Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பால் சம்பந்தமான காரியத்தில் நல்நடத்தை அறிவுள்ள காரியமா?

பால் சம்பந்தமான காரியத்தில் நல்நடத்தை அறிவுள்ள காரியமா?

அதிகாரம் 18

பால் சம்பந்தமான காரியத்தில் நல்நடத்தை அறிவுள்ள காரியமா?

திருமணத்திற்கு முன்பாகப் பாலுறவில் ஈடுபடும்படியான வற்புறுத்தல் இன்று பல இடங்களில் பெரும் செல்வாக்குடையதாய் இருக்கிறது. உண்மையில், இந்த உலகம், “பால் சம்பந்த புரட்சியில்” சிக்கிக்கொண்டிருக்கிறது. நியு யார்க் டெய்லி நியூஸ் பின்வருமாறு விளக்குகிறது: “திருமணம் இல்லாமல் பாலுறவுகள் கொள்ளுதல் இப்பொழுது பொதுவாய்ப் பெற்றோராலும், கல்லூரிகளாலும் பொதுமக்களாலும் அங்கீகரிக்கப்படுகிறது. ஒழுக்கக்கேடான நடத்தை ஒருவாறு மெளனமாய் விட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது. எதிர்த்து வெல்ல முடியாத ஒரு புதிய நீரோட்டத்திற்கு அணைக்கட்டுவது வீணே என்பதுபோல் அவ்வாறு விடப்படுகிறது.”

2பலர், தாங்கள் விரும்பும் எவரோடும், தாங்கள் தெரிந்து கொள்ளும் எந்த முறையிலும் பாலுறவு கொள்வற்கான சுயாதீனம் வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்கின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மைகள் தனிப்பட்ட பலருக்கு நிச்சயமில்லாமையை உண்டுபண்ணுகிறது. ஒரு கல்லூரி மாணவி எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பில் ஏற்பட்ட இம்மாதிரியான ஒரு பிரச்னையைப் பற்றிப் பின்வருமாறு சொல்லுகிறாள்: “ஏன் கூடாது? என்று அவன் கேட்பான், நான், நல்நடத்தையைப் பற்றியது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை அவனுக்கு விளக்க முயலுவதில் அந்தச் சந்திப்பின் பாதியளவு நேரத்தைச் செலவிடுவேன். அதற்கப்பால், ஏன் கூடாது? என்று நான்தானே என்னைக் கேட்டுக் கொள்வேன்.” “ஏன் கூடாது?” என்று நீயுங்கூட ஒருவேளை எண்ணியிருக்கிறாயா? பாலுறவு சம்பந்த நல்நடத்தை உண்மையில் அறிவுள்ள காரியமா?

3உடல் சம்பந்தமாய்த் தாங்கள் பாலுறவு கொள்ளக்கூடிய நிலையை அடைந்தவர்களாக இருப்பதனாலும், அது ‘பெரும் மகிழ்ச்சி தருவது’ என்று அறிவிக்கப்பட்டிருப்பதனாலும், இது தாங்களும் செய்வதற்கான ஒன்று என்பதாய் இளைஞர்கள் பொதுவாக நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில் அப்படியிருக்கிறதா? திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வது சரியானதா? இது, வாழ்வதற்கு வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க உதவி செய்கிறதா?

நல்ல பாதிப்புகளா அல்லது கெட்டவையா?

4பால் சம்பந்த சுயாதீனம் மிகுதியான தனிப்பட்ட சந்தோஷத்தைக் கொண்டுவருகிறது, அது ‘பெரும் மகிழ்ச்சிக்குரியது’ என்று சிலர் பாராட்டுவதைப் பற்றியதென்ன? திருமணமாவதற்கு முன்னால் பல இளம் பெண்களுடன் பாலுறவுகள் கொண்டிருந்த ஓர் இளைஞனின் பின்வரும் இந்த முடிவை தி ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அஸோஸியேஷன் அறிவித்தது: “இது எனக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவரவில்லை என்பதை நான் கற்றறிந்தேன்.” திருமணத்துக்கு முன்னால் பாலுறவுகள் கொள்வதிலிருந்து பெண்கள் சந்தோஷத்தை அனுபவிப்பது இதைவிட கூடாத காரியமாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஓர் அனுபவத்தைக் குறித்து ஓர் இளம் கல்லூரி மாணவி கண்ணீருடன் பின்வருமாறு கூறினாள்: “அது நிச்சயமாகவே பயனற்றது—அந்தச் சமயத்திலும் அது மகிழ்ச்சிக்குரியதாக இல்லை. அது முதற்கொண்டு நான் மன அமைதியற்றவளாக இருந்து வருகிறேன்.”

