அதிகாரம் 4
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏன் மதிப்புக் கொடுக்க வேண்டும்?
“எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள். கடவுளுக்குப் பயந்து நடங்கள். ராஜாவுக்கு மதிப்புக் கொடுங்கள்.”—1 பேதுரு 2:17.
1, 2. (அ) யாருடைய வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும்? (ஆ) இந்த அதிகாரத்தில் என்ன கேள்விகளுக்குப் பதிலைப் பார்ப்போம்?
நீங்கள் சின்ன பிள்ளையாக இருந்தபோது, சில சமயங்களில் உங்களுக்குப் பிடிக்காத எதையாவது செய்யும்படி உங்கள் அப்பா-அம்மா சொல்லியிருக்கலாம். அவர்கள்மீது உங்களுக்கு அன்பு இருந்தது; அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று உங்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும், எல்லா சமயத்திலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க நீங்கள் விரும்பியிருக்க மாட்டீர்கள்.
2 யெகோவா அப்பாவுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அவர் நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாமே கிடைக்கும்படி செய்கிறார். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற சரியான வழிநடத்துதலைத் தருகிறார். சில சமயங்களில், மற்றவர்களைப் பயன்படுத்தி நமக்கு வழிநடத்துதலைத் தருகிறார். நாம் யெகோவாவின் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பது முக்கியம். (நீதிமொழிகள் 24:21) ஆனால், வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது ஏன் சில சமயங்களில் கஷ்டமாக இருக்கிறது? வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியும்படி யெகோவா ஏன் நம்மிடம் சொல்கிறார்? யெகோவாவின் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டுகிறோம்?—பின்குறிப்பு 9.
கீழ்ப்படிவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?
3, 4. மனிதர்கள் எப்படிப் பாவ இயல்புள்ளவர்களாக ஆனார்கள்? மற்றவர்கள் தரும் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?
3 பொதுவாக, அதிகாரத்தை எதிர்ப்பது மனிதர்களின் சுபாவமாக இருக்கிறது. ஆதாம்-ஏவாள் பாவம் செய்த காலத்திலிருந்தே இதுதான் உண்மையாக இருந்திருக்கிறது. அவர்கள் பரிபூரணராகப் படைக்கப்பட்டிருந்தாலும், கடவுளுடைய அதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அன்றுமுதல் மனிதர்கள் எல்லாருமே பாவம் என்ற குறையோடு பிறக்கிறார்கள். அதனால்தான், யெகோவாவிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் கிடைக்கிற வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதோடு, நமக்கு வழிநடத்துதலைத் தர யெகோவா பயன்படுத்தும் மனிதர்களும் நம்மைப் போல் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் கீழ்ப்படிவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது.—ஆதியாகமம் 2:15-17; 3:1-7; சங்கீதம் 51:5; ரோமர் 5:12.
4 நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், நமக்குள் பெருமை வந்துவிடலாம். பெருமை வந்துவிட்டால் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாகிவிடும். உதாரணத்துக்கு, தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசேயை யெகோவா தேர்ந்தெடுத்தார். யெகோவாவைப் பல காலமாகச் சேவித்த கோராகு என்பவருக்குப் பெருமை வந்துவிட்டதால் அவர் மோசேயை ரொம்பவே அவமதித்தார். கடவுளுடைய மக்களை மோசே வழிநடத்தினாலும், அவருக்குப் பெருமை இருக்கவில்லை. சொல்லப்போனால், அன்று வாழ்ந்த மக்களிலேயே அவர் ரொம்ப மனத்தாழ்மை உள்ளவராக இருந்தார். ஆனாலும், மோசேக்குக் கீழ்ப்படிவது கோராகுவுக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் ஒரு பெரிய கும்பலையே தன் பக்கம் சேர்த்துக்கொண்டு மோசேயை எதிர்த்தார். கோராகுவுக்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் என்ன நடந்தது? அவர்கள் கொல்லப்பட்டார்கள். (எண்ணாகமம் 12:3; 16:1-3, 31-35) பெருமை என்ற குணம் ரொம்ப ஆபத்தானது என்பதற்கு பைபிளில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.—2 நாளாகமம் 26:16-21; பின்குறிப்பு 10.
5. சிலர் தங்களுடைய அதிகாரத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்?
