பாகம் 5
இறைவனின் ஈடில்லா பண்புகள்
இறைவனுடைய அற்புத பண்புகள் பலவற்றை பரிசுத்த வேதம் நமக்கு வெளிப்படுத்துகிறது, இதன் மூலம் நாம் அவரை அறிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, அவருடைய நான்கு முக்கியமான குணங்களைப் பற்றி, அதாவது வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகிய குணங்களைப் பற்றி, அது சொல்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்...
எல்லையற்ற வல்லமையுள்ளவர்
‘நானே எல்லாம் வல்ல இறைவன்’ என்று இப்ராஹீமிடம் யெகோவா சொன்னார். (ஆதியாகமம் 17:1) ஆம், அவருடைய வல்லமைக்கு ஈடிணை இல்லை, வரம்பு இல்லை, எல்லை இல்லை. இறைவன் தமது வல்லமையால்தான் இந்த அண்டசராசரத்தைப் படைத்தார்.
இறைவன் ஒருநாளும் தம் வல்லமையைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. அதை எப்போதுமே கட்டுப்பாட்டோடும் குறிக்கோளோடும் பயன்படுத்துகிறார். அவர் தம் வல்லமையை நீதி, ஞானம், அன்பு ஆகிய குணங்களோடு சரிநிகர் சமானமாய்ப் பயன்படுத்துகிறார்.
இறைமக்கள் சார்பாக யெகோவா தம் வல்லமையைத் தாராளமாகப் பயன்படுத்துகிறார். “தம்மை முழு மனதுடன் நம்பும் அனைவருக்காகவும் தம் வல்லமையைக் காட்ட அவருடைய கண்கள் பூமியெங்கும் துழாவுகின்றன.” (2 நாளாகமம் 16:9, NW) வல்லமையோடுகூட அக்கறையும் கொண்ட இத்தகைய இறைவனிடம் நீங்கள் ஈர்க்கப்படவில்லையா?
நீதியுள்ள இறைவன்
‘யெகோவா நீதியை நேசிக்கிறவர்.’ (சங்கீதம் 37:28, NW) அதனால், தம்முடைய பரிபூரண நெறிமுறைகளுக்கு இசைவாக எப்போதுமே சரியானதையும் நியாயமானதையும் செய்கிறார்.
இறைவன் அநியாயத்தை வெறுக்கிறார். ‘அவர் யாரையும் பாரபட்சமாய் நடத்துவதில்லை, லஞ்சம் வாங்குவதும் இல்லை.’ (உபாகமம் 10:17, NW) அப்பாவி மக்களை ஒடுக்குகிறவர்களை அவர் எதிர்க்கிறார். ‘விதவைகள், அனாதை பிள்ளைகள்’ போன்றோருக்கு உதவி செய்கிறார். (யாத்திராகமம் 22:22) இறைவன் இன வேற்றுமை பார்ப்பதில்லை, அவருக்கு எல்லா மனிதர்களும் ஒன்றுதான். ‘இறைவன் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.’—அப்போஸ்தலர் 10:34, 35.
யெகோவா தம் நீதியைப் பூரண சமநிலையோடு காட்டுகிறார். அவர் ரொம்ப தயவுதாட்சண்யம் காட்டுபவரும் அல்ல, ரொம்ப கறாரானவரும் அல்ல. மனந்திரும்பாத பாவிகளைத் தண்டித்தாலும், மனந்திரும்புகிறவர்களுக்கு இரக்கம் காட்டுகிறார். ‘யெகோவா இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மை தண்டிப்பதில்லை.’ (சங்கீதம் 103:8-10, பொ.மொ.) உண்மையுள்ள இறைமக்கள் செய்யும் நற்செயல்களை அவர் நினைவுகூருகிறார், அவற்றுக்குப் பலனும் அளிக்கிறார். இப்படிப்பட்ட நீதியுள்ள இறைவனை நீங்கள் தாராளமாய் நம்பலாம், அல்லவா?
ஞானமுள்ள இறைவன்
யெகோவாவே ஞானத்தின் பிறப்பிடம். ‘ஆ! இறைவனுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை!’ (ரோமர் 11:33) அவரது ஞானம் ஈடிணையற்றது, எல்லையற்றது.
சங்கீதம் 104:24, பொ.மொ.
