Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்மை பருவத்துக்கு வளருதல்

பெண்மை பருவத்துக்கு வளருதல்

அதிகாரம் 4

பெண்மை பருவத்துக்கு வளருதல்

இளவேனிற் பருவம் கடைசியாக முதுவேனிற் பருவத்துக்குப் படிப்படியாய் மாறுகிறது. பூக்கும் மரங்கள் ஏற்ற காலத்தில் கனிதரும் மரங்களாகின்றன. அவ்வாறே, இளம் சிறுமிகளும் இயல்பாய் இளம் பெண்கள் ஆகிறார்கள். ஒரு மொட்டு விரிகையில், அந்தப் பூ எப்படிப்பட்டதாய் இருக்கிறதென்று வெளிப்படுத்துவதைப் போல் இந்த வளரிளமை மாற்ற இடைநிலைப் பருவம் முடிகையில் நீ எப்படிப்பட்ட பெண்ணாகப் போகிறாய் என்பது வெகு தெளிவாய் வெளிப்படுகிறது. இந்த வளர்ச்சியில் முடிவான பலன்கள் சந்தோஷமுள்ளவையாய் இருப்பதற்கு உதவியாக நீ செய்யக்கூடிய அதிகம் உண்டு.

2உன்னுடைய வளரிளமை ஆண்டுகளில் நீ உயரமாய் ஒருவேளை ஐந்து அல்லது ஆறு அங்குலங்கள் (12 அல்லது 15 சென்டிமீட்டர்கள்) உன் உயரத்துடன் கூட்டுமளவுக்கு வளருகிறாய். நீ மேலும் கனமானவளாயும் ஆகிறாய். பொதுவாக, ஒன்றிரண்டு ஆண்டுகள் நீ “திடீர் வளர்ச்சியை,” அதாவது, உயரத்திலும் எடையிலும் உன் வளர்ச்சி வீதம் கவனிக்கத்தக்கதாய் விரைவாகிய ஒரு காலத்தை அனுபவிப்பாய். மற்ற உன்னுடைய வயது சிறுமிகள், திடீரென்று உன்னைவிட உயரமாய் வளர்ந்துகொண்டு போவதை நீ காணக்கூடும், அல்லது நீ விரைவில் அவர்களைவிட உயரமாய் வளர்ந்துகொண்டு போவதாக உன்னை நீயே காணக்கூடும். எவ்வாறு இருந்தாலும், இதைப் பற்றி மனக்கலக்கம் அடைவதற்கு அவசியமில்லை. இந்த ஒவ்வொரு தனித்த ஆளுக்கும், இந்த வேகமான வளர்ச்சி பருவத்துக்கான சமயம், அவரவருக்குரிய சொந்த தருவாயில் வருகிறது. பொதுவாய் இளம் சிறுமிகள் பையன்களைவிட ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தத் “திடீர் வளர்ச்சிக்கு” உட்படுகிறார்கள். உண்மையில், இளம் சிறுமிகள் தங்களுடைய அதே வயதிலிருக்கும் பையன்களைவிட உயரமாயிருக்கும் இயல்பான போக்குக்குரிய ஒரு சமயம் இருக்கிறது. என்றாலும் பையன்கள் சீக்கிரத்தில் அந்நிலைக்கு வளர்ந்துவிடுவார்கள் மேலும், பையன்களுடைய வளர்ச்சி இளம் சிறுமிகளின் வளர்ச்சியைவிட அதிகக் காலம் நீடித்திருப்பதால், பொதுவாய் பையன்களே முடிவில் இவர்களைவிட உயரமானவர்களாகவும் பலமுள்ளவர்களாகவும் வளர்ந்து விடுகிறார்கள்.

3தொடக்கத்தில் சில சமயங்களில் இந்தத் திடீர் வளர்ச்சியானது, உடலின் ஒரு பாகத்தில் மற்றப் பாகத்தைவிட அதிக விரைவில் ஏற்படுகிறது. உன் உடலின் மற்றப் பாகத்தோடு ஒப்பிட உன் பாதங்கள் அல்லது கைகள் வேதனை கொடுக்கும் வண்ணமாய் வெகு நீண்டவையாகி விடுவதாகத் தோன்றக்கூடும். ஆனால் காலப்போக்கில் உடலின் மீதி பாகமும் விரைவாக வளரத் தொடங்கி காரியங்கள் சரிசமமாகின்றன. நடு உடற்பகுதி நீளுவதும் மார்பு உட்குழிவு ஆழமாவதுமான இந்த வளர்ச்சி கடைசியாக ஏற்படுகிறது, முகத்தோற்ற மேடுபள்ளங்கள் மாறுகின்றன. அதே சமயத்தில் உடலின் மற்றப் பாகங்கள் கொழுப்பு சேமிப்புகளை வளரச் செய்கின்றன, இது பெண் உடலுருவத்தின் அந்த உருண்டு திரண்ட தோற்றத்தை கொடுக்கிறது.