5 “அதிகாரம் ஆளையே மாற்றிவிடும்” என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். சரித்திரத்தில் நிறைய பேர் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். (பிரசங்கி 8:9-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, சவுலை இஸ்ரவேலின் ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்தபோது அவர் நல்லவராக, தாழ்மையுள்ளவராக இருந்தார். ஆனால், பெருமையும் பொறாமையும் அவருக்குள் வந்ததால், எந்தத் தவறும் செய்யாத தாவீதை அவர் ரொம்பக் கஷ்டப்படுத்தினார். (1 சாமுவேல் 9:20, 21; 10:20-22; 18:7-11) பிற்பாடு, தாவீது ஒரு ராஜாவாக ஆனார். இஸ்ரவேலை ஆட்சி செய்த சிறந்த ராஜாக்களில் இவரும் ஒருவர். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, இவரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார். உரியாவின் மனைவியான பத்சேபாளோடு உறவுகொண்டார். அந்தப் பாவத்தை மறைக்க, போரில் உரியா கொல்லப்படும்படி செய்தார்.—2 சாமுவேல் 11:1-17.
யெகோவாவின் அதிகாரத்துக்கு நாம் ஏன் மதிப்புக் கொடுக்கிறோம்?
6, 7. (அ) யெகோவாமீது நமக்கிருக்கும் அன்பு என்ன செய்ய நம்மைத் தூண்டும்? (ஆ) கஷ்டமான சமயத்திலும் கீழ்ப்படிந்து நடக்க எது நமக்கு உதவும்?
6 யெகோவாமீது அன்பு இருப்பதால் அவருடைய வழிநடத்துதலுக்கு மதிப்புக் கொடுக்கிறோம். நாம் வேறு யாரையும், வேறு எதையும்விட யெகோவாவை அதிகமாக நேசிப்பதால் அவரைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். (நீதிமொழிகள் 27:11-ஐயும் மாற்கு 12:29, 30-ஐயும் வாசியுங்கள்.) ஆதாம்-ஏவாள் காலத்திலிருந்தே மக்கள் யெகோவாவின் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதுதான் சாத்தானுடைய விருப்பமாக இருந்திருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டுமென்று சொல்ல யெகோவாவுக்கு உரிமை இல்லையென சாத்தான் நம்மை நினைக்க வைக்கிறான். ஆனால், அது ஒரு பொய் என்று நமக்குத் தெரியும். “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்” என்ற வார்த்தைகளை நாம் ஒத்துக்கொள்கிறோம்.—வெளிப்படுத்துதல் 4:11.
7 நீங்கள் சின்ன பிள்ளையாக இருந்தபோது, தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி அப்பா-அம்மா உங்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார்கள். ஆனால், அப்படிக் கீழ்ப்படிவது சில சமயங்களில் உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். அதேபோல், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது அவருடைய ஊழியர்களான நமக்கு சில சமயங்களில் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் யெகோவாவை நேசிப்பதாலும் அவரை மதிப்பதாலும் அவருக்குக் கீழ்ப்படிய நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். இந்த விஷயத்தில் இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அவருக்குச் சுலபமாகவோ வசதியாகவோ இல்லாத சமயத்திலும்கூட அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அதனால்தான் தன்னுடைய அப்பாவிடம், “என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று அவரால் சொல்ல முடிந்தது.—லூக்கா 22:42; பின்குறிப்பு 11.
8. என்ன சில வழிகளில் யெகோவா நம்மை வழிநடத்துகிறார்? (“ ஆலோசனையைக் கேளுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
8 இன்று பல வழிகளில் யெகோவா நம்மை வழிநடத்துகிறார். உதாரணத்துக்கு, அவர் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார். சபையில் மூப்பர்களையும் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுப்பதன் மூலம் யெகோவாவின் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறோம். அவர்களுடைய உதவியை ஒதுக்கித்தள்ளும்போது ஒருவிதத்தில் நாம் யெகோவாவையே ஒதுக்கித்தள்ளுகிறோம். இஸ்ரவேலர்கள் மோசேக்குக் கீழ்ப்படியாமல் போனபோது யெகோவா அதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் அதைத் தனக்கு எதிராகச் செய்த செயலாகவே நினைத்தார்.—எண்ணாகமம் 14:26, 27; பின்குறிப்பு 12.
9. வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய அன்பு நம்மை எப்படித் தூண்டும்?
