நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?
அதிகாரம் 8
நல்ல நண்பர்களை சம்பாதிப்பது எப்படி?
“நான் கோவமா இருந்தா யார்கிட்டயாவது அத பத்தி பேசணும்னு தோணும். சோகமா இருந்தா, யாராவது என்கிட்ட ஆறுதலா பேசணும்னு தோணும். சந்தோஷமா இருந்தா, யார்கூடவாவது அத பகிர்ந்துக்கணும்னு தோணும். அதனால, ஃப்ரெண்ட்ஸ் இல்லாம நான் இல்லனுதான் சொல்வேன்.”—பிரிட்டனி.
சின்னப் பிள்ளைகளுக்கு, விளையாட ஆள் கிடைத்தால் போதும். ஆனால் டீனேஜர்களுக்கு அப்படி இல்லை. தோள்கொடுக்க ஒரு தோழன் வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்கள்.
“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) சின்ன வயதில் உங்களோடு விளையாடிய பிள்ளைகளைப் பற்றி இந்த வசனம் சொல்லவில்லை, எப்போதும் உங்களுக்குக் கைகொடுக்கும் நண்பர்களைப் பற்றிச் சொல்கிறது.
உண்மை: நீங்கள் வளரவளர, உங்களுக்கு இப்படிப்பட்ட நண்பர்கள் தேவை:
1. நல்ல குணங்களைக் காட்டும் நண்பர்கள்
2. மற்றவர்கள் பார்த்து பாராட்டும்படி நடந்துகொள்ளும் நண்பர்கள்
3. உங்களை செதுக்கி சீராக்கும் நண்பர்கள்
கேள்வி: இப்படிப்பட்ட நண்பர்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? இந்த மூன்று விஷயங்களையும் இப்போது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
நண்பர்கள் என்றால்…#1 நல்ல குணங்களைக் காட்ட வேண்டும்
இதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லாருமே நல்ல நண்பர்கள் கிடையாது. சொல்லப்போனால், “கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு” என்றும்கூட பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 18:24) இது நிஜம்தானா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: உங்களுடைய நண்பர்களில் யாராவது, தேவைக்காக மட்டும் உங்களோடு ஒட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்களா? இல்லையென்றால், உங்களைப் பற்றி முதுகுக்குப் பின்னால் பேசியிருக்கிறார்களா அல்லது உங்களைப் பற்றி ஏதாவது கதை கட்டிவிட்டிருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்கள்மேல் உங்களுக்கு இருந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துபோயிருக்கும். * பாடம் இதுதான்: உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல, எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
நீங்கள் என்ன செய்யலாம். யாரைப்போல் நடந்துகொள்ள விரும்புகிறீர்களோ அவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்.
“என்னோட ஃப்ரெண்டு ஃபியோனாவை எல்லாருமே ரொம்ப பாராட்டி பேசுவாங்க. அவள மாதிரியே என்னையும் எல்லாரும் பாராட்டணும்னு ஆசப்படுறேன். அவள மாதிரியே நானும் நல்ல பேர் எடுக்கணும். அதுதான் என்னோட கனவு.”—இவெட், 17.
இப்படிச் செய்து பாருங்கள்.
1. கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.
2. ‘இதுல சொல்லியிருக்குற குணங்கள் என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருக்கா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
3. உங்களுடைய நெருங்கிய நண்பர்களின் பெயர்களைக் கீழே எழுதுங்கள். அவர்களுடைய பெயருக்குப் பக்கத்தில், அவர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் என்ன சொல்வீர்கள் என்று எழுதுங்கள்.
பெயர்
․․․․․
குணம்
․․․․․
குறிப்பு: அவர்களைப் பற்றி யோசிக்கும்போது அவர்களுடைய கெட்ட குணங்கள்தான் உங்கள் மனதுக்கு வருகிறதா? அப்படியென்றால், உங்கள் நண்பர்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது!
நண்பர்கள் என்றால்… #2 மற்றவர்கள் பார்த்து பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும்
இதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஃப்ரெண்ட்ஸ் வேண்டும், ஃப்ரெண்ட்ஸ் வேண்டும் என்று ரொம்பத் துடித்தீர்கள் என்றால், தப்பான ஆட்களை உங்களுடைய நண்பர்களாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால், “முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:20) சரியாகப் படிக்காதவர்களையோ புத்திக்கூர்மை இல்லாதவர்களையோ ‘முட்டாள்கள்’ என்று இந்த வசனம் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, நல்ல புத்திமதிகளைக் கேட்காமல் தவறான வழியில் போகிறவர்களைத்தான் முட்டாள்கள் என்று சொல்கிறது. அப்படிப்பட்ட நண்பர்கள் உங்களுக்குத் தேவையா?
