என் உடைகள் உண்மையான என்னை வெளிப்படுத்துகிறதா?
அதிகாரம் 11
என் உடைகள் உண்மையான என்னை வெளிப்படுத்துகிறதா?
“அது மிகக் குட்டையல்ல,” என்று பெகி தன் பெற்றோரிடம் புலம்பினாள். “நீங்கள் வெறுமென பழம்பாணிபோக்கில் இருக்கிறீர்கள்!” தன் அறைக்கு ஓடிப்போனாள்—தான் உடுக்க விரும்பின ஒரு பாவாடையின்பேரில் உண்டான சச்சரவுக்குக் கடைசி முடிவு அது. ஒருவேளை பெற்றோர் ஒருவரோ, ஆசிரியரோ, அல்லது வேலைக்கு அமர்த்தினவரோ நீ மிக விரும்பின ஏதோ உடையைக் குறைகூறினபோது இவ்வகையான கருத்து மாறுபாட்டின் மையமாக நீ இருந்திருக்கலாம். நீ அதைத் தற்காலப்போக்கென அழைத்தாய்; அவர்கள் அதை ஒழுங்கற்றதென்று அழைத்தார்கள். நீ அதைப் புதுப்பாணியானதென்றழைத்தாய்; அவர்கள் அதைப் பண்பற்றப் பகட்டானது அல்லது தகாசிந்தனை தூண்டுவதென்றார்கள்.
விருப்பங்கள் வேறுபடுகின்றன, உன் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்க உனக்கு உரிமை இருக்கிறதென்பதை ஒப்புக்கொள்ளவேண்டியதே. ஆனால் நீ உடுத்தும் முறைக்கு வருகையில் ‘எதுவும் சரிதான்’ என்று இது பொருள்கொள்ளுமா?
சரியான செய்திதானா?
“உன் உடை, உண்மையில் நீ யார் என்பதும் உன்னைப்பற்றி நீ எவ்வாறு உணருகிறாய் என்பதுமே,” என்று பாம் என்ற ஒரு பெண் சொல்கிறாள். ஆம், உன் உடை உன்னைப் பற்றிய ஒரு செய்தியை, ஓர் அறிவிப்பை மற்றவர்களுக்கு அனுப்புகிறது. உடை கடமையுணர்ச்சியை, திடநிலையை, உயர் ஒழுக்கத் தராதரங்களைத் தாழ்ந்தக் குரலில் வெளிப்படுத்தலாம். அல்லது அது எதிர்ப்புணர்ச்சியையும் அதிருப்தியையும் உரத்தக் குரலில் தெரிவிக்கலாம். மேலும் அது அடையாளங்காட்டும் ஒரு வகை தோற்றமாகவுங்கூட சேவிக்கலாம். இளைஞர் சிலர் தனிச் சார்பினரைக் குறிக்கும் அடையாளமாகக் கிழிக்கப்பட்ட உடையை, அருவருப்பும் அதிர்ச்சியுமூட்டும் பாங்கான உடைகளை, அல்லது விலையுயர்ந்த நன்கு அமைக்கப்பட்ட வகைமாதிரியான உடைகளைப் பயன்படுத்துகின்றனர். மற்றவர்கள் எதிர்பாலாரைக் கவர்ச்சி செய்வதற்கு அல்லது தாங்கள் உண்மையில் இருப்பதைவிட முதியவராகத் தங்களைத் தோன்றச் செய்வதற்கு ஏதுவாக உடைகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு இளைஞர் பலருக்கு உடை ஏன் அவ்வளவு முக்கியமாயிருக்கிறது என்பதை எளிதில் காணமுடிகிறது. எனினும், வெற்றிபெறுவதற்கான உடை அணி, என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர், ஜான் T. மாலாய் பின்வருமாறு எச்சரிக்கிறார்: “நாம் உடுத்தும் முறை நாம் சந்திக்கும் ஆட்களின்
மனதில் குறிப்பிடத்தக்க ஓர் எண்ணப்பதிவை உண்டுபண்ணி அவர்கள் நம்மை நடத்தும் முறையை வெகுவாய்ப் பாதிக்கிறது.”நீ உடுத்தும் முறையைப்பற்றி உன் பெற்றோர் அவ்வளவு கவலைகொள்வதில் அதிசயமொன்றுமில்லை! அவர்களுக்கு அது தனிப்பட்டவரின் விருப்பத்தைப்பற்றிய விவாதத்தைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. நீ சரியான தகவலை, உன்னைச் சமநிலையான, பொறுப்புள்ள ஆளாக காட்டும் தகவலை அனுப்பும்படி அவர்கள் விரும்புகிறார்கள். எனினும், நீ உடுத்தும் முறை இதை நிறைவேற்றுகிறதா? உடைகளைத் தெரிந்துகொள்வதில் எது உன்னை வழிநடத்துகிறது?
