அதிகாரம் ஒன்பது
‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’
1-3. (அ) தனியாக நின்று அறுவடை செய்ய முடியாத பட்சத்தில் விவசாயி என்ன செய்கிறார்? (ஆ) வசந்தகாலம் 33-ஆம் ஆண்டில் இயேசு எதிர்ப்பட்ட சவால் என்ன, அதை அவர் எப்படிச் சமாளித்தார்?
ஒரு விவசாயிக்கு இப்போது ஓர் இக்கட்டான நிலை. சில மாதங்களுக்கு முன்பு அவர் வயலை உழுது விதைகளை விதைத்தார். முளைவிட்ட நாள்முதல் அவற்றைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துவந்தார். பயிர்கள் வளர்ந்து முதிர்ந்தபோது அகமகிழ்ந்தார். அவர் பட்ட பிரயாசத்திற்கெல்லாம் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. ஆம், அறுவடை காலம் வந்துவிட்டது. ஆனால், அவருக்கு ஒரு பெரிய சவால்: விளைச்சல் அமோகமாக இருப்பதால் அவரே தனியாக நின்று எல்லாவற்றையும் அறுவடை செய்ய முடியாத நிலை. இப்போது அவர் ஞானமாய் செயல்படுகிறார், ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி வயலுக்கு அனுப்புகிறார். அவர் பராமரித்து வந்த பயிர்களை அறுவடை செய்ய இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது!
2 வசந்தகாலம் 33-ஆம் ஆண்டில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கும் இதேபோன்ற ஓர் இக்கட்டான நிலை. அவர் பூமியில் ஊழியம் செய்த காலத்தில் சத்தியம் எனும் விதைகளை விதைத்தார். இப்போது அவற்றை அறுவடை செய்ய நேரம் வந்துவிட்டது, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. சத்தியத்துக்குச் செவிசாய்க்கும் அநேகரை சீஷர்களாக்க வேண்டியுள்ளது. (யோவான் 4:35-38) இயேசு எப்படி இந்தச் சவாலை சமாளிக்கிறார்? கலிலேயாவிலுள்ள ஒரு மலையிலிருந்து அவர் பரலோகத்திற்கு ஏறிச் செல்லும் முன்பு, இன்னும் அநேக வேலையாட்களை தேடிக் கண்டுபிடிக்கும்படி தம் சீஷர்களுக்குக் கட்டளையிடுகிறார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
3 இந்தக் கட்டளையை ஒருவர் நிறைவேற்றினால்தான் அவர் கிறிஸ்துவை உண்மையாய் பின்பற்றுவதாகச் சொல்ல முடியும். இது சம்பந்தமாக இப்போது மூன்று கேள்விகளைச் சிந்திக்கலாம்: இயேசு ஏன் அநேக வேலையாட்களைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி கட்டளையிட்டார்? அந்த வேலைக்காக தம் சீஷர்களுக்கு அவர் எப்படிப் பயிற்சி அளித்தார்? இந்த வேலையில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது?
ஏன் நிறைய வேலையாட்கள் தேவைப்பட்டார்கள்?
4, 5. இயேசு ஆரம்பித்த வேலையை ஏன் அவரே செய்து முடிக்க முடியவில்லை, அவர் பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற பிறகு அந்த வேலையை யார் செய்ய வேண்டியிருக்கும்?
4 இயேசு தம் ஊழியத்தை 29-ஆம் ஆண்டில் ஆரம்பித்தபோது இந்த வேலையை தாமே செய்து முடிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார். பூமியில் அவருக்குச் சில காலமே மீந்திருந்ததால், அவரால் சிறிய பகுதியில்தான்... சிலருக்கு மட்டும்தான்... நல்ல செய்தியை அறிவிக்க முடிந்தது. உண்மைதான், ‘வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களுக்கு’ அதாவது யூதர்களுக்கும் யூத மதத்திற்கு மாறியவர்களுக்கும் மட்டுமே அவர் பிரசங்கித்தார். (மத்தேயு 15:24) என்றாலும், ‘வழிதவறிப்போன அந்த ஆடுகள்’ ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரந்து விரிந்த இஸ்ரவேல் தேசமெங்கும் சிதறியிருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமின்றி உலகின் மற்ற பாகங்களில் வாழும் மக்களுக்கும் காலப்போக்கில் நல்ல செய்தி அறிவிக்கப்பட வேண்டியிருந்தது.—மத்தேயு 13:38; 24:14.