5இப்படிப்பட்ட மன அலைக்கழிப்பு பற்பல காரணங்களினிமித்தமாக நியாயமென்று நிரூபிக்கப்படுகிறது. ஒரு காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறவராய் ஒரு சுகாதார அதிகாரி பின்வருமாறு சொன்னார்: ஐந்து ஆண்டுகளில் தானே, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பருவயதினரில் 50 சதவீதமானவரை மேக வேட்டை நோய் தொற்றிப் பரவுமென்று பயமுறுத்தியது! மேலும், பெரும்படியான மேக நோய்களாகிய மேகவேட்டை நோய், கிரந்திநோய், ஆகிய இவ்விரண்டின் வளர்ச்சியை நிறுத்துவதில் நவீன மருந்துகள் சக்தியற்றவையாக நிரூபிக்கின்றனவென்று மருத்துவ அதிகாரிகள் சொல்லுகின்றனர். இவற்றால் தாக்கப்படுகிறவர்கள், தங்கள் உடலுக்கு அபாயகரமான மாற்றமுடியாத தீங்கு உண்டாகாதபடி தவிர்ப்பதற்கு வெகு பிந்தியாகிவிட்டதென்பதாகப் பெரும்பாலும் உணருகின்றனர். ஒழுக்கக்கேடான நடத்தையின் விளைவாக நிலையான தீங்கை, ஒருவேளை கண் பார்வையற்றுப் போதல் அல்லது மலடு நிலையைக்கூட அனுபவிப்பதற்கு உட்படுவது அறிவுள்ள காரியமா?

6மேலும், கருவுறும் சாத்தியமும் அங்கே நிச்சயமாய் இருக்கிறது. திருமணமாகாத இலட்சக்கணக்கான இளம் பெண்கள் அப்படியாகிறார்கள். இவர்களில் பலர் கருச்சிதைவின் அபாயங்களினூடேயும் உணர்ச்சி சம்பந்தமான பாடுகளினூடேயும் செல்லுகின்றனர். மற்றவர்கள் சந்தோஷமற்ற திருமணத்திற்குள் உட்படும் வலுக்கட்டாய நிலைக்குள்ளாகிறார்கள். இன்னும் பலர், முறைகேடாகப் பிறந்த ஒரு பிள்ளையை வளர்க்கும் சந்தோஷமற்ற நீண்ட போராட்டத்தை எதிர்ப்படுகின்றனர். ஆகவே, கருத்தடை சாதானங்கள் இளைஞருக்கு மேலும் மேலும் எளிதாய்க் கிடைக்கக்கூடியனவாக ஆகிக்கொண்டு வருகிறபோதிலும் அவை கருவுறுவதை தடுத்து வைக்குமென்ற “உத்தரவாதமான” நிச்சயத்தை அளிப்பதில்லை என்பதைக் காண்பது எளிதாய் இருக்கிறது.

7பால் சம்பந்த கட்டுப்பாடற்ற நடத்தையைப் பற்றியதில் புதியது அல்லது “நவீனமானது” எதுவும் இல்லை. அது வெகு நீடித்த காலமாக இருந்து வந்திருக்கிறது. சோதோம் கொமோராவின் மக்கள், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இதில் பழக்கமாய் ஈடுபட்டு வந்தனர். பூர்வ ரோமப் பேரரசுவின் சரித்திரத்தை நீ வாசிப்பாயானால் அது இன்று நடப்பிக்கப்பட்டு வரும் பால் சம்பந்த எல்லா வகையான கட்டுப்பாடற்ற நடத்தைக்கும் பேர்போனதாக இருந்ததென்று நீ காண்பாய். உண்மையில், ஒழுக்கச் சீர்கேடே பெரும்பாலும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்,” என்ற பைபிளின் கட்டளைக்குச் செவி கொடுப்பது நிச்சயமாகவே ஞானமான காரியம்.—1 கொரிந்தியர் 6:18.

