அதிகாரம் 1
குடும்ப மகிழ்ச்சிக்கு ஓர் இரகசியம் இருக்கிறதா?
1. மனித சமுதாயத்தில் உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் ஏன் முக்கியமானவையாய் இருக்கின்றன?
குடும்பம் என்பது பூமியிலுள்ள மிகப் பழமையான அமைப்பாகும், அது மனித சமுதாயத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. உறுதியாய் ஸ்தாபிக்கப்பட்ட குடும்பங்கள் சரித்திரம் முழுவதும் பலமான சமுதாயங்களை உருவாக்குவதற்கு உதவியிருக்கின்றன. பிள்ளைகளை முதிர்ச்சிவாய்ந்த பெரியவர்களாக வளர்ப்பதற்கு மிகச் சிறந்த ஏற்பாடாக இருப்பது குடும்பமே.
2-5. (அ) ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு பிள்ளை உணரும் பாதுகாப்பை விவரியுங்கள். (ஆ) சில குடும்பங்களில் என்ன பிரச்சினைகள் அறிக்கை செய்யப்பட்டிருக்கின்றன?
2 மகிழ்ச்சியான குடும்பம் பத்திரமும், பாதுகாப்பும் அளிக்கிற புகலிடமாய் உள்ளது. ஓர் இலட்சியக் குடும்பத்தைச் சற்று கற்பனை செய்துபாருங்கள். அக்கறையுள்ள பெற்றோர் இரவு உணவு உண்ணும்சமயத்தில் தங்கள் பிள்ளைகளோடு உட்கார்ந்து அந்நாளில் நடந்த சம்பவங்களை அவர்களோடு கலந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். பள்ளியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பிள்ளைகள் தங்கள் அப்பாவிடமும் அம்மாவிடமும் மூச்சுவிடாமல் பரபரப்போடு சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒன்றாகக்கூடி சாவகாசமாக அவர்கள் செலவழித்த நேரம் எல்லாருடைய களைப்பையும் போக்கி, இன்னொரு நாளை வெளியுலகில் கழிப்பதற்கு புது தெம்பை அளிக்கிறது.
3 மகிழ்ச்சியான குடும்பத்தில், ஒரு பிள்ளை நோயினால் பீடிக்கப்படுகையில் தன்னுடைய தந்தையும் தாயும் ஒருவேளை இரவுமுழுவதும் தன் படுக்கையின் பக்கத்திலிருந்து ஒருவர் மாறி ஒருவர் தன்னைக் கவனித்துக்கொள்வர் என்பதை அறிந்திருக்கிறது. அதனுடைய பிள்ளைப் பருவத்திய பிரச்சினைகளைத் தாயிடமோ அல்லது தந்தையிடமோ சொல்லி புத்திமதியும் ஆதரவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அது அறிந்திருக்கிறது. ஆம், வெளியுலகம் எவ்வளவு துன்பம் நிரம்பியதாக இருந்தாலும் பிள்ளை பாதுகாப்பானதாக உணருகிறது.
4 பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, பொதுவாக திருமணம் செய்துகொண்டு தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்கின்றனர். “ஒரு நபர் தன் பிள்ளையை வளர்க்கும்போதே தன் பெற்றோருக்கு தான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறார் என்பதை உணருகிறார்,” என்று கீழைநாட்டு பழமொழி ஒன்று சொல்கிறது. ஆழ்ந்த நன்றியுணர்ச்சியும் அன்புமுள்ள நபர்களாக வளர்ந்த பிள்ளைகள் தங்கள் சொந்த குடும்பங்களை மகிழ்ச்சியாக வைக்க முயற்சி செய்கின்றனர், அவர்கள் இப்போது வயதாகிக்கொண்டிருக்கும் தங்கள் பெற்றோரையும்கூட கவனித்துக்கொள்கின்றனர், இந்தப் பெரியவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளோடுகூட இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.
