13. சீர்திருத்த இயக்கம்—தேடலில் ஒரு புதிய திருப்பம்
அதிகாரம் 13
சீர்திருத்த இயக்கம்—தேடலில் ஒரு புதிய திருப்பம்
“காலத்திற்கேற்ப செயல்பட தவறியதே இடைக்கால ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் சோகக் கதைக்கு காரணம். . . . மக்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் செல்வதற்குப் பதிலாக, ஆன்மீக வழிகாட்டுதல் வழங்குவதற்குப் பதிலாக, அது படிப்படியாய் தரங்கெட்டுப் போனது, முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த ஒன்றானது.” பொ.ச. 5-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ஆதிக்கம் செலுத்தி வந்த வலிமையான ரோமன் கத்தோலிக்க சர்ச்சைப் பற்றி சீர்திருத்த இயக்கத்தின் கதை என்ற ஆங்கில நூல் மேற்கண்டவாறு கூறுகிறது.
2சகல அதிகாரமும் பெற்றிருந்த ரோம திருச்சபை எவ்வாறு ‘படிப்படியாய் தரங்கெட்டுப் போய், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த ஒன்றானது’? அப்போஸ்தலரின் வாரிசு என சொல்லிக்கொண்ட போப்புடைய ஆட்சி எவ்வாறு “ஆன்மீக வழிகாட்டுதல்” வழங்கத் தவறியது? இதன் விளைவு என்ன? பதில்களைக் கண்டுபிடிக்க, அது எப்படிப்பட்ட சர்ச்சாக மாறியிருந்தது என்பதையும், மெய்க் கடவுளுக்கான தேடலில் அது என்ன பாகத்தை வகித்தது என்பதையும் பற்றி நாம் சுருக்கமாக ஆராய வேண்டும்.
சர்ச்சின் வீழ்ச்சி
3ரோம திருச்சபை 15-ம் நூற்றாண்டின் முடிவிற்குள் தனது அதிகாரத்திற்குட்பட்ட இடங்களிலெல்லாம் பேரிஷ்கள், கான்வென்ட்கள், துறவிமடங்கள்
ஆகியவற்றை ஸ்தாபித்திருந்தது; ஐரோப்பாவில் பேரளவான நிலபுலன்களை அது உரிமை கொண்டாடியது. பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஏறக்குறைய பாதி நிலமும், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்தில் ஐந்தில் இரண்டு பகுதி அல்லது அதற்கும் அதிகமான நிலமும் சர்ச்சுக்கு சொந்தமாக இருந்தன. விளைவு? “1400-களின் இறுதியிலும் 1500-களின் ஆரம்பத்திலும் ரோமின் புகழ் வானளாவ உயர்ந்தது, அதன் அரசியல் செல்வாக்கும் தற்காலிகமாக கொடிகட்டி பறந்தது” என நாகரிகத்தின் சரித்திரம் என்ற ஆங்கில நூல் கூறுகிறது. ஆனால் இந்த எல்லா ஆடம்பரத்துக்கும் ஏகப்பட்ட பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. மேலும் அப்படிப்பட்ட ஆடம்பரத்தைக் காத்துக்கொள்ள போப் ஆதிக்கத்திற்கு நிதி திரட்டும் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது அவசியமானது. எப்படியெல்லாம் பணம் திரட்டப்பட்டது என்பதைப் பற்றி சரித்திராசிரியர் வில் டூரன்ட் இவ்வாறு எழுதினார்:“திருச்சபையில் பொறுப்பேற்ற ஒவ்வொருவரும் முதல் ஆண்டில் தன் சம்பளத்தில் பாதியையும் (“அன்னேட்ஸ்”) பிறகு வருடந்தோறும் பத்தில் ஒரு பங்கையும் போப்பின் நிர்வாக அலுவலகத்திற்குச் செலுத்த வேண்டியிருந்தது. ஒரு புதிய பேராயர் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு சின்னமாக விளங்கிய வெள்ளை கம்பளியாலான பட்டிக்காக (pallium) கணிசமான ஒரு தொகையை போப்புக்கு செலுத்த வேண்டியிருந்தது. ஒரு கார்டினலோ ஆர்ச்பிஷப்போ பிஷப்போ மரிக்கும்போது அவரது உடைமைகள் அனைத்தும் போப்புக்கே சொந்தமாயின. . . . போப்பின் நிர்வாக அலுவலகம் வழங்குகிற ஒவ்வொரு தீர்ப்புக்கும் அல்லது சலுகைக்கும் நன்கொடை கொடுக்கும்படி எதிர்பார்க்கப்பட்டது,
சில சமயங்களில், நன்கொடையைப் பொறுத்தே தீர்ப்பு வழங்கப்பட்டது.”4வருடா வருடம் போப்பின் கருவூலத்தில் வந்து குவிந்த பணம் தவறான விதத்தில் பயன்படுத்தப்பட்டது, ஊழலும் பெருகிப்போனது. ‘எல்லா விஷயங்களிலும் போப்புகள்கூட தங்கள் கைகளைக் கறைபடுத்திக் கொண்டனர்’ என சொல்லப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் வாழ்ந்த “போப்புகள் அனைவரும் சுகபோகப் பிரியர்களாக இருந்தனர்” என வரலாற்றாசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். இத்தகைய போப்புகளில் ஒருவர் நான்காம் சிக்ஸ்டஸ் (போப், 1471-84) என்பவர் ஆவார். இவர் தன் பெயரில் சிஸ்டைன் சேப்பலைக் கட்டுவதற்கும் தன் உறவினர்கள் பலரை செல்வந்தராக்குவதற்கும் பணத்தை தண்ணீராக செலவழித்தார். மற்றொருவர், அவப்பெயருக்குப் பேர்போன ஆறாம் அலெக்ஸாண்டரான (போப், 1492-1503) ராட்ரிகோ போர்கியா என்பவர் ஆவார். முறைகேடாக தனக்குப் பிறந்த பிள்ளைகளை பகிரங்கமாய் ஏற்றுக்கொண்டு அவர்களை உயர் பதவியில் அமர்த்தினார். இன்னொருவர் இரண்டாம் ஜூலியஸ் (போப், 1503-13), இவர் நான்காம் சிக்ஸ்டஸின் உறவினர்; திருச்சபை பணிகளைவிட போர், அரசியல், கலைகள் ஆகியவற்றில் இவருக்கு அதிக நாட்டம் இருந்தது. ஆக, “ரோம நிர்வாக குழுவின் வெட்கக்கேடான நிலை உச்சக்கட்டத்தை எட்டியது” என 1518-ல் டச்சு கத்தோலிக்க அறிஞர் ஈராஸ்மஸ் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை.
5போப்புகள் மாத்திரமே ஊழல் புரிந்தவர்களாகவும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் இருக்கவில்லை. “உன் பிள்ளையைப் பாழாக்க வேண்டுமென்றால் அவனை பாதிரியாக்கிவிடு” என்பது அன்றைய பிரபல முதுமொழி. அக்காலத்துப் பதிவுகள் இந்த வாசகத்தை ஆதரிக்கின்றன. டூரன்ட் கருத்துப்படி, இங்கிலாந்தில் “1499-ல் பதிவான [பாலியல்] வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களில் . . . சுமார் 23 சதவீதத்தினர் திருச்சபை குருமார்கள், ஆனால் மொத்த ஜனத்தொகையிலோ இவர்கள் சுமார் 2 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தனர். பாதிரிகள் சிலர், தங்களிடம் பாவ அறிக்கை செய்ய வந்த பெண்களை உடலுறவுக்கு அழைத்தனர். ஆயிரக்கணக்கான பாதிரிமார்கள் வைப்பாட்டிகளை வைத்திருந்தனர்; ஜெர்மனியில் ஏறக்குறைய அனைத்து பாதிரிமாருக்கும் வைப்பாட்டிகள் இருந்தனர்.” (இதை 1 கொரிந்தியர் 6:9-11; எபேசியர் 5:5 ஆகிய வசனங்களுடன் வேறுபடுத்திக் காண்க.) மற்ற விஷயங்களிலும் ஒழுக்க சீர்கேடுகள் நிறைய இருந்தன. அக்காலத்திய ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் இவ்வாறு குறைபட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது: “கிறிஸ்துவின் ஊழியர்களிடமிருந்து பணமில்லாமல் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது எனக்கு புரிகிறது; ஞானஸ்நானத்திற்குப் பணம் . . . திருமணத்திற்குப் பணம், பாவ அறிக்கைக்குப் பணம்—பணமில்லாமல் இறுதி சடங்குகூட செய்ய மாட்டார்கள்! பணமில்லாவிட்டால் கோயில் மணி அடிக்காது, பணமில்லாவிட்டால் சர்ச்சில் சவ அடக்கம் நடக்காது; பணமில்லாவிட்டால் பரதீஸின் கதவுகள்கூட நமக்காக திறக்காது போலும்.”—இதனுடன் 1 தீமோத்தேயு 6:10-ஐ வேறுபடுத்திக் காண்க.
6பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமன் சர்ச்சிலிருந்த நிலைமையைச் சுருக்கமாக சொல்வதற்கு அப்போதிருந்த பிரபல இத்தாலிய தத்துவஞானி மக்கியவெல்லியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறோம்:
“கிறிஸ்தவ மதம் அதன் ஸ்தாபகருடைய கட்டளைகளின்படி காக்கப்பட்டு வந்திருந்தால், கிறிஸ்தவமண்டலத்தின் நிலைமை இப்போதிருப்பதை போலில்லாமல் அதிக ஐக்கியமாகவும் ஆனந்தமாயும் இருந்திருக்கும். தங்கள் மதத்திற்கு தலைமை வகிக்கும் ரோமன் சர்ச்சிடம் மக்கள் எந்தளவுக்கு நெருங்கி செல்கிறார்களோ அந்தளவுக்கு அவர்கள் இறைப்பற்று இல்லாதவர்களாக ஆகி வருகிறார்கள்; இந்த உண்மை கிறிஸ்தவமண்டலத்தின் தரம் குறைந்துவிட்டதற்கு மிகப் பெரிய அத்தாட்சியாக விளங்குகிறது.”
