சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?
அதிகாரம் 9
சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்?
14 வயதில், கரன் ஏற்கெனவே மிகுதியாய்ப் போதை மருந்து பயன்படுத்துபவனாயிருந்தான் அடிக்கடி பாலுறவில் ஈடுபட்டுவந்தான். 17 வயதுக்குள், ஜிம் நீடித்தக் குடிகாரனும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை நடத்துபவனுமாயிருந்தான். தாங்கள் வாழும் வாழ்க்கையையோ தாங்கள் செய்துகொண்டிருந்தக் காரியங்களையோ தாங்கள் உண்மையில் விரும்பவில்லையென அவர்கள் இருவரும் ஒப்புக்கொள்கின்றனர். அப்படியானால், அவர்கள் ஏன் அவ்வாறு நடந்தார்கள்? சகாக்களின் செல்வாக்கு வலிமையே!
“நான் சேர்ந்திருந்த எல்லாரும் இந்தக் காரியங்களைச் செய்தார்கள், அது என்மீது பெரும் பாதிப்பைக் கொண்டது,” என்று கரன் விளக்குகிறான். ஜிம் அதை ஒப்புக்கெண்டு, “நான் வேறுபட்டவனாய் இருப்பதன் மூலம் என் நண்பர்களை இழக்க விரும்பவில்லை,” என்கிறான்.
இளைஞர் தங்கள் சகாக்களைப் பின்பற்றுவதன் காரணம்
இளைஞர் சிலர் பெரியவர்களாக வளருகையில், பெற்றோரின் செல்வாக்கு குறைகிறது, தாங்கள் பலர்-விரும்பும் மதிப்புள்ளோராயும் தங்கள் சகாக்களால் ஏற்கப்படுவோராயும் இருக்கவேண்டுமென்ற ஆவல் பலமாய் வளருகிறது. மற்றவர்கள் வெறுமென “புரிந்துகொள்ளும்” ஒருவரோடு அல்லது தங்களை நேசிக்கப்படுவோராக அல்லது தேவைப்படுவோராக உணரச் செய்வோரோடு பேசுவதற்கான தேவையை உணருகின்றனர். பெரும்பாலும் இருந்துவருவதுபோல்—அத்தகைய பேச்சுத் தொடர்பு வீட்டில் இல்லாதபோது அதை அவர்கள் தங்கள் சகாக்களுக்குள் தேடுகின்றனர். மேலும், தன்னம்பிக்கை இல்லாமையும் பாதுகாப்பற்ற உணர்ச்சிகளுங்கூட சிலரை சகாக்களின் செல்வாக்குக்கு எளிதில் ஆளாகக்கூடும்படி அடிக்கடி செய்கிறது.
சகாக்களின் செல்வாக்கு எப்போதும் கெட்டதாகவே இருக்கவேண்டியதில்லை. நீதிமொழி ஒன்று பின்வருமாறு சொல்கிறது: “இரும்பை இரும்பு கூர்மையாக்கிவிடும், அப்படியே மனிதனை அவன் சிநேகிதன் கூர்மையாக்குவான்.” (நீதிமொழிகள் 27:17, தி.மொ.) ஓர் இரும்பு கத்தி மற்றொரு கத்தியின் மழுங்கிய முனையைக் கூர்மையாக்க முடிவதைப்போல், மற்ற இளைஞருடன் தோழமைகொள்வது உன் பண்பியல்பைக் ‘கூர்மையாக்கி’ உன்னை மேலும் மேம்பட்ட ஆளாக்க முடியும்—அந்தச் சகாக்கள் முதிர்ந்த ஆரோக்கியகரமான மனப்பான்மைகளையுடையோராயிருந்தால் அவ்வாறிருக்கும்.
மத்தேயு 15:14-ஐ ஒத்துப்பார்.) அதன் விளைவுகள் நாசகரமாயிருக்கும்.