5 தம் மரணத்திற்குப் பின்பு பெரும்பாலான வேலை செய்யப்படும் என்பதை இயேசு அறிந்திருந்தார். தமக்கு உத்தமமாய் இருந்த 11 அப்போஸ்தலர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிட பெரிய செயல்களையும் செய்வான். ஏனென்றால், நான் என் தகப்பனிடம் போகிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:12) இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் செல்லவிருந்ததால், அவரைப் பின்பற்றுகிறவர்கள்—அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல வருங்கால சீஷர்கள் அனைவரும்—பிரசங்க வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் தொடர வேண்டியிருக்கும். (யோவான் 17:20) அவர்கள் தம்மைவிட “பெரிய செயல்களை” செய்வார்கள் என்பதை இயேசு தாழ்மையுடன் ஒத்துக்கொண்டார். எவ்விதங்களில்?
6, 7. (அ) சீஷர்கள் செய்யப்போகும் வேலை எந்த விதங்களில் இயேசு செய்ததைவிட பெரிய அளவில் இருக்கும்? (ஆ) இயேசு தம் சீஷர்கள்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
6 முதலாவதாக, இயேசுவைப் பின்பற்றுவோர் பல இடங்களுக்குச் சென்று பிரசங்கிப்பார்கள். இன்று அவர்கள் பூமியின் கடைக்கோடிவரை பிரசங்கித்திருக்கிறார்கள், ஆம் இயேசுவின் காலடிபடாத இடங்களுக்கும் சென்று பிரசங்கித்திருக்கிறார்கள். இரண்டாவதாக, அவர்கள் அநேக மக்களுக்கு பிரசங்கிப்பார்கள். சிறு தொகுதியாய் இருந்த இயேசுவின் சீஷர்கள் மளமளவென ஆயிரக்கணக்கில் பெருகினார்கள். (அப்போஸ்தலர் 2:41; 4:4) இப்போது, லட்சக்கணக்கில் பெருகிவிட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இன்னும் ஆயிரமாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்றுவருகிறார்கள். மூன்றாவதாக, அவர்கள் அதிக காலத்திற்கு ஊழியம் செய்வார்கள். இயேசுவின் மூன்றரை ஆண்டு ஊழிய காலம் முடிந்து இப்போது கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, இன்றுவரை அந்த ஊழிய வேலை தொடர்கிறது.
7 இயேசு தமது சீஷர்கள்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அதனால்தான் அவர்கள் தம்மைவிட “பெரிய செயல்களை” செய்வார்கள் என்று சொன்னார். அவர் அதிமுக்கியமாய் கருதிய ஒரு வேலையை, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிக்கும் வேலையை, அவர்களிடம் ஒப்படைத்தார். (லூக்கா 4:43) அவர்கள் அந்த வேலையை உத்தமமாய் செய்து முடிப்பார்கள் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அப்படியானால், இன்று நம்மைப் பற்றி என்ன? ஊழியத்தை நாம் முழு மூச்சுடனும் முழு மனதுடனும் செய்யும்போது இயேசு தம் சீஷர்கள்மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதைக் காட்டுகிறோம். அவர் நம்மீது நம்பிக்கை வைத்திருப்பது நமக்கு மாபெரும் கௌரவம் அல்லவா?—லூக்கா 13:24.
