Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தற்புணர்ச்சியும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும்

தற்புணர்ச்சியும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும்

அதிகாரம் 5

தற்புணர்ச்சியும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும்

வளரிளமை பருவத்தின்போது பையன்களின் உடலும் சிறு பெண்களின் உடலும், அவர்கள் பிள்ளைகளைத் தோற்றுவிக்க அல்லது அவர்களைப் பிறப்பிக்கக் கூடியதற்கு ஏதுவாக எப்படி வளருகின்றனவென்பது தனிச் சிறப்பான ஒரு காரியமாய் இருக்கிறதல்லவா? உன் உடல் சார்ந்த இந்த மாற்றத்தோடுகூட, எதிர் பாலினத்தவரிடமாக உன் மனப்பான்மையிலும் சாதாரணமாய் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. ஒரு கவர்ச்சிகரம் வளருகிறது, அநேகமாய் பையன்கள் பெண்களிடமாகவும் பெண்கள் பையன்களிடமாகவும் ஒரு கூர்ந்த அக்கறையை வளர்க்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் விரைவாய் மாறிக்கொண்டிருக்கும் உன் சொந்த உடலைப் பற்றி உனக்கு ஒரு வகையான ஆச்சரிய உணர்ச்சியும், அறிய ஆர்வங்கொள்ளும் ஓர் ஆவலும் இருக்கலாம். இந்த ஆவலை நீ எப்படித் திருப்தி செய்யவேண்டும்? உன் இன உறுப்புக்களைச் சோதனை செய்து பார்க்க வேண்டுமா? கிளர்ச்சி உச்ச நிலைக்கு எழும் வரையில் ஏதோ ஒரு வகையில் அவற்றை உரசித் தேய்ப்பதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

2இந்தப் பழக்கம் தற்புணர்ச்சி என்றழைக்கப்படுகிறது. இது வெகு சாதாரணமாய் இருக்கிறது. இந்தக் காரியத்தின் பேரில் ஓர் அதிகாரத்துவம் பின்வருமாறு சொல்லுகிறது: “பருவ வயதுகளிலுள்ள பையன்களும் இளைஞருமானவரில் குறைந்தபட்சம் தொண்ணூற்றைந்து சதவீதமானவர்கள் தற்புணர்ச்சிக் காலப்பகுதிகளை வெவ்வேறுபட்ட நீடிப்புகளில் கடந்து செல்லுகின்றனர் . . . என்று எங்களிடமிருக்கும் ஒவ்வொரு கவனமான புள்ளி விவர ஆராய்ச்சியும் தெளிவாகக் காட்டுகிறது.” பெண்களைக் குறித்ததில் “நாற்பது முதல் ஐம்பது சதவீதமானவர்கள் உண்மையில் தற்புணர்ச்சி செய்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர்,” என்று இந்தத் தகவல்மூலம் சொல்லுகிறது. இந்த எண்ணிக்கைகள் “இயல்பான நிலையை” நிரூபிக்கின்றன, “நல்ல உடல் நிலையிலுள்ள இளைஞனின் காரியத்தில் தற்புணர்ச்சி இல்லாதிருப்பதானது கவலைக்குரிய ஒரு காரியமாகும்,” என்று சிலர் சொல்லுகின்றனர்.

3இப்பொழுது நீ என்ன நினைக்கிறாய்? இன்றைய உலகத்தில் தற்புணர்ச்சி வெகு சாதாரண காரியமாக இருப்பதானது இதை உடலின் இயல்பான இயக்கமாக்குகிறது என்பதை நீயும் ஒத்துக் கொள்கிறாயா? பொய்ச் சொல்வதும் திருடுவதுங்கூட இன்று சாதாரண காரியங்களாக இருக்கின்றன. இவ்வாறு இருப்பது இவற்றை இயல்பான சரியான காரியங்களாக்குகிறது என்று நீ சொல்லமாட்டாய் அல்லவா? “சாதாரண” ஜலதோஷம் உலகமெங்கும் ஏற்படுகிறது, இதனால் உனக்கும் அது வேண்டும் என்று அர்த்தங்கொள்ளுகிறதில்லை அல்லவா? அப்படியானால் தற்புணர்ச்சி தீங்கற்றது என்று சொல்லிக் கொள்வதைப் பற்றியதென்ன?

