Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பள்ளியில் ஏன் படிக்க வேண்டும்?

பள்ளியில் ஏன் படிக்க வேண்டும்?

அதிகாரம் 11

பள்ளியில் ஏன் படிக்க வேண்டும்?

நீ ஏன் பள்ளிக்குப் போகிறாய்? நீ வாழும் இடத்தில் ஒருவேளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை நீ பள்ளிக்குப் போக வேண்டியதாய் இருக்கலாம்; இது கட்டாயமான காரியமாய் இருக்கலாம். அல்லது ஒருவேளை நீ இன்னும் வயதுவராத சிறுவனாய் அல்லது சிறுமியாய் இருப்பதனால் பெற்றோரின் கட்டளையின்படி செய்யவேண்டியவனாய் இருக்கிறாய்.

2என்றபோதிலும், நீ பள்ளியில் இருப்பதற்கு வேறு ஏதாவது காரணங்களை நீ தானே காண்கிறாயா? பள்ளியில் இருக்கையில் கருத்தூன்றி கவனமாய்ப் படிப்பதிலிருந்து அல்லது வீட்டில் செய்யும்படி கொடுக்கப்படும் வேலையைச் செய்வதிலிருந்து ஏதாவது நற்பலன்கள் உண்டாகின்றனவா? ஏதோ ஓரளவு சமாளித்துக் கொள்வதற்குப் போதியளவு தானே படிக்கும் பல இளைஞர்கள் உனக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும்—சரி தானே? என்றாலும், கற்றுக் கொள்வதற்கான இந்த வாய்ப்பை அனுகூலப்படுத்திக் கொள்ளாததனால், இவர்கள் பொதுவாய் தங்கள் மீதிய வாழ்நாளெல்லாம் தங்களை வாய்ப்புக் குறைவான நிலையில் வைத்துக்கொள்கிறார்கள். ஏன்?

3ஏனென்றால் தன் இளமையின்போது ஒருவன் செய்வது முதிர்ச்சியடைந்த பருவத்தில் அவன் செய்யக்கூடியதன் பேரில் பெரும் பாதிப்பைக் கொண்டிருக்கிறது. பள்ளியைக் குறித்ததிலுங்கூட “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்,” என்ற இந்தப் பைபிள் நியமம் பொருந்துகிறது. (கலாத்தியர் 6:7) ஆனால், இப்பொழுது பள்ளிப் படிப்பில் நேரத்தையும் முயற்சியையும் ‘விதைப்பதிலிருந்து’ அடையக்கூடிய நற்பலன்கள் சில யாவை என்று நீ ஒருவேளை கேட்கலாம்?

நடைமுறையான பயிற்சி

4இன்னும் சில ஆண்டுகளுக்குள், ஒருவேளை நீயே சம்பாதித்து உன்னைக் கவனித்துக்கொள்ள வேண்டியதாயிருக்குமென்ற இந்த உண்மையை நீ எதிர்ப்பட வேண்டும். முடிவில் கணவனும் தகப்பனுமாய், அல்லது மனைவியும் தாயுமாய் இருப்பதற்குரிய கடமைகளை நீ ஏற்கக்கூடும். இந்த உத்தரவாதங்களை எளிதாகவும், அதிக மகிழ்ச்சிகரமாகவும் ஆக்குவதற்கு நீ விரும்புவாயா? உன்னுடைய பள்ளி ஆண்டுகளை அனுகூலப்படுத்தி, உன் முதிர்ச்சி பருவத்தில் பயன்படக்கூடிய காரியங்களைக் கற்பாயானால் அவ்விதம் செய்யக்கூடும்.

5பல பள்ளிகளில் வெவ்வேறு கைத்திற தொழில்களில் அடிப்படை நுட்பங்களைக் கற்பிக்கும் பயிற்சி முறைகள் இருக்கின்றன. பையன்களுக்குத் தச்சு வேலை, மின்சாரக் கருவிகளைப் பொருத்தி அமைப்பது, பற்ற வைப்பு, கணக்கர் வேலை, இன்னும் பலவற்றில் வகுப்புகள் இருக்கலாம். இளம் பெண்கள், செயலாளர் தொழில், மேலும் சமைத்தல், தையல் போன்ற வீட்டுக் கலைத் தொழில்கள், ஆகியவற்றிலும் வேறு பல பயன் மதிப்புள்ள காரியங்களிலும் பயிற்சி பெறலாம்.