நல்நடத்தை கோழைத்தனத்தின் அடையாளமா?

8என்றபோதிலும், வேசித்தனம் செய்யும்படி நீ ஒருவேளை சவால் விடப்படலாம், நீ மறுப்பாயானால், மற்றவர்கள் உன்னைக் கோழை என்று குற்றப்படுத்தக்கூடும். சில இடங்களில் வேசித்தனம் ஏற்கப்பட்ட ஒரு பழக்கச் செயலாகிவிட்டிருக்கிறது. மனித பால் தன்மையைப் பற்றிய மருத்துவ நோக்குகள் என்று ஆங்கிலத்தில் தலைப்பைக் கொண்ட புத்தகத்தில் இரண்டு மருத்துவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்: “பாலுறவு கொள்ள ஆயத்தமாக இருக்க மறுத்ததற்காக இளைஞர்கள் குற்றமுள்ள உணர்ச்சி அடைகிறவர்களாகியிருக்கின்றனர், மேலும் இளம் பெண்கள் 25 வயதில் இன்னும் கன்னிகைகளாகவே இருப்பதில் வெட்கத்தை வெளிப்படுத்தியிருக்கிற உதாரணங்களும் இருக்கின்றன.” திருமணத்துக்கு முன்பாகப் பாலுறவுகளுக்கு உட்பட மறுப்பது கோழைத்தனத்திற்கு அடையாளமாக இருக்கிறதா? எதற்கு அதிக உறுதி தேவைப்படுகிறதென்று நீ சொல்வாய்—காம உணர்ச்சிக்கு விட்டுக்கொடுப்பதற்கா அல்லது அதை அடக்கி வைப்பதற்கா?

9உண்மையில், உறுதியில்லாத எவரும் பால் சம்பந்த தூண்டுதலுக்கு விட்டுக் கொடுத்துவிடக்கூடும். ஆனால் திருமணத்தில் ஒரு துணைவரை ஏற்கும் வரையில் அந்தத் தூண்டுதலை அடக்கி வைப்பதற்கு ஒரு மெய்யான “ஆண்மை” (அல்லது மெய்யான “பெண்மை”) வேண்டியதாய் இருக்கிறது. இந்த உலகத்தின் போக்கு எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிற இப்பொழுது இது இன்னும் அதிக உறுதியைக் கேட்பதாயிருக்கிறது, ஏனென்றால் இது விரைவான நீரோட்டத்தின் போக்குக்கு எதிராக நீந்திச் செல்வதைப் போன்ற முயற்சியைக் குறிப்பதாயிருக்கிறது.

10பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் இந்தக் குறிப்பை விளக்கும் ஒரு விவரத்தைக் கொடுக்கிறது. நல்ல இருதய உள்நோக்கமில்லாத “பேதையர்களுக்”குள் ஓர் இளைஞனின் போக்கைக் குறிப்பிடுகிறது. அவன் ஒரு தெருவில் அலைந்து திரிகிறான், அங்கே ஒரு வேசி அவனை அணுகுகிறாள். அவளுடைய தந்திரமான வற்புறுத்தலால் உந்தப்பட்டு அவளுக்கு விட்டுக் கொடுக்கிறான். திடீரென்று “அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்.” (நீதிமொழிகள் 7:6-23) எதிர்த்து நிற்பதற்கு நேர்மை மனவுறுதி அவனுக்கு இருக்கவில்லை.