“என் நண்பர்கள் செய்ய விரும்புகிறதையே நான் செய்கிறேன்”
இளைஞர் பலருக்கு, உடை தங்கள் சுதந்திரத்தின் மற்றும் தன்மதிப்பின் அறிவிப்பாயிருக்கிறது. ஆனால் இளைஞனாக, உன் பண்பியல்பு இன்னும் மாறுபடும் நிலையில் இருக்கிறது—இன்னும் முன்னேறிக்கொண்டும், இன்னும் மாறிக்கொண்டும் இருக்கிறது. ஆகையால் உன்னைப்பற்றிய ஓர் அறிவிப்பைச் செய்ய நீ விரும்பினாலும், அந்த அறிவிப்பு உன்னைப்பற்றி என்ன சொல்லவேண்டும் அல்லது அதை எவ்வாறு சொல்வது என்பவற்றைப்பற்றி நீ அவ்வளவு நிச்சயமாய் இருக்கமாட்டாய். இவ்வாறு சில இளைஞர்கள் இயல்புக்கு மீறிய, மானக்கேடான உடையைக் கொண்டு தங்களை அலங்கரித்துக்கொள்கின்றனர். எனினும் தங்கள் ‘தன்மதிப்பை’ நிலைநாட்டுவதற்குப் பதில், அவர்கள் தங்கள் முதிர்ச்சியற்றத் தன்மைக்கே வெறுமென கவனத்தை இழுக்கின்றனர்—தங்கள் பெற்றோருக்கு மனச்சங்கடத்தை உண்டுபண்ணுவதைக் குறிப்பிடவேண்டியதில்லை.
வேறு இளைஞர்கள் வெறுமென தங்கள் சகாக்களைப்போல் உடை உடுத்தத் தெரிந்துகொள்கின்றனர்; இது அவர்களுக்கு ஒரு தொகுதியாரோடு பாதுகாப்பு மற்றும் ஒன்றுபட்ட உணர்ச்சியைக் கொடுப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாகவே, ஆட்களோடு ஒருங்கிணைந்திருக்க விரும்புவது தவறென்று கட்டாயமாய் சொல்லிவிட முடியாது. (1 கொரிந்தியர் 9:22-ஐ ஒத்துப் பார்க்கவும்.) ஆனால் ஒரு கிறிஸ்தவன் அவிசுவாசிகளான இளைஞருள் ஒருவனைப்போல தன்னை அடையாளங்கண்டுகொள்ளப்பட உண்மையில் விரும்புவானா? அதன் விளைவையும் கருதாமல் சகாக்களின் அங்கீகாரத்தை நாடுவது ஞானமுள்ள காரியமா? ஓர் இளம் பெண் பின்வருமாறு9 அறிக்கையிட்டாள்: “என் நண்பர்கள் ஏதாவது சொல்லாதபடி அவர்கள் செய்ய விரும்புகிறதையே நான் செய்கிறேன்.” ஆனால் மற்றொருவரின் விருப்பத்துக்கும் கட்டளைக்கும் கீழ்ப்படிய தயாராயிருக்கும் ஒருவரை, மற்றொருருவரின் கருத்துக்கும் மனம்போன போக்குக்கும் பணிந்துகொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவரை நீ எவ்வாறு அழைப்பாய்? பைபிள் பதிலளிக்கிறது: “எவருக்காவது கீழ்ப்படிய உங்களைத் தொடர்ந்து ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்தால், அவனுக்குக் கீழ்ப்படிவதால் நீங்கள் அவனுடைய அடிமைகள் என்று அறியீர்களா?”—ரோமர் 6:16, NW.