9 அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலம், நம் சகோதர சகோதரிகள்மீதும் நாம் அன்பு காட்டுகிறோம். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பேரழிவு தாக்கும்போது, பொதுவாக ஒரு நிவாரணக் குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தவரை நிறைய பேரைக் காப்பாற்ற ஒன்றுசேர்ந்து உழைப்பார்கள். அந்தக் குழு சிறந்த விதத்தில் செயல்படுவதற்கு அதை ஒருவர் ஒழுங்கமைக்க வேண்டும். குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர் கொடுக்கும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஆனால், ஒருவர் மட்டும் அதற்குக் கீழ்ப்படியாமல் தன் இஷ்டப்படி செய்தால் என்ன ஆகும்? அவர் நல்ல எண்ணத்தோடு அப்படிச் செய்தாலும், அவரால் குழுவிலுள்ள மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். ஒருவேளை அவர்களுக்கு பயங்கரமான காயம் ஏற்பட்டுவிடலாம். அதேபோல், யெகோவாவிடமிருந்தும் அவர் நியமித்திருக்கும் ஆட்களிடமிருந்தும் வருகிற வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படியவில்லை என்றால் அது மற்றவர்களைப் பாதித்துவிடலாம். ஆனால், நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது சகோதர சகோதரிகள்மீது நாம் அன்பு வைத்திருப்பதைக் காட்டுகிறோம். யெகோவாவின் ஏற்பாட்டை மதிப்பதையும் காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 12:14, 25, 26.
10, 11. இப்போது எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்?
10 யெகோவா நம்மிடம் எதைச் செய்யச் சொன்னாலும் அது நம்முடைய நல்லதுக்காகத்தான் இருக்கும். குடும்பத்திலும் சபையிலும் உள்ள அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுத்தால்... அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுத்தால்... நாம் எல்லாருமே நன்மை அடைவோம்.—உபாகமம் 5:16; ரோமர் 13:4; எபேசியர் 6:2, 3; எபிரெயர் 13:17.
11 நாம் மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதைச் செய்வது நமக்குச் சுலபமாக இருக்கும். வாழ்க்கையின் மூன்று அம்சங்களில் நாம் எப்படி மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுக்கலாம் என்பதை இப்போது விளக்கமாகப் பார்க்கலாம்.
அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பது —குடும்பத்தில்
12. யெகோவாவின் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பதை ஒரு கணவர் எப்படிக் காட்டலாம்?
12 குடும்பத்தை ஏற்படுத்தி வைத்தவர் யெகோவாதான். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவர் ஒவ்வொரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். யெகோவா கொடுத்த அந்தப் பொறுப்பை அவர்கள் சரியாகச் செய்யும்போது முழு குடும்பமும் நன்மை அடையும். (1 கொரிந்தியர் 14:33) கணவரைக் குடும்பத்தின் தலைவராக யெகோவா ஏற்படுத்தியிருக்கிறார். அப்படியென்றால், கணவர் தன்னுடைய மனைவி பிள்ளைகளை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும் அவர்களை அன்பாக வழிநடத்த வேண்டுமென்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். அதனால், குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் ஒரு கணவர் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவக் கணவர், அன்பானவராகவும், கனிவானவராகவும் இருக்க வேண்டும். சபையிடம் இயேசு நடந்துகொள்கிற விதமாக தன் குடும்பத்தாரிடம் அவர் நடந்துகொள்ள வேண்டும். ஒரு கணவர் அப்படி நடந்துகொள்ளும்போது, அவர் யெகோவாவின் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார்.—எபேசியர் 5:23; பின்குறிப்பு 13.
13. அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பதை ஒரு மனைவி எப்படிக் காட்டலாம்?
13 மனைவிக்கும் மதிப்புமிக்க ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கிறது. கணவர் தன்னுடைய பொறுப்பை நல்ல விதமாகச் செய்வதற்கு மனைவி பக்கபலமாக இருக்கிறாள். கணவரோடு சேர்ந்து பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பு அவளுக்கு இருக்கிறது. தன்னுடைய முன்மாதிரியின் மூலம் மதிப்புக் கொடுப்பது எப்படி என்பதைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். (நீதிமொழிகள் 1:8) தன் கணவருக்கு அவள் மதிப்புக் கொடுக்கிறாள், அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறாள். ஏதாவது ஒரு விஷயத்தில் தனக்கு வித்தியாசமான கருத்து இருந்தால், அதை அன்போடும் மரியாதையோடும் தெரிவிக்கிறாள். சத்தியத்தில் இல்லாத கணவரோடு வாழும் ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்கு, சில வித்தியாசமான சவால்கள் இருக்கும். ஆனால், தன் கணவரிடம் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொண்டால், ஒருநாள் அவரும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்க விரும்பலாம்.—1 பேதுரு 3:1-ஐ வாசியுங்கள்.
14. அதிகாரத்துக்கு பிள்ளைகள் எப்படிக் கீழ்ப்படியலாம்?
