உயிரினங்களின் வியப்பூட்டும் வடிவமைப்பு
அதிகாரம் 11
உயிரினங்களின் வியப்பூட்டும் வடிவமைப்பு
மனிதவியல் நிபுணர்கள் பூமியைத் தோண்டுகையில் கூர்மையான முக்கோண வடிவ கல்லைக் கண்டுபிடித்தால், அதை ஓர் அம்பின் நுனியாக பயன்படுத்துவதற்காக யாரோ ஒருவர் வடிவமைத்தார் என்ற முடிவுக்கே வருவர். ஒரு நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட அப்படிப்பட்ட பொருட்கள் தானாகவே வந்திருக்க முடியாது என விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர்.
2இருந்தபோதிலும், உயிரினங்கள் என்று வரும்போது இந்த நியாயவிவாதத்தை அடிக்கடி கைவிட்டுவிடுகின்றனர். வடிவமைப்பாளர் அவசியம் என்பதை மறந்துவிடுகின்றனர். ஆனால் வடிவமைக்கப்பட்ட ஒரு கல்லோடு ஒப்பிட, மிக எளிய ஒரு செல் உயிரி அல்லது அதன் மரபணுக் குறியீட்டின் டிஎன்ஏ-கூட மிக அதிக சிக்கல் வாய்ந்ததே. அப்படியிருந்தும், இவற்றை யாரும் வடிவமைக்கவில்லை, ஆனால் தொடர்ச்சியான தற்செயல் நிகழ்ச்சிகளால் இவை உருவாயின என்பதே பரிணாமவாதிகளின் வாதம்.
3வடிவமைக்கும் சக்தி ஏதோ ஒன்று தேவை என்பதை டார்வினே உணர்ந்தார், அதனால் அந்த வேலையை இயற்கை வழித்தேர்ந்தெடுப்பிற்கு கொடுத்துவிட்டார். “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு, மிகச் சிறிய மாற்றங்களுக்காக ஒவ்வொரு மணிநேரமும் ஒவ்வொரு நாளும் உலகமுழுவதிலும் கவனமாக ஆராய்கிறது. கெட்டதை நீக்கிவிட்டு, நல்லதை எல்லாம் பாதுகாத்து, கூட்டிச் சேர்க்கிறது”1 என அவர் கூறினார். ஆனால் இந்தக் கருத்திற்கு இப்போது மவுசு குறைந்துவருகிறது.
4உண்மையான மாற்றங்கள், “இயற்கை வழித்தேர்ந்தெடுப்பிற்கு உட்படாமலும் இனத் தொகுதிகள் மத்தியில் தாறுமாறான விதத்திலும் பரவியிருக்கலாம்”2 என சமகாலத்திய பரிணாமவாதிகளில் அநேகர் இப்போது
சொல்வதாக ஸ்டீஃபன் கௌல்ட் கூறுகிறார். “என்ன நிகழ்கிறதோ அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு விளக்குகிறது; பெரும்பகுதி விளக்கப்படாமலேயே உள்ளது”3 என்று கார்டன் டைலரும் ஒப்புக்கொள்கிறார். மண்ணியல் நிபுணர் டேவிட் ராப் பின்வருமாறு கூறுகிறார்: “தற்போது, தற்செயல் நிகழ்ச்சிகளின் பாதிப்புகளே இயற்கை வழித்தேர்ந்தெடுப்பிற்கு முக்கிய மாற்றீடாக இருக்கின்றன.”4 ஆனால் ‘தற்செயல் நிகழ்ச்சிகளை’ ஒரு வடிவமைப்பாளர் என்று கூற முடியுமா? வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்த சிக்கல்களை அதனால் உண்டாக்க முடியுமா?5உயிரினங்கள், “கவனமாகவும் திறமையாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது,” அதனால்தான் சில விஞ்ஞானிகள் அவற்றை, “ஒரு உன்னத வடிவமைப்பாளர் இருப்பதற்கான அதிமுக்கிய அத்தாட்சி”5 என்று கருதுகின்றனர் என பரிணாமவாதியான ரிச்சர்ட் லீவான்டின் ஒப்புக்கொண்டார். இந்த அத்தாட்சிகளில் சிலவற்றை சிந்திப்பது பிரயோஜனமானது.
சிறிய உயிரினங்கள்
6உயிரினங்களிலேயே மிகச் சிறியவையாகிய ஒற்றை செல் உயிரினங்களிலிருந்தே ஆரம்பிப்போமே. ஒரு செல்லுள்ள மிருகங்களுக்கு, “திசுக்களோ, உறுப்புகளோ, இதயங்களோ, மனங்களோ இல்லாதபோதிலும் நமக்கிருக்கும் எல்லாமே அவற்றிற்கும் உள்ளன”; அதோடு அவை “உணவைப் பிடித்து, அதைச் செறித்து, கழிவுப் பொருட்களை நீக்கி, இங்குமங்கும் நகர்ந்து, வீடுகளைக் கட்டி, இனப்பெருக்கத்தில் ஈடுபட”6 முடிகிறது என்று உயிரியல் வல்லுநர் ஒருவர் கூறினார்.