உடலின் வேறு மாற்றங்கள்

4பெண்மை வளரிளமையின்போது மற்றொரு வளர்ச்சியும் ஏற்படுகிறது. இது பைபிளில் குறிப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிற பெண்ணாகிய ராகேல், “ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு” என்று அழைத்த மாதவிடாயின் தொடக்கமாகும். (ஆதியாகமம் 31:34, 35) ஒரு கருத்தில், இது கிளர்ச்சியூட்டுகிற ஒரு சமயமாய் இருக்கிறது—இது நீ பெண்மைக்குரிய வாசலை அடைந்துவிட்டாய் என்று காட்டுகிறது. இயக்கு நீர் கசிவுகள் உன் உடலில் வேலை செய்ய தொடங்கிவிட்டன. இவை, உன் சூல் சுரப்பிகள் பெண் கரு உயிர் அணுக்களை வெளிப்படுத்தத் தொடங்கும்படி அவற்றைத் தூண்டுவிக்கின்றன; முதலில் கால ஒழுங்கில்லாமலும், பின்பு ஏறக்குறைய நான்கு வாரங்களுக்கு ஒரு முறையாகவும் இவ்வாறு செய்கின்றன. இந்தப் பெண் கரு அணு, வெளிப்படுத்தப்படுகையில் உன் கருப்பைக்குள் செல்லுகிறது. இந்தப் பெண் கரு ஒருவேளை கருவுறுகிறதென்றால் அதை ஏற்றுக்கொள்வதற்காக உன் கருப்பை ஒரு தனிப்பட்ட உள் உறையை வளரச் செய்யும்படி தூண்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெண் கருவானது கருவுறாமல் இருந்து கொண்டிருக்கையில் இந்த உள்ளுரை ஏற்ற காலத்தில் விலக்கப்படுகிறது. இதுவே மாதவிடாயை, அதாவது இரத்தம், கசிவு நீர், சில உயிரணுக் கட்டங்கள் ஆகியவற்றை கால ஒழுங்குபடி வெளியேற்றுவதை உண்டுபண்ணுகிறது. இதோடு ஒருவாறான வலி அல்லது உடல் நலமில்லாமை அனுபவிக்க நேரிடலாமென்றாலும், இது இயல்பான போக்காக இருக்கிறது. இது மட்டுக்கு மீறி கவலையை உண்டுபண்ணக்கூடாது.

5இந்த மாதவிடாய்க் கால வட்டங்கள் எப்பொழுது தொடங்குகின்றன? இவற்றின் தொடக்கம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. பல நாடுகளில் இதன் சராசரி வயது ஏறக்குறைய பதின்மூன்றாக இருக்கையில், ஒரு சிறுமிக்கு ஒருவேளை பத்து வயதிலேயே அல்லது அதற்கு முன்பேயுங்கூட மாதவிடாய்த் தொடங்கிவிடக்கூடும். அதே சமயத்தில் மற்றொரு சிறுமிக்கு பதினாறு அல்லது அதையும் தாண்டிய வயதாகும் வரையிலுங்கூட மாதவிடாய் தொடங்காமல் இருக்கலாம். அதைப்போலவே மாதவிடாய் நீடிப்புங்கூட மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரையாக வேறுபடலாம்.