ஆரம்ப சீர்திருத்த முயற்சிகள்
7சர்ச்சின் நெருக்கடி நிலையை ஈராஸ்மஸ், மக்கியவெல்லி போன்றோர் மட்டுமல்ல சர்ச்சே உணர்ந்து கொண்டது. சில புகார்களையும் துஷ்பிரயோகங்களையும் விசாரிக்க சர்ச்சில் குழுக்கள் கூட்டப்பட்டன, ஆனால் நிரந்தர பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஏகபோகமாக அனுபவித்த போப்புகள் சீர்திருத்த முயற்சிகள் எவற்றையும் ஊக்குவிக்கவில்லை.
8சர்ச் தன்னை சுத்திகரித்துக்கொள்ள முக்கிய கவனம் செலுத்தியிருந்தால் சீர்திருத்த இயக்கமே ஒருவேளை தோன்றியிருக்காது. ஆனால் நடந்தது என்னவோ இதுதான்: சர்ச்சுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சீர்திருத்தத்துக்கு குரலெழுப்பப்பட்டது. 11-ம் அதிகாரத்தில் வால்டென்சஸ், ஆல்பிஜென்சஸ் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவர்கள் மதபேதவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு இரக்கமின்றி ஒடுக்கப்பட்டனர்; என்றபோதிலும் கத்தோலிக்க பாதிரிமாரின் துஷ்பிரயோகங்களைப்
பற்றி மக்களின் மனங்களில் அவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு பைபிளை வாசிப்பதற்கான ஆவலையும் தூண்டிவிட்டிருந்தனர். ஆரம்ப கால சீர்திருத்தவாதிகள் அநேகர் உருவாக இது காரணமானது.சர்ச்சுக்குள்ளிருந்து வந்த எதிர்ப்புகள்
9“மத சீர்திருத்த இயக்கத்தின் விடிவெள்ளி” என்று அழைக்கப்பட்ட ஜான் விக்ளிஃப் (1330?-84) என்பவர் ஒரு கத்தோலிக்க மதகுருவாகவும் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபர்டில் இறையியல் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். சர்ச்சில் செய்யப்பட்ட துஷ்பிரயோகங்களை அவர் நன்கு அறிந்திருந்தார், ஆகவே மடாலயங்களில் பெருகிக் கிடந்த ஊழல், போப்பாதிக்க நிர்வாகத்தின் வரி வசூலிப்பு, பூசையின்போது அப்பமும் திராட்சரசமும் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறதென்ற கோட்பாடு, பாவ அறிக்கை, உலக விவகாரங்களில் சர்ச்சின் ஈடுபாடு ஆகியவற்றை வன்மையாக கண்டித்துப் பேசினார், எழுதினார்.
10பைபிளை போதிக்கும் விஷயத்தில் சர்ச் அசட்டையாக இருந்ததை விக்ளிஃப் வெளிப்படையாக சாடினார். ஒரு சமயம் அவர் இவ்வாறு கூறினார்: “இந்தத் தேசத்திலுள்ள ஒவ்வொரு சர்ச்சும் ஒரு நல்ல பைபிளையும் சுவிசேஷங்களைப் பற்றிய நல்ல விளக்கவுரைகளையும் வைத்திருந்தால், பாதிரிமார் அவற்றை நன்கு படித்து மக்களுக்கு சுவிசேஷத்தையும் கடவுளுடைய கட்டளைகளையும் உபதேசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” இதற்காகவே விக்ளிஃப் தனது அந்திம காலத்தில் லத்தீன் வல்கேட் பைபிளை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். நண்பர்களின் உதவியுடன், குறிப்பாக ஹெரிபோர்ட்டைச் சேர்ந்த நிக்கலஸ் என்பவரின் துணையுடன் முதன்முறையாக முழு பைபிளையும் ஆங்கிலத்தில் வெளியிட்டார். கடவுளுக்கான தேடலில் விக்ளிஃபின் மிகப் பெரிய பங்கு இது என்பதில் துளியும் சந்தேகமில்லை.
11விக்ளிஃபின் புத்தகங்களையும் பைபிளின் சில பகுதிகளையும் பிரசங்கிமார்கள் சிலர் இங்கிலாந்து முழுவதிலும் விநியோகித்தனர். இவர்கள் சாதாரண உடை அணிந்தும், வெறுங்காலோடும், பொருளுடைமைகள் ஏதுமின்றியும் வந்தபடியால் “ஏழை பாதிரிமார்” என்றழைக்கப்பட்டனர்; லாலர்டுகள் என ஏளனமாகவும் அழைக்கப்பட்டனர். இது லாலர்டு என்ற மத்திபகால டச்சு மொழி வார்த்தையிலிருந்து வருகிறது, அதன் அர்த்தம் “பிரார்த்தனைகளை அல்லது பக்திப் பாடல்களை முணுமுணுப்பவர்” என்பதாகும்.
(தொடர்மொழி மற்றும் பழங்கதைகளுடைய பூருவெரின் அகராதி [ஆங்கிலம்]) “சில ஆண்டுகளுக்குள் அவர்களுடைய எண்ணிக்கை கணிசமானளவு பெருகியது” என த லாலர்ட்ஸ் என்ற புத்தகம் கூறுகிறது. “தேசத்தில் குறைந்தபட்சம் நான்கில் ஒரு சதவீதத்தினர் அவர்களுடைய போதனைகளை உண்மையில் அல்லது பெயரளவில் ஏற்றுக்கொண்டதாக மதிப்பிடப்பட்டது.” இவற்றையெல்லாம் சர்ச் கவனிக்காமல் இல்லை. ஆட்சியாளர்கள் மத்தியிலும் அறிஞர்களின் மத்தியிலும் விக்ளிஃபுக்கு செல்வாக்கு இருந்ததால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படவில்லை, மாறாக 1384-ம் ஆண்டின் கடைசி நாளில் இயற்கை மரணம் எய்தும்படி விடப்பட்டார். ஆனால் இவரைப் பின்பற்றினவர்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அரசர் நான்காம் ஹென்றியின் ஆட்சியில் இவர்கள் மதபேதவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர்; இவர்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது உயிரோடு எரிக்கப்பட்டனர்.12ஜான் விக்ளிஃபின் கருத்துகள் பொஹிமியாவை (செக்) சேர்ந்த ஜான் ஹஸ் (1369?-1415) என்பவரை வெகுவாய் கவர்ந்தன. இவரும்கூட ஒரு கத்தோலிக்க பாதிரியாகவும் ப்ராக் பல்கலைக்கழக முகவராகவும் பணியாற்றினார். விக்ளிஃபை போலவே இவரும் ரோமன் சர்ச்சில் பெருகிக் கிடந்த ஊழலை வன்மையாக கண்டித்தார்; அதுமட்டுமல்ல, பைபிளை வாசிப்பது எந்தளவு முக்கியம் என்பதையும் வலியுறுத்தினார். இதனால் திருச்சபை தலைமை பீடம் இவர் மீது ஆத்திரமடைந்தது. போப்புக்கு எதிரான கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதை நிறுத்துமாறு 1403-ல் விக்ளிஃபுக்கு மேலிடத்து உத்தரவு வந்தது, விக்ளிஃபின் புத்தகங்கள் பகிரங்கமாக எரிக்கப்பட்டன. ஆனால் ஹஸ், ரோமன் சர்ச்சின் படுமோசமான சில பழக்கவழக்கங்களை கடுமையாக கண்டித்து தொடர்ந்து புத்தகங்கள் a கடைசியாக, 1410-ல் குற்றவாளியென்று தீர்க்கப்பட்டு சர்ச்சிலிருந்தே விலக்கப்பட்டார்.
எழுதினார்; அதில் பாவ மன்னிப்புச் சீட்டுகள் விற்கப்படுவதை பெரிதும் கண்டித்தார்.13தளரா உறுதியுடன் பைபிளை ஹஸ் ஆதரித்தார். “தவறிழைக்கும் போப்புக்கு எதிராக கலகம் செய்வது கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதாகும்” என அவர் எழுதினார். அதோடு, உண்மையான சர்ச் என்பது போப்பும் அல்ல, ரோமன் சர்ச்சும் அல்ல, “சர்ச் என்பது உண்மையில் கிறிஸ்துவின் சரீரமாக உள்ள தெரிந்துகொள்ளப்பட்டவர்களால் ஆனது, இவர்களின் தலைவர் கிறிஸ்துவே; இவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கின்றனர், இவர்கள் மீதுள்ள பிரியத்தின் காரணமாக தமது சொந்த இரத்தத்தினால் கிறிஸ்து இவர்களை மீட்டுக்கொண்டிருக்கிறார்” என்றும் அவர் கற்பித்தார். (எபேசியர் 1:22, 23; 5:25-27-ஐ ஒப்பிடுக.) இவை எல்லாவற்றிற்காகவும் கான்ஸ்டன்ஸ் ஆலோசனைக் குழுவால் விசாரிக்கப்பட்டு மதபேதவாதி என முத்திரை குத்தப்பட்டார். “கோழையாக வாழ்வதைவிட நல்லவனாக சாவதே மேல்” என்று கூறி, தான் சொன்னதை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் 1415-ல் மரத்தில் கட்டப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை, அவர் மரித்து 30-க்கும் அதிக ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஆலோசனைக் குழு அவருடைய எலும்புகளைத் தோண்டி எடுத்து எரிக்கும்படி உத்தரவிட்டது!
