அதிகாரம் 20
நிவாரண ஊழியம்
1, 2. (அ) யூதக் கிறிஸ்தவர்கள் என்ன பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள்? (ஆ) அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?
அது கி.பி. 46-ஆம் வருஷம். யூதேயாவில் இருப்பவர்கள் பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். உணவுப் பொருள்கள் குறைவாக இருப்பதால் அவை அதிக பணத்துக்கு விற்கப்படுகின்றன. அதனால், யூதக் கிறிஸ்தவர்களால் அவற்றை வாங்க முடிவதில்லை. அவர்களுடைய முகங்கள் பசியில் வாடிப்போய் இருக்கின்றன. ஆனால், கிறிஸ்துவின் வேறெந்த சீஷர்களுக்கும் அதுவரை கிடைக்காத ஒரு உதவியை அவர்கள் சீக்கிரத்தில் யெகோவாவிடமிருந்து பெறவிருந்தார்கள். அது என்ன?
2 எருசலேமிலும் யூதேயாவிலும் இருக்கிற யூதக் கிறிஸ்தவர்கள் படுகிற கஷ்டத்தை சிரியாவிலுள்ள அந்தியோகியாவைச் சேர்ந்த யூதக் கிறிஸ்தவர்களும் மற்ற தேசத்து கிறிஸ்தவர்களும் கேள்விப்படுகிறார்கள். தங்களுடைய சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய பணம் திரட்டுகிறார்கள். பிறகு, எருசலேமிலுள்ள மூப்பர்களிடம் நிவாரணப் பொருள்களைக் கொண்டுசேர்ப்பதற்காக, தங்களோடிருந்த பர்னபா, சவுல் ஆகிய பொறுப்பான இரண்டு சகோதரர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். (அப்போஸ்தலர் 11:27-30; 12:25-ஐ வாசியுங்கள்.) அந்தியோகியாவிலுள்ள சகோதரர்கள் செய்த இந்த அன்பான செயல் யூதேயாவிலுள்ள சகோதரர்களின் மனதை எந்தளவு தொட்டிருக்கும்!
3. (அ) அந்தியோகியாவில் இருந்த சகோதரர்களின் முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றுகிறோம்? உதாரணம் கொடுங்கள். (“ பெரியளவில் செய்யப்பட்ட நிவாரண உதவி” என்ற பெட்டியையும் பாருங்கள்.) (ஆ) என்ன கேள்விகளுக்கான பதிலை இந்த அதிகாரத்தில் பார்ப்போம்?
3 உலகின் ஒரு பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இன்னொரு பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுதான். முதல் நூற்றாண்டில், அந்தியோகியாவில் இருந்த சகோதரர்களின் முன்மாதிரியை இன்று நாமும் பின்பற்றுகிறோம். வேறொரு இடத்திலுள்ள சக கிறிஸ்தவர்கள் பேரழிவினாலோ, ஏதாவது கஷ்டத்தினாலோ பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும்போது, நாம் உடனடியாக அவர்களுக்கு உதவி செய்கிறோம். a நாம் செய்யும் நிவாரண உதவிகள் மற்ற ஊழிய வேலைகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ள நிவாரண ஊழியம் பற்றிய மூன்று கேள்விகளை இப்போது பார்க்கலாம்: நிவாரணப் பணியை நாம் ஏன் ஊழிய வேலையின் பாகமாகக் கருதுகிறோம்? நிவாரணப் பணியின் லட்சியங்கள் என்ன? நிவாரண ஊழியத்தில் ஈடுபடுவதால் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
நிவாரண வேலை ‘பரிசுத்த சேவையின்’ பாகம்
4. கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றி கொரிந்தியர்களிடம் பவுல் என்ன சொன்னார்?