6சிறுமி பருவத்திலிருந்து பெண்மை பருவத்துக்கு மாறும் இந்த மாற்றத்தோடுகூட, உன் இடுப்பு விரிவாகிறது. உன் மார்புகள் வளரத் தொடங்குகின்றன. சில காணக்கூடியவையாகவும் சில காணக்கூடாதவையாகவும் ஏற்படும் இந்தப் பல வளர்ச்சிகள், மனித சிருஷ்டிகர் பெண்களுக்காகத் தனிப்படுத்தி வைத்திருக்கிற அந்த இரட்டிப்பான வாழ்க்கைப் பங்கை, அதாவது மனைவியாகவும் தாயாகவும் இருப்பதை, அவர்கள் நடப்பிப்பதற்காகச் செய்யப்படும் எல்லா ஆயத்தங்களேயாகும். பெண்களுக்கு இடுப்பு விரிவாக வளருவதானது குழந்தை பெறுவதை எளிதாக்க உதவி செய்வது மட்டுமல்லாமல் சிறு குழந்தைகளைச் சுமந்து செல்வதையுங்கூட எளிதாக்குகிறது. பெண்ணின் உடலில் இயல்பாய் உண்டாயிருக்கிற அந்தக் கொழுப்பு சேமிப்புகள், அவள் கர்ப்பந்தரித்திருக்கையில் அந்தக் கர்ப்பத்திலிருக்கிற குழந்தைக்கோ அல்லது புதிதாகப் பிறக்கிற குழந்தைக்கோ உணவூட்டி வளர்க்கையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய கையிருப்புப் பொருளாக இருக்கின்றன. மேலும் குழந்தை பிறப்போடு மார்புகளில் பால் சுரக்கத் தொடங்குகிறது.

ஆண்களிடம் கவர்ச்சி வளர்ந்து கொண்டு போதல்

7மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனால் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சிலாக்கியங்கள், சிருஷ்டிகரின் நோக்கத்தை மதித்து அதற்கு இசைய நடக்க வேண்டிய உத்தரவாதத்தையும் உடன் கொண்டிருக்கின்றன. ஆண் பெண் பாலருக்கிடையே இருக்கும்படி கடவுள் செய்திருக்கிற இந்த ஒருவருக்கொருவர் பரிமாற்றமான கவர்ச்சிகரமானது பெரும்பாலும் குழந்தைகளைப் பிறப்பிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. பிள்ளைகளைப் பெறக்கூடியவளாகும் நிலைக்கு ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கையில், பிள்ளைகளுக்குத் தந்தையாகக்கூடிய நிலையை அடைந்திருக்கிற ஆண்களிடமாக அவள் மிகுந்த கவர்ச்சிகரமான செல்வாக்கு செலுத்துகிறாள். ஆனால் இந்தக் கவர்ச்சிகரம் தவறாக அல்லது கெடு தீங்கான முறையில் பயன்படுத்தப்படக்கூடும். அப்படியானால், உன்னுடைய நிலைவரமான எதிர்கால சந்தோஷத்திற்கு உதவி செய்து கடவுளுடைய ஆசீர்வாதத்தை உனக்கு உறுதிப்படுத்தக்கூடிய சரியான போக்கை நீ ஏற்கக்கூடும்படி, மனதில் எதை வைத்திருப்பது அவசியம்?

8பைபிளிலுள்ள சாலொமோனின் உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் கவனத்தைக் கவருகிற ஒரு கூற்றை நாம் காண்கிறோம். இது சூலேம் ஊர் பெண்ணின் மூத்த சகோதரர்களால் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. முதலாவதாக ஒரு சகோதரன் பின்வருமாறு சொல்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது: “நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்?” அதாவது, அவர்களுடைய சகோதரி ஸ்தனங்கள் இல்லாதிருக்கும் காலம் முடிவடைந்து, அவள் வளர்ந்து வயது வந்தவளாகி, அவளை விவாகம் செய்துகொடுக்கும்படி ஏற்பாடு செய்ய எவராவது அப்பொழுது கேட்பாராகில் அவர்கள் என்ன செய்வார்கள்? மற்றொரு சகோதரன் பதிலளித்துப் பின்வருமாறு கூறினான்: “அவள் ஒரு மதிலானால், அதன் மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப் பலகைகளை அதற்கு இணைப்போம். [கேதுரு பலகையைக் கொண்டு அவளைத் தடுத்து நிறுத்துவோம், NW] (சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:8, 9) இதன் கருத்தென்ன?

