Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வணக்கத்தில் யெகோவாவிடம் திரும்புங்கள்

வணக்கத்தில் யெகோவாவிடம் திரும்புங்கள்

அதிகாரம் ஏழு

வணக்கத்தில் யெகோவாவிடம் திரும்புங்கள்

ஏசாயா 46:1-13

இஸ்ரவேலர் பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கையில் பொய் வணக்கத்தால் சூழப்பட்டிருப்பர். ஏசாயாவின் காலத்திலோ, யெகோவாவின் ஜனங்கள் இன்னும் தங்கள் சொந்த தேசத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆலயமும் ஆசாரியத்துவமும் இருக்கிறது. இருந்தாலும், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த இந்த ஜனத்தில் பலர் விக்கிரக வழிபாட்டில் மூழ்கிவிட்டிருக்கின்றனர். அப்படியானால், பாபிலோனின் பொய்க் கடவுட்களுக்கு பயந்து அடிபணிந்துவிடாமல் இருப்பதற்கு அல்லது அவற்றை வழிபட கவர்ந்திழுக்கப்படாமல் இருப்பதற்கு அவர்களை முன்கூட்டியே தயார்படுத்துவது இன்றியமையாதது. ஆகவே, பாபிலோனின் இரண்டு முக்கிய தெய்வங்களைப் பற்றி ஏசாயா இப்பொழுது தீர்க்கதரிசனமாக கூறுகிறார்: “பேல் கூனிக் குறுகுகின்றது; நேபோ குப்புற வீழ்கின்றது; அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன; நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின; களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின.” (ஏசாயா 46:1, பொ.மொ.) கல்தேயருடைய தெய்வங்களில் முதன்மை வாய்ந்ததுதான் பேல் என்ற தெய்வம். நேபோ ஞானத்திற்கும் கல்விக்கும் தெய்வமாக போற்றிப் புகழப்படுகிறது. இந்த இரு தெய்வங்களுக்கும் எந்தளவு மதிப்பும் மரியாதையும் காட்டுகிறார்கள் என்பது பாபிலோனியர் தங்கள் பெயர்களில் இவற்றின் பெயர்களை சேர்த்திருப்பதிலிருந்தே புலப்படுகிறது. அப்பெயர்களில் சில: பெல்ஷாத்சார், நபோபொலாசார், நேபுகாத்நேச்சார் மற்றும் நேபுசராதான்.

2பேல் “கூனிக் குறுகுகின்றது,” “நேபோ குப்புற வீழ்கின்றது” என ஏசாயா கூறுகிறார். இந்தப் பொய் தெய்வங்கள் சிறுமைப்படுத்தப்படும். பாபிலோனுக்கு விரோதமாக யெகோவா நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகையில், இந்தத் தெய்வங்களால் தங்கள் வணக்கத்தாருக்கு உதவிக்கரம் நீட்ட முடியாது. அவற்றால் தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாதே! பாபிலோனிய புத்தாண்டு பண்டிகை தினத்தில் பவனி வருவதுபோல பேல் மற்றும் நேபோ இனி ஒருகாலும் மதிப்பிற்குரிய ஸ்தானத்தை பெறுவதில்லை. அதற்கு பதிலாக சுமையை இழுத்துச் செல்வதைப்போல் அவற்றை வணங்குவோர் அவற்றை இழுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அவை பேரும் புகழும் இழந்து இகழ்ச்சியும் அவமதிப்பும் அடையும்.

3தாங்கள் போற்றி புகழ்ந்து வந்த தெய்வங்கள் களைத்துப்போன மிருகங்களுக்கு பாரமாயிருக்கும் என அறிவது பாபிலோனியர்களுக்கு என்னே ஓர் அதிர்ச்சியாக இருக்கிறது! அவ்வாறே இன்றும் உலக தெய்வங்கள்​—⁠ஜனங்கள் நம்பிக்கை வைத்து அவற்றிற்காக தங்கள் சக்தியையும், ஏன் தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் காரியங்கள்​—⁠போலியானவை. செல்வம், போர்த்தளவாடங்கள், சிற்றின்பங்கள், ஆட்சியாளர்கள், தாய்நாடு அல்லது அதை பிரதிநிதித்துவம் செய்யும் சின்னங்கள், இன்னும் அநேக காரியங்கள் வழிபாட்டுக்குரியவையாக ஆகிவிட்டன. யெகோவாவின் உரிய காலத்தில் இத்தெய்வங்களின் மதிப்பற்ற தன்மை அம்பலமாகிவிடும்.​—தானியேல் 11:38; மத்தேயு 6:24; அப்போஸ்தலர் 12:22; பிலிப்பியர் 3:19; கொலோசெயர் 3:5; வெளிப்படுத்துதல் 13:14, 15.

