Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 86

காணாமல் போன மகன் திரும்பி வருகிறான்

காணாமல் போன மகன் திரும்பி வருகிறான்

லூக்கா 15:11-32

  • காணாமல் போன மகனைப் பற்றிய உவமை

யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கிலுள்ள பெரேயாவில் இருக்கும்போது, காணாமல் போன ஆட்டைப் பற்றிய உவமையையும், தொலைந்துபோன வெள்ளிக் காசைப் பற்றிய உவமையையும் இயேசு சொல்லியிருக்கலாம். ஒரு பாவி மனம் திருந்தி, கடவுளிடம் திரும்பி வரும்போது நாம் சந்தோஷப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த இரண்டு உவமைகளும் கற்பிக்கின்றன. பாவிகளை இயேசு வரவேற்பதால், பரிசேயர்களும் வேத அறிஞர்களும் அவரைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இயேசு சொன்ன அந்த இரண்டு உவமைகளையும் கேட்டு அவர்கள் பாடம் கற்றுக்கொள்கிறார்களா? மனம் திருந்துகிற பாவிகளைப் பரலோகத் தகப்பன் எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்கிறார்களா? மனதைத் தொடுகிற ஒரு உவமையைச் சொல்வதன் மூலம் இயேசு இந்த முக்கியமான விஷயத்தை மறுபடியும் வலியுறுத்துகிறார்.

இது ஒரு அப்பாவையும் அவருடைய இரண்டு மகன்களையும் பற்றிய உவமை. இளைய மகன்தான் இந்த உவமையின் முக்கியக் கதாபாத்திரம். இளைய மகனைப் பற்றி இயேசு சொல்கிற விஷயங்களிலிருந்து, பரிசேயர்களும் வேத அறிஞர்களும் அங்கிருக்கிற மற்றவர்களும் பாடம் கற்றுக்கொள்ளலாம். அதேசமயத்தில், இந்த உவமையில் வருகிற அப்பாவும் மூத்த மகனும் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். அதனால், இயேசு இந்த உவமையைச் சொல்லும்போது இந்த மூன்று பேரைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்.

“ஒரு மனுஷருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய அப்பாவிடம் வந்து, ‘அப்பா, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டான். அதனால், அவர் தன்னுடைய சொத்துகளை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 15:11, 12) பொதுவாக, அப்பா இறந்துபோன பிறகுதான் சொத்தைப் பிரித்து தரும்படி கேட்பார்கள். ஆனால், இந்த இளைய மகனின் அப்பா உயிரோடுதான் இருக்கிறார். சுதந்திரமாகவும், தன் இஷ்டத்துக்கு வாழவும் அவன் ஆசைப்பட்டதால், அப்போதே தன் பங்கைத் தரும்படி கேட்கிறான். சொத்து கையில் கிடைத்ததும் அவன் என்ன செய்கிறான்?

“சில நாட்கள் கழித்து, அந்த இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு தூர தேசத்துக்குப் புறப்பட்டுப் போனான். அங்கே அவன் மோசமான வாழ்க்கை வாழ்ந்து, தன்னிடமிருந்த சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 15:13) தன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை விட்டுவிட்டு... தன்னைக் கண்ணும்கருத்துமாகக் கவனித்துக்கொண்டு, தனக்குத் தேவையானதையெல்லாம் கொடுத்த அப்பாவை விட்டுவிட்டு... தூர தேசத்துக்குப் போகிறான். ஒழுக்கக்கேடாக வாழ்ந்து, சொத்துகளையெல்லாம் ஊதாரித்தனமாகச் செலவழிக்கிறான். அதன் பிறகு, அவனுக்குப் பயங்கர கஷ்டங்கள் வர ஆரம்பிக்கின்றன.

“அவன் தன்னிடம் இருந்ததையெல்லாம் செலவழித்த பிறகு, அந்தத் தேசம் முழுவதும் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால், அந்தத் தேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய் வேலைக்குச் சேர்ந்துகொண்டான். அவர் தன்னுடைய பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் ஏங்கினான். ஆனால், அவனுக்கு யாரும் எதையும் கொடுக்கவில்லை” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 15:14-16.

