அதிகாரம் 100
பத்து மினாவைப் பற்றிய உவமை
-
பத்து மினாவைப் பற்றிய உவமை
எருசலேம்தான் இயேசு போக வேண்டிய இடம். அவர் ஒருவேளை இன்னமும் சகேயுவின் வீட்டில் தன் சீஷர்களோடு தங்கியிருந்திருக்கலாம். “கடவுளுடைய அரசாங்கம்” சீக்கிரத்தில் வந்துவிடும், இயேசு அதன் ராஜாவாக இருப்பார் என்று சீஷர்கள் நம்புகிறார்கள். (லூக்கா 19:11) இயேசு சாக வேண்டியது அவசியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாதது போல, அரசாங்கத்தைப் பற்றிய இந்த விஷயத்தையும் அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியை ஆரம்பிக்க இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காக இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார்.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜ அதிகாரத்தைப் பெற்றுவர தூர தேசத்துக்குப் புறப்பட்டார்” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 19:12) அப்படிப்பட்ட பயணம் ரொம்பக் காலம் எடுக்கும். “அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்” என்று இயேசு தன்னைப் பற்றித்தான் குறிப்பிட்டார். அவர் ‘தூர தேசமாகிய’ பரலோகத்துக்குப் பயணம் செய்வார். அங்கே, அவருடைய தகப்பன் அவருக்கு ராஜ அதிகாரத்தைக் கொடுப்பார்.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த” அந்த மனிதர் புறப்படுவதற்கு முன் தன்னுடைய பத்து அடிமைகளைக் கூப்பிட்டு, ஆளுக்கு ஒரு வெள்ளி மினாவைக் கொடுத்து, “நான் வரும்வரை இவற்றை வைத்து வியாபாரம் செய்யுங்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 19:13) வெள்ளி மினா விலைமதிப்புள்ள பணம். ஒரு மினாவைச் சம்பாதிக்க ஒரு விவசாய கூலியாள் மூன்று மாதங்களுக்குமேல் உழைக்க வேண்டும்.
இந்த உவமையில் சொல்லப்பட்ட அடிமைகள் தாங்கள்தான் என்பதை சீஷர்கள் ஒருவேளை புரிந்துகொண்டிருக்கலாம். ஏனென்றால், இயேசு ஏற்கெனவே அவர்களை அறுவடை செய்கிறவர்களோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். (மத்தேயு 9:35-38) தானியத்தை அறுவடை செய்து சேகரிக்கும்படி இயேசு அவர்களிடம் சொல்லவில்லை. கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்வதற்குத் தகுதியுள்ள மற்ற சீஷர்களை அவர்கள் சேகரிக்க, அதாவது கூட்டிச்சேர்க்க, வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார். அதற்காக, அவர்கள் தங்களுடைய நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்த வேண்டும்.
இந்த உவமையில் வேறு என்னென்ன விஷயங்களை இயேசு சொல்கிறார்? “அவருடைய குடிமக்கள் [அரச குடும்பத்தைச் சேர்ந்தவரை] வெறுத்தார்கள். அதனால், ‘இவன் எங்களுக்கு ராஜாவாக ஆவதில் எங்களுக்கு விருப்பமே இல்லை’ என்று சொல்லும்படி தூதுவர் குழுவை அவருக்குப் பின்னால் அனுப்பினார்கள்” என்று சொல்கிறார். (லூக்கா 19:14) யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சீஷர்களுக்குத் தெரியும். யூதர்களில் சிலர் இயேசுவைக் கொல்லவும் திட்டம் போட்டிருந்தார்கள். இயேசு இறந்து, பரலோகத்துக்குப் போன பிறகு, பெரும்பாலான யூதர்கள் அவருடைய சீஷர்களைத் துன்புறுத்தினார்கள். இயேசுமீது இருக்கிற வெறுப்பை சீஷர்கள்மீது காட்டினார்கள். அவரை ராஜாவாக ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிந்தது.—யோவான் 19:15, 16; அப்போஸ்தலர் 4:13-18; 5:40.