4பாபிலோனிய தெய்வங்களின் படு தோல்வியை வலியுறுத்திக் காட்டும் வண்ணம் தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன; கூனிக் குறுகுகின்றன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை; அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.” (ஏசாயா 46:2, பொ.மொ.) போரில் காயமடைந்ததுபோல் அல்லது முதிர்வயதால் தளர்ச்சியடைந்ததுபோல் இந்த பாபிலோனிய தெய்வங்கள் ‘குப்புற வீழ்ந்து’ ‘கூனிக் குறுகுவது’ போல் தோன்றுகின்றன. அவற்றைச் சுமந்து வந்த தாழ்ந்த மிருகங்களின் சுமையைக் குறைக்கவோ அந்த மிருகங்களைத் தப்புவிக்கவோ அவற்றால் முடியாது. ஆகவே, யெகோவாவுடைய உடன்படிக்கையின் ஜனங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தாலும் அவற்றிற்கு கனத்தையும் மரியாதையையும் காட்ட வேண்டுமா? வேண்டவே வேண்டாம்! அவ்வாறே யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருந்தபோதும் ‘மகா பாபிலோனின்’ பொய்க் கடவுட்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் காட்டவில்லை. 1919-⁠ல் மகா பாபிலோனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டபோது இந்தப் பொய்க் கடவுட்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை, வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ நேரிடப்போகும் அழிவிலிருந்தும் அதைக் காப்பாற்ற முடியாது.​—வெளிப்படுத்துதல் 18:2, 21; மத்தேயு 24:21.

5இன்றும் உண்மை கிறிஸ்தவர்கள் எந்தவித விக்கிரகங்களையும் தாழவிழுந்து பணிவதில்லை. (1 யோவான் 5:21) சிலுவைகளோ, ஜெபமாலைகளோ, புனிதர்களின் உருவங்களோ சிருஷ்டிகரிடம் அணுக உதவுவதில்லை. அவற்றால் நம் சார்பாக பரிந்து பேசவும் முடியாது. முதல் நூற்றாண்டில், இயேசு தம்முடைய சீஷர்களுக்கு போதிக்கையில் கடவுளை வணங்குவதற்கான சரியான மார்க்கத்தைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.”​—⁠யோவான் 14:6, 14.

‘கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் சுமந்தேன்’

6பாபிலோனின் விக்கிரக தெய்வங்களை வணங்குவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தபின், யெகோவா தம்முடைய ஜனங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: “யாக்கோபின் சந்ததியாரே, இஸ்ரவேல் சந்ததியில் தப்பி மீந்த சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தினேன், கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைச் சுமந்தேன்.” (ஏசாயா 46:3, தி.மொ.) யெகோவாவுக்கும் செதுக்கப்பட்ட பாபிலோனிய சிலைகளுக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! அந்தப் பாபிலோனிய தெய்வங்களால் அவற்றை வழிபடுவோருக்கு வேண்டிய எதையும் செய்ய முடியாது. அவை நகருவதற்கே சுமை சுமக்கும் மிருகங்களின் சகாயம் தேவைப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, யெகோவா தம்முடைய ஜனங்களை சுமந்து வந்திருக்கிறார். “கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல்” அதாவது, ஒரு தேசமாக உருவானது முதல் அவர்களை அவர் ஆதரித்து வந்திருக்கிறார். யெகோவா தங்களை எப்படியெல்லாம் தாங்கி வந்தார் என்ற பசுமையான நினைவுகள்தானே யூதர்கள் விக்கிரக வழிபாட்டை தவிர்த்து தங்கள் பிதாவும் நண்பருமானவரிடம் நம்பிக்கை வைப்பதற்கு தூண்ட வேண்டும்.

