Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

அதிகாரம் 6

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

கடவுள் பூமியில் நடவடிக்கை எடுக்குமளவில் அதில் அக்கறை கொண்டில்லை அல்லது மனிதவர்க்கத்தைத் தொல்லைப்படுத்தும் பிரச்னைகளைக் குறித்து அவர் எதுவும் செய்கிறதில்லையென இன்று பல ஆட்கள் நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கடவுள் மிக அதிகம் அக்கறை கொள்கிறார். மெய்தான், அவர் செய்யும்படி மனிதர் எதிர்பார்த்தவற்றை ஒருவேளை அவர் செய்யாதிருக்கலாம். ஆனால் இது அவர் ஒன்றுமே செய்யவில்லையென பொருள்கொள்கிறதில்லை. உண்மையில், அவர், மனித சரித்திரத்தின் தொடக்கத்திலிருந்து இந்நாள்வரையிலும், மனிதவர்க்கத்துக்காகக் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.

2கடவுள் எதுவும் செய்கிறதில்லை என்று சில ஆட்கள் முடிவு செய்வதற்கு ஒரு காரணம் அவர்களுடைய சொந்தக் குறுகிய வாழ்நாளாகும். இது, தங்கள் வாழ்நாள் அனுமதிக்கிற அந்தக் குறுகிய காலத்துக்குள் காரியங்களைச் செய்து முடிக்கும்படி அவர்கள் பதற்றமடைய செய்கிறது. ஆகவே தங்கள் சொந்த வாழ்நாளின்போது மாற்றங்களைக் காணவேண்டுமென்ற ஆசை அவர்களுடைய சிந்தனையில் மேம்பட்டு நிற்கிறது. எனவே, அவர்களுடைய மனப்போக்கு, பலவகையில் மட்டுப்பட்ட இத்தகைய மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு கடவுளை நியாயந்தீர்க்கும்படி செய்கிறது.

3மறுபட்சத்தில், யெகோவா என்றென்றும் வாழ்கிறார். (சங்கீதம் 90:2, 4; ஏசாயா 44:6) கால ஓட்டப் போக்கில் எங்கே தம்முடைய செயல்கள், அவற்றால் பாதிக்கப்படுபவர் யாவருக்கும் மிக அதிக நன்மையை நிறைவேற்றுமென்பதையும் அதோடுகூட தம்முடைய நோக்கத்தை மிக அதிக பலன்தரத்தக்க முறையில் முன்னேற்றுவிக்குமென்பதையும் அவர் தம்முடைய நோக்குநிலையிலிருந்து சரிநுட்பமாய்க் காணமுடியும். (ஏசாயா 40:22; 2 பேதுரு 3:8, 9) சரியாய் இதையே கடவுள் செய்துகொண்டிருக்கிறார்.

கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்

4மனிதவர்க்கம் முழுமையான பாதுகாப்பை அனுபவித்து மகிழ்ந்து, சமாதானத்திலும் ஒற்றுமையிலும் ஒன்றுசேர அதைக் கொண்டுவரும் நீதியுள்ள ஒரு நிர்வாகத்தைச் சகல சிருஷ்டிக்கும் அளிப்பது யெகோவாவின் நோக்கமாகும். (எபேசியர் 1:9, 10, NW; நீதிமொழிகள் 1:33) ஆயினும், கடவுள், தம்முடைய நிர்வாகத்தின்கீழ் வரும்படி எவரையும் வற்புறுத்துகிறதில்லை. அவரைச் சேவிப்போரும் அவர் ஆளும் முறையை நேசிப்போரும் மாத்திரமே வரவேற்கப்படுகிறார்கள். தம்முடைய நிர்வாகத்தின் நீதியுள்ள தராதரங்களின்படி வாழும் ஒரு முழு உலகத்தை அமைக்கும் நோக்கத்துடன், கடவுள் மனிதவர்க்கத்துக்கு அந்தத் தராதரங்களைப் பற்றிய அறிவையும் தம்முடைய நிர்வாகம் செயல்படும் முறையையும் கிடைக்கக் கூடியதாக்கியிருக்கிறார். அதே சமயத்தில் தம்மையும் தம்முடைய தனிப்பட்ட பண்புகளையும் பற்றிய இன்றியமையாத அறிவை மனிதவர்க்கம் அடையக்கூடும்படியும் செய்துகொண்டிருக்கிறார்.—யோவான் 17:3.

5யெகோவா ஆவியாக இருப்பதால் நிச்சயமாகவே மனிதன் அவரைக் காணமுடியாது. ஆகவே, எவ்வாறு மாம்சமும் இரத்தமுமான மனிதர் இந்தக் காரியங்களை விளங்கிக்கொள்ளும்படி செய்வார்? ஒரு வழியானது, சிருஷ்டிகருடைய கரங்களின் செயல்களிலிருந்து அவருடைய பண்புகளைப் பற்றி அதிகம் கற்றறியலாம். (ரோமர் 1:20) உயிருள்ளவற்றிற்குள் ஒன்றுக்கொன்றுள்ள அதிசயமான உறவுகளும் சடப்பொருள் எல்லாவற்றையும் ஆளும் இயற்கை விதிகளும் அவருடைய ஞானத்துக்குச் சாட்சிபகருகின்றன. சமுத்திரங்களிலும், வானிலையிலும், நட்சத்திரங்களின் ஆற்றலிலும் வெளிப்படுத்தப்படுகிற பெரும் வல்லமை அவருடைய சர்வ வல்லமைக்கு அத்தாட்சியைக் கொடுக்கிறது. (யோபு 38:8-11, 22-33; 40:2) சுவையுணர்வை மகிழ்விக்கும் பற்பல வகையான உணவுகளும், பூக்கள், பறவைகள், சூரிய உதயங்கள், சூரிய மறைவுகள் ஆனவற்றின் அழகும், மிருகங்களின் விளையாட்டுக் கோமாளித்தனங்களும் —ஆகிய எல்லாம் மனிதவர்க்கத்தின்பேரிலுள்ள சிருஷ்டிகரின் அன்பையும், வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியைக் கண்டடைய வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தையும் அறிவிக்கின்றன. எனினும் கடவுள் தம்மை வெளிப்படுத்துவது இந்தக் காரியங்களோடு நின்றுவிடுகிறதில்லை.

6பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பரலோகங்களிலிருந்து பேசியும் இருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் தாமே நேராகப் பேசியிருக்கிறார். வேறு சமயங்களில், அரேபிய தீபகற்பத்திலுள்ள சீனாய் மலையில் செய்ததுபோல் தேவ தூதர்களின் மூலமாய்ப் பேசினார், அங்கே அவர் லட்சக்கணக்கான இஸ்ரவேலருக்குத் தம்முடைய சட்டத்தைக் கொடுத்தார். (யாத்திராகமம் 20:22; எபிரெயர் 2:2) பின்பு, பல நூற்றாண்டுகள் தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலம் அவர் மனிதருடன் பேசினார், மேலும் தம்முடைய சித்தத்தைப் பற்றி வெளிப்படுத்தினவற்றை அவர்கள் எழுதி வைக்கும்படியும் செய்தார். (2 பேதுரு 1:21) இவ்வாறு, யெகோவா தம்முடைய நீதியுள்ள தராதரங்களையும் தம்முடைய சித்தத்தையும் மனிதனுக்குப் படிப்படியாய்த் தெரிவித்தார். அவர் மனிதருடன் நடைமுறைத் தொடர்புகள் வைப்பதன்மூலம் தம்முடைய நியமங்களையும் பண்புகளையும் வெளிப்படுத்தின முறை இதன் ஒரு முக்கிய அம்சமாகும். இது, அவருடைய எழுதப்பட்ட வார்த்தைக்கு மனித அனுபவத்தின் அனலான கவர்ச்சிகரத்தைக் கூட்டியிருக்கிறது. கடவுளுடைய நோக்கத்தின் அறிவிப்புகளைக் கேட்பதும் வாசிப்பதுமட்டுமல்லாமல், அவருடைய சித்தத்தை மேலும் நன்றாய் விளங்கிக்கொள்ள நமக்கு உதவிசெய்யும் உயிருள்ள முன்மாதிரிகளையும் பைபிள் பதிவில் கொண்டிருப்பது இன்னும் எவ்வளவு அதிகம் அறிவூட்டுகிறது, நம்ப வைக்கிறது! (1 கொரிந்தியர் 10:11) இந்தப் பதிவு என்ன வெளிப்படுத்துகிறது?

7அநீதியைக் கடவுள் என்றென்றும் பொறுத்துக்கொண்டிருப்பதில்லை என்ற அத்தாட்சியை அது அளிக்கிறது. ஆதாம் ஏவாளின் சந்ததியார் தங்கள் சொந்தப் போக்கில் சென்று, மனிதன் தன்னைத்தான் வெற்றிகரமாய் ஆண்டுகொள்ள திறமையற்றிருப்பதைப் பற்றிய தவிர்க்க முடியாதப் பதிவை உண்டாக்கி வைக்க அவர் விட்டார் என்பது உண்மையே. ஆனால் அவர்களுடைய அநீதியான வழிகளுக்கு எதிரான தம்முடைய நியாயத்தீர்ப்பைத் தெரியப்படுத்தும் அத்தாட்சி இல்லாமல் கடவுள் மனிதவர்க்கத்தை விட்டு விடவில்லை. இவ்வாறு அவர், “பூமி கொடுமையினால் நிறைந்திருந்த”தன் காரணமாக, நோவாவின் நாளில் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார். (ஆதியாகமம் 6:11-13) ஒழுக்கச் சம்பந்த மோசமான நடத்தையில் ஈடுபட்டிருந்த சோதோம் கொமோரா பட்டணங்களை அவர் அழித்தார். (ஆதியாகமம் 19:24, 25; யூதா 7) தம்மைச் சேவிப்பதாக உரிமை பாராட்டின இஸ்ரவேல் ஜனத்தார், பொய்மதத்தைப் பழக்கமாய் அனுசரித்துக் கொண்டிருந்ததனால் அவர்கள் நாடுகடத்திக் கொண்டுபோகப்படும்படி அவர் அனுமதித்தார். (எரேமியா 13:19, 25) இத்தகைய நடத்தையைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார் என்பதை அறிந்துகொள்கையில், நாம் நேர்மையை நேசிப்பதைக் காட்ட நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு நமக்கு வாய்ப்பு இருக்கிறது. நாம் அப்படிச் செய்வோமா?

8கடவுள் நீதிமான்களையும் அக்கிரமக்காரரையும் வேறுபடுத்துகிறார் என்றும் பைபிள் பதிவு காட்டுகிறது. அந்தப் பூகோள ஜலப்பிரளயத்தில், “நீதியைப் பிரசங்கித்தவனாகிய” நோவாவைக் கடவுள் அழிக்கவில்லை, அவனையும் மற்ற ஏழுபேரையும் அவர் பிழைத்திருக்கச் செய்தார். (2 பேதுரு 2:5) சோதோமின்மேல் அக்கினியும் கந்தகமும் பொழிய செய்வதற்கு முன்பாக, நீதிமான் லோத்தும் அவனுடைய குடும்பத்தாரும் தப்பியோடுவதற்கு வழியுண்டாக்கப்பட்டது.—ஆதியாகமம் 19:15-17; 2 பேதுரு 2:7.