இளைஞருக்குள் “இணங்கிக் கீழ்ப்படிதலின்பேரில் வைக்கப்படும் அழுத்தம் அவ்வளவு பலத்ததாவதால், அந்தக் குழுவின் உறுப்பினர், எவ்வாறு உடுத்துவது, எவ்வாறு பேசுவது, என்ன செய்வது, எதைச் சிந்திப்பது நம்புவது என்பதற்குங்கூட ஆலோசனைக்கு அவர்கள்பேரில் [தங்கள் சகாக்களின்பேரில்] சார்ந்திருந்து, குழுவின் சட்டங்களுக்கு ஏறக்குறைய கைதிகளாயிருப்பதுபோல் தோன்றுகிறது.”—வளரிளமை: பிள்ளைப்பருவத்திலிருந்து முதிர்ச்சிக்கு மாறுதல்.
ஆனால் அத்தகைய ஆலோசனை கொடுப்பதற்கு உன் நண்பர்கள் எந்த அளவுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர்? (மத்தேயு 15:14-ஐ ஒத்துப்பார்.) நீ அனுபவிக்கும் அதே உணர்ச்சிவச வளரும் வேதனைகளை அவர்களும் அனுபவிக்கிறார்களல்லவா? அப்படியானால், உனக்குத் தராதரங்களை வைக்க அவர்களுக்குப் பணிந்து கொடுப்பது—அத்தகையவை உன் இயல்பான உணர்ச்சிக்கும் அல்லது மதிப்புகளுக்கும் உன் பெற்றோரின் விருப்பங்களுக்கும் எதிர்மாறாகச் செல்கையிலும் அவ்வாறு விடுவது ஞானமான காரியமா?
இன்று “புதுப்பாணி”—நாளை “பழைய பாணி”
இன்னும் மற்ற இளைஞர்கள் புதுஉடைப்பாணி செல்லும் போக்கால் வழிநடத்தப்படுகின்றனர், ஆனால் உடைப்பாணி செல்லும் போக்குகள் எவ்வளவு துரிதமாய் மாறும் தன்மை கொண்டிருக்கின்றன! பைபிளின் பின்வரும் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: “இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31) இன்று “புதுப்பாணியில்” இருப்பது நாளைக்கு ஆச்சரியமூட்டும் வண்ணம் (மிகச் செலவுண்டாக்குவதைக் குறிப்பிடாவிடினும்) திடீரென புறக்கணிக்கப்படக்கூடும். உடைகளின் நீளம் உயருகின்றன குறைகின்றன, காற்சட்டைகளின் கால்கள் அகலமாகின்றன குறுகுகின்றன. இவை எல்லாம் உற்பத்தி செய்வோரின் மற்றும் உடை உருவமைப்போரின் நன்மைக்கேயாகும், இவர்கள் பொதுமக்களின்மீது எளிதில் செல்வாக்குச் செலுத்தி காரியத்தைச் சாதிப்பதால் ஏராளமான இலாபத்தைத் திரட்டுகின்றனர்.