7அடுத்து வருவது யெகோவா தம்முடைய ஜனங்களிடம் கூறும் உருக்கமான வார்த்தைகள்: “உங்கள் முதிர்வயது வரைக்கும் நான் மாறாமல் அப்படியே இருப்பேன், நரைவயது மட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படியே செய்துவந்தேன்; நானே சுமப்பேன்; நானே தாங்கி விடுவிப்பேன்.” (ஏசாயா 46:4, தி.மொ.) தம்முடைய ஜனங்களை யெகோவா பராமரித்து வருவது மிகவும் நேசமான மனித பெற்றோரின் அரவணைப்பைப் பார்க்கிலும் மேலானது. பிள்ளைகள் வளர வளர, தங்களுக்கு அதிக உத்தரவாதம் இல்லை என பெற்றோர் உணரலாம். பெற்றோர் வயதாகிவிடுகையில், பிள்ளைகளே பெரும்பாலும் அவர்களை கவனிக்கிறார்கள். யெகோவாவைப் பொறுத்தவரை இது ஒருபோதும் நடக்காது. அவர் தம்முடைய மானிட பிள்ளைகளை அவர்களுடைய தள்ளாடும் வயதிலும்கூட பேணி பராமரிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடுகிறதில்லை. இன்றும் கடவுளை வணங்குபவர்கள் தங்களுடைய சிருஷ்டிகரில் நம்பிக்கையும் அன்பும் வைத்து, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்த வார்த்தைகளிலிருந்து மிகுந்த ஆறுதலை கண்டடைகிறார்கள். அவர்கள் இந்த ஒழுங்குமுறையில் இன்னும் கழிக்க வேண்டிய நாட்களை அல்லது வருடங்களை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை. வயது முதிர்ந்தவர்கள் உண்மையுடன் சகித்து நிலைத்திருப்பதற்கு போதிய பலத்தைக் கொடுப்பதன் மூலம் அவர்களைத் “தாங்குவேன்” என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். அவர்களை அவர் சுமந்து, பலப்படுத்தி, விடுவிப்பார்.​—எபிரெயர் 6:10.

நவீன நாளைய விக்கிரகங்கள்​—⁠எச்சரிக்கை!

8விக்கிரகங்களில் நம்பிக்கை வைக்கும் பாபிலோனியருக்கு என்ன ஏமாற்றம் காத்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவ்விக்கிரகங்கள் முற்றிலும் பயனற்றதாக இருக்கும்! இஸ்ரவேலர் அந்தத் தெய்வங்களை யெகோவாவுக்குச் சமமாக கருத வேண்டுமா? நிச்சயமாக வேண்டியதில்லை. ஆகவே, யெகோவா இவ்வாறு கேட்பது சரியானதே: “யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?” (ஏசாயா 46:5) ஏசாயாவின் சக வாசிகளில் சிலர் பேச முடியாத, உயிரற்ற, சக்தியற்ற சிலைகளை வழிபடுபவர்களாக மாறியிருப்பது எவ்வளவு பொறுக்க முடியாத விஷயம்! யெகோவாவை அறிந்திருக்கும் ஜனம், மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரற்ற, பாதுகாக்க முடியாத உருவங்களை நம்புவது உண்மையிலேயே முட்டாள்தனம்.

9விக்கிரகங்களை வழிபடுபவர்களின் முட்டாள்தனமான நியாய விவாதங்களை கவனியுங்கள். தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது: “மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்; தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்; பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்; அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்; பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள்.” (ஏசாயா 46:6, பொ.மொ.) மரத்தாலான விக்கிரகத்தைக் காட்டிலும் விலையுயர்ந்த விக்கிரகத்திற்கு அதிக சக்தி இருப்பதுபோல் நினைத்துக்கொண்டு வணக்கத்தார் அதற்காக பணத்தை வாரி இறைக்கிறார்கள். இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கினாலும்சரி எவ்வளவு விலையுயர்ந்த பொருட்களால் உருவாக்கினாலும்சரி உயிரற்ற விக்கிரகம் உயிரற்ற விக்கிரகமே, அதில் மாற்றமே இல்லை.