எனினும், பெரும்பாலும் இளைஞர்—மனதின்படியும் ஆவிக்குரியபிரகாரமாயும்—முதிர்ச்சியில் விசனகரமாய்க் குறைவுபடுகிறார்கள். பல இளைஞர் தவறான, நம்பத்தகாத, முரட்டுத் துணிச்சலுமான நோக்குநிலைகளையும் எண்ணங்களையும் உடையோராயிருக்கின்றனர். ஆகையால் இளைஞன் ஒருவன் சந்தேகமில்லாமல் தன் சகாக்களின் கட்டுப்பாட்டின்கீழ் வருகையில், அது குருடன் குருடனுக்கு வழிக்காட்டுவதைப்பார்க்கிலும் சற்று மோசமாகவே இருக்கக்கூடும். (உன் சகாக்கள் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு உன்னைத் தூண்டி கொண்டிராவிடினும், அவர்களுடைய செல்வாக்கு இன்னும் கொடியதாயிருப்பதை உணரலாம். “நீ மற்றச் சிறுவரால் ஏற்கப்படுவதைக் குறித்து அவ்வளவு மிக அக்கறைகொள்கிறாய்,” என்று டெபி சொல்கிறாள். “நான் பதினெட்டு வயதாயிருந்தபோது விரும்பப்படாதவளாகிவிடும் எண்ணம் எனக்குத் திகிலூட்டியது, ஏனெனில் நல்ல நேரத்தை அனுபவிப்பதற்கு என்னை வெளியே அழைத்துச்செல்ல ஒருவரும் இருக்கமாட்டார்கள். நான் தனியே ஒதுக்கி வைக்கப்படுவேனென பயந்தேன்.” இவ்வாறு டெபி தன் சகாக்களின் ஏற்பை அடைய கடினமாய் உழைத்தாள்.
நான் செல்வாக்குக்கு ஆளாகிறேனா?
மற்றவர்களோடு பொருந்திபோகும்படி நீயுங்கூட ஒரு குறிப்பிட்ட முறையில் உடுத்தவும் பேசவும் அல்லது நடக்கவும் தொடங்கிவிட்டாயா? பதினேழு வயது சூசி உரிமைபாராட்டுவதாவது, “நீ செய்ய விரும்பாத எதையும் மற்றொரு சிறுமி உன்னை உண்மையில் செய்யவைக்க முடியாது.” மெய்தான், ஆனால் சகாக்களின் செல்வாக்கு வலிமை உன்னை எவ்வளவாக பாதிக்கிறது என்பதை நீ உணராத வண்ணம் அவ்வளவு சூழ்ச்சித் திறமிக்கதாய் இருக்கக்கூடும். உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுருவைக் கவனி. அவன் உறுதியான நம்பிக்கையுடைய தைரியமுள்ள மனிதன், பேதுரு கிறிஸ்தவத்தின் ஒரு தூணாயிருந்தான். சகல தேசத்தாரிலும் ஜாதியாரிலுமிருந்து வரும் ஜனங்கள் தம்முடைய தயவைப் பெறமுடியுமென கடவுள் பேதுருவுக்கு வெளிப்படுத்தினார். இவ்வாறு முதல் புறஜாதி விசுவாசிகள் கிறிஸ்தவர்களாவதற்குப் பேதுரு உதவிசெய்தான்.—அப்போஸ்தலர் 10:28.
எனினும், காலம் கடந்துசென்றது, பேதுரு அந்தியோகியாவில் இருந்தான், அந்த நகரத்தில் யூதரல்லாதவர்கள் பலர் கிறிஸ்தவர்களாகியிருந்தனர். பேதுரு இந்தப் புறஜாதி விசுவாசிகளோடு நட்புடன் தாராளமாய்க் கூடிப் பழகினான். ஒரு நாள் எருசலேமிலிருந்து, யூதரல்லாதவர்களுக்கு
எதிராக இன்னும் பாரபட்சங்கள் கொண்டிருந்த, யூதக் கிறிஸ்தவர்கள் சிலர் அந்தியோகியாவுக்கு வந்தனர். இப்போழுது பேதுரு தன் யூத சகாக்கள் சுற்றியிருக்கையில் தன்னை எவ்வாறு நடத்திக்கொள்வான்?பேதுரு அந்தப் புறஜாதிக் கிறிஸ்தவர்களிலிருந்து தன்னைப் பிரித்து வைத்துக்கொண்டு அவர்களோடு சாப்பிட மறுத்தான்! ஏன்? தன் சகாக்களின் உணர்ச்சியைப் புண்படுத்த அவன் பயந்ததாகத் தெரிகிறது. அவன் ஒருவேளை இவ்வாறு மனதில் சிந்தித்திருக்கலாம், ‘அவர்கள் இங்கிருக்கையில் நான் இப்பொழுது வெறுமென சிறிது வளைந்துகொடுத்து அவர்கள் சென்றபின் புறஜாதியாரோடு தொடர்ந்து சாப்பிடுவேன். இத்தகைய ஒரு சிறிய காரியத்தின்பேரில் அவர்களுடன் என் ஒத்திசைவை நான் ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்?’ இவ்வாறு பேதுரு—தான் உண்மையில் நம்பாத ஒன்றைச் செய்து தன் சொந்த நியமங்களைத் தள்ளுவதன்மூலம்—பாசாங்குசெய்தான். (கலாத்தியர் 2:11-14) அப்படியானால், ஒருவருமே சகாக்களிடமிருந்து வரும் செல்வாக்கு வலிமையால் பாதிக்கப்படமுடியாதவராக இல்லை.
