அதிகாரம் 16
கடவுளுடைய வீட்டின்மேல் பக்திவைராக்கியம்
-
காசு மாற்றுபவர்களையும் வியாபாரிகளையும் ஆலயத்திலிருந்து இயேசு துரத்துகிறார்
கானா ஊரில் நடந்த கல்யாணத்துக்குப் பிறகு, இயேசு கப்பர்நகூமுக்குப் போகிறார். அவருடைய அம்மாவும், அவருடைய சகோதரர்களான யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ் ஆகியோரும் அவருடன் போகிறார்கள்.
இயேசு ஏன் கப்பர்நகூமுக்குப் போகிறார்? நாசரேத்தையும் கானா ஊரையும்விட இந்த நகரம் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கிறது. இது கொஞ்சம் பெரிய நகரமாகவும் இருந்திருக்கலாம். அதோடு, இயேசுவுடன் சேர்ந்துகொண்ட சீஷர்களில் பலர் கப்பர்நகூமிலோ அதற்குப் பக்கத்திலோ குடியிருக்கிறார்கள். அதனால், அந்தச் சீஷர்களுடைய இடத்திலேயே அவர்களுக்குப் பயிற்சி கொடுக்க இயேசுவினால் முடிகிறது.
கப்பர்நகூமில் இருக்கும்போது, இயேசு அற்புதங்களைச் செய்கிறார். அந்த நகரத்திலிருக்கிற மக்களும் சுற்றுவட்டாரத்தில் வாழ்கிறவர்களும் அவர் செய்தவற்றைப் பற்றிக் கேள்விப்படுகிறார்கள். ஆனால், கடவுள்பக்தியுள்ள யூதர்களான இயேசுவும் அவருடைய சீஷர்களும் சீக்கிரத்திலேயே அங்கிருந்து கிளம்பி எருசலேமுக்குப் போகிறார்கள். ஏனென்றால், கி.பி. 30-ஆம் வருஷத்தின் பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
எருசலேமில் இருக்கிற ஆலயத்துக்கு இயேசுவும் அவருடைய சீஷர்களும் போகிறார்கள். அங்கே இயேசு செய்கிற ஒரு காரியத்தைப் பார்த்து அவர்கள் எல்லாரும் மலைத்துப்போகிறார்கள். அவர்கள் இயேசுவை அதற்குமுன் அப்படிப் பார்த்ததே இல்லை. இயேசு அப்படி என்ன செய்கிறார்?
இஸ்ரவேலர்கள் மிருகங்களைக் கொண்டுவந்து ஆலயத்தில் பலி கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. தூரமான இடங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிறவர்கள், அங்கே தங்கும்போது சாப்பிடுவதற்கு உணவுப் பொருள்கள் தேவைப்பட்டன. அதனால், அவர்கள் பணத்தைக் கொண்டுவந்து, “மாடுகளையும், செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும்” மற்ற பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம் என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. (உபாகமம் 14:24-26) இதை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு, எருசலேமில் இருக்கிற வியாபாரிகள் மிருகங்களையும் பறவைகளையும் ஆலயத்தின் பெரிய பிரகாரத்திலேயே விற்கிறார்கள். அதிலும் சில பேர், மக்களை ஏமாற்றி அவற்றை அதிக விலைக்கு விற்கிறார்கள்.
அதனால், இயேசு பயங்கர கோபத்தோடு காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டுகிறார். அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டு, அந்த ஆட்களையும் அங்கிருந்து துரத்துகிறார். அவர்களிடம், “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று சொல்கிறார்.—யோவான் 2:16.
இதை அவருடைய சீஷர்கள் பார்க்கிறார்கள். அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று கடவுளுடைய மகனைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனத்தை அவர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆனால் யூதர்கள் அவரிடம், “இப்படியெல்லாம் செய்கிறாயே, உனக்கு அதிகாரம் இருப்பதை நிரூபிக்க என்ன அடையாளத்தை எங்களுக்குக் காட்டப்போகிறாய்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொல்கிறார்.—யோவான் 2:17-19; சங்கீதம் 69:9.
எருசலேமில் இருக்கிற ஆலயத்தைப் பற்றி இயேசு சொல்வதாக அந்த யூதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவரிடம், “இந்த ஆலயத்தைக் கட்ட 46 வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்று கேட்கிறார்கள். (யோவான் 2:20) ஆனால், இயேசு தன்னுடைய உடலைத்தான் ஆலயம் என்று சொல்கிறார். மூன்று வருஷங்களுக்குப் பிறகு, இயேசு உயிர்த்தெழுந்த சமயத்தில் அவருடைய சீஷர்கள் இந்த வார்த்தைகளை யோசித்துப் பார்க்கிறார்கள்.