உதாரணமாக, ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் ஜீன்ஸ் காற்சட்டைகள் பேரில் இருந்த ஆர்வத்தைக் கவனியுங்கள். ஜீன்ஸ் திடீரென மிக உயர்ந்த புத்தம்புது உடைப்பாணியாயிற்று. கால்வின் கிளீன் மற்றும் குளோரியா வான்டர்பில்ட் போன்ற பெயர்களைச் சுமந்துசெல்லும் நடமாடும் விளம்பர பலகைகளாயிருக்கும்படி மக்கள் மட்டுக்குமீறி உயர்ந்த விலைகளை அவற்றிற்குச் செலுத்தினர். “மக்களுக்கு ஒரு பெயர் வேண்டும்,” என்று “செர்கியோ வாலென்டி ஜீன்ஸ்” உற்பத்திசெய்யும் ஸ்தாபனத்தின் தலைவர் ஈலை கப்ளான் விளக்கினார். எனினும், ஜீன்ஸ் சட்டைப் பைகளில் அவ்வளவு தெளிவாய்த் தெரியும்படி தைக்கப்பட்டுள்ள இந்த பெயர் கொண்ட மிஸ்டர் வாலென்டி யார்? “அவ்வாறு ஒருவர் இல்லை,” என்று நியூஸ்வீக் அறிவித்தது. இதை விளக்குபவராக கப்ளான்தானே கேட்டதாவது: “ஈலை கப்ளான் ஜீன்ஸ் என்ற பெயர் வைத்திருந்தால் அதை யார் வாங்குவார்கள்?”
‘ஆனால் நாகரிகப் பாங்கில் இருப்பது தவறா?’ என நீ ஒருவேளை கேட்கலாம். கட்டாயம் அவ்வாறு இருக்கவேண்டும் என்றில்லை. பைபிள் காலங்களில் கடவுளுடைய ஊழியர்கள் அந்தந்த இடத்து சுவைக்கேற்றவாறு தங்களை உடுத்துவித்துக்கொண்டார்கள். உதாரணமாக, தாமார் பலவர்ணக்கோடிட்ட அங்கியை உடுத்தியிருந்தாள், ஏனெனில் அந்நாட்களில் “ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இவ்வகையான அங்கிகளைத் தரித்துக்கொள்வது வழக்கம்”—2 சாமுவேல் 13:18.
ஆனால் நாகரிகப் பாங்குக்கு ஒருவன் அடிமைப்பட்டிருக்க வேண்டுமா? ஓர் இளம் பெண் பின்வருமாறு புலம்பினாள்: “மற்ற எல்லாரும் வைத்திருக்கும் நேர்த்தியான காற்சட்டையை ஒரு
கடையில் நீ கண்டு, ‘அம்மா, அந்தக் காற்சட்டையை எனக்கு வாங்கிக் கொடுங்கள்,’ என்று சொல்கிறாய், அவர்கள், ‘இல்லை, நான் அதை வீட்டில் தைக்கலாம்,’ என்று சொல்கிறார்கள். ‘ஆனால் உங்களுக்கு விளங்குகிறதில்லை. எனக்கு இந்தக் காற்சட்டையே வேண்டும்,’ என்று நான் சொல்கிறேன்.” எனினும், புத்தம்புதுப்பாணியான உடை உருவாக்குவோரின் நோக்கத்தை நீ முன்னேற்றுவிப்பது, உண்மையில், உன் தனிச் சிறப்புப்பண்பை உன்னைவிட்டகற்றி உண்மையான உன்னைப் பார்வையிலிருந்து மறைத்துப்போடுகிறதல்லவா? தூண்டுதலளிக்கும் விளம்பரங்கள், கவர்ச்சி வாசகங்கள், மற்றும் உருவாக்குவோரின் பெயர்கள் ஆகியவற்றால் நீ ஏன் அடக்கியாளப்படவேண்டும்?ரோமர் 12:2-ல் (NW) பைபிள் நமக்குப் பின்வருமாறு சொல்கிறது: “இந்தக் காரிய ஒழுங்குமுறையின்படி உருவாக்கப்பட்டு வருவதை விட்டு விலகி, ஆனால் நல்லதும் ஏற்கத்தக்கதும் பரிபூரணமுமான கடவுளுடைய சித்தத்தை உங்களுக்கு நீங்கள் நிரூபித்துக்கொள்ளும்படி உங்கள் மனதை மாற்றுவதன்மூலம் உருமாற்றப்படுங்கள்.” உடையை நீ தெரிந்துகொள்ளும் விஷயத்திற்கு வருகையில் ‘ஏற்கத்தக்கக் கடவுளுடைய சித்தம்’ என்ன?