சாட்சிகொடுக்க பயிற்சி
8, 9. ஊழியத்தில் இயேசு என்ன முன்மாதிரியை விட்டுச் சென்றார், அதை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
8 ஊழிய வேலையில் இயேசு தம் சீஷர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்தார். முக்கியமாக, அவரே அவர்களுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். (லூக்கா 6:40) ஊழியத்தின் மீது இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையைக் குறித்து முந்தின அதிகாரத்தில் சிந்தித்தோம். இப்போது, இயேசுவோடு சேர்ந்து ஊழியத்திற்குச் சென்ற சீஷர்களை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். மக்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம்—ஏரிக்கரையில், மலைச்சரிவுகளில், பட்டணங்களில், சந்தைகளில், வீடுகளில்—இயேசு பிரசங்கித்ததை சீஷர்கள் கவனித்தார்கள். (மத்தேயு 5:1, 2; லூக்கா 5:1-3; 8:1; 19:5, 6) அவர் கடின உழைப்பாளி என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்; இருள் பிரியும் முன் எழுந்து இரவு வெகு நேரம்வரை அவர் விழித்திருந்ததை அவர்கள் கவனித்தார்கள். ஊழியம் என்பது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கவில்லை! (லூக்கா 21:37, 38; யோவான் 5:17) மக்கள் மீதிருந்த ஆழமான அன்பினாலேயே அவர் இதையெல்லாம் செய்தார் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொண்டார்கள். அவர் இதயத்தில் பெருக்கெடுத்த இரக்கம் முகத்தில் வெளிப்பட்டதை அவர்களால் பார்க்க முடிந்தது. (மாற்கு 6:34) இயேசுவின் முன்மாதிரி அவருடைய சீஷர்கள்மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என நினைக்கிறீர்கள்? உங்கள்மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
9 கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் ஊழியத்தில் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். எனவே, ‘முழுமையாகச் சாட்சி கொடுக்க’ நமக்குக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்கிறோம். (அப்போஸ்தலர் 10:42) இயேசுவைப் போலவே நாமும் மக்களை அவர்களுடைய வீடுகளுக்கே சென்று சந்திக்கிறோம். (அப்போஸ்தலர் 5:42) மக்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் அவர்களைச் சந்திப்பதற்காக, தேவைப்பட்டால், நம் அட்டவணையை சற்று மாற்றியமைக்கிறோம். அதோடு, தெருக்களில், பூங்காக்களில், கடைகளில், பணியிடங்களில் மக்களைச் சந்தித்து விவேகத்துடன் நல்ல செய்தியை அறிவிக்கிறோம். ஊழியத்தை நாம் உயர்வாய்க் கருதுவதால் எப்போதும் அதில் “கடினமாகவும் தீவிரமாகவும்” ஈடுபடுகிறோம். (1 தீமோத்தேயு 4:10) மக்கள்மீது நமக்கு இருக்கும் உள்ளார்ந்த அன்பு, அவர்களை எந்த இடத்தில்... எந்த நேரத்தில்... சந்தித்தாலும் அவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்க நம்மைத் தூண்டுகிறது.—1 தெசலோனிக்கேயர் 2:8.
10-12. ஊழியத்திற்கு அனுப்பும் முன் இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த முக்கியமான பாடங்கள் என்ன?
10 ஊழியத்தைச் சிறப்பாக செய்ய இயேசு தம் சீஷர்களுக்கு இன்னொரு விதத்திலும் பயிற்சி அளித்தார், ஆம், அவர்களுக்கு விரிவான அறிவுரைகளை அளித்தார். முதலில் 12 அப்போஸ்தலர்களையும், பிற்பாடு 70 சீஷர்களையும் ஊழியத்திற்கு அனுப்பும் முன் அவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார் என்றே சொல்லலாம். (மத்தேயு 10:1-15; லூக்கா 10:1-12) அந்தப் பயிற்சிக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. அதனால்தான், ‘அந்த 70 பேரும் சந்தோஷத்தோடு திரும்பி வந்தார்கள்’ என்று லூக்கா 10:17 சொல்கிறது. இப்போது, இயேசு கற்றுக்கொடுத்த முக்கியமான பாடங்களில் இரண்டை சிந்திக்கலாம். பைபிள் காலங்களில் வாழ்ந்த யூதர்களின் பழக்கவழக்கங்களை மனதில்கொண்டு அவற்றை நாம் சிந்திக்கலாம்.