நான் எவ்வாறு பிரதிபலிப்பேன்?
ஆகையால், ‘மற்றவர்கள் நினைப்பதைப்பற்றி நான் பயப்படுகிறதில்லை!’ என்று சொல்வது எளிதாயிருக்கையில், சகாக்கள் செல்வாக்கு வலிமைக்கெதிரில்
இந்தத் தீர்மானத்தைக் காத்துக்கொள்வது முற்றிலும் மற்றொரு காரியமாகும். உதாரணமாக, பின்வரும் சூழ்நிலைமைகளில் நீ என்ன செய்வாய்?உன் பள்ளித்தோழர்களில் ஒருவன் மற்ற இளைஞர்களின் முன்னிலையில் உனக்கு ஒரு சிகரெட் அளிக்கிறான். புகைகுடிப்பது தவறென உனக்குத் தெரியும். ஆனால் நீ என்ன செய்வாய் என்பதைக் காண அவர்கள் எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் . . .
பள்ளியில் பிள்ளைகள் தங்கள் காதலர்களோடு பாலுறவு கொள்வதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்களில் ஒருத்தி உன்னிடம்: “நீ இன்னும் ஒரு கன்னியாக இல்லையல்லவா?” என்று சொல்கிறாள்.
மற்ற எல்லாப் பெண்களும் உடுத்துவதைப்போன்ற ஓர் உடையை நீ உடுத்த விரும்புகிறாய், ஆனால் அது மிகக் குட்டையாயிருக்கிறதென அம்மா சொல்கிறார்கள். நீ உடுத்திக்கொள்ளும்படி அவர்கள் வற்புறுத்தும் உடை நீ வயதில் ஆறு ஆண்டுகள் முதிர்ந்தவளாகத் தோன்றுவதைப்போன்று உணரும்படி உன்னைச் செய்விக்கிறது. உன் வகுப்புத் தோழர்கள் உன்னைக் கேலிபண்ணுகிறார்கள். ஒரு பெண் கேட்கிறாள், “உன் சாப்பாட்டுக் காசை நீ வெறுமென பத்திரப்படுத்தி வைத்து உகந்த உடை ஒன்றை வாங்கலாமல்லவா? உன் அம்மாவுக்கு அதை நீ சொல்லவேண்டியதில்லை. உன் பள்ளி உடைகளை வகுப்பறையில் உன் நிலைப்பெட்டியில் வைத்துக்கொள்.”
எதிர்ப்படுவதற்கு எளிதான சூழ்நிலைமைகளா? இல்லை, ஆனால் உன் சகாக்களுக்கு இல்லை என்று சொல்ல நீ பயந்தால், உனக்கும், உன் தராதரங்களுக்கும், உன் பெற்றோருக்கும் இல்லை என்று சொல்வதில் முடிவடைவாய். சகாக்களின் செல்வாக்கு வலிமைக்கு எதிர்த்துநிற்க பலத்தை நீ எவ்வாறு வளர்க்க முடியும்?
“யோசிக்கும் திறமை”
பதினைந்து வயது ராபின் புகைகுடிக்கத் தொடங்கினாள், தான் விரும்பினதால் அல்ல, ஆனால் எல்லாரும் செய்தார்கள் என்ற காரணத்துக்காகவே. அவள் நினைவுபடுத்திக் கூறுவதாவது: “பின்னால் நான் இவ்வாறு யோசிக்கத் தொடங்கினேன், ‘நான் அதை விரும்புகிறதில்லை. ஏன் அதைச் செய்கிறேன்?’ ஆகையால் இனிமேலும் அதைச் செய்கிறதில்லை.” தானே யோசித்ததன்மூலம், அவள் தன் சகாக்களுக்கு எதிர்த்து நிற்க முடிந்தது!