‘அடக்கமுள்ளதும் நன்றாய் ஒழுங்குபடுத்தியதும்’
1 தீமோத்தேயு 2:10 (NW) கிறிஸ்தவர்கள் “நன்றாய்-ஒழுங்குபடுத்தியுள்ள உடையைக்கொண்டும், அடக்கத்துடனும் நிதான மனதுடனும் தங்களை அலங்கரித்துக்கொள்”ளும்படி ஊக்கமூட்டுகிறது. “நன்றாய்-ஒழுங்குபடுத்தியுள்ள உடை” இயல்பாய் ஒழுங்கமைப்புடையதாயும் சுத்தமாயும் இருக்கும். “அடக்கம்” சூழ்நிலைமைகளை கவனத்துக்குள் ஏற்கிறது. நன்றாய்த் தைத்தமைத்த சூட் அலுவலகத்துக்குத் தகுந்தது, ஆனால் கடற்கரையில் அணிவதற்கு அது தகுந்ததாகாது! அதற்கு நேர்மாறாக, நீந்துவதற்கு அணியும் உடையை அலுவலகத்தில் அணிவது முட்டாள்தனமென கருதப்படும்.
இவ்வாறு, யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் இளைஞர்கள் கிறிஸ்தவக் கூட்டங்களில் அல்லது மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் ஊழியத்தின்போது தாங்கள் அணியும் உடை மட்டுக்குமீறி தற்போக்கு முறையில் இராமல் கடவுளுடைய இளம் ஊழியர்களென தங்களை அடையாளங்காட்டும் முறையில் இருக்கும்படி அக்கறைகொண்டிருப்பார்கள். 2 கொரிந்தியர் 6:3, 4-லுள்ள பவுலின் வார்த்தைகளை நினைவுபடுத்திக்கொள்: “இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.”
அடக்கம் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் கவனத்துக்குள் எடுத்துக்கொள்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னபடி, ஒரு கிறிஸ்தவனின் செயல்கள் தன் சொந்த மனச்சாட்சியை மட்டுமல்லாமல் “மற்றொருவனுடைய 1 கொரிந்தியர் 10:29) நீ முக்கியமாய் உன் பெற்றோரின் மனச்சாட்சியைக் குறித்து அக்கறைகொண்டிருக்க வேண்டுமல்லவா?
மனச்சாட்சி”யையும் கருத்தில் கொண்டு செய்யப்பட வேண்டும். (பொருத்தமாய் உடையணிவதன் பலன்கள்
அரசி எஸ்தர் அரசனான தன் கணவரின் முன்னிலையில் தோன்றவேண்டியிருந்த ஒரு சமயத்தைப்பற்றி பைபிளில் சொல்லியிருக்கிறது. எனினும், அழைக்கப்படாமல் அவ்வாறு தோன்றுவது உயிர் இழப்பதற்குரிய குற்றமாகலாம்! சந்தேகமில்லாமல் எஸ்தர் கடவுளுடைய உதவிக்காக ஊக்கமாய் ஜெபித்தாள். ஆனால் அவள்—சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான முறையில்—தன் தோற்றத்துக்கும் கவனம் செலுத்தி, “ராஜவஸ்திரந்தரித்”தாள்! இவ்வாறு அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு உடையணிந்தாள்! “எஸ்தர் ராணி முற்றத்தில் நிற்பதை ராஜா கண்டபோது அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்தது.”—எஸ்தர் 5:1, 2, தி.மொ.
