அட்டைப்பட கட்டுரை | புகைப்பழக்கம்—கடவுள் என்ன நினைக்கிறார்?
உலகை உலுக்கும் உயிர்கொல்லி!
புகைப்பழக்கம்—ஓர் உயிர்க்கொல்லி
-
கடந்த நூற்றாண்டில் அது 10 கோடி மக்களின் உயிரைக் குடித்திருக்கிறது.
-
ஒரு வருடத்திற்கு சுமார் 60 லட்சம் பேரின் உயிரை சூறையாடுகிறது.
-
சராசரியாக 6 நொடிகளுக்கு ஒருவர் இதனால் சாகிறார்.
இந்நிலை மாறுவதுபோல் தெரியவில்லை.
இதே நிலை நீடித்தால் 2030-க்குள் புகைப் பழக்கத்தால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை, ஒரு வருடத்திற்கு 80 லட்சமாக உயரும். 21-ஆம் நூற்றாண்டின் முடிவில் அப்படி உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தொடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டிருக்கின்றனர்.
புகைப்பிடிப்பவர்கள் மட்டுமே இதனால் பாதிக்கப்படுவதில்லை, அப்பாவி குடும்பத்தாரும் பாதிக்கப்படுகிறார்கள். மன வேதனையும் பணக் கஷ்டமும் ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதால் மட்டுமே, ஒரு வருடத்திற்கு 6 லட்சம் பேர் அநியாயமாகச் சாகிறார்கள். மருத்துவச் செலவுகளும் நாளுக்கு நாள் அதிகமாவதால் நிலைமை இன்னும் மோசமாகிறது.
இது சரிசெய்ய முடியாத பிரச்சினை ஒன்றும் அல்ல. உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை இயக்குனர் டாக்டர் மார்கரெட் சான் சொன்னார், “புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முழுக்க முழுக்க மனிதர்கள்தான் காரணம். அரசாங்கமும் சமுதாயமும் நினைத்தால் இந்நிலையை மாற்ற முடியும்.”
புகைப்பிடிப்பதை எதிர்த்துப் போராட, இதுவரை இல்லாத அளவுக்கு உலகெங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 2012-ல், சுமார் 175 நாடுகள் புகையிலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக உறுதி அளித்தன. * ஆனால், புகையிலை கம்பெனிகளோ கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைத்து தங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்துகின்றன. முக்கியமாக, ஏழ்மையான நாடுகளிலுள்ள பெண்களையும் இளைஞர்களையும் குறிவைக்கின்றன. புகையிலைக்கு ஒருவர் எளிதில் அடிமையாகிவிடுவதால் அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். இந்தப் பழக்கத்திற்கு 100 கோடி மக்கள் ஏற்கெனவே அடிமையாகி இருக்கிறார்கள். இவர்கள் புகைப்பிடிப்பதை விட்டுவிடவில்லை என்றால் அடுத்த 40 வருடங்களில் புகையால் இறப்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும்.
புகைக்கு அடிமையாவதும் விளம்பரத்தைப் பார்த்து ஈர்க்கப்படுவதும் இந்தப் பழக்கத்தை விடமுடியாமல் அநேகரைக் கட்டிப்போட்டிருக்கிறது. நவோகோ என்ற பெண்மணிக்கு அதுதான் நடந்தது. அவர் பருவ வயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்தார். சிகரெட் விளம்பரங்களைப் பார்த்து கவரப்பட்டார், சிகரெட் பிடிப்பதைக் கவுரவமாகவும் நினைத்தார். அவருடைய அப்பா-அம்மா நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டார்கள், அவரை நம்பி இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர் புகைப்பிடிப்பதை நிறுத்தவே இல்லை. நவோகோ சொல்கிறார், “எனக்கும் புற்றுநோய் வந்துடுமோ, என் பிள்ளைங்களுக்கு ஏதாவது ஆகிடுமோனு பயந்தேன். ஆனா என்னால இந்த பழக்கத்தை விடவே முடியல. இனியும் இதை நிறுத்தவே முடியாதுனு நினைச்சேன்.”
ஆனால் நவோகோ புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டார். எப்படி?! லட்சக்கணக்கானோருக்கு உதவிய ஒன்றுதான் இவருக்கும் உதவியது. என்ன அது? தொடர்ந்து படியுங்கள்... (w14-E 06/01)
^ பாரா. 11 புகை பிடிப்பதால் வரும் ஆபத்துகளைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, புகையிலை கம்பெனிகளின் விளம்பரத்தைத் தடை செய்வது, புகையிலைக்கான வரிகளை அதிகரிப்பது, புகைப்பழக்கத்திலிருந்து விடுபட மக்களுக்கு உதவுவது போன்றவை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகும்.