9கடவுளைச் சேவிக்கும்படி உறுதிமொழி எடுத்திருந்த இஸ்ரவேல் ஜனத்தார் உண்மையற்றவர்களாக நிரூபித்தபோது, அவர் அவர்களை உடனடியாகத் தள்ளிப்போடவில்லை. அவர் அவர்களுக்குச் சொன்ன பிரகாரம்: “தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியரையெல்லாம் நான் திரும்பத் திரும்ப நாடோறும் [அதிகாலையிலேயே எழுந்திருக்கச் செய்து, NW] உங்களிடம் அனுப்பிக் கொண்டிருந்தேன்.” ஆனால் அவர்கள் செவிகொடுக்கவில்லை. (எரேமியா 7:25, 26) எருசலேமின் அழிவுக்குரிய சமயம் நெருங்கிவிட்டபோதுங்கூட, யெகோவா பின்வருமாறு சொன்னார்: “துன்மார்க்கனின் மரணத்தை நான் விரும்புவேனோ? . . . அவன் தன் வழிகளைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையல்லவோ நான் விரும்புகிறேன். . . . ஆகவே மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.”—எசேக்கியேல் 18:23, 32, தி.மொ.

10அப்படியானால், நாம் என்ன காண்கிறோம்? நீதியை நாடும் மனச் சாய்வுள்ள ஆட்களின் இருதயத்தை ஆழமாய்த் தொடும் வகையில், யெகோவா மனிதவர்க்கத்தினிடம் தம்முடைய மகா பொறுமையை விளங்கச் செய்திருக்கிறார் என்பதையே. அதே சமயத்தில், அவருடைய நடைமுறைத்தொடர்புகள், அவர் நீதியை நேசிக்கிறவர் எனவும் அவருடைய கட்டளைகளுக்கிணங்க நாம் வாழவேண்டிய முக்கியத்துவத்தையும் நம்மில் சக்திவாய்ந்த வண்ணம் பதிய வைக்கின்றன.

11வெகு அடிப்படையான வேறு ஒன்றும் மேம்பட்டு நிற்கிறது. கடவுள் தாம் செய்துள்ள எல்லாவற்றிலும் ஒரு திட்டமான நோக்கத்தைக் கொண்டிருந்தது தொடக்கத்திலிருந்தே தெளிவாகிறது. மேலும் தம்முடைய நோக்கத்தின் நிறைவேற்றத்துக்கு நடவடிக்கை தேவைப்படுகையில் நடவடிக்கை எடுக்க அவர் ஒருபோதும் தவறவில்லை. இந்த அடிப்படையான நோக்கம், ஏதேனிலேயே அறிவிக்கப்பட்டது. சாத்தான் ஒரு “வித்து”வை, அதாவது, அவனுடைய குணங்களை வெளிப்படுத்தி அவனை ஆதரிக்கிறவர்களை எழுப்பும் வாய்ப்பைக் கொண்டிருப்பான் என்று சாத்தான்மேல் நியாயத்தீர்ப்பைக் கூறுகையில் யெகோவா முன்னறிவித்தார். மேலும் அவர் மற்றொரு “வித்து”வை, அதாவது, நீதியுள்ள ஒரு விடுவிப்பவரைப் பிறப்பிப்பதையுங்கூட முன்னறிவித்தார். இவர், அந்தப் “பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பைச்” சாவுக்கேதுவாகக் காயப்படுத்தி, இவ்வாறு மனிதவர்க்கத்தை அழிவுண்டாக்கும் அவனுடைய ஆட்சியிலிருந்து விடுதலைசெய்வார். (ஆதியாகமம் 3:15; வெளிப்படுத்துதல் 12:9) இந்த நோக்கத்தைப் பற்றிய செய்தியை அறிவித்தப் பின் யெகோவா, வாக்குப்பண்ணப்பட்ட இந்த “வித்து”வின்கீழ் பூமியின் விவகாரங்களை முடிவில் நிர்வகிக்கப்போகும் அந்த நிர்வாகத்துக்கான திட்டவட்ட முன்னேற்பாடுகளைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டார். நாம் பார்க்கப்போகிற பிரகாரம், இந்த முன்னேற்பாடான வேலை காலம் எடுக்கும்.

அவர் பூர்வ இஸ்ரவேலருடன் தனிமுறையில் தொடர்பு வைத்ததன் காரணம்

12நம்முடைய தற்கால தேசீய ஜாதிகள் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்பே கடவுள் ஒரு ஜாதியாரைத் தம்முடைய சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்து, நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்தினார். ஏன்? தம்முடைய நீதியுள்ள நியமங்கள் செயல்படும் முறைக்கு உயிருள்ள நிரூபணத்தை அளிப்பதற்கே. இந்தப் பூர்வ இஸ்ரவேல் ஜனம், சிருஷ்டிகரில் மிகுந்த விசுவாசங்காட்டின மனிதனாகிய ஆபிரகாமின் சந்ததியாரால் ஆகியது. யெகோவா அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “யெகோவா உங்கள் பேரில் பிரியம் வைத்து உங்களைத் தெரிந்தெடுத்தது நீங்கள் சகல ஜாதிகளிலும் திரளானவர்கள் என்றல்ல, நீங்கள் சகல ஜனங்களிலும் சொற்பப்பேராயிருந்தீர்கள். யெகோவா உங்களில் அன்புகூர்ந்ததினாலும் உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்றதினாலு”மே.—உபாகமம் 7:7, 8, தி.மொ.; 2 இராஜாக்கள் 13:23.

13எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்தப் பின், யெகோவா அவர்களைத் தம்முடன் விசேஷித்த உறவுக்குள் ஏற்றுக்கொள்ள முன்வந்து அறிவித்தார், அவர்கள்: “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்,” என்று பதிலளித்தார்கள். (யாத்திராகமம் 19:8, தி.மொ.) பின்பு யெகோவா தம்முடைய சட்டங்களை அவர்களுக்குக் கொடுத்தார். இவ்வாறு அவர்களை மற்ற எல்லா ஜாதிகளிலிருந்தும் தனியே பிரித்து வைத்து, தம்முடைய நீதியுள்ள தராதரங்களைக் குறித்து நுட்ப விவரமான தகவலை அளித்தார். (உபாகமம் 4:5-8) ஆகவே, கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படிகையில் அல்லது கீழ்ப்படியாமற்போகையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பதிவைப் பூர்வ இஸ்ரவேலரின் சரித்திரம் அளிக்கிறது. இதற்கிடையில், மற்ற ஜாதிகளின் சரித்திரம், கடவுளுடைய சட்டம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு உண்டாகும் விளைவை வெளிப்படுத்துகிறது.