கவர்ச்சிகரமான ஆனால் அடக்கமான முறையில் நீ உடை அணிந்திருப்பது வேலைக்குப் பேட்டிக்காண நேரிடுகையில் நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ண உனக்கு உதவிசெய்யலாம். வாழ்க்கைப்பணி முன்னேற்ற ஸ்தாபனத்தின் இயக்குநர் விக்கி L. பாமும் கவனித்துக்கூறுவதாவது: “சில பெண்கள் தாங்கள் பேட்டிக்காண செல்கையில் மனக்குழப்பமடைகிறார்கள். அது எதிர்பாலார் ஒருவருடன் பழகுவதற்கான சந்திப்புக்குச் செல்வதைப்போன்றதென அவர்கள் எண்ணி, கவர்ச்சிமிக்க முறையில் தோன்றுகிறார்கள்.” இதன் விளைவுகள்? “அது உன் வாழ்க்கைத் தொழில்சார்ந்த மனப்பான்மையை எடுத்துவிடுகிறது.” “இறுக்கமான அல்லது உள்ளத்தைத் தூண்டி வசியம் செய்கிறவற்றை” அணிவதற்கு எதிராக அவள் அறிவுரை கொடுக்கிறாள்.
ஆண்களான இளைஞருங்கூட, வேலைக்காகத் தேடியலைகையில் நன்றாய்-ஒழுங்குபடுத்தியுள்ள உடையை அணிய முயற்சிசெய்யவேண்டும். அலுவலாளர்கள் “தங்கள் முடியை ஒழுங்காய் சீவி தங்கள் காலணிகளைப் பளப்பளப்பாக்கி அணிந்திருப்பார்கள். மற்ற ஆட்களும் அவ்வாறு செய்யும்படி அவர்கள் எதிர்பார்ப்பார்கள்,” என்று ஜான் T. மாலாய் குறிப்பிடுகிறார்.
அடக்கமற்ற உடையோவெனில், மற்றவர்களோடு உன் உறவுகளைக் கெடுத்துப்போடும். இன்று உள இயல்பு என்ற ஆங்கில புத்தகம் வளரிளம்பருவத்தினருக்குள் எடுக்கப்பட்ட ஓர் ஆராய்ச்சியைக் குறிப்பிட்டது, அது “மிகத்தாழ்வாய்க் கழுத்துவெட்டப்பட்டுள்ள மேற்சட்டை, குட்டையான காற்சட்டைகள், இறுக்கமான ஜீன்ஸ், அல்லது உள்சட்டை இல்லாதிருப்பது” பாலுறவுக்கு வாவென அழைப்பதாய் ஆண்கள் பெரும்பாலும் பொருள்படுத்திக்கொள்வார்களென்று காட்டினது. ஓர் இளைஞன் அறிக்கையிட்டதாவது: “இளம் பெண்கள் உடைஉடுக்கும் முறையை நான் காண்கையில் அவர்களைப்பற்றிச் சுத்தமான எண்ணங்களை மாத்திரமே சிந்திப்பதை நான் ஒருவாறு கடினமாய்க் காண்கிறேன்.” அடக்கமான உடை உன் உள்ளார்ந்தப் பண்புகளை மதித்துணர ஆட்களுக்கு இடமளிக்கிறது. ஒரு குறிப்பிட்ட உடை அடக்கமானதாவென நீ நிச்சயமாயிராவிடில் ஆலோசனைக்காக உன் பெற்றோரைக் கேள்.
