Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?

நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?

அதிகாரம் 1

நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’?

“உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.” இளைஞர் பலருக்கு இவ்வார்த்தைகள் இருள் சகாப்தங்களிலிருந்து வரும் ஒன்றைப்போல் தொனிக்கிறது.

இளம்பெண் வேதா, போதைப் பொருட்கள் மற்றும் சாராயத் துர்ப்பழக்கத்தில் ஈடுபட்ட ஓர் இளைஞனுடன் காதல் சந்திப்பு வைத்துக்கொள்வதனால் தன் தகப்பனுக்கு எதிராக வெளிப்படையான எதிர்ப்புத் தெரிவித்தாள். துணிவுடன் எதிர்த்து, வெளிச்சென்று விடியற்காலை மணிநேரங்கள்வரையில் நடனமாடுவதில் ஈடுபடுவாள். “அவர் மட்டுக்கு மீறி கண்டிப்பாயிருந்தாரென நான் உணர்ந்தேன்,” என வேதா விளக்குகிறாள். “நான் 18 வயதாயிருந்தேன், எனக்கு எல்லாம் தெரியுமென எண்ணினேன். என் தகப்பன் குறுகிய நோக்குடையவர் நான் இன்பம் அனுபவிப்பதை அவர் முற்றிலும் விரும்பவில்லையென நான் உணர்ந்தேன், ஆகையால் வெளியில் சென்று நான் விரும்பியதைச் செய்தேன்.”

வேதாவின் நடத்தையை இளைஞர் பெரும்பான்மையர் ஒருவேளை கண்டனஞ் செய்யலாம். எனினும், தங்கள் அறையைச் சுத்தம் செய்ய, வீட்டுப்பாட வேலையைச் செய்ய, அல்லது குறிப்பிட்ட மணிநேரத்துக்குள் வீட்டில் இருக்கத் தங்கள் பெற்றோர் அவர்களைக் கட்டளையிட்டால், பலர் கோபத்தால் மனங்கொதித்துக் குமுறுவர் அல்லது, அதற்கும் மோசமாக, வெளிப்படையாய்த் தங்கள் பெற்றோரை எதிர்த்து நிற்பர்! எனினும், ஓர் இளைஞன் தன் பெற்றோரைக் கருதும் முறை, முடிவில், வீட்டில் போருக்கும் சமாதானத்துக்குமுள்ள வேறுபாட்டை மட்டுமேயல்லாமல் அவனுடைய உயிரைத்தானேயும் குறிக்கும். எப்படியெனில், ‘உன் பெற்றோரைக் கனம்பண்ணவேண்டுமென்றக்’ கட்டளை கடவுளிடமிருந்து வருகிறது, மேலும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு அவர், “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்” என்ற ஊக்கமூட்டும் தூண்டுதலையும் கொடுக்கிறார். (எபேசியர் 6:2, 3) இதனால் விளையும் நஷ்டம் அல்லது இலாபம் மிகுதி. ஆகையால், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுதல் உண்மையில் குறிப்பதை நாம் புதிய கோணத்திலிருந்து பார்க்கலாம்.

அவர்களைக் ‘கனம்பண்ணுதல்’ எதைக் குறிக்கிறது

“கனம்பண்ணுதல்” தகுதியாய் நியமிக்கப்பட்ட அதிகாரத்தை ஏற்பதை உட்படுத்துகிறது. உதாரணமாக, “ராஜாவைக் கனம்பண்ணுங்கள்,” என்று கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்படுகின்றனர். (1 பேதுரு 2:17) தேச அரசனோடு நீ எல்லாச் சமயங்களிலும் ஒத்திராவிடினும், அவருடைய பதவியை அல்லது அதிகாரப் பொறுப்பை எப்போதும் மதிக்கவேண்டும். இவ்வாறே, கடவுள் பெற்றோருக்குக் குடும்பத்தில் குறிப்பிட்ட அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். இது, உனக்கு விதிகளை உண்டுபண்ண கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் உரிமையை நீ ஏற்கவேண்டுமெனக் குறிக்கிறது. உண்மைதான், மற்றப் பெற்றோர் உன்னுடைய பெற்றோரைவிட கண்டிப்புக் குறைவாய் இருக்கலாம். எனினும், உனக்கு மிகச் சிறந்ததெதுவென தீர்மானிப்பது உன் பெற்றோரின் வேலை—மேலும் வெவ்வேறு குடும்பங்களுக்கு வெவ்வேறு தராதரங்கள் இருக்கலாம்.

