சுய இன்பப் பழக்கத்திலிருந்து வெளிவருவது எப்படி?
அதிகாரம் 25
சுய இன்பப் பழக்கத்திலிருந்து வெளிவருவது எப்படி?
“எட்டு வயசுல இந்த பழக்கத்துல ஈடுபட ஆரம்பிச்சேன். அப்புறமாதான் இத பத்தி கடவுள் என்ன நினைக்கிறாருனு தெரிஞ்சுகிட்டேன். ஒவ்வொரு தடவை இத செஞ்சப்பவும் என்னை நினைச்சே எனக்கு கேவலமா இருந்துது. என்னை மாதிரி ஆளையெல்லாம் கடவுளுக்கு பிடிக்கவே பிடிக்காதுனு நினைச்சேன்.”—லூயிஸ்.
பருவ வயதில் பாலியல் ஆசைகள் ரொம்ப அதிகமாகும். அதனால், சுய இன்பப் பழக்கத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. * இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். “இதனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லயே” என்று வாதாடுகிறார்கள். ஆனால், இந்தப் பழக்கத்தைத் தவிர்ப்பதுதான் நல்லது. ‘கட்டுக்கடங்காத காமப்பசியை . . . தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (கொலோசெயர் 3:5) சுய இன்பப் பழக்கம் காமப்பசியை அழித்துப்போடுவதற்குப் பதிலாக அதைத் தூண்டிவிடுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விஷயங்களையும் யோசித்துப் பாருங்கள்:
● சுய இன்பப் பழக்கம் சுயநலத்தைத் தூண்டிவிடுகிறது. உதாரணத்துக்கு, இந்தப் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சுகத்தில்தான் குறியாக இருக்கிறார்கள்.
● சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் எதிர்பாலினரைத் தங்கள் காம ஆசையைத் தீர்க்கும் போகப் பொருளாக மட்டும்தான் பார்ப்பார்கள்.
● சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்களால் தாம்பத்திய உறவில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.
காமப்பசியைத் தீர்த்துக்கொள்ளும் ஆசையில் சுய இன்பப் பழக்கத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, காமப்பசியை அடக்குவதற்கு சுயகட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். (1 தெசலோனிக்கேயர் 4:4, 5) அதற்கு பைபிள் ஒரு நல்ல ஆலோசனை தருகிறது. பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற சூழ்நிலைகளை முதலில் தவிர்க்க வேண்டுமென்று அது சொல்கிறது. (நீதிமொழிகள் 5:8, 9) ஒருவேளை, நீங்கள் இந்தப் பழக்கத்தில் ஏற்கெனவே சிக்கியிருக்கலாம். அதிலிருந்து வெளிவர முயற்சி செய்தும் முடியாமல் போயிருக்கலாம். அதனால், உங்களால் திருந்தவே முடியாது என்றும், கடவுள் விரும்புவதுபோல் வாழவே முடியாது என்றும் நினைக்கலாம். அப்படித்தான் பெத்ரோ என்ற பையனும் நினைத்தான். “நான் திரும்பவும் அத செஞ்சப்போ எனக்கே ரொம்ப அசிங்கமாயிடுச்சு. எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாதுனு நினைச்சேன். என்னால ஜெபம்கூட செய்ய முடியல” என்று அவன் சொல்கிறான்.
நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், மனதை விட்டுவிடாதீர்கள்! தைரியமாக இருங்கள்! நம்பிக்கையோடு இருங்கள்! நிறைய இளைஞர்களும் சரி, பெரியவர்களும் சரி, இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். உங்களாலும் முடியும்!
குற்றவுணர்ச்சியை சமாளிக்க வழி
நாம் ஏற்கெனவே பார்த்தபடி, சுய இன்பப் பழக்கத்தில் சிக்கியிருப்பவர்கள் பெரும்பாலும் குற்றவுணர்ச்சியில் தவிக்கிறார்கள். செய்த தப்பை நினைத்து வருத்தப்படுவது நல்லதுதான். (2 கொரிந்தியர் 7:11) ஏனென்றால், அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவர அது உங்களுக்கு உதவும். ஆனால், அதையே நினைத்து நினைத்து குற்றவுணர்வில் மூழ்கிவிடுவது நல்லதல்ல. அதனால் சோர்வுதான் மிஞ்சும், கெட்ட பழக்கத்தை எதிர்த்துப் போராட முடியாமல் போய்விடும். —நீதிமொழிகள் 24:10.
