அதிகாரம் 3
கடவுளை நேசிக்கிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்
“ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.” —நீதிமொழிகள் 13:20.
1-3. (அ) நீதிமொழிகள் 13:20-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) நண்பர்களை ஏன் ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ஒரு குழந்தை தன் அப்பா-அம்மாவைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பேச ஆரம்பிப்பதற்கு முன்பே, தான் பார்க்கிற, கேட்கிற விஷயங்களையெல்லாம் அது மனதில் பதிய வைக்கிறது. வளர வளர அப்பா-அம்மாவைப் போலவே பேசவும் நடந்துகொள்ளவும் ஆரம்பிக்கிறது. பெரியவர்கள்கூட யாரோடு அதிக நேரம் செலவிடுகிறார்களோ அவர்களைப் போலவே யோசிக்கவும் நடந்துகொள்ளவும் ஆரம்பிக்கிறார்கள்.
2 “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்” என்று நீதிமொழிகள் 13:20 சொல்கிறது. நாம் யாரோடு நட்பு வைத்துக்கொள்கிறோமோ அவரோடு நேரம் செலவிட விரும்புவோம். அதற்காக, அந்த நபர்கூடவே இருந்தால் மட்டும் போதாது. ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறபடி, ஒருவரோடு ‘நடப்பது’ என்பது அந்த நபரை நேசிப்பதையும், அவரோடு நெருக்கமாக இருப்பதையும் உட்படுத்துகிறது. நாம் யாரோடு அதிக நேரம் செலவிடுகிறோமோ, அதுவும் யாரோடு நெருங்கிய நட்பு வைத்திருக்கிறோமோ அவர்களைப் போலவே யோசிக்கவும் நடந்துகொள்ளவும் ஆரம்பிப்போம்.
3 நம்முடைய நண்பர்கள் நம்மை நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக ஆக்கிவிடலாம். “முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 13:20-ன் பிற்பகுதி சொல்கிறது. “பழகுகிறவன்” என்பதற்கான எபிரெய வார்த்தை, ஒருவரோடு “சகவாசம் வைப்பதை,” அதாவது நண்பராவதை குறிக்கிறது. (நீதிமொழிகள் 22:24; நியாயாதிபதிகள் 14:20) நம் நண்பர்கள் கடவுளை நேசிக்கிறவர்களாக இருந்தால், நாம் எப்போதும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க அவர்கள் உற்சாகப்படுத்துவார்கள். யெகோவா எப்படிப்பட்ட நபர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார் என்று இப்போது பார்க்கலாம். நண்பர்களை நாம் ஞானமாகத் தேர்ந்தெடுக்க இது உதவும்.
கடவுளுடைய நண்பர்கள் யார்?
4. கடவுளுடைய நண்பராக இருப்பது ஏன் மிகப் பெரிய பாக்கியம்? ஆபிரகாமை, ‘என் நண்பன்’ என்று யெகோவா ஏன் அழைத்தார்?
4 இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரான யெகோவா, தன்னுடைய நண்பர்களாக ஆவதற்கு நமக்கு வாய்ப்பு கொடுக்கிறார். அவருடைய நண்பராக ஆவது மிகப் பெரிய பாக்கியம். அவர் தன்னுடைய நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கிறார். தன்மீது அன்பு காட்டுகிறவர்களையும் தன்மீது விசுவாசம் வைத்திருக்கிறவர்களையும் அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆபிரகாமைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர், கடவுளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். அவர் எல்லா சமயத்திலும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து விசுவாசமாக நடந்தார். தன்னுடைய மகனான ஈசாக்கைப் பலி கொடுக்கவும் தயாராக இருந்தார். “இறந்தவனை மறுபடியும் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும்” என்ற விசுவாசம் அவருக்கு இருந்தது. (எபிரெயர் 11:17-19; ஆதியாகமம் 22:1, 2, 9-13) அவர் விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் நடந்துகொண்டதால், அவரை ‘என் நண்பன்’ என்று யெகோவா அழைத்தார்.—ஏசாயா 41:8; யாக்கோபு 2:21-23.