பன்றிகள் அசுத்தமானவை என்று திருச்சட்டம் சொல்லியிருந்தது. ஆனால், அவன் பன்றிகளை மேய்க்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இப்போது கடுமையான பசி அவனை வாட்டி எடுக்கிறது. தான் மேய்க்கிற பன்றிகளுக்குப் போடுகிற தீவனமாவது சாப்பிடக் கிடைக்குமா என்று ஏங்குகிறான். இப்படிக் கஷ்டத்திலும் வேதனையிலும் தவிக்கும்போது, ‘அவனுக்குப் புத்தி வருகிறது.’ அப்போது அவன், “என் அப்பா வீட்டில் எத்தனையோ கூலியாட்கள் வயிறார சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன்! அதனால் நான் என் அப்பாவிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்கு அருகதையில்லை. உங்களுடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொல்வேன்” எனச் சொல்லிக்கொள்கிறான். பிறகு, எழுந்து தன் அப்பாவிடம் புறப்பட்டுப் போகிறான்.—லூக்கா 15:17-20.

இப்போது அவனுடைய அப்பா என்ன செய்வார்? அவனைப் பார்த்ததும் கோபத்தில் கொதிப்பாரா? ‘வீட்டை விட்டுப் போனது முட்டாள்தனம்’ என்று திட்டுவாரா? அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வாரா? நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்? வீட்டை விட்டுப் போனது உங்கள் மகனாகவோ மகளாகவோ இருந்தால் என்ன செய்வீர்கள்?

காணாமல் போன மகன் திரும்பி வருகிறான்

அந்த அப்பா எப்படி உணருகிறார், என்ன செய்கிறார் என்பதை இயேசு விளக்குகிறார்: “[இளைய மகன்] ரொம்பத் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய மனம் உருகியது, ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” (லூக்கா 15:20) அவன் ஒழுக்கக்கேடாக வாழ்ந்ததைப் பற்றி அவனுடைய அப்பா கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், தன்னுடைய மகனை ஏற்றுக்கொள்கிறார். யெகோவாவைப் பற்றித் தங்களுக்குத் தெரியும் என்றும், அவரை வணங்குகிறோம் என்றும் சொல்லிக்கொள்கிற யூதத் தலைவர்கள் இந்த உவமையிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்களா? மனம் திருந்துகிற பாவிகளைப் பார்க்கும்போது நம்முடைய பரலோகத் தகப்பன் எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்வார்களா? பாவிகளிடம் கடவுள் காட்டுகிற அதே மனப்பான்மையைத்தான் இயேசுவும் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்வார்களா?

இளைய மகன் திருந்திவிட்டான் என்பதைச் சோகத்தில் வாடிப்போன அவனுடைய முகமே காட்டுகிறது. அவனுடைய அப்பா அதைக் கவனித்திருப்பார். இருந்தாலும், அவனைப் பாசத்தோடு வரவேற்க அவரே முதல் படியை எடுக்கிறார். அதனால், தன்னுடைய பாவங்களை ஒத்துக்கொள்வது அவனுக்குச் சுலபமாக ஆனது. அவன் தன் அப்பாவிடம், “‘அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்கு அருகதையில்லை’ என்று சொன்னான்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 15:21.

அவனுடைய அப்பா தன் அடிமைகளிடம், “சீக்கிரம்! முதல்தரமான அங்கியைக் கொண்டுவந்து இவனுக்குப் போட்டுவிடுங்கள். இவனுடைய விரலில் மோதிரத்தையும் காலில் செருப்பையும் போட்டுவிடுங்கள். கொழுத்த கன்றுக்குட்டியைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் சாப்பிட்டுக் கொண்டாடுவோம். ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்; காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்” என்று சொல்கிறார். அதனால், அவர்கள் “சந்தோஷமாகக் கொண்டாட” ஆரம்பிக்கிறார்கள்.—லூக்கா 15:22-24.

அவருடைய மூத்த மகன் அப்போது வயலில் இருக்கிறான். அவனைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “அவன் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது, ஆடல்பாடலின் சத்தத்தைக் கேட்டான். அதனால், வேலைக்காரர்களில் ஒருவனைக் கூப்பிட்டு, என்ன நடக்கிறது என்று கேட்டான். அதற்கு அவன், ‘உங்கள் தம்பி வந்துவிட்டார். அவர் பத்திரமாக வீடு திரும்பிவிட்டதால் உங்கள் அப்பா கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறார்’ என்று சொன்னான். அதைக் கேட்டு அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது; வீட்டுக்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அப்போது, அவனுடைய அப்பா வெளியே வந்து, அவனைக் கெஞ்சிக் கூப்பிட்டார். அதற்கு அவன் தன்னுடைய அப்பாவிடம், ‘இத்தனை வருஷங்களாக நான் உங்களுக்காகப் பாடுபட்டு வேலை செய்திருக்கிறேன், உங்கள் பேச்சைத் தட்டியதே இல்லை. இருந்தாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொடுத்ததில்லை. ஆனால், விபச்சாரிகளோடு உல்லாசமாயிருந்து உங்கள் சொத்துகளை வீணாக்கிய உங்களுடைய மகன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்த கன்றுக்குட்டியை அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்’ என்று சொன்னான்.”—லூக்கா 15:25-30.