4 கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய இரண்டு விதமான ஊழியத்தை பவுல் விளக்கினார். அவர் அந்தக் கடிதத்தைப் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதியிருந்தாலும் அதில் அவர் சொன்ன வார்த்தைகள் கிறிஸ்துவின் ‘வேறே ஆடுகளுக்கும்’ பொருந்தும். (யோவா. 10:16) பவுல் குறிப்பிட்ட இரண்டு ஊழியங்களில் ஒன்று ‘சமரசமாக்கும் ஊழியம்,’ அதாவது பிரசங்கிப்பதும் கற்பிப்பதும். (2 கொ. 5:18-20; 1 தீ. 2:3-6) மற்றொன்று, சக கிறிஸ்தவர்களுக்காக நாம் செய்யும் ஊழியம். அதைத்தான், ‘நிவாரண ஊழியம்’ என்று பவுல் குறிப்பிட்டார். (2 கொ. 8:4) ‘சமரசமாக்கும் ஊழியம்,’ ‘நிவாரண ஊழியம்’ ஆகிய சொற்றொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள “ஊழியம்” என்ற வார்த்தை டியாக்கொனியா (di·a·ko·niʹa) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது ஏன் அந்தளவு முக்கியமானதாக இருக்கிறது?
5. நிவாரணப் பணியை ஊழியத்தோடு சம்பந்தப்படுத்தி பவுல் ஏன் சொன்னார்?
5 இந்த இரண்டு ஊழியங்களையும் குறிக்க ஒரே கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம், கிறிஸ்தவச் சபை செய்ய வேண்டிய ஊழிய வேலைகளில் நிவாரணப் பணியும் ஒன்று என பவுல் குறிப்பிட்டார். “வித்தியாசமான ஊழியங்கள் இருக்கின்றன, ஆனால் எஜமான் ஒருவர்தான். வித்தியாசமான செயல்கள் இருக்கின்றன, . . . ஆனால், ஒரே சக்திதான் இவை எல்லாவற்றையும் செய்கிறது” என்று பவுல் முன்பு குறிப்பிட்டிருந்தார். (1 கொ. 12:4-6, 11) சபையில் செய்யப்படுகிற பலவிதமான வேலைகளை ‘பரிசுத்த சேவையோடு’ சம்பந்தப்படுத்தியும் பவுல் சொன்னார். b (ரோ. 12:1, 6-8) அதனால்தான், ‘பரிசுத்தவான்களுக்கு உதவி செய்வதற்காக’ நேரத்தை ஒதுக்குவது முக்கியம் என்று அவர் நினைத்தார்.—ரோ. 15:25, 26.
6. (அ) பவுல் சொன்னது போல், நிவாரணப் பணி எப்படி நம் வணக்கத்தின் பாகமாக இருக்கிறது? (ஆ) இன்று உலகம் முழுவதும் நிவாரணப் பணிகள் எப்படிச் செய்யப்படுகின்றன? (“ பேரழிவு தாக்கும்போது...” என்ற பெட்டியைப் பக்கம் 214-ல் பாருங்கள்.)
6 நிவாரணப் பணி தங்களுடைய வணக்கத்தோடும் ஊழியத்தோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் புரிய வைத்தார். ‘கிறிஸ்துவின் நல்ல செய்திக்கு அடிபணிந்து நடப்பதால்தான்’ கிறிஸ்தவர்கள் நிவாரணப் பணிகளைச் செய்வதாக அவர் சொன்னார். (2 கொ. 9:13) இன்று நாமும் கிறிஸ்துவின் போதனைகளின்படி நடக்க விரும்புவதால்தான் சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறோம். பவுல் குறிப்பிட்டதுபோல், சகோதரர்களுக்காக அன்போடு செய்யப்படும் உதவிகள் உண்மையிலேயே கடவுள் காட்டும் ‘ஈடிணையில்லாத மகா கருணைதான்.’ (2 கொ. 9:14; 1 பே. 4:10) தேவையில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்வதில் நிவாரணப் பணியும் உட்பட்டிருப்பதைப் பற்றி டிசம்பர் 1, 1975, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “இப்படிப்பட்ட சேவையை யெகோவாவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் ரொம்பவே முக்கியமானதாக நினைக்கிறார்கள் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது.” ஆம், நிவாரணப் பணியும் பரிசுத்த சேவையின் ஒரு முக்கியமான பாகம்தான்.—ரோ. 12:1, 7; 2 கொ. 8:7; எபி. 13:16.