10விக்கிரக வழிபாட்டின் முட்டாள்தனத்தை வலியுறுத்தி தீர்க்கதரிசனம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்; அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்; அது அங்கேயே நிற்கிறது; தன் இடத்திலிருந்து அது பெயராது; எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது; அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை.” (ஏசாயா 46:7, பொ.மொ.) கேட்கவோ செயல்படவோ முடியாத ஒரு சிலையைப் பார்த்து வேண்டுவது எவ்வளவு முட்டாள்தனம்! வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படும் இப்படிப்பட்ட பொருட்களின் பயனற்ற தன்மையை சங்கீதக்காரன் அழகாக விவரிக்கிறார்: “அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.”​—சங்கீதம் 115:4-8.

‘தைரியத்தை திரட்டுங்கள்’

11விக்கிரக வழிபாட்டின் பயனற்ற தன்மையை மெய்ப்பித்துக் காட்டியபின், தம்முடைய ஜனங்கள் ஏன் தம்மை வணங்க வேண்டும் என்பதற்குரிய காரணங்களை யெகோவா இப்போது அளிக்கிறார்: “ஜனங்களே, நீங்கள் தைரியத்தை திரட்ட இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; கலகக்காரரே, இதை மனதில் வையுங்கள். முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவற்றை நினையுங்கள்; நானே கடவுள், வேறெந்த கடவுளும் இல்லை; என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.” (ஏசாயா 46:8, 9, NW) மெய் வணக்கத்திற்கும் விக்கிரக வணக்கத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள் பூர்வ காலத்தில் நடந்தவற்றை நினைவிற்கொள்ள வேண்டும். யெகோவா செய்திருக்கும் காரியங்களை அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இது தைரியத்தை திரட்டவும் சரியானதைச் செய்யவும் அவர்களுக்கு உதவும். இது வணக்கத்தில் யெகோவாவிடம் திரும்புவதற்கும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

12இதே ஊக்கமூட்டுதல் இன்றும் தேவைப்படுகிறது. இஸ்ரவேலரை போலவே உண்மையுள்ள கிறிஸ்தவர்களும் கவர்ச்சியான காரியங்களுக்கும் தங்களுடைய சொந்த அபூரணங்களுக்கும் எதிராக போராட வேண்டியுள்ளது. (ரோமர் 7:21-24) அதோடு, அவர்கள் காணக்கூடாத, ஆனால் அதிக சக்திபடைத்த சத்துருவுடனும் ஆவிக்குரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார்.​—⁠எபேசியர் 6:12.

13கிறிஸ்தவர்களை மெய் வணக்கத்திலிருந்து திசை திருப்புவதற்கு சாத்தானும் அவனுடைய பேய்களும் எதையும் செய்வார்கள். வெற்றிகரமாக போராடுவதற்கு, கிறிஸ்தவர்கள் யெகோவாவின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும், தைரியத்தையும் ஒன்றுதிரட்ட வேண்டும். எப்படி? அப்போஸ்தலனாகிய பவுல் அதை இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” யெகோவா தம்முடைய ஊழியர்களை நிராயுதபாணியாக போருக்கு அனுப்புவதில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய போராயுதங்களில் ‘விசுவாசமென்னும் கேடகமும்’ இருக்கிறது, அதைக்கொண்டு “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் [அவர்களால்] அவித்துப்போட” முடியும். (எபேசியர் 6:11, 16) இஸ்ரவேலரோ கலகக்காரர்களாக இருந்தார்கள், ஏனெனில் யெகோவா அவர்களுக்காக செய்திருந்த ஆவிக்குரிய ஏற்பாடுகளையெல்லாம் அசட்டை செய்தார்கள். அவர்களுக்காக யெகோவா தொடர்ந்து செய்த வல்லமையான செயல்களை சிந்தித்துப் பார்த்திருந்தால், அவர்கள் ஒருபோதும் இந்த அருவருப்பான விக்கிரக வழிபாட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருக்க மாட்டார்கள். நாமும் அவர்களுடைய உதாரணத்திலிருந்து கற்றுக்கொண்டு, சரியானதை செய்வதற்கான போராட்டத்தில் ஒருபோதும் தடுமாறாமலிருக்க தீர்மானமாய் இருப்போமாக.​—1 கொரிந்தியர் 10:11.