11 யெகோவாவையே நம்பியிருக்கும்படி இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். “தங்கம், வெள்ளி, அல்லது செம்புக் காசுகளை உங்களோடு கொண்டுபோகாதீர்கள். பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ, செருப்புகளையோ, தடியையோ வாங்கிக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்” என்று இயேசு அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:9, 10) அந்தக் காலத்தில் பிரயாணம் செய்யும்போது மக்கள் பணம் வைப்பதற்கான ஒரு விதமான பெல்ட்டையும், உணவுப் பையையும், இன்னொரு ஜோடி காலணியையும் எடுத்துச் செல்வார்கள். a இதற்காகக் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு சொன்னபோது, “யெகோவாவையே முழுமையாய் நம்பியிருங்கள், அவர் உங்கள் தேவைகளையெல்லாம் கவனித்துக்கொள்வார்” என்பதையே அவர்களுக்கு உணர்த்தினார். சரி, யெகோவா எப்படி அவர்களைக் கவனித்துக்கொள்வார்? நல்ல செய்திக்குச் செவிசாய்ப்போரின் மனதைத் தூண்டி அவர்களை உபசரிக்க செய்வதன் மூலம்; ஏனென்றால் உபசரிப்பது இஸ்ரவேலில் வழக்கமாக இருந்தது.—லூக்கா 22:35.
12 கவனம் சிதறடிக்கும் அநாவசியமான காரியங்களைத் தவிர்க்கும்படியும் இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். “வழியில் யாருக்கும் வாழ்த்துச் சொல்லாதீர்கள்” என்று அவர் சொன்னார். (லூக்கா 10:4) அப்படியானால், வழியில் அவர்கள் யாருடனும் பேசாமல் கொள்ளாமல் விறுவிறுவென போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னாரா? இல்லவே இல்லை. பைபிள் காலங்களில், வாழ்த்துச் சொல்வது என்பது வெறுமனே வணக்கம் சொல்லிவிட்டு போவதல்ல. அதில் பொதுவாக அநேக சம்பிரதாயங்களும் நீண்ட உரையாடல்களும் உட்பட்டிருந்தன. இதைக் குறித்து பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “கிழக்கத்திய மக்கள் வாழ்த்துச் சொல்லும்போது நம்மைப் போல் வெறுமனே லேசாக தலைவணங்கவோ கை குலுக்கவோ மாட்டார்கள். ஆனால், பலமுறை அரவணைத்துக்கொள்வார்கள், கீழே குனிந்து, பணிந்து வாழ்த்துச் சொல்வார்கள்; சில சமயங்களில், தரையில் சாஷ்டாங்கமாய் விழுவார்கள். இவை எல்லாவற்றுக்கும் நிறைய நேரம் எடுக்கும்.” இப்படிச் சம்பிரதாய முறையில் வாழ்த்து கூற வேண்டாம் என்று இயேசு தம் சீஷர்களிடம் சொன்னபோது அவர் சொல்ல வந்த குறிப்பு இதுதான்: “நீங்கள் கொண்டு செல்லும் செய்தியை அவசரமாய் அறிவிக்க வேண்டியிருப்பதால் நேரத்தை வீணாக்காதீர்கள்.” b
13. முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுரையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை என்னென்ன விதங்களில் காட்டலாம்?
13 முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு இயேசு கொடுத்த அறிவுரைகளை நாம் கவனத்தில் கொள்கிறோம். ஊழியம் செய்கையில் யெகோவாவையே முழுமையாய் நம்பியிருக்கிறோம். (நீதிமொழிகள் 3:5, 6) ‘எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுத்தால்’ வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை யெகோவா நிச்சயம் பூர்த்தி செய்வார் என்று நமக்குத் தெரியும். (மத்தேயு 6:33) கடினமான காலங்களிலும் யெகோவா நம்மைக் கைவிட மாட்டார் என்பதற்கு உலகெங்கிலும் உள்ள முழுநேர ஊழியர்களின் வாழ்க்கையே சாட்சி. (சங்கீதம் 37:25) கவனம் சிதறடிக்கும் அநாவசியமான காரியங்களைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோம். நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்த உலகம் நம்மை திசைதிருப்பிவிடும். (லூக்கா 21:34-36) ஆனால், திசைதிரும்புவதற்கு இது நேரம் அல்ல. உயிர்கள் ஆபத்தில் இருப்பதால் நல்ல செய்தியை அவசரமாய் அறிவிக்க வேண்டியுள்ளது. (ரோமர் 10:13-15) இந்த அவசர உணர்வு நம் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தால் நம் நேரத்தையும் சக்தியையும் இந்த உலகம் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்க மாட்டோம். மாறாக, நம் நேரத்தையும் சக்தியையும் ஊழியத்தில் செலவிடுவோம். மறந்துவிடாதீர்கள்: எஞ்சிய காலமோ கொஞ்சம், அறுவடை வேலையோ அதிகம்.—மத்தேயு 9:37, 38.
