அதிகாரம் ஐந்து
‘ஞானம் எனும் பொக்கிஷங்களெல்லாம். . . ’
1-3. இயேசு ஆற்றிய சொற்பொழிவின் சூழமைவை விளக்குங்கள், அதைக் கேட்டு மக்கள் ஏன் மலைத்துப்போகிறார்கள்?
இளவேனிற்காலம். வருடம், 31. இடம், கலிலேயாக் கடலுக்கு வடமேற்கில் உள்ள சந்தடிமிக்க நகரமான கப்பர்நகூமுக்கு அருகிலுள்ள ஒரு மலை. அங்கே இயேசு இராமுழுதும் தனிமையில் ஜெபம் செய்திருக்கிறார். விடிந்ததும் சீஷர்களை அழைத்து, அவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுக்கிறார்; அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என பெயர் சூட்டுகிறார். இதற்கிடையில், திரளான மக்கள் அந்த மலையின் சமனான பரப்பிற்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்; அவர்களில் சிலர் வெகு தொலைவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர் பேசுவதைக் கேட்பதற்காகவும் வியாதிகளிலிருந்து குணமடைவதற்காகவும் ஆவலாய்க் காத்திருக்கிறார்கள். இயேசு அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.—லூக்கா 6:12-19.
2 இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் வந்து, நோயாளிகள் அனைவரையும் குணமாக்குகிறார். கடைசியில், வியாதியின் வேதனையிலிருந்து விடுபட்டு அனைவரும் சுகமாய் இருக்கும்போது, இயேசு அமர்ந்து அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார். a இளவேனில் தென்றல் தவழ்ந்து வருகிற அந்த நாளில் அவருடைய சொற்பொழிவு அங்கிருந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும். இவரைப் போல் யாருமே அதுவரை பேசியதில்லை. தம்முடைய போதனைகளுக்கு வலிமை சேர்ப்பதற்காக, வாய்மொழி பாரம்பரியங்களையோ பிரபல யூத ரபீக்களின் கூற்றுகளையோ இயேசு மேற்கோள் காட்டி பேசுவதில்லை. மாறாக, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட எபிரெய வேதவசனங்களையே அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுகிறார். அவருடைய செய்தி நேரடியாக இருக்கிறது, சொல்லமைப்பு எளிமையாக இருக்கிறது, அர்த்தம் தெள்ளிய நீரோடை போல் தெளிவாக இருக்கிறது. அவருடைய சொற்பொழிவைக் கேட்டு, மக்கள் மலைத்துப்போகிறார்கள். அதிலென்ன ஆச்சரியம்! பூமியில் வாழ்ந்தவர்களிலேயே மாபெரும் ஞானியின் வார்த்தைகளையல்லவா அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்!—மத்தேயு 7:28, 29.
3 மலைப் பிரசங்கம் உட்பட, இயேசு சொன்ன அநேக விஷயங்களும் செய்த அநேக காரியங்களும் கடவுளுடைய வார்த்தையான பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகள் இயேசுவைக் குறித்து என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அதை நாம் கருத்தூன்றி படிக்க வேண்டும்; ஏனென்றால், இயேசுவுக்குள்தான் ‘ஞானம் எனும் பொக்கிஷங்களெல்லாம்’ மறைத்து வைக்கப்பட்டுள்ளது. (கொலோசெயர் 2:3) அவருக்கு எங்கிருந்து அவ்வளவு ஞானம் வந்தது, அதாவது அறிவையும் புரிந்துகொள்ளும் திறனையும் நடைமுறையில் பயன்படுத்த அவர் எங்கிருந்து கற்றுக்கொண்டார்? அவர் எப்படி ஞானமாய் நடந்துகொண்டார், அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
“இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது?”
4. நாசரேத்தில் இயேசுவின் போதனையைக் கேட்டவர்களுக்கு என்ன கேள்வி வந்தது, ஏன்?