14அந்த மற்ற ஜாதிகளைப் பற்றியதென்ன? அவர்கள் தங்கள் சொந்த அரசாங்க முறைகளைத் தெரிந்துகொண்டு, தங்கள் சொந்த வழியில் சென்றனர். அவர்களுடைய ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா நற்குணத்தையும் முற்றிலும் இழந்தில்லை. மனச்சாட்சியின் நுட்பத்திறமை அவர்களுக்கு இன்னும் இருந்தது. அது அவர்கள் தங்களைப் போன்ற உடன் மனிதருக்கு மனிதப் பண்புடைய அக்கறை காட்டும் முறையில் நடந்து கொள்ளும்படி சில சமயங்களில் அவர்களைத் தூண்டி நடத்தினது. (ரோமர் 2:14; அப்போஸ்தலர் 28:1, 2) ஆனால் அவர்கள் சுதந்தரித்தப் பாவமும் தெய்வீக வழிநடத்துதலை வேண்டாமெனத் தள்ளிவிட்டதும், தன்னலத்தை நாடும் ஒரு போக்கைத் தொடரும்படி அவர்களைச் செய்வித்தன, இது கொடுமையான போர்களுக்கும் இழிவான பழக்கச் செயல்களுக்கும் வழிநடத்தினது. (எபேசியர் 4:17-19) அவர்கள்தாமே தெரிந்துகொண்ட வாழ்க்கைப் போக்கு கொண்டுவந்தத் துயரங்களுக்குக் கடவுள் பொறுப்புள்ளவராக இல்லை. மனிதருடைய நடவடிக்கைகள் தம்முடைய நோக்கங்களின் நிறைவேற்றத்தை எதிர்த்து நின்ற சமயங்களில் மாத்திரமே கடவுள் தலையிட்டார். இதற்கிடையில் அவர்கள் உயிர்வாழும் மகிழ்ச்சியிலும், சிருஷ்டிப்பின் அழகுகளிலும் பூமியின் கனிகளிலும் பங்குகொள்ள கடவுள் அவர்களைத் தயவாய் அனுமதித்தார்.—அப்போஸ்தலர் 14:16, 17.

15மேலும் ஆபிரகாமின் ‘வித்தின்’ மூலம் வரும் வாக்குப்பண்ணப்பட்ட நன்மைகளை முடிவில் பெற்றுக்கொள்வதிலிருந்தும் இந்த ஜாதிகளின் ஜனங்களை யெகோவா விலக்கிவைக்கவில்லை. ஆபிரகாமின் குடும்பப் பரம்பரை வழியில் வரவிருந்த இந்த “வித்து”வைக் குறித்து யெகோவா பின்வருமாறு கூறினார்: “நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:18) ஆகவே யெகோவா இஸ்ரவேலருடன் மாத்திரமே தனிப்பட்ட தொடர்பு கொண்டு வருகையில், பின்னால் மற்ற ஜாதிகளையும் ஆசீர்வதிப்பதற்கான தம்முடைய நோக்கத்தை அவர்கள் அறியாதபோதிலும், பட்சபாதமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.—அப்போஸ்தலர் 10:34, 35.

16பூர்வ இஸ்ரவேலரோடு யெகோவா தொடர்புகொண்டிருந்தக் காலத்தின்போது, விசுவாசமுள்ள மனிதருக்கு ஓர் இன்றியமையாதத் தேவையை நிரப்பின, அதாவது, ஆபிரகாமின் வாக்குப்பண்ணப்பட்ட வித்து கடைசியாக வந்து சேருகையில், அவரை அடையாளங் கண்டுகொள்ள உதவிசெய்யும் மிகப் பல தீர்க்கதரிசனங்களை அவர் அளித்தார். யூதா கோத்திரத்தின் வழியாகவும் தாவீதின் குடும்ப வழியாகவும் வரும் அவருடைய குடும்பப் பரம்பரையும் விளக்க விவரமாய்க் குறிப்பிடப்பட்டது. (ஆதியாகமம் 49:10; சங்கீதம் 89:35, 36) அவருடைய பிறப்புக்குரிய இடமாகிய பெத்லகேம், பெயர் குறிப்பிடப்பட்டது. (மீகா 5:2) மேசியாவாக அவர் அபிஷேகம்பண்ணப்படப்போகும் அந்த ஆண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே குறிப்பிடப்பட்டது. (தானியேல் 9:24-27) மனிதவர்க்கத்தின் சார்பாக அவருடைய ஆசாரிய சேவைகள் முன்குறித்துக் காட்டப்பட்டன. அவ்வாறே, அவர் தம்மைத்தாமே பலிசெலுத்தி சகல ஜாதிகளின் ஜனங்களுக்கும் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பைத் திறந்து வைத்ததும் முன்குறிக்கப்பட்டது. (எபிரெயர் 9:23-28) இவ்வாறு, குறிக்கப்பட்ட அந்தக் காலம் வந்தபோது, கடைசியில் மனிதவர்க்கத்துக்கு யார் மூலம் ஆசீர்வாதங்கள் வருமென வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்து இயேசு கிறிஸ்துவே என்று எல்லாக் காரியங்களும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அடையாளங்காட்டின.—கலாத்தியர் 3:16, 24; 2 கொரிந்தியர் 1:19, 20.

மனிதவர்க்கத்துக்கு அரசர்களை ஆயத்தப்படுத்துதல்

17இயேசு பிறப்பதற்கு முன்னால், ஒரு தூதன் அவருடைய தாயாகிய மரியாளிடம் அவளுடைய குமாரனுக்கு ஒரு நித்திய ராஜ்யம் கொடுக்கப்படும் என்று சொன்னான். பெத்லகேமுக்கு அருகிலிருந்த மேய்ப்பர்களுக்கு அவருடைய பிறப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டது, பின்பு பரலோக சேனைகளின் ஒரு திரள், “மேலே உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை, பூமியின்மேல் நற்பிரிய மனிதருக்குள் சமாதானம்,” என்று சொல்லிக் கடவுளைத் துதிப்பதை அவர்கள் கேட்டார்கள்.—லூக்கா 1:31-33; 2:10-14, NW.

