ஒரு நூற்றுக்கு அதிபதியின் மிகுதியான விசுவாசம்
அதிகாரம் 36
ஒரு நூற்றுக்கு அதிபதியின் மிகுதியான விசுவாசம்
இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தைக் கொடுக்கையில் வெளியரங்கமாகத் தாம் செய்துவந்த ஊழியத்தில் சுமார் பாதி தூரம் வந்துவிட்டிருந்தார். அவர் பூமியில் தம்முடைய வேலையை முடிக்க இன்னும் சுமார் ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் மீதமிருந்தது என்று அர்த்தமாகிறது.
இயேசு தம்முடைய ஊழிய நடவடிக்கைகளுக்கு ஒருவித மையத் தளமாக இருந்த கப்பர்நகூமுக்குள் இப்பொழுது பிரவேசிக்கிறார். இங்கே யூதர்களுடைய மூப்பர்கள் அவரிடத்தில் ஒரு காரியத்தை வேண்டிக்கொள்ளும்படி வருகிறார்கள். யூதர்களிலிருந்து வித்தியாசப்பட்ட இனத்திலிருந்து வந்த ரோம சேனையிலிருந்த புறமத அதிபதியினால் அவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
நூற்றுக்கு அதிபதிக்குப் பிரியமான ஒரு வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருக்கிறான். தன்னுடைய வேலைக்காரனை இயேசு குணமாக்கவேண்டுமென்று அவன் விரும்புகிறான். யூதர்கள் அதிபதிக்காக ஊக்கமாய் அவரை வேண்டிக்கொள்கிறார்கள்: “நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்,” என்று அவர்கள் சொல்கிறார்கள், ஏனென்றால் “அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான்.”
இயேசு தயங்காமல் அவர்களுடனேகூடப் போகிறார். என்றபோதிலும், வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி, “ஆண்டவரே! நீர் வருத்தப்பட வேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை” என்று சொல்லும்படியாக அவரிடத்துக்குத் தன் சிநேகிதரை அனுப்பி வைக்கிறான்.
மற்றவர்களுக்கு உத்தரவிட்டே பழக்கப்பட்டிருக்கும் ஓர் அதிபதிக்கு என்னே மனத்தாழ்மையான வார்த்தைகள் இவை! ஒரு யூதன் யூதர்களல்லாதவர்களோடு சமுதாய தொடர்புகளைக் கொண்டிருப்பதை தடைச் செய்யும் வழக்கத்தை உணர்ந்தவனாய் அவன் ஒருவேளை இயேசுவைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கிறான். “அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே,” என்று பேதுருவும்கூட சொல்லியிருந்தான்.
ஒருவேளை இந்த வழக்கத்தை மீறுவதனால் ஏற்படும் பின்விளைவுகளினால் இயேசு கஷ்டப்படுவதை விரும்பாதவனாய், அதிபதி தன் சிநேகிதரிடமாக அவருக்குச் சொல்லியனுப்பியதாவது: “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான்.”
இயேசு இதைக் கேட்கும்போது ஆச்சரியப்படுகிறார். “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்கிறார். அதிபதியின் வேலைக்காரனைக் குணப்படுத்திய பின்பு, உண்மையற்ற யூதர்கள் ஏற்க மறுத்துவிட்ட ஆசீர்வாதங்கள் எவ்விதமாக விசுவாசமுள்ள யூதரல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் என்பதை எடுத்துரைக்க இயேசு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
“அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று இயேசு சொல்கிறார்.
‘புறம்பான இருளிலே தள்ளப்படும் ராஜ்யத்தின் புத்திரர்,’ கிறிஸ்துவோடு அரசர்களாகும்படியாக முதலாவதாக அவர்களுக்கு அளிக்கப்படும் சந்தர்ப்பத்தை ஏற்றுக் கொள்ளாத இயற்கையான யூதர்களாவர். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் கடவுளுடைய ராஜ்ய ஏற்பாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இவ்வாறு பரலோக மேசையில் பந்தியிருக்க வரவேற்கப்படுவது போல “பரலோக ராஜ்யத்தில்” புறஜாதியார் வரவேற்கப்படுவதை இயேசு சம்பந்தப்படுத்திப் பேசுகிறார். லூக்கா 7:1–10; மத்தேயு 8:5–13; அப்போஸ்தலர் 10:28.
▪ யூதர்கள் புறமத நூற்றுக்கதிபதியின் சார்பாக ஏன் வேண்டிக் கொள்கின்றனர்?
▪ இயேசு தன் வீட்டுக்குள் பிரவேசிக்க வேண்டாம் என்று அதிபதி அவரை ஏன் வேண்டிக்கொண்டிருந்திருக்கக்கூடும்?
▪ இயேசு தம்முடைய முடிவான குறிப்புகளில் அர்த்தப்படுத்தியது என்ன?