4 இயேசு ஊர் ஊராகச் சென்று ஊழியம் செய்த சமயத்தில், தாம் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு ஒருமுறை சென்று அங்கிருந்த ஜெபக்கூடத்தில் போதிக்க தொடங்கினார். அவருடைய போதனையைக் கேட்டு அநேகர் வாயடைத்துப்போனார்கள். “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். அவருடைய அப்பா-அம்மாவை, தம்பி-தங்கைகளை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்; அவர் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியும். (மத்தேயு 13:54-56; மாற்கு 6:1-3) கைதேர்ந்த இந்தத் தச்சன் ரபீக்களின் பிரசித்திபெற்ற பள்ளியில் பயிலவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியும். (யோவான் 7:15) எனவே, அவர்கள் கேட்ட கேள்வி நியாயமானதாகத் தோன்றலாம்.
5. தம்முடைய ஞானத்தின் ஊற்றுமூலர் யார் என்று இயேசு சொன்னார்?
5 பரிபூரண மனிதரான இயேசுவுக்குப் பரிபூரண சிந்தை இருந்ததால்தான் ஞானத்தை வெளிக்காட்டினார் என்று சொல்ல முடியாது. ஒரு சமயம் ஆலயத்தில் மக்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தபோது இந்த ஞானத்தை ஓர் உன்னத மூலத்திலிருந்து பெற்றதாக இயேசு கூறினார். “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது” என்று அவர் சொன்னார். (யோவான் 7:16) ஆம், இயேசுவை அனுப்பி வைத்த தகப்பனே இயேசுவின் ஞானத்திற்கு உண்மையான ஊற்றுமூலர். (யோவான் 12:49) அப்படியானால், இயேசு எப்படி யெகோவாவிடமிருந்து ஞானத்தைப் பெற்றார்?
6, 7. என்னென்ன விதங்களில் இயேசு தம் தகப்பனிடமிருந்து ஞானத்தைப் பெற்றார்?
6 இயேசுவின் இதயத்திலும் சிந்தையிலும் யெகோவாவின் சக்தி செல்வாக்குச் செலுத்தியது. வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவான இயேசுவைக் குறித்து ஏசாயா இவ்வாறு முன்னுரைத்தார்: “யெகோவாவின் சக்தி அவர்மேல் தங்கியிருக்கும். அது அவருக்கு ஞானத்தையும், புரிந்துகொள்ளும் திறனையும், அறிவுரை சொல்லும் ஆற்றலையும், வல்லமையையும், அறிவையும், யெகோவாவைப் பற்றிய பயத்தையும் கொடுக்கும்.” (ஏசாயா 11:2) யெகோவாவுடைய சக்தி இயேசுவிடம் தங்கியிருந்து, அவருடைய யோசனைகள் மீதும் தீர்மானங்கள் மீதும் செல்வாக்கு செலுத்தியது. அதனால், அவருடைய சொல்லிலும் செயலிலும் அபார ஞானம் வெளிப்பட்டதில் ஏதாவது ஆச்சரியம் உண்டோ?
7 மகத்தான இன்னொரு விதத்திலும் இயேசு தம் தகப்பனிடமிருந்து ஞானத்தைப் பெற்றார். 2-வது அதிகாரத்தில் பார்த்தபடி, இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பு, யுகா யுகங்களாகத் தம் தகப்பனோடு இருந்தார்; அப்போது தம் தகப்பனின் சிந்தையை முழுமையாகக் கிரகித்துக்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தம் தகப்பனின் ‘கைதேர்ந்த கலைஞனாக’ இருந்து அண்டசராசரத்தையும் படைத்தபோது மகன் எந்தளவு ஞானத்தைப் பெற்றிருப்பார்! அதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது! அதனால்தான், அந்த மகன் பூமிக்கு வரும்முன் ஞானம் என உருவக நடையில் அழைக்கப்பட்டார். (நீதிமொழிகள் 8:22-31; கொலோசெயர் 1:15, 16) தம் தகப்பனோடு இருந்த சமயத்தில் சம்பாதித்த ஞானத்தை இயேசு தமது ஊழிய காலம் முழுவதும் பயன்படுத்தினார். b (யோவான் 8:26, 28, 38) எனவே, இயேசுவின் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பளிச்சிட்ட அபார அறிவையும், புரிந்துகொள்ளும் திறமையையும், பகுத்துணர்வையும் நினைத்து நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை.
8. இயேசுவைப் பின்பற்றுகிற நாம் எங்கிருந்து ஞானத்தைப் பெறலாம்?
