பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
பாடம் 5
பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
யெகோவா ஏன் பூமியைப் படைத்தார்? (1, 2)
பூமி ஏன் இப்போது ஒரு பரதீஸாக இல்லை? (3)
பொல்லாத மக்களுக்கு என்ன நடக்கும்? (4)
எதிர்காலத்தில், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு, வயதானவர்களுக்கு, இறந்தவர்களுக்கு இயேசு என்ன செய்வார்? (5, 6)
எதிர்கால ஆசீர்வாதங்களைப் பகிர்ந்துகொள்ள, நீங்கள் என்ன செய்வது அவசியம்? (7)
1. இந்தப் பூமியில் மனிதர் என்றென்றுமாக வாழ்ந்து அனுபவிப்பதற்காக யெகோவா அதைப் படைத்தார். நீதியுள்ள, மகிழ்ச்சியுள்ள மக்களால் பூமி எப்போதும் குடியிருக்கப்படும்படி அவர் விரும்பினார். (சங்கீதம் 115:16; ஏசாயா 45:18) பூமி ஒருபோதும் அழிக்கப்படாது; அது என்றென்றும் நிலைத்திருக்கும்.—சங்கீதம் 104:5; பிரசங்கி 1:4.
2. கடவுள் மனிதனை உண்டாக்கும் முன்பு, அவர் பூமியின் ஒரு சிறிய பாகத்தைத் தேர்ந்தெடுத்து, அதை ஓர் அழகிய பரதீஸாக்கினார். அதை ஏதேன் தோட்டம் என்று அவர் அழைத்தார். இங்குதான் அவர் முதல் மனிதனும் மனுஷியுமாகிய ஆதாமையும் ஏவாளையும் வைத்தார். அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பித்து, முழு பூமியையும் நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கடவுளுடைய நோக்கமாக இருந்தது. படிப்படியாக அவர்கள் இந்த முழு பூமியையும் ஒரு பரதீஸாக்கியிருப்பார்கள்.—ஆதியாகமம் 1:28; 2:8, 15.
3. கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே மீறுவதன் மூலமாக ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தனர். ஆகவே யெகோவா அவர்களை ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். பரதீஸ் இழக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:1-6, 23) ஆனால், இந்தப் பூமிக்கான தம்முடைய நோக்கத்தை யெகோவா மறந்துவிடவில்லை. மனிதர் என்றென்றைக்கும் வாழும் ஒரு பரதீஸாக அதை ஆக்கப்போவதாக அவர் வாக்களிக்கிறார். அவர் இதை எப்படி செய்வார்?—சங்கீதம் 37:29.
4. இந்தப் பூமி ஒரு பரதீஸாவதற்கு முன்னர் பொல்லாத மக்கள் அழிக்கப்பட வேண்டும். (சங்கீதம் 37:38) இது அர்மகெதோனில் நடக்கும்; அது துன்மார்க்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடவுளுடைய போர். அடுத்ததாக, சாத்தான் 1,000 வருடங்களுக்கு அடைத்து வைக்கப்படுவான். பொல்லாதவர்கள் எவரும் பூமியைக் கெடுக்கும்படி விட்டுவைக்கப்பட மாட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. கடவுளுடைய மக்கள் மட்டுமே தப்பிப் பிழைப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 20:1-3.
5. பின்னர் இயேசு கிறிஸ்து இந்தப் பூமியின்மீது 1,000 வருடங்களுக்கு அரசராக ஆட்சி வெளிப்படுத்துதல் 20:6) அவர் படிப்படியாக நம்முடைய மனங்களிலும் உடல்களிலுமிருந்து பாவத்தை எடுத்துப்போடுவார். ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்கு முன்னால் இருந்ததுபோலவே நாமும் பரிபூரண மனிதராவோம். அதற்குப் பின்னர், நோய், முதுமை, மரணம் ஆகியவை இருக்காது. நோய்வாய்ப்பட்டவர்கள் குணமாக்கப்படுவார்கள்; வயதானவர்கள் மீண்டும் இளைஞர் ஆவார்கள்.—யோபு 33:25; ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.
செய்வார். (6. இயேசுவின் ஆயிர வருட ஆட்சியின்போது, உண்மையுள்ள மனிதர் இந்த முழு பூமியையும் ஒரு பரதீஸாக மாற்றுவதற்கு உழைப்பார்கள். (லூக்கா 23:43) மேலும், இறந்துபோன லட்சக்கணக்கானவர்கள் பூமியின்மீது மனித வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (அப்போஸ்தலர் 24:15) கடவுள் அவர்களிடம் தேவைப்படுத்துவதை அவர்கள் செய்தால், பூமியில் தொடர்ந்து என்றென்றுமாக வாழ்வார்கள். இல்லை என்றால், அவர்கள் என்றென்றைக்குமாக அழிக்கப்படுவார்கள்.—யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 20:11-15.
7. இவ்வாறாக பூமிக்கான கடவுளுடைய ஆரம்ப நோக்கம் நிறைவேறும். இந்த எதிர்கால ஆசீர்வாதங்களில் பங்கேற்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் தொடர்ந்து யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதும் அவர் தேவைப்படுத்தும் காரியங்களுக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்வது, அவ்வாறு செய்ய உங்களுக்கு உதவும்.—ஏசாயா 11:9; எபிரெயர் 10:24, 25.
[பக்கம் 10-ன் படம்]
பரதீஸ் இழக்கப்பட்டது
[பக்கம் 11-ன் படம்]
அர்மகெதோனுக்குப் பிறகு பூமி பரதீஸாக்கப்படும்