நம்மைச் சுற்றியுள்ள படைப்புகளில் இறைவனின் ஞானம் பளிச்சிடுகிறது. ‘யெகோவாவே உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்!’ என்று சொல்லி ஓர் இறைநம்பிக்கையாளர் வியந்தார்.—பரிசுத்த வேதத்திலும் இறைவனின் ஞானம் பளிச்சிடுகிறது. தாவூத் ராஜா இவ்வாறு எழுதினார்: “யெகோவாவின் நினைப்பூட்டுதல் நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது.” (சங்கீதம் 19:7, NW) இறைவனின் எல்லையற்ற ஞானத்தை எதிரொலிக்கும் பரிசுத்த வேதத்தைப் படித்து நீங்களும் நன்மை அடையலாம், அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அந்த வாய்ப்பை வசப்படுத்திக்கொள்வீர்களா?
‘இறைவன் அன்பாகவே இருக்கிறார்’
அன்பே யெகோவாவின் பிரதான குணம். ‘இறைவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று வேதவசனங்கள் சொல்கின்றன. (1 யோவான் 4:8) அந்த அன்பே அவருடைய எல்லா செயல்களுக்கும் மூலக்காரணமாய் இருக்கிறது.
இறைவன் அநேக வழிகளில் தமது அன்பை நமக்குக் காண்பிக்கிறார். உதாரணத்திற்கு, நமக்குப் பல அருட்கொடைகளை வழங்குகிறார். “வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்.” (அப்போஸ்தலர் 14:17) சொல்லப்போனால், “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்தே வருகின்றன, ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்தே வருகின்றன.” (யாக்கோபு 1:17) விலையேறப்பெற்ற ஓர் அன்பளிப்பின் மூலம், ஆம் பரிசுத்த வேதத்தின் மூலம், இறைவன் தம்மைப் பற்றிய சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்; அதோடு, அவருடைய அன்பைப் பிரதிபலிக்கும் சட்டங்களையும் நெறிமுறைகளையும் அந்த வேதத்தின் மூலம் நமக்குக் கற்பிக்கிறார். இயேசு ஒருமுறை இறைவனிடம் வேண்டிக்கொண்டபோது, “உங்களுடைய வார்த்தையே சத்தியம்” என்று சொன்னார்.—யோவான் 17:17.
சோதனைகள் வரும்போதும் இறைவன் நமக்கு உதவி செய்கிறார். ‘யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.’ (சங்கீதம் 55:22) அவர் நம் பாவங்களை மன்னிக்கிறார். ‘யெகோவாவே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.’ (சங்கீதம் 86:5) அவர் நமக்கு முடிவில்லா வாழ்வையும் கொடுக்கப்போகிறார். மக்களுடைய ‘கண்ணீரையெல்லாம் இறைவன் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.’ (வெளிப்படுத்துதல் 21:4) இறைவனின் அன்புக்கு நீங்கள் எப்படிக் கைமாறு செய்வீர்கள்? நீங்களும் அவர்மேல் அன்பு காட்டுவீர்களா?
இறைவனிடம் நெருங்கி வாருங்கள்
தம்மைப் பற்றி நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இறைவன் விரும்புகிறார். ‘இறைவனிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்’ என்று வேதம் சொல்கிறது. (யாக்கோபு 4:8) உண்மையுள்ள தீர்க்கதரிசியான இப்ராஹீமை ‘என் சிநேகிதன்’ என்று இறைவன் அழைத்தார். (ஏசாயா 41:8) அதேபோல் நீங்களும் அவருடைய சிநேகிதனாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.
இறைவனைப் பற்றி நீங்கள் எந்தளவு கற்றுக்கொள்கிறீர்களோ அந்தளவு அவரிடம் நெருங்கி வருவீர்கள், சந்தோஷமும் காண்பீர்கள். ‘யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானம் செய்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.’ (சங்கீதம் 1:2) ஆகவே, பரிசுத்த வேதத்தைத் தொடர்ந்து படியுங்கள். இறைவனின் பண்புகளை... படைப்புகளை... தியானியுங்கள். கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிப்பதன் மூலம் இறைவன்மீது நீங்கள் அன்பு வைத்திருப்பதைக் காட்டுங்கள். ‘நாம் இறைவனுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.’ (1 யோவான் 5:3) ‘யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தும்’ என்று விண்ணப்பம் செய்த ஓர் இறைநம்பிக்கையாளரைப் போல நீங்களும் விண்ணப்பம் செய்யுங்கள். (சங்கீதம் 25:4, 5) அப்போது... இறைவன் ‘நம் ஒருவருக்கும் தூரமானவர் அல்ல’ என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.—அப்போஸ்தலர் 17:27.