9அவர்களுடைய சகோதரி “மதிலைப்” போல் உறுதியுள்ளவளாக நிரூபிப்பாளாகில் அவர்கள் அவளுக்கு நேர்த்தியான முறையில் மதிப்பும் கைம்மாறும் செய்து கனப்படுத்துவார்கள். அவள் எப்படி மதிலைப்போல் உறுதியுள்ளவளாக நிரூபிக்கக்கூடும்? கற்புள்ளவளாக நிலைத்திருப்பதற்கு உறுதியான தீர்மானத்தை காட்டுவதன் மூலமும், அவளை ஒழுக்கக் கேடான நடத்தைக்கு உட்படவைக்கச் செய்யப்படும் எந்த முயற்சிகளையும் எதிர்த்து நிற்பதில் திட பலத்தைக் காட்டுவதன் மூலமுமே. விவாகத்திற்குத் தகுதியுள்ளவளாகையில் சரியான நியமங்களைக் கடைப்பிடிப்பதில் அவள் தன்னை நிலையான உறுதியுள்ளவளாகவும் விடா பற்றுள்ளவளாகவும் காட்டுவாள். மறுபட்சத்தில், சிறிது பலத்தோடு முயற்சி செய்கிற எவனுக்கும், அசுத்தக் கேடுள்ள எவனோ ஒருவனுக்குங்கூட தாராளமாக வீசித்திறக்கிற ஒரு “கதவைப்” போல் இருப்பாளானால், அப்பொழுது அவர்கள் அவளைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டியதாய் இருக்கும், அதாவது, எதிர்பாலினரைக் குறித்ததில் நம்பத்தகாதவளாக நடைமுறையளவில் அவளை ‘அடைத்துத் தடுத்து நிறுத்த’ வேண்டியதாய் இருக்கும். மேலும் தன்னுடைய அன்பில் அவள், வீசித்திறப்பதும் மூடுவதுமாயிருக்கிற ஒரு கதவைப் போலவும் இருக்கக்கூடும், அதாவது, முதல் ஒருவனுடன் மோகங் கொண்டவளாவதும் பின்பு வேறொருவனிடம் மோகங்கொண்டு முந்தியவனைத் தள்ளிவிடுவதுமாய் இருக்கக்கூடும்.

10இந்த சூலேமிய பெண், இப்பொழுது மார்பகங்களுடன் முழு வளர்ச்சியுற்றப் பெண்ணாக இந்தச் சோதனையை வெற்றிகரமாய்க் கடந்து தன் சகோதரரிடம் “நான் மதில், என்னுடைய ஸ்தனங்கள் கோபுரங்களைப் போலிருக்கின்றன. இந்தக் காரியத்தில் நான் அவருடைய கண்களில் [அதாவது, அவளுடைய எதிர்கால கணவனின் கண்களில்] சமாதானத்தைக் கண்டடைகிறவளைப்போல் ஆகியிருக்கிறேன்.”—சாலொமோனின் உன்னதப்பாட்டு 8:10, NW.

11நீயுங்கூட பெண்மை பருவத்தை நெருங்குகையில் இதைப்போன்ற சோதனையை எதிர்ப்படுகிறாய். மன, இருதய மற்றும் மனச்சாட்சிக்கடுத்த மெய்யான சமாதானத்தை அனுபவித்து மகிழவும், சமாதானத்தைக் கெடுக்கும் பிரச்னைகளை அனுபவிப்பதற்கு எதிராக, உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் நீ விரும்புகிறாய் என்றால், தன்னடக்கத்தைப் பிரயோகித்து சரியானதைக் கடைப்பிடிப்பதில் உறுதியான பலத்தை நீ காட்ட வேண்டும். வெகு குட்டையாயும் உடலை ஒட்டி இருக்கமாயும் இருக்கிற குறும் பாவாடைகளையும் கழுத்து மிக ஆழமாய் வெட்டப்பட்டுள்ள சட்டைகளையும் அல்லது இறுக்கமான கம்பளி சட்டைகளையும் அணிவதன் மூலம், தாய்மைக்குச் சம்பந்தப்பட்டுள்ள உன் உடல் பாகங்களுக்கு வேண்டுமென்றே கவனத்தை இழுக்க வேண்டுமா? இது எதிர்பாலினரின் பேரில் காம உணர்ச்சியைத் தூண்டிவிடும் ஒரு பாதிப்பை உண்டு பண்ணுகிறது. பின்பு என்ன?