14யெகோவாவே “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வ காலமுதற்கொண்டும் அறிவிக்கி[றவர்]; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்[கிறவர்].” (ஏசாயா 46:10) இந்த விஷயத்தில் வேறெந்த கடவுளைத்தான் யெகோவாவுக்கு ஒப்பிட முடியும்? வருங்காலத்தைக் குறித்து முன்னறிவிக்கும் திறனே சிருஷ்டிகரின் தேவத்துவத்திற்கு தலைசிறந்த நிரூபணம். இருந்தாலும், முன்னறிவித்த காரியங்கள் நிறைவேறுமாறு பார்த்துக்கொள்வதற்கு முன்னறியும் திறன் மட்டுமே போதாது. “என் ஆலோசனை நிலைநிற்கும்” என்ற அறிவிப்புதானே கடவுளுடைய உறுதியான நோக்கத்தின் மாறாத தன்மையை வலியுறுத்துகிறது. யெகோவாவுக்கு எல்லையற்ற வல்லமை இருப்பதால், அவருடைய சித்தம் நிறைவேறுவதை இந்த அண்டத்திலுள்ள எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. (தானியேல் 4:35) ஆகவே, இன்னும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் கடவுளுடைய உரிய காலத்தில் நிச்சயம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.​—ஏசாயா 55:11.

15வருங்கால சம்பவங்களை முன்னறிவித்து, அவற்றை நிறைவேற்றும் யெகோவாவின் திறமையைப் பற்றிய தலைசிறந்த ஓர் உதாரணத்தின் மீது அடுத்து ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நம் கவனத்தை ஈர்க்கிறது: “உராய்ஞ்சுகிற [“இரைமேல் பாயும்,” பொ.மொ.] ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.” (ஏசாயா 46:11) “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு” அறிவிக்கிற யெகோவா தேவன் தம்முடைய ஆலோசனையை நிறைவேற்றுவதற்காக மனித விவகாரங்களை அதற்கேற்ப வடிவமைப்பார். அவர் கோரேசுவை “கிழக்கிலிருந்து” அல்லது கிழக்கேயுள்ள பெர்சியாவிலிருந்து வரவழைப்பார். அங்குதான் கோரேசின் பிரியமான தலைநகராகிய பஸார்கடி அமைந்திருக்கும். கோரேசு “இரைமேல் பாயும் ஒரு பட்சியை” போல மிக வேகமாகவும் எதிர்பாரா விதமாகவும் பாபிலோன் மீது பாய்வார்.

16பாபிலோனைப் பற்றி யெகோவா முன்னறிவித்தவற்றின் நம்பகத்தன்மை, “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்” என்ற வார்த்தைகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. அபூரண மனிதன் முன்பின் யோசிக்காமல் வாக்குறுதிகளை கொடுக்கும் இயல்புடையவன், ஆனால் சிருஷ்டிகரோ தம்முடைய வாக்கை காப்பாற்ற ஒருபோதும் தவறுவதில்லை. ஏனெனில் யெகோவா “பொய்யுரையாத தேவன்.” அவர் ‘திட்டம் பண்ணினால்’ ‘அதைச் செய்து முடிப்பார்’ என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.​—தீத்து 1:3.