8 இயேசுவைப் பின்பற்றுகிற நாமும் ஞானத்தின் ஊற்றுமூலரான யெகோவாவையே சார்ந்திருக்க வேண்டும். (நீதிமொழிகள் 2:6) யெகோவா அற்புதமான விதத்தில் ஞானத்தை அருளுவதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளை நாம் வெற்றிகரமாய்ச் சமாளிப்பதற்கு அவரிடம் ஞானத்தைக் கேட்டு மன்றாடும்போது நிச்சயம் தந்தருள்வார். (யாக்கோபு 1:5) அந்த ஞானத்தைப் பெறுவதற்கு நம் பங்கிலும் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். “புதையல்களைத் தேடுவதுபோல்” அதை நாம் தேடிக்கொண்டே இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 2:1-6) கடவுளுடைய வார்த்தையில் பொதிந்திருக்கும் அவருடைய ஞானத்தை நாம் ஆழமாய்த் தோண்டிக்கொண்டே இருக்க வேண்டும்; நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களுக்கு இசைவாக நம் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும். ஞானத்தை சம்பாதிக்கும் விஷயத்தில் யெகோவாவுடைய மகனின் உதாரணம் நமக்கு பேருதவியாய் இருக்கும். எனவே, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இயேசு வெளிக்காட்டிய ஞானத்தைப் பற்றி ஆராய்ந்து, அவரை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதைப் பார்ப்போம்.
ஞானம் நிறைந்த வார்த்தைகள்
9. இயேசுவின் போதனைகளில் ஞானம் பொதிந்திருந்ததற்குக் காரணம் என்ன?
9 இயேசு பேசுவதைக் கேட்பதற்காகவே மக்கள் வெள்ளம்போல் திரண்டு வந்தார்கள். (மாற்கு 6:31-34; லூக்கா 5:1-3) அதில் ஆச்சரியமே இல்லை! ஏனென்றால், இயேசுவின் வாயிலிருந்து பிறந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஞானம் ததும்பியது! கடவுளுடைய வார்த்தையை இயேசு கரைத்துக் குடித்திருந்ததையும், பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டறியும் அபாரத் திறமை பெற்றிருந்ததையும் அவருடைய போதனைகள் தெளிவாகக் காட்டின. காலத்தால் அழியா அவருடைய போதனைகளைக் கேட்டு உலகமே வியக்கிறது. ‘ஞானமுள்ள ஆலோசகரான’ இயேசுவின் வார்த்தைகளில் ஞானம் பொதிந்திருந்தது என்பதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.—ஏசாயா 9:6.
10. என்ன நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும்படி இயேசு நம்மை உந்துவிக்கிறார், ஏன்?
10 இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மலைப் பிரசங்கம்தான் இயேசுவுடைய சொற்பொழிவுகளிலேயே மிக நீளமான சொற்பொழிவு; இடையிடையே எழுத்தாளரின் குறிப்புகளோ மற்றவர்களின் உரையாடல்களோ இல்லாத ஒரே சொற்பொழிவு இதுதான். எப்போதும் தகுந்த விதத்தில் பேச வேண்டும்... ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்... என்று மட்டுமே இயேசு நமக்கு இந்தப் பிரசங்கத்தில் சொல்வதில்லை. அதைவிட ஆழமான ஆலோசனைகளை அவர் வழங்குகிறார். மனதிலுள்ள எண்ணங்களும் உணர்ச்சிகளும்தான் வார்த்தைகளாகவும் செயல்களாகவும் உருவெடுக்கின்றன என்பதை இயேசு நன்கு அறிந்திருப்பதால் மனதிலும் இதயத்திலும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளும்படி நம்மை உந்துவிக்கிறார். ஆம், சாந்தகுணத்தை, நீதிக்கான பசிதாகத்தை, இரக்கத்தை, சமாதானத்தை, அன்பை வளர்த்துக்கொள்ளும்படி நம்மை உந்துவிக்கிறார். (மத்தேயு 5:5-9, 43-48) இப்படிப்பட்ட நற்குணங்களை நம் இதயத்தில் வளர்த்துக்கொள்ளும்போது, நம்முடைய பேச்சும் நடத்தையும் கண்ணியமாக இருக்கும். அது யெகோவாவின் மனதைக் குளிர்விப்பதோடு சக மனிதர்களுடன் நல்லுறவை அனுபவிக்கவும் வழிவகுக்கும்.—மத்தேயு 5:16.