12அந்த உடல் பாகங்களுக்கு இப்படிப்பட்ட கவன கவர்ச்சி உண்டுபண்ணினதன் விளைவாக மற்றவர்கள் காதல் நாட்டத்துடன் உன்னை அணுகும் இப்படிப்பட்ட எல்லாவற்றையும் எதிர்த்து திடமாய் நிற்க உனக்கு உறுதியும் பலமும் இருக்குமா? உடல் சம்பந்த வளர்ச்சி, உனக்கு உண்டாயிருந்தாலும், திருமணத்துக்கும் தாய்மைக்கும் உனக்கு வேண்டிய, மனம் மற்றும் உணர்ச்சி வேகம் சம்பந்தப்பட்ட வளர்ச்சி உனக்கு உண்டாகிவிட்டதா? ஒரு பூனையானது அதன் வயது பன்னிரண்டு மாதங்களாகையில் குட்டிகளைப் பிறப்பிப்பதற்கு ஆயத்தமாய் இருக்கிறது, மேலும் இயல்பான உந்துணர்வால் தன்னுடைய குட்டிகளை நல்ல முறையில் கவனித்துக் காக்கக்கூடியதாயும் இருக்கிறது. ஆனால் மனிதர் மிருகங்களைப்போல் இந்த இயல் உந்துணர்வுள்ள சிருஷ்டிகள் அல்லர். மனிதர் தாங்கள் சுதந்தரிப்பதைப் பார்க்கிலும் மிக அதிகக் காரியங்களைக் கற்க வேண்டியதாய் இருக்கிறது, கற்பதற்குக் காலம் எடுக்கிறது. இந்தப் போக்கு முறையை விரைவுபடுத்த முயலுவதானது ஒரு ரோஜா மொட்டின் இதழ்களை அவை திறப்பதற்கான காலத்திற்கு முன்பாகவே வற்புறுத்தித் திறக்க முயலுவதைப் போலிருக்கும். இது அந்தப் பூவைப் பாழ்ப்படுத்துவதிலும் அதற்கு இருக்கக்கூடிய எதிர்கால அழகைக் கெடுத்துப் போடுவதிலுமே விளைவடையும். மேலும், திருமணமானது வெறும் ஒரு மணப் பெண்ணாய் இருப்பதுதானே அல்ல என்பதையும் நினைவில் வை. அது, வீட்டுக் காரியங்களை நடத்தும் பொறுப்பேற்பவளாகவும், சமைப்பவளாகவும், துணி துவைப்பவளாகவும் இருப்பதையுங்கூட குறிக்கிறது. மேலும் தாயாக இருப்பதானது, பிள்ளைகளிடமாக மிகுந்த பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் இருக்கும்படி கேட்கிறது—இதெல்லாம் நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும், நோயிலும் சுகத்திலும் செய்யப்பட வேண்டும்.

13இதைத் தவிர, ஓர் இளம் பெண் தான் தன் திருமணத்திற்கு ஆயத்தமாய் இருப்பதாக உணரக்கூடுமென்றாலும், தான் என்ன வகையான கணவனைக் கவர்ச்சிக்க முற்படுகிறாள்? ஒரு பெண் பாலுறவைத் திருப்தி செய்யக்கூடிய முறையில் எப்படிப்பட்டவளாகத் தோன்றுகிறாள் என்பதால் மாத்திரமே, ஓர் இளைஞன் கவரப்படுகிறானென்றால், அவன் நல்ல கணவனாக இருக்கக்கூடுமா? இந்த அடிப்படையின்பேரில் கவர முயலுவதைப் பார்க்கிலும் ஓர் ஆளாக—உன் மனதிலும் இருதயத்திலும் நீ எப்படிப்பட்டவளாய் இருக்கிறாய் என்ற அடிப்படையின் பேரில் நிலையான நட்பைத் தேடுவது மிக மேலானதல்லவா? மற்றவர்களுக்குக் கவர்ச்சிகரமாய் இருக்கிற தனிப்பட்ட சுபாவ பண்புகளை உன்னில் வளர்ப்பதன் மூலம் இதை நீ செய்யக்கூடும். மேலும், உன் பேச்சு, ஆரோக்கியகரமான, மனமகிழ்ச்சியோடு கூடிய மனப்பான்மையுடன் வாழ்க்கையை நோக்குதல், நேர்மை, அடக்கம், நற்பண்பு, தயவு, தன்னலமற்றத் தன்மை ஆகிய இப்படிப்பட்ட காரியங்களை நீ மதிக்கிறாய் என்று காட்டுதல் ஆகியவற்றாலுங்கூட அவ்வாறு செய்யக்கூடும்.

14ஒரு சில விநாடிகள் அனுபவிக்கும் இன்பத்திற்காக, இந்த மிகச் சிறந்த பண்புகளை எறிந்துவிட மறுப்பதன்மூலம் நீ உண்மையில் அவ்வாறு இருக்கிறாய் என்று நீ நிரூபிக்கக்கூடும், இந்த அற்ப இன்பம் உன்னுடைய சொந்த மதிப்பிலும், நீ மதித்து, போற்றி, நெஞ்சார நேசிக்கிற மற்றவர்களின் மதிப்பிலும் உன்னை மதிப்புக் குறைவாக்கித் தாழ்த்தவே செய்யும். முக்கியமாய், வாழ்க்கையில் உண்மையாகவே பயனுள்ள இலக்குகள் உனக்கு இருக்கின்றன என்றும், ‘உன்னுடைய இளம் பெண்மையின் நாட்களில் உன் சிருஷ்டிகரை நினைக்க’ விரும்புகிறாய் என்றும் காட்டுவதன் மூலம் நண்பர்களாக நீ அடையக்கூடிய ஆட்களின் நட்பு நீ எப்பொழுதும் மதிப்புடையதாய் வைத்துப் பாராட்டக்கூடியதும், உனக்கு மெய்யான சந்தோஷத்தைக் கொண்டு வரக்கூடியதுமாய் இருக்கும்.—பிரசங்கி 12:1.