மிகச் சிறந்த பெற்றோருங்கூட எப்போதாவது கடுமையாய்—நியாயமற்றுங்கூட இருக்கலாமென்பதும் மெய்யே. ஆனால் நீதிமொழிகள் 7:1, 2-ல் (NW) ஞானமுள்ள பெற்றோர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “என் மகனே [அல்லது மகளே], . . . என் கட்டளைகளைக் கைக்கொண்டு தொடர்ந்து வாழ்ந்திரு.” அவ்வாறே, உன் பெற்றோரின் விதிகள், அல்லது “கட்டளைகள்,” பொதுவாய் உன் நன்மைக்காகவே கருதப்படுகின்றன மேலும் அவர்களுடைய உண்மையான அன்பின் மற்றும் அக்கறையின் ஒரு வெளிக்காட்டாயும் இருக்கின்றன.

உதாரணமாக, ஜானின் தாய், அவன் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள ஆறு-ஒருதிறப்போக்குகளடங்கிய நெடுஞ்சாலைக்குமேல் கவிந்திருந்த நடைபாதையையே எப்பொழுதும் பயன்படுத்தவேண்டுமென அவனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தாள். ஒரு நாள், பள்ளியிலிருந்து இரண்டு சிறுமிகள் சுருக்குவழியாக அந்தப் பெரும்பாதைக்குக் குறுக்கேதானே கடந்துசெல்லத் துணிவுகொள்ளும்படி அழைத்தனர். “கோழை!” என அவர்கள் பழித்துக் கூறினதையும் பொருட்படுத்தாமல் ஜான் அந்த நடைபாதையில் சென்றான். சிறிதுதூரம் கடந்த பின்பு, கார் டயர்களின் கிறீச்சொலி ஜானுக்குக் கேட்டது. கீழே நோக்கினபோது, அந்த இரு சிறுமிகளை ஒரு கார் மோதி காற்றில் சுழற்றியெறிவதை திகில்கொண்ட நடுக்கத்துடன் கண்டான்! உன் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது உயிருக்கும் மரணத்துக்குமுரிய காரியமாக இருப்பது மிக அரிதென ஒப்புக்கொள்ளவேண்டியதே. இருப்பினும் கீழ்ப்படிதல் பொதுவாய் உனக்கு நன்மை பயக்குகிறது.

‘உன் பெற்றோரைக் கனம்பண்ணுதல்’ திருத்தத்தை ஏற்பதையும் குறிக்கிறது, சிட்சை கொடுக்கப்படுகையில் சிடுசிடுத்து முகத்தைத் தொங்கவிட்டுக்கொண்டோ அல்லது கோபாவேசத்துடன் சீறிக்கொண்டோ இருப்பதல்ல. மூடனே “தன் தகப்பனின் சிட்சையை அவமதிக்கிறான்,” என்று நீதிமொழிகள் 15:5 (NW) சொல்லுகிறது.

கடைசியாக, கனம்பண்ணுவது வெறுமென புற ஆசாரமான மரியாதை கொடுப்பதோ வேண்டாவெறுப்புடன் கீழ்ப்படிவதோ இல்லை. பைபிளில் “கனம்பண்ணு” என்று மொழிபெயர்த்துள்ள மூல கிரேக்க வினைச்சொல், ஒருவரைப் பெரும் மதிப்புள்ளவராகக் கருதுவதை அடிப்படையாய்க் குறிக்கிறது. இவ்வாறு பெற்றோரை உனக்கு மிக அருமையானவர்களும், உயர்ந்த மதிப்புக்குரியவர்களும், அன்பானவர்களுமாய்க் கருத வேண்டும். இது அவர்களிடம் அன்புமிக்க, நன்றிமதித்துணரும் உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது. எனினும், இளைஞர்களில் சிலருக்குத் தங்கள் பெற்றோரிடம் அன்புமிக்க உணர்ச்சி சற்றேனும் இல்லை.