7ஒரு செல் உயிரினங்களான நுண்பாசிகள் (diatoms), கடல் நீரிலுள்ள சிலிகனையும் ஆக்ஸிஜனையும் உபயோகித்து கண்ணாடி செய்கின்றன; அதை உபயோகித்து சிறிய “மாத்திரை பெட்டிகள்” செய்து அவற்றில் பச்சையத்தை சேகரித்து வைக்கின்றன. அவற்றின் முக்கியத்துவத்தையும் அழகையும் ஒரு விஞ்ஞானி இவ்வாறு புகழ்ந்து தள்ளினார்: “நகைப் பெட்டிகளில் வைக்கப்பட்ட இந்தப் பச்சை இலைகளில்தான், கடலில் வாழும் அனைத்து பிராணிகளின் உணவில் பத்தில் ஒன்பது பங்கு விளைகிறது.” நுண்பாசிகளின் உணவு மதிப்பின் (food value) பெரும்பகுதி அவை உண்டுபண்ணும் எண்ணெயில்தான் உள்ளது; அவற்றின் பச்சையம் சூரிய ஒளியில் திளைக்கும் விதத்தில் கடல்மட்டத்தில் துள்ளி மிதப்பதற்கு உதவுவதும் இந்த எண்ணெயே.
8இதே விஞ்ஞானி தொடர்ந்து சொல்கிறார்: அவற்றின் அழகிய கண்ணாடிப் பெட்டிகள், “வட்டங்கள், சதுரங்கள், கேடயங்கள், முக்கோணங்கள், நீள் வட்டங்கள், நீள் சதுரங்கள் என திகைப்புறச் செய்யும் பல்வேறு வடிவங்களில் உள்ளன; அவை எப்போதுமே வடிவியல் சார்ந்த செதுக்கங்களால் எழிலுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தூய்மையான கண்ணாடியாலான
இவை, மனிதனின் முடி ஒன்றை குறுக்காக நானூறு கூறுகளாக்கி அதில் ஒன்றை இந்தச் செதுக்குக் குறிகளுக்கிடையே பொருத்தும் அளவிற்கு அவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன.”79கடலில் வாழும் மிருகங்களான ஆரக்காலிகள் (radiolarians) கண்ணாடி செய்து, “சூரியனைச் சுற்றியுள்ள கதிர்கள் போல காட்சியளிக்கும் கண்ணாடியாலான ஓர் அமைப்பை உண்டுபண்ணுகின்றன; அதின் நடுவிலுள்ள பளிங்கு உருளையிலிருந்து நீண்ட, மெல்லிய, தெள்ளத்தெளிவான முட்கள் விரிந்து செல்கின்றன.” அல்லது “கண்ணாடியாலான குறுக்கு சட்டங்களை உடைய அறுகோணங்களையும் அவற்றைக்கொண்டு எளிய கோள வடிவ குவிமாடங்களையும் (geodesic domes) உண்டாக்குகின்றன.” ஒரு குறிப்பிட்ட நுண் கட்டட கலைஞரைப் பற்றி இவ்வாறு சொல்லப்படுகிறது: “இந்த மிகச் சிறந்த கட்டடக் கலைஞருக்கு கோள வடிவ குவிமாடம் ஒன்று போதாது; இழைப் பின்னல் வேலைப்பாடுகள் நிறைந்த, ஒன்றிற்குள் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள மூன்று குவிமாடங்களே வேண்டும்.”8 அற்புதகரமான இந்த வடிவங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, படங்களைப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
10கடற்பஞ்சுகளில் (sponge) லட்சக்கணக்கான செல்கள் உள்ளன, ஆனால் அநேக வித்தியாசமான வகைகள் இல்லை. கல்லூரி பாடபுத்தகம் ஒன்று இவ்வாறு விளக்குகிறது: அவற்றின் “செல்கள் திசுக்களாகவோ உறுப்புகளாகவோ ஒழுங்கமைக்கப்பட்டில்லை; ஆனாலும் அந்தச் செல்கள் ஏதோ ஒருவிதத்தில் ஒன்றையொன்று அறிந்துகொள்கின்றன, இதுவே அவற்றை ஒன்றாக இணைத்து ஒழுங்கமைக்கிறது.”9 ஒரு கடற்பஞ்சை துணியில் வைத்து கசக்கி அதன் லட்சக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்தாலும் அவை மறுபடியும் ஒன்றாக சேர்ந்து அந்தக் கடற்பஞ்சை உருவாக்கிவிடும். கடற்பஞ்சுகள் மிகவும் அழகிய கண்ணாடியாலான எலும்புக்கூடுகளைக் கட்டுகின்றன. அதில் மிகவும் வியப்பூட்டுகிற ஒன்று வீனஸின் பூக்கூடையாகும் (Venus’s-flower-basket).
11அதைப் பற்றி ஒரு விஞ்ஞானி இவ்வாறு கூறினார்: “சிலிகா முட்கள் நிறைந்த [வீனஸின் பூக்கூடை] என்றழைக்கப்படுவதைப் போன்ற சிக்கலான கடற்பஞ்சுகளின் எலும்புக்கூட்டைப் பார்க்கையில் நமது கற்பனைத் திறன் திணறிப்போகிறது. குறைந்தளவே தனித்தியங்கும் தன்மையுடைய நுண்ணிய செல்கள் ஒன்றிணைந்து லட்சக்கணக்கான கண்ணாடி துண்டுகளை சுரந்து, அப்பேர்ப்பட்ட கடுஞ்சிக்கலான அழகிய பின்னலமைப்பை எவ்வாறு உருவாக்க முடியும்? அது எங்களுக்கு தெரியாது.”10 ஆனால் நாம் அறிந்த ஒரு விஷயம், தற்செயல் நிகழ்ச்சி அதை நிச்சயம் வடிவமைத்திருக்க முடியாது.