தோற்றத்தைப் பற்றிய சரியான நோக்குநிலை

15பருவ வயதுக்குட்பட்ட சிறுமிகள் தங்கள் சொந்தத் தோற்றத்தைப் பற்றிக் கவலையுள்ளவர்களாய் இருப்பது இயல்பானதே. என்றாலும், உன்னுடைய முழு எதிர்காலமும் அதன்பேரிலேயே சார்ந்திருப்பதுபோல் உன்னுடைய உடல் உருவத்தைப் பற்றியோ முகத்தைப் பற்றியோ மட்டுக்கு மீறி கவலைப்படாதே அல்லது திருப்தியற்றிராதே. நீ விரும்பி பாராட்டுகிற உன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களை நோக்கிப் பார். அவர்களில் பலர் ஒருவேளை பெரும்பான்மையர், சாதாரண தோற்றத்தையுடையவர்களாக இருக்கிறார்களல்லவா? எதிர்கால சந்தோஷத்திற்கு மெய்யான அடிப்படை உடல் கவர்ச்சிகரமல்ல.

16மெய்யாகவே உடல் அழகைக் கொண்டிருக்கிற பெண்ணைக் குறித்ததிலும் இது உண்மையாய் இருக்கிறது. அழகிய பெண்கள் பலர் வெகு வெறுமையானதும் அநேகமாய் ஒழுக்கக்கேடானதுமான வாழ்க்கை நடத்துபவர்களாய் முடிவடைகிறார்கள். பைபிளின் பின்வரும் நீதிமொழி எவ்வளவு உண்மையாய் இருக்கிறது: “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்”! (நீதிமொழிகள் 11:22) ஆம், பைபிள் மேலும் சொல்லுகிற பிரகாரம், “செளந்தரியம் வஞ்சனை, அழகு வீண், யெகோவாவுக்குப் பயப்படும் பெண்ணே புகழ்ச்சிக்குரியவள்.”—நீதிமொழிகள் 31:30, தி.மொ.

உணர்ச்சிவேக சமநிலைக்காக உழைத்தல்

17வளரிளமையில் ஏற்படும் உடல் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் உணர்ச்சிவேக மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும். ஓர் இளம் பெண் ஒரு நிமிடம் பலம் மிகுந்தவளாய்ச் சுறுசுறுப்பாயும் அடுத்த நிமிடம் முற்றிலும் சோர்வுற்றிருப்பவளாயும் உணரக்கூடியதுபோலவே, அவளுடைய உணர்ச்சி வேகங்களுங்கூட எழும்பி தளர்வுற்று பேரளவாய் மாறக்கூடும். கிளர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் சமயங்கள் விரைவில் கிளர்ச்சியற்று மனச் சோர்வுறும் பகுதிகளாக மாறக்கூடும். நீ உண்மையில் இயல்பான நிலையில்தான் இருக்கிறாயா அல்லது என்ன வகையான ஆளாக மாறிக்கொண்டிருக்கிறாய் என்பதாக உன்னில் நீயே சிந்தனை செய்துகொண்டிருப்பதாக உன்னை நீ காண்பாய். முக்கியமாய் இந்த நவீன தொழில் துறை சமுதாயத்தில், அதன் பண்பு மதிப்புகள் மாறிக்கொண்டே இருக்க, வளரிளமையிலுள்ள பெண்கள் விறைப்புக்கும் நிச்சயமில்லாமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.