பிரச்னையுண்டாக்கும் பெற்றோர்—கனத்துக்குத் தகுதியுள்ளோரா?

கீனா என்ற இளம்பெண் பின்வருமாறு எழுதினாள்: “என் தந்தை மிக அதிகம் குடித்தார், என் பெற்றோர் அவ்வளவு மிக வாதாடிக் கத்துவதால் என்னால் தூங்க முடிகிறதில்லை. நான் படுக்கையில் படுத்துக்கொண்டு வெறுமென அழுவேன். என் உணர்ச்சியைப்பற்றி நான் அவர்களுக்குச் சொல்லமுடியாது ஏனெனில் அம்மாள் பெரும்பாலும் என்னை அடிப்பார்கள். ‘உன் தகப்பனைக் கனம்பண்ணு’ என்று பைபிள் சொல்லுகிறது, ஆனால் என்னால் முடியாது.”

முன்கோபமுள்ள அல்லது ஒழுக்கக்கேட்டு நடத்தையுள்ள, குடிகாரராயுள்ள, அல்லது ஒருவரோடொருவர் சண்டையிடுகிற பெற்றோர்—உண்மையில் கனத்துக்குத் தகுதியுடையோரா? ஆம், ஏனெனில் பெற்றோர் எவரையாவது “பரியாச”த்துடன் கருதுவதை பைபிள் கண்டனம் செய்கிறது. (நீதிமொழிகள் 30:17) உன் பெற்றோர் “உன்னைப் பெற்ற”தை நீதிமொழிகள் 23:22 மேலும் நமக்கு நினைப்பூட்டுகிறது. இதுதானேயும் அவர்களைக் கனப்படுத்துவதற்குக் காரணமாயிருக்கிறது. ஒரு காலத்தில் வெகு அவமரியாதையுடன் நடந்துகொண்ட கிரெகரி, இப்பொழுது சொல்வதாவது: “ஒரு குழந்தையாக என்னை [என் தாய்] கருச்சிதைவு செய்யாததற்காக அல்லது குப்பைத் தொட்டியில் எறிந்துபோடாததற்காக நான் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துகிறேன். ஒற்றைப் பெற்றோராய் அம்மாள் தனித்திருந்தார்கள். நாங்கள் ஆறு பேர்கள் இருந்தோம். இது அவர்களுக்கு எவ்வளவு கடினமென்பது எனக்குத் தெரியும்.”

உன் பெற்றோர் பரிபூரணராயிராதபோதிலும், உனக்காகப் பல தியாகங்களையும் செய்தனர். “ஒரு சமயம் சாப்பிடுவதற்கு எங்களுக்கு இருந்ததெல்லாம் ஒரு குவளை மக்காச்சோளமும் சிறிது நொய்யும்தான்,” என்று கிரெகரி மேலும் தொடர்ந்து சொல்கிறான். “அதை என் அம்மா பிள்ளைகளாகிய எங்களுக்குத் தயாரித்துக் கொடுத்தார்கள், அவர்கள் சாப்பிடவே இல்லை. நான் நிறைவாய்ச் சாப்பிட்டு தூங்கச் சென்றேன், ஆனால் அம்மா ஏன் சாப்பிடவில்லை என்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொண்டேயிருந்தேன். இப்பொழுது எனக்கென்று ஒரு குடும்பம் இருப்பதால், அவர்கள் எங்களுக்காகத் தியாகஞ்செய்ததை நான் தெளிவாக உணருகிறேன்.” (ஒரு பிள்ளையை 18 வயதுவரை வளர்ப்பதற்கு ஏற்படும் செலவு ரூ10,00,000 என ஓர் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.)