5. தனக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா எப்படிக் கருதுகிறார்?
5 யெகோவா தன் நண்பர்களை உயர்வாக மதிக்கிறார். அவருடைய நண்பர்கள், மற்ற எல்லாவற்றையும்விட அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவே அதிக முயற்சி செய்கிறார்கள். (2 சாமுவேல் 22:26-ஐ வாசியுங்கள்.) அவர்மீது அன்பு இருப்பதால்தான் அவருக்கு உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் நடந்துகொள்கிறார்கள். கடவுள் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற “நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 3:32) தன்னுடைய ‘கூடாரத்துக்கு’ சிறப்பு விருந்தாளிகளாக வரும்படி யெகோவா தன் நண்பர்களை அழைக்கிறார். தன்னை வணங்கும்படியும் எப்போது வேண்டுமானாலும் தன்னிடம் ஜெபம் செய்யும்படியும் அவர்களிடம் சொல்கிறார்.—சங்கீதம் 15:1-5.
6. இயேசுமீது அன்பு இருப்பதால் என்ன செய்யத் தூண்டப்படுகிறோம்?
6 “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான், என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:23) எனவே, யெகோவாவின் நண்பராக இருப்பதற்கு, நாம் இயேசுவையும் நேசிக்க வேண்டும், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களைச் செய்ய வேண்டும். அதனால்தான், நல்ல செய்தியை மக்களுக்குப் பிரசங்கித்து அவர்களைச் சீஷர்களாக்க வேண்டுமென்ற இயேசுவின் கட்டளைக்குக் நாம் கீழ்ப்படிகிறோம். (மத்தேயு 28:19, 20; யோவான் 14:15, 21) அதோடு, இயேசுமீது நமக்கு அன்பு இருப்பதால், “அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக” பின்பற்றுகிறோம். (1 பேதுரு 2:21) நம் பேச்சிலும் செயலிலும் தன்னுடைய மகனைப் பின்பற்ற நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார்.
7. நம் நண்பர்கள் யெகோவாவின் நண்பர்களாக இருக்கிறார்களா என்பதை நாம் ஏன் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்?
7 யெகோவாவின் நண்பர்கள் விசுவாசமுள்ளவர்களாக, உண்மையுள்ளவர்களாக, கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள். அதோடு, அவருடைய மகன்மீது அன்பு காட்டுகிறார்கள். நண்பர்களை யெகோவா தேர்ந்தெடுப்பது போல நாமும் தேர்ந்தெடுக்கிறோமா? உங்கள் நண்பர்கள் இயேசுவைப் போல கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவும் யெகோவாவுக்கு எப்போதும் உண்மையாக இருக்கவும் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
பைபிள் உதாரணங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
8. ரூத் மற்றும் நகோமியின் நட்பில் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?
8 நட்புக்கு நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ரூத் மற்றும் அவளுடைய மாமியாரான நகோமியின் உதாரணம். அவர்கள் இரண்டு பேருடைய ஊர் மற்றும் பின்னணி வித்தியாசமாக இருந்தன. அதுமட்டுமல்ல, ரூத்தைவிட நகோமி அதிக வயதானவராக இருந்தார். ஆனாலும், அவர்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள். ஏனென்றால், அவர்கள் யெகோவாவை நேசித்தார்கள். மோவாபிலிருந்து இஸ்ரவேலுக்குத் திரும்பி வர நகோமி தீர்மானித்தபோது, “ரூத் மட்டும் நகோமியைவிட்டுப் போகவே இல்லை.” அவள் நகோமியிடம், “உங்களுடைய ஜனங்கள்தான் என்னுடைய ஜனங்கள், உங்களுடைய கடவுள்தான் என்னுடைய கடவுள்” என்று சொன்னாள். (ரூத் 1:14, 16) நகோமியிடம் ரூத் ரொம்பப் பாசமாக இருந்தாள். இஸ்ரவேலுக்கு வந்த பிறகு, ரூத் தன்னுடைய நண்பராக இருந்த நகோமியைக் கவனித்துக்கொள்வதற்காகக் கடினமாக உழைத்தாள். நகோமியும் ரூத்தை ரொம்பவே நேசித்தார், அவளுக்கு நல்ல ஆலோசனை கொடுத்தார். ரூத் அதைக் கேட்டு நடந்ததால், அவர்கள் இரண்டு பேருமே நிறைய ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்.—ரூத் 3:6.