நீங்கள் என்ன செய்யலாம். பார்க்கிறவர்களையெல்லாம் நண்பர்களாக்கிக்கொள்ள நினைக்காதீர்கள். யார், எப்படிப்பட்டவர் என்றெல்லாம் பார்த்து ரொம்பக் கவனமாக நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். (சங்கீதம் 26:4) அதற்காக, நீங்கள் பாகுபாடு பார்க்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ‘நீதிமானுக்கும் கெட்டவனுக்கும், கடவுளுக்குச் சேவை செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்க்க’ வேண்டும் என்றுதான் அர்த்தம்.—மல்கியா 3:18.
“என் வயசு பிள்ளைகள்ல யார் உண்மையிலேயே கடவுள்மேல அன்பு வெச்சிருக்காங்கனு கண்டுபிடிச்சு அவங்கள என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஆக்கிக்கறதுக்கு என்னோட அப்பா அம்மா எனக்கு உதவி செஞ்சாங்க. அவங்களுக்குத்தான் ரொம்ப நன்றி சொல்லணும்.”—க்றிஸ்டோஃபர், 13.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
என்னுடைய நண்பர்களோடு இருக்கும்போது, என்னை ஏதாவது தப்பு செய்ய வைத்துவிடுவார்களோ என்று ரொம்பப் பயப்படுகிறேனா?
□ ஆமாம்
□ இல்லை
‘இவர்கள்தான் என் நண்பர்கள்’ என்று என் அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வைப்பதற்கு எனக்குப் பயமாக இருக்கிறதா?
□ ஆமாம்
□ இல்லை
குறிப்பு: இந்தக் கேள்விகளுக்கு “ஆமாம்” என்று நீங்கள் பதில் சொன்னால், கடவுளுக்குப் பிடித்த மாதிரி நடக்கும் நல்ல நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்.
நண்பர்கள் என்றால்… #3 உங்களை செதுக்கி சீராக்க வேண்டும்
இதைத் தெரிந்துகொள்ளுங்கள். “கெட்ட நண்பர்கள் உங்களுடைய நல்ல குணங்களைக் கெடுத்துவிடுவார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் ) லாரன் என்று இளம் பெண் இப்படிச் சொல்கிறாள்: “நான் தனியா இருக்குற மாதிரி தோணுச்சு. என்கூட படிச்சவங்க சொல்றதயெல்லாம் நான் செஞ்சவரைக்கும்தான் அவங்க என்னை சேர்த்துக்கிட்டாங்க. அதனால, அவங்க என்னை ஒதுக்கிட கூடாதுனு நெனைச்சு அவங்க சொல்றதயெல்லாம் செய்ய ஆரம்பிச்சேன்.” ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் செய்தால் அவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையைப் போல் ஆகிவிடுவோம் என்று லாரன் பிற்பாடு புரிந்துகொண்டாள். அப்படிப்பட்ட நண்பர்களா உங்களுக்கு வேண்டும்?
நீங்கள் என்ன செய்யலாம். உங்கள் நண்பர்கள் அவர்களுடைய வழிக்கு உங்களை இழுக்கப் பார்த்தால் அவர்களுடைய நட்பை ‘கட்’ பண்ணிவிடுங்கள். அப்படிச் செய்யும்போது உங்களுக்குக் குறைவான நண்பர்கள்தான் இருப்பார்கள். ஆனால், உங்களை நன்றாகச் செதுக்கி சீராக்கும் நண்பர்களாக இருப்பார்கள்.—ரோமர் 12:2.
“என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டு க்ளின்ட் எப்பவுமே சரியான முடிவு எடுப்பான், மத்தவங்களோட உணர்ச்சிகளயும் புரிஞ்சுப்பான். அதனால எனக்கு எப்பவுமே ஒரு தூண் மாதிரி இருந்திருக்கான்.”—ஜேசன், 21.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
என் நண்பர்கள சந்தோஷப்படுத்துறதுக்காக நான் கண்டபடி டிரஸ் பண்ணிக்கிறேனா, பேசுறேனா, நடந்துக்குறேனா?
□ ஆமாம்
□ இல்லை
என் நண்பர்கள சந்தோஷப்படுத்துறதுக்காக நான் போகக் கூடாத இடத்துக்கெல்லாம் போறேனா?
□ ஆமாம்
□ இல்லை
குறிப்பு: இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் “ஆமாம்” என்று பதில் சொன்னால், உங்கள் அப்பா அம்மாவிடம் அல்லது அனுபவமுள்ள இன்னொருவரிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தால், சபையில் இருக்கும் ஒரு மூப்பரிடம்கூடப் பேசிப் பார்க்கலாம். உங்களை செதுக்கி சீராக்கும் நண்பர்களைக் கண்டுபிடிக்க அவரிடம் உதவி கேட்கலாம்.
