கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
பாடம் 6
கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?
கடவுளுடைய ராஜ்யம் எங்கே அமைக்கப்பட்டிருக்கிறது? (1) அதன் அரசர் யார்? (2)
அரசருடன் ஆட்சி செய்வதில் மற்றவர்கள் பங்குகொள்கிறார்களா? அப்படியானால், எத்தனை பேர்? (3)
நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பதை எது காண்பிக்கிறது? (4)
கடவுளுடைய ராஜ்யம் எதிர்காலத்தில் மனிதவர்க்கத்துக்காக எதைச் செய்யும்? (5-7)
1. இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றியவர்களுக்குப் போதித்தார். ஒரு ராஜ்யம் என்பது ஓர் அரசரைத் தலைமையாகக் கொண்ட ஓர் அரசாங்கம். கடவுளுடைய ராஜ்யம் ஒரு விசேஷித்த அரசாங்கம். அது பரலோகத்தில் நிறுவப்பட்டிருக்கிறது; அது இந்தப் பூமியின்மீது ஆட்சி செய்யும். அது கடவுளுடைய பெயரைப் புனிதப்படுத்தும் அல்லது பரிசுத்தப்படுத்தும். கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலும் செய்யப்படும்படி அது செய்விக்கும்.—மத்தேயு 6:9, 10.
2. இயேசு, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராவார் என்று கடவுள் வாக்களித்தார். (லூக்கா 1:30-33) இயேசு பூமியிலிருந்தபோது, அவர் தயவான, நியாயமான, பரிபூரணமான ஆட்சியாளராக இருப்பாரென நிரூபித்தார். அவர் பரலோகத்திற்குத் திரும்பியபோது, கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக உடனடியாக சிங்காசனத்தில் அமர்த்தப்படவில்லை. (எபிரெயர் 10:12, 13) யெகோவா இயேசுவுக்கு வாக்களித்திருந்த அதிகாரத்தை 1914-ல் அவருக்கு அளித்தார். அது முதற்கொண்டு, யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசராக இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்துவந்திருக்கிறார்.—தானியேல் 7:13, 14.
3. பரலோகத்திற்குச் செல்வதற்காகப் பூமியிலிருந்து உண்மையுள்ள சில ஆண்களையும் பெண்களையும்கூட யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் இயேசுவுடன் சேர்ந்து மனிதவர்க்கத்தின்மீது அரசர்களாகவும், நியாயாதிபதிகளாகவும், ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்வார்கள். (லூக்கா 22:28-30; வெளிப்படுத்துதல் 5:9, 10) தம்முடைய ராஜ்யத்தின் இந்த உடன் அரசர்களை இயேசு ஒரு “சிறுமந்தை” என்று அழைத்தார். அவர்கள் 1,44,000 பேர்.—லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 14:1-3.
4. இயேசு அரசரானவுடனேயே, சாத்தானையும் அவனுடைய பொல்லாத தூதர்களையும் அவர் பரலோகத்திலிருந்து வெளியேற்றி, கீழே பூமியின் பகுதிக்குள் தள்ளிவிட்டார். அதனால்தான் 1914 முதற்கொண்டு இங்கே பூமியில் நிலைமைகள் மிகவும் மோசமாகி இருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:9, 12) போர்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், அதிகரிக்கும் அக்கிரமம்—இவையனைத்துமே இயேசு ஆட்சி செய்கிறார் என்றும் இந்த ஒழுங்குமுறை அதன் கடைசி நாட்களில் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிற ‘அடையாளத்தின்’ பாகமாக இருக்கின்றன.—மத்தேயு 24:3, 7, 8, 12; லூக்கா 21:10, 11; 2 தீமோத்தேயு 3:1-5.
5. ஒரு மேய்ப்பன் வெள்ளாடுகளிலிருந்து செம்மறியாடுகளைப் பிரிப்பதுபோல, சீக்கிரத்தில் இயேசு, மக்களை நியாயந்தீர்ப்பார். அவருடைய உண்மையுள்ள குடிமக்களாகத் தங்களை நிரூபித்திருப்பவர்களே ‘செம்மறியாடுகள்’ ஆவர். அவர்கள் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். கடவுளுடைய ராஜ்யத்தை நிராகரித்திருப்பவர்கள் ‘வெள்ளாடுகள்’ ஆவர். (மத்தேயு 25:31-34, 46) சமீப எதிர்காலத்தில், வெள்ளாடு போன்றவர்கள் அனைவரையும் இயேசு அழித்துவிடுவார். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) நீங்கள் இயேசுவின் ‘செம்மறியாடுகளில்’ ஒருவராக இருக்க விரும்பினால், நீங்கள் ராஜ்ய செய்தியைக் கேட்டு, என்ன கற்றுக்கொள்கிறீர்களோ அதற்கு இசைவாக செயல்பட வேண்டும்.—மத்தேயு 24:14.
6. தற்போது பூமி அநேக நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசாங்கத்தை உடையதாய் இருக்கிறது. இந்த நாடுகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. ஆனால் கடவுளுடைய ராஜ்யம் எல்லா மனித அரசாங்கங்களையும் மாற்றீடு செய்யும். முழு பூமியின்மீதும் அதுவே ஒரே அரசாங்கமாக ஆட்சி செய்யும். (தானியேல் 2:44) அப்போது போர், குற்றச்செயல், வன்முறை ஆகியவை இருக்கவே இருக்காது. எல்லா மக்களும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் ஒன்றுசேர்ந்து வாழ்வார்கள்.—மீகா 4:3, 4.
7. இயேசுவின் ஆயிர வருட ஆட்சியின்போது, உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரணராவார்கள்; முழு பூமியும் ஒரு பரதீஸாகும். கடவுள் இயேசுவைச் செய்யச் சொன்ன எல்லாவற்றையும் ஆயிர வருட முடிவில் அவர் செய்து முடித்திருப்பார். அதற்குப்பின் அவர் ராஜ்யத்தை தம் பிதாவிடம் திரும்ப ஒப்படைத்துவிடுவார். (1 கொரிந்தியர் 15:24) கடவுளுடைய ராஜ்யம் என்ன செய்யும் என்பதைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் அன்பானவர்களுக்கும் ஏன் சொல்லக் கூடாது?
[பக்கம் 13-ன் படம்]
இயேசுவின் ஆட்சியின்கீழ், பகை அல்லது தப்பெண்ணம் இனி இருக்கவே இருக்காது