11. தவறான நடத்தையைக் குறித்து இயேசு ஆலோசனை கொடுக்கும்போது, எப்படி அந்த நடத்தைக்குரிய ஆணிவேரையே சுட்டிக்காட்டுகிறார்?
11 தவறான நடத்தையைக் குறித்து ஆலோசனை கொடுக்கும்போது, அந்த நடத்தைக்கு ஆணிவேராய் இருக்கும் விஷயங்களை இயேசு சுட்டிக்காட்டுகிறார். வெறுமனே வன்முறையைத் தவிர்த்துவிடும்படி அவர் நமக்குச் சொல்வதில்லை. பதிலாக, மனதுக்குள் கோபம் புகைந்துகொண்டிருக்க அனுமதிக்காதீர்கள் என்று நம்மை எச்சரிக்கிறார். (மத்தேயு 5:21, 22; 1 யோவான் 3:15) அதேபோல், பாலியல் முறைகேட்டில் ஈடுபடக்கூடாது என்று மட்டும் அவர் சொல்வதில்லை. இதயத்தில் பிறக்கும் காம உணர்வுகளே அச்செயலுக்குக் காரணம் என்பதால் மனதில் அப்படிப்பட்ட தவறான ஆசைகள் துளிர்விடாமல் பார்த்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். வக்கிர ஆசைகளைத் தூண்டுகிற விஷயங்களைப் பார்க்காதபடி நம் கண்களுக்குத் திரை போடுமாறு அவர் நம்மை எச்சரிக்கிறார். (மத்தேயு 5:27-30) ஆகவே, பிரச்சினைகளின் அறிகுறிகளை மட்டுமல்ல அவற்றிற்கான ஆணிவேரை, அதாவது தவறு செய்வதற்குக் காரணமாய் இருக்கிற சிந்தனைகளை... ஆசைகளை... இயேசு சுட்டிக்காட்டுகிறார்.—சங்கீதம் 7:14.
12. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அவருடைய ஆலோசனையை எப்படிக் கருதுகிறார்கள், ஏன்?
12 இயேசுவின் வார்த்தைகளில் எதிரொலித்த அபார ஞானம் நம்மை வியக்கவைக்கிறது! அப்படியானால், ‘அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனதில்’ ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா? (மத்தேயு 7:28) இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்கும் நாம் அவருடைய ஞானமான ஆலோசனையை வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கருதுகிறோம். அவர் சொன்னபடியே, இரக்கம், சமாதானம், அன்பு உள்ளிட்ட பல நற்குணங்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்கிறோம். ஏனென்றால், இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்வதுதான் யெகோவாவுக்குப் பிரியமாய் நடப்பதற்கு முதல் படி என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இயேசு எச்சரித்தபடியே கடுங்கோபம், வக்கிர ஆசைகள் உள்ளிட்ட தவறான உணர்ச்சிகளையும் ஆசைகளையும் நம் மனதிலிருந்து வேரோடு பிடுங்கியெறிய கடினமாய் முயற்சி செய்கிறோம். அப்போதுதான் நாம் பாவம் செய்யாதிருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம்.—யாக்கோபு 1:14, 15.
வாழ்நாளெல்லாம் ஞானமாய் நடந்தார்
13, 14. தம்முடைய வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுப்பதில் இயேசு விவேகமாய்ச் செயல்பட்டார் என்பதை எது காட்டுகிறது?
13 இயேசு தம் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் ஞானத்தை வெளிக்காட்டினார். அவருடைய முழு வாழ்க்கையிலும் ஞானம் பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டது—ஆம், அவர் எடுத்த தீர்மானங்களில், தம்மைப் பற்றி அவருக்கிருந்த அபிப்பிராயத்தில், மற்றவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதத்தில் ஞானம் வெளிப்பட்டது. இயேசு எப்போதும் “ஞானத்தையும் யோசிக்கும் திறனையும்” வெளிக்காட்டினார் என்பதற்குச் சில உதாரணங்களைக் கவனியுங்கள்.—நீதிமொழிகள் 3:21.