[அடிக்குறிப்பு]
^ நாம் எல்லாருமே தவறுகள் செய்கிறவர்கள்தான். (ரோமர் 3:23) அதனால், உங்கள் நண்பர் உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டு, பிறகு மனதார மன்னிப்பு கேட்டால் அவரை மன்னித்துவிடுங்கள். ஏனென்றால், “அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:8.
முக்கிய வசனம்
“கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.”—நீதிமொழிகள் 18:24.
டிப்ஸ்
நல்ல வழியில் போக முயற்சி செய்யுங்கள். அப்போதுதான், அதே வழியில் போக நினைக்கும் நண்பர்களைக் கண்டுபிடிப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.
உங்களுக்குத் தெரியுமா . . . ?
கடவுள் பாரபட்சம் பார்ப்பதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், யாரை வேண்டுமானாலும் அவர் ‘தன்னுடைய கூடாரத்தில் விருந்தாளியாக’ ஏற்றுக்கொள்ள மாட்டார். அதாவது, அவருடைய நண்பர்களை அவர் ரொம்பக் கவனமாகத்தான் தேர்ந்தெடுப்பார்.—சங்கீதம் 15:1-5.
திட்டமிடுங்கள்.. செயல்படுங்கள்!
நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க நான் இப்படியெல்லாம் செய்யப்போகிறேன்․․․․․
என்னைவிட வயதில் பெரியவர்களாக இருக்கும் இவர்களை என் நண்பர்களாக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன்․․․․․
இந்த விஷயத்தைப் பற்றி என் அப்பா அம்மாவிடம் இதையெல்லாம் கேட்க வேண்டும்․․․․․
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
● உங்கள் நண்பர்களிடம் என்ன குணங்கள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள், ஏன்?
● ஒரு நல்ல நண்பராக இருப்பதற்கு உங்களுக்கு என்ன குணங்கள் தேவை என்று நினைக்கிறீர்கள்?
[சிறு குறிப்பு]
“சில பசங்களோட சேரக் கூடாதுனு அப்பா அம்மா சொன்னப்போ என்னால ஏத்துக்கவே முடியல. எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னா இவங்கதான்னு நெனைச்சேன். ஆனா, அப்பா அம்மா சொன்னத கொஞ்சம் யோசிச்சு பார்த்தப்போதான் எனக்கு கண்ணு திறந்த மாதிரி இருந்துச்சு. எத்தனையோ நல்ல நண்பர்கள் எனக்கு கிடைப்பாங்கனு புரிஞ்சுக்க முடிஞ்சுது.”—கோல்
[பெட்டி]
உங்களுக்குச் சில ஆலோசனைகள்!
நண்பர்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி உங்கள் அப்பா அம்மாவிடம் பேசுங்கள். உங்கள் வயதில் இருந்தபோது அவர்களுக்கு எப்படிப்பட்ட நண்பர்கள் இருந்தார்கள் என்று கேளுங்கள். சிலரை ஏன்தான் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தோமோ என்று இப்போது வருத்தப்படுகிறார்களா? ஆம் என்றால், அதற்கு என்ன காரணம்? அவர்கள் செய்த அதே தவறை நீங்கள் எப்படிச் செய்யாமல் இருக்கலாம் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களை உங்கள் அப்பா அம்மாவிடம் அறிமுகப்படுத்தி வையுங்கள். அப்படிச் செய்ய உங்களுக்கு சங்கடமாக இருந்தால், ‘எனக்கு ஏன் இப்படி தோணுது?’ என்று யோசியுங்கள். ஒருவேளை உங்களுடைய அப்பா அம்மாவுக்குப் பிடிக்காத எதையாவது அவர்கள் செய்கிறார்களா? ஆம் என்றால், உங்கள் நண்பர்களை நீங்கள் இன்னும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அர்த்தம்.
நன்றாகக் காதுகொடுத்துக் கேளுங்கள். உங்கள் நண்பர்களின் நலனில் ஆர்வம் காட்டுங்கள். அவர்கள் மனம்விட்டுப் பேசும்போது அக்கறையோடு கேளுங்கள்.—பிலிப்பியர் 2:4.
மன்னியுங்கள். உங்கள் நண்பர்களிடம் குறையே இருக்கக் கூடாதென்று நினைக்காதீர்கள். “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.”—யாக்கோபு 3:2.
உங்கள் நண்பர்களைத் தனியாக இருக்க விடுங்கள். உங்கள் நண்பர்களோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்காதீர்கள். உண்மையான நண்பர்களாக இருந்தால், உங்களுக்குத் தேவைப்படும்போது நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.—பிரசங்கி 4:9, 10.