கூட்டாளி உறவுகள்
12அநேக சமயங்களில் இரண்டு உயிரிகள் கூடி வாழ்வதற்காகவே வடிவமைக்கப்பட்டிருப்பதாக
தோன்றுகின்றன. இப்படிப்பட்ட உறவுகள் கூட்டு வாழ்வுக்கு (symbiosis) உதாரணங்களாகும். சில அத்திமரங்களும் குளவிகளும் இனப்பெருக்கம் செய்வதற்கு ஒன்றையொன்று சார்ந்துள்ளன. கறையான்கள் மரத்தை சாப்பிடுகின்றன, ஆனால் அதை செரிப்பதற்கு அவற்றின் உடலுக்குள்ளிருக்கும் ஓரணு உயிரிகளையே சார்ந்துள்ளன. அதைப்போலவே கால்நடைகள், ஆடுகள், ஒட்டகங்கள் ஆகியவையும் அவற்றின் உடல்களுக்குள் ‘குடியிருக்கும்’ பாக்டீரியா மற்றும் ஓரணு உயிரிகள் இல்லையென்றால் புல்லிலுள்ள செல்லுலோஸை செரிக்க முடியாது. ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “மாட்டின் வயிற்றில் இந்தச் செரிமானம் நிகழும் இடம் சுமார் 95 லிட்டர் கொள்ளளவு உடையது; அதிலுள்ள ஒவ்வொரு துளியிலும் 1,000 கோடி நுண்ணுயிரிகள் உள்ளன.”11 பூஞ்சைகளும் பாசிகளும் ஒன்றுசேர்ந்து பூப்பாசிகளாக (lichens) வாழ்கின்றன. அப்போதுதான் அவை கற்பாறைமீது வளர்ந்து அந்தப் பாறையை மண்ணாக மாற்ற ஆரம்பிக்க முடியும்.13உள்ளே காலியாக இருக்கும் வேல மர முட்களில் கொட்டும் எறும்புகள் குடியிருக்கின்றன. இவை, இலைகளைத் திண்ணும் பூச்சிகள் மரத்தை அண்டாதபடிக்கு ‘காவல்காத்து,’ மரத்தின் மீது வளர முயலும் கொடிகளை வளரவிடாமல் அழித்தும் போடுகின்றன. இதற்கு பிரதி உபகாரமாக அந்த மரம், எறும்புகளுக்கு மிகவும் பிடித்த தித்திப்பான ஒரு திரவத்தை சுரக்கிறது. அதுமட்டுமா, அந்த எறும்புகளுக்கு உணவளிக்க பழம்போல் தோன்றும் சிறுசிறு கனிகளையும்கூட அது உற்பத்தி செய்கிறது. முதலில் எறும்பு அந்த மரத்தைப் பாதுகாத்ததால் மரம் பழத்தைத் தந்து அதை உபசரிக்கிறதா? அல்லது முதலில் அந்த மரம் பழத்தை எறும்பிற்கு தந்ததால் கைமாறாக எறும்பு அதற்கு பாதுகாப்பளிக்கிறதா? அல்லது இவையெல்லாம் தானாகவே திடீரென்று நிகழ்ந்தனவா?
14மலர்களுக்கும் பூச்சிகளுக்கும் மத்தியில் இப்படிப்பட்ட அநேக உறவுகள் உள்ளன. மலர்களில் மகரந்தச் சேர்க்கை (pollination) நிகழ பூச்சிகள் உதவுகின்றன, இதற்கு கைமாறாக மலர்கள் அந்தப் பூச்சிகளுக்கு மகரந்தமும் தேனும் கொடுத்து உபசரிக்கின்றன. சில மலர்கள் இரண்டு வித மகரந்தங்களை (pollen) உண்டுபண்ணுகின்றன. ஒன்று விதை உருவாக உதவுகிறது, மலடான மற்றொன்று பூச்சிகளின் உணவாகிறது. பூச்சிகளை தேன் இருக்கும் இடத்திற்கு வழிநடத்த விசேஷ குறியீடுகளும் வாசனைகளும்கூட அநேக மலர்களில் உண்டு. பூச்சிகள் தேன் அருந்தச் செல்லும் வழியில் அந்த மலரில் மகரந்தச் சேர்க்கை செய்துவிடுகின்றன. சில மலர்களிலோ விசை இயக்கங்களும் உள்ளன. பூச்சிகள் அந்த விசையைத் தட்டும்போது மகரந்தத் தூள் நிறைந்த மகரந்தப் பைகள் (anthers) பூச்சிகள் மீது மோதுகின்றன.