சரி, சுய இன்பம் என்பது எவ்வளவு பெரிய பாவம்? அது அசுத்தமான ஒரு பழக்கம்தான். ஏனென்றால், அது “பலவிதமான ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும்” உங்களை அடிமைப்படுத்திவிடும். கெட்ட கெட்ட எண்ணங்களையும் தூண்டிவிடும். (தீத்து 3:3) அதேசமயத்தில், சுய இன்பப் பழக்கம் பாலியல் முறைகேட்டைப் போல் படுமோசமான பாவம் கிடையாது. (யூதா 7) உங்களுக்கு ஒருவேளை இந்தப் பிரச்சினை இருந்தால், ஏதோ மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டதாக நினைக்காதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்: ஆசையை அடக்கப் போராடுங்கள்; போராடுவதை ஒருநாளும் விட்டுவிடாதீர்கள்!
முயற்சி செய்தும் இந்தப் பழக்கத்தை உங்களால் விட முடியவில்லையென்றால் சோர்வு வருவது சகஜம்தான். நீங்கள் மறுபடியும் இதில் விழுந்துவிட்டீர்கள் என்பதற்காக நீங்கள் மோசமான ஒரு ஆள் என்று அர்த்தம் கிடையாது. அதனால், மனதைத் தளரவிடாதீர்கள்! எதனால் இந்தப் பழக்கத்தில் மறுபடியும் விழுந்துவிட்டீர்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த விஷயங்களை அடியோடு தவிர்த்துவிடுங்கள்.
கடவுள் காட்டும் அன்பையும் இரக்கத்தையும் பற்றி நேரமெடுத்து யோசித்துப் பாருங்கள். சில மோசமான தவறுகளைச் செய்த தாவீது, சங்கீதப் புத்தகத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல், யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார். நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” (சங்கீதம் 103:13, 14) நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும், அதனால் அவர் நம்மை ‘மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.’ (சங்கீதம் 86:5) அதேசமயத்தில், கெட்ட பழக்கத்தில் விழாமல் இருக்க நாம் போராட வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அப்படியென்றால், சுய இன்பப் பழக்கத்திலிருந்து வெளிவர நீங்கள் என்னென்ன செய்யலாம்?
எப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபடுகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற சினிமாக்களையோ டிவி நிகழ்ச்சிகளையோ வெப்சைட்டுகளையோ நீங்கள் பார்க்கிறீர்களா? “வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்” என்று சங்கீதத்தை எழுதிய ஒருவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.—சங்கீதம் 119:37.
உங்கள் மனதை நல்ல விஷயங்கள் பக்கமாகத் திருப்புங்கள். வில்லியம் என்ற கிறிஸ்தவ இளைஞன் இந்த ஆலோசனையைக் கொடுக்கிறான்: “தூங்குறதுக்கு முன்னாடி பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்கள வாசியுங்க. இந்த மாதிரி ஆன்மீக விஷயங்கள யோசிச்சிட்டே படுக்கப்போறது ரொம்ப முக்கியம்.”—பிலிப்பியர் 4:8.
பிரச்சினையைப் பற்றி யாரிடமாவது பேசுங்கள். யாரிடமாவது இதைப் பற்றிப் பேசுவது உங்களுக்கு ரொம்ப அவமானமாக இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் இந்தப் பழக்கத்திலிருந்து உங்களால் வெளியில் வர முடியும்! டேவிட் என்ற கிறிஸ்தவ இளைஞன் அதைத்தான் செய்தான். “நான் என் அப்பாகிட்ட தனியா போய் பேசுனேன். அவர் சொன்னதை என்னால் மறக்கவே முடியாது. முகத்துல ஒரு புன்னகையோட, ‘உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு’னு சொன்னாரு. தைரியத்த வரவெச்சு அவர்கிட்ட பேச நான் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன்னு அவரு புரிஞ்சுகிட்டாரு. அவர் சொன்ன வார்த்தைகள்தான் என்னை தூக்கி நிறுத்துச்சு. எப்படியாவது ஜெயிக்கணுங்கற மன உறுதிய கொடுத்துச்சு.