6நீ பள்ளியை விட்டபின்பு இந்தப் பயிற்சிகளில் பெரும்பாலானவை எளிதாய்க் கிடைக்கக்கூடியனவாக இரா. பின்னால் உனக்குக் கிடைத்ததென்றாலும், அது பெருஞ் செலவு பிடிப்பதாய் நீ காணக்கூடும். அல்லது ஒருவேளை உனக்குக் கற்பிப்பதில் அதிக அக்கறையில்லாத மற்றவர்களுடன் வேலை செய்வதன் மூலம் நீ அதைக் கற்றுக்கொள்ள வேண்டியதாய் இருக்கலாம். ஆகையால் பள்ளியில் இருக்கையிலேயே இவற்றில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அனுகூலப்படுத்திக் கொண்டால் நல்லதல்லவா? பள்ளி பயிற்சி துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சமயம் வருகையில், கட்டாயமாகவே உன் பெற்றோருடன் இந்தக் காரியத்தைக் கலந்தாலோசி. இவ்வாறு நீ அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நற்பயனடையக்கூடும்.

நன்றாய் வாசிக்கக் கற்றுக்கொள்

7பள்ளியில் நீ கற்கக்கூடிய நடைமுறையில் பயனுள்ளவையாய் இருக்கிற பல காரியங்கள் இருக்கிறபோதிலும், உனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடிய இன்னொன்றும் இருக்கிறது. இது உன் பள்ளி வாழ்க்கையின் மீதி காலத்திலும் அதோடு உன்னுடைய முதிர்ச்சி வாழ்க்கை பருவம் முழுவதிலும் பேரளவான செல்வாக்கைக் கொண்டதாய் இருக்கும். இதுவே வாசிப்பதற்குரிய—நன்றாய் வாசிப்பதற்குரிய திறமையாகும். இது பற்பல வகை அறிவையும், நுட்ப திறமைகளையும் சந்தோஷ அனுபவத்தையும் திறந்துவைக்கும் அந்தத் திறவுகோலாகும்.

8விழித்திருக்கும் மணி நேரங்களில், அறிவிப்புக்குறிகள், பொருட்களின்மேல் ஒட்டப்பட்டுள்ள விவரச் சீட்டுகள், புத்தகங்கள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், மற்றும் பல சீட்டுகள், கடிதங்கள் போன்றவற்றை நீ அனுதினமும் வாசிக்கும்படி நேரிடுகிறது. சரியாய் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு இதெல்லாம் விருப்பமில்லாத கட்டாய கடின வேலைபோல் இருக்கக்கூடும். என்றபோதிலும், நீ நன்றாய் வாசிக்கக் கற்றுக்கொள்வாயானால், உன்னுடைய வாழ்க்கை இன்பகரமான முறையில் சுவை மிகுந்த ஒன்றாய் இருப்பதைக் காண்பாய்.

9முக்கியமாய் நீ கிறிஸ்தவனாக இருக்கிறாயென்றால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருக்கிறதை நீ கற்றுக்கொள்ளக்கூடும்படி, நன்றாய் வாசிக்கக் கற்றுக்கொள்ள விரும்புவாய். மேலும் மற்றவர்களிடம் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிப் பேசுகையில் திறம்பட்ட வாசிப்பு மிகுந்த பயன் மதிப்புள்ளதாக இருப்பதாயும் நீ காண்பாய். ஆம், நல்ல வாசிப்பும் நல்ல பேச்சும் நெருங்க இணைக்கப்பட்டிருக்கின்றன.

10பலருக்கு இருப்பதைப்போல், வாசிப்பதில் உனக்கு ஒரு பிரச்னை இருப்பதாக நீ காண்பாயானால் மனச்சோர்வடையாதே. இது பெரும்பாலும், சொற்கள் எழுத்துக் கூட்டப்பட்டிருக்கும் முறையைக் கவனிக்க விழிப்புடனிருந்து பழகுவதன் காரியமாகவே இருக்கிறது. சில சமயங்களில் சத்தமாய் வாசி. இது, நீ வாசிக்கையில் திருத்தமான அர்த்தத்தை அடையவும் சரியான உணர்ச்சியை வெளிப்படுத்தவும் உனக்கு உதவி செய்யும். மேலும் கூடுமானால், நன்றாக வாசிக்கும் ஒருவர் நீ வாசிப்பதைக் கவனிக்கும்படி சொல். இது பிழைகள் ஏதாவது இருந்தால் அல்லது கெட்ட பழக்கங்கள் ஏதாவது உண்டாயிருந்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள உனக்கு உதவியாயிருக்கும்.