18இந்த மன உலைவுக்கு இடங்கொடுத்து ஒதுங்கி, உள்வாங்கி, சிந்தனையில் ஆட்படுகிறவளாவது அல்லது வெகுவாய்த் தனித்து சுதந்தரமாயும், தான் பிடித்தப் பிடியை விடாதவளாயும் ஆவது எளிதாய் இருக்கும். சில பெண்கள் முரட்டுத்தனத்தையும் திடீர் திடீரென்று எழும்பும் எரிச்சலான மனநிலையையும் அல்லது வெடுவெடுப்பான பேச்சையும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். மற்றும் சிலர் தங்களுக்கு உண்மையில் இராத இயல்பு இருப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு மேற்போக்காய் நடக்கிறவர்களாகிறார்கள். ஆனால் இது உதவி செய்கிறதில்லை; இது காரியங்களை மேலும் மோசமாக்குகிறது. இப்பொழுது நீ சிறுமி பருவத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதால், கடவுளுடைய ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை உன்னில் வளர்த்து வர கவலையோடு நீயே தனிப்பட்ட முயற்சி எடுப்பதற்கு இது காலமாய் இருக்கிறது.

19மேலும் சமநிலையில் உறுதியாயிருப்பதற்கு உதவி செய்கிற பழக்கங்களையும் வளர்த்து வா. உன்னுடைய அறை தாறுமாறாய்க் கிடக்க விடாமல், அதை ஒழுங்காகவும் துப்புரவாயும் வை. தூங்குவதிலும் சாப்பிடுவதிலும் உன் பழக்கங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முயற்சி செய்; வளர்ந்துகொண்டிருக்கிற உன் உடலுக்கு நீ கொடுக்கக்கூடிய எல்லா உதவியும் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட காரியங்களில் நீ எவ்வளவு அதிகம் செய்யக்கூடியவளாய் இருக்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாய் அமைதியும் உறுதிநிலையும் உள்ளவளாய் நீ உணருவாய், இது உன் உணர்ச்சிவேக அனுபவங்களைச் சமநிலைப்படுத்த உதவி செய்யும்.

20உன்னுடைய இந்த மாற்ற இடைநிலைக் காலம் உன்னை உன் பெற்றோரிடமிருந்து தூர இழுத்துவிட ஒருபோதும் அனுமதியாதே. இந்த மாறுதலின் காலத்தின் போது உன்னுடைய சமநிலையைக் காத்துக்கொள்ளும்படி நீ சார்ந்திருப்பதற்குத் தேவைப்படும் திடமான உதவியையும் நம்பத்தக்க மன உறுதியையும் கொடுக்கக்கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். “சரியிணை தொல்லை”—அதாவது உன்னுடைய வயதிலிருக்கும் மற்றப் பிள்ளைகள் அவர்களைப் போல் நீயும் இருக்கும்படி உன்னை வற்புறுத்துவதை நீ அனுபவிக்கையில்,—அவர்கள் தாமேயும் மாறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள். இதனால் இன்று அவர்களுக்குப் பிரியமாய் இருப்பது நாளை அவர்களுக்குச் சற்றும் பிரியமாயிராமற் போகலாம். அவர்கள் உன்னைப் பற்றி நினைப்பதைக் குறித்து மட்டுக்கு மீறி கவலைப்படுவது உன் பிரச்னைகளை அதிகரிக்கவே செய்யும். ஆகவே, தனிப்பட்ட அந்தரங்கக் கேள்விகள் எவையாவது உனக்கு இருக்கையில், உனக்குப் பதிலளித்து மேம்பட்ட தகவலை உனக்குக் கொடுக்கக்கூடியவர்கள் உன் பெற்றோரேயாவர். உன்னுடைய பள்ளித் தோழர்கள் உனக்குக் கொடுக்கக்கூடிய எத்தகைய பதிலைப் பார்க்கிலும் மிக அதிக முழுமையான, சமநிலைப்பட்ட பதிலை அவர்கள் உனக்குக் கொடுக்கக்கூடும்.

21முதல் மழை பெய்ததைப் பின் தொடர்ந்து அழகிய பூக்கள் உண்டாவதைப் போல், நீ புயலைச் சமாளித்து தடைகளைப் பொருட்படுத்தாமல் கடந்து முன்னேற கற்றுக்கொள்வாயானால் உறுதியான சமநிலைக்கும் நம்பிக்கைக்குமான வழியை நீ கண்டடைவாய். (நல்ல உணவை உட்கொண்டு உடல் நலத்திற்குரிய ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம்) உடல் சம்பந்தமாய் உன்னை நன்றாயும் சுத்தமாயும் வைத்துக் கொள்வதைப் பற்றி நீ அக்கறையுள்ளவளாய் இருக்கவேண்டுமென்றாலும், வெளித்தோற்றத்தில் நீ எப்படிப்பட்டவளாய் இருக்கிறாய் என்பதன்பேரில் அவ்வளவு முக்கியமாய் அல்ல, உட்புறத்தில் நீ எப்படிப்பட்டவளாய் இருக்கிறாய் என்பதன் பேரிலேயே நீ கவனத்தை ஊன்ற வைக்கவேண்டும். “உன் இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தால்” உண்டுபண்ணப்படுகிற “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி”யாகிய இந்த அலங்காரமே—கடவுளுடைய பார்வையிலும் மனிதரின் பார்வையிலும்—உன்னை உண்மையில் கவர்ச்சிகரமாக்கும்.—1 பேதுரு 3:3, 4.

