அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
சிதைந்துபோவதிலிருந்து மீண்டது
பைபிளுக்கு வந்த ஆபத்து: பைபிள் எழுத்தாளர்களும் நகல் எடுக்கிறவர்களும் எழுதுவதற்கு பாப்பிரஸ் சுருள்களையும், தோல் சுருள்களையும்தான் முக்கியமாகப் பயன்படுத்தினார்கள். * (2 தீமோத்தேயு 4:13) பைபிள் நம் கைக்குப் பாதுகாப்பாக வந்துசேர்வதற்கு, அந்தப் பொருள்கள் எப்படித் தடையாக இருந்தன?
பாப்பிரஸ் சுருள்கள் பிய்ந்துபோகலாம், வெளுத்துப்போகலாம், சீக்கிரத்தில் நைந்துபோகலாம். “ஒரு பாப்பிரஸ் சுருள் நாளடைவில் நைந்து, தூள் தூளாகிவிடும். அதைப் பத்திரப்படுத்தி வைக்கும்போது அதில் பூஞ்சணம் பிடிக்கலாம் அல்லது நைந்துபோகலாம். அதை மண்ணுக்கு அடியில் பத்திரப்படுத்தி வைக்கும்போது பூச்சி அரித்துவிடலாம், முக்கியமாக கரையான் அரித்துவிடலாம்” என்று பூர்வ எகிப்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற நிபுணர்களான ரிச்சர்ட் பார்கன்சன் மற்றும் ஸ்டீஃபன் குவர்க்கி சொல்கிறார்கள். கண்டெடுக்கப்பட்ட சில பாப்பிரஸ் சுருள்கள் வெயிலில் வைக்கப்பட்டபோது அவை சீக்கிரத்திலேயே நாசமாகிவிட்டன.
பாப்பிரஸ் சுருள்களைவிட தோல் சுருள்கள் ரொம்ப நாள் உழைக்கும். அதைக்கூட சரியாகப் பத்திரப்படுத்தவில்லை என்றால் அல்லது ரொம்ப வெயில் படுகிற மாதிரி வைத்தால் பாழாய்ப் போய்விடும். * தோல் சுருள்களைப் பூச்சியும் அரித்துவிடும். அதனால்தான் நிறைய பழங்கால பதிவுகள் இப்போது இல்லை. பைபிளும் இப்படிச் சிதைந்துபோயிருந்தால் அதில் இருக்கிற தகவல்களும் சிதைந்துபோயிருக்கும்.
பைபிள் மீண்டுவந்தது எப்படி? யூத சட்டத்தின்படி ஒவ்வொரு ராஜாவும் ‘திருச்சட்ட புத்தகத்தை பார்த்து தனக்காக ஒரு நகலை எழுதி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.’ (உபாகமம் 17:18) அதாவது, பைபிளில் இருக்கிற முதல் ஐந்து புத்தகங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. நகல் எடுக்கிறவர்கள், நிறைய பிரதிகளை நகல் எடுத்ததால் முதல் நூற்றாண்டுக்குள் இஸ்ரவேல் தேசமெங்கும் இருக்கிற ஜெபக்கூடங்களிலும் தூர தேசமான மக்கெதோனியாவிலும்கூட இந்தக் கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. (லூக்கா 4:16, 17; அப்போஸ்தலர் 17:11) ரொம்பவே பழமையான சில கையெழுத்துப் பிரதிகள் எப்படி இன்றுவரை சிதைந்துபோகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன?
“வேத வசனங்கள் அடங்கிய சுருள்களை கூஜாக்களிலோ ஜாடிகளிலோ பாதுகாப்பாக வைப்பதில் யூதர்கள் பேர்போனவர்கள்” என்று புதிய ஏற்பாட்டின் அறிஞரான ஃபிலிப் டபிள்யூ. கம்ஃப்ர்ட் சொல்கிறார். அன்றைக்கு இருந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்தப் பழக்கம் இருந்தது. அதனால், மண் ஜாடிகளில் இருந்தும், இருட்டான அறைகள் மற்றும் குகைகளில் இருந்தும், ரொம்பவே வறண்ட நிலப்பகுதிகளில் இருந்தும் சில பைபிள் கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பலன்: பைபிள் கையெழுத்துப் பிரதிகளின் ஆயிரக்கணக்கான பாகங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில, 2000 வருஷங்களுக்கும் மேல் பழமையானவை. எந்தவொரு பழங்காலப் புத்தகத்துக்கும் இத்தனை காலத்துக்கு முன்பே இந்தளவு கையெழுத்துப் பிரதிகள் இருந்ததில்லை.
^ பாரா. 3 எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பாப்பிரஸ் சுருள் தண்ணீரில் வளரும் பாப்பிரஸ் புல்லிலிருந்து தயாரிக்கப்பட்டது.
^ பாரா. 5 உதாரணத்துக்கு, அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்ட ஐ.மா சுதந்திர உறுதிமொழி, தோல் சுருளில்தான் எழுதப்பட்டிருந்தது. இப்போது, 250 வருஷங்கள் கழித்துப் பார்த்தால் அதில் இருக்கிற எழுத்தெல்லாம் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மங்கி போய்விட்டன.