அப்படியானால், சரியாகவே, “அறிவையும் யோசிக்கும் திறமையையும்” வளர்க்கும்படி பைபிள் இளைஞரை ஊக்குவிக்கிறது. (நீதிமொழிகள் 1:1-5, NW) யோசிக்கும் திறமையுள்ள ஒருவன் வழிநடத்துதலுக்காக அனுபவமிராதத் தன் சகாக்களின்மீது சார்ந்திருக்க வேண்டியதில்லை. அதேசமயத்தில், அவன் தன்னம்பிக்கையுடையவனாகி மற்றவர்களின் அபிப்பிராயங்களை புறக்கணிப்பதும் இல்லை. (நீதிமொழிகள் 14:16) அவன் அல்லது அவள் ‘ஞானமுள்ளவனாகும்படி’ “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்ள” மனமுள்ளவனாயிருப்பான்.—நீதிமொழிகள் 19:20.
எனினும், உன் யோசிக்கும் திறமைகளை நீ பயன்படுத்துவதனிமித்தம் மற்றவர்கள் உன்னை வெறுத்தால் அல்லது ஏளனம் செய்தால் ஆச்சரியமடையாதே. “யோசிக்கும் திறமைகளையுடைய மனிதன் [அல்லது பெண்] பகைக்கப்படுகிறான்,” என்று நீதிமொழிகள் 14:17-ல் (NW) சொல்லியிருக்கிறது. ஆனால் உண்மையில், யாருக்கு அதிகப் பலம் இருக்கிறது, தங்கள் காம உணர்ச்சிகளுக்கு அல்லது மனக்கிளர்ச்சிகளுக்கு விட்டுக்கொடுப்போருக்கா அல்லது தகாத ஆசைகளுக்கு இல்லையென்று சொல்ல முடிகிறவர்களுக்கா? (நீதிமொழிகள் 16:32-ஐ ஒத்துப்பார்.) உன்னை ஏளனஞ்செய்கிறவர்கள் வாழ்க்கையில் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றனர்? உன் வாழ்க்கையும் அங்கேதான் முடிவடைய நீ விரும்புகிறாயா? அத்தகையோர் வெறுமென உன்பேரில் பொறாமைகொண்டு ஏளனஞ்செய்வதால் தங்கள் சொந்தப் பாதுகாப்பின்மையை மூடி மறைப்போராய் இருக்கக்கூடுமா?
கண்ணியிலிருந்து தப்பிக்கொள்ளுதல்
“மனுஷனுக்குப் பயப்படுவது கண்ணியை வருவிக்கும்,” என நீதிமொழிகள் 29:25 (தி.மொ.) சொல்கிறது. பைபிள் காலங்களில், ஒரு கண்ணி, தன்னில் வைத்துள்ள இரையில் தீங்கை எதிர்பாராது வாய் வைக்கும் எந்த மிருகத்தையும் விரைவில் சிக்கவைக்க முடியும். இன்று, உன் சகாக்களால் ஏற்கப்படவேண்டுமென்ற ஆசை அவ்வாறே கண்ணி-இரையாகச் சேவிக்கக்கூடும். அது உன்னைக் கடவுளுடைய தராதரங்களை மீறுவதன் கண்ணிக்குள் வஞ்சித்துக் கவர்ந்திழுக்கக்கூடும். அப்படியானால், மனிதருக்குப் பயப்படுவதன் இந்தக் கண்ணியை நீ எவ்வாறு தப்பிக்கொள்ள—அல்லது தவிர்க்க முடியும்?