இந்த வேலையில் நமக்கும் பங்குண்டு
14. மத்தேயு 28:18-20-ல் உள்ள கிறிஸ்துவின் கட்டளை அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் பொருந்தும் என்பதை எது சுட்டிக்காட்டுகிறது? (அடிக்குறிப்பையும் காண்க.)
14 உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தம் சீஷர்களிடம், ‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’ என்று சொல்லி ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். கலிலேயாவிலுள்ள மலையில் கூடிவந்திருந்த சீஷர்களை மட்டுமே மனதில் வைத்து அவர் இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. c இயேசு கட்டளையிட்டபடி, நல்ல செய்தியை ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ அறிவிக்க வேண்டும்; அந்த வேலையை “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை” தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே, கிறிஸ்து கொடுத்த வேலையை அவரைப் பின்பற்றும் அனைவரும், ஏன், நாமும் செய்ய வேண்டும். இப்போது, மத்தேயு 28:18-20-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை நாம் கூர்ந்து ஆராயலாம்.
15. சீஷர்களாக்கும்படி இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் கீழ்ப்படிவது ஏன் ஞானமானது?
15 இயேசு இந்தக் கட்டளையைக் கொடுப்பதற்கு முன்பு, “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார். (வசனம் 18) இயேசுவுக்கு உண்மையிலேயே இவ்வளவு அதிகாரம் இருக்கிறதா? ஆம், இருக்கிறது! கோடானுகோடி தேவதூதர்களுக்கு ஆணையிடும் தலைமைத் தூதராக அவர் இருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16; வெளிப்படுத்துதல் 12:7) “சபைக்குத் தலையாக” இருப்பதால் பூமியிலுள்ள தம் சீஷர்கள்மீது இயேசுவுக்கு அதிகாரம் இருக்கிறது. (எபேசியர் 5:23) மேசியானிய ராஜாவாக 1914 முதல் இயேசு பரலோகத்தில் அரசாண்டு வருகிறார். (வெளிப்படுத்துதல் 11:15) அவருடைய அதிகாரம் கல்லறை வரை பாய்கிறது, ஆம், இறந்தவர்களையும் உயிரோடு கொண்டுவரும் வல்லமை அவருக்கு இருக்கிறது. (யோவான் 5:26-28) விண்ணிலும் மண்ணிலும் தமக்கு இருக்கும் அதிகாரத்தை இயேசு முதலில் சொல்வதால் அதற்குப்பின் வரும் வார்த்தைகள் வெறுமனே அறிவுரை அல்ல கட்டளை. ஆகவே, நாம் அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதே ஞானமானது; ஏனென்றால், அந்த அதிகாரத்தை அவரே கையில் எடுத்துக்கொள்ளவில்லை, கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.—1 கொரிந்தியர் 15:27.
16. “புறப்பட்டுப் போய்” என்று இயேசு சொல்வதன் மூலம் நாம் என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார், இந்தக் கட்டளையை நாம் எப்படி நிறைவேற்றலாம்?
16 “புறப்பட்டுப் போய்” என்ற வார்த்தையுடன் இயேசுவின் கட்டளை ஆரம்பிக்கிறது. (வசனம் 19) அப்படியானால், நல்ல செய்தியை அறிவிக்க நாமே முதல்படி எடுக்க வேண்டுமென்று இயேசு நமக்குக் கட்டளையிடுகிறார். இந்தக் கட்டளையை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. மக்களை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வீட்டுக்கு வீடு ஊழியம் மிகச் சிறந்த வழி. (அப்போஸ்தலர் ) சந்தர்ப்ப சாட்சி கொடுக்கவும் நாம் வாய்ப்புகளைத் தேடுகிறோம்; அன்றாடம் சந்திக்கும் மக்களிடம் பொருத்தமான சந்தர்ப்பங்களில் நல்ல செய்தியைக் குறித்து பேச ஆவலாய் இருக்கிறோம். உள்ளூர் தேவைகளையும் சூழ்நிலைகளையும் பொறுத்து ஊழியத்தில் மக்களை நாம் அணுகும் முறை வேறுபடலாம். ஆனால், ஒன்று மட்டும் வேறுபடுவதில்லை: நாம் “புறப்பட்டுப் போய்” நல்மனமுள்ள ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறோம்.— 20:20மத்தேயு 10:11.