14 பிள்ளைகள் யெகோவாவுக்கு மதிப்புமிக்கவர்கள். அவர்களுக்கு பாதுகாப்பும் வழிநடத்துதலும் ரொம்பவே தேவைப்படுகிறது. பிள்ளைகள் தங்களுடைய அப்பா-அம்மாவுக்குக் கீழ்ப்படியும்போது அவர்களைச் சந்தோஷப்படுத்துகிறார்கள். மிக முக்கியமாக, கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் யெகோவாவுக்கு மதிப்புக் கொடுத்து அவரைச் சந்தோஷப்படுத்துகிறார்கள். (நீதிமொழிகள் 10:1) பல குடும்பங்களில், பிள்ளைகள் அப்பாவால் அல்லது அம்மாவால் மட்டும் வளர்க்கப்படுகிறார்கள். இது அந்தப் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ரொம்பச் சவாலாக இருக்கலாம். ஆனால் பிள்ளைகள், தங்களை வளர்க்கும் அப்பாவுக்கோ அம்மாவுக்கோ கீழ்ப்படிந்து, ஆதரவாக இருக்கும்போது அந்தக் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். எப்படியிருந்தாலும் சரி, குறைநிறைகள் இல்லாத குடும்பங்களே இல்லை. ஆனாலும், குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் யெகோவாவின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படியும்போது, குடும்பத்தில் சந்தோஷத்தைப் பார்க்க முடியும். இது குடும்பத்தை ஏற்படுத்தி வைத்தவரான யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும்.—எபேசியர் 3:14, 15.
அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பது —சபையில்
15. சபையில் அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
15 யெகோவா நம்மை கிறிஸ்தவச் சபை மூலமாக வழிநடத்துகிறார். சபைமீது இயேசுவுக்கு முழு அதிகாரத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். (கொலோசெயர் 1:18) அதேபோல் இயேசுவும், பூமியிலுள்ள கடவுளுடைய மக்களைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ கொடுத்திருக்கிறார். (மத்தேயு 24:45-47) அந்த “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” இன்றுள்ள ஆளும் குழுவைக் குறிக்கிறது. நாம் விசுவாசத்தில் பலமாக இருப்பதற்குத் தேவையான உதவி சரியான சமயத்தில் ஆளும் குழுவிடமிருந்து கிடைக்கிறது. ஆளும் குழுவின் வழிநடத்துதலோடு மூப்பர்களும், உதவி ஊழியர்களும், வட்டாரக் கண்காணிகளும் உலகம் முழுவதுமுள்ள சபைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். நம்மை அக்கறையோடு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இந்தச் சகோதரர்களுக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை நிறைவேற்றும் விஷயத்தில் இவர்கள் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், இவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்கும்போது, யெகோவாவுக்கு மதிப்புக் கொடுக்கிறோம்.—1 தெசலோனிக்கேயர் 5:12-ஐயும் எபிரெயர் 13:17-ஐயும் வாசியுங்கள்; பின்குறிப்பு 14.
16. மூப்பர்களும் உதவி ஊழியர்களும் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?
16 சபையார் விசுவாசத்தை விட்டு விலகாமல் ஒற்றுமையாக இருக்க, மூப்பர்களும் உதவி ஊழியர்களும் உதவுகிறார்கள். அவர்களும் நம்மைப் போல பாவ இயல்புள்ளவர்கள்தான். அவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தகுதிகள் அவர்களுக்கு இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:1-7, 12; தீத்து 1:5-9) இந்தத் தகுதிகளைப் பற்றி விவரமாக எழுத பைபிள் எழுத்தாளர்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்து யெகோவா உதவினார். மூப்பராக அல்லது உதவி ஊழியராக ஒருவரை நியமிப்பது பற்றி மூப்பர்கள் கலந்துபேசும்போது, யெகோவாவின் சக்திக்காக ஜெபம் செய்கிறார்கள். எல்லா சபைகளுக்கும் தேவையான வழிநடத்துதல் யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் கிடைக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. (அப்போஸ்தலர் 20:28) நம்மைக் கவனித்துக்கொள்வதற்காகவும், அக்கறையோடு பார்த்துக்கொள்வதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கிற இந்தச் சகோதரர்கள் கடவுள் தந்த பரிசுகள்.—எபேசியர் 4:8.
17. அதிகாரத்துக்கு மதிப்புக் கொடுக்க சில சமயங்களில் ஒரு சகோதரி என்ன செய்ய வேண்டியிருக்கும்?