நிவாரணப் பணியின் லட்சியங்கள்
7, 8. நிவாரண ஊழியத்தின் முதல் லட்சியம் என்ன? விளக்குங்கள்.
7 நம் நிவாரண ஊழியத்தின் லட்சியங்கள் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 9:11-15-ஐ வாசியுங்கள்.) ‘பொதுப்பணியில்,’ அதாவது நிவாரணப் பணியில், ஈடுபடுவதன் மூலம் மூன்று முக்கியமான லட்சியங்களை அடைகிறோம் என்று இந்த வசனங்களில் பவுல் குறிப்பிட்டார். அவற்றை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.
8 முதலாவதாக, நாம் செய்யும் நிவாரண ஊழியம் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வசனங்களில் பவுல் எத்தனை முறை யெகோவாவின் பக்கம் சகோதரர்களுடைய கவனத்தைத் திருப்புகிறார் என்று பாருங்கள். இந்த வேலையின் காரணமாக நிறைய பேர் “கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்” என்றும் “கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல” தூண்டப்படுகிறார்கள் என்றும் பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். (வசனங்கள் 11, 12) ‘கடவுளை மகிமைப்படுத்தவும்’ அவருடைய “ஈடிணையில்லாத மகா கருணையை” புகழவும் நிவாரணப் பணிகள் எப்படி உதவுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். (வசனங்கள் 13, 14) நிவாரண ஊழியத்தைப் பற்றிய விஷயங்களை “கடவுளுக்கு நன்றி” என்ற வார்த்தைகளோடு அவர் முடிக்கிறார்.—வசனம் 15; 1 பே. 4:11.
9. நிவாரணப் பணியில் ஈடுபடுவது, நம்மைப் பற்றி மற்றவர்கள் யோசிக்கும் விதத்தை எப்படி மாற்றலாம்? உதாரணம் கொடுங்கள்.
9 பவுலைப் போலவே இன்றும் கடவுளுடைய ஊழியர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடுவதை, யெகோவாவுக்கு மகிமை சேர்க்கவும் அவருடைய ‘போதனைகளை அலங்கரிக்கவும்’ தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பாக நினைக்கிறார்கள். (1 கொ. 10:31; தீத். 2:10) யெகோவாவையும், அவருடைய மக்களையும் பற்றி சிலருக்கு இருக்கும் தவறான கருத்துகளை தகர்த்தெறியவும் இந்த நிவாரணப் பணி பெரிதும் உதவுகிறது. உதாரணத்துக்கு, சூறாவளியால் தாக்கப்பட்ட ஒரு பகுதியில் வாழ்ந்த ஒரு பெண்ணின் வீட்டுக் கதவில், “யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி இல்லை” என்ற போர்டு வைக்கப்பட்டிருந்தது. ஒருநாள் தன்னுடைய வீட்டுக்கு எதிரே, சூறாவளியால் சேதமடைந்திருந்த ஒரு வீட்டை நிவாரணப் பணியாளர்கள் சரிசெய்வதை அந்தப் பெண் பார்த்தார். அவர்கள் செய்த வேலையைப் பல நாட்களாக அவர் கவனித்து வந்தார். அவர்கள் அன்பாக நடந்துகொண்டதைப் பார்த்து, அவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதைத் தெரிந்துகொண்டதும் அவர் ரொம்ப ஆச்சரியத்தோடு, “உங்களைப் பற்றி இதுவரை தப்பாக நினைத்திருந்தேன்” என்று சொன்னார். அதன் பிறகு என்ன நடந்தது? கதவில் மாட்டியிருந்த போர்டை எடுத்துவிட்டார்.