11ஆனால் இந்தப் பிரசுரத்தின் முற்பகுதியில் கவர்ச்சிகரமான இளம் சூலேமிய பெண்ணைப் பற்றிப் படித்தோம். அவள் பெரும் செல்வந்தனாகிய அரசன் சாலொமோன் அளிக்கக்கூடிய கவர்ச்சிகர இழுப்புதல்களையெல்லாம் எதிர்த்து உறுதியாக நின்று, தான் திருமணம் செய்யும்படி நம்பியிருந்த அந்த இளம் மேய்ப்பனுக்கே உண்மையுள்ளவளாய் நிலைத்திருப்பதை விரும்பித் தெரிந்து கொண்டாள். ஆம், தடையில்லாமல் எளிதில் திறந்துவிடக்கூடிய “கதவைப்”போல் இருப்பதற்குப் பதிலாகத் தான் காத்துக் கொண்டிருந்த மனிதனுக்காகத் தன் கன்னிமையைக் காத்துக்கொள்ள வேண்டுமென்ற தன் தீர்மானத்தில் தான் “மதிலைப்”போல் உறுதியாக இருந்தாளென்று தன் மூத்த சகோதரருக்கு அவள் நிரூபித்தாள்.—சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:8-10.

பால் சம்பந்தப்பட்டதில் நல்நடத்தை ஏன் அறிவுள்ள காரியம்

12பால் சம்பந்தப்பட்டதில் நல்நடத்தை அறிவுள்ள காரியமாயிருப்பதன் முக்கிய காரணமானது, மனித சந்தோஷத்தைப் பற்றி மிக அதிகம் அறிந்திருக்கிறவராகிய யெகோவா தேவனால் நியமிக்கப்பட்ட வழியாக அது இருப்பதேயாகும். இதைப் பற்றிச் சிந்தித்துப் பார். பாலுறவுகளின் மூலமாய் மனித உயிர் கடத்தப்படுவதற்காக யெகோவா தேவன் அன்புடன் ஏற்பாடு செய்திருக்கிறார், இது மிக அதிசயமும் பரிசுத்தமுமான காரியம். இதன் நன்மைகளை நாமெல்லாரும் பெற்றிருக்கிறோம், அதன் காரணமாகவே நாம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதன் நன்மைகளை நாம் ஏற்கிறோமென்றால், இந்த முழு வழிமுறைக்குரிய கடவுளுடைய கட்டுப்பாட்டு சட்டங்களையும் ஏற்கும்படியான கடமையை இது நம்மீது வைக்கிறதல்லவா? நிச்சயமாகவே, நமக்கு உயிரளித்தவராக, யெகோவா தேவன், உயிரைக் கடத்தும் வல்லமைகளையுடைய நம்முடைய பிறப்புறுப்புகளின் உபயோகத்தைக் குறித்த நடத்தைக்குரிய கட்டளைகளையும் விதிகளையும் நியமிப்பதற்கு உரிமை உடையவராக இருக்கிறார்.

13அப்போஸ்தலனாகிய பவுலின் மூலமாய்க் கடவுள் நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாக மஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக, வேசிக்கள்ளரையும், விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) வேசித்தனமானது வரையரையில்லாமல் எவருடனாவது பாலுறவு கொள்வதை மட்டுமல்லாமல்—திருமணமாவதற்கு முன்னால் பாலுறவு கொள்ளுதலையும், அதாவது நிச்சயம் செய்யப்பட்டு ஆனால் இன்னும் திருமணமாகாதவர்கள் பாலுறவில் ஈடுபடுவதையுங்கூட குறிக்கிறது.

14வேசித்தனத்தையும் மற்ற வகையான காமவிகாரத்தையும் கண்டனம் செய்வதில் கடவுளுடைய வார்த்தை வெகு தெளிவாகவும் கண்டிப்பாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட காரியங்களில் பழக்கமாய் ஈடுபட்டு வருகிறவர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்தில் பங்கிராது என்று அது சொல்லுகிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுய புணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும், தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.”—1 கொரிந்தியர் 6:9, 10.