14இத்தாலியில் ஃப்ளாரென்ஸில் சான் மார்க்கோஸ் துறவிமடத்தைச் சேர்ந்த டாமினிக்கன் துறவி கிராலாமோ சவானரோலா (1452-98) என்பவர் ஆரம்ப காலத்திலிருந்த மற்றொரு சீர்திருத்தவாதி ஆவார். இத்தாலியின் மறுமலர்ச்சி இயக்கத்தால் தூண்டப்பட்டு, சர்ச்சிலும் அரசியலிலும் தான் கண்ட ஊழல்களைத் தைரியமாக கண்டித்துப் பேசினார். வேதாகமத்தின் அடிப்படையிலும், தான் பெற்றதாக கூறிய தரிசனங்கள் மற்றும் வெளிப்படுத்துதல்களின் அடிப்படையிலும் ஒரு கிறிஸ்தவ நாட்டை, அதாவது தேவாட்சியை நிறுவ முயன்றார். 1497-ல் இவரை திருச்சபையிலிருந்து போப் விலக்கி வைத்தார். அடுத்த ஆண்டு கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். “என் ஆண்டவர் என்னுடைய பாவங்களுக்காக தம் உயிரையே கொடுத்திருக்கும்போது, அவருக்காக இந்த எளிய உயிரை நான் சந்தோஷமாக கொடுக்க மாட்டேனா
என்ன?” என்று கடைசியாக சொன்னார். அவருடைய உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி ஆர்னோ நதியில் வீசப்பட்டது. பொருத்தமாகவே, சவானரோலா தன்னை ஒரு “முன்னோடி” என்றும், “தியாகி” என்றும் அழைத்துக்கொண்டார். சில வருடங்களுக்குப் பின் சீர்திருத்த இயக்கம் தோன்றி ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவியது.பிளவுபட்ட வீடு
15கடைசியாக சீர்திருத்த இயக்கம் எனும் புயல் வீசியபோது மேற்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவமண்டலத்தின் ஆன்மீக வீடு சுக்குநூறானது. ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் முழு கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த வீடு இப்போது பிளவுற்றது. தென் ஐரோப்பாவை—இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, பிரான்சின் சில பகுதிகளை—சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்கராகவே இருந்துவிட்டனர். மற்றவர்கள் மூன்று முக்கிய பிரிவினராயினர்: ஜெர்மனி மற்றும் ஸ்கான்டிநேவியாவில் லூத்தரன் பிரிவினர்; சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பிரான்சின் சில பகுதிகளில் கால்வினிஸ்டு பிரிவினர் (அதாவது சீர்திருத்த பிரிவினர்); இங்கிலாந்தில் ஆங்கலிக்கன் பிரிவினர். இவற்றில் சிறிய ஆனால் அதிக தீவிரமாக செயல்பட்டு வந்த பிரிவினரும் ஆங்காங்கே இருந்தனர்; முதலில் அனபாப்டிஸ்ட்டுகள், பிறகு மென்னோனைட்டுகள், ஹட்டரைட்டுகள், காலப்போக்கில் தங்கள் நம்பிக்கைகளை வட அமெரிக்காவில் பரப்பிய பியூரிட்டன்கள் ஆகியோர் இருந்தனர்.
16காலம் செல்லச் செல்ல, இந்த மூன்று முக்கிய பிரிவுகள் இன்று காணப்படுகிற நூற்றுக்கணக்கான பிரிவுகளாக பிளவுற்றன—பிரிஸ்பிட்டேரியன், எபிஸ்கோப்பல், மெத்தடிஸ்டு, பாப்டிஸ்டு, காங்கிரிகேஷனல் போன்றவை அவற்றில் சில. கிறிஸ்தவமண்டலம் நிஜமாகவே பிளவுபட்ட வீடானது. இந்தப் பிரிவினைகள் எவ்வாறு தோன்றின?
லூத்தரும் அவருடைய கொள்கைகளும்
17புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கம் 1517-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதென்று சொல்லலாம். அன்றுதான் சாக்சனி என்ற ஜெர்மன் மாநிலத்தில் விட்டன்பர்க்கிலுள்ள திருச்சபையின் கதவில் மார்ட்டின் லூத்தர் (1483-1546) என்ற அகஸ்டினிய துறவி தனது 95 குறிப்புகளை எழுதி ஆணியடித்ததாக ஒரு மரபு
சொல்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க இந்தச் சம்பவத்தைத் தூண்டியது எது? மார்ட்டின் லூத்தர் என்பவர் யார்? எதற்கு எதிராக அவர் கண்டனக் குரல் எழுப்பினார்?18விக்ளிஃப், ஹஸ் ஆகியோரைப் போலவே மார்ட்டின் லூத்தரும் ஒரு துறவியாகவும் அறிஞராகவும் இருந்தார். இவர் இறையியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் பைபிள் ஆய்வுகளின் பேராசிரியராக பணியாற்றினார். பைபிளைக் கூர்ந்து ஆராய்ந்ததால் லூத்தர் அதிக பிரபலமடைந்தார். இரட்சிப்பு அல்லது பாவ மன்னிப்பு என்பது செயல்களாலோ பிராயச்சித்தத்தாலோ கிடைப்பது அல்ல, அது விசுவாசத்தால் கிடைக்கிறது என்று அவர் உறுதியாக நம்பியபோதிலும், ரோம திருச்சபையிலிருந்து விலகும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் நிமித்தமே, அதாவது பாவ மன்னிப்புச் சீட்டு விற்கப்படுவதை கடுமையாக எதிர்த்தே தனது கொள்கைகளை வெளியிட்டார் தவிர, திட்டமிட்டு அவர் எந்தக் கலகத்தையும் செய்யவில்லை.
19லூத்தர் காலத்தில் போப்பின் பாவ மன்னிப்புச் சீட்டு பகிரங்கமாக விற்கப்பட்டது, உயிரோடிருப்பவர்களுக்கு மாத்திரமல்ல, மரித்தோருக்காகவும்
அது விற்கப்பட்டது. “பணப் பெட்டியில் நாணயம் போடும் சப்தம் கேட்டவுடன் உத்தரிக்கும் ஸ்தலத்திலிருக்கும் ஆத்மா துள்ளியெழுந்து வெளியே வரும்” என வழக்கமாக சொல்லப்பட்டது. சாதாரண மனிதனுக்கு, எவ்வித பாவத்திற்கான தண்டனைக்கும் எதிரான காப்புறுதிப் பத்திரமாக பாவ மன்னிப்புச் சீட்டு இருந்தது, மனந்திரும்புதல் ஒதுக்கித் தள்ளப்பட்டது. “எல்லா இடங்களிலும் உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையைப் பணம் செலுத்திக் குறைத்துக் கொள்ளலாம்; அது விற்கவும்படுகிறது, வாங்க மறுக்கிறவர்கள் மீது திணிக்கவும்படுகிறது” என ஈராஸ்மஸ் எழுதினார்.20ஜான் டெட்சல் என்ற டாமினிக்கன் துறவி ஒருவர் 1517-ல் பாவ மன்னிப்புச் சீட்டுகளை விற்பதற்காக விட்டன்பர்க் அருகிலுள்ள ஜூட்டர்போக் என்ற இடத்துக்குச் சென்றிருந்தார். வசூல்செய்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, ரோமில் புனித பேதுரு தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்காக பயன்படவிருந்தது. அதோடு, மைன்ட்ஸின் பேராயர் பதவியில் அமர ரோம நிர்வாக குழுவுக்கு பணம் கட்டுவதற்காக பிரான்டன்பர்க்கைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் வாங்கியிருந்த கடனை அடைக்கவும் பயன்படவிருந்தது. டெட்சல் தனக்கிருந்த எல்லா வியாபார திறமைகளையும் பயன்படுத்தி முழு மூச்சுடன் விற்பனையில் இறங்கினார், மக்கள் அவரிடம் திரண்டு வந்து பாவ மன்னிப்புச் சீட்டுகளை விலைகொடுத்து வாங்கினர். இதைக் கண்ட லூத்தர் ஆத்திரமடைந்தார், சர்க்கஸ் கூத்து போன்றிருந்த இந்த விவகாரம் சம்பந்தமாக தனது கருத்தைப் பகிரங்கமாய் அறிவிப்பதற்கு மிக விரைவான வழியைப் பயன்படுத்தினார், அதாவது தனது விவாதத்திற்குரிய 95 குறிப்புகளை எழுதி சர்ச்சின் கதவில் ஆணியடித்து வைத்தார்.
21லூத்தர் தனது 95 குறிப்புகளை பாவ மன்னிப்பு அதிகாரத்தை தெளிவாக்குவதற்கான விவாதங்கள் என்று அழைத்தார். சர்ச்சின் அதிகாரத்தை எதிர்த்து சவால்விடுவது அவருடைய நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, போப்பின் பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையில் உட்பட்டிருந்த வரம்பு மீறிய செயல்களையும் துஷ்பிரயோகங்களையும் சுட்டிக்காட்டுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. பின்வரும் அவரது குறிப்புகளிலிருந்து இதைக் காணலாம்:
“5. தனது சொந்த அதிகாரத்தால் விதித்த தண்டனையை மாத்திரமே போப்பால் குறைக்க முடியும், மற்றபடி எந்தத் தண்டனையையும்
குறைக்க அவரால் முடியாது, அதற்கு எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. . . .20. ஆகவே எல்லா தண்டனைகளும் முழுமையாக நீக்கப்படும் என்று போப் கூறுகையில், அது உண்மையில் எல்லாவற்றையும் அர்த்தப்படுத்துவதில்லை, அவர் விதித்திருக்கும் தண்டனைகளை மாத்திரமே அர்த்தப்படுத்துகிறது. . . .
36. பாவத்துக்காக உண்மையுடன் மனம் வருந்துகிற ஒவ்வொரு கிறிஸ்தவனும் பாவ மன்னிப்புச் சீட்டுகள் இல்லாமலேயே தண்டனையிலிருந்தும் குற்றவுணர்விலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.”
22அண்மைக்கால அச்சு இயந்திர கண்டுபிடிப்பின் உதவியால் இந்த எழுச்சிமிக்க கருத்துகள் ஜெர்மனியின் மற்ற பகுதிகளுக்கும் ரோமுக்கும் காட்டுத் தீ போல் வேகமாக பரவின. பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையின் பேரில் ஆரம்பித்த அறிவுப்பூர்வ விவாதம், கடைசியில் விசுவாசத்தின் மீதும், போப்பின் அதிகாரத்தின் மீதும் எழுந்த பயங்கர மோதலாக மாறியது. ரோம திருச்சபை ஆரம்பத்தில் லூத்தரோடு விவாதம் நடத்தி அவரது கருத்துகளைக் கைவிடுமாறு பணித்தது. லூத்தர் இதற்கு இணங்காதபோது குருமார்களும் அரசியல் அதிகாரிகளும் இவரை விட்டு வைக்கவில்லை. லூத்தர் பிரச்சாரம் செய்யக்கூடாதென்றும், அவருடைய புத்தகங்களெல்லாம் எரிக்கப்பட வேண்டுமென்றும் 1520-ல் போப் ஓர் அரசாணை பிறப்பித்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், அந்த அரசாணையை லூத்தர் பகிரங்கமாக தீயிட்டுக் கொளுத்தினார். விளைவு? 1521-ல் போப் இவரை சர்ச்சிலிருந்தே நீக்கிவிட்டார்.