9. தாவீது மற்றும் யோனத்தானின் நட்பில் உங்களைக் கவர்ந்த விஷயம் என்ன?
9 நல்ல நட்புக்கு மற்றொரு உதாரணம், தாவீதும் யோனத்தானும். அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள். தாவீதைவிட யோனத்தான் 30 வயது பெரியவராக இருந்தார். அதோடு, இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக ஆவதற்கான உரிமை அவருக்கு இருந்தது. (1 சாமுவேல் 17:33; 31:2; 2 சாமுவேல் 5:4) ஆனாலும், தாவீதை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருந்ததைக் கேள்விப்பட்டபோது யோனத்தான் பொறாமைப்படவோ போட்டிப்போடவோ இல்லை. அதற்குப் பதிலாக, தாவீதுக்கு ஆதரவு கொடுக்க தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் தாவீது இருந்தபோது, “யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க” அவர் உதவினார். தாவீதுக்காகத் தன் உயிரையே பணயம் வைத்தார். (1 சாமுவேல் 23:16, 17) தாவீதும் யோனத்தானுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். யோனத்தானின் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதாக அவர் வாக்குக் கொடுத்தார். யோனத்தான் இறந்த பிறகும்கூட அந்த வாக்கைக் காப்பாற்றினார்.—1 சாமுவேல் 18:1; 20:15-17, 30-34; 2 சாமுவேல் 9:1-7.
10. நட்பைப் பற்றி மூன்று எபிரெயர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
10 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெய நண்பர்கள் சிறு வயதிலேயே வேறு நாட்டுக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். குடும்பத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் அவர்கள் இருந்தாலும், யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்க ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள். அவர்கள் பெரியவர்களான பிறகு, ஒரு தங்கச் சிலையை வணங்கும்படி நேபுகாத்நேச்சார் ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டான். அது அவர்களுடைய விசுவாசத்துக்கு வந்த சோதனையாக இருந்தது. அவர்கள் அந்தச் சிலையை வணங்க மறுத்ததோடு, “நாங்கள் உங்களுடைய தெய்வங்களைக் கும்பிடப்போவதும் இல்லை, நீங்கள் நிறுத்திய தங்கச் சிலையை வணங்கப்போவதும் இல்லை” என்று ராஜாவிடம் சொன்னார்கள். அந்தச் சோதனையின்போது அவர்கள் மூன்று பேரும் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள்.—தானியேல் 1:1-17; 3:12, 16-28.
11. பவுலும் தீமோத்தேயுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?
11 இளம் தீமோத்தேயுவை அப்போஸ்தலன் பவுல் சந்தித்தபோது, யெகோவாமீது தீமோத்தேயுவுக்கு இருந்த அன்பையும், சபைமீது அவருக்கு இருந்த உண்மையான அக்கறையையும் பவுல் பார்த்தார். அதனால், பல இடங்களிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவ தீமோத்தேயுவுக்கு பவுல் பயிற்சி கொடுத்தார். (அப்போஸ்தலர் 16:1-8; 17:10-14) தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்து நன்றாக உழைத்தார். அதனால்தான், “நல்ல செய்தியை அறிவிப்பதில் என்னோடு சேர்ந்து அவர் கடினமாக உழைத்திருக்கிறார்” என்று அவரைப் பற்றி பவுல் சொன்னார். சகோதர சகோதரிகளை தீமோத்தேயு ‘அக்கறையோடு கவனித்துக்கொள்வார்’ என்ற நம்பிக்கை பவுலுக்கு இருந்தது. யெகோவாவுக்குச் சேவை செய்வதில் பவுலும் தீமோத்தேயுவும் சேர்ந்து உழைத்ததால் அவர்கள் நெருங்கிய நண்பர்களாக ஆனார்கள்.—பிலிப்பியர் 2:20-22; 1 கொரிந்தியர் 4:17.