4உடல் சம்பந்தப்பட்ட நோக்கு நிலையில் எப்போதாவது ஈடுபடும் தற்புணர்ச்சி தீங்கற்றதென்று மருத்துவர் பெரும்பான்மையர் சொல்லுகின்றனர். உளமருத்துவர் பெரும்பான்மையர் சொல்வதுபோல், இந்தத் தற்புணர்ச்சி பழக்கத்தில் ஈடுபடுபவருக்கு மனம் மற்றும் உணர்ச்சி வேகம் சம்பந்தப்பட்ட தொந்தரவை உண்டுபண்ணுகிற குற்ற உணர்ச்சிகள் உண்டாயிருந்தால் மாத்திரமே சேதம் ஏற்படுகிறது, முறையாக இவை உடல் சம்பந்தப்பட்ட நிலைகுலைவை உண்டுபண்ணுகின்றன என்று இவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் மருத்துவர்களும் உளமருத்துவர்களும் அபூரண மனிதர், பிழை செய்யக்கூடியவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் மாறுகின்றன. என்றபோதிலும், இளைஞர் உதவிக்காக நோக்கக்கூடிய, நிலையானது, பிழையோ தவறான கருத்தோ இல்லாததுமான ஓர் ஆலோசனை ஊற்றுமூலம் இருக்கிறது. அதுவே கடவுளுடைய வார்த்தை. இன்னும் கொஞ்சம் நீடிக்கும் வாழ்க்கை அல்ல, கடவுளுடைய தயவில் நித்திய வாழ்க்கையை நாம் விரும்புகிறோமென்றால், நாம் அவருடைய ஞானத்தையும் ஆலோசனையையும் தேடவேண்டும். நமக்காகவும் நம்முடைய சந்தோஷத்திற்காகவும் மனிதர் ஒருபோதும் செய்ய முடியாதவற்றை அவர் செய்யக்கூடும்.

மிக உயர்ந்த ஊற்றுமூலத்தின் நோக்கு

5அப்படியானால், உண்மையான கேள்வியானது, தற்புணர்ச்சி எவ்வளவு உடல் சம்பந்த தீங்கை விளைவிக்கக்கூடும் என்பதல்ல, எவ்வளவு ஆவிக்குரிய தீங்கை விளைவிக்கிறது என்பதே. “தற்புணர்ச்சி” என்ற வார்த்தை பைபிளில் காணப்படுகிறதில்லை என்பது மெய்யே. கொலோசெயர் 3:5-ல், தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலனாகிய பவுலின் ஆலோசனையிலிருந்து நீ என்ன விளங்கிக் கொள்கிறாய்? கடவுளுடைய அங்கீகாரத்தை இழந்துபோக விரும்பாதவர்களுக்கு அவன் பின்வருமாறு சொல்லுகிறான்: “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, . . . பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்.” [மரத்துப் போகச் செய்யுங்கள், NW. (கிளர்ச்சியூட்டாதேயுங்கள்)] விபசாரத்திற்கு மாறாக, தற்புணர்ச்சியானது ஒருவன் தான் தானே தனியே செய்துகொள்ளும் ஒன்றாய் இருக்கிறது. என்றாலும், இது அதை அசுத்தமாயிருப்பதிலிருந்து காத்து வைக்குமா? அல்லது இதுவுங்கூட ‘இன சம்பந்த நாட்டத்திற்குக்’ கீழ்ப்பட்டு அதனால் ஆட்கொள்ளப்படுதலாக இருக்கிறதா?