விசுவாசமற்ற நெஞ்சங்கள்

17மறுபடியும் தீர்க்கதரிசன வார்த்தையின் மூலமாக யெகோவா பாபிலோனியரிடம் தம் கவனத்தைத் திருப்பி இவ்வாறு கூறுகிறார்: “வலிய இதயமுள்ளவர்களே, நீதிக்கு தூரமாக இருப்பவர்களே, எனக்கு செவிகொடுங்கள்.” (ஏசாயா 46:12, NW) “வலிய இதயமுள்ளவர்களே” என்ற சொற்றொடர் கடவுளுடைய சித்தத்தை எதிர்ப்பதில் விடாப்பிடியாக இருப்பவர்களை, இணங்காதவர்களை விவரிக்கிறது. பாபிலோனியர்கள் கடவுளிடமிருந்து வெகு தூரம் விலகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. யெகோவாவிடமும் அவருடைய ஜனங்களிடமும் அவர்கள் கொண்ட பகைமை, எருசலேமையும் அதன் ஆலயத்தையும் அழிக்கவும் அதன் குடிமக்களை சிறைபிடித்துச் செல்லவும் அவர்களை செய்விக்கிறது.

18இன்று, சந்தேகிக்கிற நம்பிக்கையற்ற நெஞ்சங்கள் பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்படும் ராஜ்ய செய்திக்கு செவிசாய்க்க விடாப்பிடியாக மறுக்கின்றன. (மத்தேயு 24:14) யெகோவாவே உரிமையுள்ள அரசதிகாரி என்பதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. (சங்கீதம் 83:17; வெளிப்படுத்துதல் 4:11) அவர்களுடைய இருதயம் “நீதிக்கு தூரமாக” இருப்பதால், அவருடைய சித்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) பாபிலோனியரைப் போன்றே இவர்களும் யெகோவாவுக்குச் செவிகொடுக்க மறுக்கிறார்கள்.

கடவுள் தரும் இரட்சிப்பு தாமதிப்பதில்லை

19ஏசாயா 46-⁠ம் அதிகாரத்தின் கடைசி வசனம் யெகோவாவுடைய ஆள்தன்மையின் அம்சங்களை சிறப்பித்துக் காட்டுகிறது: “என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.” (ஏசாயா 46:13) இஸ்ரவேலரை கடவுள் விடுவிப்பது நீதியின் செயலாக இருக்கும். தம்முடைய ஜனங்கள் சிறையிருப்பிலேயே இருந்து விடுவதற்கு அவர் அனுமதிக்க மாட்டார். சீயோனின் இரட்சிப்பு தக்க சமயத்தில் வரும், அது ‘தாமதிப்பதில்லை.’ இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டபின் சுற்றிலுமுள்ள தேசத்தாருக்குக் காட்சிப் பொருளாக ஆவார்கள். யெகோவா தம்முடைய ஜனத்தை விடுவிப்பது அவருடைய மீட்கும் வல்லமைக்கு அத்தாட்சியாக நிரூபிக்கும். பாபிலோனிய தெய்வங்களாகிய பேல் மற்றும் நேபோவின் லாயக்கற்ற தன்மை எல்லாரும் காணும்படி அம்பலப்படுத்தப்படும், அவை வல்லமையற்றவை என்பதும் வெளிப்படுத்தப்படும்.​—1 இராஜாக்கள் 18:39, 40.

20யெகோவா தம்முடைய ஜனங்களை 1919-⁠ல் ஆவிக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுவித்தார். அப்போது அவர் தாமதிக்கவில்லை. இந்தச் சம்பவமும், பூர்வ காலங்களில் கோரேசு பாபிலோனைக் கைப்பற்றியபோது நிகழ்ந்த சம்பவங்களும் இன்று வாழும் நம்மையும் ஊக்கப்படுத்துகின்றன. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையையும் அதன் பொய் வணக்கத்தையும் முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 19:1, 2, 17-21) மனித கண்ணோட்டத்தில் சில கிறிஸ்தவர்களுக்கு தங்கள் இரட்சிப்பு தாமதிப்பதுபோல் தோன்றலாம். இருந்தாலும், தம்முடைய வாக்கை நிறைவேற்றுவதற்கு உரிய காலம் வரும்வரை யெகோவா பொறுமையைக் காட்டுவது உண்மையிலேயே நீதியின் செயலாகும். அதோடு, “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று [யெகோவா] விரும்[புகிறார்].” (2 பேதுரு 3:9) ஆகவே, பூர்வ இஸ்ரவேலில் நடந்ததுபோல ‘இரட்சிப்பு தாமதிப்பதில்லை’ என்பதில் உறுதியாக இருங்கள். உண்மையில், இரட்சிப்பின் நாள் நெருங்க நெருங்க, யெகோவா அன்புடன் இந்த அழைப்பை விடுத்துக்கொண்டே இருக்கிறார்: “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.”​—⁠ஏசாயா 55:6, 7.