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
12, 13. (அ) சபையிலும்கூட நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (ஆ) 1 கொரிந்தியர் 15:33-லுள்ள எச்சரிப்பை பவுல் ஏன் கொடுத்தார்?
12 நம்மால் சபையிலுள்ள சகோதர சகோதரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும், விசுவாசத்தில் நிலைத்திருக்க ஒருவருக்கொருவர் உதவவும் முடியும். (ரோமர் 1:11, 12-ஐ வாசியுங்கள்.) ஆனால், சபையில்கூட நாம் யாரை நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல பின்னணிகளையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த சகோதர சகோதரிகள் நம் சபைகளில் இருக்கிறார்கள். சிலர் பல காலமாக யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருக்கலாம். சிலர் புதிதாக சத்தியத்துக்கு வந்திருக்கலாம். ஒரு காய் பழுத்துப் பழமாவதற்கு காலம் எடுப்பது போல, ஒருவர் யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் காலம் எடுக்கும். அதனால், நாம் ஒருவருக்கொருவர் பொறுமையாகவும் அன்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எப்போதும் ஞானமாக இருக்க வேண்டும்.—ரோமர் 14:1; 15:1; எபிரெயர் 5:12–6:3.
13 சில சமயங்களில், சபையில் பிரச்சினைகள் வரலாம். அப்போது நாம் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு சகோதரனோ சகோதரியோ பைபிளுக்கு முரணாக எதையாவது செய்யலாம். அல்லது குறைசொல்லும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம். இது சபையைப் பாதித்துவிடலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முதல் நூற்றாண்டு சபைகளில்கூட சில சமயங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. அதனால்தான், “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்” என்று அன்றிருந்த கிறிஸ்தவர்களை பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 15:12, 33) நெருங்கிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று தீமோத்தேயுவையும் பவுல் எச்சரித்தார். நாமும்கூட இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 2:20-22-ஐ வாசியுங்கள்.
14. நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்துக்கு எப்படிப் பாதிப்பை ஏற்படுத்தலாம்?
14 யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். அதனால், அவர்மீது நமக்கிருக்கும் விசுவாசத்துக்கும், அவரோடு இருக்கும் பந்தத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிற யாரையும் நண்பராகத் தேர்ந்தெடுக்கக் கூடாது. ஒரு ஸ்பான்ஜை அழுக்குத் தண்ணீரில் முக்கியெடுத்து, அதைப் பிழிந்தால் நல்ல தண்ணீர் வருமென்று எதிர்பார்க்க முடியாது. அதுபோல, கெட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்கள் நல்லது செய்ய நமக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால், நண்பர்களை நாம் கவனமாகத் தேர்ந்தெடுப்பது அவசியம்.—1 கொரிந்தியர் 5:6; 2 தெசலோனிக்கேயர் 3:6, 7, 14.
15. சபையில் நல்ல நண்பர்கள் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்?