5 ஒருவேளை இந்தத் தருணத்தில் நீங்கள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கலாம்: ‘நான் என் குடும்பத்தை நேசிக்கிறேன், ஆனால் அது மேலே விவரிக்கப்பட்டிருக்கும் ஒன்றைப் போல் இல்லை. நானும் என் துணைவியும் வித்தியாசமான நேரங்களில் வேலைக்கு போகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் பார்ப்பதே அரிது. நாங்கள் பெரும்பாலும் பணப்பிரச்சினைகளைப் பற்றிதான் பேசுவோம்.’ அல்லது ‘என் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வேறொரு பட்டணத்தில் வசிக்கின்றனர், நான் அவர்களைப் பார்ப்பதே இல்லை’ என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஆம், பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள நபர்களின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்கள் நிமித்தமாக, பெரும்பான்மையான குடும்ப வாழ்க்கை இலட்சியமற்றதாயுள்ளது. அப்படியிருந்தாலும், சிலர் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை நடத்துகின்றனர். எப்படி? குடும்ப மகிழ்ச்சிக்கு ஓர் இரகசியம் இருக்கிறதா? அதற்கு பதில் ஆம் என்பதே. ஆனால் அது என்ன என்பதைக் கலந்து பேசுவதற்கு முன் நாம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.
குடும்பம் என்றால் என்ன?
6. இந்தப் புத்தகத்தில் என்ன வகையான குடும்பங்கள் கலந்தாராயப்படும்?
6 மேற்கத்திய நாடுகளில், பெரும்பாலான குடும்பங்கள் தந்தை, தாய், பிள்ளைகள் ஆகியோரை அடக்கியவையாக உள்ளன. தாத்தாபாட்டிமார் தங்களால் முடிந்தவரை தங்கள் சொந்த வீடுகளில் தனியாக வாழ்கின்றனர். தூரத்து உறவினர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறபோதிலும், அவர்களிடமாக கொண்டிருக்கும் கடமைகள் மட்டுப்படுத்தப்பட்டவையாய் இருக்கின்றன. அடிப்படையில், இப்படிப்பட்ட குடும்பத்தைப் பற்றிதான் நாம் இப்போது இந்தப் புத்தகத்தில் கலந்தாராய்வோம். இருப்பினும், சமீப ஆண்டுகளில் வேறுவகையான குடும்பங்கள்—ஒற்றைப்பெற்றோர் குடும்பம், மாற்றான் குடும்பம், ஏதோ காரணத்தால் ஒன்றாக கூடிவாழாத பெற்றோரையுடைய குடும்பம் போன்றவை—அதிக சர்வசாதாரணமாய் ஆகிவிட்டிருக்கின்றன.
7. கூட்டுக்குடும்பம் என்றால் என்ன?
7 சில கலாச்சாரங்களில் கூட்டுக்குடும்பம் என்பது பொதுவாய்க் காணப்படுகிறது. இந்த ஏற்பாட்டில், முடிந்தவரை, தாத்தாபாட்டிமார் தங்கள் பிள்ளைகளால் கவனித்துக்கொள்ளப்படுகின்றனர், தூரத்து உறவினர்களிடமாக நெருக்கமான பிணைப்புகளும் பொறுப்புகளும் விரிவுபடுத்தப்படுகின்றன. உதாரணமாக, குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் உடன்பிறந்தாரின் மகள், மகன், அல்லது தூரத்து உறவினர்கள் ஆகியோருக்கும்கூட ஆதரவு தந்து, வளர்த்து, அவர்களுடைய படிப்புக்கும்கூட உதவிசெய்யலாம். இந்தப் பிரசுரத்தில் கலந்தாராயப்படப்போகும் நியமங்கள் கூட்டுக்குடும்பங்களுக்கும் பொருந்தும்.
அழுத்தத்தின்கீழ் குடும்பம்
8, 9. சில தேசங்களில் உள்ள என்ன பிரச்சினைகள் குடும்பம் மாறிக்கொண்டே வருவதைக் காண்பிக்கின்றன?
8 இன்று குடும்பம் மாறிக்கொண்டே வருகிறது—விசனகரமாக அது பயனுள்ளவிதத்தில் மேம்பட்டதாய் ஆகிக்கொண்டில்லை. இந்தியாவில் ஓர் உதாரணம் காணப்படுகிறது, அதில் மனைவி தன் கணவனின் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்து அவருடைய குடும்பத்தாரின் கட்டளைகளின்படி வீட்டில் வேலை செய்யலாம். ஆனால் இன்று இந்திய மனைவிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்வது சர்வசாதாரணமாய் உள்ளது. அந்த நிலையிலும், பரம்பரையாக வந்த வழக்கங்களின்படி, வீடுகளில் தாங்கள் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். அநேக தேசங்களில் எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், வெளியே சென்று வேலை செய்யும் பெண் குடும்பத்தில் உள்ள மற்ற அங்கத்தினர்களோடு ஒப்பிட, வீட்டில் எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறாள்?