“அரச குடும்பத்தைச் சேர்ந்த” மனிதர் “ராஜ அதிகாரத்தை” பெற்றுக்கொண்டு திரும்பிவரும்வரை, அந்தப் பத்து அடிமைகளும் தங்களிடம் இருக்கிற மினாவை எப்படிப் பயன்படுத்துவார்கள்? அதைப் பற்றி இயேசு இப்படிச் சொல்கிறார்: “கடைசியில், அவர் ராஜ அதிகாரத்தை பெற்றுக்கொண்டு திரும்பி வந்தபோது, தான் பணம் கொடுத்திருந்த அடிமைகளை வரச் சொன்னார். ஏனென்றால், அவர்கள் வியாபாரம் செய்து எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அப்போது முதலாம் அடிமை வந்து, ‘எஜமானே, நீங்கள் கொடுத்த மினாவை வைத்து இன்னும் பத்து மினாவைச் சம்பாதித்தேன்’ என்று சொன்னான். அதற்கு அவர், ‘சபாஷ்! நல்ல அடிமையே, மிகச் சிறிய காரியத்தில் உண்மையுள்ளவனாக இருந்தாய், அதனால் பத்து நகரங்களுக்கு நீ அதிகாரியாக இரு’ என்று சொன்னார். அடுத்து, இரண்டாம் அடிமை வந்து, ‘எஜமானே, நீங்கள் கொடுத்த மினாவை வைத்து இன்னும் ஐந்து மினாவைச் சம்பாதித்தேன்’ என்று சொன்னான். அவனிடமும் எஜமான், ‘நீயும்கூட ஐந்து நகரங்களுக்கு அதிகாரியாக இரு’ என்று சொன்னார்.”—லூக்கா 19:15-19.
இந்த உவமையில் சொல்லப்பட்ட அடிமைகளைப் போல, சீஷர்களும் தங்களுடைய நேரம், சக்தி, பொருள் எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்தி, இன்னும் அதிகமான சீஷர்களை உருவாக்கினால் இயேசு நிச்சயம் சந்தோஷப்படுவார். அப்படிச் சுறுசுறுப்பாக உழைத்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்று சீஷர்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், எல்லாருடைய சூழ்நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கின்றன. ஆனால், சீஷர்களை உருவாக்குவதற்கு அவர்கள் உண்மையோடு எடுக்கிற முயற்சிகளை “ராஜ அதிகாரத்தை” பெற்றுக்கொள்ளும் இயேசு பார்ப்பார், அதற்குப் பலன் கொடுப்பார்.—மத்தேயு 28:19, 20.
ஆனால், எல்லா அடிமைகளும் சுறுசுறுப்பாக உழைப்பதில்லை. இந்த உவமையின் கடைசியில் இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: ‘ஆனால் வேறொரு [அடிமை] வந்து, “எஜமானே, இதோ! நீங்கள் கொடுத்த மினா. இதை நான் ஒரு துணியில் சுற்றி வைத்திருந்தேன். உங்களுக்குப் பயந்து அப்படிச் செய்தேன்; ஏனென்றால், நீங்கள் ரொம்பக் கறாரானவர், மற்றவர்கள் சேமித்ததை எடுக்கிறவர், மற்றவர்கள் விதைத்ததை அறுக்கிறவர்” என்று சொன்னான். அதற்கு அவர், “பொல்லாத அடிமையே, உன்னுடைய வார்த்தைகளை வைத்தே உன்னை நியாயந்தீர்ப்பேன்; நான் ரொம்பக் கறாரானவன், மற்றவர்கள் சேமித்ததை எடுக்கிறவன், மற்றவர்கள் விதைத்ததை அறுக்கிறவன் என்றெல்லாம் உனக்குத் தெரிந்திருந்ததுதானே? அப்படியானால், என் பணத்தை நீ ஏன் வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்ததும் அதை வட்டியோடு வாங்கியிருப்பேனே” என்று சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு, பக்கத்தில் நின்றவர்களிடம், “அவனிடமிருந்து அந்த மினாவை எடுத்து, பத்து மினா வைத்திருப்பவனிடம் கொடுங்கள்” என்று சொன்னார்.’—தன் எஜமானுடைய அரசாங்கத்தின் செல்வங்களை இன்னும் அதிகமாக்க இந்த அடிமை உழைக்கவில்லை. அதனால், இந்த அடிமைக்கு நஷ்டம்தான் மிஞ்சியது. கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்வார் என்று அப்போஸ்தலர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்தக் கடைசி அடிமையைப் பற்றி இயேசு சொன்னதைக் கேட்ட பிறகு, தாங்களும் ஊக்கமாக உழைக்காவிட்டால் கடவுளுடைய அரசாங்கத்தில் இடம் கிடைக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
இயேசுவின் வார்த்தைகள், உண்மையுள்ள சீஷர்களை இன்னும் அதிகமாக உழைக்கத் தூண்டுகிறது. அவர் கடைசியாக, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று சொல்கிறார். அதோடு, தான் “ராஜாவாக ஆவதை விரும்பாத” எதிரிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார். பிறகு, எருசலேமை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பிக்கிறார்.—லூக்கா 19:26-28.