10, 11. (அ) நிவாரணப் பணியின் இரண்டாவது லட்சியத்தை அடைய நாம் முயற்சி செய்கிறோம் என்பதற்கு என்ன உதாரணங்கள் இருக்கின்றன? (ஆ) எந்தப் பிரசுரம் நிவாரண ஊழியர்களுக்கு உதவியாக இருக்கிறது? (“ நிவாரணப் பணியாளர்களுக்கு இன்னுமொரு உதவி” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
10 இரண்டாவதாக, சக கிறிஸ்தவர்களின் ‘தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்கிறோம்.’ (2 கொ. 9:12அ) பாதிக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகளுக்கு உடனடியாகத் தேவைப்படுகிறவற்றைக் கொடுத்து அவர்களுடைய கஷ்டத்தைப் போக்க நாம் ஆர்வமாக இருக்கிறோம். ஏனென்றால், கிறிஸ்தவச் சபையில் இருக்கிற எல்லாரும் ஒரே ‘உடலை’ சேர்ந்தவர்கள். “ஓர் உறுப்பு வேதனைப்பட்டால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து வேதனைப்படும்.” (1 கொ. 12:20, 26) சகோதரப் பாசத்தாலும் கரிசனையாலும் தூண்டப்பட்ட நிறைய சகோதர சகோதரிகள் பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாகப் போகிறார்கள். அங்குள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்காக தங்களுடைய சொந்த வேலைகளை விட்டுவிட்டு நிவாரணப் பணிகளுக்குத் தேவையான கருவிகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள். (யாக். 2:15, 16) உதாரணத்துக்கு, 2011-ல் ஜப்பானை சுனாமி தாக்கிய சமயத்தில், அமெரிக்காவிலுள்ள கிளை அலுவலகம் அமெரிக்காவில் இருக்கும் மண்டலக் கட்டுமானக் குழுக்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. ஜப்பானில் ராஜ்ய மன்றங்களைத் திரும்பக் கட்டுவதற்கு “திறமையுள்ள சில சகோதரர்களால்” உதவ முடியுமா என்று கேட்டு அதில் எழுதப்பட்டிருந்தது. அதன் விளைவு? சில வாரங்களுக்குள், கிட்டத்தட்ட 600 வாலண்டியர்கள் விண்ணப்பித்தார்கள். தங்களுடைய சொந்த செலவிலேயே ஜப்பானுக்குப் போகத் தயாராக இருந்தார்கள். “இத்தனை பேர் உதவி செய்யத் தயாராக இருந்ததைப் பார்த்து நாங்கள் மலைத்துப்போனோம்” என்று அமெரிக்கக் கிளை அலுவலகம் குறிப்பிட்டது. நிவாரணப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரிடம் ஜப்பானில் இருக்கும் ஒரு சகோதரர், அங்கு வந்து உதவி செய்ய எது அவரைத் தூண்டியது என்று கேட்டார். அதற்கு அவர், “ஜப்பானில் இருக்கும் சகோதரர்கள் எங்கள் ‘உடலின்’ பாகமாக இருக்கிறார்கள். அவர்களுடைய வலியையும் வேதனையையும் நாங்களும் உணருகிறோம்” என்று சொன்னார். நிவாரணப் பணியாளர்கள், சுயநலமற்ற அன்பினால் தூண்டப்பட்டு சக கிறிஸ்தவர்களுக்காக சில சமயங்களில் தங்கள் உயிரையே பணயம் வைத்து உதவி செய்திருக்கிறார்கள். c—1 யோ. 3:16.
11 நாம் செய்யும் நிவாரணப் பணியை யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்கள்கூட பாராட்டியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, 2013-ல் அமெரிக்காவிலுள்ள அர்கான்சாஸ் மாநிலத்தில் பேரழிவு ஏற்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக நிவாரணப் பணியை ஆரம்பித்ததைப் பற்றி ஒரு செய்தித்தாள் இப்படிச் சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நிவாரணப் பணியாளர்களை நன்றாக ஒழுங்கமைத்திருப்பதால், பேரழிவின்போது அவர்களால் நிவாரணப் பணிகளைச் சிறந்த விதத்தில் செய்ய முடிகிறது.” அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டபடியே நம் சகோதர சகோதரிகளின் ‘தேவைகளை [நாம்] நன்றாகப் பூர்த்தி செய்கிறோம்.’
12-14. (அ) நிவாரணப் பணியின் மூன்றாவது லட்சியத்தை அடைய முயற்சி செய்வது ஏன் ரொம்ப முக்கியம்? (ஆ) ஆன்மீக விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள்?