9 கிழக்கத்திய சமுதாயங்களில் பலமான கூட்டுக்குடும்ப பிணைப்புகள் பாரம்பரியமாக இருந்துவருபவை. என்றபோதிலும், மேற்கத்திய-பாணியில் அமைந்த தனியுரிமைக் கோட்பாட்டினுடைய பாதிப்பின் காரணமாகவும், பொருளாதாரப் பிரச்சினைகளினால் வரும் அழுத்தத்தின் காரணமாகவும், பாரம்பரியமாக இருந்துவரும் கூட்டுக்குடும்பம் பலவீனமாகி வருகிறது. ஆகையால், அநேகர், வயதான குடும்ப அங்கத்தினர்களைக் கவனித்துக்கொள்வதை ஒரு கடமையாக அல்லது சிலாக்கியமாக கருதாமல் ஒரு பாரமாக கருதுகின்றனர். சில வயதான பெற்றோர் மோசமாக நடத்தப்படுகின்றனர். உண்மையில், வயதானவர்களை மோசமாக நடத்துவதும் கவனியாமல் விடுவதும் இன்று அநேக தேசங்களில் காணப்படுகின்றன.
10, 11. ஐரோப்பிய தேசங்களில் குடும்பம் மாறிக்கொண்டே வருவதை என்ன உண்மைகள் காண்பிக்கின்றன?
10 மணவிலக்கு அதிக சர்வசாதாரணமான காரியமாகி வருகிறது. ஸ்பெய்னில் 1990-களின் ஆரம்பத்தில் மணவிலக்கு, 8 திருமணங்களில் 1 என்ற வீதத்திற்கு அதிகரித்தது—25 வருடங்களுக்கு முன்பு 100 திருமணங்களில் 1 என்ற வீதத்தில்தானே இருந்த இது பெரும் அதிகரிப்பாய் இருந்தது. ஐரோப்பாவிலேயே அதி உயர்வான மணவிலக்கு வீதம் உள்ளதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கும் பிரிட்டனில் (10 திருமணங்களில் 4 திருமணங்கள் தோல்வியுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) ஒற்றைப்பெற்றோர் குடும்பங்களின் எண்ணிக்கைத் திடீரென அதிகரித்துள்ளது.
11 ஜெர்மனியில் அநேகர் பாரம்பரிய குடும்பத்தை முழுவதுமாக விட்டுவிடுவதாகத் தோன்றுகிறது. 1990-களில் ஜெர்மன் தேசத்து குடும்பங்களில் 35 சதவீதம் ஒரு நபரை உள்ளடக்கியதாய் இருந்தது, 31 சதவீதம் வெறும் இரண்டு நபர்களை உள்ளடக்கியதாய் இருந்தது. பிரான்ஸ் தேசத்தினரும்கூட அதிகமாக திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணம் செய்துகொள்வோரில் பெரும்பாலானவர்களும்கூட முன்பு இருந்ததைவிட சீக்கிரத்தில், மணவிலக்கு செய்துகொள்கின்றனர். பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் திருமண பொறுப்புகள் ஏதுமின்றி ஒன்றாக சேர்ந்து வாழ விரும்புகின்றனர். அதற்கு ஒப்பான போக்குகள் உலகமுழுவதிலும் காணப்படுகின்றன.
12. நவீனநாளைய குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களால் பிள்ளைகள் எவ்வாறு கஷ்டப்படுகின்றனர்?