14 ஞானமாய் நடப்பதில் நன்கு யோசித்து தீர்மானங்கள் எடுப்பதும் அடங்கியிருக்கிறது. இயேசு விவேகமாய்ச் சிந்தித்து தமது வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்தார். அவர் நினைத்திருந்தால், தமக்கென்று ஓர் அழகிய வீட்டைக் கட்டியிருக்கலாம், பணம் கொழிக்கும் வியாபாரம் செய்திருக்கலாம், அல்லது இந்த உலகில் பேரும்புகழும் பெற்றிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை “வீண்தான், காற்றைப் பிடிக்க ஓடுவதற்குச் சமம்தான்” என்று அவர் அறிந்திருந்தார். (பிரசங்கி 4:4; 5:10) அதுபோன்ற ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது ஞானமான தீர்மானமாக இருக்காது, முட்டாள்தனமாக இருக்கும். இயேசு எளிமையான வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார். பணம் சம்பாதிப்பதிலோ சொத்து சேர்ப்பதிலோ ஆர்வம் காட்டவில்லை. (மத்தேயு 8:20) அவர் போதித்ததற்கு இசைவாக, ஒரே காரியத்திலேயே—கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதிலேயே—தம் கண்களை ஒருமுகப்படுத்தினார். (மத்தேயு 6:22) பொருட்செல்வங்களைவிட அதிமுக்கியமான... ஆசீர்வாதங்களை அள்ளித் தருகிற... ஆன்மீக விஷயங்களுக்கே இயேசு தமது நேரத்தையும் சக்தியையும் ஞானமாய் அர்ப்பணித்தார். (மத்தேயு 6:19-21) இவ்வாறு, நாம் பின்பற்றுவதற்கு சிறந்த மாதிரியை இயேசு வைத்தார்.
15. இயேசுவைப் பின்பற்றுவோர் தங்களுடைய கண்களை கடவுளுடைய அரசாங்கத்தின்மீது பதிய வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம், அது ஏன் ஞானமான தீர்மானமாக இருக்கிறது?
15 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய விஷயங்களிலேயே கண்களை பதிய வைப்பது எவ்வளவு ஞானமானது என்பதை இன்று இயேசுவைப் பின்பற்றுவோர் புரிந்து வைத்திருக்கிறார்கள். அநாவசியமாக கடன் வாங்குவதையும், நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சுகிற வீணான உலகக் காரியங்களில் ஈடுபடுவதையும் அவர்கள் தவிர்ப்பதால் தேவையில்லாத கவலைகளிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 6:9, 10) ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்காக, முடிந்தால் முழுநேர ஊழியர்களாய் சேவை செய்வதற்காக, அநேகர் தங்கள் வாழ்க்கை பாணியை எளிமையாக ஆக்கியிருக்கிறார்கள். இதைவிட ஒரு ஞானமான தீர்மானம் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஏனென்றால், ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான் அளவிலா ஆனந்தத்தையும் திருப்தியான வாழ்வையும் பெற முடியும்.—மத்தேயு 6:33.
16, 17. (அ) தாம் அடக்கத்தோடு இருந்தார் என்பதையும் தம்மைக் குறித்து நியாயமான எதிர்பார்ப்புகள் வைத்திருந்தார் என்பதையும் இயேசு எவ்விதங்களில் காட்டினார்? (ஆ) இந்த விஷயத்தில் நாமும் இயேசுவைப் போலவே இருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
16 ஞானத்தை அடக்கத்தோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறது பைபிள். அடக்கம் என்பது நம்முடைய வரம்புகளைப் புரிந்துகொண்டு நடப்பது. (நீதிமொழிகள் 11:2) இயேசு அடக்கத்தோடு இருந்தார், தம்மைக் குறித்து நியாயமான, எதார்த்தமான எதிர்பார்ப்புகளே அவருக்கு இருந்தன. தம் செய்தியைக் கேட்ட எல்லாரையுமே தம்மால் மாற்ற முடியாது என்பதை அறிந்திருந்தார். (மத்தேயு 10:32-39) சிலருக்குத்தான் தம்மால் நேரடியாகச் சென்று நல்ல செய்தியை அறிவிக்க முடியும் என்பதையும் அறிந்திருந்தார். அதனால், சீஷராக்கும் வேலையை தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் ஞானமாக ஒப்படைத்தார். (மத்தேயு 28:18-20) அவர்கள் தம்மைவிட “பெரிய செயல்களை” செய்வார்கள் என்பதையும் இயேசு அடக்கத்தோடு ஒத்துக்கொண்டார். ஏனென்றால், அவர்களால் தம்மைவிட பல வருடங்கள் ஊழியத்தில் செலவு செய்ய முடியும் என்பதையும் நிறைய இடங்களுக்குச் செல்ல முடியும் என்பதையும் ஏராளமான மக்களைச் சந்திக்க முடியும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். (யோவான் 14:12) யாருடைய உதவியும் தமக்கு தேவையில்லை என்று அவர் நினைக்கவில்லை. வனாந்தரத்தில் தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தபோதும் கெத்செமனே தோட்டத்தில் ஒரு தேவதூதன் அவரைப் பலப்படுத்தியபோதும் இயேசு அதை ஏற்றுக்கொண்டார். வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் கடவுளுடைய மகன் உதவிகேட்டு கதறி அழுதார்.—மத்தேயு 4:11; லூக்கா 22:43; எபிரெயர் 5:7.
