இயேசுவின் மரணம் நெருங்குகையில் சீஷர்கள் விவாதிக்கின்றனர்
அதிகாரம் 98
இயேசுவின் மரணம் நெருங்குகையில் சீஷர்கள் விவாதிக்கின்றனர்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் யோர்தான் நதிக்கு அருகில் இருக்கின்றனர், பெரேயா மாவட்டத்தைக் கடந்து யூதேயாவுக்குள் இங்கே நுழைகின்றனர். பொ.ச. 33-ம் ஆண்டின் பஸ்காவுக்கு அவர்களோடு கூட மற்ற அநேகரும் பிரயாணம் செய்கின்றனர், அதற்கு இன்னும் ஒரு வாரம் போல் இருக்கிறது.
இயேசு சீஷர்களுக்கு முன்னே நடந்து செல்கிறார், அவர்கள் அவருடைய தைரியமான உறுதியைக் கண்டு வியப்படைகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு லாசரு மரித்த போது இயேசு பெரேயாவிலிருந்து யூதேயாவுக்கு செல்லும் தருவாயில், தோமா, “அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்” என்று மற்றவர்களை உற்சாகப்படுத்தினதை நினைவுபடுத்திப் பாருங்கள். இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பின பின்பு, நியாயசங்கம் இயேசுவைக் கொலை செய்யும்படியான திட்டத்தைப் போட்டது என்பதையும் நினைவுபடுத்திப் பாருங்கள். அவர்கள் மறுபடியும் யூதேயாவுக்குள் நுழைகையில் சீஷர்களை பயம்பிடிக்கிறது என்பது ஆச்சரியமாயில்லை.
தொடர்ந்து நடக்கவிருக்கும் காரியங்களுக்காக அவர்களைத் தயாரிப்பதற்கு, இயேசு 12 சீஷர்களையும் தனியே கூட்டிச் சென்று அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள், அவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர் மேல் துப்பி, அவரைக் கொலை செய்வார்கள். ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்.”
இயேசு தம் மரணத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதலைப் பற்றியும் தம்முடைய சீஷர்களிடம் சமீப மாதங்களில் கூறியதில் இது மூன்றாவது தடவையாகும். அவர்கள் அவருக்குச் செவிகொடுத்து கேட்ட போதிலும், அதைப் புரிந்து கொள்ள தவறுகின்றனர். இஸ்ரவேல் ராஜ்யம் பூமியில் மீண்டும் நிலைநாட்டப்படும் என்று அவர்கள் நம்புவதாலும் கிறிஸ்துவோடு பூமிக்குரிய ராஜ்யத்தில் மகிமையையும் கனத்தையும் அனுபவிப்பதற்கு அவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதாலும் ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம்.
பஸ்காவுக்கு செல்லும் பிரயாணிகள் மத்தியில் அப்போஸ்தலர்களாகிய யாக்கோபு மற்றும் யோவானின் தாயாகிய சலோமேயும் இருக்கிறாள். இம்மனிதருடைய சீறியெழும் மனப்பான்மையின் காரணமாக இயேசு அவர்களை “இடிமுழக்க மக்கள்” என்று அழைத்தார். கிறிஸ்துவின் ராஜ்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாய் இருக்க வேண்டும் என்ற பேராவலை இவ்விருவரும் சில காலமாக வளர்த்து வந்திருக்கின்றனர், அவர்கள் தங்கள் விருப்பத்தை தங்கள் தாய்க்கு தெரியப்படுத்தியிருந்தனர். அவர்கள் சார்பாக அவள் இப்போது இயேசுவை அணுகி, அவருக்கு முன்பாக பணிந்து கொண்டு, ஒரு தயவுசெய்யும்படி கேட்டுக் கொள்கிறாள்.
“உனக்கு என்ன வேண்டும்” என்று இயேசு கேட்கிறார்.
அவள் இவ்வாறு பதிலளிக்கிறாள்: “உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்.”
வேண்டுகோளின் ஊற்றுமூலத்தை அறிந்தவராய் இயேசு யாக்கோபு மற்றும் யோவானிடம் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் கேட்டுக் கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க . . . உங்களால் கூடுமா.”
“கூடும்” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். பயங்கரமான துன்புறுத்தலையும், இறுதியில் மரணத்தையும் தாம் எதிர்ப்படுவதை இயேசு அப்போது தான் அவர்களிடம் சொல்லியிருந்த போதிலும், அவர் குடிக்கப் போகும் “பாத்திரம்” இதைத் தான் குறிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.
இருந்தபோதிலும், இயேசு அவர்களிடம் சொல்கிறார்: “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், . . . ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல.”
அதற்குள் மற்ற பத்து அப்போஸ்தலர்களும் யாக்கோபு மற்றும் யோவானின் வேண்டுகோளைப் பற்றி அறிந்து கோபமடைகின்றனர். யார் பெரியவன் என்பதைப் பற்றி அப்போஸ்தலர்களுக்குள் இதற்கு முன்பு நடந்த தர்க்கத்தில் யாக்கோபும் யோவானும் ஒருவேளை பிரதான பங்கை வகித்திருக்க வேண்டும். இந்த விஷயத்தின் பேரில் இயேசு கொடுத்த புத்திமதியை அவர்கள் பொருத்தவில்லை என்பதை அவர்களுடைய தற்போதைய வேண்டுகோள் வெளிக்காட்டுகிறது. விசனகரமாக, முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவர்களுடைய விருப்பம் இன்னும் பலமாக இருக்கிறது.
ஆகையால் சமீபத்தில் நடந்த இந்த வாத எதிர்வாதத்தையும் அது உருவாக்கியிருக்கும் விரோதத்தையும் கையாளுவதற்கு இயேசு 12 பேரையும் ஒன்றாக அழைக்கிறார். அன்புடன் அவர்களுக்கு புத்திமதி கொடுக்கிறார், அவர் சொல்லுகிறார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.”
அவர்கள் பார்த்துப் பின்பற்றுவதற்கு இயேசு முன்மாதிரியை வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” இயேசு மற்றவர்கள் சார்பாக ஊழியஞ் செய்தது மட்டுமல்லாமல், மனிதவர்க்கத்துக்காக மரிக்கும் அளவுக்கு சேவை செய்வார்! ஊழியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மாறாக ஊழியம் செய்யவும் பிரதான ஸ்தானத்தில் இருப்பதற்கு மாறாக தாழ்ந்தவராக இருக்கவும் சீஷர்களுக்கு கிறிஸ்துவைப் போன்ற அதே மனநிலை தேவைப்படுகிறது. மத்தேயு 20:17–28; மாற்கு 3:17; 9:33–37; 10:32–45; லூக்கா 18:31–34; யோவான் 11:16.
▪ சீஷர்களுக்கு இப்போது ஏன் பயம் பிடித்துக் கொள்கிறது?
▪ பின்னால் நடக்கப்போகும் காரியங்களுக்காக இயேசு எவ்வாறு தம் சீஷர்களை தயாரிக்கிறார்?
▪ இயேசுவிடம் என்ன வேண்டுகோள் செய்யப்படுகிறது, மற்ற அப்போஸ்தலர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்?
▪ தம்முடைய அப்போஸ்தலர்களிடையே இருக்கும் பிரச்னையை இயேசு எவ்வாறு கையாளுகிறார்?