18இந்த எதிர்கால பரலோக அரசர் பூமியில் வாழ்ந்ததனால் உண்டாகும் நன்மைகளைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதனாக அவர் மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தெரிந்தும் புரிந்துங்கொண்டார். அவர்களுடைய துக்கத்தில் பங்குகொண்டு அவர்தாமேயும் பாடனுபவித்து, அவர்களோடு வாழ்ந்து உழைத்தார். மிகக் கடுமையான பரீட்சைகளின்கீழ் அவர் யெகோவாவுக்குத் தம்முடைய உண்மைத் தவறாமையையும் தாம் நீதியை நேசிப்பதையும் நிரூபித்தார். இயேசு புரிந்துகொள்ளும் அரசராயும் மனிதவர்க்கத்துக்கு உயிரளிக்கும் நன்மைகளை வழங்கும்படி பிரதான ஆசாரியராயும் இருப்பதற்குக் கடவுள் அவரை இவ்வகையில் ஆயத்தப்படுத்தினார். (எபிரெயர் 1:9; 4:15; 5:8-10) மேலும், தம்முடைய சொந்த உயிரைப் பலிசெலுத்துவதனால் மனிதவர்க்கம் கடவுளுடன் சமாதான உறவுகளைத் திரும்ப அடைவதற்கு வழியை இயேசு கிறிஸ்து திறந்து வைத்தார்.—1 பேதுரு 3:18.

19இயேசு மரித்தப் பின்பு கடவுள் அவரை மறுபடியும் உயிர்த்தெழுப்பினார், இந்த உயிர்த்தெழுதல் உண்மையில் நடந்ததென சாட்சிபகரக்கூடிய 500-க்கு மேற்பட்ட மனித சாட்சிகள் அவரைக் கண்டார்கள். (1 கொரிந்தியர் 15:3-8) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு நாற்பது நாட்களுக்குப் பின்பு, தம்முடைய சொந்த உண்மையுள்ள சீஷர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர் பரலோகத்தை நோக்கி ஏறிச் சென்று அவர்களுடைய காட்சியிலிருந்து மறைந்தார். (அப்போஸ்தலர் 1:9) பரலோகத்திலிருந்து அவர், தம்முடைய சொந்த உண்மையுள்ள சீஷர்கள்பேரில் தம்முடைய அரசாதிகாரத்தைச் செலுத்தத் தொங்கினார், அவருடைய ஆட்சியின் நன்மைகள் அவர்களை மனிதவர்க்கத்தின் மற்ற எல்லாரிலுமிருந்து வேறுபட்ட பண்புடன் தோன்றி நிற்கும்படி செய்தது. ஆனால் ஜாதிகளை ஆளத் தொடங்குவதற்கு அப்பொழுது அவருக்குக் காலமாயிருந்ததா? இல்லை, ஏனெனில் கடவுளுடைய மகா திட்டத்தில் இருந்த மற்றக் காரியங்களுக்குக் கவனம் செலுத்தப்பட வேண்டியிருந்தது.—எபிரெயர் 10:12, 13.

20பூமி எங்கும் செய்யப்பட வேண்டிய ஒரு பெரிய வேலை இன்னும் இருந்தது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் முன்னால் இஸ்ரவேலர் ஒருவரும் மற்ற ஜாதிகளை மதமாற்றுவதற்குப் பிரசங்கிகளாக வெளியே சென்றதில்லை. எனினும் யெகோவாவை வணங்கத் தெரிந்துகொள்ள விரும்பின எவரும் இஸ்ரவேலரோடுகூட அந்த நன்மைகளில் எப்பொழுதும் பங்குகொள்ள முடிந்தது. (1 இராஜாக்கள் 8:41-43) எனினும், கிறிஸ்தவத்தின் வருகை ஒரு பெரிய புதிய பொறுப்பேற்கும் வேலையைக் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இயேசு கிறிஸ்து தாமே முன்மாதிரியை வைத்து, தாம் பரலோகத்துக்கு ஏறிப்போவதற்கு முன் தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு கூறி அந்த வேலை பொறுப்பை அவர்களுக்கு உரிமையாக விட்டுச் சென்றார்: “நீங்கள் எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் மிகத் தொலைதூர பாகம் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8, NW.

21இதன் நோக்கம் உலக மதமாற்றுதலாக இருந்ததா? இல்லை. அதைப் பார்க்கிலும், இயேசு “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” வரையான இந்தக் காலப்பகுதியினூடே முதல் நிலையாக “ராஜ்யத்தின் புத்திரர்” கூட்டிச்சேர்க்கப்படுவரென்று காட்டினார். ஆம், வரப்போகிற ராஜ்ய அரசாங்கத்தின் மற்ற அங்கத்தினர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். (மத்தேயு 13:24-30, 36-43) இயேசு கிறிஸ்துவுடன் அவருடைய பரலோக ராஜ்ய ஆட்சியில் பங்குகொள்வதற்கு பொ.ச.33-ன் பெந்தெகொஸ்தே தொடங்கி மற்றவர்கள் அழைக்கப்பட்டு வந்ததைக் கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களை வாசிக்கிற எவரும் உடனடியாகக் காணக்கூடும்.—2 தீமோத்தேயு 2:12; எபிரெயர் 3:1; 1 பேதுரு 1:3, 4.