“உள்ளான மனுஷனை” உடுத்துவித்தல்
அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவர்களைப் பின்வருமாறு ஊக்கமூட்டினான்: “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே [இருதயத்தின் அந்த இரகசிய ஆளே, NW] உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது”—ஆம், மற்றவர்களின் கண்களிலுங்கூட! (1 பேதுரு 3:4) நவநாகரிகமான உடை உன் சகாக்கள் சிலரின் கண்களைக் கவர்ந்து திகைக்க வைக்கலாம். ஆனால் உடைகள் இருதயத்தை வெல்ல அல்லது உண்மையான நண்பர்களை அடைய செய்வதில்லை. இது அந்த “உள்ளான மனுஷனை” நன்றாய் உடுத்துவிப்பதனால்—உன்னுடைய உள்ளான ஆள்தன்மையை மேம்படுத்த உழைப்பதால்—நிறைவேற்றப்படுகிறது. (2 கொரிந்தியர் 4:16) உட்புறத்தில் அழகாயுள்ள ஓர் ஆள், அவனுடைய அல்லது அவளுடைய உடைகள் புத்தம்புதுப்பாணியில் இல்லாவிடினும் அல்லது உடை உருவாக்குவோரின் அர்த்தமற்ற பெயர்கள் “குத்தப்படா”விடினும், எப்பொழுதும் மற்றவர்களுக்குக் கவர்ச்சிகரமாய் இருப்பான்[ள்].
எந்தப் புதுப்பாணி அடுத்தப்படியாக இளைஞர்களைக் கடைகளுக்குள் திரண்டுமோதியடித்துக்கொண்டு செல்ல வைக்கிறதோ, யாருக்குத் தெரியும்? எனினும், உன்னைக்குறித்ததில், நீ யோசித்துப் பார்க்கலாம். உடையின் உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடி. பால்தன்மையில் அழுத்தம் வைக்கும் புதுப்பாணி உடைகளையும் ஆடைகளையும் தவிர்த்திரு. புத்தம்புது நடையுடைபாணியில் கூட்டத்தோடு விரைவில் சேர்ந்துகொள்வதில் முதல்வனாயிராமல்—கடைசியாகவும் இருக்கத் தேவையில்லை—நிலையாயுள்ள நடுத்தர சார்பில் இரு. விரைவில் மாறும் பாணியாயிராத—நீடித்துழைக்கக்கூடிய நல்ல தரமான உடைவகைகளுக்காகத் தேடிப்பார். உன் உடைகள், செய்தி சாதனங்கள் அல்லது சகாக்கள் திட்டமிட்ட ஏதோ உருமாதிரியில் உன்னைத் தோன்றசெய்யாமல், உண்மையான உன்னையே வெளிப்படுத்தும் சரியான செய்தியை அனுப்பும்படி நிச்சயமாயிரு!
கலந்துபேசுவதற்கான கேள்விகள்
◻ உடை எவ்வாறு ஒரு செய்தியை அனுப்புகிறது?
◻ இளைஞர் சிலர் தங்கள் உடைகளைத் தெரிந்துகொள்வதில் ஏன் இயல்புக்கு மீறிய முறையின்பேரில் சாய்கின்றனர்?
◻ உடைகளைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் நீ எந்த அளவுக்கு உன் சகாக்களால் செல்வாக்குச் செலுத்தப்படுகிறாய்?
◻ எப்பொழுதும் புதுப்பாணியில் இருக்க முயற்சிசெய்வதன் சில தீமைகள் யாவை?
◻ ஓர் உடைபாணி ‘அடக்கமுள்ளதும் நன்றாய் ஒழுங்குபடுத்தியதுமாக’ இருக்கிறதென்று எது தீர்மானிக்கிறது?
[பக்கம் 94-ன் சிறு குறிப்பு]
“உன் உடை, உண்மையில் நீ யார் என்பதும் உன்னைப்பற்றி நீ எவ்வாறு உணருகிறாய் என்பதுமே”
[பக்கம் 91-ன் படம்]
பிள்ளைகள் எதை அணிவது என்பதன் பேரில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பெற்றோர் வெறுமென பழம்பாணிபோக்கில் இருக்கிறார்களா?
[பக்கம் 92-ன் படம்]
இளைஞர்கள் பலர் மானக்கேடான உடையின்மூலம் தங்கள் தனித்தன்மையை வலியுறுத்த முயற்சி செய்கின்றனர்
[பக்கம் 93-ன் படங்கள்]
சூழ்நிலைமைகளுக்குப் பொருத்தமான முறையில் உடைஉடுத்து. உடை உன்னைப்பற்றி ஒரு செய்தியை அனுப்புகிறது!