Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

‘யெகோவா என்னை மறக்கல’

‘யெகோவா என்னை மறக்கல’
  • பிறந்த வருடம்: 1981

  • பிறந்த நாடு: குவாதமாலா

  • என்னைப் பற்றி...: சின்ன வயசில ரொம்ப கஷ்டப்பட்டேன்

முன்பு:

என் சொந்த ஊர் ஆக்யுள். நான் ஈசில் என்ற மாயா இனத்தை சேர்ந்தவன். எங்க பழங்குடி மொழியை பேசுவேன், ஸ்பானிஷ் மொழியையும் பேசுவேன். உள்நாட்டு போர் நடந்துட்டு இருந்த சமயத்திலதான் பிறந்தேன். 36 வருஷமா நடந்த, அந்தப் போர்ல எங்க இனத்தை சேர்ந்த நிறைய பேர் இறந்துட்டாங்க.

எனக்கு 4 வயசு இருக்கும்போது என் அண்ணன் (7 வயது) ஒரு வெடிகுண்டை வெச்சு விளையாடிட்டு இருந்தார். திடீர்னு அது வெடிச்சதுனால, அண்ணன் இறந்துட்டார், பக்கத்தில இருந்த எனக்கும் கண்பார்வை போயிடுச்சு. அதனால, குவாதமாலா நகரத்தில இருக்கிற, கண்ணு தெரியாதவங்களுக்கான ஸ்கூல்ல என்னை சேர்த்துட்டாங்க. அங்க பிரெயில் மொழியை (கண் தெரியாதவர்கள் தடவி படிக்க உதவும் மொழி) படிக்க கத்துக்கிட்டேன். ஸ்கூல்ல வேலை செய்றவங்க என்னை யாரோடயும் பேச விடமாட்டாங்க; பசங்களும் என்னை ஒதுக்கி வெச்சிட்டாங்க. எப்பவும் நான் தனியாதான் இருப்பேன். வருஷத்துல 2 மாசம் மட்டும் ஊருக்கு வந்து அம்மாவோட இருப்பேன். எங்க அம்மாவுக்கு என்மேல உயிர், என்னை நல்லா பார்த்துப்பாங்க. அந்த 2 மாசம் எப்போ வரும்னு பார்த்திட்டே இருப்பேன். ஆனா, எனக்கு 10 வயசு இருக்கும்போது அம்மாவும் இறந்துட்டாங்க. இந்த உலகத்தில எனக்குனு இருந்த ஒரே ஜீவனும் என்னைவிட்டு போயிடுச்சு!

11 வயசுல என் சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன். அண்ணன் வீட்லதான் தங்கியிருந்தேன். எனக்கு தேவையானதெல்லாம் அவங்க பார்த்துக்கிட்டாங்க; ஆனா, என் மனசை புரிஞ்சிக்கத்தான் யாருமே இல்லை. “எங்க அம்மா ஏன் செத்துப்போனாங்க? எனக்கு ஏன் கண்ணு தெரியாம போச்சு?”னு அடிக்கடி கடவுள்கிட்ட கேட்பேன். “இதெல்லாம் கடவுளோட சித்தம்!”னு எல்லாரும் சொன்னாங்க. அதையெல்லாம் கேட்டிட்டு, “கடவுளுக்கு கண்ணே இல்லையா, என்னை ஏன் இப்படி அம்போனு விட்டுட்டார்”னு யோசிப்பேன். தற்கொலை செய்ய வாய்ப்பு கிடைச்சிருந்தா, எப்பவோ நான் செத்துப்போயிருப்பேன்!

கண்ணு தெரியாததுனால என்னை எல்லாரும் ஏமாத்திடுவாங்க. நிறைய தடவை, என்னை பாலியல் பலாத்காரம் செஞ்சிருக்காங்க. ஆனா, நான் இதையெல்லாம் யார்கிட்டயும் சொன்னதில்லை; சொன்னாலும், யார் புரிஞ்சிக்க போறாங்கனு யோசிப்பேன். எப்பவும் தனியாதான் இருப்பேன், யார்கிட்டயும் பேச மாட்டேன். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம், சோர்ந்துபோய் மூலையில உட்கார்ந்திடுவேன். என்னால யாரையும் நம்ப முடியல.

பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது!

எனக்கு 13 வயசு இருக்கும்போது யெகோவாவின் சாட்சியா இருந்த ஒரு கணவனும் மனைவியும் எங்க ஸ்கூலுக்கு வந்தாங்க. என் நிலைமையை புரிஞ்சிக்கிட்ட ஒரு ஸ்கூல் டீச்சர், அவங்களை என்கிட்ட பேச சொல்லியிருந்தாங்க. கடவுள் சீக்கிரமா செய்யப்போற விஷயங்களை பைபிள்ல இருந்து அவங்க காட்டினாங்க; இறந்தவங்க திரும்பவும் உயிரோட வரப்போறாங்க, பார்வை இல்லாதவங்களுக்கு கடவுள் பார்வை கொடுப்பார்னு சொன்னாங்க. (ஏசாயா 35:5; யோவான் 5:28, 29) அவங்க சொன்னதெல்லாம் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா, யார்கிட்டயும் பேசி பழக்கம் இல்லாததுனால, அவங்ககிட்ட நான் சரியா பேசல. இருந்தாலும், அவங்க வாரா வாரம் வந்து, பைபிளை பத்தி சொல்லிக்கொடுத்தாங்க. அதுக்காக மலையெல்லாம் தாண்டி 10 கிலோ மீட்டர் நடந்து வந்தாங்க.

“அவங்களை பார்த்தா பணக்காரங்க மாதிரி தெரியல. ஆனா, நல்லா டிரெஸ் பண்ணியிருக்காங்க”னு அவங்களை பத்தி என் அண்ணன் சொன்னார். அவங்ககிட்ட நிறைய பணம் இல்லனாலும், அடிக்கடி ஏதாவது வாங்கிட்டு வருவாங்க; என்மேல அக்கறையா இருப்பாங்க. ‘அவங்களுக்கே இல்லனாலும் மத்தவங்களுக்கு உதவி செய்றாங்களே! இவங்கதான் பைபிள் சொல்ற மாதிரி நடந்துக்கிறாங்க’னு நினைச்சேன்.

பிரெயில் மொழி புத்தகங்களை வெச்சு அவங்க எனக்கு பைபிளை பத்தி சொல்லிக்கொடுத்தாங்க. படிச்சதை எல்லாம் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நமக்கு வர்ற கஷ்டங்களை யெகோவா ஏன் விட்டு வெச்சிருக்கார்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா, சில விஷயங்களை என்னால ஏத்துக்க முடியல. உதாரணமா, கடவுளுக்கு என்மேல பாசம் இருக்கு, மத்தவங்களுக்கும் என்மேல பாசம் இருக்குனு என்னால புரிஞ்சிக்க முடியல. கடவுள் அன்பானவர், அப்பா மாதிரி பாசம் காட்டுறவர்னு என்னால யோசிச்சுகூட பார்க்க முடியல. * (அடிக்குறிப்பை பாருங்கள்.)

பைபிளை படிக்கப் படிக்கத்தான் கடவுளை பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நாம கஷ்டப்படுறதை பார்த்து கடவுளும் கஷ்டப்படுறார். “என் ஜனங்கள் படுகின்ற தொல்லைகளை நான் கண்டேன். . . . அவர்கள் படும் வேதனையை நான் அறிவேன்”னு கடவுள் சொன்னார். (யாத்திராகமம் 3:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) இதையெல்லாம் பார்த்து, யெகோவாவுக்காக என் வாழ்க்கையையே கொடுக்கணும்னு நினைச்சேன். அதனால, 1998-ல ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனேன்.