11மெய்யாகவே, எளிதாய்த் தட்டுத் தடங்கலில்லாமல் வாசிக்கும் திறமை உண்மையான முயற்சி இல்லாமல் வராது. ஆனால் இப்பொழுது நீ எடுக்கும் முயற்சிக்குப் பல மடங்குகள் அதிகமாய் நீ பலனளிக்கப்படுவாய். இது வாழ்க்கையில் மிகச் சிறந்ததை அடைய உனக்கு உதவி செய்யும்.

படிப்பதிலிருந்து பெறும் மற்ற நன்மைகள்

12பள்ளி பாடங்கள் சில ஒருவேளை நடைமுறையில் அதிகம் பயன் தரத்தக்கதாக இராததுபோல் தோன்றலாம், என்றாலும் உன் நோக்கு நிலையை விரிவாக்க அவை உதவி செய்யும், மேலும் மற்ற வழிகளிலும் உனக்கு உதவியாக இருக்கக்கூடும். சரித்திரம், பூகோள சாஸ்திரம், மொழிகள் ஆகியவற்றைப் படிப்பது மற்ற ஆட்களையும் இடங்களையும் பற்றிக் கற்றுக்கொள்ள உனக்கு உதவி செய்கிறது. கடினமான பாடமாகப் பலரால் கருதப்படுகிற கணக்கு பல வியாபாரத் தொழில்களிலும் வேலைகளிலும் மிகவும் உபயோகமுள்ளதாய் இருக்கிறது. வீட்டுக் காரியங்களைக் கவனிக்கிறவர்களுக்குங்கூட சமையல் பொருட்களின் அளவுகளைக் கணிப்பதற்கும் குடும்ப வரவு செலவுக் கணக்குகளை வைப்பதற்கும் இது மிகுந்த பயனுள்ளதாய் இருக்கிறது.

13உனக்கு விருப்பமில்லாத பாடங்களையுங்கூட பள்ளியில் படிப்பதில் வேறொரு நற்பலனும் இருக்கிறது. படிப்பு உன் மனதை வேலை செய்ய வைத்து அதைப் பயன்படுத்துவதற்குரிய உன்னுடைய திறமையை முன்னேற்றுவிக்கிறது. இது ஒருவாறு உன் உடலில் இருக்கிற ஒரு தசையைப்போல் இருக்கிறது—அதை எவ்வளவு அதிகமாய் நீ வேலை செய்ய வைக்கிறாயோ அவ்வளவு அதிக நன்றாய் அது உனக்குச் சேவை செய்யும். மனதின் முயற்சி படிப்படியாய் எளிதாயும் அதிக பலன் தருவதாயும் ஆகிக்கொண்டு வருவதை நீ காண்பாய். ஆனால், தசையின் காரியத்தில் இருக்கிறதைப்போலவே, மனதும், நீ அதை அதிகமாய்ப் பயன்படுத்த அக்கறை எடுத்துக்கொள்ளுகிறதில்லையென்றால் “தளர்ந்த”தாகிவிடும். தன் மனம் அவ்வாறு இருக்க யார் விரும்புவான்?