15உதாரணமாக, டச்மேன்ஸ்-பைப் (Dutchman’s-pipe) என்ற மலர் சுயமாக மகரந்தச் சேர்க்கையில் ஈடுபட முடியாது, மாறாக மற்றொரு மலரிலிருந்து
மகரந்தத்தைப் பெற பூச்சிகளின் உதவி அதற்கு தேவை. அந்தச் செடியின் மலரை மூடியிருக்கும் குழாய்போன்ற இலையில் மெழுகு பூசப்பட்டுள்ளது. அம்மலரின் வாசனையால் சுண்டியிழுக்கப்படும் பூச்சிகள் அந்த இலைமீது வந்து அமர்கின்றன. வழுவழுப்பான சறுக்கு மரத்தில் அவை சறுக்கி கீழே உள்ள ஓர் அறையில் தொப்பென்று விழுகின்றன. அங்கே, கனிந்திருக்கும் சூலகம் (stigma) அந்தப் பூச்சி கொண்டுவந்த மகரந்தத் தூளைப் பெற்றுக்கொள்கிறது, இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது. ஆனால், மெழுகு பூசிய பக்கங்களும் முடிகளும் அந்தப் பூச்சிகள் தப்பிச் செல்வதைத் தடைசெய்வதால் அடுத்த மூன்று நாட்களுக்கு அவற்றிற்கு சிறைவாசம்தான். பிறகு அந்த மலரின் மகரந்தத் தூள் கனிந்து அந்தப் பூச்சி மீது தூவப்படுகிறது. பின்னர்தான் அந்த முடிகள் உதிர்ந்து, மெழுகு பூசிய சறுக்கு மரம் சாய்ந்து சமநிலைக்கு வருகிறது. அப்போது பூச்சிகள் புதிய மகரந்தத் தூள்களைச் சுமந்து கொண்டு ‘விடுதலையாகி’ வெளியே செல்கின்றன; மற்றொரு டச்மேன்ஸ்-பைப் மலருக்கு பறந்து சென்று அதில் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன. மூன்று நாள் சிறைவாசம் பற்றி அந்தப் பூச்சிகள் கவலைப்படுவதே இல்லை. அவற்றிற்காக சேமித்து வைக்கப்பட்ட தேன் அங்கு இருக்கும்போது என்ன கவலை? இவை எல்லாம் தானாகவே நிகழ்ந்தனவா? அல்லது புத்திக்கூர்மையுள்ள ஒருவர் இவற்றை வடிவமைத்தாரா?16சில வகை ஓபிர்ஸ் (Ophrys) ஆர்க்கிட் மலர்களின் அல்லி வட்டங்களில் (petals) பெண் குளவிகளின் சித்திரம் உள்ளது; கண்கள், உணர்கொம்புகள், இறகுகள் ஆகியவற்றுடன் பார்ப்பதற்கு அசல் பெண் குளவிபோலவே அது காட்சியளிக்கும். அதோடு, இனம் சேரும் நிலையிலுள்ள பெண் குளவியின் வாசனையும்கூட அதிலிருந்து வெளிவருகிறது! இனம் சேர முயலும் ஓர் ஆண் குளவி, பாவம் மகரந்தச் சேர்க்கைதான் நிகழ்த்திவிட்டு போகிறது. பக்கெட் ஆர்க்கிட் (bucket orchid) என்ற மற்றொரு ஆர்க்கிட் மலரில் புளித்த தேன் உள்ளது. அதை உண்ணும் தேனீ தள்ளாட ஆரம்பித்து, திரவம் நிறைந்த ஒரு வாளிக்குள் விழுகிறது. அதிலிருந்து வெளியே வர ஒரே ஒரு வழிதான் உண்டு, ஒரு கோலின் அடியில் நுழைந்து வரவேண்டும். அவ்வாறு வரும்போது அந்தத் தேனீ மீது மகரந்தத் தூள் தூவப்படுகிறது.
இயற்கையின் “தொழிற்சாலைகள்”
17தாவரங்களின் பச்சை இலைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகத்திற்கே உணவளிக்கின்றன. ஆனால் சிறியதாக உள்ள வேர்களின் உதவியில்லை என்றால் இலைகளால் ஒன்றுமே செய்யமுடியாது. லட்சக்கணக்கான சிறு வேர்கள் (rootlets) மண்ணிற்குள் ஊடுருவி செல்கின்றன; வேரின் வளர்நுனி (root tip) ஒவ்வொன்றும் வேர் மூடியால் (root cap) பாதுகாக்கப்படுகிறது, வேர் மூடி ஒவ்வொன்றும் எண்ணெயால் மசகிடப்பட்டுள்ளது. எண்ணெய் பிசுக்குள்ள இந்த வேர் மூடிகளுக்கு பின்னாலுள்ள வேர் முடிகள் (root hairs) தண்ணீரையும் கனிமங்களையும் உறிஞ்சுகின்றன; இவை, மத்தியிலுள்ள சாற்றுக்கட்டையில் (sapwood) இருக்கும் நுண்ணிய வாய்க்கால்கள்
மூலமாக இலைகளை நோக்கி பயணம் செய்கின்றன. இலைகளில் சர்க்கரைகளும் அமினோ அமிலங்களும் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் மரம் முழுவதற்கும் வேர்களுக்கும்கூட அனுப்பப்படுகின்றன.18மரங்களிலும் தாவரங்களிலும் காணப்படும் சுழற்சி மண்டலத்தின் சில பண்புகள் மிகவும் வியப்பூட்டுபவையாய் இருப்பதால் அநேக விஞ்ஞானிகள் அவற்றை ஓர் அற்புதம் என்றே கருதுகின்றனர். முதலாவது, தரையிலிருந்து தண்ணீர் எவ்வாறு 60 அல்லது 100 மீட்டர் உயரம் வரை செல்கிறது? வேர் அழுத்தம் (root pressure) அதை ஆரம்பித்து வைக்கிறது, ஆனால் மரத்தண்டில் மற்றொரு சக்தி இதற்கு உதவுகிறது. தண்ணீர் மூலக்கூறுகள் அணுப் பிணைவு (cohesion) மூலமாக ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. இலைகளிலிருந்து தண்ணீர் ஆவியாகி வெளியேறும்போது இந்தப் பிணைவு காரணமாக, வேர்கள் முதல் இலைகள் வரை செல்லும் தொடர்ச்சியான நீர் பகுதிகள் கயிறுகள்போல மேலே இழுக்கப்படுகின்றன; அதுவும் மணிக்கு சுமார் 60 மீட்டர் வேகத்தில் செல்கின்றன. இந்த முறை, ஒரு மரத்தில் ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் உயரம் வரை தண்ணீரை மேலே எடுத்துச் செல்வதாக சொல்லப்படுகிறது! இலைகள் வழியாக கூடுதலான தண்ணீர் வெளியேறுகையில் [நீராவிப்போக்கு (transpiration) என அழைக்கப்படுகிறது], நூறு கோடி டன் கணக்கான தண்ணீர் மறுபடியும் காற்றில் கலக்கிறது; இது மறுபடியும் மழை நீராக ‘இறங்கி வருகிறது.’ என்னே துல்லியமாய் வடிவமைக்கப்பட்ட ஓர் அமைப்பு!
