உண்மை மதத்தை நீங்கள் எப்படி கண்டறியலாம்?
பாடம் 13
உண்மை மதத்தை நீங்கள் எப்படி கண்டறியலாம்?
எல்லா மதங்களும் கடவுளுக்குப் பிரியமானவையா, அல்லது ஒன்று மட்டுமா? (1)
கிறிஸ்தவமாக உரிமைபாராட்டக்கூடிய அத்தனை அநேக மதங்கள் ஏன் இருக்கின்றன? (2)
உண்மை கிறிஸ்தவர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ள முடியும்? (3-7)
1. இயேசு உண்மை கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தொடங்கினார். ஆகவே இன்றும் யெகோவாவின் உண்மை வணக்கத்தாராலான ஒரு குழு, அல்லது ஒரு தொகுதி மட்டுமே இருக்க வேண்டும். (யோவான் 4:23, 24; எபேசியர் 4:4, 5) சிலர் மட்டுமே ஜீவனுக்கான இடுக்கமான பாதையில் செல்கிறார்கள் என்பதாக பைபிள் போதிக்கிறது.—மத்தேயு 7:13, 14.
2. அப்போஸ்தலரின் மரணத்துக்குப் பின்னர், தவறான போதகங்களும் கிறிஸ்தவமற்ற பழக்கங்களும் மெதுவாகக் கிறிஸ்தவ சபைக்குள் நுழைந்துவிடும் என்பதாக பைபிள் முன்னறிவித்தது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக சில மனிதர் தங்களைப் பின்பற்றும்படி விசுவாசிகளை இழுத்துக்கொள்வார்கள். (மத்தேயு 7:15, 21-23; அப்போஸ்தலர் 20:29, 30) ஆகவேதான், கிறிஸ்தவமாக உரிமைபாராட்டுகிற அத்தனை அநேக வித்தியாசமான மதங்களை நாம் பார்க்கிறோம். உண்மை கிறிஸ்தவர்களை நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்?
3. உண்மை கிறிஸ்தவர்களுடைய மிகவும் மேம்பட்டு நிற்கும் அடையாளம் என்னவென்றால், அவர்கள் தங்களுக்கிடையே உண்மையான அன்பு உள்ளவர்களாய் இருக்கிறார்கள். (யோவான் 13:34, 35) மற்ற இனங்களை சேர்ந்தவர்கள் அல்லது வேறு தோல் நிறத்தை உடைய மக்களைவிட தாங்கள் மேம்பட்டவர்கள் என்று நினைப்பதற்கு அவர்கள் போதிக்கப்படவில்லை. மற்ற நாடுகளிலுள்ள மக்களை வெறுப்பதற்கு அவர்கள் போதிக்கப்படவுமில்லை. (அப்போஸ்தலர் 10:34, 35) ஆகவே அவர்கள் போர்களில் பங்கெடுப்பதில்லை. உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் சகோதர சகோதரிகளாகக் கருதி நடத்துகின்றனர்.—1 யோவான் 4:20, 21.
4. உண்மை மதத்தைத் தனிப்படுத்திக் காண்பிக்கும் வேறொரு பண்பு என்னவென்றால், அதன் அங்கத்தினர்கள் பைபிளுக்கு ஆழ்ந்த மரியாதையை கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டு அது சொல்லுவதை நம்புகிறார்கள். (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17) மனித கருத்துக்கள் அல்லது பழக்கவழக்கங்களைவிட கடவுளுடைய வார்த்தையை அதிக முக்கியமானதாக அவர்கள் கருதுகிறார்கள். (மத்தேயு 15:1-3, 7-9) அவர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் பைபிள் சொல்லுகிறபடி வாழ முயலுகிறார்கள். ஆகையால் அவர்கள் ஒரு காரியத்தைப் போதித்துவிட்டு, பின்னர் வேறுவிதமாய் நடப்பதில்லை.—தீத்து 1:15, 16.
5. உண்மையான மதம் கடவுளுடைய பெயரை கனம்பண்ணவும் வேண்டும். (மத்தேயு 6:9) கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை இயேசு, மற்றவர்கள் அறியப்பண்ணினார். உண்மை கிறிஸ்தவர்களும் அதையே செய்ய வேண்டும். (யோவான் 17:6, 26; ரோமர் 10:13, 14) உங்களுடைய சமுதாயத்தில், மற்றவர்களுக்குக் கடவுளுடைய பெயரைப் பற்றி சொல்லுகிற மக்கள் யார்?
6. உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்க வேண்டும். இயேசு அவ்வாறு செய்தார். அவர் எப்போதும் ராஜ்யத்தைப் பற்றி பேசினார். (லூக்கா 8:1) இதே செய்தியைப் பூமி முழுவதிலும் பிரசங்கிக்கும்படி அவர் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (மத்தேயு 24:14; 28:19, 20) கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் இந்தப் பூமிக்குக் கொண்டுவரும் என்று உண்மை கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.—சங்கீதம் 146:3-5.
7. இயேசுவின் சீஷர்கள் இந்தப் பொல்லாத உலகின் பாகமாக இருக்கக் கூடாது. (யோவான் 17:16) இந்த உலகின் அரசியல் விவகாரங்களிலும் சமூக சர்ச்சைகளிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. உலகில் சாதாரணமாக இருக்கும் கேடு விளைவிக்கும் நடத்தை, பழக்கவழக்கங்கள், மற்றும் மனப்பான்மைகளை அவர்கள் தவிர்க்கிறார்கள். (யாக்கோபு 1:27; 4:4) உங்கள் சமுதாயத்தில், உண்மை கிறிஸ்தவத்தின் இந்த அடையாளங்களை உடைய ஒரு மதத் தொகுதியை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
[பக்கம் 27-ன் படம்]
உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், பைபிளை மதிக்கிறார்கள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார்கள்