ஒரு பெற்றோரின் முன்மாதிரி மிகச் சிறந்ததாயில்லை என்ற இந்த வெறுங்காரணத்தால், அவரோ அவளோ உனக்குச் சொல்லும் எல்லாம் தவறென குறிப்பதில்லை என்பதையும் உணருவாயாக. இயேசுவின் நாளில், அந்த மதத் தலைவர்கள் நேர்மையற்றவர்களாயிருந்தார்கள். எனினும், இயேசு ஜனங்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்.” (மத்தேயு 23:1-3, 25, 26) பெற்றோர் சிலருக்கு இந்த நியமத்தைப் பொருத்திப் பயன்படுத்தலாமல்லவா?

மனக்கசப்பு உணர்ச்சிகளைச் சமாளித்தல்

பெற்றோரொருவர் அவருடைய அல்லது அவளுடைய அதிகாரத்தை வினைமையான முறையில் தவறாகப் பயன்படுத்துகிறாரென நீ உணர்ந்தால் என்ன செய்வது? a அமைதியாகப் பொறுத்திரு. எதிர்ப்புணர்ச்சிக் காட்டுவது ஒன்றையும் நிறைவேற்றுவதில்லை, வெறுப்புக்கொண்ட, பகைமையான நடத்தையும் அவ்வாறே பயனற்றது. (பிரசங்கி 8:3, 4; பிரசங்கி 10:4-ஐ ஒத்துப் பார்க்கவும்.) 17 வயதான ஒரு பெண், தன் பெற்றோர் தங்களுடைய சொந்த சண்டைச்சச்சரவுகளில் மூழ்கியிருந்து அவளிடம் அக்கறையற்றிருந்ததாகத் தோன்றினதால் அவர்கள்பேரில் மனக்கசப்படையலானாள். பின்பு அவர்களிடம் கொண்டிருந்த கோபத்தை, அவர்கள் அவளுக்குக் கற்பிக்க முயன்ற பைபிள் நியமங்களின்பேரில் அவள் காட்டினாள். வெறும் உட்பகை உணர்ச்சியால், அவள் பாலுறவு ஒழுக்கக்கேட்டிலும் போதைப்பொருள் கெடுபழக்கத்திலும் துணிகரமாய் ஈடுபட்டாள். “என் பெற்றோருக்கு இவ்வாறு நான் செய்ய வேண்டுமென உணர்ந்தேன்,” என்பது அவளுடைய மனக்கசப்பான விளக்கம். ஆனால் உட்பகை கொண்டிருந்ததால், அவள் தனக்குத்தான் தீங்கிழைத்துக்கொண்டாள்.

பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “உக்கிரக் கோபம் உட்பகைக்குள் (செயல்களுக்குள்) கவர்ந்து சிக்கவைக்காதபடி எச்சரிக்கையாயிரும், . . . தீங்கானதற்கு நீர் திரும்பாதபடி உம்மைக் கவனமாய்க் காத்துக்கொள்ளும்.” (யோபு 36:18-21, NW) பெற்றோர் தங்கள் நடத்தைக்காக யெகோவாவுக்குமுன் பொறுப்புள்ளோராயிருக்கின்றனர், வினைமையான அநியாயங்கள் எவற்றிற்காகவும் பதில் சொல்வார்கள் என்பதைத் தெளிவாய் உணர்ந்துகொள்.—கொலோசெயர் 3:25.