6பின்னும், “சகலவித அசுத்தங்களையும் பேராசையோடு நடப்பிக்கும்படி தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்ட”வர்களைக் குறித்து இந்த அப்போஸ்தலன் எழுதுகிறான். (எபேசியர் 4:19, தி.மொ.) முந்தின பத்தியில் எடுத்துக் குறிப்பிடப்பட்ட, கொலோசெயருக்கு எழுதின தன் கடிதத்தில், பவுல் “பொருளாசை”யைக் குறிப்பிட்டான், இந்த வசனத்தில், “பேராசை”யைக் குறிப்பிடுகிறான். மெய்யாகவே தற்புணர்ச்சியானது விரும்பத்தகாத இந்த இரண்டு துர்ப்பண்புகளையும் வெளிப்படுத்துகிறது. எப்படி? நேர்மையாய் ஒருவனுக்கு உரியதாய் இராத ஒன்றை விரும்பும் அந்தத் தகாத ஆவலை வெளிப்படுத்துவதாய் இது இருக்கிறது. பால் சம்பந்த ஆசைகளைத் திருப்தி செய்வதற்கான ஏற்பாடாகக் கடவுள் விவாகத்தைத் திட்டம் செய்தார். ஆனால் தற்புணர்ச்சி பழக்கத்தில் ஈடுபடுகிற அந்த ஆள், செயல் முறையளவில், விலையைக் கொடுக்காமலேயே அந்தத் திருப்தியை அடைய முயலுகிறான். இந்த விலையானது விவாகத்தோடு செல்லுகிற உத்தரவாதங்களை ஏற்பதும் தாங்குவதுமாகும். காம உணர்ச்சியால் “வேகிற”வர்களுக்கு அறிவுரை கொடுக்கையில் இந்த அப்போஸ்தலன், தற்புணர்ச்சியின் மூலம் அவ்வுணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும்படி அவர்களுக்குச் சொல்லவில்லை, ஆனால் கடவுளுடைய ஏற்பாடாகிய விவாகத்தின் மூலமே அவ்வாறு செய்யும்படி கூறினான்.—1 கொரிந்தியர் 7:2, 9.

7உண்மையில், தற்புணர்ச்சியானது, விவாகத்தில் உன் எதிர்கால சந்தோஷத்திற்கு இடருண்டாக்கக்கூடும். ஓர் ஆள் (ஆண் அல்லது பெண்) தன்னுடைய காம உணர்ச்சிகளைத் தற்புணர்ச்சியின் மூலம் திருப்தி செய்து கொள்ளும் பழக்கத்தை உடையவனாக[ளாக] இருக்கிறான்[ள்] என்றால், இது தன்னுடைய சொந்த இன்பத்தையும் திருப்தியையும் பற்றி மாத்திரமே சிந்திக்கும் இந்தப் பழக்கத்தை அவனில் அல்லது அவளில் வளர்க்கிறது. ஆனால் விவாகத்திலோ, முக்கியமாய் ஆணின் பங்கில், அந்த மற்ற ஆளின் இன்பத்திலும் திருப்தியிலுங்கூட அக்கறை காட்டுவது அவசியமாய் இருக்கிறது. மற்றபடி, விவாக உறவுகள் படிப்படியாய்க் கேடடைந்து துக்கமும் வெறுப்பும் உண்டாகக்கூடும். கணவன் தன் சொந்த திருப்தியை மாத்திரமே நினைவில் கொண்டு தன் மனைவியின் தேவைகளை மதியாதிருப்பதான இந்தச் சூழ்நிலைமை விவாகத்தில் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாய் இருக்கிறது. இதில் பேரளவு விவாகத்திற்கு முன் ஈடுபட்ட தற்புணர்ச்சி பழக்கத்திலிருந்து தோன்றினதாய் இருக்கிறது.