23அந்த ஆண்டின் பிற்பகுதியில், வர்ம்ஸ் நகரில் நடந்த கூட்டத்திற்கு வருமாறு லூத்தர் அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில், தீவிர கத்தோலிக்கனும் புனித ரோம சாம்ராஜ்யத்தின் பேரரசனுமான ஐந்தாம் சார்லஸ், ஜெர்மன் மாநிலங்களைச் சேர்ந்த ஆறு பிரபுக்கள், மத மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோரால் லூத்தர் விசாரணை செய்யப்பட்டார். தனது கொள்கையைக் கைவிடுமாறு அவர் மீண்டும் பலவந்தப்படுத்தப்பட்டார். அப்போதுதான் பிரபலமான இந்தக் குறிப்பை லூத்தர் சொன்னார்: “வேதாகமத்தின் அடிப்படையிலும் தெளிவான ஆதாரத்தின் அடிப்படையிலும் நான் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டாலொழிய . . . என்னுடைய கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டேன், என்னால் பின்வாங்கவும் முடியாது, ஏனென்றால் மனசாட்சிக்கு விரோதமாக செல்வது
சரியுமல்ல, பாதுகாப்பானதுமல்ல. தேவனே எனக்கு துணை நில்லும். ஆமென்.” இவ்வாறு சொன்ன அவரை சட்டவிரோதி என பேரரசர் தீர்ப்பளித்தார். ஆனால் லூத்தரின் தாய்நாடான ஜெர்மனியிலுள்ள சாக்சனி நாட்டின் இளவரசனான ஃபிரட்ரிக், அவருக்கு ஆதரவளித்து வார்ட்பர்க் அரண்மனையில் புகலிடமும் அளித்தார்.24எனினும், லூத்தரின் கருத்துகள் பரவுவதை இந்த நடவடிக்கையால் தடுக்க முடியவில்லை. வார்ட்பர்க்கில் தான் பாதுகாப்பாக இருந்த அந்தப் பத்து மாதங்களை புத்தகங்கள் எழுதுவதற்கும் பைபிளை மொழிபெயர்ப்பதற்கும் லூத்தர் அர்ப்பணித்தார். ஈராஸ்மஸ் மொழிபெயர்த்திருந்த கிரேக்க வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். அப்படியே எபிரெய வேதாகமத்தையும் பிற்பாடு மொழிபெயர்த்தார். பொதுமக்களுக்கு எப்படிப்பட்ட பைபிள் தேவைப்பட்டதோ அப்படிப்பட்ட பைபிளையே லூத்தர் கொடுத்தார். இது “இரண்டு மாதங்களில் ஐந்தாயிரம் பிரதிகளும் பன்னிரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சம் பிரதிகளும் விற்பனையானதாக” சொல்லப்பட்டது. ஜெர்மன் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது இது ஏற்படுத்திய தாக்கம், ஆங்கில மொழி மீது கிங் ஜேம்ஸ் வர்ஷன் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சமம் என சொல்லப்படுகிறது.
25வர்ம்ஸ் தொடர் கூட்டத்திற்குப் பின்னான வருடங்களில் சீர்திருத்த இயக்கம் விரைவாக வளர ஆரம்பித்தது. ஆகவே 1526-ல் ஒவ்வொரு ஜெர்மானிய மாநிலமும் அதன் சொந்த மதத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை பேரரசர் அளித்தார். அது லூத்தரன் மதமாகவும் இருக்கலாம், ரோமன் கத்தோலிக்க மதமாகவும் இருக்கலாம். ஆனால் 1529-ல் இந்தத் தீர்மானத்தை பேரரசர் மாற்றியபோது ஜெர்மானிய பிரபுக்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் (புரட்டஸ்ட் செய்தனர்); ஆகவே, இந்தச் சீர்திருத்த இயக்கத்திற்கு புராட்டஸ்டன்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. அடுத்த வருடம் 1530-ல், ஆக்ஸ்பர்க் கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைக்க பேரரசர் முயற்சிகளை மேற்கொண்டார். லூத்தரன் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளை ஆக்ஸ்பர்க் அறிக்கை என்ற ஓர் ஆவணத்தில் சமர்ப்பித்தனர். லூத்தருடைய போதனைகளின் அடிப்படையில் ஃபிலிப் மலான்தன் என்பவர் இதைத் தொகுத்து எழுதியிருந்தார். அந்த ஆவணம் சமரச நடையில் எழுதப்பட்டிருந்தாலும் ரோமன் கத்தோலிக்க சர்ச் அதை ஏற்க மறுத்தது, எனவே புராட்டஸ்டன்டு பிரிவுக்கும் கத்தோலிக்க பிரிவுக்கும் இடையே சரிசெய்ய முடியாத அளவுக்கு பெரும் பிளவு ஏற்பட்டது. ஜெர்மானிய மாநிலங்கள்
பல லூத்தரன் பிரிவை ஆதரித்தன, விரைவில் ஸ்கான்டிநேவிய மாநிலங்களும் அவ்வாறே செய்தன.சீர்திருத்தமா அல்லது கலகமா?
26புராட்டஸ்டன்டினருக்கும் ரோமன் கத்தோலிக்கருக்கும் இடையே பிரிவினைக்குக் காரணமான முக்கிய விஷயங்கள் யாவை? லூத்தர் மூன்று விஷயங்களை குறிப்பிட்டார். முதலாவதாக, ‘விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக அறிவிக்கப்பட்டு’ (லத்தீன், சோலா ஃபைட்) b இரட்சிப்பைப் பெற முடியும் என்றும், மதகுருமார் அளிக்கும் மன்னிப்பினால் அல்லது பிராயச்சித்த செயல்களால் அதைப் பெற முடியாது என்றும் லூத்தர் உறுதியாக நம்பினார். இரண்டாவதாக, பாவ மன்னிப்பு கடவுளுடைய கிருபையால் மாத்திரமே (சோலா கிரேஷியா) கிடைக்கிறது, பாதிரிமாருக்கோ போப்புகளுக்கோ அதை அளிக்கும் அதிகாரம் இல்லை என அவர் கற்பித்தார். கடைசியாக, கோட்பாட்டு விஷயங்களை வேதாகமத்தை வைத்துத்தான் (சோலா ஸ்க்ரிப்சுரா) முடிவு செய்ய வேண்டும், அது போப்புகளால் அல்லது சர்ச் ஆலோசனைக் குழுக்களால் முடிவு செய்யப்படக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
27இப்படியிருந்த போதிலும், “பாவம், நீதிமானாக அறிவிக்கப்படுதல் ஆகியவற்றின் பேரில் தனக்கிருந்த வித்தியாசமான கருத்துகளுக்கு ஏற்ப முடிந்தளவு சர்ச்சின் பாரம்பரிய போதனைகளையும் பழக்கவழக்கங்களையும் [லூத்தர்] விட்டுவிடாமல் தக்கவைத்துக் கொண்டார்” என கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. லூத்தரன் “சர்ச்சைப் பற்றி எழுத்தாளர்கள் கூறுவதிலிருந்து, அதற்கும் வேதாகமத்திற்கும், சர்ச் கேத்தலிக்கிற்கும் அல்லது ரோமன் சர்ச்சிற்கும்கூட எந்த வேறுபாடும் இல்லை” என ஆக்ஸ்பர்க் அறிக்கை கூறுகிறது. சொல்லப்போனால், லூத்தரன் நம்பிக்கையைப் c
பற்றி சொல்லும் ஆக்ஸ்பர்க் அறிக்கையில் திரித்துவம், ஆத்துமா அழியாமை, நித்திய வாதனை போன்ற வேதப்பூர்வமற்ற கோட்பாடுகளும், குழந்தை ஞானஸ்நானம், சர்ச் விடுமுறை நாட்கள், விருந்துகள் போன்ற பழக்கவழக்கங்களும் இடம் பெற்றிருந்தன. மறுபட்சத்தில், லூத்தரன்கள் சில மாற்றங்களை செய்ய வற்புறுத்தினர்; அதாவது நற்கருணையின்போது திராட்சரசம், அப்பம் ஆகிய இரண்டையும் மக்கள் பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், மணத்துறவு, துறவற பொருத்தனைகள், கட்டாய பாவ அறிக்கை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் குரலெழுப்பினர்.28மொத்தத்தில், லூத்தரும் அவருடைய ஆதரவாளர்களும் ஆதரித்து வந்த சீர்திருத்த இயக்கம் போப்பின் நுகத்திலிருந்து விடுபடுவதில் வெற்றிபெற்றது. ஆனால், “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என யோவான் 4:24-ல் இயேசு சொல்லியபடி செய்யத் தவறியிருந்தது. ஆம், மார்ட்டின் லூத்தரால் மெய்க் கடவுளுக்கான தேடலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது உண்மையென்றாலும், சத்தியத்தின் இடுக்கமான பாதை இன்னும் வெகு தூரத்திலேயே இருந்தது.—மத்தேயு 7:13, 14; யோவான் 8:31, 32.
