உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எதைப் பற்றிய உண்மைகள்? மனிதர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட சில முக்கியமான உண்மைகள். அவற்றைப் பற்றி காலங்காலமாகவே மக்களுடைய மனதில் நிறைய சந்தேகங்கள் வந்திருக்கின்றன. அதனால் நிறைய கேள்விகளை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஒருவேளை, உங்களுடைய மனதிலும் இப்படிப்பட்ட கேள்விகள் வந்திருக்கலாம்.
-
கடவுளுக்கு நம்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?
-
போரும் கஷ்டமும் இல்லாத காலம் வருமா?
-
ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது?
-
இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா?
-
கடவுள் என் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் அதை நான் எப்படிச் செய்ய வேண்டும்?
-
சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் இந்தக் கேள்விகளை மற்றவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் சொல்லலாம். மதத் தலைவர்களிடம் கேட்டால், அவர்களும் ஆளுக்கொரு பதிலைச் சொல்லலாம். ஒருவேளை நூலகங்களுக்கோ புத்தகக் கடைகளுக்கோ போனால், இதைப் பற்றிய நிறைய புத்தகங்களைப் பார்ப்பீர்கள். ஆனால், அவை தரும் பதில்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கலாம். சில புத்தகங்களிலுள்ள பதில்கள் அந்தச் சமயத்தில் சரியாக இருப்பது போல் தோன்றினாலும், காலப்போக்கில் நடைமுறைக்கு ஒத்துவராமல் போகலாம். அவற்றைத் திருத்தவோ மாற்றீடு செய்யவோ வேண்டியிருக்கலாம்.
ஆனாலும், நம்பகமான பதில்களைத் தரும் ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தப் புத்தகத்தில் இருக்கிற தகவல்கள் எல்லாமே முழுக்க முழுக்க உண்மையானவை. கடவுளிடம் ஜெபம் செய்தபோது, “உமது வார்த்தையே உண்மை” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவான் 17:17, பொது மொழிபெயர்ப்பு) அந்த “வார்த்தை”தான் பரிசுத்த பைபிள். மேலே உள்ள கேள்விகளுக்கு பைபிள் தரும் தெளிவான, உண்மையான பதில்களை அடுத்த பக்கங்களில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
கடவுளுக்கு நம்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?
இந்தக் கேள்வி வரக் காரணம்: அக்கிரமமும் அநியாயமும்தான் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றன. நாம் படும் கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணம் என்று நிறைய மதங்கள் சொல்லிக்கொடுக்கின்றன.
பைபிளின் பதில்: கடவுள் ஒருபோதும் நமக்குக் கெட்டது செய்ய மாட்டார். “உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார். சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்” என்று யோபு 34:10 சொல்கிறது. மனிதர்கள் எந்தக் கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டுமென்பதே நம் அன்பான கடவுளுடைய நோக்கம். அதற்காக, பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை அவர் செய்யப் போகிறார். அதனால்தான், இப்படி ஜெபம் செய்யும்படி இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, . . . உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.” (மத்தேயு 6:9, 10) கடவுள் நம்மீது அளவில்லாத அன்பு வைத்திருப்பதால் நமக்காக உயிரையே கொடுக்கும்படி தன்னுடைய மகனை பூமிக்கு அனுப்பினார். இதன் மூலம், தன் நோக்கத்தை நிச்சயம் நிறைவேற்றுவார் என்பதற்கு உறுதியளித்திருக்கிறார்.—யோவான் 3:16.
ஆதியாகமம் 1:26-28; யாக்கோபு 1:13; 1 பேதுரு 5:6, 7 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
போரும் கஷ்டமும் இல்லாத காலம் வருமா?
இந்தக் கேள்வி வரக் காரணம்: ஏராளமான ஆட்கள் போரில் பலியாகி வருகிறார்கள். மனிதர்கள் படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது நாம் எல்லாருமே வேதனைப்படுகிறோம்.