முதலாவது, உன் நண்பர்களைக் கவனமாய்த் தெரிந்தெடு! (நீதிமொழிகள் 13:20) கிறிஸ்தவ மதிப்புகளையும் தராதரங்களையும் கொண்டுள்ளவர்களோடு கூட்டுறவுகொள். உண்மைதான், இது உன் நட்பை வரம்புக்குட்படுத்துகிறது. பருவ வயதுக்குட்பட்ட ஓர் இளைஞன் சொல்வதுபோல்: “பள்ளியில் நான் மற்றவர்களோடு போதை மருந்துகளின்பேரிலும் பாலுறவின்பேரிலும் அவர்களுடைய எண்ணங்களோடு சேர்ந்து செல்லாதபோது, அவர்கள் சீக்கிரத்தில் என்னைத் தனியே விட்டனர். இது இணங்கிப்போவதன் பெரும் தொல்லையை என்னைவிட்டு நீக்கினபோதிலும், அது நிச்சயமாகவே சற்று தனிமையை உணரும்படி என்னைச் செய்வித்தது.” ஆனால் சகாக்களின் செல்வாக்கு வலிமை உன்னை ஆவிக்குரியபிரகாரமாயும் ஒழுக்கப்பிரகாரமாயும் கீழே இழுத்துச் செல்ல அனுமதிப்பதைப் பார்க்கிலும் சற்று தனிமையின் வருத்தத்தை அனுபவிப்பது மேலானது. ஒருவரின் குடும்பத்துக்குள்ளும் கிறிஸ்தவ சபைக்குள்ளும் கொள்ளும் கூட்டுறவு தனிமையின் வெறுமையை நிரப்ப உதவிசெய்யும்.
உன் பெற்றோருக்குச் செவிகொடுப்பதும் சகாக்களின் செல்வாக்கை எதிர்த்து நிற்க உனக்கு உதவிசெய்கிறது. (நீதிமொழிகள் 23:22) அவர்கள் அநேகமாய் உனக்குச் சரியான மதிப்புகளைக் கற்பிக்கக் கடினமாய் உழைத்துக்கொண்டிருப்பார்கள். ஓர் இளம் பெண் பின்வருமாறு சொன்னாள்: “என் பெற்றோர் என்னுடன் கண்டிப்பாயிருந்தனர். சில சமயங்களில் நான் அதை விரும்பவில்லை, ஆனால் அவர்கள் விட்டுக்கொடாமல் உறுதியாயிருந்து என் கூட்டுறவுகளைக் கட்டுப்படுத்தினதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.” பெற்றோரின் அந்த உதவியால், அவள் போதை மருந்துகளைப் பயன்படுத்தவும் பாலுறவில் ஈடுபடவும் உண்டான செல்வாக்கு வலிமைக்கு இடங்கொடுக்கவில்லை.
பருவ வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆலோசனை கூறுபவரான பெத் உவின்ஷிப் மேலும் கவனித்துக் குறிப்பிடுவதாவது: “வளரிளமைப் பருவத்தினர் ஏதோவொன்றில் தேர்ச்சிப்பெற்றிருந்தால் தங்கள் சொந்த உரிமையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாய் உணருகின்றனர். தங்களைப்பற்றிய நல்லத் தகுநிலைக்காக சகாக்களின் ஏற்பின்பேரில் அவர்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை.” அப்படியானால், பள்ளியிலும் வீட்டிலும் நீ செய்யும் காரியங்களில் தனித்திறமையும் தகுதியும் வாய்ந்தவனாயிருக்க பிரயாசப்படலாமல்லவா? யெகோவாவின் இளம் சாட்சிகள் முக்கியமாய்த் தங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் ‘வெட்கப்படாத ஊழியக்காரராயும் சத்திய வசனத்தை 2 தீமோத்தேயு 2:15.
நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாயும் இருக்கக்’ கடினமாய் உழைக்கிறார்கள்.—மனிதருக்குப் பயப்படுவதன் “கண்ணியைப்”பற்றி எச்சரித்தப்பின், நீதிமொழிகள் 29:25 (தி.மொ.) பின்வருமாறு தொடர்ந்து கூறுகிறது: “யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலம் பெறுவான்.” ஒருவேளை மற்ற எல்லாவற்றையும் பார்க்கிலும் மேலாக, கடவுளுடன் கொண்டுள்ள உறவு உன் சகாக்களுக்கெதிரில் தைரியமாய் நிலைநிற்க உன்னைப் பலப்படுத்தும். உதாரணமாக, (முன் குறிப்பிட்ட) டெபி சிறிது காலம் கூட்டத்தைப் பின்பற்றி நடந்து, மிதமீறி குடித்து போதை மருந்துகள் துர்ப்பழக்கத்தில் ஈடுபட்டுவந்தாள். ஆனால் பின்பு கருத்துடன் பைபிள் படிக்கத் தொடங்கி யெகோவாவில் நம்பிக்கை வைக்கவும் தொடங்கினாள். இதன் பலன்? “அந்தச் சிறிய தொகுதி பிள்ளைகள் செய்வதைப்போன்ற அதே காரியங்களை நான் செய்யப்போவதில்லை என்று என் மனதில் தீர்மானித்தேன்,” என்று டெபி கூறினாள். அவள் தன் முந்திய நண்பர்களிடம் பின்வருமாறு கூறினாள்: “நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் நான் என் வழியில் செல்கிறேன். என் நட்பு உங்களுக்கு வேண்டுமென்றால் நான் மதிக்கும் அதே தராதரங்களை நீங்களும் மதிக்கவேண்டும். நான் வருந்துகிறேன் ஆனால் நீங்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலையில்லை. இதையே நான் செய்யப்போகிறேன்.” டெபி புதிதாய்க் கண்டடைந்த விசுவாசத்தை அவளுடைய நண்பர்களில் எல்லாரும் மதிக்கவில்லை. ஆனால் டெபி சொல்வதாவது, “நான் என் தீர்மானத்தைச் செய்தப்பின் நிச்சயமாகவே நான் என்னை மேலும் நன்றாய் விரும்பினேன்.”
சகாக்களின் செல்வாக்குக் கண்ணியை நீ தப்பிக்கொண்டால் நீயுங்கூட ‘உன்னை மேலும் நன்றாய் விரும்புவாய்’ மிகுந்தத் துக்கத்தை உனக்குத் தவிர்ப்பாய்!
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻ இளைஞர்கள் ஏன் தங்கள் சகாக்களால் செல்வாக்குச் செலுத்தப்பட மனஞ்சாய்கிறார்கள்? இது கட்டாயமாய்க் கெட்டதா?
◻ சகாக்களின் செல்வாக்கு வலிமையைக் குறித்து அப்போஸ்தலன் பேதுருவின் அனுபவம் என்ன கற்பிக்கிறது?
◻ இல்லை என்று சொல்வதற்கு உனக்கிருக்கும் திறமையைச் சோதிக்கக்கூடிய (ஒருவேளை உன் சொந்த அனுபவத்திலிருந்து சொல்லக்கூடியவை உட்பட) சில சூழ்நிலைமைகள் யாவை?
◻ துணிகரச் செயலுக்குட்படும்படி யாராவது சவால்விட்டால் என்ன காரியங்களை நீ எண்ணிப் பார்ப்பாய்?
◻ மனிதனுக்குப் பயப்படும் கண்ணியைத் தப்பிக்கொள்ள உனக்கு உதவிசெய்யக்கூடிய சில காரியங்கள் யாவை?
[பக்கம் 74-ன் சிறு குறிப்பு]
“நீ மற்றச் சிறுவரால் ஏற்கப்படுவதைக் குறித்து அவ்வளவு மிக அக்கறைகொள்கிறாய்,” என்று டெபி சொல்கிறாள். “நான் விரும்பப்படாதவளாகிவிடும் எண்ணம் எனக்குத் திகிலூட்டியது . . . நான் தனியே ஒதுக்கி வைக்கப்படுவேனென பயந்தேன்”
[பக்கம் 75-ன் பெட்டி]
‘நான் உனக்குச் சவால் விடுகிறேன்!’
“பொய்ச் சொல்,” என லீசாவின் வகுப்புத் தோழர்கள் வற்புறுத்தினர். “உபாத்தினியின் மூச்சு நாறுகிறதென அவளுக்குச் சொல்!” வாய் அசுத்தமாயிருப்பது எதுவும் இங்கே விவாதத்தில் இல்லை. லீசா துணிகரமாய்ச் செயல்படும்படி சவால் விடப்படுகிறாள்—அதுவும் அவ்வளவு தீங்கான ஒன்றைச் செய்யும்படி! ஆம், சில இளைஞர்கள், ஓரளவு குறும்புவாய்ந்த செயல்களிலிருந்து முற்றிலும் தற்கேடுசெய்யும் செயல்கள்வரையாக மற்றவர்களைச் செய்யும்படி சவால்விடுவதில் விபரீதமான இன்பங்கொள்வதாகத் தெரிகிறது.