22மனிதவர்க்கத்தின்மேல் ஆளப்போகிற இந்த எதிர்கால உடனாளும் அரசர்களைத் தெரிந்தெடுப்பது காலமெடுக்கும். ஏன்? ஒரு காரணம்: இந்த வாய்ப்பு சகல ஜாதிகளின் ஜனங்களுக்கும் சென்றெட்டும்படி செய்யவேண்டும். இதைப் பற்றிக்கொண்டதாகப் பலர் உரிமைபாராட்டினபோதிலும், சிலரே கடவுளுடைய குமாரனை உண்மையுடன் பின்பற்றுவோராக உண்மையில் நிரூபித்தனர். (மத்தேயு 22:14) உயர்ந்த தராதரங்களை எட்டவேண்டியிருந்தது. கிறிஸ்தவர்கள் பூர்வ இஸ்ரவேலரைப்போல், தனியே ஒரு தேசீய தொகுதியாக வாழாதபோதிலும் அவர்கள் வேறொரு வாழ்க்கை முறையைச் சிபாரிசு செய்யும் அந்நியராகக் கருதப்பட்டு வருகின்றனர். (1 பேதுரு 2:11, 12) அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தின் ஒழுக்கங்கெட்ட மற்றும் ஊழல் பழக்கச் செயல்களுக்கு விலகித் தங்களைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 6:9, 10) அவர்கள் உண்மையில் “கடவுளின் குமாரர்களாக” இருக்க தேசங்களின் போர்களில் கலந்துகொள்ளாமலும், தங்கள் விசுவாசத்துக்காகத் துன்புறுத்தப்படுகையில் பழிக்குப்பழி வாங்காமலும் தங்களைச் “சமாதானமாயிருப்பவர்களாக” நிரூபிக்கவேண்டும். (மத்தேயு 5:9; 26:52; ரோமர் 12:18, 19) “மிருகங்களைப்”போல் பைபிளில் வருணித்துக் காட்டப்படும் அரசியல் ஆட்சிகளை ஆதரிக்க மறுப்பதால் அவர்கள் கடவுளுடைய ஆட்சிக்கு உண்மைத் தவறாமையை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். (வெளிப்படுத்துதல் 20:4, 6) இந்த எல்லாவற்றின் காரணமாகவும், மேலும் இயேசு கிறிஸ்துவின் பெயரை, கடவுள் அபிஷேகஞ் செய்திருக்கும் அரசராக அவர் வகிக்கும் பாகத்தில் அவர்கள் உயர்த்துவதன் காரணமாகவும் அவர்கள் “சகல ஜனங்களாலும் பகைக்கப்படு”வதற்கு ஆளாகியிருக்கிறார்கள். (மத்தேயு 24:9) ஆகவே, கிறிஸ்துவுடன்கூட மனிதவர்க்கத்தின் பரலோக அரசர்களாக இருக்கப்போகிறவர்கள் அவசரமாய்த் தெரிந்தெடுக்கப்படவில்லை.

23தேர்வு இவ்வளவு நீண்ட காலம் எடுத்தது, தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய தொகையாக இருந்ததன் காரணமாக அல்ல. வேத எழுத்துக்களின்படி, கிறிஸ்துவின்கீழ் இருக்கப்போகிற இந்தத் தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் எண்ணிக்கையை 1,44,000 பேருக்கே கடவுள் மட்டுப்படுத்தியிருந்தார். (வெளிப்படுத்துதல் 14:1-3) ஆனால் கடவுள் அவர்களைக் கவனமாய்த் தெரிந்தெடுத்திருக்கிறார். அவர்கள் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” எடுக்கப்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 5:9, 10) அவர்களுக்குள், ஆண்களும் பெண்களும், மனிதவர்க்கத்தின் பல்வேறு வகைப்பட்ட எல்லாப் பிரச்னைகளிலும் பங்கெடுத்திருக்கிற ஆட்களுமாகிய, வாழ்க்கையின் சகல துறைகளிலுமிருந்து வந்திருக்கும் மக்கள் இருக்கின்றனர். புதிய கிறிஸ்தவ சுபாவத்தன்மையைத் தாங்கள் படிப்படியாய்த் தரித்துவந்திருக்கும் போக்கில் அவர்களில் சிலர் எதிர்ப்பட்டு மேற்கொண்டிராத பிரச்னை ஒன்றுமே இல்லை. (எபேசியர் 4:22-24; 1 கொரிந்தியர் 10:13) இதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியடையலாம்! ஏன்? ஏனென்றால், நித்திய ஜீவனை அடைவதற்குரிய கடவுளுடைய ஏற்பாட்டிலிருந்து பயனடைவதற்கு எல்லா வகைப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவி செய்யக்கூடிய அனுதாபமும் இரக்கமுமுள்ள அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் அவர்கள் இருப்பார்களென்ற உறுதியை இது நமக்குக் கொடுக்கிறது.

24இந்த ஏற்பாட்டுக்கு வெளியேயுள்ள மனிதவர்க்கத்தைப் பற்றியதென்ன? இந்தக் காலத்தின்போதெல்லாம், கடவுள் இந்தப் பலவகையான அரசாங்கங்களில் தலையிடவில்லை. மனிதர் தாங்கள் தெரிந்துகொள்ளும் வழியில் செல்ல அவர்களை விட்டார். நிச்சயமாகவே, லட்சக்கணக்கான ஆட்கள் வாழ்ந்து மரித்தனர், இவர்களில் பலர் பைபிளைப் பற்றியோ கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியோ ஒருபோதும் கேள்விப்படவில்லை. எனினும் கடவுள் அவர்களை மறந்துவிடவில்லை. அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டுப் பேசின அந்தக் காலத்துக்காக அவர் ஆயத்தஞ் செய்துகொண்டிருந்தார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நானும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) அப்பொழுது, கடவுளுடைய புதிய ஒழுங்கின் அனுகூலமான நிலைமைகளின்கீழ், அவர்கள் யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்வதற்கு முழு வாய்ப்பு கொடுக்கப்படுவார்கள். இந்த அடிப்படையின்பேரில், அவர்கள், சர்வலோக அரசாதிகாரத்தைப் பற்றிய விவாதத்தில் தங்கள் சொந்த நிலைநிற்கையை எடுக்கக்கூடும். நீதியை நேசிப்பவர்கள் என்றென்றும் வாழும் வாய்ப்பை அடைவார்கள்.