12 மூன்றாவதாக, பாதிக்கப்பட்டவர்கள் மறுபடியும் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட உதவுகிறோம். இது ஏன் ரொம்ப முக்கியம்? நிவாரண உதவிகளைப் பெற்றவர்கள் “கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல” தூண்டப்படுவார்கள் என்று பவுல் சொன்னார். (2 கொ. 9:12ஆ) அப்படியானால், பாதிக்கப்பட்டவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்ல மிகச் சிறந்த வழி எது? முடிந்தவரை அவர்கள் சீக்கிரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதுதான். (பிலி. 1:10) 1945-ல் ஒரு காவற்கோபுரம் இப்படிக் குறிப்பிட்டது: “நன்கொடை திரட்டுவதை . . . பவுல் அங்கீகரித்தார். ஏனென்றால் . . . தேவையிலிருக்கும் சகோதரர்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஓரளவு விடுபட்டு யெகோவா ஒப்படைத்திருக்கிற சாட்சி கொடுக்கும் வேலையில் சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் ஈடுபட அது உதவியது.” இன்றும் நம்முடைய லட்சியம் அதுதான். பாதிக்கப்பட்ட நம் சகோதரர்கள் திரும்பவும் ஊழியத்தில் ஈடுபடுவதன் மூலம், மற்றவர்களைப் பலப்படுத்துகிறார்கள், தங்களையும் பலப்படுத்திக்கொள்கிறார்கள்.—2 கொரிந்தியர் 1:3, 4-ஐ வாசியுங்கள்.
13 நிவாரண உதவியைப் பெற்றதால் மறுபடியும் பிரசங்க வேலையில் ஈடுபட்டு பலமடைந்த சிலர் சொல்வதைக் கவனியுங்கள். “ஊழியத்துக்குப் போனது எங்கள் குடும்பத்துக்கு ஆசீர்வாதமாக இருந்தது. மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும்போது எங்களுடைய கவலைகளை மறக்க முடிந்தது” என்று ஒரு சகோதரர் சொன்னார். ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டதால் என்னைச் சுற்றியிருந்த சேதத்தை மறக்க முடிந்தது. பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன்.” இன்னொரு சகோதரி இப்படிச் சொன்னார்: “எங்களைச் சுற்றியிருந்த நிறைய விஷயங்கள் எங்களுடைய கட்டுப்பாட்டை மீறிப் போயிருந்தாலும் ஊழியத்துக்குப் போனது எங்களுடைய குடும்பத்துக்கு நம்பிக்கையைத் தந்தது. பூஞ்சோலைப் பூமியைப் பற்றி மற்றவர்களிடம் பேசியதால், சீக்கிரத்தில் எல்லாமே புதிதாக்கப்படும் என்ற எங்களுடைய நம்பிக்கை பலப்பட்டது.”
14 பாதிக்கப்பட்ட நம் சகோதர சகோதரிகள் செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், கூட்டங்களில் கலந்துகொள்வது. சுமார் 58 வயதுள்ள கியோக்கோ என்ற சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். சுனாமியில் எல்லா உடைமைகளையும் அவர் இழந்துவிட்டார். போட்டிருந்த துணியும் செருப்பும்தான் மிஞ்சியது. எப்படி வாழ்க்கையை ஓட்டுவது என்று நினைத்து அவர் குழம்பிப்போயிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு மூப்பர், அந்த வாரத்துக்கான கூட்டம் தன்னுடைய காரில் நடக்கும் என்று கியோக்கோவிடம் சொன்னார். “அந்த மூப்பரோடும் அவருடைய மனைவியோடும் சேர்ந்து நானும் இன்னொரு சகோதரியும் அந்த காரில் உட்கார்ந்தோம். அந்தக் கூட்டம் ரொம்ப எளிமையாக இருந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகத்தை மறக்க அது எனக்கு உதவியது. அது உண்மையிலேயே, ஒரு அற்புதம்போல் இருந்தது. எனக்கு மன அமைதி கிடைத்தது. சக கிறிஸ்தவர்களோடு கூடிவருவதால் கிடைக்கும் பலத்தை அன்று என்னால் உணர முடிந்தது” என்று கியோக்கோ சொல்கிறார். பேரழிவுக்குப் பிறகு, தான் கலந்துகொண்ட கூட்டங்களைப் பற்றி மற்றொரு சகோதரி இப்படிச் சொன்னார்: “கூட்டங்கள்தான் எனக்கு உயிர்நாடியாக இருந்தன!”—ரோ. 1:11, 12; 12:12.