8“என்றாலும், ஒருவன் மிக இளைஞனாய் இருப்பதால் விவாகம் செய்வது நல்லதல்ல என்ற நிலையில் இருந்தால் என்ன செய்வது? விவாகத்தைத் தள்ளி வைக்கையில், வேசித்தனம் அல்லது ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி போன்றவற்றில் ஈடுபட்டு மிக மோசமாய்க் கடவுளுடைய சட்டத்தை மீறாதபடி தற்புணர்ச்சி அவனைப் பாதுகாக்குமல்லவா?” என்று சிலர் கேட்கலாம். பாதுகாப்பதாக ஒருவேளை தோன்றலாம். ஆனால் இது நல்ல நியாயமான விவாதமாகுமா? இல்லை. இப்படிப்பட்ட பழக்கங்களில் ஈடுபடாதபடி ஒருவனைப் பாதுகாக்கக்கூடிய காரியங்களாகிய நல்மனச்சாட்சியையும், நேர்மையை நேசிப்பதையும், இந்தத் தற்புணர்ச்சி கெடுத்து பலவீனப்படுத்துகிறது. போதை மருந்தின் துர்ப்பழக்கத்தைப்போல், தற்புணர்ச்சி பழக்கமும், ஒருவன் அல்லது ஒருத்தி ஏதோ வகையான அழுத்தத்தை உணர்ந்து, இப்படிப்பட்ட அழுத்தத்தை உண்டுபண்ணும் பிரச்னைகளை எதிர்ப்பட்டு மேற்கொள்ள மனவுறுதி இல்லாத ஒவ்வொரு சமயமும் அவன் அல்லது அவள் நாடித் தேடுகிற ஒன்றாகிவிடக்கூடும். ஆகையால் இது ஒரு நச்சுச் சுழலை உண்டுபண்ணி, முடிவில் ஓர் ஆளை அதன் அடிமையாக்கிவிடக்கூடும். ஆனால், நாம் நம்முடைய உடலை அடக்கியாள வேண்டும், அது நம்மை அடக்கியாள விடக்கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.

ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிப் பழக்கங்கள்

9தற்புணர்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் பலவீனமாய் பால் சம்பந்தப்பட்ட ஆசைகளுக்கு இடங்கொடுத்து வருவதானது, வேசித்தனத்தில்—அல்லது ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் ஈடுபடும்படி தூண்டுவதற்கேதுவான சந்தர்ப்ப நிலையை எதிர்ப்படுகையில் அதை எதிர்த்து நிற்க நிச்சயமாகவே உனக்குப் பலத்தை அளிக்காது. இதற்கு நேர் எதிர்மாறாக, அது தவறான சிந்தனையையும் தவறான ஆசையையும் வளர்த்து வருகிறது. உண்மையில், தற்புணர்ச்சியானது, ஒத்தபாலினத்தவர் புணர்ச்சிக்கு வழி நடத்தக்கூடும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அந்த ஆள், தன்னுடைய தனிமையான தற்புணர்ச்சியில் திருப்தியற்றுப்போய், இருவராய் பால் புணர்ச்சியில் ஈடுபடுவதற்கு ஒரு தோழனைத் தேடுகிறான்.

10நீ நினைப்பதைப் பார்க்கிலும் மிக அடிக்கடி இவ்விதம் ஏற்படுகிறது. பலர் எண்ணுவதற்கு எதிர்மாறாக ஒத்தபாலினத்தவர் புணர்ச்சி பழக்கத்தார் அவ்வாறு பிறந்திருக்கவில்லை, இந்த நடத்தை கற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அநேகமாய் ஒருவன் தான் வெகு இளைஞனாய் இருக்கையில் மற்றொருவனுடைய பால் உறுப்புக்களைத் தொட்டு விளையாடுவதன் மூலமும் பின்பு ஒத்த பாலினத்தவர் செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் தொடங்குகிறது. ஓர் இளைஞன் பின்வருமாறு சொல்லுகிறான்:

