அதிகாரம் 94
மனத்தாழ்மையும் ஜெபமும் மிக முக்கியம்
-
விடாப்பிடியான விதவையைப் பற்றிய உவமை
-
பரிசேயனும் வரி வசூலிப்பவனும்
இயேசு இப்போது சமாரியாவிலோ கலிலேயாவிலோ இருக்கலாம். விடாமல் ஜெபம் செய்வதைப் பற்றிய ஒரு உவமையை இயேசு ஏற்கெனவே தன் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (லூக்கா 11:5-13) இப்போது, அந்த விஷயத்தை வலியுறுத்துவதற்காக அவர் வேறொரு உவமையைச் சொல்கிறார்.
“ஒரு நகரத்தில் நீதிபதி ஒருவர் இருந்தார்; அவர் கடவுளுக்குப் பயப்படாதவர், மனுஷர்களையும் மதிக்காதவர். அந்த நகரத்தில் ஒரு விதவையும் இருந்தாள். அவள் ஓயாமல் அவரிடம் போய், ‘எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற வழக்கில் எனக்கு நியாயம் வழங்குங்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள். அவரோ பல நாட்களாக அவளுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. அதன் பின்பு அவர், ‘நான் கடவுளுக்கும் பயப்படுவதில்லை, எந்த மனுஷரையும் மதிப்பதில்லை. இருந்தாலும், இந்த விதவை ஓயாமல் என்னை நச்சரிப்பதால், எப்படியாவது இவளுக்கு நியாயம் வழங்கிவிட வேண்டும். அப்போதுதான் இவள் திரும்பத் திரும்ப வந்து என் உயிரை வாங்க மாட்டாள்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.”—லூக்கா 18:2-5.
பிறகு இயேசு, “அந்த நீதிபதி அநீதியுள்ளவராக இருந்தும் என்ன சொன்னாரென்று கவனித்தீர்களா? அப்படியிருக்கும்போது, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும்போது, அவர் அவர்களிடம் பொறுமையோடு இருந்து, அவர்களுக்கு நியாயம் வழங்காமல் இருப்பாரா?” என்று கேட்கிறார். (லூக்கா 18:6, 7) இந்த உவமையின் மூலம், இயேசு தன்னுடைய தகப்பனைப் பற்றி என்ன கற்பிக்கிறார்?
யெகோவா தேவன் அந்த அநீதியுள்ள நீதிபதியைப் போல நடந்துகொள்வதாக இயேசு சொல்லவே இல்லை. அநீதியுள்ள ஒரு மனித நீதிபதியே தன்னிடம் திரும்பத் திரும்பக் கேட்கிற ஒருவருக்கு உதவி செய்யும்போது, கடவுள் இன்னும் எந்தளவுக்கு உதவி செய்வார் என்றுதான் இயேசு சொல்கிறார். கடவுள் நீதியுள்ளவர், நல்லவர். தன்னுடைய மக்கள் விடாமல் ஜெபம் செய்தால், நிச்சயம் பதில் தருவார். அதனால்தான், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், [கடவுள்] சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவார்” என்று இயேசு சொல்கிறார்.—லூக்கா 18:8.
பெரும்பாலும், ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை; பணக்காரர்களுக்கும் செல்வாக்கு உள்ளவர்களுக்கும் சாதகமாகத்தான் எல்லாமே நடக்கிறது. ஆனால், கடவுள் பாரபட்சம் பார்க்க மாட்டார். காலம் வரும்போது, அநியாயமாக நடந்துகொள்கிறவர்களுக்கு அவர் தண்டனை கொடுப்பார். தன்னுடைய ஊழியர்களுக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பார்.