நீதிமொழிகள் 19:11 பின்வருமாறு சொல்லுகிறது: “மனுஷனுடைய விவேகம் [உட்பார்வை, NW] அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” சில சமயங்களில் பெற்றோரின் வருத்தமுண்டாக்கும் செயல்களை மன்னித்து மறந்துவிட முயற்சி செய்வது மிக நல்லது. அவருடைய குற்றங்களின்பேரில் சிந்தித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும், அவருடைய நல்ல பண்புகளின்பேரில் மனதை ஊன்றவை. உதாரணமாக, டோடிக்கு, உணர்வற்ற அம்மாளும் குடிகார மாற்றாந்தந்தையும் இருந்தார்கள். அவர்களுடைய குறைபாடுகளுக்குள் அவளுக்கிருந்த உட்பார்வை எவ்வாறு அவளுடைய மனக்கசப்பைத் தணித்ததென்பதைக் கவனி. அவள் சொல்கிறாள்: “ஒருவேளை என் தாய் எங்களுக்கு அன்பு காட்டாததன் காரணம், ஒடுக்கப்பட்ட பிள்ளையாக, அன்பு காட்டுவது எவ்வாறென அவர்கள் ஒருபோதும் கற்பிக்கப்படாததேயாக இருக்கலாம். என் மாற்றாந்தந்தை, தான் குடிமயக்கமற்ற நிலையில் இருக்கையில் எங்கள் நடவடிக்கைகளில் அக்கறை காட்டினார், ஆனால் அது அடிக்கடி இருப்பதில்லை. எனினும் என் சகோதரிக்கும் எனக்கும் தங்க இடமும் குளிர்சாதனபெட்டியில் உணவும் இருந்தன.”

நல்ல காலமாக, ஏறுமாறாய் நடக்கும் அல்லது கவனியாது விடும் பெற்றோர்கள் சிறுபான்மையோரேயாவர். பெரும்பாலும் உன் பெற்றோர் உன்னில் அக்கறை எடுத்து நல்ல முன்மாதிரி வைக்க முயற்சி செய்யலாம். இருப்பினும், சில சமயங்களில் நீ ஒருவேளை அவர்களிடம் ஓரளவு மனக்கசப்பை உணரக்கூடும். “சிலசமயங்களில் நான் என் அம்மாவிடம் ஒரு பிரச்னையைக் கலந்துபேசி அவர்கள் என் குறிப்பைக் காணமுடியாதிருக்கையில், நான் எரிச்சலடைந்து அவர்களுக்கு வேண்டுமென்றே வருத்தமுண்டாக்க மனக்கசப்புடன் ஏதாவது சொல்வேன். இதுவே பதிலுக்குப் பதில் செய்யும் என் முறையாயிருந்தது. ஆனால் நான் அவ்விடத்தை விட்டுச் செல்கையில், மிக மனசங்கட உணர்ச்சியடைந்தேன், அம்மாளுக்கும் மன அமைதி இல்லை என எனக்குத் தெரியும்,” என ரோஜர் என்ற இளைஞன் ஒப்புக்கொள்கிறான்.

முன்யோசனையற்ற சொற்கள் ‘பட்டயம்போல் குத்தி’ ‘வேதனையை உண்டாக்கும்,’ ஆனால் அவை உன் பிரச்னையைத் தீர்க்காது. “ஞானமுள்ளோரின் நாவு காயமாற்றும்.” (நீதிமொழிகள் 12:18; 15:1, தி.மொ.) “கடினமாயிருந்தபோதிலும், நான் திரும்பிச் சென்று மன்னிப்புக்கோருவேன்,” என ரோஜர் விளக்குகிறான். “பின்பு அதிக சாந்த மனநிலையுடன் அந்தப் பிரச்னையை நான் கலந்துபேச முடிகிறது, அதை நாங்கள் தீர்க்கவும் முடிகிறது.”

‘என் தந்தை சொன்னது சரி’

கவனத்தைக் கவருவதாய், இளைஞர் சிலர் பெற்றோரின் கட்டளைகளை எதிர்த்து தங்களுக்கும் தங்கள் பெற்றோக்கும் ஓயாத் தொல்லையுண்டாக்குகின்றனர், பின்னால் தங்கள் பெற்றோரே முழுவதும் சரியில் இருந்தனர் என்று உணரவேண்டியதாகிறது. உதாரணமாக, (தொடக்கத்தில் குறிப்பிட்ட) வேதாவைக் கவனியுங்கள். அவள் ஒரு நாள் தன் காதலனோடு காரில் உல்லாசமாய்ச் சென்றாள். அவன் மரிஹுவானா மற்றும் பியர் குடிபோதையில் இருந்தான். அந்தக் கார் கட்டுப்பாடிழந்து ஓடி, மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் ஒரு விளக்குக்கம்பத்தில் மோதிற்று. வேதா, தன் நெற்றியில் திறந்த ஆழமான வெட்டுடன்—தப்பிப் பிழைத்தாள். காதலன் அந்தக் காட்சியிலிருந்து தப்பியோடிவிட்டான், அவளுக்கு உதவிசெய்ய மருத்துவமனையிலுங்கூட தலைகாட்டவில்லை.