19அதிசயம் இன்னும் முடியவில்லை. அதிமுக்கிய அமினோ அமிலங்களைத் தயாரிக்க நிலத்திலிருக்கும் நைட்ரேட்டுகள் அல்லது நைட்ரைட்டுகள் இலைகளுக்கு தேவை. இவற்றில் கொஞ்சம், மின்னல் மற்றும் தனித்து வாழும் பாக்டீரியா மூலமாக நிலத்தில் நிலைப்படுத்தப்படுகிறது. அதோடு பட்டாணி, க்ளோவர், அவரை, ஆல்ஃபால்ஃபா போன்ற பருப்புக்கனி தாவரங்களும் (legumes) போதுமான அளவு நைட்ரஜன் சேர்மங்களை தயாரிக்கின்றன. இவற்றின் வேர்களுக்குள் சில பாக்டீரியாக்கள் சென்றுவிடுகின்றன. வேர்கள் பாக்டீரியாவிற்கு மாவுச் சத்தைப் ‘பரிசளிக்கின்றன,’ பாக்டீரியாக்களோ நிலத்திலுள்ள நைட்ரஜனை உபயோகமான நைட்ரேட்டுகள் அல்லது நைட்ரைட்டுகளாக மாற்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 90 கிலோ தயாராகிறது.
20அதிசயங்கள் தொடர்கின்றன. பச்சை இலைகள், சூரியனிலிருந்து சக்தி, காற்றிலிருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு, தாவர வேர்களிலிருந்து தண்ணீர் ஆகியவற்றைப் பெற்று சர்க்கரை தயாரித்து, ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன.
இந்தச் செயல் ஒளிச்சேர்க்கை (photosynthesis) என்று அழைக்கப்படுகிறது. இது செல்லில் உள்ள குளோரோபிளாஸ்டில் நடைபெறுகிறது; இந்த வாக்கியத்தின் முடிவிலுள்ள முற்றுப் புள்ளிக்குள் இந்தக் குளோரோபிளாஸ்டில் 4,00,000-த்தை அடைத்துவிடலாம் என்றால் இவை எவ்வளவு சிறியவை என்று பார்த்துக்கொள்ளுங்கள். விஞ்ஞானிகளால் இந்தச் செயலை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஓர் உயிரியல் வல்லுனர் கூறினார்: “ஒளிச்சேர்க்கையில் 70 விதமான வேதி வினைகள் உட்பட்டுள்ளன. அது உண்மையிலேயே ஓர் அற்புதகரமான நிகழ்ச்சி.”12 பசுந்தாவரங்கள் இயற்கையின் “தொழிற்சாலைகள்” என்றும் அழைக்கப்பட்டுள்ளன; அவை அழகான, அமைதியான, மாசுபடுத்தாத, ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிற, தண்ணீரை மறுசுழற்சி செய்கிற, உலகத்திற்கே உணவூட்டுகிற தொழிற்சாலைகள். இவை தற்செயலாக வந்தனவா? அதை உண்மையிலேயே நம்பமுடியுமா?21உலகின் பிரபலமான விஞ்ஞானிகளில் சிலர் அதை நம்புவதைக் கடினமாக கண்டுள்ளனர். அவர்கள், இயற்கை உலகில் புத்திக்கூர்மையைக் காண்கின்றனர். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் வல்லுனர் ராபர்ட் ஏ. மில்லிகன் பரிணாமத்தை நம்பினாலும், அமெரிக்க இயற்பொருள் கழக கூட்டம் ஒன்றில் பின்வருமாறு கூறினார்: “நம் முடிவுகளை திட்டமிடும் ஒரு தெய்வத்தன்மை உள்ளது . . . பொருளாதார எண்ணத்தில் முழுமையாக மூழ்கியிருப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனத்தின் உச்சக்கட்டமே. எல்லா காலத்திலும் வாழ்ந்த ஞானிகள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதற்கு போதுமான காரணங்களை எப்போதுமே பார்த்திருக்கின்றனர்.” அவருடைய பேச்சில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார். “இயற்கையில் காணப்படும் புத்திக்கூர்மையின் மிகச் சிறிய பகுதியைக்கூட புரிந்துகொள்வதற்கு தாழ்மையோடு முயற்சி”13 செய்ததாக ஐன்ஸ்டீன் கூறினார்.