நான் மோசமான பையன் இல்லங்கறத புரிய வெக்குறதுக்கு அப்பா சில வசனங்கள காட்டுனாரு. அதேசமயத்தில், நான் செஞ்சது ஏதோ சின்ன விஷயம் இல்லங்கறத புரிய வெக்குறதுக்கும் சில வசனங்கள காட்டுனாரு. அப்புறம், இத பத்தி இன்னொரு தடவை பேசலாம் அப்படினும், அதுவரைக்கும் இதுல மறுபடியும் விழுந்துடாம இருக்க என்னெல்லாம் செய்ய முடியுமோ அதயெல்லாம் செய்யணும் அப்படினும் சொன்னாரு. உடனடியா விட முடியாட்டியும் மனசு உடைஞ்சுபோயிடாம முயற்சி பண்ணிட்டே இரு, முன்னேறிட்டே இரு அப்படினும் சொன்னாரு” என்று டேவிட் சொல்கிறான். குறிப்பாக, “இன்னொருத்தர்கிட்ட என் பிரச்சினையை பத்தி பேசறதும் அவரோட உதவிய ஏத்துக்கறதும் ரொம்ப பிரயோஜனமா இருந்துது” என்று அவன் சொல்கிறான்.
[அடிக்குறிப்புகள்]
^ சுய இன்பப் பழக்கம் வேறு, தானாகவே ஏற்படும் பாலியல் உணர்ச்சிகள் வேறு. உதாரணத்துக்கு, சில பையன்கள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது பாலியல் ரீதியில் கிளர்ச்சி அடைந்திருக்கலாம் அல்லது அவர்களுடைய விந்து வெளியேறியிருக்கலாம். அதேபோல் சில பெண்கள், குறிப்பாக மாதவிடாய் ஏற்படுவதற்குக் கொஞ்சம் முன்போ பின்போ, பாலியல் ரீதியில் தானாகவே கிளர்ச்சி அடையலாம். ஆனால், சுய இன்பப் பழக்கம் என்பது, பாலியல் இன்பத்தை அனுபவிப்பதற்காக ஒருவர் தன்னுடைய பிறப்புறுப்புகளை வேண்டுமென்றே கிளர்ச்சி அடையச் செய்வதைக் குறிக்கிறது.
முக்கிய வசனம்
“இளமைப் பருவத்தில் வருகிற ஆசைகளைவிட்டு நீ விலகி ஓடு; சுத்த இதயத்தோடு நம் எஜமான்மேல் நம்பிக்கை வைக்கிறவர்களுடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடு.”—2 தீமோத்தேயு 2:22.
டிப்ஸ்
பாலியல் ஆசை அதிகமாவதற்கு முன்பே ஜெபம் செய்யுங்கள். அந்த ஆசையை அடக்குவதற்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ கொடுக்கச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள்.—2 கொரிந்தியர் 4:7.
உங்களுக்குத் தெரியுமா . . . ?
பலவீனமாக இருப்பவர்கள் பாலியல் ஆசைகளுக்கு அடிபணிந்துவிடலாம். ஆனால், ஒரு நல்ல ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு அழகு, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதுதான், அதுவும் தனியாக இருக்கும்போதுகூட!
திட்டமிடுங்கள்.. செயல்படுங்கள்!
நல்ல விஷயங்களை மட்டுமே யோசிப்பதற்கு நான் இப்படியெல்லாம் செய்யலாம் ․․․․․
பாலியல் ஆசைக்கு இடம்கொடுப்பதற்குப் பதிலாக நான் இப்படியெல்லாம் செய்யப்போகிறேன் ․․․․․
இந்த விஷயத்தைப் பற்றி என் அப்பா அம்மாவிடம் இதையெல்லாம் கேட்க வேண்டும் ․․․․․
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
● யெகோவா ‘மன்னிக்கத் தயாராக இருக்கிறார்’ என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்?—சங்கீதம் 86:5.
● நமக்குள் பாலியல் ஆசைகளை வைத்ததே கடவுள்தான். அதேசமயத்தில், நாம் சுயக்கட்டுப்பாட்டை வளர்க்க வேண்டுமென்றும் அவர் சொல்கிறார். அப்படியென்றால், உங்களால் என்ன செய்ய முடியுமென்று அவர் நம்புகிறார்?
[சிறு குறிப்பு]
இந்த பழக்கத்த விட்டதுல இருந்து யெகோவாவுக்கு முன்னாடி என் மனசாட்சி சுத்தமா இருக்கு, எதுக்காகவும் நான் இத விட்டுக்கொடுக்க மாட்டேன்!’’—சாரா
[படம்]
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர் தடுமாறி விழலாம். ஆனால், அவர் திரும்பவும் ஆரம்பத்திலிருந்து ஓட வேண்டுமென்று கிடையாது. அதேபோல், சுய இன்பப் பழக்கத்தில் மறுபடியும் விழுந்துவிட்டால் இதுவரைக்கும் செய்த முன்னேற்றமெல்லாம் வீண் என்று சொல்ல முடியாது