சுவிட்சர்லாந்தில் ஸ்விங்லியின் சீர்திருத்த இயக்கம்
29ஜெர்மனியில் போப்பின் தூதுவர்களோடும் உள்நாட்டு அதிகாரிகளோடும் லூத்தர் காரசாரமாக மோதிக்கொண்டிருந்த அதே சமயத்தில் கத்தோலிக்க பாதிரி உல்ரிச் ஸ்விங்லி (1484-1531) என்பவர் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் தன்னுடைய சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்தார். அது ஜெர்மன் மொழி பேசும் பிராந்தியமாக இருந்தபடியால் வடக்கேயிருந்து வந்த சீர்திருத்த அலையின் தாக்கத்தை அங்கிருந்தோர் ஏற்கெனவே உணர்ந்து கொண்டிருந்தனர். சுமார் 1519-ல் பாவ மன்னிப்பு, மரியாள் வழிபாடு, குருமார் மணத்துறவு போன்ற இன்னும் பிற கத்தோலிக்க சர்ச்சின்
கோட்பாடுகளையெல்லாம் தாக்கி ஸ்விங்லி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தான் லூத்தரைப் பின்பற்றவில்லை என ஸ்விங்லி கூறியபோதிலும் அநேக விஷயங்களில் லூத்தரின் கருத்துகளோடு இவர் உடன்பட்டிருந்தார், ஏன், லூத்தர் எழுதிய துண்டுப்பிரதிகளை நாடு முழுவதிலும் விநியோகிக்கவும் செய்தார். பழமைவாதியான லூத்தருக்கு நேர்மாறாக, ஸ்விங்லி ரோமன் சர்ச்சின் எல்லா தடயங்களும்—உருவச்சிலைகள், சிலுவைகள், குருமார் அங்கி, வழிபாட்டுக்குரிய இசை என எல்லா தடயங்களும்—ஒன்று விடாமல் நீக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்.30என்றாலும், இரண்டு சீர்திருத்தவாதிகளுக்கும் இடையே நற்கருணை, அதாவது பூசை (கம்யூனியன்) விஷயத்தில்தான் கடுமையான மோதல் ஏற்பட்டது. ‘இது என் சரீரமாயிருக்கிறது’ என இயேசு சொன்ன வார்த்தைகள் சொல்லர்த்தமானவை என்று வலியுறுத்திய லூத்தர் நற்கருணையின்போது பரிமாறப்படுகிற அப்பமும் திராட்சரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும் இரத்தமாகவும் அற்புதமாய் மாறுவதாக நம்பினார். ஆனால் ஸ்விங்லி கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பற்றி (ஆங்கிலம்) என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இயேசுவின் அந்த வார்த்தைகளை “அடையாள அர்த்தத்தில் அல்லது உருவக நடையில்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லியிருந்தார். “‘இது என் சரீரமாயிருக்கிறது’ என்பது ‘அப்பம் என் சரீரத்தை குறிக்கிறது’ அல்லது ‘என் சரீரத்துக்கு சின்னமாயிருக்கிறது’ என்பதையே அர்த்தப்படுத்துகிறது” என்று விளக்கியிருந்தார். இந்த வேறுபாட்டின் காரணமாக இரண்டு சீர்திருத்தவாதிகளும் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றனர்.
31ஸ்விங்லி தொடர்ந்து தன் சீர்திருத்த கருத்துகளை சூரிச் நகரில் பிரச்சாரம் செய்து அங்கே பல மாற்றங்களைச் செய்தார். மற்ற நகரங்களும் விரைவில் இவரது பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தன, ஆனால் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த பெரும்பான்மையோர் பழமைவாதிகளாய் இருந்தபடியால் கத்தோலிக்கராகவே இருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதால் சுவிட்சர்லாந்திலுள்ள புராட்டஸ்டன்டினருக்கும் ரோமன் கத்தோலிக்கருக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. போர் படையில் குருவாக சேவித்த ஸ்விங்லி, காப்பெல் போரில் சக் ஏரியின் அருகில் 1531-ல் கொல்லப்பட்டார். அமைதி நிலவ ஆரம்பித்தபோது, ஒவ்வொரு மாகாணமும் அதன் சொந்த மதத்தை—புராட்டஸ்டன்ட் அல்லது கத்தோலிக்க மதத்தை—தேர்ந்தெடுக்க உரிமை அளிக்கப்பட்டது.
அனபாப்டிஸ்ட்டுகள், மென்னோனைட்டுகள், ஹட்டரைட்டுகள்
32ஆனால் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் குறைபாடுகளை ஒழிக்க சீர்திருத்தவாதிகள் தேவையானளவு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என புராட்டஸ்டன்டினரில் சிலர் நினைத்தனர். உண்மையுடன் கிறிஸ்தவத்தைக் கடைப்பிடித்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் மாத்திரமே கிறிஸ்தவ சர்ச்சில் இருக்க வேண்டுமென்றும், ஒரு சமுதாயத்தில் அல்லது ஒரு தேசத்தில் இருக்கும் அத்தனை பேருமே அதில் இருக்க முடியாதென்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். ஆகவே குழந்தை ஞானஸ்நானம் தவறு என்று கூறியதோடு, சர்ச்சும் அரசாங்கமும் தனித்தனியாக இயங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தங்கள் சக விசுவாசிகளுக்கு இரகசியமாக மறு ஞானஸ்நானம் கொடுத்ததால் அனபாப்டிஸ்ட்டுகள் (கிரேக்கில் அனா என்பதற்கு “மறுபடியும்” என்று அர்த்தம்) என்ற பெயரைப் பெற்றனர். இவர்கள் ஆயுதங்களை ஏந்தவும், உறுதிமொழி எடுக்கவும், அரசு அலுவல்களை ஏற்கவும் மறுத்ததால் சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள் என கருதி கத்தோலிக்கர், புராட்டஸ்டன்டினர் ஆகிய இரு சாராருமே இவர்களைத் துன்புறுத்தினர்.
33ஆரம்பத்தில் அனபாப்டிஸ்ட்டுகள் சிறுசிறு தொகுதிகளாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களில் ஆங்காங்கே சிதறியிருந்தனர். சென்ற இடங்களிலெல்லாம் தங்கள் கொள்கைகளைப் பரப்பியதால் அவர்களுடைய எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. தீவிர மதப்பற்றுமிக்க அனபாப்டிஸ்ட்டுகளின் ஒரு சிறிய குழுவினர் போர் புரிவதில்லை என்ற தங்கள் கொள்கையைக் கைவிட்டு, 1534-ல் போர் புரிந்து மன்ஸ்டர் நகரத்தைக் கைப்பற்றினர்; பலதார முறைமையை பின்பற்றும் சமுதாயமாக புதிய எருசலேமை நிறுவ முற்பட்டனர். இந்த இயக்கம் சீக்கிரத்திலேயே கடும் வன்முறையால் அடக்கப்பட்டது. இதனால் அனபாப்டிஸ்ட்டுகளுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது, அவர்கள் ஏறக்குறைய முற்றிலும் அழிக்கப்பட்டனர். உண்மையில் பெரும்பான்மையான அனபாப்டிஸ்ட்டுகள் மதப்பற்றுள்ளவர்கள், அமைதியாக பிரிந்து வாழ விரும்பிய சாதாரண ஆட்கள். டச்சு சீர்திருத்தவாதி மென்னோ சைமன்ஸின் ஆதரவாளர்களான மென்னோனைட்டுகள் என்பவர்களும் டிரோலியன் ஜேக்கப் ஹட்டரின் ஆதரவாளர்களான ஹட்டரைட்டுகள் என்பவர்களும் அனபாப்டிஸ்ட்டுகளின் வழிவந்தவர்கள், நன்கு ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். துன்புறுத்தலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அவர்களில் சிலர் கிழக்கு ஐரோப்பாவுக்கும்—போலந்து,
ஹங்கேரி, ரஷ்யாவுக்கும்—மற்றவர்கள் வட அமெரிக்காவுக்கும் இடம்பெயர்ந்து சென்று ஹட்டரைட், அமிஷ் சமுதாயங்களை உருவாக்கினர்.கால்வினிய மதத்தின் தோற்றம்
34சுவிட்சர்லாந்தில் சீர்திருத்த இயக்கம் பிரெஞ்சுக்காரரான ஷோவன் கோவன், அதாவது ஜான் கால்வின் (1509-64) என்பவரின் தலைமையில் முன்னேறியது. பிரான்சில் கல்வி பயின்ற காலத்தில் இவர் புராட்டஸ்டன்டினரின் போதனைகளை அறிய வந்தார். துன்புறுத்தல் காரணமாக இவர் 1534-ல் பாரிஸிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்திலுள்ள பாஸ்லே நகரில் குடியேறினார். புராட்டஸ்டன்டு கருத்துகளை ஆதரித்து, இன்ஸ்டிட்யூட்ஸ் ஆஃப் த கிறிஸ்டியன் ரிலிஜன் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில் பண்டைய சர்ச் பிதாக்கள், இடைக்கால இறையியலர்கள், லூத்தர், ஸ்விங்லி ஆகியோரின் கருத்துகள் சுருக்கமாக இடம்பெற்றிருந்தன. பிற்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிறுவப்பட்ட அனைத்து சீர்திருத்த சர்ச்சுகளின் கோட்பாடுகளுக்கும் இவருடைய நூலே அடிப்படையாக அமைந்தது.
35 இன்ஸ்டிட்யூட்ஸ் புத்தகத்தில் கால்வின் தன் கோட்பாடுகளை விளக்கினார். கடவுளே முழுமையான அதிகாரம் பெற்றவர், இவருடைய விருப்பப்படியே எல்லாம் தீர்மானிக்கப்படும், எல்லாம் நடக்கும் என்று கால்வின் நம்பினார். அதுமட்டுமல்ல, மனிதன் பாவமுள்ளவனாகவும் முற்றிலும் தகுதியற்றவனாகவும் இருப்பதால் நற்செயல்களின் மூலம் அவன் இரட்சிப்படைய முடியாதென்றும், கடவுளால்தான் இரட்சிப்பைக் கொடுக்க முடியுமென்றும் அவர் நம்பினார். ஆகவே கடவுள் முன்விதித்தபடியே அனைத்தும் நடக்கிறது என்று தான் நம்பியதைக் குறித்து அவர் இவ்வாறு எழுதினார்:
“யாரை காப்பாற்றுவது யாரை அழிப்பது என்பதை, மாற்ற முடியாத தமது நோக்கத்தின் வாயிலாக கடவுள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டாரென்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விஷயத்தில், இந்த நோக்கம் அவருடைய இரக்கத்தின் அடிப்படையிலானது, இதில் மனிதனின் தகுதி என்று எதுவுமே இல்லை; ஆனால் அவர் அழிக்கும்படி தீர்மானித்திருக்கிறவர்களுக்கு ஜீவ வழி அடைக்கப்பட்டிருக்கிறது, இது நியாயமான, குறைசொல்ல முடியாத, ஆனால் புரிந்துகொள்ள முடியாத தீர்ப்பாக இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறோம்.”