22எண்ணற்ற பல்வேறு வகைகளிலும் வியக்கவைக்கும் நுணுக்கங்களிலும் வடிவமைப்பிற்கான அத்தாட்சி நம்மைச் சூழ்ந்து நின்று மேன்மையான ஒரு புத்திக்கூர்மை உண்டு என சுட்டிக்காட்டுகின்றன. இதே முடிவைத்தான் பைபிளும் ஆதரிக்கிறது. அது, வடிவமைப்பிற்கான காரணகர்த்தா சிருஷ்டிகரே என்றும் “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமையும் தெய்வத்துவமும் படைக்கப்பட்டவைகளின் மூலமாய் உலக சிருஷ்டிப்பு முதற்கொண்டு கவனிக்கிறவர்களுக்குத் தெளிவாய்க் காணப்படும். எவரும் போக்குச்சொல்வதற்கு இடமில்லை” என்றும் கூறுகிறது.—ரோமர் 1:20, தி.மொ.
23நம்மைச் சுற்றியுள்ள உயிர்களில் வடிவமைப்பு தெள்ளத் தெளிவாக காணப்படுகிறது. அப்படியிருந்தும், குருட்டுத்தனமான தற்செயல் நிகழ்ச்சிகளே இதற்கு காரணம் என்று சொன்னால் “போக்குச்சொல்வதற்கு இடமில்லை” என்றே தோன்றுகிறது. ஆகவே சங்கீதக்காரன், இதற்கான புகழை புத்திக்கூர்மையுள்ள ஒரு சிருஷ்டிகருக்கு கொடுக்கையில் அவர் நியாயமற்றவராக இல்லை: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.”—சங்கீதம் 104:24, 25.
[கேள்விகள்]
1, 2. (அ) வடிவமைப்பாளர் தேவையென விஞ்ஞானிகள் உணர்கின்றனர் என்பதை எது காட்டுகிறது? (ஆ) ஆனாலும் அவர்களே பிறகு எவ்வாறு பின்வாங்குகின்றனர்?
3. எது தேவை என டார்வின் உணர்ந்தார், அதை எவ்வாறு பூர்த்தி செய்ய முயன்றார்?
4. இயற்கை வழித்தேர்ந்தெடுப்பு பற்றிய கருத்துகள் எவ்வாறு மாறிவருகின்றன?
5. வடிவம் பற்றியும் அதன் வடிவமைப்பாளர் பற்றியும் ஒரு பரிணாமவாதி என்ன ஒப்புக்கொண்டார்?
6. ஒரு செல் உயிரினங்கள் உண்மையில் எளிமையானவையா?
7. நுண்பாசிகள் எப்படி, எதற்காக கண்ணாடி செய்கின்றன, கடல் வாழ்க்கைக்கு அவை எந்தளவு முக்கியமானவை?
8. நுண்பாசிகளின் மூடிகள் எவ்வளவு சிக்கலான வடிவங்கள் கொண்டவை?
9. ஆரக்காலிகள் கட்டும் வீடுகளில் சில எந்தளவு சிக்கல் வாய்ந்தவை?
10, 11. (அ) கடற்பஞ்சுகள் என்றால் என்ன, ஒரு கடற்பஞ்சு முழுவதுமாக சிதைந்துபோனால் அதன் தனிச் செல்களுக்கு என்ன நேரிடுகிறது? (ஆ) கடற்பஞ்சின் எலும்புக்கூடுகள் பற்றிய எந்தக் கேள்விக்கு பரிணாமவாதிகளால் பதிலளிக்க முடியவில்லை, ஆனால் நாம் எதை அறிந்திருக்கிறோம்?
12. கூட்டு வாழ்வு என்றால் என்ன, அதற்கு சில உதாரணங்கள் யாவை?
13. வேல மரங்களுக்கும் கொட்டும் எறும்புகளுக்கும் மத்தியிலுள்ள கூட்டுறவு என்ன கேள்விகளை எழுப்புகிறது?
14. மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்ந்திழுக்க மலர்கள் உபயோகிக்கும் விசேஷித்த ஏற்பாடுகளும் இயக்கங்களும் என்னென்ன?
15. அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதை டச்மேன்ஸ்-பைப் மலர் எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்கிறது, இதனால் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
16. சில வகை ஓபிர்ஸ் ஆர்க்கிட் மற்றும் பக்கெட் ஆர்க்கிட் மலர்களில் எவ்வாறு மகரந்தச் சேர்க்கை நிகழ்கிறது?
17. தாவரங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் இலைகளும் வேர்களும் எவ்வாறு ஒத்துழைக்கின்றன?
18. (அ) வேர்களிலிருந்து இலைகளுக்கு தண்ணீர் எவ்வாறு செல்கிறது, இது போதுமானதற்கும் அதிகமே என்பதை எது காட்டுகிறது? (ஆ) நீராவிப்போக்கு என்றால் என்ன, இது தண்ணீர் சுழற்சிக்கு எவ்வாறு உதவுகிறது?
19. சில வேர்களுக்கும் பாக்டீரியாக்களுக்கும் மத்தியிலுள்ள உறவு என்ன முக்கிய சேவைக்கு இடமளிக்கிறது?
20. (அ) ஒளிச்சேர்க்கையால் என்ன பலன், அது எங்கே நடைபெறுகிறது, இந்நிகழ்ச்சியை யார் புரிந்துகொண்டுள்ளனர்? (ஆ) ஓர் உயிரியல் வல்லுனர் அதை எவ்வாறு கருதுகிறார்? (இ) பசுந்தாவரங்களை என்னவென்று அழைக்கலாம், அவை எந்தவிதத்தில் சிறந்து விளங்குகின்றன, என்ன கேள்விகள் பொருத்தமானவை?
21, 22. (அ) இயற்கை உலகின் புத்திக்கூர்மைக்கு அத்தாட்சி அளிப்பவர்களாய் இரண்டு புகழ்பெற்ற விஞ்ஞானிகள் என்ன கூறினார்கள்? (ஆ) இந்த விஷயத்தைப் பற்றி பைபிள் எவ்வாறு நியாயவிவாதம் செய்கிறது?