15 யெகோவாவை உண்மையிலேயே நேசிக்கிறவர்களை நாம் சபையில் கண்டுபிடிக்கலாம். அவர்கள் உங்களுடைய நெருங்கிய நண்பர்களாக ஆகலாம். (சங்கீதம் 133:1) உங்கள் வயதிலுள்ளவர்களை அல்லது உங்களுடைய பின்னணியைச் சேர்ந்தவர்களை மட்டுமே நண்பர்களாகத் தேர்ந்தெடுக்காதீர்கள். யோனத்தான் தன்னைவிட வயதில் சிறியவராக இருந்த தாவீதையும், ரூத் தன்னைவிட வயதில் பெரியவராக இருந்த நகோமியையும் நண்பராகத் தேர்ந்தெடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதனால், “உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்” என்ற பைபிள் ஆலோசனையை நாம் பின்பற்றலாம். ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டலாம்.’ (2 கொரிந்தியர் 6:13; 1 பேதுரு 2:17-ஐ வாசியுங்கள்.) யெகோவாவை நீங்கள் எந்தளவுக்குப் பின்பற்றுகிறீர்களோ, அந்தளவுக்கு மற்றவர்களும் உங்கள் நண்பராக ஆக விரும்புவார்கள்.
பிரச்சினைகள் வரும்போது
16, 17. சபையிலுள்ள ஒருவர் நம்மைப் புண்படுத்தினால் நாம் என்ன செய்துவிடக் கூடாது?
16 ஒரு குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுபாவம், கருத்து இருக்கலாம். அவர்கள் ஒரு விஷயத்தைச் செய்யும் விதமும் வித்தியாசப்படலாம். சபையில் இருப்பவர்களும்கூட அதே போல்தான் இருக்கிறார்கள். இப்படி வித்தியாசமாக இருப்பது, வாழ்க்கையைச் சுவாரஸ்யமாக்குகிறது. அதனால், ஒருவரிடமிருந்து ஒருவர் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், சில சமயங்களில் இப்படிப்பட்ட வித்தியாசங்களால் நம் சகோதர சகோதரிகளைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்டு, அவர்கள்மீது நாம் எரிச்சலடையலாம். சில சமயங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம் நம்மை வேதனைப்படுத்தலாம் அல்லது புண்படுத்தலாம். (நீதிமொழிகள் 12:18) இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும்போது நாம் சோர்ந்துவிடலாமா? சபைக்குப் போவதை நிறுத்திவிடலாமா?
17 நிச்சயம் கூடாது. யாராவது நம்மைப் புண்படுத்தினால்கூட, நாம் சபைக்குப் போவதை நிறுத்திவிடக் கூடாது. ஏனென்றால், நம்மைப் புண்படுத்தியது யெகோவா அல்ல. அவர் நமக்கு உயிரையும், நமக்குத் தேவையான மற்ற எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். அதனால், அவர்மீது அன்பு காட்டவும், அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். (வெளிப்) சபை யெகோவா தந்த பரிசு. நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள அது நமக்கு உதவுகிறது. ( படுத்துதல் 4:11எபிரெயர் 13:17) ஒருவர் நம்மைப் புண்படுத்தியதற்காக, இந்தப் பரிசை நாம் ஒதுக்கித்தள்ளிவிடக் கூடாது.—சங்கீதம் 119:165-ஐ வாசியுங்கள்.
18. (அ) நம் சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழக எது உதவும்? (ஆ) நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்?
18 நம் சகோதர சகோதரிகளை நாம் நேசிக்கிறோம். அதனால், அவர்களோடு நன்றாகப் பழக விரும்புகிறோம். மனிதர்கள் பரிபூரணர்களாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பது கிடையாது, நாமும் மற்றவர்களிடம் அப்படி எதிர்பார்க்கக் கூடாது. (நீதிமொழிகள் 17:9; 1 பேதுரு 4:8) நாம் எல்லாருமே தவறு செய்கிறவர்கள்தான். ஆனால், அன்பிருந்தால் ‘ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னிப்போம்.’ (கொலோசெயர் 3:13) ஒரு சின்ன தவறைப் பெரிய பிரச்சினையாக ஆக்கிவிட மாட்டோம். உண்மைதான், யாராவது நம் மனதை நோகடித்தால், அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்போம். அதனால், அவர்மேல் கோபம் வரலாம், மனதில் வன்மத்தை வளர்த்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால், நம்முடைய சந்தோஷம்தான் பறிபோகும். ஆனால், நம்மைப் புண்படுத்தியவரை மன்னிக்கும்போது நமக்கு மன நிம்மதி கிடைக்கும். சபையில் ஒற்றுமை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ள முடியும்.—மத்தேயு 6:14, 15; லூக்கா 17:3, 4; ரோமர் 14:19.
ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது
19. சபையிலுள்ள ஒருவரோடு பழகுவதை நாம் எப்போது நிறுத்த வேண்டும்?
19 இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு அன்பான குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தாரைச் சந்தோஷப்படுத்த தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் குடும்பத்துக்கு அடங்காமல் போகிறார். அவர் திருந்துவதற்கு, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் திரும்பத் திரும்ப உதவி செய்கிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் அவர் கேட்பதில்லை. அவர் வீட்டைவிட்டுப் போகத் தீர்மானிக்கலாம். அல்லது, வீட்டைவிட்டுப் போகும்படி குடும்பத் தலைவர் அவரிடம் சொல்லலாம். இதேபோல் சபையிலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களை, சபையைப் பாதிக்கிற விஷயங்களை ஒருவர் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம். அவர் திருந்துவதற்கு சகோதரர்கள் உதவும்போது அதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். சபையோடு சேர்ந்திருக்க பிடிக்கவில்லை என்பதைத் தன்னுடைய செயல்கள் மூலம் காட்டலாம். கடைசியில், சபையைவிட்டு விலக அவரே தீர்மானிக்கலாம். அல்லது அவரைச் சபைநீக்கம் செய்ய மூப்பர்கள் தீர்மானிக்கலாம். அப்படி நடந்தால், அவரோடு “பழகுவதை விட்டுவிட வேண்டும்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 கொரிந்தியர் 5:11-13-ஐ வாசியுங்கள்; 2 யோவான் 9-11) அவர் நம்முடைய நண்பராகவோ நம் குடும்பத்தில் ஒருவராகவோ இருந்தால், அவரிடம் பழகாமல் இருப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதுதான் முக்கியம்.—பின்குறிப்பு 8.
20, 21. (அ) சபைநீக்கம் என்பது ஒரு அன்பான ஏற்பாடு என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) நண்பர்களை நாம் ஏன் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
20 சபைநீக்கம் என்பது யெகோவா செய்திருக்கிற ஒரு அன்பான ஏற்பாடு. இது, யெகோவாவின் நெறிமுறைகளை அசட்டை செய்கிறவர்களிடமிருந்து சபையைப் பாதுகாக்கிறது. (1 கொரிந்தியர் 5:7; எபிரெயர் 12:15, 16) யெகோவாவையும், அவருடைய பரிசுத்தமான பெயரையும், அவருடைய உயர்ந்த நெறிமுறைகளையும் நேசிக்க இது நமக்கு உதவுகிறது. (1 பேதுரு 1:15, 16) இனியும் சபையின் பாகமாக இல்லாத நபர்மீது காட்டப்படும் அன்பான செயல்தான் சபைநீக்கம் என்ற ஏற்பாடு. இப்படிக் கண்டிக்கப்படும்போது, அவர் தன்னுடைய தவறை உணர்ந்துகொள்ளவும், தன்னை மாற்றிக்கொள்ளவும் தூண்டப்படுவார். சபைநீக்கம் செய்யப்பட்ட நிறைய பேர் யெகோவாவிடம் திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்களைச் சகோதர சகோதரிகள் அன்பாக சபைக்கு வரவேற்றிருக்கிறார்கள்.—எபிரெயர் 12:11.
21 நம்முடைய நண்பர்கள் நம்மை நல்லவர்களாக அல்லது கெட்டவர்களாக ஆக்கலாம். அதனால், நண்பர்களை நாம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். யெகோவா நேசிக்கிறவர்களை நாம் நண்பர்களாகத் தேர்ந்தெடுத்தால், நாம் என்றென்றும் யெகோவாவுக்கு விசுவாசமாக இருக்க அவர்கள் நமக்கு உதவுவார்கள்.