அந்த விதவைக்கு இருந்ததைப் போன்ற விசுவாசம் யாருக்கு இருக்கிறது? கடவுள் “சீக்கிரத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவார்” என்று எத்தனை பேர் உண்மையிலேயே நம்புகிறார்கள்? விடாமல் ஜெபம் செய்வது முக்கியம் என்பதை விளக்குவதற்கு இயேசு இப்போதுதான் ஒரு உவமையைச் சொல்லி முடித்திருந்தார். அடுத்ததாக, ஜெபம் செய்தால் பலன் கிடைக்கும் என்ற விசுவாசம் ஒருவருக்கு இருப்பது முக்கியம் என்று இயேசு சொல்கிறார். அதனால், “மனிதகுமாரன் வரும்போது பூமியில் உண்மையிலேயே இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்ப்பாரா?” என்று கேட்கிறார். (லூக்கா 18:8) கிறிஸ்து வரும்போது இப்படிப்பட்ட விசுவாசம் நிறைய பேரிடம் இருக்காது என்பதுதான் இதற்கு அர்த்தம்.
இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற சிலர், தங்களுக்குப் பலமான விசுவாசம் இருப்பதாக நினைக்கிறார்கள். தங்களை நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்களைக் கேவலமாகப் பார்க்கிறார்கள். அவர்களுக்காக இயேசு இந்த உவமையைச் சொல்கிறார்:
“ஜெபம் செய்வதற்காக இரண்டு பேர் ஆலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், இன்னொருவன் வரி வசூலிப்பவன். அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு, ‘கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதியாக நடக்கிறவர்களையும் லூக்கா 18:10-12.
மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போல நான் இல்லை, வரி வசூலிக்கிற இவனைப் போலவும் நான் இல்லை. இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். நான் வாரத்தில் இரண்டு தடவை விரதம் இருக்கிறேன், எனக்குக் கிடைக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன்’ என்று மனதுக்குள் ஜெபம் செய்தான்.”—பரிசேயர்கள் தங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்வதற்காகவும் எல்லாரும் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காகவும் மக்கள் முன்னால் பல விஷயங்களைச் செய்கிறார்கள். பொதுவாக, திங்கள்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் பெரிய பெரிய சந்தைகள் எல்லாம் பரபரப்பாக இருக்கும். அதனால், அன்றைக்கு விரதம் இருக்க வேண்டும் என்று தங்களுக்குத் தாங்களே ஒரு சட்டத்தைப் போட்டிருக்கிறார்கள். அப்போதுதானே நிறைய பேர் அவர்களைப் பார்ப்பார்கள்! சின்னச் சின்ன செடிகளைக் கூட நுணுக்கமாக அளந்து தசமபாகம் கொடுக்கிறார்கள். (லூக்கா 11:42) ஒருசில மாதங்களுக்கு முன்பு, “திருச்சட்டத்தை [திருச்சட்டத்துக்குப் பரிசேயர்கள் கொடுத்த விளக்கத்தை] புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று பொதுமக்களைப் பற்றி வெறுப்போடு சொல்லியிருந்தார்கள்.—யோவான் 7:49.
இயேசு அந்த உவமையில் அடுத்ததாக இப்படிச் சொல்கிறார்: “தூரத்தில் நின்றுகொண்டிருந்த வரி வசூலிப்பவனோ, வானத்தைப் பார்ப்பதற்குக்கூட துணியாமல், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, இந்தப் பாவிக்குக் கருணை காட்டுங்கள்’ என்று ஜெபம் செய்தான். நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்தப் பரிசேயனைவிட இவனே அதிக நீதியுள்ளவனாகத் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான். ஏனென்றால், தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”—லூக்கா 18:13, 14.
மனத்தாழ்மையாக இருப்பது முக்கியம் என்பதை இந்த உவமையின் மூலம் இயேசு தெளிவாகச் சொல்கிறார். தங்களை நீதிமான்களாக நினைத்துக்கொள்கிற பரிசேயர்கள், பதவியும் அந்தஸ்தும்தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த சீஷர்களுக்கு, இயேசு கொடுத்த இந்த ஆலோசனை பிரயோஜனமாக இருந்தது. சொல்லப்போனால், இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாருக்குமே பிரயோஜனமாக இருக்கிறது.