நிவாரண ஊழியம் நீடித்த நன்மைகளைத் தரும்
15, 16. (அ) நிவாரணப் பணியில் ஈடுபட்டதால் கொரிந்துவிலும் மற்ற இடங்களிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு என்ன நன்மை கிடைத்திருக்கும்? (ஆ) நிவாரணப் பணியில் ஈடுபடுவதால் இன்று நாமும் எப்படி நன்மை அடைகிறோம்?
15 நிவாரண ஊழியத்தைப் பற்றி கொரிந்தியர்களிடம் பவுல் சொன்னபோது, இந்த வேலையில் ஈடுபடுவதால் தங்களுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் வரும் நன்மைகளைப் பற்றியும் விளக்கினார். “ஈடிணையில்லாத மகா கருணையைக் கடவுள் உங்கள்மேல் பொழிந்திருப்பதால், அவர்கள் [எருசலேமில் உதவியைப் பெற்ற யூதக் கிறிஸ்தவர்கள்] உங்களுக்காக மன்றாடுகிறார்கள், உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்கள்” என்று பவுல் விளக்கினார். (2 கொ. 9:14) கொரிந்துவில் இருந்த சகோதரர்கள் காட்டிய தாராள குணத்தால், அவர்களுக்காகவும் அங்கிருந்த மற்ற தேசத்து கிறிஸ்தவர்களுக்காகவும் யூதக் கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்யத் தூண்டப்பட்டிருப்பார்கள். அதோடு, அவர்களுக்கிடையே இருந்த பாசமும் அதிகரித்திருக்கும்.
16 நிவாரணப் பணியால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பவுல் சொன்ன வார்த்தைகளை நம்முடைய நாளுக்குப் பொருத்தி டிசம்பர் 1, 1945, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “ஒரு பகுதியில் வாழும் கடவுளுடைய பரிசுத்தமான மக்கள், இன்னொரு பகுதியில் வாழும் கடவுளுடைய பரிசுத்தமான மக்களுக்கு உதவி செய்யும்போது அவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை எந்தளவு பலப்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள்!” இன்று நிவாரணப் பணியாளர்கள் இதைத் தங்கள் சொந்த அனுபவத்தில் பார்க்கிறார்கள். “நிவாரணப் பணியில் ஈடுபட்டதால் என்னுடைய சகோதரர்களோடு இன்னும் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கிறது” என்று வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒரு மூப்பர் சொல்கிறார். நிவாரண உதவியைப் பெற்றுக்கொண்ட ஒரு சகோதரி நன்றியோடு இப்படிச் சொன்னார்: “சகோதர சகோதரிகளோடு அனுபவிக்கும் நெருக்கமான பந்தம் பூஞ்சோலைப் பூமியில் இருப்பதுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது.”—நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.