11“நான் சிறுவனாய் இருக்கையில் எனக்கு பெற்றோருடைய வழி நடத்துதல் அதிகம் இருக்கவில்லை. நான் என் சொந்தப் போக்கில் செல்லும்படியும் என்னுடைய ‘சொந்த காரியத்தைச்’ செய்து கொள்ளும்படியும் அனுமதிக்கப்பட்டேன். நான் ஏறக்குறைய எட்டு வயதாகத்தானே இருந்தபோது என்னுடைய மூத்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்னை ஒத்த பாலினத்தவர் செயல்களுக்கு அறிமுகப்படுத்தினர். இவை இன்பம் தருவதாக நான் கண்டேன், ஆகவே அவர்களோடும் பின்னால் மற்றவர்களோடும் இந்தப் பழக்கத்தில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். சீக்கிரத்தில் இது ஏறக்குறைய அனுதின நடவடிக்கையாகி விட்டது, முதன் முதல், தவறு எதுவும் செய்து கொண்டிருப்பதாக நான் உணரவில்லை. ஒழுக்க நடத்தையைக் குறித்து என் பெற்றோர் எனக்கு எவ்வித கட்டளையும் கொடுத்திருக்கவில்லை, நான் அவர்களிடம் எதையும் ஒருபோதும் தெரிவித்ததுமில்லை.

12“அப்பொழுது நாங்கள் ஒரு மத்திய அமெரிக்க நாட்டில் வசித்து வந்தோம். பின்னால் நாங்கள் நியு யார்க் நகரத்திற்கு மாறிச் சென்றோம், அங்கே நான் உயர்தரப் பள்ளி படிப்பை முடித்தேன். ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிப் பழக்கங்களிலும் நான் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். அந்தப் பள்ளிகளும் நகரமும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியில் ஈடுபடுகிறவர்களால் நிரம்பியிருந்தது, ஆகவே அங்கே ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. நான் பெரியவனாக வளர்ந்தபோது, நான் செய்வது இயற்கைக்கு மாறானது, மேலும் சரியல்ல என்று நான் உணர்ந்தேன். என்றாலும் நான் அதை விரும்பினதால் அதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். இந்தப் பால் சம்பந்தச் செயல்கள் எனக்கு மிகவும் கவர்ச்சிகரமாகிவிட்டது.”

13இந்த இளைஞன் இந்தப் பழக்கங்களில் “மாட்டிக் கொண்டான்,” மிகுந்த முயற்சிக்குப் பின்பே அவன் இவற்றை அடக்கி மேற்கொள்ள முடிந்தது. மாறும்படி அவனைத் தூண்டிய உள்நோக்கம் என்ன? யெகோவா தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆவலேயாகும். ஒத்த பாலினத்தவர் செயல்களைக் கடவுள் “இயற்கைக்கு மாறானதாகக்” கருதுகிறார் என்றும், அவர் அதை முற்றிலும் கண்டனம் பண்ணுகிறார் என்றும் அவன் விளங்கிக் கொண்டபோது, இந்தப் பழக்கங்களை அடக்கி வெற்றிக் கொள்ளும் வரையில் இந்த இளைஞன்போராடினான். இந்தக் காரியத்தின் பேரில் கடவுளுடைய வார்த்தை வெகு தெளிவாய் இருக்கிறது, அது சொல்வதாவது: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.

தன்னடக்கத்தால் வெல்லுதல்

14நீ எதைப் பற்றிச் சிந்தித்துக் கெண்டிருக்கிறாயோ அது நீ உணரும் முறையையும் நீ செய்யும் காரியங்களையும் பேரளவாய்ப் பாதிக்கிறது. ஆகவே, உனக்கு உண்மையில் என்ன வேண்டும்? பெரும்பான்மையான நேரம் பால் சம்பந்த ஆசையால் கொந்தளிப்பை உணர்ந்து கொண்டிருக்கவும் பழக்கமாய்த் தற்புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவும், ஒருவேளை ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி பழக்கங்களுக்குள் வழுவி விழுந்து கொண்டிருக்கவும் நீ விரும்புகிறாயா? உன் மனம் பால் சம்பந்த காரியங்களில் ஊன்றியிருக்கும்படி நீ இடங்கொடுப்பாயானால் இது நேரிடக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட பால் சம்பந்த தூண்டுதல், வாழ்க்கையில் நீ மகிழ்ச்சி அனுபவிப்பதற்குள்ளும் பயனுள்ள காரியங்களை நீ உண்மையில் நிறைவேற்றுவதற்குள்ளும் தலையிட்டுக் கெடுக்காதபடி தடுத்து வைக்க நீ விரும்புகிறாயென்றால், அப்பொழுது தன்னடக்கத்தைப் பிரயோகித்து உன் மனதை மற்றக் காரியங்களுக்குத் திருப்பு.