[கேள்விகள்]

1. பாபிலோனின் இரண்டு முக்கிய தெய்வங்களின் பெயர்கள் என்ன, அவற்றைப் பற்றி என்ன முன்னறிவிக்கப்படுகிறது?

2. பாபிலோனிய தெய்வங்களின் உதவியற்ற நிலை எவ்வாறு வலியுறுத்திக் காட்டப்படுகிறது?

3. (அ) பாபிலோனியர்களுக்கு எது அதிர்ச்சியைத் தரும்? (ஆ) பாபிலோனிய தெய்வங்களுக்கு சம்பவித்ததிலிருந்து இன்று என்ன கற்றுக்கொள்ளலாம்?

4. என்ன கருத்தில் பாபிலோனின் கடவுட்கள் “குப்புற வீழ்கின்றன,” “கூனிக் குறுகுகின்றன”?

5. விக்கிரகங்களை வழிபட்ட பாபிலோனியருடைய அதே தவற்றை இன்றைய கிறிஸ்தவர்கள் எப்படி தவிர்க்கிறார்கள்?

6. யெகோவா மற்ற தேசங்களின் தெய்வங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?

7. தம்மை வணங்குவோரிடத்தில் யெகோவா காட்டும் கனிவான பராமரிப்பு தங்களுடைய பிள்ளைகளை பேணிப் பராமரிக்கும் மனித பெற்றோரைவிட மேலானது என எப்படிச் சொல்ல முடியும்?

8. ஏசாயாவின் சக வாசிகளில் சிலர் என்ன பொறுக்க முடியாத பாவத்தைச் செய்திருக்கின்றனர்?

9. விக்கிரக வணக்கத்தார் சிலரின் முட்டாள்தனமான நியாய விவாதத்தை விளக்குங்கள்.

10. விக்கிரக வழிபாட்டின் பயனற்ற தன்மை எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

11. ஊசலாடிக் கொண்டிருப்போர் “தைரியத்தை திரட்ட” எது உதவும்?

12, 13. கிறிஸ்தவர்களுக்கு என்ன போராட்டங்கள் இருக்கின்றன, அவற்றை அவர்கள் எவ்வாறு வெல்லலாம்?

14. யெகோவாவே மெய்க் கடவுள் என காட்டுவதற்கு என்ன திறமையை அவர் குறிப்பிடுகிறார்?

15. வருங்காலத்தை முன்னறிவிக்கும் யெகோவாவின் திறமையைப் பற்றிய என்ன தலைசிறந்த உதாரணம் நம் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது?

16. பாபிலோனைக் குறித்த முன்னறிவிப்பின் நம்பகத்தன்மையை யெகோவா எவ்வாறு உறுதிப்படுத்துகிறார்?

17, 18. யாரை “வலிய இதயமுள்ளவர்”கள் என கூறலாம்: (அ) பூர்வ காலங்களில், (ஆ) நவீன காலத்தில்?

19. இஸ்ரவேலரின் சார்பாக யெகோவா நீதியின் செயலை எவ்வழியில் நிறைவேற்றுவார்?

20. யெகோவா அளிக்கும் ‘இரட்சிப்பு தாமதிப்பதில்லை’ என்பதில் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உறுதியாக இருக்கலாம்?

[பக்கம் 94-ன் படங்கள்]

பாபிலோனை அதன் தெய்வங்கள் அழிவிலிருந்து பாதுகாக்கிறதில்லை

[பக்கம் 98-ன் படங்கள்]

இன்று கிறிஸ்தவர்கள் நவீன நாளைய விக்கிரகங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

[பக்கம் 101-ன் படங்கள்]

சரியானதை செய்வதற்கு தைரியத்தை திரட்டுங்கள்