17. (அ) ஏசாயா 41:13-லுள்ள வார்த்தைகள் நிவாரணப் பணிக்கு எப்படிப் பொருந்துகின்றன? (ஆ) நிவாரணப் பணி யெகோவாவுக்கு எப்படி மகிமை சேர்க்கிறது, சகோதரர்களோடு இருக்கிற பந்தத்தை எப்படிப் பலப்படுத்துகிறது என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லுங்கள். (“ நிவாரணப் பணிக்குக் கைகொடுக்கும் வாலண்டியர்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
17 பேரழிவால் தாக்கப்பட்ட ஒரு இடத்துக்கு நிவாரணப் பணியாளர்கள் வரும்போது பாதிக்கப்பட்ட சகோதரர்கள் ஏசாயா 41:13-ல் இருக்கிற கடவுளுடைய வாக்குறுதி எந்தளவு உண்மை என்பதை ருசித்துப்பார்க்கிறார்கள். “யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’” என்று அந்த வசனம் சொல்கிறது. ஒரு பேரழிவிலிருந்து தப்பித்த சகோதரி இப்படிச் சொல்கிறார்: “பேரழிவால் ஏற்பட்ட சேதத்தைப் பார்த்து நான் அப்படியே இடிந்துபோய்விட்டேன். ஆனால், யெகோவா தன்னுடைய உதவிக்கரத்தை நீட்டினார். சகோதர சகோதரிகள் எனக்குச் செய்த உதவிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.” பூகம்பத்தால் ரொம்ப மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த இரண்டு மூப்பர்கள் தங்களுடைய சபைகளின் சார்பாக இப்படி எழுதினார்கள்: “அந்தப் பூகம்பம் எங்களுக்கு அதிக வேதனையை ஏற்படுத்திவிட்டது. ஆனாலும், சகோதரர்கள் மூலமாக யெகோவா செய்த உதவியை எங்களால் உணர முடிந்தது. நிவாரணப் பணிகளைப் பற்றி நாங்கள் வாசித்திருக்கிறோம். ஆனால், இப்போது அந்த வேலைகள் எங்கள் கண்முன்னால் நடந்ததைப் பார்த்தோம்.”
நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீர்களா?
18. நிவாரணப் பணியில் ஈடுபட நீங்கள் என்ன செய்யலாம்? (“ அது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
18 நிவாரணப் பணியில் ஈடுபடுவதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், ஒரு விஷயத்தை மனதில் வையுங்கள். பெரும்பாலும், ராஜ்ய மன்ற கட்டுமான வேலையில் ஈடுபடுகிறவர்கள்தான் நிவாரணப் பணியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதனால், நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கான படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க விரும்புவதாக உங்கள் மூப்பர்களிடம் சொல்லுங்கள். நிவாரணப் பணியில் அதிக அனுபவமுள்ள ஒரு மூப்பர், நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி சொல்கிறார்: “பேரழிவு நிவாரணக் குழுவிடமிருந்து அழைப்பைப் பெற்ற பிறகுதான், பாதிக்கப்பட்ட இடத்துக்கு நீங்கள் போக வேண்டும்.” அப்போதுதான், நிவாரணப் பணிகள் ஒழுங்கான விதத்தில் நடக்கும்.
19. நாம் உண்மையிலேயே கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை நிரூபிக்க நிவாரணப் பணியாளர்கள் எப்படிப் பெரிதும் உதவியிருக்கிறார்கள்?
19 “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்” என்ற கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய நிவாரணப் பணி ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. இந்த விதத்தில் அன்பைக் காட்டும்போது, நாம் உண்மையிலேயே கிறிஸ்துவின் சீஷர்கள் என்பதை நிரூபிக்கிறோம். (யோவா. 13:34, 35) இன்று, நிவாரண உதவிகளை மனப்பூர்வமாகச் செய்கிற நிறைய சகோதர சகோதரிகள் நம் மத்தியில் இருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மையோடு ஆதரவு கொடுக்கிறவர்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதன் மூலம் அவர்கள் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறார்கள்.
a சக கிறிஸ்தவர்களுக்காகச் செய்யப்படும் நிவாரணப் பணிகளைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது. ஆனாலும், பெரும்பாலான சமயங்களில், நம்முடைய நிவாரணப் பணிகளால் மற்றவர்களும் பயனடைகிறார்கள்.—கலா. 6:10.
b “உதவி ஊழியர்கள்” என்ற வார்த்தையை விவரிக்க டியாக்கொனோஸ் (ஊழியன்) என்ற வார்த்தையின் பன்மை வடிவத்தை பவுல் பயன்படுத்தினார்.—1 தீ. 3:12.
c “பாஸ்னியாவிலுள்ள நம் விசுவாசிகளின் குடும்பத்துக்கு உதவிசெய்தல்” என்ற கட்டுரையை நவம்பர் 1, 1994, காவற்கோபுரம், பக்கங்கள் 23-27-ல் பாருங்கள்.