15படங்களிலோ, வாசிக்கும் புத்தகங்களிலோ, மற்றவற்றிலோ பால் சம்பந்த தூண்டுதலூட்டும் காரியங்கள் வருகிறதென்றால், பலவீனமாய் அவற்றிற்கு இடங்கொடுத்துக் கீழ்ப்பட்டு விடாதே. இப்படிப்பட்ட காரியங்களில் உன் மனம் ஊன்றியிருக்க விடுவாயானால் அல்லது இவற்றைச் சுற்றியே உன் பேச்சு சுழன்று கொண்டிருக்கவிடுவாயானால் அப்பொழுது அதன் விளைவுகளாகிய மன அமைதி கெடுக்கப்பட்ட உணர்ச்சியையும், உனக்குள் பாலழுத்தம் படிப்படியாய் மிகுதியாகிக் கொண்டு வருவதையும் அனுபவிப்பாய். இது ஏனென்றால் இப்படிப்பட்ட காரியங்களை நீ எவ்வளவு அதிக நேரம் பார்க்கிறாயோ அல்லது பேசிக் கொண்டிருக்கிறாயோ அவ்வளவு அதிக ஆழமாய் உன் இருதயம் அதில் தன்னை உட்படுத்துகிறது. மேலும் உன் இருதயமே உன்னைச் செயல்படும்படி தூண்டி இயக்குவதில் முக்கிய காரணமாயிருக்கிறது.

16ஆனால் சாதாரண சூழ் நிலைமைகளிலுங்கூட உனக்குள் காமம் படிப்படியாய் எழும்பிக் கொண்டிருப்பதாக நீ உணருகிறாய் என்றால் எப்படி? இதை நீ எப்படித் தணித்துக்கொள்ளக்கூடும்? தற்புணர்ச்சியை நாடுவதன் மூலமல்ல, உன் மனதையும் இருதயத்தையும் உடலையும் மற்றொரு போக்கில் செலுத்த வைப்பதன் மூலமேயாகும். நீ ஏதாவது ஒரு வேலையைச் செய்யலாம், உடல் பயிற்சியில் ஈடுபடலாம், ஒரு விளையாட்டை விளையாடலாம் அல்லது உலாவ செல்லலாம். நீ மரியாதையோடு மதிக்கிற யாராவது ஒருவரிடம் பேச தெரிந்து கொள்வது நல்லது, அவசியமானால் அப்படிப்பட்ட ஒருவரிடம் தொலைபேசியின் மூலமாயாவது பேசு. பைபிள் அல்லது பைபிளை விளக்குகிற பிரசுரங்களை—சப்தமாக—வாசிப்பது, மிகச் சிறந்த உதவிகளில் ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தப் பிரச்னையை ஜெபத்தில் உன்னுடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவா தேவனிடம் கொண்டு செல்.

17நிச்சயமாகவே, பால் தூண்டுதலுணர்ச்சியைத் தவிர்க்க அல்லது தணிக்க உதவி செய்யும்படி ஒருவன் செய்யக்கூடிய எளிதும், நல்லறிவுமுள்ள தன்மை வாய்ந்த கூடுதலான இன்னும் பல காரியங்களும் இருக்கின்றன. மற்றவர்களோடு இருப்பது—இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாகவே நற்பண்புகளுள்ள ஆட்களாக இருந்தால்—பாதுகாப்பாக இருக்கிறது. நீ ஓர் அறையில் தனியாகத் தூங்குகையில் இரவில் இவ்வாறு செய்ய முக்கியமாய்த் தூண்டப்படுவதாக நீ உணர்ந்தால், உன்னுடைய குடும்பத்திலுள்ள மற்றொருவருடன் அறையைப் பகிர்ந்து கொள்ள நீ ஒழுங்கு செய்து கொள்ளக்கூடும். மேலும், மல்லாக்காக அல்லது முகங்குப்புற படுப்பதைப் பார்க்கிலும் ஒரு பக்கமாய்ச் சரிந்து படுப்பதும் உதவியாய் இருப்பதாக நீ காணக்கூடும்.