17 நாமும் அடக்கத்தோடு இருக்க வேண்டும்; நம்மைக் குறித்து நியாயமான, எதார்த்தமான எதிர்பார்ப்புகளே நமக்கு இருக்க வேண்டும். பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி முழுமூச்சோடு ஈடுபடவே விரும்புகிறோம். (லூக்கா 13:24; கொலோசெயர் 3:23) அதேசமயம் நாம் இதையும் மனதில் வைக்க வேண்டும்: யெகோவா நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை, நாமும் நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. (கலாத்தியர் 6:4) நம்முடைய திறமையையும் சூழ்நிலையையும் சீர்தூக்கிப் பார்த்து, நம்மால் எட்ட முடிகிற இலக்குகளை வைக்க நடைமுறையான ஞானம் உதவும். அதோடு, பொறுப்புகளில் இருப்பவர்களும் தங்களுடைய வரம்புகளை உணர்ந்து, தங்களுக்கும் அவ்வப்போது உதவியும் உற்சாகமும் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்ள ஞானம் துணைபுரியும். தங்களுக்கு “ஆறுதலாக” இருக்க யெகோவா சக வணக்கத்தாரைப் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்து அவர்கள் செய்யும் உதவியை பணிவுடன் ஏற்றுக்கொள்ள பொறுப்பில் இருப்பவர்களுக்குத் அடக்கம் கைகொடுக்கும்.—கொலோசெயர் 4:11.
18, 19. (அ) இயேசு தம்முடைய சீஷர்களிடம் நியாயமாக நடந்துகொண்டார் என்றும், அவர்களிடம் இருந்த நல்ல குணங்களையே பார்த்தார் என்றும் எப்படிச் சொல்லலாம்? (ஆ) சக கிறிஸ்தவர்களிடம் நாம் ஏன் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், ஏன் அவர்களுடைய நல்ல குணத்தையே பார்க்க வேண்டும்?
18 ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் நியாயமானது’ என்று யாக்கோபு 3:17 சொல்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் நியாயமாக நடந்துகொண்டார், அவர்களுடைய நல்ல குணங்களையே பார்த்தார். அவர்களிடம் இருந்த குறையை அவர் நன்கு அறிந்திருந்தார்; இருந்தாலும், அவர்களிடம் இருந்த நல்லதையே பார்த்தார். (யோவான் 1:47) தாம் கைது செய்யப்படவிருந்த இரவன்று அவர்கள் எல்லாரும் தம்மைவிட்டு ஓடிப்போவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்களுடைய உத்தமத்தைக் குறித்து அவர் சந்தேகப்படவில்லை. (மத்தேயு 26:31-35; லூக்கா 22:28-30) தனக்கு இயேசுவை தெரியவே தெரியாதென்று பேதுரு மூன்று முறை மறுதலித்தார். இருந்தாலும், இயேசு அவருக்காக ஜெபம் செய்தார், அவர் உத்தமமாய் இருப்பார் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதை தெரிவித்தார். (லூக்கா 22:31-34) கடைசி இரவன்று தகப்பனிடம் ஜெபம் செய்தபோது சீஷர்களின் குறைகளைப் பற்றி அவர் பேசவில்லை. மாறாக, அதுவரை அவர்கள் உண்மையாய் இருந்ததைக் குறிப்பிட்டு “இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள்” என்று சொன்னார். (யோவான் 17:6) அவர்கள் அபூரணராக இருந்தபோதிலும் நல்ல செய்தியைப் பிரசங்கித்து, சீஷராக்கும் வேலையை அவர்களிடம் ஒப்படைத்தார். (மத்தேயு 28:19, 20) இயேசு தங்கள்மீது எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்தபோது அவர் கட்டளையிட்ட வேலையைச் செய்ய அவர்களுக்குள் உத்வேகம் பிறந்தது.