இப்படிப்பட்ட போதனையில் காணப்படும் கண்டிப்பு மற்ற விஷயங்களிலும் தென்படுகிறது. கிறிஸ்தவர்கள் சுத்தமாகவும் ஒழுக்கமாகவும் வாழ வேண்டுமென்றும், பாவத்துக்கு விலகியிருப்பதோடு, சுகபோகங்களிலிருந்தும் அற்ப சந்தோஷங்களிலிருந்தும்கூட விலகியிருக்க வேண்டுமென்றும் கால்வின் வலியுறுத்தினார். மேலும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களால் உருவான சர்ச்சுக்கு அரசு கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கக்கூடாது எனவும், சர்ச்சின் மூலமே உண்மையில் கடவுள் பற்றுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கிட முடியும் எனவும் அவர் வாதிட்டார்.
36 இன்ஸ்டிட்யூட்ஸ்-ஐ பிரசுரித்த கொஞ்ச காலத்திலேயே பிரான்சின் சீர்திருத்தவாதி வில்லியம் ஃபேரல் என்பவரின் தூண்டுதலால் கால்வின் ஜெனிவாவில் குடியேறினார். இருவருமாக சேர்ந்து கால்வினிய கொள்கைகளைப் பரப்பி அதை நடைமுறைப்படுத்தினர். ஜெனிவாவில் சர்ச்சும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும், இதன் மூலம் அங்கு தேவாட்சி ஸ்தாபிக்கப்பட்டு, கடவுளுடைய நகரமாக அது மாற வேண்டும் என்பதும் அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. மத போதனை, சர்ச் ஆராதனை ஆகியவற்றிலிருந்து தொடங்கி ஒழுக்கம், சுகாதாரம், தீ விபத்து தடுப்பு போன்ற அனைத்து விஷயங்கள் வரை திட்டவட்டமான சட்டங்கள் இயற்றப்பட்டன, மீறினால் தண்டனை வழங்கப்பட்டது. “உதாரணத்திற்கு, ஒரு மணப்பெண்ணுக்குச் செய்யப்பட்ட சிகை அலங்காரம் பொருத்தமற்றதாக கருதப்பட்டதால் அந்த அலங்காரத்தைச் செய்தவர் இரண்டு நாட்களுக்கு சிறையில் தள்ளப்பட்டார்; இதற்கு உதவியாக இருந்த அவளுடைய அம்மாவுக்கும் இரு சிநேகிதிகளுக்கும் இதே தண்டனை வழங்கப்பட்டது. நடனமாடுகிறவர்களுக்கும் சீட்டு விளையாடுகிறவர்களுக்கும்கூட நீதிபதிகளால் தண்டனை வழங்கப்பட்டது” என ஒரு சரித்திர ஏடு குறிப்பிடுகிறது. இவருடைய இறையியல் கொள்கைகளிலிருந்து வித்தியாசப்பட்ட கருத்துகளைப் பின்பற்றியவர்கள் கடுமையாக நடத்தப்பட்டார்கள், இதில் மிகவும் கொடூரமான சம்பவம், ஸ்பானிய நாட்டவரான மிகெல் செர்வேட்டோ, அதாவது மைக்கேல் சர்வீட்டஸ் என்பவர் உயிரோடு எரிக்கப்பட்டதாகும்.—பக்கம் 322-ல் உள்ள பெட்டியைக் காண்க.
37ஜெனிவாவில் 1564-ல் மரணம் அடையும்வரை கால்வின் தனது சீர்திருத்த கொள்கைகளைப் பரப்பி வந்தார், சீர்திருத்த சர்ச் கடைசியில்
உறுதியாக நிறுவப்பட்டது. மற்ற தேசங்களில் துன்புறுத்தப்பட்ட புராட்டஸ்டன்டு சீர்திருத்தவாதிகள் ஜெனிவாவுக்குத் தப்பிவந்து கால்வினிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர்; பின்னர் தங்கள் சொந்த நாடுகளில் சீர்திருத்த இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாயினர். கால்வினியக் கோட்பாடு வேகமாக பிரான்சில் பரவியது. இங்கு ஹியூகநாட்டுகளை (பிரான்சில் கால்வினியக் கோட்பாட்டைப் பின்பற்றிய புராட்டஸ்டன்டினரை) கத்தோலிக்கர் மிகவும் கொடுமைப்படுத்தினர். நெதர்லாந்தில் கால்வினியக் கோட்பாட்டைப் பின்பற்றினவர்கள் டச்சு சீர்திருத்த சர்ச்சை ஸ்தாபிப்பதில் உதவியாக இருந்தனர். ஸ்காட்லாந்தில் முன்னாள் கத்தோலிக்க பாதிரியாக இருந்த வைராக்கியமிக்க ஜான் நாக்ஸ் என்பவரின் தலைமையில் கால்வினிய கொள்கைகளுக்கு இசைவாக பிரிஸ்பிட்டேரியன் சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து ஸ்தாபிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு சீர்திருத்த இயக்கத்திலும் கால்வினிய கொள்கைக்கு பங்கிருந்தது. அங்கிருந்து பியூரிட்டன்கள் அதை வட அமெரிக்காவில் பரப்பினர். இந்தக் கருத்தில் பார்த்தால் புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் லூத்தராக இருந்தபோதிலும் அதன் வளர்ச்சியில் அரும் தொண்டாற்றியவர் கால்வினே.இங்கிலாந்தில் மத சீர்திருத்த இயக்கம்
38ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்த சீர்திருத்த இயக்கங்கள் போலில்லாமல், இங்கிலாந்து சீர்திருத்த இயக்கம் ஜான் விக்ளிஃபின் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டிருந்தது. மத குருமார் அரசியலில் ஈடுபடுவதை எதிர்த்து இவர் பிரச்சாரம் செய்ததும் பைபிளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசியதும் இங்கிலாந்தில் புராட்டஸ்டன்டு உணர்வைத் தூண்டியது. இவர் பைபிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயன்றார், மற்றவர்களும் அவரைப் பின்பற்றினர். இங்கிலாந்திலிருந்து தப்பியோட வேண்டிய நிலைக்குள்ளான வில்லியம் டின்டேல் 1526-ல் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். பின்னால் ஆன்ட்வெர்ப் என்ற இடத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு கழுமரத்தில் கொல்லப்பட்டார், பிறகு இவருடைய உடல் எரிக்கப்பட்டது. மில்ஸ் கவர்டேல் என்பவர் டின்டேல் செய்து வந்த மொழிபெயர்ப்பை முழுமையாக முடித்து, 1535-ல் முழு பைபிளாக வெளியிட்டார். பொதுமக்களின் மொழியிலேயே பைபிளை வெளியிட்டதுதான் இங்கிலாந்தில் சீர்திருத்த இயக்கம் தோன்ற முக்கியமான, பலமான காரணமாக இருந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
d அவர் பெயரளவில்தான் புராட்டஸ்டன்டாக இருந்தாரே தவிர மத ரீதியில் எல்லா விதத்திலும் கத்தோலிக்கராகவே இருந்தார்.
39மதத்தின் பாதுகாவலர் என்று போப்பால் பெயர் சூட்டப்பட்ட எட்டாம் ஹென்றி (1491-1547) 1534-ல் ஆதிக்கச் சட்டத்தை (Act of Supremacy) இயற்றி இங்கிலாந்தின் திருச்சபை தலைவராக தன்னை ஆக்கிக்கொண்டபோது ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து பிரிவது முறைப்படி நடந்தது. கிறிஸ்தவ மடாலயங்களை மூடிவிட்டு அவற்றின் சொத்துக்களை உயர்குடியினருக்குப் பிரித்துக் கொடுத்தார் ஹென்றி. அதோடு, ஆங்கில பைபிளின் ஒரு பிரதி ஒவ்வொரு சர்ச்சிலும் வைக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டார். ஆனால் அவற்றையெல்லாம் மதத்திற்காக அல்ல, பெரும்பாலும் அரசியல் நோக்கத்திற்காகவே செய்தார். முக்கியமாக தனது திருமண விவகாரங்களில் போப்பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர் விரும்பினார்.40முதலாம் எலிசபெத் ராணியின் நீண்ட கால ஆட்சியில் (1558-1603) இங்கிலாந்து திருச்சபை புராட்டஸ்டன்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தது என்றாலும் கத்தோலிக்க அமைப்பு முறையையே அது பெரும்பாலும் பின்பற்றியது. போப்புக்கு உண்மையாய் இருத்தல், மதகுருமார்களின் பிரமச்சரியம், பாவ அறிக்கை, மற்ற கத்தோலிக்க பழக்கங்கள் ஆகியவற்றை அது ஒழித்தது. ஆனால் பேராயர்கள், பிஷப்புகள், துறவிகள், கன்னிகாஸ்திரீகள் ஆகியோரைக் கொண்ட திருச்சபை ஆட்சிமுறை தொடர்ந்து நீடித்தது. e இந்தப் பழமைவாதம் அதிருப்தியை ஏற்படுத்தவே, பல்வேறு புதிய தொகுதிகள் தோன்றின. ரோமன் கத்தோலிக்க பழக்கவழக்கங்கள் அனைத்தையும் சர்ச்சிலிருந்து நீக்க இன்னும் கண்டிப்புமிக்க சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென பியூரிட்டன்கள் வற்புறுத்தினர்; பிரிஸ்பிட்டர்கள் என்ற உள்ளூர் மூப்பர்கள்தான் திருச்சபையின் நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று செப்பரேட்டிஸ்டுகளும் இன்டிப்பென்டன்டுகளும் வற்புறுத்தினர். இப்படி திருச்சபையை எதிர்த்து பிரிந்து சென்றவர்கள் நெதர்லாந்து அல்லது வட அமெரிக்காவுக்கு ஓடிப்போயினர், அங்கே இவர்கள் காங்கிரிகேஷனல் சர்ச்சுகளையும், பாப்டிஸ்டு சர்ச்சுகளையும் அமைத்தனர். இங்கிலாந்தில் ஜார்ஜ் ஃபாக்ஸ் (1624-91) என்பவரின் தலைமையில் நண்பர்கள் சங்கமும் (க்வேக்கர்ஸ்) ஜான் வெஸ்லி (1703-91) என்பவரின் தலைமையில் மெத்தடிஸ்டு பிரிவும் தோன்றின.—கீழேயுள்ள விளக்க அட்டவணையைக் காண்க.