15கடவுளுடைய சட்டத்தின் இந்தக் கண்டிப்பான தன்மை உண்மையில் நம்முடைய நன்மைக்கானதே. இந்தப் பால் சம்பந்தத் தூண்டுதல்கள் வெகு வலிமை வாய்ந்தவையாக இருக்கக்கூடும், மேலும், சோதனையின் அழுத்தத்தின்கீழ் எளிதாக இணங்கிக் கீழ்ப்பட்டுப் போவதற்கேதுவான பல சந்தர்ப்பங்கள் பெரும்பான்மையினரின் வாழ்க்கையில் வருகின்றன. இந்தக் காரியத்தில் கடவுளுடைய சட்டம் தெளிவற்றதாக அல்லது உறுதியற்றதாக இருக்குமானால், இப்படிப்பட்ட சமயங்களில் அது நிச்சயமாகவே நமக்கு அதிக உதவியாய் இராது. அது அவ்வளவு தெளிவாகவும் உறுதி வாய்ந்ததாகவும் இருப்பதனால் நாம் தெளிந்த அறிவுடன் எச்சரிக்கையாய் இருக்க அது நமக்கு உதவி செய்கிறது, நம்முடைய நல்லொழுக்க மன உரத்தைத் தாங்கி உறுதிப்படுத்துகிறது, மேலும், மிக முக்கியமாக, அந்தத் தவறான போக்கை வெறுப்பதற்குக் கற்றுக்கொள்ளும்படி அது நமக்கு உதவி செய்கிறது. பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டுக்குரிய அந்தப் போக்கை நீ உண்மையில் வெறுக்கிறாயா? நீ ஏன் அவ்வாறு செய்யவேண்டும்?

16அந்தப் போக்கு சில சமயங்களில் கவர்ச்சிகரமாய்த் தோன்றுகிறதென்றால், உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: ‘என் சொந்தக் குடும்பத்திலுள்ளவர்கள், என் பெற்றோர் அல்லது என் சகோதரர் சகோதரிகள் இதில் ஈடுபட நான் விரும்புவேனா? அவர்கள் முறைகேடான பிள்ளைகளைக் கொண்டிருக்க நான் விரும்புவேனா? இது அவர்கள் பேரில் என் அன்பையும் மரியாதையையும் அதிகரிக்குமா? இல்லையென்றால், அந்தப் போக்கு வெறுக்கத்தகுந்ததாக இருக்கிறதல்லவா? நிச்சயமாகவே நீ உன்னை, எந்த ஆணோ பெண்ணோ ஒழுக்கக்கேட்டின் மூலமாய் அவனுடைய அல்லது அவளுடைய கைகளைத் துடைக்கக்கூடிய ஒரு பொது உபயோக துவாலைப் போலாக்கிக் கொள்ள விரும்ப மாட்டாய்.

17இப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான நடத்தையிலிருந்து பிறக்கும் பிள்ளைகளைப் பற்றியதென்ன? நீ, ஒரு பெண்ணாக இருக்கிறாயென்றால், இப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பெற்றாய் என்று வைத்துக் கொள்வோம்—அதை யார் கவனிப்பார்கள்? உன் தாயும் தகப்பனுமா? நீயே கவனிப்பாயா? அதை நீ எப்படிச் செய்வாய்? அந்தப் பிள்ளை வளர்ந்து தான் எப்படிக் கருத்தரிக்கப்பட்டான் என்று கண்டறிகையில் அவன் எப்படிப்பட்ட உணர்ச்சியடைவான்? அல்லது இந்த உத்தரவாதத்தைத் தாங்க நீ மறுத்து, அந்தப் பிள்ளையை எவராவது தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொள்ள வைப்பாயானால் மற்ற ஆட்கள் உன்னைப்பற்றி எப்படி உணருவார்கள்? நீ தானேயும் உன்னைப் பற்றி எவ்வாறு உணருவாய்? அந்தப் பிறப்பை மறைத்துப்போட நீ ஒருவேளை முயலக்கூடும், பின்பு அந்தப் பிள்ளையை எவராவது தத்துப் பிள்ளையாக ஏற்கும்படி விடுவதன் மூலம் அவனைப் பார்வைக்கு மறைவாக்கிப் போட்டு இவ்வாறு வெட்கத்திலிருந்தும் தப்பியோட முயலக்கூடும். என்றாலும் நீ உன்னிடமிருந்து, ஒருபோதும் ஓடிப்போய்விட முடியாதல்லவா?

18நீ, ஓர் ஆணாக ஒரு முறைகேடான பிள்ளையின் தகப்பனாயிருந்தால் உன்னுடைய மனச்சாட்சி அமைதியாக இருக்குமா? அந்தத் தாயின் மேலும், உன் பிள்ளையின் மேலும் கொண்டுவரப்பட்ட எல்லாத் தொந்தரவையும் வெட்கத்தையும் எண்ணிப்பார். நிச்சயமாகவே இது தவிர்க்க வேண்டிய ஒரு காரியம்.