18உதவியாய் இருக்கக்கூடிய மற்றொரு காரியமானது உன்னுடைய உடை அனாவசியமாக பால் உறுப்புகளின்மேல் உராய்ந்து கொண்டிராதபடி பார்த்துக் கொள்வதாகும். தூங்கப்போவதற்கு முன்பாக நீ வாசிப்பது அல்லது பேசுவது கொந்தளிப்பை அல்ல, அமைதியான பாதிப்பை உண்டுபண்ணுவதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள முயற்சி செய். இந்தச் சமயத்தில் நீ சாப்பிடுவதைப் பற்றியதிலுங்கூட அப்படியிருக்க வேண்டும். படுக்கைக்குப் போவதற்கு முன்பாகத் தாங்கள் உட்கொள்ளும் உணவு, பானம் ஆகியவற்றின் அளவை மட்டுப்படுத்திக் கொண்டால், தாங்கள் நன்றாக அயர்ந்து தூங்குவதாகவும் பால் சம்பந்தமாய்த் தூண்டப்பட அவ்வளவாய் மனஞ்சாய்கிறவர்களாக இருப்பதில்லை என்றும் கண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட வண்ணமாய் முக்கிமாய் இருப்பதானது ஆண்பால் அல்லது பெண்பாலுக்கடுத்த நல்ல சுகாதாரமாகும். சுத்தமில்லாமல் இருப்பதானது இன உறுப்புகளில் நமைச்சல் உண்டாக்கி ஒருவருடைய கவனத்தை அதனிடமாக இழுக்கக்கூடும். இவ்விதத் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பற்றிய காரியங்களைக் குறித்து உன் பெற்றோரைக் கேட்டு நீ தெரிந்து கொள்ளலாம்.

19சரியான சுகாதாரமானது, உன்னுடைய பால் உறுப்புகளை ஒருவாறு கையாளுவதை அவசியப்படுத்தும், இது அவற்றைத் தவறான பிரயோகம் செய்வதற்குச் சோதனையாய் இருக்குமென்று ஒருவன் உணரக்கூடும். ஆனால் உன் உள்நோக்கம் சரியாக இருப்பதனால்—அதாவது இன தூண்டுதலைத் தவிர்ப்பதன் நோக்கத்தோடு செய்யப்படுவதனால்—அப்படிப்பட்ட கவனிப்பு இந்த உறுப்புகளை அதிக ஆரோக்கியகரமான முறையில் நோக்கும்படி உனக்கு உதவி செய்வதாக நீ காணக்கூடும். உன்னை முற்றிலுமாய் வசப்படுத்தி உன் முழு வாழ்க்கையையும் ‘அடக்கியாளும்படி’ அவை ஒருபோதும் அமைக்கப்படவில்லை என்பதை நீ மதித்துணருவாய்.

20தற்புணர்ச்சி பழக்கத்தைப் போக்க இப்பொழுது நீ போராடிக் கொண்டிருக்கிறாய் என்றால், பின்வருவதை நினைவில் வை: நிச்சயமாகவே, நீயே இந்தப் பிரச்னையை எதிர்ப்பட்டிருக்கிற முதல் ஆள் அல்லது ஒரே ஆள் அல்ல. தற்புணர்ச்சி பழக்கத்தை விட்டு விடுவது உனக்கு ஒரு கடினமான போராட்டமாக இருப்பதாய் நீ காண்கிற போதிலும், யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் உன்னைக் கைவிட்டார்கள் என்று ஒருபோதும் உணராதே. அதை அடக்கி மேற்கொள்ள நீ மனப்பூர்வமாய்த் தொடர்ந்து உழைத்து வருவாயானால், வெற்றியடைவதற்கு ஏதுவாய் உனக்குத் தேவையான பலத்தைப் படிப்படியாய்க் கட்டியமைத்து வரும்படி அவர்கள் உனக்குத் தயவாயும் பொறுமையாயும் உதவி செய்வார்கள்.