17. நாம் எப்படி ‘சீஷர்களாக்கலாம்’?
17 அடுத்ததாக, இந்தக் கட்டளையின் நோக்கத்தை இயேசு விளக்குகிறார். அதாவது, ‘எல்லாத் தேசத்தாரையும் சீஷர்களாக்கும்படி’ சொல்கிறார். (வசனம் 19) சரி, நாம் எப்படி ‘சீஷர்களாக்கலாம்?’ பொதுவாக, சீஷன் என்றால் கற்றுக்கொள்பவன் என்று அர்த்தம். ஆனால், சீஷர்களாக்குவது என்றால், வெறுமனே மற்றவர்களுக்கு அறிவைப் புகட்டுவது அல்ல, கிறிஸ்துவைப் பின்பற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்வதாகும். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இயேசுவின் முன்மாதிரியை நம் மாணாக்கர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போது அவரையே தங்கள் போதகராக, வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆம், அவர் வாழ்ந்த விதமாகவே வாழவும் அவர் செய்த வேலையைச் செய்யவும் கற்றுக்கொள்வார்கள்.—யோவான் 13:15.
18. ஒரு சீஷனின் வாழ்க்கையில் ஞானஸ்நானம் என்பது ஒரு மைல்கல் என எப்படிச் சொல்லலாம்?
18 அடுத்து, அந்தக் கட்டளையின் முக்கியமான அம்சத்தை இயேசு சொல்கிறார். ‘பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுப்பதே’ அந்தக் கட்டளையின் முக்கியமான அம்சம். (வசனம் 19) ஒரு சீஷனின் வாழ்க்கையில் ஞானஸ்நானம் என்பது ஒரு மைல்கல். ஏனென்றால், கடவுளுக்குத் தன்னையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்திருப்பதைக் காட்டுவதற்கு இது ஓர் அடையாளமாக இருக்கிறது. இது மீட்புக்கு இன்றியமையாதது. (1 பேதுரு 3:21) ஞானஸ்நானம் பெற்ற அந்தச் சீஷன் தன்னால் முடிந்த மிகச் சிறந்த சேவையை யெகோவாவுக்குத் தொடர்ந்து செய்யும்போது வரப்போகும் புதிய உலகில் அளவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம். ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் சீஷராவதற்கு யாருக்காவது நீங்கள் உதவி செய்திருக்கிறீர்களா? கிறிஸ்தவ ஊழியத்தில், இதைவிட பெரிய சந்தோஷம் வேறு எதுவுமே இல்லை.—3 யோவான் 4.
19. புதியவர்களுக்கு நாம் என்ன கற்றுக்கொடுக்கிறோம், அவர்கள் ஞானஸ்நானம் எடுத்த பிறகும் நாம் ஏன் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கலாம்?
19 இந்தக் கட்டளையின் அடுத்த அம்சத்தை இயேசு விளக்குகிறார். “உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று சொல்கிறார். (வசனம் 20) இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி—உதாரணத்திற்கு, கடவுளையும் சக மனிதரையும் நேசிக்கும்படி, சீஷர்களாக்கும்படி—புதியவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்கிறோம். (மத்தேயு 22:37-39) பைபிள் சத்தியங்களைப் பிறருக்கு விளக்குவதற்கும் தங்களுக்குள் வளர்ந்துவரும் விசுவாசத்தை ஆதரித்துப் பேசுவதற்கும் புதியவர்களுக்குப் படிப்படியாக கற்றுக்கொடுக்கிறோம். ஊழியத்தில் ஈடுபட அவர்கள் தகுதி பெறும்போது அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்கிறோம், பலன்தரும் விதத்தில் ஊழியம் செய்வது எப்படி என்பதை நம் சொல்லிலும் செயலிலும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம். ஞானஸ்நானம் எடுத்ததுமே அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதை நாம் நிறுத்திவிட வேண்டும் என்றில்லை. புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றும்போது எதிர்ப்படும் சவால்களைச் சமாளிக்க அவர்களுக்குக் கூடுதல் அறிவுரைகளைக் கொடுக்க வேண்டியிருக்கலாம்.—லூக்கா 9:23, 24.
“எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்”
20, 21. (அ) இயேசுவின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு நாம் ஏன் பயப்பட வேண்டியதில்லை? (ஆ) சாவகாசமாய் இருப்பதற்கு இது ஏன் காலம் அல்ல, எதைச் செய்ய நாம் உறுதியோடு இருக்க வேண்டும்?
20 இயேசு கொடுத்த கட்டளையின் இறுதி வார்த்தைகள் மிகவும் நம்பிக்கையூட்டுவதாய் இருக்கின்றன. “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று அவர் கூறினார். (மத்தேயு 28:20) இது முக்கியமான வேலை என்பதை இயேசு உணர்ந்திருக்கிறார். இந்தக் கட்டளையை நிறைவேற்றும்போது சில சமயங்களில் எதிரிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். (லூக்கா 21:12) இருந்தாலும், நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை யாருடைய உதவியுமின்றி நாம் தனியாகச் செய்ய வேண்டுமென நம் தலைவர் எதிர்பார்ப்பதில்லை. ‘பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும்’ பெற்றவர் இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதில் நமக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது ஆறுதலாக இருக்கிறதல்லவா?
21 “சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை” சீஷர்களுக்கு ஊழியத்தில் பக்கபலமாய் இருப்பதாக இயேசு உறுதியளித்தார். முடிவு வரும்வரை நாம் தொடர்ந்து இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். சாவகாசமாய் இருப்பதற்கு இது நேரம் அல்ல. அடையாள அர்த்தத்தில், அறுவடை அமோகமாய் நடைபெற்று வருகிறது! ஆர்வமுள்ளவர்கள் ஏராளமானோர் கூட்டி சேர்க்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் சீஷர்களான நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான வேலையை செய்து முடிக்க நாம் உறுதிபூண்டிருப்போமாக. ‘புறப்படுங்கள் . . . சீஷர்களாக்குங்கள்’ என கிறிஸ்து கொடுத்த கட்டளையை நிறைவேற்ற நம்முடைய நேரம், சக்தி, வளம் அனைத்தையும் அர்ப்பணிப்போமாக.
a அந்தக் காலத்தில் இடுப்பில் கட்டிக்கொள்ளும் ‘பெல்ட்டில்’ காசு வைத்துக்கொள்வதற்கு ஒரு ‘பாக்கெட்’ இருக்கும், அதைத்தான் மக்கள் பயன்படுத்தினார்கள். உணவுப் பை என்பது தோளில் மாட்டப்படும் ஒரு பெரிய தோல் பை, உணவுப் பொருள்களையும் தேவையான மற்ற பொருள்களையும் வைத்துக்கொள்ள இது பயன்படுத்தப்பட்டது.
b எலிசா தீர்க்கதரிசி ஒருமுறை இதேபோன்ற அறிவுரையைத் தன் ஊழியனான கேயாசிக்கு கொடுத்தார். மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் வீட்டிற்கு அவரை அனுப்பியபோது, “வழியில் யாரிடமும் நலம் விசாரித்துக்கொண்டிருக்காதே” என்று சொல்லி அனுப்பினார். (2 ராஜாக்கள் 4:29) அது ஓர் அவசர வேலை என்பதால் அநாவசியமாக நேரத்தை வீணடிப்பதற்கு அது சமயமல்ல.
c இயேசுவின் சீஷர்களில் பெரும்பாலோர் கலிலேயாவில் இருந்தார்கள். அதனால், ‘500-க்கும் அதிகமானவர்களுக்கு’ உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு காட்சியளித்தது மத்தேயு 28:16-20-ல் விவரிக்கப்பட்டுள்ள சம்பவத்தின்போது இருக்கலாம். (1 கொரிந்தியர் 15:6) எனவே, சீஷர்களாக்கும்படி இயேசு கட்டளை கொடுத்தபோது அங்கு நூற்றுக்கணக்கானோர் இருந்திருக்கலாம்.