19மெய்யாகவே, பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டு நடத்தையின் போக்கிலிருந்து எப்பொழுதாவது எந்த நன்மைதான் வந்திருக்கிறது? முடமாதல், மேகநோய்கள், கருச்சிதைவுகள், பொறாமை, சண்டை சச்சரவுகள், கொலைகள் உட்பட, இத்தனையநேக விரும்பத்தகாத காரியங்கள் ஏன் அதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன? பால் சம்பந்த பெரும் “சுயாதீனம்” அனுமதிக்கப்படுகிற நாடுகளில் விவாகரத்து எண்ணிக்கை விகிதங்கள் ஏன் அடிக்கடி உலகத்திலேயே மிக உயர்ந்தவற்றிற்குள் இருக்கின்றன? விவாகரத்து வெற்றியைக் குறிக்கிறதா அல்லது அது தோல்விக்கு அத்தாட்சியா? அது உண்மையான சந்தோஷத்துக்கு அடையாளமா அல்லது சந்தோஷமில்லாமைக்கும் அதிருப்திக்கும் அடையாளமா?

20மறுபட்சத்தில், பால் சம்பந்தமாக நல்நடத்தை நிச்சயமாகவே அறிவுள்ள காரியம், ஏனென்றால், அதை உறுதியாய்க் கடைப்பிடிக்கிறவர்கள் பெரும்பாலும் வெற்றிகரமான திருமண வாய்ப்புகளையுடையவர்களாக இருக்கிறார்கள். இது ஏனென்றால், அவர்கள் கடவுளுடைய ஏற்பாட்டை மதிக்கிறவர்களாயும், தங்கள் எதிர்கால துணையையும் திருமணத்தில் சுத்தமான துணைவனை அல்லது துணைவியைப் பெறும் ஒருவருக்கொருவர் பரிமாற்றமான தங்கள் உரிமையையும் மதிக்கிறவர்களாயும் திருமணத்தை உயர்ந்த மதிப்பில் வைத்து வந்திருக்கிறார்கள்.

21உண்மையில், காமவிகாரத்தைத் தவிர்ப்பதில் அல்லது விவாக நோக்குடன் பழகும் மற்றும் நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் காலப்பகுதிகளில் கட்டுப்பாடற்று நடவாமல் இருப்பதில் நீ எவ்வளவு அதிக கவனமாய் இருப்பாயோ அவ்வளவு அதிகமாய் உன் திருமணத்தில் வெற்றிகரமாய் இருப்பாய். பாலுறவே திருமணம் செய்தவற்கான ஒரே நோக்கம் என்ற சந்தேகத்தின் காரணமாக உனக்கோ உன் துணைக்கோ ஒருவருக்கொருவருக்குள்ள அன்பின் உண்மையான தன்மையைப் பற்றியதில் குறைகாணும் சந்தேகங்கள் இராது. ஏனென்றால் உண்மையில் திருமணமானது வெறும் இரண்டு உடல்களின் கூட்டிணைப்பு அல்ல—இரண்டு ஆட்களின் கூட்டிணைப்பு. திருமணம் நிலையான சந்தோஷத்தைக் கொண்டுவரவேண்டுமென்றால், ஒருவருக்கொருவர் பரிமாற்றிக்கொள்ளும் உயர்ந்த மதிப்பும் அன்பும் அந்த ஆளிடமாக அந்த நபரிடமாக இருக்கவேண்டும்.