[கேள்விகள்]

1-3. வளரிளமை பருவத்தின்போது ஒரு சிறுமிக்கு தன் சொந்த உடல் வளர்ச்சியைப் பற்றியதில் எது கவலை உண்டுபண்ணக்கூடும்? ஆனால் முடிவில் என்ன நடக்கிறது?

4-6. (எ) வளரிளமையின்போது ‘பெண்களுக்குள்ள என்ன வழிபாடு’ தொடங்குகிறது? இந்த உடல் வழிபாட்டால் என்ன நோக்கம் நிறைவேற்றப்படுகிறது? (பி) இந்தச் சமயத்தின்போது வேறு எந்த உடல் மாற்றங்கள்கூட ஏற்படுகின்றன, ஏன்?

7-10. (எ) ஒரு பெண்ணின் உடல் வளர்ச்சி, அவளுடைய நடத்தையைக் குறித்ததில் அவள்பேரில் எப்படிக்கூடுதலான உத்தரவாதத்தை வைக்கிறது? (பி) சாலொமோனின் உன்னதப்பாட்டில் குறிப்பிட்டிருக்கும் ஒரு பெண்ணை ஒரு “மதிலுக்கும்” ஒரு “கதவுக்கும்” ஒப்பிடுவதன் மூலம் இந்த உத்தரவாதம் எப்படிச் சித்தரித்துக் காட்டப்படுகிறது?

11-14. (எ) வெகு குட்டையான குறும் பாவாடைகளை அல்லது இறுக்கமான கம்பளிச் சட்டைகளை அணிவது ஏன் இளம் பெண்களை விரும்பத்தகாத பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும்? (பி) இளம் பெண்ணாக, முக்கியமாய் ஓர் இளைஞனுக்குக் கவர்ச்சிகரமாக இருக்க நீ விரும்புவது என்ன காரணங்களுக்காக?

15, 16. (எ) உன்னுடைய உடல் தோற்றத்தைப் பற்றி அக்கறையுள்ளவளாக இருப்பது இயல்பானதே என்றாலும், எது அதைப் பார்க்கிலும் மிக அதிகமாய் உன் எதிர்கால சந்தோஷத்திற்கு உதவி செய்யும்? (பி) அன்றாட நடைமுறை வாழ்க்கைப் போக்கில் நீதிமொழிகள் 11:22-ஐயும், நீதிமொழிகள் 31:30-ஐயும் விளக்கிக் காட்டு.

17-19. (எ) வளரிளமையின்போது என்ன உணர்ச்சிவேக மாற்றங்களை ஒரு பெண் அனுபவிக்கக்கூடும்? உணர்ச்சிவேக சமநிலையை அடைய எது அவளுக்கு உதவி செய்யக்கூடும்? (கலாத்தியர் 5:22, 23) (பி) ஒரு பெண் சமநிலையில் உறுதியாய் இருப்பதற்கு எந்தத் தனிப்பட்ட பழக்கங்களும் அவளுக்கு உதவி செய்யக்கூடும்?

20, 21. (எ) வாழ்க்கையைப் பற்றி ஏதாவது கேள்விகள் உனக்கு இருக்கிறதென்றால், மற்ற பருவ வயதினரிடமிருந்து கிடைக்கக்கூடியதைப் பார்க்கிலும் அதிக நம்பத்தக்கத் தகவலை உன் பெற்றோரிடமிருந்தே நீ ஏன் அடையக்கூடும்? (பி) முக்கியமாய் எது உன்னை மெய்யாகவே கவர்ச்சிகரமான ஆளாக்கும்?

[பக்கம் 28-ன் படம்]

நீ ஒரு கதவைப்போல் இருக்கிறாயா . . .

[பக்கம் 29-ன் படம்]

. . . அல்லது ஒரு மதிலைப்போல் இருக்கிறாயா?

[பக்கம் 32-ன் படம்]

உடல் தோற்றத்திற்கு மித மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கிறாயா?