கலிலேயக் கடலில்
அதிகாரம் 130
கலிலேயக் கடலில்
இயேசு இதற்கு முன்பு கட்டளையிட்டிருந்தபடி அப்போஸ்தலர்கள் இப்போது கலிலேயாவுக்குத் திரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அங்கே என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருக்கின்றனர். சிறிது நேரத்துக்குப் பின்பு தோமா, நாத்தான்வேல், யாக்கோபு, அவருடைய சகோதரனாகிய யோவான், மற்ற இரண்டு அப்போஸ்தலர்கள் ஆகியோரை நோக்கி பேதுரு இவ்வாறு சொல்கிறான்: “நான் மீன்பிடிக்கப் போகிறேன்.”
“நாங்களும் உம்முடனே கூட வருகிறோம்” என்று அந்த ஆறு பேரும் பதிலளிக்கின்றனர்.
அந்த இரவு முழுவதும் அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. என்றபோதிலும், விடியற்காலமாகிறபோது, இயேசு கரையிலே தோன்றுகிறார், ஆனால் அப்போஸ்தலர்கள் அது இயேசு என்று கண்டுணரவில்லை. “பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா?” என்று அவர் உரத்த குரலில் கேட்கிறார்.
“ஒன்றுமில்லை” என்று அவர்கள் கரையை நோக்கி கத்துகின்றனர்.
“நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும்” என்று அவர் சொல்கிறார். அவர்கள் அவ்வாறு செய்யும்போது மீன்கள் நிறைய இருந்ததால் தங்கள் வலையை இழுக்க முடியாமல் திணறுகின்றனர்.
“அவர் கர்த்தர்!” என்று யோவான் சப்தமாக சொல்கிறான்.
இதைக் கேட்டவுடன், பேதுரு தன் வஸ்திரத்தை எடுத்து விட்டிருந்தபடியால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதிக்கிறான். பின்பு அவன் கரையை நோக்கி ஏறக்குறைய 90 மீட்டர் தூரம் நீந்தி வருகிறான். மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு மற்ற அப்போஸ்தலர்கள் ஒரு சிறிய படவில் அவனைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அவர்கள் கரையிலே வந்து சேர்ந்த போது, அங்கே கரிநெருப்பும், அதின் மேல் மீனும், அப்பமும் இருக்கிறதை காண்கின்றனர். “நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்று இயேசு சொல்கிறார். பேதுரு படவில் ஏறி, வலையைக் கரையில் இழுக்கிறான். அதில் 153 பெரிய மீன்கள் இருக்கின்றன!
“வாருங்கள், போஜனம் பண்ணுங்கள்” என்று இயேசு அழைக்கிறார்.
அவர்களில் எவருக்கும் “நீர் யார்?” என்று கேட்கத் துணிவில்லை, ஏனென்றால் அவர் இயேசு என்று அவர்கள் அனைவரும் அறிந்திருக்கின்றனர். உயிர்த்தெழுதலுக்குப் பின் இது அவருடைய ஏழாவது தோற்றமாக இருக்கிறது, ஒரு தொகுதியாக அப்போஸ்தலர்களுக்கு இது அவருடைய மூன்றாவது தோற்றமாயிருக்கிறது. இப்போது அவர் அவர்களுக்கு காலை உணவை பரிமாறுகிறார், ஒவ்வொருவருக்கும் சில அப்பங்களையும் மீன்களையும் கொடுக்கிறார்.
அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு, பிடித்து வைக்கப்பட்டிருக்கும் திரளான மீன்களைப் பார்த்தவாறு, பேதுருவை இவ்வாறு கேட்கிறார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவைகளிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” நீ செய்ய வேண்டும் என்று நான் உன்னை தயாரித்திருக்கும் வேலையை விட மீன்பிடிக்கும் தொழிலில் நீ அதிக பற்றுதல் உடையவனாய் இருக்கிறாயா என்று அவர் அர்த்தப்படுத்துகிறார் என்பதில் சந்தேகமேயில்லை.
“உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்று பேதுரு பதிலளிக்கிறான்.
“என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்று இயேசு பதிலளிக்கிறார்.