12 பிள்ளைகளுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? ஐக்கிய மாகாணங்களிலும் மற்ற அநேக தேசங்களிலும் முறைகேடாகப் பிறக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சில பிள்ளைகள் இளம் பருவவயதினருக்குப் பிறக்கின்றன. அநேக பருவவயது பெண்கள் வெவ்வேறு ஆண்களின் மூலமாய் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருக்கின்றனர். லட்சக்கணக்கான பிள்ளைகள் வீடில்லாமல் தெருக்களில் சுற்றித்திரிகின்றனர் என்று உலகெங்கிலுமிருந்து வரும் அறிக்கைகள் கூறுகின்றன; மோசமாக நடத்தப்படும் வீடுகளிலிருந்து அநேக பிள்ளைகள் தப்பியோடுகின்றனர் அல்லது அவர்களுக்கு இனிமேலும் உதவியளித்து ஆதரிக்கமுடியாததால் குடும்பங்களிலிருந்து துரத்தி விடப்படுகின்றனர்.
13. என்ன பரவலான பிரச்சினைகள் குடும்பங்களிலிருந்து மகிழ்ச்சியை எடுத்துப்போடுகின்றன?
13 ஆம், குடும்பம் நெருக்கடி நிலையில் உள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதோடுகூட, பருவவயதினரின் கலகத்தனம், பிள்ளைத் துர்ப்பிரயோகம், துணைவரின் வன்முறை, குடிவெறி பழக்கம் ஆகியவையும், இன்னும் மற்ற மோசமான பிரச்சினைகளும் அநேக குடும்பங்களிலிருந்து மகிழ்ச்சியை எடுத்துப்போடுகின்றன. பெரும் எண்ணிக்கையான பிள்ளைகளுக்கும் வயதுவந்தோருக்கும் குடும்பம் நிச்சயமாகவே ஒரு புகலிடமாக இருப்பதில்லை.
14. (அ) சிலருடைய அபிப்பிராயத்தின்படி, குடும்ப நெருக்கடிக்கு காரணங்கள் யாவை? (ஆ) முதல் நூற்றாண்டு வழக்கறிஞர் ஒருவர் இன்றைய உலகை எவ்வாறு விவரித்தார், அவருடைய வார்த்தைகளின் நிறைவேற்றம் குடும்ப வாழ்க்கையின்மீது என்ன பாதிப்பை உடையதாய் இருந்திருக்கிறது?
14 ஏன் இந்தக் குடும்ப நெருக்கடி? பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருப்பதால் நம்நாளைய குடும்பங்கள் நெருக்கடியான நிலையில் உள்ளன என்று சிலர் குறைகூறுகின்றனர். வேறுசிலர், நம் நாளில் ஒழுக்கநெறியில் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவைக் காரணம் காட்டுகின்றனர். கூடுதலான காரணங்களும்கூட குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அநேக அழுத்தங்கள் குடும்பத்தை அல்லற்படுத்தும் என்று பிரசித்திப் பெற்றிருந்த வழக்கறிஞர் ஒருவர் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் முன்னறிவித்து எழுதினார்: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் . . . இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:1-4) இன்று இந்த வார்த்தைகள் நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி எவராவது சந்தேகிப்பார்களா? இப்படிப்பட்ட நிலைமைகள் உள்ள உலகில், அநேக குடும்பங்கள் நெருக்கடி நிலையில் இருப்பது ஆச்சரியமாய் இருக்கிறதா?
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
15-17. குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தைக் கொண்டிருக்கும் என்ன ஆதாரமூலம் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுக் காண்பிக்கப்படும்?
15 குடும்பத்தில் எவ்வாறு மகிழ்ச்சி பெறுவது என்பதைப் பற்றிய புத்திமதி எல்லா இடங்களிலுமிருந்தும் வருகிறது. மேற்கத்திய நாடுகளில் முடிவின்றி வெளிவந்து கொண்டிருக்கும் சுய-உதவி புத்தகங்களும் பத்திரிகைகளும் புத்திமதி அளிக்கின்றன. பிரச்சினை என்னவென்றால், மனித ஆலோசகர்கள் ஒருவரோடொருவர் முரண்படுகின்றனர், இன்று காலத்துக்கேற்ற புதுப்பாணியாக இருக்கும் புத்திமதி நாளை நடைமுறைக்கு ஒவ்வாததாய் ஆகிவிட்டதாக கருதப்படலாம்.