“முடிவு” நெருங்குகையில்

25இந்தப் புதிய ஒழுங்கு வருவதற்கு முன்னால், பரபரப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடந்தேற வேண்டும். உலக விவகாரங்களில் பெரும் சிறப்பு வாய்ந்த ஒரு மாற்றத்தை பைபிள் முன்னறிவித்தது. இயேசு கிறிஸ்து, தம்முடைய சொந்த சீஷர்கள்மேல் மாத்திரமே ஆட்சி செய்ய அல்ல, உலக முழுவதன்மீதும் நடவடிக்கை எடுப்பதற்குரிய அதிகாரத்துடன் அப்பொழுது அரசராக சிங்காசனத்தில் ஏற்றப்படுவார். பரலோகத்தில் பின்வரும் அறிவிப்பு செய்யப்படும்: “உலக அரசாட்சி நமது ஆண்டவருக்கும் அவர் கிறிஸ்துவுக்கும் கைவசமாயிற்று, அவர் யுகாயுகங்களாய் அரசாளுவார்.” (வெளிப்படுத்துதல் 11:15, தி.மொ.) அரசர் முதலாவது “இந்த உலகத்தின் அதிபதி”யாகிய பிசாசான சாத்தானுக்கும், அவனுடைய பேய்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பார். (யோவான் 14:30) இந்தப் பொல்லாத சேனைகள் பரலோகங்களிலிருந்து கீழே எறியப்பட்டு, இந்தப் பூமியின் அருகில் கட்டுப்படுத்தப்படுவர். இதன் விளைவு என்ன?

26தீர்க்கதரிசன விவரிப்பு, பரலோகத்திலிருந்து ஒரு குரல் பின்வருமாறு சொல்வதைப் பதிவு செய்கிறது: “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) முன் ஒருபோதும் இராத வண்ணமான கலவரம் தேசங்களுக்குள் நடைபெறும், ஆனால் முடிவு உடனே வராது.

27இது ஒரு பெரிய பிரித்தல் வேலை செய்வதற்கான காலமாயிருக்கும். சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ், அவரை உண்மையுடன் பின்பற்றுவோர், “ராஜ்யத்தின் இந்த நற்செய்தி” பிரசங்கிப்பதைச் சகல ஜாதிகளுக்கும் ஒரு சாட்சியாயிருப்பதற்காகக் குடியிருக்கப்பட்ட பூமி முழுவதற்குள்ளும் விரைந்து முன்னேறச் செய்வர். எல்லா இடங்களிலுமுள்ள மக்கள், தெய்வீக ஆட்சியினிடம் தங்கள் மனப்பான்மையைத் தெரியச் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவர். (மத்தேயு 24:14; 25:31-33) இதைச் செய்துமுடித்தப்பின், இயேசு விளக்கினபடி “அப்போது முடிவு வரும்.” அது “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவ”மாக இருக்கும். (மத்தேயு 24:21) கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று மனிதர் மறுபடியும் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைக் கண்டறியவும் இந்த உலக அழிவு வருவதற்கு முன்னால் அவருடைய கட்டளைகளுக்கிணங்கத் தங்கள் வாழ்க்கையைச் சரிப்படுத்திக் கொண்டுவரவும் போதிய அக்கறை கொண்டவர்கள் மாத்திரமே தப்பிப்பிழைப்பார்கள்.

28ஆனால் இந்தச் சம்பவங்களெல்லாம் எப்பொழுது நடந்தேற வேண்டும்? அரசராக ஆளுகை செய்யவும் சகல ஜாதிகளின் ஜனங்களைப் பிரிக்கும் வேலையைத் தொடர்ந்து நடத்தவும் கிறிஸ்து எப்பொழுது அதிகாரம் கொடுக்கப்படுகிறார்? இந்த இருபதாம் நூற்றாண்டில் கடவுள் இந்தக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார் என்று உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. கிறிஸ்து ஏற்கெனவே தம்முடைய பரலோக சிங்காசனத்தில் இருக்கிறார், இந்தப் பிரிக்கும் வேலை இப்பொழுது முடியப் போகும் நிலையில் இருக்கிறது. சர்வலோக ஈடற்ற அரசாதிகாரம் சம்பந்தப்பட்ட இந்த விவாதத்தில் யெகோவாவின் சார்பில் உங்களை அடையாளங்காட்டுவதற்கு வெகு குறுகிய காலமே இருக்கிறது. “மிகுந்த உபத்திரவம்” சமீபித்துவிட்டது! சமீப சரித்திரத்தின் துணைகொண்டு பைபிள் தீர்க்கதரிசனத்தை ஆராய்வது இதை உண்மையென்று நிரூபிக்கிறது. இதை நீங்கள் கவனமாய் ஆழ்ந்து ஆராயும்படி நாங்கள் உங்களைத் துரிதப்படுத்துகிறோம்.

[கேள்விகள்]

1. இன்று பலர் கடவுளைப் பற்றி நம்புவதென்ன? ஆனால் அது உண்மையா?

2. தங்களுடைய சொந்தக் குறுகிய வாழ்நாள் இக்காரியத்தில் மக்களின் சிந்தனையை எவ்வாறு பாதிக்கலாம்?

3. யெகோவாவின் நீடித்த வாழ்க்கை, நிலைமைகளை மிகச் சிறந்தக் காலத்தில் கையாளும் அவருடைய திறமையை எவ்வாறு பாதிக்கிறது?

4. யெகோவா அறிவித்திருக்கும் அவருடைய நோக்கம் என்ன? இவ்வாறு அவர் மனிதவர்க்கத்துக்கு என்ன அறிவைக் கொடுத்திருக்கிறார்?

5. சிருஷ்டிப்பின் செயல்களிலிருந்து கடவுளைப் பற்றி நாம் என்ன கற்றறியலாம்?