17 சில சமயங்களில், சபையில் ஒரு நியமிப்பைச் செய்வதற்கு மூப்பர்களோ உதவி ஊழியர்களோ இல்லாதபோது ஞானஸ்நானம் எடுத்த மற்ற சகோதரர்கள் அந்த நியமிப்பைச் செய்வார்கள். ஆனால், இவர்களும் இல்லாதபோது, ஒரு சகோதரி அதைச் செய்ய வேண்டியிருக்கும். அந்தச் சமயத்தில், தன் தலையை மூடிக்கொள்வதற்கு ஒரு ஸ்கார்ஃபையோ தொப்பியையோ அந்தச் சகோதரி போட்டுக்கொள்வார். (1 கொரிந்தியர் 11:3-10) இப்படிப் போட்டுக்கொள்வதன் மூலம், குடும்பத்திலும் சபையிலும் யெகோவா ஏற்பாடு செய்திருக்கிற தலைமை ஸ்தானத்துக்கு மதிப்புக் கொடுப்பதை அந்தச் சகோதரி காட்டுகிறார்.—பின்குறிப்பு 15.
அரசாங்க அதிகாரிகளுக்கு மதிப்புக் கொடுப்பது
18, 19. (அ) ரோமர் 13:1-7-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) அதிகாரிகளுக்கு நாம் மதிப்புக் கொடுப்பதை எப்படிக் காட்டலாம்?
18 இன்று, மனித அரசாங்கங்களுக்கு ஓரளவு அதிகாரத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். அதனால், அரசாங்க அதிகாரிகளுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். நாடுகளும் சமுதாயங்களும் நன்றாகச் செயல்பட அவற்றை அவர்கள் ஒழுங்கமைக்கிறார்கள். அதோடு, மக்களுக்குத் தேவையான சேவைகளையும் செய்கிறார்கள். அதனால், கிறிஸ்தவர்கள் ரோமர் 13:1-7-லுள்ள அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறார்கள். (வாசியுங்கள்.) “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு” நாம் மதிப்புக் கொடுப்பதால் நம்முடைய நாட்டின் அல்லது சமுதாயத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம். இந்தச் சட்டங்கள் நம் குடும்பம், தொழில், சொத்துபத்துகள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டவை. உதாரணத்துக்கு, நாம் வரி செலுத்துகிறோம், அரசாங்கம் நம்மிடம் கேட்கிற விவரங்களைக் கொடுக்கிறோம். ஆனால், கடவுளுடைய சட்டங்களுக்கு முரணான ஒரு விஷயத்தைச் செய்யும்படி அரசாங்கம் நம்மிடம் கேட்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலன் பேதுரு சொன்னபடி, நாம் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.”—அப்போஸ்தலர் 5:28, 29.
19 நீதிபதி, போலீஸ் போன்ற அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்க வேண்டியிருந்தால், அவர்களிடம் எப்போதும் மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவப் பிள்ளைகள், தங்களுடைய ஆசிரியர்களுக்கும் பள்ளியில் வேலை செய்கிற மற்றவர்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும். நாம் வேலை செய்யும் இடத்தில், முதலாளிக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுக்கிறார்களோ இல்லையோ, நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, நாம் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுகிறோம். அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிவது சில சமயங்களில் அவருக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அவர்களிடம் அவர் மரியாதையாக நடந்துகொண்டார். (அப்போஸ்தலர் 26:2, 25) மற்றவர்கள் நம்மைச் சரியாக நடத்தாவிட்டாலும், நாம் அவர்களிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும்.—ரோமர் 12:17, 18-ஐ வாசியுங்கள்; 1 பேதுரு 3:15.
20, 21. மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதால் என்ன நன்மைகள் இருக்கின்றன?
20 இன்றைய உலகில், மக்கள் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுப்பது குறைந்துகொண்டே வருகிறது. இந்த விஷயத்தில் யெகோவாவின் மக்களாகிய நாம் வித்தியாசப்பட்டவர்கள். எல்லாரிடமும் மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ள நாம் தீர்மானமாக இருக்கிறோம். “எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு கொடுத்த ஆலோசனைக்குக் கீழ்ப்படிகிறோம். (1 பேதுரு 2:17) மற்றவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்கும்போது, அதை அவர்கள் கவனிக்கிறார்கள். “உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்” என்று இயேசு நமக்குச் சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 5:16.
21 குடும்பத்திலும், சபையிலும், நம் வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் அதிகாரத்துக்கு நாம் மதிப்புக் கொடுக்கும்போது, நம்முடைய நல்ல முன்மாதிரியைப் பார்த்து மற்றவர்கள் யெகோவாவைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலம் நாம் யெகோவாவுக்கே மதிப்புக் கொடுக்கிறோம். இது யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிறது, அவர்மீது நாம் அன்பு வைத்திருப்பதையும் காட்டுகிறது.