14பள்ளியில் உன் படிப்புக்கு உன்னை நீ கவனம் ஊன்றி உழைக்கவைப்பதிலிருந்து வேறு ஏதாவது குறிப்பிட்ட ஒரு பயன் இருக்கிறதா? ஆம், தன்னைத்தான் கட்டுப்படுத்திக் கொள்வதை நீ கற்றுக்கொள்ளக்கூடும். இப்பொழுது இது ஒருவேளை உனக்குக் கவர்ச்சிகரமாய்த் தோன்றாது. என்றாலும், வாழ்க்கையில் நீ விரும்புகிற காரியங்களை மட்டுமே நீ எப்பொழுதும் செய்துகொண்டிருக்க முடியாதென்று உனக்குத் தெரியும். நீயே சம்பாதித்து வாழ்க்கை நடத்தவும் அல்லது உன் சொந்த குடும்பத்தைக் கவனித்துக் காக்கவும் வேண்டியவனாய் அதிகப்படியான உத்தரவாதங்களை நீ ஏற்பதற்கான காலம் வருகையில் இது இன்னும் அதிக உண்மையாய் இருக்கும். ஒரு திறம்பட்ட உடற்பயிற்சிப் போட்டியாளனைப் போல் இப்பொழுது உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள நீ பழகிக்கொள்வாயானால் உன்னுடைய முதிர்ச்சியடைந்த பருவ வாழ்க்கையின் கடமைகளை எதிர்ப்படுவதற்குத் தேவையான கட்டுப்பாட்டுத் திறமையைப் பெற்றிருப்பதற்கு இது உனக்கு உதவி செய்யும். மேலும் சிந்தனையை ஒருமுகப்படுத்தி ஊன்றவைக்கும் திறமையைப் பெருக்கிப் பலப்படுத்தவும் இது உனக்கு உதவி செய்யும். இது, தாங்கள் சிறியவர்களாயிருக்கையில் இவ்வாறு செய்யக் கற்றுக்கொள்ளாமற் போனோமே என்று மிகப் பல ஆட்கள் ஏங்கும் ஒரு காரியம்.

ஒரு பாதுகாப்பு

15ஊக்கந் தளராமல் உன் படிப்பில் உன்னைக் கருத்தூன்ற வைப்பதைக் குறித்ததில், முக்கியமாய்க் குறிப்பிட தகுந்த இன்னுமொரு நற்பலனும் இருக்கிறது. படிப்பில் ஊக்கமாய் உழைப்பது உனக்குப் பாதுகாப்பாய் இருக்கும். எவ்விதத்தில்?

16உன் பள்ளித் தோழர்களுக்குள் ஒழுக்கச் சம்பந்த பிரச்னைகள் இருப்பதன் அறிகுறிகளை அநேகமாய் நீ கண்டிருக்கலாம். இன சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேடும் போதை மருந்துகளை உட்கொள்ளுதலும் இவற்றின் மிகவும் விசனகரமான விளைவுகளும் பேரளவாய் இருந்துவருகின்றன. மேலும் பல இளைஞரின் மத்தியில் கலக மனப்பான்மை வழக்கத்திலிருந்து வருகிறது.

17கடவுளுடைய வார்த்தையில் கற்பிக்கப்பட்டிருக்கிற மிகச் சிறந்த நடத்தையின் தராதரங்களை மதியாத ஆட்களின் கூட்டுறவில் இருப்பது உனக்கு அதிக மனக்கவலையை உண்டாக்கலாம். இப்படிப்பட்ட ஆட்களுடன் தொடர்பு கொள்வதை நீ தவிர்க்க முடியாதென்றாலும், உன் பள்ளி வேலைக்கு அவசியமாயிருப்பதற்கு மேலாக அவர்களோடு கூட்டுறவு வைத்துக்கொள்வதை நீ தவிர்க்க முடியும். உன் படிப்புக்கு நீ நல்ல கவனம் செலுத்தி வருவாயானால், பள்ளிக்குப்பின் உனக்கு இருக்கும் ஓய்வு நேரத்தின் ஓரளவு பாகத்தை அது நிரப்பும், இது ஒழுக்கத்திற்கு உட்படாத ஆட்களுடன் உன் கூட்டுறவைத் தானாக மட்டுப்படுத்தும். உன் கல்வியில் முன்னேறுவதற்கான உன் ஆசையைக் கண்டு, இவ்வகையான ஆட்கள், காலப்போக்கில், உன்னைத் தொந்தரவு செய்வதை அநேகமாய் விட்டு விடுவார்கள். இது உனக்குப் பாதுகாப்பாய் இருக்கும்.