[கேள்விகள்]

1-4. (எ) தற்புணர்ச்சி என்றால் என்ன? (பி) இந்தப் பழக்கம் சாதாரணமாய் இருப்பதானது அதை ஏன் சரியான காரியமாக்கி விடுகிறதில்லை? (சி) இந்தக் காரியத்தைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதில் நாம் ஏன் அக்கறையுள்ளவர்களாக இருக்கவேண்டும்?

5, 6. (எ) கொலோசெயர் 3:5-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை தற்புணர்ச்சி சம்பந்தமாக எப்படிப் பொருந்துகிறது? (பி) பைபிள் ஏன் இந்தப் பழக்கத்தைப் “பொருளாசை”யுடனும் “பேராசை”யுடனும் சம்பந்தப்படுத்துகிறது?

7, 8. (எ) தற்புணர்ச்சி ஒரு பழக்கமாகிவிட்டால் ஒருவனுடைய சந்தோஷமான விவாக எதிர்பார்ப்புகளை அது எப்படிப் பாதிக்கக்கூடும்? (பி) கடவுளுடைய சட்டத்தை மிக மோசமாய் மீறுவதைத் தவிர்ப்பதற்கு ஒரு வழிவகையாகத் தற்புணர்ச்சியைக் கருதிவிடுவது ஏன் தவறாகும்?

9-13. (எ) தற்புணர்ச்சி பழக்கமானது சில சமயங்களில் எப்படி ஒருவனை ஒத்தபாலினத்தவர் புணர்ச்சி பழக்கங்களில் எளிதில் ஈடுபடக்கூடியவனாக்கிவிடக்கூடும்? ஒத்தபாலினத்தவர் புணர்ச்சி இயல்போடு எவனாவது பிறந்திருக்கிறானா? (பி) இப்படிப்பட்ட பழக்கங்களைக் கடவுள் எப்படிக் கருதுகிறார்? (சி) இவ்வித பழக்கங்களிலிருந்து ஒருவன் தன்னை விடுதலை செய்து கொள்ளக்கூடுமா? (ரோமர் 1:24-27; லேவியராகமம் 18:22, 23; 1 கொரிந்தியர் 6:9-11)

14-16. (எ) பால் சம்பந்த ஆசைகளை அடக்கி வைத்து வருவதற்கு என்ன செய்யலாம்? (பிலிப்பியர் 4:8; 1 தெசலோனிக்கேயர் 4:3-5) (பி) பாலழுத்த உணர்ச்சி உன்னில் படிப்படியாய் எழும்பிக்கொண்டு வருவதை நீ உணருகிறாயென்றால் அதைத் தணிக்க என்ன செய்யலாம்? (சங்கீதம் 1:1, 2; 63:6, 7)

17-20. (எ) தூங்குவது, சாப்பிடுவது, சுகாதாரம் ஆகியவற்றின் சம்பந்தமாக ஒருவன் தன் பழக்கங்களைச் சரிசெய்து அமைத்துக்கொள்வது எப்படி உதவியாய் இருக்கும்? (பி) சரியானதைச் செய்வது ஒருவனுக்குக் கடினமான போராட்டமாக இருக்கிறபோதிலும்கூட, தன்னுடைய நிலைமை நம்பிக்கையற்றதென்பதாக அவன் ஏன் உணரக்கூடாது? (சங்கீதம் 103:13, 14)

[பக்கம் 39-ன் சிறு குறிப்பு]

ஒத்த பாலினத்துப் புணர்ச்சிக்காரர் அவ்விதமாக பிறந்திருக்கிறார்களா, அல்லது அவர்களுடைய நடத்தை கற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா?

[பக்கம் 41-ன் படம்]

நீங்கள் என்ன வாசிக்கிறீர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றா?