இவங்க வீட்லதான் நான் தங்கியிருக்கேன்

எஸ்குயின்ட்லா என்ற ஊருக்கு பக்கத்தில கண்ணு தெரியாதவங்களுக்கு உதவி செய்றதுக்காக நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தாங்க; அதுல நானும் கலந்துக்கிட்டேன். அந்த ஊர் சபையில இருக்கிற ஒரு மூப்பர் (சபையை வழிநடத்துபவர்) எனக்கு இருக்கிற பிரச்சினையை புரிஞ்சிக்கிட்டு உதவி செஞ்சார். யெகோவாவின் சாட்சிகள் நடத்துற கூட்டங்களுக்கு சொந்த ஊர்ல இருந்து போறது கஷ்டமா இருந்தது. ஏன்னா, எனக்கு பைபிளை பத்தி சொல்லிக்கொடுத்தவங்க எந்த மலையெல்லாம் தாண்டி வந்தாங்களோ அதே மலையெல்லாம் தாண்டிதான் நான் கூட்டங்களுக்கு போகணும். எஸ்குயின்ட்லா-ல இருக்கிற ஒரு யெகோவாவின் சாட்சி வீட்ல நான் தங்குறதுக்கு அந்த மூப்பர் உதவி செஞ்சார். அங்க இருந்தா, கூட்டங்களுக்கு போறது எனக்கு வசதியா இருக்கும்னு சொன்னார். இன்னைக்கு வரைக்கும் நான் அங்கதான் தங்கியிருக்கேன்; அவங்க, குடும்பத்தில ஒருத்தனா என்னை பார்த்துக்கிறாங்க.

கூட்டங்களுக்கு வர்ற நிறைய பேர் என்கிட்ட அன்பா, பாசமா நடந்துக்கிறாங்க, எனக்கு எவ்வளவோ உதவி செய்றாங்க. யெகோவாவின் சாட்சிகள்தான் இயேசு சொல்ற மாதிரி நடந்துக்கிறாங்க; அதில எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.—யோவான் 13:34, 35.

வாழ்வில் வசந்தம் வீசுகிறது:

முன்னாடியெல்லாம் ‘நான் எதுக்குமே லாயக்கில்ல’னு நினைச்சு கவலைப்படுவேன்; இப்போ என் வாழ்க்கையே எனக்கு புதுசா இருக்கு. நிறைய பேருக்கு பைபிளை பத்தி சொல்லித்தறேன். இப்போ நான் ஒரு பயனியரா சேவை செய்றேன். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) என்னோட கஷ்டத்தை மறந்திட்டு, சந்தோஷமா இருக்கேன். எங்க சபையில நானும் ஒரு மூப்பரா இருக்கேன். எல்லாருக்கும் முன்னால மேடை ஏறி பைபிள்ல இருக்கிற விஷயங்களை பத்தி சொல்றேன். ஆயிரம் ரெண்டாயிரம் பேர் வர்ற மாநாட்டுலயும்கூட மேடை ஏறி பேசுறேன்.

பிரெயில் மொழி பைபிளை வெச்சு மேடையில இருந்து பேசுறேன்

2010-ல, யெகோவாவின் சாட்சிகள் நடத்துற ஊழியப் பயிற்சி பள்ளில கலந்துக்கிட்டேன். (இப்போது அதன் பெயர், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி.) அது எல்-சால்வடார் நாட்டுல நடந்தது. சபையை நல்லா வழிநடத்த என்ன செய்யணும்னு அந்தப் பள்ளியில இருந்து கத்துக்கிட்டேன். யெகோவா யாரை வேணாலும் வெச்சு அவரோட வேலையை செய்வார். அவர் என்னை மறக்கல, எனக்கு எவ்ளோ பெரிய வேலையை கொடுத்திருக்கார்!

“பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது”னு இயேசு சொன்னார். (அப்போஸ்தலர் 20:35) இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என் வாழ்க்கை இப்படி மாறும்னு நான் கனவுலகூட நினைச்சதில்லை. இப்போ, என்னாலயும்கூட மத்தவங்களுக்கு உதவி செய்ய முடியுது. ▪ (w15-E 10/01)

^ பாரா. 13 நமக்கு வரும் கஷ்டங்களை யெகோவா ஏன் விட்டு வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 11-வது அதிகாரத்தை படித்து பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.

^ பாரா. 17 பயனியர் என்பவர்கள் நிறைய நேரம் எடுத்து கடவுளைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள்.