23. சங்கீதக்காரன் எந்த நியாயமான முடிவைக் கூறுகிறார்?
[பக்கம் 151-ன் சிறு குறிப்பு]
“ஒளிச்சேர்க்கையில் 70 விதமான வேதி வினைகள் உட்பட்டுள்ளன. அது உண்மையிலேயே ஓர் அற்புதகரமான நிகழ்ச்சி”
[பக்கம் 148, 149-ன் பெட்டி/படங்கள்]]
விதைகளின் விந்தையான வடிவங்கள்
கனிந்த விதைகள், புறப்படத் தயார்!
விதைகளை ‘வழியனுப்பி’ வைக்க பல்வேறுபட்ட அதிசயமான வடிவமைப்புகள் உள்ளன. ஆர்க்கிட் மலர்களின் விதைகள் தூசியைப் போல காற்றில் பறக்கும் அளவிற்கு பாரமற்றவை. டான்டிலியன் (dandelion) விதைகளுக்கோ பாராசூட் வசதி உண்டு. மேப்பிள் (maple) விதைகள் வண்ணத்துப்பூச்சிகளைப் போல சிறகடித்து பறந்துவிடுகின்றன. நீர்த்தாவரங்கள் சிலவற்றின் விதைகளில் காற்று நிறைந்த மிதவைகள் இருப்பதால் அவை மிதந்து செல்கின்றன.
சில தாவரங்களின் கனிகள் வெடித்துத் திறப்பதால் விதைகள் வெளியே தூக்கியெறியப்படுகின்றன. விட்ச் ஹேசல் (witch hazel) என்ற செடிக்கோ வழுவழுப்பான விதைகள் உண்டு. அவை பழத்திலிருந்து பிதுக்கி எடுக்கப்பட்டு பின்னர் தூக்கி எறியப்படுகின்றன. சிறு பிள்ளைகள் தர்ப்பூசனி விதைகளைத் தங்கள் ஆட்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் மத்தியில் வைத்து பிதுக்கி விளையாடுவார்களே அப்படித்தான். பீச்சியடிக்கும் வெள்ளரிக்காய் (squirting cucumber), நீரியல் (hydraulics) முறையைப் பயன்படுத்துகிறது. அது வளருகையில் அதன் தோல் உட்புறமாக பருமனாகிக்கொண்டே வருவதால் அதற்குள் இருக்கும் திரவம் அதிக அழுத்தத்திற்குள்ளாகிறது. விதைகள் முற்றிய பிறகு அந்த அழுத்தம் உச்சக்கட்டத்தை அடைகிறது. ஒரு புட்டியின் தக்கை உள்ளழுத்தத்தினால் தானாகவே கழண்டு வெளியே தூக்கியெறியப்படுவதைப் போல அது தண்டிலிருந்து தூக்கியெறியப்படுகையில் விதைகள் வெளியே பீச்சியடிக்கப்படுகின்றன.
[படங்கள்]
டான்டிலியன்
மேப்பிள்
பீச்சியடிக்கும் வெள்ளரிக்காய்
மழை பொழிவை அளக்கும் விதைகள்
பாலைவனத்தில் வாழும் ஓராண்டு தாவரங்கள் (annuals) சிலவற்றின் விதைகள், இரண்டு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் அதிகமாக மழை பெய்தால் மட்டுமே முளைக்க ஆரம்பிக்கும். தண்ணீர் எந்தத் திசையிலிருந்து வருகிறது என்றுகூட அவை ‘மோப்பம்’ பிடித்துவிடுகின்றன போலும். மேலேயிருந்து மழை நீர் பெய்தால் மட்டுமே முளைக்கின்றன, கீழேயிருந்து நீர் நிரம்பி அவற்றை நனைத்தால் அவை முளைப்பதில்லை. ஏனென்றால் விதையை முளைக்கவிடாமல் தடுக்கும் சில உப்புகள் நிலத்தில் உண்டு. மேலேயிருந்து மழை நீர் பெய்தால் மட்டுமே அந்த உப்புகளை அடித்துச் செல்ல முடியும். கீழேயிருந்து நிரம்பிவரும் நீரால் இதைச் செய்ய முடியாது.
பாலைவனத்தில் வாழும் இந்த ஓராண்டு தாவரங்கள் சிறிய மழைக்கு பிறகு முளைக்க ஆரம்பித்துவிட்டால் சீக்கிரத்தில் இறந்துவிடும். பெருமழை பெய்தால்தான் நிலத்தில் போதுமான அளவு ஈரப்பதம் சேரும், அப்போதுதான் பின்னர் வரும் வறண்ட காலத்தின்போது அவற்றால் தாக்குப்பிடிக்க முடியும். ஆகவே அதற்காக காத்திருக்கின்றன. தற்செயலா அல்லது வடிவமைப்பா?