மறுபடியும், இரண்டாவது முறையாக அவர் இவ்வாறு கேட்கிறார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?”
“ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்று பேதுரு உள்ளார்ந்த விதமாய் பதிலளிக்கிறான்.
“என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்று இயேசு மறுபடியும் கட்டளையிடுகிறார்.
பின்பு, மூன்றாவது முறையாக, அவர் இவ்வாறு கேட்கிறார்: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?”
இப்போது பேதுரு துக்கமடைகிறான். இயேசு அவனுடைய உண்மைத்தன்மையை சந்தேகிக்கிறார் என்று ஒருவேளை அவன் நினைத்துக் கொண்டிருக்கலாம். சமீபத்தில் இயேசு தம்முடைய ஜீவனுக்காக விசாரணை செய்யப்பட்ட போது, பேதுரு மூன்று முறைகள் அவரை அறிந்திருப்பதை மறுதலித்தான். ஆகையால் பேதுரு இவ்வாறு சொல்கிறான்: “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்.”
“என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்று இயேசு மூன்றாவது முறையாக கட்டளையிடுகிறார்.
மற்றவர்களும் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என தாம் விரும்புகிறார் என்பதை அவர்களுக்கு உணர்த்த இங்கு இயேசு பேதுருவை ஒரு கருவியாக உபயோகிக்கிறார். அவர் விரைவில் பூமியை விட்டு புறப்படப் போகிறார், கடவுளுடைய மந்தைக்குள் வருகிறவர்களுக்கு ஊழியம் செய்வதில் அவர்கள் முதன்மை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கடவுள் அவருக்கு கட்டளையிட்ட வேலையை செய்ததற்காக இயேசு கட்டுண்டு கொலை செய்யப்பட்டது போல பேதுருவும் அதே போன்ற ஓர் அனுபவத்தை அடைவான் என்று இப்போது அவர் வெளிப்படுத்துகிறார். “நீ இளவயதுள்ளவனாயிருந்த போது உன்னை நீயே அரைகட்டிக் கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும் போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக்கொண்டு போவான்.” பேதுருவுக்குக் காத்துக்கொண்டிருக்கும் தியாக மரணத்தின் மத்தியிலும் இயேசு அவனை இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “என்னைப் பின்பற்றி வா.”
திரும்பிப் பார்த்த போது, பேதுரு யோவானைக் காண்கிறான். “ஆண்டவரே, இவன் காரியம் என்ன?” என்று கேட்கிறான்.
“நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு பதிலளிக்கிறார். அப்போஸ்தலனாகிய யோவான் மரிக்கவே மாட்டான் என்று இயேசுவின் இந்த வார்த்தைகளை சீஷர்களில் அநேகர் புரிந்து கொண்டனர். என்றபோதிலும், அப்போஸ்தலனாகிய யோவான் பின்னர் விளக்கியபடி, அவன் மரிக்க மாட்டான் என்று இயேசு சொல்லவில்லை, ஆனால் இயேசு வெறுமென “நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன?” என்று சொன்னார்.
யோவான் பின்னர் இந்தக் குறிப்பிடத்தக்க அபிப்பிராயத்தை எழுதுகிறார்: “இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.” யோவான் 21:1–25, NW; மத்தேயு 26:32; 28:7, 10.
▪ அப்போஸ்தலர்கள் கலிலேயாவில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து நிச்சயமற்றவர்களாய் இருக்கின்றனர் என்பதை எது காட்டுகிறது?
▪ கலிலேயக் கடலில் அப்போஸ்தலர்கள் இயேசுவை எவ்வாறு அடையாளங் கண்டுக்கொள்கின்றனர்?
▪ உயிர்த்தெழுப்பப்பட்டதிலிருந்து இப்போது இயேசு எத்தனை முறைகள் தோற்றமளித்திருக்கிறார்?
▪ அப்போஸ்தலர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தான் விரும்புவதை இயேசு எவ்வாறு அழுத்திக் காண்பிக்கிறார்?
▪ பேதுரு என்ன முறையில் மரிப்பான் என்பதை இயேசு எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறார்?
▪ யோவானைப் பற்றி இயேசு சொன்ன என்ன குறிப்புகளை சீஷர்களில் அநேகர் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்?