ஆனால் நீ ஏதாவது மடமையான, அன்பற்ற, அல்லது முற்றிலும் அபாயகரமான ஒன்றைச் செய்யும்படி சவால்விடப்படுகையில், இருமுறை சிந்திப்பதற்கு அது நேரமாயிருக்கிறது. ஒரு ஞானி பின்வருமாறு சொன்னான்: “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.” (பிரசங்கி 10:1) பூர்வகாலங்களில், விலைமதிப்புள்ள தைலத்தை அல்லது நறுமணத்தைலத்தை ஒரு மிகச் சிறு செத்த ஈ போன்ற ஒன்று பாழ்படுத்த முடியும். அவ்வாறே, ஒருவன் கடினமாய் ஊழைத்துச் சம்பாதித்த நற்பெயரை வெறும் ஒரு “சொற்ப மதியீனம்” முற்றிலும் கெடுத்துப்போட முடியும்.
விளையாட்டுத்தனமான குறும்புகள் அடிக்கடி வகுப்பு தரத்தில் குறைவுபடுவதிலும், பள்ளியிலிருந்து தற்கால நிறுத்தி வைப்பிலும், கைதுசெய்யப்படுவதிலுங்கூட விளைவடையலாம்! என்னைக் கண்டுபிடிக்கமாட்டார்களென நீ எண்ணினால் எப்படி? உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள், என்னைச் செய்யும்படி கேட்கும் காரியம் நியாயமானதா? அது அன்பான காரியமா? அது பைபிளின் அல்லது என் பெற்றோர் கற்பித்த தராதரங்களை மீறுவதாகுமா? அப்படியானால், வேடிக்கையை நாடும் இளைஞர்கள் என் வாழ்க்கையை அடக்கியாளவே நான் உண்மையில் விரும்புகிறேனா? எவ்வாறாயினும், என் வாழ்க்கையையும் நற்பெயரையும் அபாயத்தில் வைக்கக் கேட்கும் இளைஞர்கள் உண்மையில் நண்பர்களா?—நீதிமொழிகள் 18:24.
அப்படியானால், சவால்விடும் அந்த இளைஞனுடன் நியாயமானமுறையில் விவாதித்துப் பேசு. பதினெட்டு-வயது டெரி, ‘நான் ஏன் அதைச் செய்யவேண்டும்? நான் அதைச் செய்தால் அது எதை நிரூபிக்கும்?’ என்றவாறு கேட்டு, “அதைச் சிரிப்புக்கேதுவாக்கி விட” விரும்புகிறான். மேலும், வாழ்வதற்கு நோக்கங்கொண்டுள்ள திட்டமான தராதரங்கள் உனக்குண்டு என்பதையும் அவர்கள் அறியச் செய். ஓர் இளம் பெண் ஒரு பையனை ஒழுக்கக்கேட்டுக்குட்பட சவால் விட்டு, “நீ என்ன இழக்கிறாயென உனக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள். அவன், “ஆம், எனக்குத் தெரியும், படர்தாமரை நோய், மேகவேட்டை நோய், மேகப் புண் ஆகியவற்றை இழக்கிறேன் . . . ” என்று அந்தப் பையன் பதிலுரைத்தான்.
ஆம், உன் சகாக்களிடம் ‘இல்லை’ என்று சொல்வதற்குத் தைரியத்தைக் கொண்டிருப்பதனால், நீ பின்னால் வருந்தக்கூடிய ஒன்றைச் செய்வதைத் தவிர்க்க முடியும்!
[பக்கம் 76-ன் படம்]
பெரும்பாலும் இளைஞர் ஆதரவுக்காக ஒருவரையொருவர் பற்றியிருக்கின்றனர்
[பக்கம் 77-ன் படம்]
சரியென நீ அறிந்திருப்பதற்கு எதிராகச் செல்லும்படி நீ எப்போதாவது சகாக்களால் வற்புறுத்தப்பட்டிருக்கிறாயா?
[பக்கம் 78-ன் படம்]
சகாக்களின் செல்வாக்கை எதிர்த்து நிலைநிற்க பலங்கொண்டிரு!