மூத்த மகனைப் போல யார் நடந்துகொள்கிறார்கள்? சாதாரண மக்களிடமும் பாவிகளிடமும் இயேசு பழகியதையும் அவர்களிடம் இரக்கம் காட்டியதையும் பார்த்து யார் குறை சொல்கிறார்கள்? வேத அறிஞர்களும் பரிசேயர்களும்தான். பாவிகளை இயேசு வரவேற்பதைப் பார்த்து அவர்கள் குறை சொன்னார்கள். அதனால்தான், இயேசு இந்த உவமையைச் சொன்னார். கடவுள் இரக்கம் காட்டுவதைப் பார்த்து குறை சொல்கிற எல்லாருமே, இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.

கடைசியாக அந்த அப்பா தன் மூத்த மகனிடம், “மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய்; என்னிடம் இருப்பதெல்லாம் உன்னுடையதுதான். ஆனால், உன் தம்பி செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான். இந்தச் சந்தோஷத்தை நாம் கொண்டாடாமல் இருக்க முடியுமா?” என்று கனிவோடு கேட்டதாக இயேசு சொல்கிறார்.—லூக்கா 15:31, 32.

அதைக் கேட்டு அந்த மூத்த மகன் என்ன செய்தான் என்று இயேசு சொல்லவில்லை. இயேசு இறந்து உயிரோடு எழுந்த பிறகு, “ஏராளமான குருமார்கள் இயேசுவின் சீஷர்களானார்கள்.” (அப்போஸ்தலர் 6:7) ஒருவேளை, இந்தக் குருமார்களில் சிலர் இயேசு சொன்ன இந்த உவமையைக் கேட்டிருக்கலாம். அதனால் புத்தி தெளிந்து, மனம் திருந்தி, கடவுளிடம் திரும்பி வந்திருக்கலாம்.

அன்றிருந்த இயேசுவின் சீஷர்களைப் போல, இன்றிருக்கிற சீஷர்களும் இந்த அருமையான உவமையில் சொல்லப்பட்ட முக்கியப் பாடங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல் பாடம் இதுதான்: நம்மேல் அன்பு காட்டி, நம்மைக் கவனித்துக்கொள்கிற நம் தகப்பனின் அரவணைப்பின்கீழ் அவருடைய மக்களோடு சேர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். ‘தூர தேசத்தில்’ இருக்கிற சுகபோக வாழ்க்கையில் மயங்கி, வழிதவறிப் போய்விடக் கூடாது.

மற்றொரு பாடம் என்னவென்றால், ஒருவேளை நாம் கடவுளுடைய வழியைவிட்டு விலகிப் போனாலும், தாழ்மையோடு நம் தகப்பனிடம் திரும்பி வர வேண்டும். அப்போது, மறுபடியும் அவருடைய தயவு நமக்குக் கிடைக்கும்.

இந்த உவமையிலிருந்து நாம் இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்கிறோம். அந்த அப்பா தன் இளைய மகனை வரவேற்றார், மன்னித்தார். ஆனால், மூத்த மகன் அவனை வரவேற்க மறுத்தான், வெறுப்பைக் காட்டினான். வழிதவறிப் போன யாராவது உண்மையிலேயே திருந்தி, ‘அப்பா வீட்டுக்கு’ திரும்பி வந்தால், கடவுளுடைய ஊழியர்கள் அவர்களை மன்னித்து வரவேற்க வேண்டும் என்பதை இந்த உவமை காட்டுகிறது. ‘செத்துப்போயிருந்த’ சகோதரன் ‘இப்போது உயிரோடு வந்துவிட்டான்,’ ‘காணாமல் போயிருந்தவன் இப்போது கிடைத்துவிட்டான்’ என்று நாம் சந்தோஷப்பட வேண்டும்.