பைபிளின் பதில்: எதிர்காலத்தில் இந்தப் பூமி முழுவதிலும் சமாதானத்தைக் கொண்டு வரப்போவதாக கடவுள் முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். அவருடைய ஆட்சியில் மனிதர்கள் ‘போர் செய்ய கற்றுக்கொள்ள’ மாட்டார்கள். அதற்குப் பதிலாக, “தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.” (ஏசாயா 2:4) எல்லாவித அநியாயத்துக்கும் கஷ்டத்துக்கும் கடவுள் முடிவுகட்டுவார். “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பு இருந்தவை [இன்றுள்ள அநியாயங்களும் கஷ்டங்களும்கூட] ஒழிந்துபோய்விட்டன” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
சங்கீதம் 37:10, 11; 46:9; மீகா 4:1-4 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
ஒருவர் இறந்த பின்பு என்ன ஆகிறது?
இந்தக் கேள்வி வரக் காரணம்: ஒருவர் இறந்த பின்பு, அவருடைய ஆவி அந்த உடலை விட்டுப் பிரிந்துபோய் எங்கேயோ வாழ்வதாக உலகிலுள்ள நிறைய மதங்கள் கற்றுக்கொடுக்கின்றன. இறந்தவர்களின் ஆவிகள் நமக்கு நன்மையோ தீமையோ செய்யலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். கெட்டவர்களுக்கு கடவுள் நரக தண்டனை கொடுப்பார் என்றும், எரிந்துகொண்டிருக்கும் நெருப்பில் அவர்கள் என்றென்றும் வதைக்கப்படுவார்கள் என்றும் சிலர் நம்புகிறார்கள்.
பைபிளின் பதில்: இறந்துபோன ஒருவரால் கேட்கவோ பார்க்கவோ பேசவோ யோசிக்கவோ முடியாது. “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. இறந்தவர்களால் எதையும் தெரிந்துகொள்ளவோ உணரவோ முடியாது; அதனால், அவர்களால் நமக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியாது.—சங்கீதம் 146:3, 4.
ஆதியாகமம் 3:19; பிரசங்கி 9:6, 10 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா?
இந்தக் கேள்வி வரக் காரணம்: நாம் யாருமே சாக விரும்புவதில்லை. நமக்குப் பிரியமானவர்களுடன் சேர்ந்து எப்போதும் சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறோம். அதனால்தான், நாம் நேசிக்கும் நபர்கள் இறந்துவிட்டால் அவர்களை மறுபடியும் பார்க்க மாட்டோமா என ஏங்குகிறோம்.
பைபிளின் பதில்: இறந்துபோன பெரும்பாலான ஆட்கள் மறுபடியும் உயிரோடு எழுப்பப்படுவார்கள். “கல்லறைகளில் இருக்கிற எல்லாரும் . . . வெளியே வருவார்கள்” என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (யோவான் 5:28, 29) உயிரோடு எழுப்பப்படும் ஆட்கள் கடவுளுடைய ஆரம்ப நோக்கத்திற்கு ஏற்றபடி, பூஞ்சோலை பூமியில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள். (லூக்கா 23:43) அப்போது கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பூரண ஆரோக்கியத்தையும் சாவில்லாத வாழ்க்கையையும் பெறுவார்கள். “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 37:29.
யோபு 14:14, 15; லூக்கா 7:11-17; அப்போஸ்தலர் 24:15 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
கடவுள் என் ஜெபத்தைக் கேட்க வேண்டுமென்றால் அதை நான் எப்படிச் செய்ய வேண்டும்?
இந்தக் கேள்வி வரக் காரணம்: எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஜெபம் செய்கிறார்கள். ஆனாலும், தங்களுடைய ஜெபத்துக்குப் பதில் கிடைப்பதில்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.
பைபிளின் பதில்: ஒரு ஜெபத்தை மனப்பாடம் செய்து, அதையே ஒப்பித்துக் கொண்டிருக்கக் கூடாது என இயேசு சொன்னார். “ஜெபம் செய்யும்போது, . . . சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 6:7) நம் ஜெபங்களைக் கடவுள் கேட்க வேண்டுமென்று நாம் விரும்பினால் அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் ஜெபம் செய்ய வேண்டும். அதற்கு, கடவுளுடைய விருப்பம் என்னவென்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி ஜெபம் செய்வது அவசியம். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்” என்று 1 யோவான் 5:14 சொல்கிறது.