சிறு பொட்டலத்தில் மாபெரும் வீரன்
மிகச் சிறிய விதைகள் ஒன்றில், பூமியில் உள்ளதிலேயே மிகப் பெரிய உயிரினம் அடங்கியுள்ளது. அது என்ன தெரியுமா? அதுதான் மாபெரும் செக்கோயா (giant sequoia) மரம். அதன் உயரம் 100 மீட்டருக்கும் அதிகம். தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் அதன் விட்டம் 11 மீட்டர்கூட இருக்கலாம். ஒரு மரத்தை வைத்து, ஆறு அறைகள் கொண்ட 50 வீடுகளைக் கட்ட முடியும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு, 60 சென்டிமீட்டர் பருமனுள்ள அதன் மரப்பட்டையில் உள்ள டேனின் (tannin) பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டியடிக்கிறது. அதன் பஞ்சுபோன்ற, நார்நாரான அமைப்பும் ஆஸ்பெஸ்டாஸ் போல தீப்பிடிக்காதபடிக்கு அதைக் காக்கிறது. அதன் வேர்கள் மூன்று அல்லது நான்கு ஏக்கருக்குப் பரவுகின்றன. ஒரு மரம் 3,000-த்திற்கும் அதிகமான வருடங்கள் வாழ்கிறது.
இருப்பினும், செக்கோயா மரத்திலிருந்து சிதறும் லட்சக்கணக்கான விதைகள் ஒவ்வொன்றும் குண்டூசியின் தலை அளவுதான் இருக்கும், அதற்கு சிறிய இறக்கைகள் வேறு. செக்கோயா மரத்தடியில் நின்று அண்ணாந்து பார்க்கும் ஒரு மனிதன் அதன் மகத்தான அளவைப் பார்த்து வாயடைத்து நிற்கத்தான் முடியும். நேர்த்தியான இந்த இராட்சதனும் அவனைத் தனக்குள் அடக்கியுள்ள சிறு பொட்டலம் போன்ற விதையும் வடிவமைக்கப்படவில்லை என சொல்வது கொஞ்சமாவது நம்பும்படி உள்ளதா?
[பக்கம் 150-ன் பெட்டி/படங்கள்]
இசை மேதைகள்
நையாண்டிப் பறவை (mockingbird) மற்ற பறவைகள் போல குரல் எழுப்புவதில் பெயர் பெற்றது. ஒரு பறவை, ஒரு மணிநேரத்தில் விதவிதமான 55 பறவைகளைப் போல பாசாங்கு செய்தது. ஆனால் இந்த நையாண்டிப் பறவைக்கு சொந்தமான, இனிய இராக வகைகளைக் கேட்டுத்தான் அநேகர் சொக்கிப்போகின்றனர். ‘இது என்னுடைய இடம், அத்துமீறினால் ஆபத்து’ என்று அறிவிப்பதற்காக அது சத்தமிடும் எளிய ஒலிகளைவிட இந்த இராக வகைகள் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் அவற்றின் சந்தோஷத்திற்காகவா அல்லது நாமும் சந்தோஷப்படுவதற்காகவா?
பாட்டுப்பாடும் ரென்கள் (musician wrens) வட அமெரிக்காவைச் சேர்ந்தவை. இவையும் எந்தவிதத்திலும் குறைந்தவை அல்ல. வெப்ப மண்டலத்தைச் சேர்ந்த மற்ற பறவை ஜோடிகளைப் போலவே இந்த இனத்தின் இணை சேரும் ஜோடிகளும் டூயட் பாடுகின்றன. அவற்றின் இசைக் கச்சேரிகள் மிகவும் சிறப்பானவை. ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஆணும் பெண்ணும் ஒரே பாடலை ஒன்றாக சேர்ந்து பாடும், வெவ்வேறு பாடல்களை அல்லது ஒரே பாடலின் வெவ்வேறு வரிகளை மாறிமாறி பாடும். அவை அவ்வளவு துல்லியமான சமயத்தில் பாடுவதால் அந்தப் பாட்டைக் கேட்பதற்கு ஒரே ஒரு பறவை பாடுவதைப் போலிருக்கும்.”a இவ்வாறு இணை சேர்ந்த இரண்டு ரென்களும் மெல்லிசையில் காதல் மொழி பேசுவதைக் கேட்பது காதில் தேன் மழை பொழிவதைப் போல் இனிக்கிறது அல்லவா? வெறும் தற்செயலான விபத்தினால் நிகழ்ந்ததா?
[பக்கம் 142-ன் படங்கள்]
வடிவமைப்பாளர் தேவை
வடிவமைப்பாளர் தேவையில்லையா?
[பக்கம் 143-ன் படங்கள்]
நுண்ணிய தாவரங்களில் காணப்படும் கண்ணாடியாலான எலும்புக்கூடுகளின் விதவிதமான வடிவங்கள்
நுண்பாசிகள்
[பக்கம் 144-ன் படங்கள்]
ஆரக்காலிகள்: நுண்ணிய மிருகங்களில் காணப்படும் கண்ணாடியாலான எலும்புக்கூடுகளின் விதவிதமான வடிவங்கள்
வீனஸின் பூக்கூடை
[பக்கம் 145-ன் படங்கள்]
அநேக மலர்களில், மறைந்திருக்கும் தேனை பூச்சிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் வழிகாட்டி பலகைகள் உள்ளன
[பக்கம் 146-ன் படங்கள்]
சில மலர்களில், மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதற்காக பூச்சிகளைப் பிடிக்க உதவும் மெழுகு பூசிய சறுக்கு மரங்கள் உள்ளன
இந்த ஆர்க்கிட் மலருக்கு பெண் குளவிபோன்ற உருவம் இருப்பதேன்?
[பக்கம் 147-ன் படம்]
தண்ணீர் மூலக்கூறுகள் இடையிலான அணுப் பிணைவு, ஒரு மரத்தில் ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் உயரத்திற்குத் தண்ணீரை மேலே எடுத்துச் செல்லும் என்று சொல்லப்படுகிறது!