வேதா அறிக்கையிட்டதாவது, “என் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோது, என் தந்தை சொன்னதெல்லாம் சரி எனவும் நான் வெகு முந்தியே செவிகொடுத்திருக்க வேண்டுமெனவும் அவர்களிடம் கூறினேன். . . . நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன், அது ஏறக்குறைய என் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிட்டது.” அதற்குப் பின், வேதா தன் பெற்றோரிடம் தன் மனப்பான்மையில் சில பெரும் மாற்றங்களைச் செய்தாள்.

ஒருவேளை உன் பங்கிலுங்கூட சில மாற்றங்கள் தகுந்ததாயிருக்கும். ‘உன் பெற்றோரைக் கனம்பண்ணுதல்’ பழங்கால நடைபாணி எண்ணமாக நிச்சயமாகவே தோன்றலாம். ஆனால் அது கூரறிவுத்திறமைவாய்ந்த காரியம் மட்டுமல்லாமல் கடவுளுடைய பார்வையில் சரியான காரியமாயும் இருக்கிறது. எனினும், நீ உன் பெற்றோருக்கு மரியாதைக் காட்ட விரும்பியும் உன்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்களென அல்லது ஒருவேளை தடைக் கட்டுப்பாடுகளைக்கொண்டு வளைத்து நெருக்குகிறார்களென நீ உணர்ந்தால் என்ன செய்வது? அத்தகைய சூழ்நிலைமைகளில் உன் நிலையை எவ்வாறு செம்மைப்படுத்தலாமென ஆராயலாம்.

[அடிக்குறிப்புகள்]

a இளைஞர் ஒருவேலை வீட்டுக்கு வெளியில் ஊழியத் துறை பணியாளரிடம் உதவிதேடத் தேவைப்படும் உடல்சம்பந்த அல்லது பாலூறவு பழிகேடு செய்யும் காரியங்களைப் பற்றி நாங்கள் இங்கே குறிப்பிடுகிறதில்லை.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ தன் பெற்றோரைக் கனம்பண்ணுவதென்றால் என்ன?

◻ பெற்றோர் ஏன் இத்தனை அநேக கட்டளைகளை உண்டுபண்ணுகின்றனர்? அந்தக் கட்டளைகள் உனக்கு நன்மை பயக்குமா?

◻ பெற்றோரின் நடத்தை கண்டனத்துக்குரியதாயிருந்தால் நீ உன் பெற்றோரைக் கனம்பண்ணவேண்டுமா? ஏன்?

◻ உன் பெற்றோரிடம் நீ எப்போதாவது உணரக்கூடிய மனக்கசப்பைச் சமாளிக்கும் பலன்தரத்தக்க முறைகள் சில யாவை? முட்டாள்தனமான முறைகள் சில யாவை?

[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]

“என் தகப்பன் குறுகிய நோக்குடையவர், நான் இன்பம் அனுபவிப்பதை அவர் முற்றிலும் விரும்பவில்லை என நான் உணர்ந்தேன், ஆகையால் வெளியில் சென்று நான் விரும்பியதைச் செய்தேன்”

[பக்கம் 12-ன் படம்]

உன் பெற்றோறின் கட்டளைகளை நீ எவ்வாறு கருதவேண்டும்

[பக்கம் 14-ன் படம்]

கண்டனத்துக் குரிய நடத்தையுடைய பெற்றோரை நீ கனப்படுத்த வேண்டுமா?