சங்கீதம் 65:2; யோவான் 14:6, 14; 1 யோவான் 3:22 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
சந்தோஷமாக வாழ நான் என்ன செய்ய வேண்டும்?
இந்தக் கேள்வி வரக் காரணம்: பணம், புகழ், அழகு இவைதான் சந்தோஷத்தைத் தரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அதற்காக ஏதேதோ செய்கிறார்கள். கடைசியில், ஏமாந்து போகிறார்கள்.
பைபிளின் பதில்: எது சந்தோஷத்தைத் தரும் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 5:3) கடவுளைப் பற்றிய உண்மைகளையும் அவர் நம்மைப் படைத்ததற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வப்பசி நமக்கு இருக்கிறது; இதைத் திருப்தி செய்வதற்கு முயற்சி செய்தால் மட்டுமே நம்மால் உண்மையான சந்தோஷத்தைப் பெற முடியும். இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. இவற்றைத் தெரிந்துகொண்டால் நம் வாழ்க்கையில் எது ரொம்ப முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வோம். பைபிள் காட்டுகிற வழியில் நடக்கும்போதும் அதன்படி தீர்மானங்களை எடுக்கும்போதும் நம் வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருக்கும்.—லூக்கா 11:28.
நீதிமொழிகள் 3:5, 6, 13-18; 1 தீமோத்தேயு 6:9, 10 ஆகிய வசனங்களையும் பாருங்கள்.
ஏன் இவ்வளவு காலமாக இந்த உலகத்தில் அக்கிரமத்தையும் கஷ்டத்தையும் விட்டுவைத்திருக்கிறார்? என் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ போன்ற கேள்விகளும்கூட உங்கள் மனதில் வந்திருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கும் இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கும் பைபிள் முழுமையான, திருப்தியான பதில்களைத் தருகிறது.
இதுவரை ஆறு கேள்விகளுக்கு பைபிள் தந்த பதில்களைச் சுருக்கமாகச் சிந்தித்தோம். இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? ‘ஆன்மீக விஷயங்களைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆர்வப்பசி இருந்தால்’ நிச்சயம் விரும்புவீர்கள். ‘கடவுளுக்கு நம்மேல் அக்கறை இருந்தால்,இருந்தாலும், இவற்றுக்கான பதில்களை பைபிளில் தேடிப் பார்க்க நிறைய பேர் தயங்குகிறார்கள். ஏனென்றால், பைபிள் மிகப் பெரிய புத்தகம், சில சமயங்களில் அதைப் புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம் என அவர்கள் நினைக்கிறார்கள். பைபிளிலிருந்து பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு உங்களுக்கு உதவி வேண்டுமா? உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் தயாராக இருக்கிறார்கள்.
முதலாவதாக, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை இதற்காகத் தயாரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமான கேள்விகளுக்கு பைபிள் தரும் தெளிவான பதில்கள் இருக்கின்றன; அவசரகதியில் வாழும் மக்கள் இவற்றைத் தெரிந்துகொள்ளும் விதத்தில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, பைபிளை வீட்டிலேயே இலவசமாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. பைபிளைக் கற்றுக்கொடுப்பதற்குத் தகுதியுள்ள ஒரு யெகோவாவின் சாட்சி உங்கள் வீட்டில் அல்லது வேறொரு வசதியான இடத்தில் ஒவ்வொரு வாரமும் கொஞ்ச நேரம் உங்களுக்கு இலவசமாகச் சொல்லித் தருவார். உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்தத் திட்டத்திலிருந்து பயன் அடைந்திருக்கிறார்கள். “நான் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று நிறைய பேர் உற்சாகம் பொங்க சொல்லியிருக்கிறார்கள்!
பைபிளிலுள்ள உண்மைகளைவிட பெரிய பொக்கிஷம் வேறெதுவும் இல்லை. மூடநம்பிக்கை, குழப்பம், பயம் ஆகியவற்றிலிருந்து இவை நம்மை விடுவிக்கின்றன. இவை நமக்கு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் தருகின்றன; நம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கின்றன. அதனால்தான், ‘உண்மையை அறிந்தவர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ என்று இயேசு சொன்னார்.—யோவான் 8:32, பொ.மொ.