19 இந்த விஷயத்தில், இயேசுவைப் பின்பற்றுவோர் அவரைப் போலவே நடக்க நியாயமான காரணம் இருக்கிறது. கடவுளுடைய பரிபூரண மகனே அபூரணராய் இருந்த சீஷர்களிடம் பொறுமையாக நடந்துகொண்டார் என்றால், பாவிகளாய் இருக்கும் நாம் சக மனிதர்களிடம் இன்னும் எந்தளவு பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும்! (பிலிப்பியர் 4:5) நம் சகோதர சகோதரிகளிடம் குற்றம் குறைகளைப் பார்ப்பதற்குப் பதிலாக அவர்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும். யெகோவா அவர்களைத் தம்மிடம் ஈர்த்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் வைப்பது ஞானமானது. (யோவான் 6:44) அவர்களிடம் ஏதோ நல்லதைப் பார்த்திருப்பதால்தான் அவர்களைத் தம்மிடம் ஈர்த்திருக்கிறார். எனவே, நாமும் அவர்களிடம் நல்லதையே பார்க்க வேண்டும். அப்படிச் செய்தோமானால், நாம் அவர்களுடைய ‘குற்றங்களைப் பார்க்க மாட்டோம்,’ மாறாக அவர்களிடம் உள்ள நல்லதைக் கண்டுபிடித்து அவர்களைப் பாராட்டுவோம். (நீதிமொழிகள் 19:11, பொது மொழிபெயர்ப்பு) நம் சகோதர சகோதரிகள்மீது நமக்கு நம்பிக்கை இருப்பதைத் தெரியப்படுத்தும்போது, யெகோவாவின் சேவையைச் சிறப்பாகச் செய்யவும் அதில் ஆனந்தம் அடையவும் அவர்களுக்கு நாம் உதவுகிறோம்.—1 தெசலோனிக்கேயர் 5:11.
20. சுவிசேஷப் பதிவுகளில் உள்ள ஞானக் களஞ்சியத்தை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
20 இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய சுவிசேஷப் பதிவுகள் நமக்கு ஒரு ஞானக் களஞ்சியம்! இந்த அறிய பொக்கிஷத்தை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும்? இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தின் முடிவில், ஞானம் பொதிந்த தம்முடைய வார்த்தைகளைக் கேட்பதோடு அதன்படி நடக்கவும் வேண்டும் என்று மக்களை உந்துவித்தார். (மத்தேயு 7:24-27) இயேசுவின் ஞானமான வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் இசைவாக நம் சிந்தனைகளையும் உள்ளெண்ணங்களையும் செயல்களையும் மாற்றியமைத்துக்கொண்டால் இன்றைக்கே நாம் சிறந்த வாழ்வை அனுபவிப்போம், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில் தொடர்ந்து நடப்போம். (மத்தேயு 7:13, 14) இப்படிச் செய்வதே சிறந்தது! ஞானமானது!!
a அன்று இயேசு ஆற்றிய சொற்பொழிவுதான் பின்பு மலைப் பிரசங்கம் என்று அழைக்கப்பட்டது. மத்தேயு 5:3–7:27-ல் பதிவாகியுள்ள அந்தப் பிரசங்கத்தில் 107 வசனங்கள் உள்ளன. அந்தப் பிரசங்கத்தைக் கொடுப்பதற்கு சுமார் 20 நிமிடங்களே எடுக்கலாம்.
b இயேசு ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில், ‘வானம் திறக்கப்பட்டபோது’ பரலோகத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை அவருடைய ஞாபகத்திற்கு வந்தது.—மத்தேயு 3:13-17.