ஞானமாய்த் தேர்ந்தெடுத்தல்

22உணர்ச்சியில் மாத்திரமே அடிப்படை கொண்ட அன்பு நீடித்து நிலைத்திருக்கிற அன்பல்ல. அது தன்னல பேராசைக் கொண்ட அன்பு. இந்த வகையான அன்பு, பைபிளில் தாவீதின் குமாரரில் ஒருவனாகிய அம்னோனின் காரியத்தில் நன்றாக விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது. அவன் தன் அழகிய ஒன்றுவிட்ட சகோதரியாகிய தாமாரின்மேல் “மோகங் கொண்டான்.” பின்பு, வஞ்சனையால், அவள் தன்னுடன் பாலுறவு கொள்ளும்படி அவன் அவளை வற்புறுத்திச் செய்வித்தான். அதன் பின்பு, என்ன நடந்தது? பதிவு பின்வருமாறு சொல்லுகிறது; “பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும் அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது.” அவன் அவளை வெளியே தெருவில் தள்ளிவிட்டான். (2 சாமுவேல் 13:1-19) இப்பொழுது நீ ஓர் இளம் பெண்ணாக இருக்கிறாயென்றால், ஏதோ ஒரு பையன் காமம் சார்ந்த அன்பை உன்னிடமாக வெளிப்படுத்தி நீ பாலுறவு கொள்ளும்படி நாடினால், அது அவன் உன்னை இதய பூர்வமாய் நேசிக்கிறானென்று அர்த்தங்கொள்ளுகிறதென நீ சூதுவாதற்றவளாய் எண்ணுவாயா? அவன் சரியாய் அம்னோனைப் போலவே திரும்புகிறவனாகக்கூடும்.

23எகிப்திய அதிகாரியாகிய போத்திபாரின் மனைவி, அவர்களுடைய வீட்டில் சேவை செய்து வந்த இளைஞனான யோசேப்பில் இதே வகையான கவர்ச்சியை வெளிப்படுத்தினாள் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அவனை ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபட செய்விக்கும்படி அவள் எடுத்த எல்லா முயற்சிகளையும் அவன் எதிர்த்து நின்றபோது அவள் தன் உண்மை இயல்பை வெளிப்படுத்தினாள். வன்மத்துடன் அவள் தன் கணவனிடம் யோசேப்பைப் பற்றிப் பொய்ப் பேசி அவன் அநியாயமாய்ச் சிறையில் போடப்படும்படி செய்வித்தாள்.—ஆதியாகமம் 39:7-20.

24ஆம், இன்பந்தருவதாயும் சுத்தமானதாயும் இருக்க வேண்டியதை, பால் சம்பந்த “சுயாதீனம்” என்றழைக்கப்படுவதானது இழிவான வெறுப்புக்குரிய ஒன்றாக்குகிறது. ஆகவே, உனக்கு எது வேண்டும்.—அது உட்படுத்துகிற எல்லா அபாய விளைவுகளோடும் பிரச்னைகளோடும், எப்போதாவது அனுபவிக்கும் அற்ப கணநேர கள்ளத்தனமான பாலுறவு கிளர்ச்சியா, அல்லது கடவுளுக்கும் எல்லா ஆட்களுக்கும் முன்பாக ஒரு சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருந்து, தொடர்ந்து சுயமரியாதையுடன் இருந்து வரும் மனத் திருப்தியா?

25ஒழுக்கக்கேட்டுக்கு விலகினவனாக[ளாக] இருக்க நீ விரும்புகிறாயென்றால், அப்பொழுது அதற்கு வழிநடத்துகிற காரியங்களுக்கும், அதாவது எதிர்பாலினரின் பேரிலேயே எப்பொழுதும் தங்கியிருக்கும் உரையாடல், மேலும் பால் சம்பந்த மோகத்தை எழுப்பி விடுவதையே ஒரே நோக்காகக் கொண்டிருக்கிற கட்டுரைகளை வாசித்தல் அல்லது படங்களைப் பார்த்தல் ஆகியவற்றிற்கும் விலகியிரு. உன் மனதும், உன் கண்களும், உன் நாவும் சுத்த எதிர்மறையான காரியங்களில் ஈடுபட்டிருக்க வைத்து, வெட்கத்தையோ மன வேதனையையோ விட்டுப்போவதாயிராத, நிலையான நன்மைகளைக் கொண்டுவருகிற பலன்தரும் இலக்குகளை நோக்கி உழை.

