Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நாம் ஏன் செய்ய வேண்டும்?

நாம் ஏன் செய்ய வேண்டும்?

பைபிளில் இருக்கிற சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஜெபம். ஜெபத்தைப் பற்றி மக்களுடைய மனதில் பொதுவாக ஏழு கேள்விகள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு கேள்விக்கும் பைபிள் தரும் பதிலை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம். ஜெபம் செய்ய ஆரம்பிப்பதற்கு அல்லது இன்னும் சிறந்த விதத்தில் ஜெபம் செய்வதற்கு இந்தக் கட்டுரைகள் உங்களுக்கு உதவும்.

உலகம் முழுவதும் இருக்கிற எல்லா மதங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்கள் ஜெபம் செய்கிறார்கள். அவர்கள் தனியாகவோ, நிறைய பேரோடு சேர்ந்தோ ஜெபம் செய்கிறார்கள். சர்ச்சுகளில், கோயில்களில், ஜெபக்கூடங்களில், மசூதிகளில், புனித ஸ்தலங்களில் ஜெபம் செய்கிறார்கள். ஜெபம் செய்வதற்காக பிரார்த்தனைக் கம்பளி, ஜெபமாலை, உருவச் சிலைகள் ஜெபப் புத்தகங்கள் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கிற ஒரு வித்தியாசம், மனிதர்களால் ஜெபம் செய்ய முடியும்! மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒத்துப்போகிற நிறைய விஷயங்கள் இருப்பது உண்மைதான். உதாரணத்துக்கு, மிருகங்களைப் போல நமக்கும் உணவு, காற்று, தண்ணீர் எல்லாம் தேவை. மிருகங்களைப் போலவே நாமும் பிறக்கிறோம், வாழ்கிறோம், இறக்கிறோம். (பிரசங்கி 3:19) ஆனால், மனிதர்கள் மட்டும்தான் ஜெபம் செய்கிறார்கள். ஏன்?

ஏனென்றால், அதற்கான அவசியம் மனிதர்களுக்கு இருக்கிறது. புனிதமாக, அல்லது பரிசுத்தமாக இருக்கிற... என்றென்றைக்கும் இருக்கிற... ஒன்றோடு தொடர்புகொள்வதற்கான வழியாகத்தான் ஜெபத்தை மக்கள் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட விஷயங்களுக்கான ஆர்வப்பசியோடு நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 3:11) “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று ஒருசமயம் இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 5:3.

மதக் கட்டிடங்கள், வழிபாட்டுப் பொருள்கள், மணிக்கணக்காகச் செய்யப்படும் ஜெபங்கள் இவையெல்லாம் மனிதர்களுக்கு “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசி” இருப்பதைத்தானே காட்டுகின்றன? சிலர் தங்களுடைய ஆன்மீகப் பசியைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள நினைக்கிறார்கள். இல்லையென்றால், மற்றவர்களிடம் உதவி கேட்கிறார்கள். ஆனால், மனிதர்களால் தங்களுடைய ஆன்மீகப் பசியைத் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், நமக்கு சக்தியும் ஆயுசும் அறிவும் ரொம்பவே குறைவு. நம்மைவிட அதிக அறிவும், சக்தியும் ஆயுசுமுள்ள ஒருவரால் மட்டும்தான் நம்முடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். என்னென்ன விஷயங்கள் ஜெபம் செய்ய நம்மைத் தூண்டுகின்றன?

சில விஷயங்களைக் கவனியுங்கள்: நல்ல வழிநடத்துதலுக்காக... ஞானத்துக்காக... மனித அறிவுக்கு எட்டாத சில கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடிப்பதற்காக... நீங்கள் ஏக்கமாக இருந்திருக்கலாம். ஒரு பெரிய இழப்பினால் வந்த வேதனையைச் சமாளிக்க உங்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டிருக்கலாம். கஷ்டமான ஒரு தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டிருக்கலாம். குற்றவுணர்வால் மனமுடைந்து போயிருக்கும்போது உங்களுக்கு மன்னிப்பு தேவைப்பட்டிருக்கலாம்.

இந்த எல்லா விஷயங்களுக்காகவும் ஜெபம் செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது. ஜெபம் சம்பந்தமாக பைபிள் சொல்வதை நாம் முழுமையாக நம்பலாம். உண்மையுள்ள ஆண்கள், பெண்கள் நிறைய பேர் செய்த ஜெபங்கள் பைபிளில் இருக்கின்றன. ஆறுதலுக்காக, வழிநடத்துதலுக்காக, மன்னிப்புக்காக, மனதைக் குடைகிற கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்கள் ஜெபம் செய்திருக்கிறார்கள்.—சங்கீதம் 23:3; 71:21; தானியேல் 9:4, 5, 19; ஆபகூக் 1:3.

அவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக ஜெபம் செய்தாலும், அவர்களுடைய ஜெபத்தில் ஒரு பொதுவான விஷயத்தைப் பார்க்க முடியும். அதாவது, யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். ஒரு சிறந்த ஜெபத்துக்கு இதுதான் அடிப்படையாக இருக்கிறது. இதற்கு மக்கள் பொதுவாக அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படியானால், நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்?