16 அப்படியென்றால், நம்பத்தக்க குடும்ப வழிநடத்துதலை நாம் எங்கே பெற்றுக்கொள்ளலாம்? சுமார் 1,900 வருடங்களுக்கு முன்பு எழுதி முடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தில் நீங்கள் பார்ப்பீர்களா? அல்லது இப்படிப்பட்ட ஒரு புத்தகம் காலத்திற்கு ஒவ்வாத பழைய புத்தகம் என்று நீங்கள் நினைப்பீர்களா? உண்மை என்னவெனில், குடும்ப மகிழ்ச்சிக்கான மெய்யான இரகசியம் சரியாக அப்படிப்பட்ட ஆதாரமூலத்தில்தான் காணப்படுகிறது.
17 பைபிளே அந்த ஆதாரமூலம். எல்லா அத்தாட்சிகளின்படி, அது கடவுளாலேயே ஏவப்பட்டு எழுதப்பட்டது. நாம் பின்வரும் கூற்றைப் பைபிளில் காண்கிறோம்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) இன்று குடும்பங்கள் எதிர்ப்படும் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் கையாளுகையில், பைபிள் எவ்வாறு ‘காரியங்களை சீர்திருத்துவதற்கு’ உங்களுக்கு உதவக்கூடும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க இந்தப் பிரசுரத்தின் மூலம் நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம்.
18. திருமண சம்பந்தமான ஆலோசனைக்கு பைபிளை ஆதாரமாக ஏற்றுக்கொள்வது ஏன் நியாயமானது?
18 குடும்பங்களை மகிழ்ச்சியுள்ளவையாக ஆக்குவதற்கு பைபிள் உதவக்கூடும் என்ற சாத்தியத்தை மறுக்கும் மனச்சாய்வு உங்களுக்கு இருந்தால், இதைச் சிந்தித்துப் பாருங்கள்: பைபிளை எழுதும்படி ஏவியவரே திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர். (ஆதியாகமம் 2:18-25) அவருடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 83:17) அவரே படைப்பாளரும் ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாமகாரணராகிய பிதாவுமாய்’ இருக்கிறார். (எபேசியர் 3:14, 15) யெகோவா மனிதவர்க்கம் ஆரம்பமானதிலிருந்து குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்திருக்கிறார். எழக்கூடிய பிரச்சினைகளை அவர் அறிந்திருக்கிறார், அவற்றைத் தீர்ப்பதற்கான புத்திமதியையும் கொடுத்திருக்கிறார். சரித்திரம் முழுவதும், பைபிள் நியமங்களைத் தங்கள் குடும்ப வாழ்க்கையில் உண்மைமனதோடு பொருத்தியவர்கள் மிகுதியான மகிழ்ச்சியைக் கண்டடைந்துள்ளனர்.
19-21. திருமணப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதில் பைபிளுக்கு உள்ள வல்லமையை என்ன நவீனநாளைய அனுபவங்கள் காண்பிக்கின்றன?
19 உதாரணமாக, இந்தோனீஷியாவில் வசிக்கும் ஒரு குடும்பத்தலைவி சூதாடுவதில் வெறிகொண்டிருந்தாள். அவள் தன் மூன்று பிள்ளைகளைப் பல வருடங்களாக கவனியாமல் இருந்துவிட்டாள், எப்போதும் கணவரோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தாள். பின்பு அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக பைபிள் சொன்ன விஷயத்தை அந்தப் பெண் நம்ப ஆரம்பித்தாள். பைபிள் அளித்த ஆலோசனையைப் பொருத்தியபோது அவள் மேம்பட்ட மனைவியாக ஆனாள். பைபிள் நியமங்கள் பேரில் சார்ந்திருந்த அவள் முயற்சிகள் அவளுடைய முழு குடும்பத்துக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்தன.