18பின்னும், நீ ஓர் உண்மையான கிறிஸ்தவனாக அறியப்படுகிறாயென்றால், உன் பள்ளி வேலையில் உன்னைக் கருத்தூன்ற வைப்பதன் மூலம் நீ நல்ல முன்மாதிரியை வைப்பாய். இது உனக்கும், உன் பெற்றோருக்கும், நீ வணங்கும் கடவுளுக்கும் நன்மதிப்பைக் கொண்டுவரும். ஓர் இளம் கிறிஸ்தவனாக பின்வரும் இந்தக் காரியம் உனக்கு மிகுந்த ஊக்கமூட்டுவதாகவும் செயல் தூண்டுதலாகவும் இருப்பதாக நீ காண்பாய், அதாவது: இப்பொழுது நீ வளர்த்து முன்னேற்றுவிக்கிற திறமைகளும் தேர்ச்சிப் பெற்ற தனி ஆற்றல்களும் இந்தத் தற்போதைய காரிய ஒழுங்கு முறையின் நீடிப்புக்கு அப்பாலும் உனக்குப் பயனுள்ளவையாக இருக்கும். ஏன்? ஏனென்றால் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை முழுவதும் அதன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறதென்று பைபிள் நிரூபிக்கிறது. இப்பொழுது சீக்கிரத்தில் கடவுளுடைய நீதியுள்ள புதிய ஒழுங்கு அதனிடத்தை நிரப்பும்படி செய்யப்படும், அங்கே நேர்மை இருதயமுள்ள ஆட்கள் நித்தியஜீவனை அனுபவித்து மகிழக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்தப் புதிய ஒழுங்கில், “நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்,” என்ற கடவுளுடைய வாக்குத்தத்தம் உண்மையாய் நிரூபிக்கும். (ஏசாயா 65:22) ஆகையால் இளைஞனாக அல்லது இளம் பெண்ணாக இப்பொழுது நீ கற்கும் நல்ல படிப்பு, மற்றும் வேலை பழக்கங்கள் என்றென்றைக்கும் மனத்திருப்தியும் மகிழ்ச்சியனுபவமும் கொண்டிருப்பதற்கு ஓர் ஊற்றுமூலமாய் நிரூபிக்கக்கூடும்.

[கேள்விகள்]

1-3. (எ) பள்ளியைப் பற்றி நீ எப்படி உணருகிறாய்? (பி) கலாத்தியர் 6:7-லுள்ள பைபிள் நியமம் பள்ளிப்படிப்புக்கு எந்த முறையில் பொருந்துகிறது?

4-6. (எ) பள்ளியில் இருக்கையில் படிப்பதற்கான வாய்ப்புகளை ஒருவன் நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்வானானால் அது அவனுக்கு ஏன் நன்மையாக இருக்கும்? (நீதிமொழிகள் 21:5) (பி) பள்ளியில் அளிக்கப்படும் என்ன பயிற்சி முறைகள் உன்னுடைய பிற்கால வாழ்க்கையில் மிக அதிக உதவியாயிருக்குமென்று நீ நினைக்கிறாய்?

7-11. (எ) நன்றாய் வாசிப்பதற்கான திறமை ஏன் முக்கியமாய் மதிப்புள்ளதாக இருக்கிறது? (1 தீமோத்தேயு 4:13; யோசுவா 1:8) (பி) உன்னுடைய வாசிக்கும் திறமையை முன்னேற்றுவிக்க எது உனக்கு உதவி செய்யக்கூடும்?

12-14. (எ) நீ படிக்கும் படிப்புத்துறை வகைகள் இப்பொழுது தானேயும் நடைமுறையில் என்ன நற்பலனளிப்பவையாய் இருக்கும்? (பி) படிப்பதற்கு உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள்வது எப்படி உன் பிற்கால வாழ்க்கையில் நற்பலன் தருவதாய் நிரூபிக்கும்?

15-18. (எ) படிப்பில் ஊக்கமாய் உழைப்பது எவ்வாறு உனக்கு ஒரு பாதுகாப்பாய் இருக்கக்கூடும்? (நீதிமொழிகள் 13:20) (பி) கிறிஸ்தவனாக இருக்கும் இளைஞன் ஏன் முக்கியமாய் பள்ளியில் ஒரு சிறந்த முன்மாதிரியை வைக்க விரும்பவேண்டும்? (தீத்து 2:6, 7, 10) (சி) கிறிஸ்தவர்களுக்கு இருக்கிற என்ன வாழ்க்கை எதிர்பார்ப்பு, நீ படிப்பதற்கும் பள்ளியில் நடைமுறையான தனி திறமைகளில் தேர்ச்சி பெறவும் உனக்கு பலத்தத் தூண்டுதலாக இருக்கவேண்டும்? (1 யோவான் 2:15-17; 2 பேதுரு 3:13)

[பக்கம் 81-ன் படம்]

நடைமுறையான புத்திமதிகள் உங்களைப் பிற்கால வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தும்