விளைவுகள் என்ன?
41சீர்திருத்த இயக்கத்தின் மூன்று முக்கிய தொகுதிகளாகிய லூத்தரன், கால்வினிஸ்டு, ஆங்கலிக்கன் ஆகியவற்றை சிந்தித்துவிட்டோம். இப்போது சீர்திருத்த இயக்க சாதனைகளைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். மேற்கத்திய உலகின் வரலாற்று போக்கையே அவை மாற்றிவிட்டன என்பதை மறுக்க முடியாது. “விடுதலை பெற வேண்டுமென்ற மக்களின் தாகத்தை அதிகப்படுத்தி அவர்களை உயர்வான, தூய குடிமக்களாக மாற்றுவதே சீர்திருத்த இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. புராட்டஸ்டன்டு கருத்துகள் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் மக்கள் இன்னுமதிகமாக உரிமைக்குரல் எழுப்ப ஆரம்பித்தனர்” என சீர்திருத்த இயக்கத்தின் சுருக்கமான வரலாறு (ஆங்கிலம்) என்ற தனது நூலில் ஜான் எஃப். ஹர்ஸ்ட் எழுதினார். சீர்திருத்த இயக்கம் என ஒன்று இல்லையென்றால்
இன்று நாம் அறிந்திருக்கிற மேற்கத்திய நாகரிகமே தோன்றியிருக்காது என்பது பல அறிஞர்களின் கருத்து. ஒருவேளை அது உண்மையென்றாலும், மத ரீதியாக சீர்திருத்த இயக்கம் எதை சாதித்திருக்கிறது என நாம் கேட்கத்தான் வேண்டும். மெய்க் கடவுளுக்கான தேடலில் அது சாதித்தது என்ன?42சந்தேகத்திற்கிடமின்றி, சீர்திருத்த இயக்கம் சாதித்திருக்கும் மிகச் சிறந்த காரியம் பொதுமக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழியில் பைபிள் கிடைக்கும்படி செய்திருப்பதாகும். முதன்முறையாக மக்களுக்கு கடவுளுடைய வார்த்தை முழுமையாக கிடைத்தது, இது அவர்கள் ஆன்மீகத்தில் பலப்படுவதற்கு உதவியது. ஆனால் வெறுமனே பைபிளை வாசிப்பது மட்டுமே போதாது. சீர்திருத்த இயக்கம் மக்களை போப்புடைய ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்லாமல், பல நூற்றாண்டுகளாக அவர்கள் நம்பி வந்த தவறான கோட்பாடுகள், போதனைகள் ஆகியவற்றிலிருந்தும் அவர்களை விடுவித்திருக்கிறதா?—யோவான் 8:32.
43ஏறக்குறைய எல்லா புராட்டஸ்டன்டு சர்ச்சுகளுமே ஒரே விசுவாசப்பிரமாணங்களை—நைசிய, அதனேஷிய, அப்போஸ்தல விசுவாசப்பிரமாணங்களை—ஆதரிக்கின்றன. இவற்றில் கத்தோலிக்க சர்ச் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போதித்து வந்திருக்கும் அதே போதனைகளே அடங்கியிருக்கின்றன, அதாவது திரித்துவம், அழியாத ஆத்துமா, நரக அக்கினி ஆகிய போதனைகளே அடங்கியிருக்கின்றன. வேதப்பூர்வமற்ற இப்படிப்பட்ட போதனைகள் கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி தவறான அபிப்பிராயத்தைத்தான் மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கத்தின் பரந்த மனப்போக்கின் விளைவாக ஏற்பட்ட எண்ணற்ற பிரிவுகளும் உட்பிரிவுகளும், மெய்க் கடவுளுக்கான தேடலில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு பதிலாக பல திசைகளில் பிரிந்து செல்லவே வழிசெய்திருக்கின்றன. சொல்லப்போனால் இத்தனை மாறுபாடுகளும் குழப்பங்களும் இருப்பதால் அநேகருக்கு கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழத் தொடங்கியது. விளைவு? 19-வது நூற்றாண்டில் நாத்திகமும் அறியொணாமைக் கொள்கையும் (agnosticism) பரவ ஆரம்பித்தன. அதைப் பற்றியே எமது அடுத்த அதிகாரம் சிந்திக்கவிருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a பாவங்களுக்காக போப் கொடுத்த மன்னிப்பு கடிதங்கள்.
b ‘விசுவாசத்தினால் மாத்திரமே நீதிமானாக அறிவிக்கப்பட’ முடியும் என்ற கருத்தை அவர் அத்தனை உறுதியாக நம்பியதால் பைபிளை மொழிபெயர்க்கும்போது ரோமர் 3:28-ல் “மாத்திரமே” என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்ல, “கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது” என யாக்கோபு புத்தகம் சொல்வதால் அப்புத்தகத்தை அவர் சந்தேகிக்கவும் செய்தார். (யாக்கோபு 2:17, 26) ரோமர் புத்தகத்தில், யூதர்களின் நியாயப்பிரமாண கிரியைகளைப் பற்றியே பவுல் பேசிக் கொண்டிருந்தார் என்பதை அவர் புரிந்துகொள்ள தவறிவிட்டார்.—ரோமர் 3:19, 20, 28.
c மார்ட்டின் லூத்தர் 1525-ல் காட்டரினா ஃபான் போரா என்ற பெண்ணை மணம் செய்தார். இவள் ஒரு மடாலயத்திலிருந்து ஓடிவந்திருந்த முன்னாள் கன்னிகாஸ்திரீ. இவர்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர். மூன்று காரணங்களுக்காக தான் திருமணம் செய்ததாக லூத்தர் கூறினார்: தன் தந்தையின் பிரியத்திற்காக, போப்பையும் பிசாசையும் ஆத்திரமடையச் செய்வதற்காக, தியாக மரணத்துக்கு முன் தனது சாட்சியை முத்தரிப்பதற்காக.
d எட்டாம் ஹென்றிக்கு ஆறு மனைவிகள் இருந்தனர். போப்பின் விருப்பத்திற்கு மாறாக அவருடைய முதல் திருமணம் ரத்து செய்யப்பட்டது, மற்றொன்று மணவிலக்கில் முடிவடைந்தது. மேலும் இரண்டு மனைவிகளை அவர் சிரச்சேதம் செய்தார், இன்னும் இருவர் இயற்கை மரணம் எய்தினர்.
e எபிஸ்கோப்பஸ் என்ற கிரேக்க வார்த்தை கிங் ஜேம்ஸ் வர்ஷன் போன்ற ஆங்கில பைபிள்களில் “பிஷப்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
[கேள்விகள்]
1, 2. (அ) இடைக்கால ரோமன் கத்தோலிக்க சர்ச்சைப் பற்றி சீர்திருத்த இயக்க நூல் ஒன்று எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) ரோம திருச்சபையின் நிலைமையைப் பற்றி என்ன கேள்விகள் எழுகின்றன?
3. (அ) பதினைந்தாம் நூற்றாண்டின் முடிவில் ரோம திருச்சபையின் பொருளாதார நிலை என்னவாக இருந்தது? (ஆ) ஆடம்பரத்தை காத்துக்கொள்ள திருச்சபை எப்படியெல்லாம் முயன்றது?
4. சர்ச்சுக்குள் வந்து குவிந்த செல்வம் போப் ஆதிக்கத்தை எவ்வாறு பாதித்தது?
5. பாதிரிமாரின் நடத்தையைப் பற்றி அக்காலத்துப் பதிவுகள் என்ன காண்பித்தன?
6. ரோமன் சர்ச்சை மக்கியவெல்லி எவ்வாறு விவரித்தார்? (ரோமர் 2:21-24)
7. துஷ்பிரயோகங்கள் சிலவற்றை நீக்குவதற்கு சர்ச் மேற்கொண்ட வலுவற்ற முயற்சிகள் யாவை?
8. சர்ச் தொடர்ந்து அசட்டையாக இருந்ததால் என்ன ஏற்பட்டது?
9. ஜான் விக்ளிஃப் என்பவர் யார், எதற்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்தார்?
10. பைபிள் மீது தனக்கிருந்த பற்றை விக்ளிஃப் எவ்வாறு காண்பித்தார்?
11. (அ) விக்ளிஃபை பின்பற்றியவர்களால் என்ன செய்ய முடிந்தது? (ஆ) லாலர்டுகளுக்கு என்ன சம்பவித்தது?
12. ஜான் ஹஸ் என்பவர் யார், எதற்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்தார்?
13. (அ) உண்மையான சர்ச் எது என ஹஸ் போதித்தார்? (ஆ) ஹஸ் உறுதியாக இருந்ததால் என்ன ஏற்பட்டது?
14. (அ) கிராலாமோ சவானரோலா என்பவர் யார்? (ஆ) சவானரோலா என்ன செய்ய முயன்றார், அதன் விளைவு என்ன?
15. சீர்திருத்த இயக்கத்தால் மேற்கு ஐரோப்பாவில் கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு பிளவுபட்டது?
16. கிறிஸ்தவமண்டல வீட்டுக்கு கடைசியில் என்ன நேர்ந்தது? (மாற்கு 3:25)
17. புராட்டஸ்டன்டு சீர்திருத்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கிய நாள் எது என்று சொல்லலாம்?
18. (அ) மார்ட்டின் லூத்தர் யார்? (ஆ) தன் கொள்கைகளை வெளியிட லூத்தரை தூண்டியது எது?