20 ஸ்பெய்னில் வசிக்கும் ஒரு குடும்பத்தலைவி சொல்கிறாள்: “எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருந்தது, அதற்குள் நாங்கள் மிகவும் சிக்கலான பிரச்சினைகளை அனுபவிக்க ஆரம்பித்தோம்.” அவளுக்கும் அவளுடைய கணவருக்கும் பொதுவில் அதிகம் இல்லாததால், சண்டை போடும் சமயங்கள் தவிர பிற சமயங்களில் அவர்கள் வெகு குறைவாகவே பேசிக்கொள்வர். அவர்களுக்கு ஒரு இளவயது மகள் இருந்தபோதிலும், சட்டப்படி பிரிந்திருக்க தீர்மானித்தனர். ஆனால், அது நடப்பதற்கு முன்பு பைபிளைப் படிக்கும்படி அவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர். திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைபிள் அளிக்கும் புத்திமதியை அவர்கள் படித்து, அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தனர். கொஞ்ச காலத்துக்குள்ளாக சமாதானமாக கலந்துபேச அவர்களால் முடிந்தது, அவர்களுடைய சிறிய குடும்பம் மகிழ்ச்சியுள்ள ஒற்றுமையான குடும்பமாக ஆனது.
21 பைபிள் வயதானவர்களுக்கும்கூட உதவிசெய்கிறது. உதாரணமாக, ஜப்பானைச் சேர்ந்த ஒரு தம்பதியின் அனுபவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். கணவர் முன்கோபியாகவும் சிலசமயங்களில் வன்மையாகவும் நடந்துகொண்டார். முதலில், அத்தம்பதியின் மகள்கள் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். பிறகு கணவர் தன்னுடைய மகள்களோடு சேர்ந்துகொண்டார், ஆனால் மனைவியோ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தாள். இருப்பினும், பைபிள் நியமங்கள் அவளுடைய குடும்பத்தின்மீது கொண்டிருந்த நல்ல பாதிப்பை அவள் பல வருடங்களாக கவனித்தாள். அவளுடைய மகள்கள் அவளை நன்றாக கவனித்துக்கொண்டார்கள், அவளுடைய கணவர் அதிக சாந்தமாக ஆகிவிட்டார். அப்படிப்பட்ட மாற்றங்கள் பைபிளைப் படிக்கும்படி அந்தப் பெண்ணுக்கு ஊக்கமளித்தன. பைபிளைப் படித்ததானது அவள் மீதும் அதே நல்ல பாதிப்பைக் கொண்டிருந்தது. இந்த வயதான பெண் திரும்பத்திரும்ப சொன்னதாவது: “நாங்கள் ஒரு உண்மையான திருமணத் தம்பதிகளானோம்.”
22, 23. எல்லா தேசிய பின்னணிகளையுடைய மக்களும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண பைபிள் எவ்வாறு உதவுகிறது?
22 குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தைக் கற்றிருக்கும் பெரும் எண்ணிக்கையான ஆட்கள் மத்தியில் இத்தகைய நபர்கள் காணப்படுகின்றனர். அவர்கள் பைபிளின் புத்திமதியை ஏற்றுக்கொண்டு அதைப் பொருத்தியிருக்கின்றனர். உண்மைதான், அவர்கள் எல்லாரையும் போலவே வன்முறையுள்ள, ஒழுக்கயீனமுள்ள, பொருளாதாரவகையில் அழுத்தப்பட்ட அதே உலகில்தான் வாழ்கின்றனர். மேலும், அவர்கள் அபூரணராய் இருக்கின்றனர், இருந்தபோதிலும் அவர்கள் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவரின் சித்தத்தைச் செய்ய முயலுவதில் மகிழ்ச்சியடைகின்றனர். பைபிள் சொல்கிறபடி, யெகோவா தேவன் ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தரா’யிருக்கிறார்.—ஏசாயா 48:17.
23 ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு பைபிள் எழுதி முடிக்கப்பட்டபோதிலும், அதன் புத்திமதி உண்மையில் நம் நாளுக்கேற்றதாய் உள்ளது. மேலும், அது எல்லா ஜனங்களுக்காகவும் எழுதப்பட்டது. பைபிள் ஒரு அமெரிக்க புத்தகமோ அல்லது மேற்கத்திய புத்தகமோ அல்ல. யெகோவா ‘மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே மனுஷனைக்கொண்டு தோன்றப்பண்ணினார்,’ எல்லா இடங்களிலுமுள்ள மானிடர்களின் உடல், மனம், உணர்ச்சி சார்ந்த அமைப்பை அவர் நன்கு அறிந்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:26) பைபிள் நியமங்கள் எல்லாருக்கும் பலனளிப்பவையாய் இருக்கின்றன. நீங்கள் அவற்றைப் பொருத்தினால், நீங்களும்கூட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள்.