26எல்லாவற்றிற்கும் மேலாக, உன் சிருஷ்டிகரையும் அவருடைய வழிகளின் சரியான தன்மையையும் ஞானத்தையும் பற்றிய உன் அறிவையும் மதித்துணர்வையும் பலப்படுத்து. ஜெபத்தில் அவரை நோக்கியிரு, தம்மைச் சேவிக்கிறவர்களுக்கு அவர் வாக்குக்கொடுக்கிற காரியங்களின் பேரில் உன் இருதயத்தை ஊன்றியிருக்கச் செய். நீ உண்மையில் விரும்பினால், பால் சம்பந்த நல்நடத்தைப் போக்கை நீ உறுதியாய்க் கடைப்பிடிக்கக்கூடும். ஏனெனில் யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் அதைச் செய்வதற்குத் தேவையான பலத்தை உனக்குக் கொடுப்பார்கள்.

[கேள்விகள்]

1-3. திருமணத்துக்கு முன்பாகப் பாலுறவு கொள்வதைப் பற்றி இவ்வுலகத்திலுள்ள ஆட்களில் பலர் எவ்வாறு எண்ணுகின்றனர்?

4-7. (எ) திருமணத்துக்கு முன்னால் பாலுறவில் ஈடுபடுவதனால் பொதுவாக உண்டாகும் சில விளைவுகள் யாவை? (பி) பால் சம்பந்த பலவகை கட்டுப்பாடற்ற நடத்தை உண்மையில் ஒரு “புதிய” ஒழுக்கநெறி அல்லவென்று எது காட்டுகிறது? (நியாயாதிபதிகள் 19:22-25; யூதா 7) (சி) 1 கொரிந்தியர் 6:18-லுள்ள இந்த அறிவுரை ஏன் அவ்வளவு வினைமையான காரியம்? (அப்போஸ்தலர் 15:28, 29; 1 தெசலோனிக்கேயர் 4:3, 7, 8)

8-11. (எ) திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வதைத் தவிர்த்திருப்பதற்கு ஏன் நேர்மை மனவுறுதி வேண்டியதாய் இருக்கிறது? (பி) நீதிமொழிகள் 7-ம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிற பிரகாரம் ஒழுக்கக்கேடான நடத்தையில் சிக்கிக்கொண்ட அந்த இளைஞன் நல்ல உள்நோக்கமில்லாதவனாக இருந்தானென்று எது காட்டுகிறது? (சி) இளம் சூலேமிய பெண்ணின் பங்கில் சரியான நியமங்களுக்கான உறுதி எப்படி விளக்கிக் காட்டப்பட்டிருக்கிறது?

12-14. (எ) பால் சம்பந்தப்பட்டதில் கடவுள் கொடுத்திருக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருப்பது ஏன் நல்லறிவாக இருக்கிறது? (பி) வேசிக்கள்ளருக்கு எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று எபிரெயர் 13:4-ம் 1 கொரிந்தியர் 6:9, 10-ம் சொல்லுகின்றன? வேசித்தனம் என்றாலென்ன?

15-19. (எ) பால் சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேட்டை நாம் ஏன் உண்மையில் வெறுக்கவேண்டும்? (சங்கீதம் 97:10) (பி) இப்படிப்பட்ட சரியான வெறுப்பை நம்மில் வளர்த்துவர எது நமக்கு உதவி செய்யும்?

20, 21. பால் சம்பந்தப்பட்ட ஒழுக்கக்கேட்டைத் தவிர்ப்பது எப்படி வெற்றிகரமான திருமணத்தை நாடும் உன் எதிர்பார்ப்புகளை முன்னேற்றுவிக்கக்கூடும்?

22-24. (எ) அம்னோன், தாமார் ஆகியவர்களைப் பற்றிய பைபிள் விவரப்பதிவிலிருந்து ஓர் இளம் பெண் என்ன உதவியான பாடத்தைக் கற்றுக்கொள்ளக்கூடும்? (பி) போத்திபாரின் மனைவி காட்டின காமம் சார்ந்த அன்பு நிலைத்திருக்கும் அன்பல்லவென்று எது காட்டுகிறது?

25, 26. பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டில் உட்படுவதைத் தவிர்க்க என்ன காரியங்கள் நமக்கு உதவி செய்யும்? (எபேசியர் 5:3, 4; பிலிப்பியர் 4:8)