19. லூத்தர் காலத்தில் பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனையின் மூலம் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டனர்?
20. (அ) ஜான் டெட்சல் ஏன் ஜூட்டர்போக் சென்றார்? (ஆ) டெட்சல் பாவ மன்னிப்புச் சீட்டு விற்பதைக் கண்ட லூத்தர் என்ன செய்தார்?
21. பாவ மன்னிப்புச் சீட்டு விற்பனைக்கு எதிராக லூத்தர் என்ன விவாதங்களை முன்வைத்தார்?
22. (அ) லூத்தரின் செய்தி காட்டுத் தீ போல் பரவியபோது என்ன ஏற்பட்டது? (ஆ) லூத்தர் சம்பந்தமாக 1520-ல் என்ன நடந்தது, அதன் விளைவு என்ன?
23. (அ) வர்ம்ஸ் நகரில் என்ன கூட்டம் நடந்தது? (ஆ) வர்ம்ஸ் நகரில் தன் நிலைநிற்கையை லூத்தர் எவ்வாறு தெளிவுபடுத்தினார், அதன் விளைவு என்ன?
24. வார்ட்பர்க் அரண்மனையில் இருந்தபோது லூத்தர் என்ன செய்தார்?
25. (அ) புராட்டஸ்டன்டு என்ற பெயர் வந்தது எவ்வாறு? (ஆ) ஆக்ஸ்பர்க் அறிக்கை என்பது என்ன?
26. லூத்தரின் பிரகாரம், கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையே பிரிவினைக்குக் காரணமான முக்கிய விஷயங்கள் யாவை?
27. (அ) வேதப்பூர்வமற்ற எந்தெந்த கத்தோலிக்க போதனைகளையும் பழக்கவழக்கங்களையும் புராட்டஸ்டன்டினர் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர்? (ஆ) என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று புராட்டஸ்டன்டினர் குரலெழுப்பினர்?
28. சீர்திருத்த இயக்கம் எதில் வெற்றி பெற்றது, எதில் தவறியது?
29. (அ) உல்ரிச் ஸ்விங்லி என்பவர் யார், எதற்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்தார்? (ஆ) ஸ்விங்லியின் சீர்திருத்தம் எவ்வாறு லூத்தருடையதிலிருந்து வித்தியாசப்பட்டது?
30. என்ன முக்கியமான விஷயத்தின் பேரில் ஸ்விங்லியும் லூத்தரும் பிரிந்து சென்றனர்?
31. சுவிட்சர்லாந்தில் ஸ்விங்லி செய்த பிரச்சாரத்தின் விளைவு என்ன?
32. அனபாப்டிஸ்ட்டுகள் யார், அந்தப் பெயர் அவர்களுக்கு எவ்வாறு வந்தது?
33. (அ) அனபாப்டிஸ்ட்டுகளுக்கு எதிராக எது வன்முறையை தூண்டிவிட்டது? (ஆ) அனபாப்டிஸ்ட்டுகளின் செல்வாக்கு எவ்வாறு பரவியது?
34. (அ) ஜான் கால்வின் யார்? (ஆ) அவர் எழுதிய முக்கிய புத்தகம் எது?
35. (அ) முன்விதிக்கப்படுதல் என்ற தன் கோட்பாட்டை கால்வின் எவ்வாறு விளக்கினார்? (ஆ) இந்தக் கோட்பாட்டின் கண்டிப்பு எவ்வாறு கால்வினுடைய போதனைகளின் மற்ற அம்சங்களில் காணப்பட்டது?
36. (அ) கால்வினும் ஃபேரலும் ஜெனிவாவில் என்ன செய்ய முயன்றனர்? (ஆ) என்ன கண்டிப்பான சட்டங்கள் இயற்றப்பட்டன? (இ) கால்வின் எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் ஒன்று என்ன, தன் செயல்களை அவர் எவ்வாறு நியாயப்படுத்தினார்?
37. கால்வினின் செல்வாக்கு எவ்வாறு சுவிட்சர்லாந்துக்கு அப்பால் வெகு தொலைவு வரை பரவியது?
38. ஜான் விக்ளிஃபின் முயற்சியால் இங்கிலாந்தில் எவ்வாறு புராட்டஸ்டன்டு உணர்வு தூண்டப்பட்டது?
39. இங்கிலாந்தில் சீர்திருத்த இயக்கத்தில் எட்டாம் ஹென்றியின் பங்கு என்ன?
40. (அ) முதலாம் எலிசபெத் ராணியின் ஆட்சியில் இங்கிலாந்து திருச்சபையில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன? (ஆ) இங்கிலாந்து, நெதர்லாந்து, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் கடைசியாக என்ன தொகுதிகள் தோன்றின?
41. (அ) சில அறிஞர்களின் கருத்துப்படி, சீர்திருத்த இயக்கம் மனித வரலாற்றின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது? (ஆ) என்ன கேள்விகள் கருத்தோடு சிந்திக்கப்பட வேண்டும்?
42. (அ) சந்தேகமின்றி, சீர்திருத்த இயக்கம் சாதித்திருக்கும் மிகச் சிறந்த காரியம் என்ன? (ஆ) சீர்திருத்த இயக்கத்தின் உண்மையான சாதனைகளைப் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட வேண்டும்?
43. (அ) இன்று பெரும்பாலான புராட்டஸ்டன்டு சர்ச்சுகள் எந்த விசுவாசப்பிரமாணங்களை ஆதரிக்கின்றன, அதில் சொல்லப்படும் போதனைகள் யாவை? (ஆ) சீர்திருத்த இயக்கத்தின் பரந்த மனப்போக்கும் வித்தியாசமான பிரிவுகளும் மெய்க் கடவுளுக்கான தேடலில் என்ன பங்கை வகித்திருக்கின்றன?
[பக்கம் 322-ன் பெட்டி/படங்கள்]
“திரித்துவத்தின் பிழைகள்”
சட்டமும் மருத்துவமும் பயின்ற, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் சர்வீட்டஸ் (1511-53) தனது 20-ம் வயதில் டெ ட்ரினிடாடிஸ் எர்ரோரிபஸ் (திரித்துவத்தின் பிழைகள்) என்ற நூலை வெளியிட்டார். “திரித்துவம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த போவதில்லை, ஏனென்றால் இது வேதாகமத்தில் கிடையாது, தவறான தத்துவத்தையே இது பரப்புவதாக தெரிகிறது” என அதில் அவர் குறிப்பிட்டார். திரித்துவக் கோட்பாடு “புரிந்துகொள்ள முடியாதது, இயல்புக்கு முரணானது, தேவதூஷணத்துக்கு சமமானது!” என சாடினார்.
இப்படி ஒளிவுமறைவின்றி பகிரங்கமாக பேசியதற்காக சர்வீட்டஸை கத்தோலிக்க சர்ச் கண்டனம் செய்தது. ஆனால் கால்வின் மதத்தவர்தான் இவரைக் கைது செய்து, விசாரணைக்குட்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொன்றனர். கால்வின் தன் செயல்களை இவ்வாறு நியாயப்படுத்தினார்: “போப்பைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய வெறும் மூடநம்பிக்கைகளை ஆதரிப்பதற்காக இந்தளவு தீவிரமாகவும் கொடூரமாகவும் செயல்பட்டு குற்றமற்றவர்களுடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார்கள்; அப்படியிருக்கும்போது, சத்தியம் என உறுதியாக அறிந்திருப்பதை ஆதரிப்பதில் கிறிஸ்தவ நீதிபதிகள் அவர்களைவிட ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பது வெட்கக்கேடு அல்லவா?” மதவெறியும் தனிப்பட்ட வெறுப்பும் கால்வினை நிதானம் இழக்கச் செய்தன, கிறிஸ்தவ நியமங்களைக் காணாதபடி அவர் கண்களையும் குருடாக்கின.—மத்தேயு 5:44-ஐ ஒப்பிடுக.
[படங்கள்]
ஜான் கால்வின் (இடது), மைக்கேல் சர்வீட்டஸை (வலது) மதபேதவாதி என கூறி எரித்துக் கொன்றார்
[பக்கம் 327-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கிறிஸ்தவமண்டலத்தின் முக்கிய மதங்கள் பற்றிய ஒரு சுருக்கம்
விசுவாச துரோகத்தின் ஆரம்பம் - 2-ம் நூற்றாண்டு
ரோமன் கத்தோலிக்க சர்ச்
4-ம் நூற்றாண்டு (கான்ஸ்டன்டீன்)
5-ம் நூற்றாண்டு காப்டிக்
ஜேக்கோபைட்
பொ.ச. 1054 கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ்
ரஷ்யன்
கிரீக்
ரோமேனியன், மற்றவை
16-ம் நூற்றாண்டு சீர்திருத்தம்
லூத்தரன்
ஜெர்மன்
ஸ்வீடிஷ்
அமெரிக்கன், மற்றவை
ஆங்கலிக்கன்
எபிஸ்கோப்பல்
மெத்தடிஸ்டு
ஸால்வேஷன் ஆர்மி
பாப்டிஸ்டு
பென்டிகாஸ்டல்
காங்கிரிகேஷனல்
கால்வினிஸ்டு
பிரிஸ்பிட்டேரியன்
சீர்திருத்த சர்ச்சுகள்
[பக்கம் 307-ன் படங்கள்]
காசுக்காரர்களை கிறிஸ்து விரட்டியடித்ததும் பாவ மன்னிப்புச் சீட்டுகளை போப் விற்பனை செய்ததும் நேர்மாறாக இருப்பதை காட்டும் 16-வது நூற்றாண்டு மர செதுக்கோவியங்கள்
[பக்கம் 311-ன் படங்கள்]
கழுமரத்தில் ஜான் ஹஸ்
இங்கிலாந்தின் சீர்திருத்தவாதியும் பைபிள் மொழிபெயர்ப்பாளருமான ஜான் விக்ளிஃப்
[பக்கம் 314-ன் படங்கள்]
ஜான் டெட்சல் என்ற துறவி பாவ மன்னிப்புச் சீட்டுகளை விற்றபோது மார்ட்டின் லூத்தர் (வலது) அதை எதிர்த்தார்