பாகம் 4
இறைவன் யார்?
மக்கள் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால், ஒரேவொரு உண்மையான இறைவனே இருக்கிறார் என்று பரிசுத்த வேதம் கற்பிக்கிறது. அவர் ஒப்பற்றவர், உன்னதமானவர், முடிவில்லாதவர். அவரே வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் படைத்தவர், நமக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. அதனால், அவரே நம் வழிபாட்டுக்கு உரியவர்.
இறைவனுக்குப் பல பட்டப்பெயர்கள் இருந்தாலும் அவருக்கென்று ஒரு சொந்தப் பெயர் இருக்கிறது—அதுதான் யெகோவா. மூஸாவிடம் இறைவன் இவ்வாறு சொன்னார்: ‘இஸ்ரவேலர்களிடம் நீ சொல்ல வேண்டியது இதுதான்: “உங்களுடைய முற்பிதாக்களின் இறைவனும், இப்ராஹீமின் இறைவனும், இஸ்ஹாக்கின் இறைவனும், யஃகூப்பின் இறைவனுமானவர் யெகோவா என்பவர் ஆவார். என் பெயரும் எப்பொழுதும் யெகோவா ஆகும். அப்பெயரில்தான் தலைமுறை தலைமுறையாக ஜனங்கள் என்னை அறிவார்கள். யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார்.”’ (யாத்திராகமம் 3:15, ஈஸி டு ரீட் வர்ஷன்) பரிசுத்த வேதத்தில் யெகோவா என்ற பெயர் சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய இறைவன் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்’ என்று சங்கீதம் 83:17 கூறுகிறது.
இறைவனை இதுவரை எந்த மனிதனும் கண்டதில்லை. ‘நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்க முடியாது’ என்று மூஸாவிடம் இறைவன் சொன்னார். (யாத்திராகமம் 33:20) இறைவன் சுவர்க்கத்தில் வாசம் செய்கிறார், மனித கண்களுக்குத் தெரிய மாட்டார். அதனால், சிலைகளையோ உருவப் படங்களையோ சின்னங்களையோ உண்டாக்குவதும் தவறு, அவற்றை வைத்து இறைவனை வணங்குவதும் தவறு. மூஸா தீர்க்கதரிசி மூலம் இறைவனாகிய யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: ‘நீங்கள் எந்த விக்கிரகங்களையோ, படங்களையோ, சிலைகளையோ செய்யக்கூடாது. வானிலும், பூமியிலும் தண்ணீரிலுமுள்ள எந்தப் பொருளின் வடிவத்திலும் அவற்றைச் செய்யக்கூடாது. எந்தவிதமான விக்கிரகத்தையும் தொழுகை செய்யவோ அதை சேவிக்கவோ கூடாது. ஏனெனில் நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. எனது ஜனங்கள் பிற தேவர்களைத் தொழுவதை நான் வெறுக்கிறேன்.’ (யாத்திராகமம் 20:2-5, ERV) பிற்பாடு, ஏசாயா தீர்க்கதரிசி மூலம் இறைவன் இவ்வாறு சொன்னார்: ‘எனது நாமம் யெகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு கொடேன்.’—ஏசாயா 42:8, ERV.
சிலர் இறைவன்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், ஆனால் அவரை அறியப்படாதவராக... அணுகமுடியாதவராக... அச்சப்படத்தக்கவராக... கருதுகிறார்கள், அன்புள்ளவராகக் கருதுவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இறைவனுக்கு உங்கள்மீது தனிப்பட்ட அக்கறை இருக்கிறதா? அவரைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியுமா, அவரிடம் நெருங்கிவர முடியுமா? இப்போது, இறைவனுடைய பண்புகளைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.