6. (எ) தம்முடைய சித்தத்தைப் பற்றித் திட்டவட்டமான வெளிப்படுத்தல்களை என்ன வழிவகைகளில் கடவுள் அளித்திருக்கிறார்? (பி) வேறு என்ன வழியிலும் கடவுள் தம்முடைய நியமங்களையும் பண்புகளையும் மனிதனுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்?

7. (எ) அநீதியைத் தாம் என்றென்றும் பொறுத்துக் கொண்டிருப்பதில்லையென கடவுள் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறார்? (பி) இத்தகைய நடத்தையைக் கடவுள் கருதும் முறையை அறிந்துகொள்கையில் நாம் என்ன செய்யவேண்டும்?

8. கடவுள் அழிவைக் கொண்டுவருகையில் தப்பிப்பிழைப்போர் உண்டா? உதாரணத்துடன் விளக்குங்கள்.

9. பூர்வ இஸ்ரவேலரை யெகோவா கையாண்ட முறையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

10. அவர் பொறுமையாயிருக்கும் இதைத் தவிர, கடவுளைப் பற்றி வேறு எதையும் பைபிளின் இந்த விவரப் பதிவுகள் நமக்குக் கற்பிக்கின்றன?

11. (எ) எந்த நோக்கத்தைப் பற்றிய அறிவிப்பை யெகோவா ஏதேனில் செய்தார்? (பி) அது முதற்கொண்டு கடவுள் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

12, 13. (எ) கடவுள் ஏன் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்டு அந்த ஒரே ஜனத்துக்கு மாத்திரமே தம்முடைய சட்டங்களைக் கொடுத்தார்? (பி) ஆகவே, இஸ்ரவேலின் சரித்திரத்திலிருந்தும் மற்ற ஜாதிகளின் சரித்திரத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?

14. (எ) இஸ்ரவேலரல்லாத ஜாதிகளின் விவகாரங்களில் தாம் தலையிடாததனால் கடவுள் அவர்களுக்கு அநீதி செய்தாரா? (பி) எனினும், கடவுளுடைய தகுதியற்றத் தயவிலிருந்து அவர்கள் எவ்வாறு பலன் அடைந்தார்கள்?

15. இந்த ஜாதிகளின் ஜனங்களுடைய முடிவான ஆசீர்வாதத்துக்காக என்ன ஏற்பாடுகளைக் கடவுள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்?

16. (எ) இக்காலமெல்லாம் இந்த வித்துவைப் பற்றிய வாக்கின் சம்பந்தமாய்க் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? (பி) யார் வாக்குப் பண்ணப்பட்ட அந்த வித்துவாக நிரூபித்தார்?

17. இயேசுவின் மூலம் கடவுள் என்ன கொண்டுவரவிருந்தார்? அவருடைய பிறப்பின் சமயத்தில் இது எவ்வாறு அறிவுறுத்தப்பட்டது?

18. (எ) பூமியில் அவருடைய அனுபவங்கள், அரசரும் ஆசாரியருமான வேலை பொறுப்புகளுக்கு அவரை எவ்வகையில் ஆயத்தப்படுத்தின? (பி) சமாதானத்தை அடைவதன்பேரில் அவருடைய மரணம் என்ன பலன் தந்தது?

19. (எ) இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்துக்கு ஏறிச் சென்றதை நாம் எவ்வாறு அறிவோம்? (பி) தாம் பரலோகத்துக்குத் திரும்பிச் சென்ற பின்பு தம்முடைய அரசாதிகாரத்தைக் குறித்து அவர் என்ன செய்தார்?

20. பூமியில் தம்முடைய சீஷர்களுக்கு என்ன புதிய வேலையை இயேசு தொடங்கி வைத்தார்?

21. உலக மதமாற்றத்துக்குப் பதிலாக, அந்தச் சாட்சிவேலையின்மூலம் கடவுள் என்ன நிறைவேற்றிக்கொண்டிருந்தார்?

22. (எ) இந்தப் பரலோக ராஜ்ய எதிர்கால சுதந்தரவாளிகளில் என்ன பண்புகளைக் கடவுள் எதிர்பார்த்தார்? (பி) ஆகவே, இந்தத் தெரிவு அவசரப்பட்டு செய்யப்பட்டதா?

23. (எ) கிறிஸ்துவுடன் அந்தப் பரலோக நிர்வாகக் குழுவில் எத்தனைபேர் இருப்பர்? (பி) இவர்கள் யாருக்குள்ளிருந்து தெரிந்தெடுக்கப்படுகின்றனர்? ஏன்?

24. இந்தக் காலத்தினூடே வாழ்ந்து மரித்தவர்களும், அவர்களில் பலர் பைபிளைப் பற்றி அறியாதவர்களுமாயிருந்த லட்சக்கணக்கான மற்ற ஆட்களைப் பற்றியதென்ன?

25, 26. (எ) உரிய காலத்தில் கிறிஸ்துவுக்கு மேலும் என்ன அதிகாரம் கொடுக்கப்படும்? அவர் யாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்? (பி) இது பூமியில் நிலைமைகளை எவ்வாறு பாதிக்கும்?

27. (எ) “முடிவு” நெருங்கி வருகையில், எந்தப் பெரிய பிரிக்கும் வேலை நடைபெறும்? எவ்வாறு? (பி) முன்னறிவிக்கப்பட்ட இந்த உலக அழிவு எவ்வளவு பெரிதாயிருக்கும்?

28. (எ) கிறிஸ்து சிங்காசனத்திலேற்றப்படுவதும் சகல ஜாதிகளின் ஜனங்களைப் பிரிப்பதும் எப்பொழுது நடைபெறுகின்றன? (பி) ஆகவே, தனிப்பட நீங்கள் என்ன செய்வது மிக அவசரம்?

[பக்கம் 62-ன் படம்]

பூமியின் புதிய அரசர், மனிதர் மத்தியில் வாழ்ந்ததன்மூலம், மனிதவர்க்கத்தை மேலும் நன்றாய்ப் புரிந்துகொண்டார்