அதிகாரம் 15
நம் வயதான பெற்றோரைக் கனம்பண்ணுதல்
1. நாம் நம் பெற்றோருக்கு எவ்வாறு கடமைப்பட்டிருக்கிறோம், ஆகையால் நாம் எவ்வாறு அவர்களை எண்ணி அவர்களிடமாக செயல்பட வேண்டும்?
“உ ன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே,” என்று வெகு காலத்துக்கு முன்பு வாழ்ந்த ஞானமான மனிதர் ஒருவர் அறிவுரை கூறினார். (நீதிமொழிகள் 23:22) ‘நான் அதைச் செய்யவே மாட்டேன்!’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். தாய்மாரை அல்லது தகப்பன்மாரை அசட்டை செய்வதற்குப் பதிலாக நம்மில் பெரும்பாலானோர் அவர்கள் பேரில் ஆழ்ந்த அன்பை உடையவர்களாய் இருக்கிறோம். நாம் நம் பெற்றோருக்கு மிகவும் அதிகமாய் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை கண்டுணருகிறோம். முதலாவது, நம் பெற்றோர் நமக்கு உயிரைத் தந்திருக்கின்றனர். யெகோவா உயிருக்கு ஊற்றுமூலராயிருந்தபோதிலும், நம் பெற்றோர் இல்லாமல் நாம் உயிரடைந்திருக்க முடியாது. நாம் நம் பெற்றோருக்கு உயிரைப் போன்று பெருமதிப்புவாய்ந்த எதையும் அளிக்கவே முடியாது. ஆகையால், ஒரு பிள்ளை சிசுப்பருவத்திலிருந்து வயதுவந்த நிலையை அடைவதற்கு உதவுவதில் உட்பட்டிருக்கும் சுயதியாகம், அக்கறையுள்ள பராமரிப்பு, செலவு, அன்பான கவனிப்பு ஆகியவற்றை சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே, கடவுளுடைய வார்த்தை அளிக்கும் புத்திமதி எவ்வளவு நியாயமானது: “உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.”—எபேசியர் 6:2, 3.
உணர்ச்சிப்பூர்வமான தேவைகளைக் கண்டுணர்தல்
2. வளர்ந்த பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு எவ்வாறு ‘பதில் நன்மைகளைச்’ செலுத்தலாம்?
2 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:4) தங்கள் பெற்றோரும் தாத்தாபாட்டிமாரும் பல வருடங்களாக தங்கள்மீது காண்பித்த அன்பு, வேலை, கவனிப்பு ஆகியவற்றுக்கு போற்றுதலைக் காண்பிப்பதன்மூலம் வளர்ந்த பிள்ளைகள் இந்த ‘பதில் நன்மைகளைச்’ செய்கின்றனர். இதைப் பிள்ளைகள் செய்வதற்கு ஒரு வழி—மற்ற எல்லாரையும் போலவே வயதானவர்களுக்கும், அன்பும் திரும்பவும் நம்பிக்கையூட்டப்படுதலும் தேவைப்படுகிறது—பெரும்பாலும் மிகவும் அதிகமாக தேவைப்படுகிறது—என்பதை கண்டுணர்வதன் மூலமே. நம் எல்லாரையும் போலவே அவர்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கை பயனுள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டிய தேவை இருக்கிறது.
3. நாம் எவ்வாறு பெற்றோரையும் தாத்தாபாட்டிமாரையும் கனம்பண்ணலாம்?
3 ஆகையால், நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி செய்வதன்மூலம் நாம் நம் பெற்றோரையும் தாத்தாபாட்டிமாரையும் கனம்பண்ணலாம். (1 கொரிந்தியர் 16:14) நம் பெற்றோர் நம்மோடு வசித்துக்கொண்டில்லையென்றால், நாம் அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது அவர்களுக்கு அதிகத்தைக் குறிக்கக்கூடும். அவர்களை மகிழ்விக்கும் ஒரு கடிதத்தை எழுதுவது, தொலைபேசியில் பேசுவது, அல்லது சென்றுபார்ப்பது போன்றவை அவர்களுடைய மகிழ்ச்சியைப் பெருமளவில் அதிகரிப்பதற்கு உதவிசெய்யும். ஜப்பானில் வசிக்கும் மியோ என்பவர் 82 வயதாயிருக்கையில் இவ்வாறு எழுதினார்: “என் மகள் [அவருடைய கணவர் ஒரு பிரயாண ஊழியர்] என்னிடம் சொல்கிறாள்: ‘அம்மா, தயவுசெய்து எங்களோடு “பிரயாணம்” செய்யுங்கள்.’ ஒவ்வொரு வாரமும் அவர்கள் சந்திக்கப்போகும் சபையின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் எங்களுக்கு அனுப்புவாள். நான் என் நிலப்படத்தை திறந்து, ‘ஆ, இப்போது அவர்கள் இங்கே இருக்கிறார்கள்!’ என்று சொல்வேன். அப்படிப்பட்ட ஒரு பிள்ளையைப் பெற்றிருக்கும் ஆசீர்வாதத்திற்காக நான் எப்போதும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.”
பொருள்சம்பந்தமான தேவைகளுக்கு உதவிசெய்தல்
4. யூதமத பாரம்பரியம் வயதான பெற்றோரிடமாக உணர்ச்சியற்ற தன்மையை எவ்வாறு உற்சாகப்படுத்தியது?
4 பெற்றோருடைய பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வதும் அவர்களை கனம்பண்ணுவதில் உட்பட்டிருக்கக்கூடுமா? ஆம். அது பெரும்பாலும் அவ்வாறு இருக்கிறது. ஒரு நபர் தன் பணத்தை அல்லது சொத்தை ‘கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வெகுமதி’ என்று அறிவித்துவிட்டால், தன் பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்காக அதைப் பயன்படுத்தும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்ற பாரம்பரியத்தை இயேசுவின் நாட்களிலிருந்த யூதமதத் தலைவர்கள் கடைப்பிடித்து வந்தனர். (மத்தேயு 15:3-6, NW) எவ்வளவு உணர்ச்சியற்ற தன்மை! உண்மையில், தங்கள் பெற்றோரைக் கனம்பண்ண வேண்டியதில்லை ஆனால் அவர்களுடைய தேவைகளை சுயநலத்தோடு மறுப்பதன்மூலம் அவர்களை அலட்சியமாக நடத்தலாம் என்று அந்த மதத்தலைவர்கள் ஜனங்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். நாம் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பமாட்டோம்!—உபாகமம் 27:16.
5. சில தேசங்களில் அரசு உதவிசெய்யும் ஏற்பாடுகள் இருந்தபோதிலும், சில சமயங்களில் பெற்றோரைக் கனம்பண்ணுதல் பண உதவி அளிப்பதையும் ஏன் உட்படுத்துகிறது?
5 இன்று அநேக தேசங்களில் அரசு-ஆதரவு தரும் சமூக நலத் திட்டங்கள் முதியோரின் உணவு, உடை, உறைவிடம் போன்ற பொருளாதார தேவைகள் சிலவற்றை அளிக்கின்றன. அதோடுகூட, முதியோரே தங்களுக்கென்று தங்கள் முதிர்வயதில் உபயோகிப்பதற்கென்று பணத்தை சேமித்து வைக்கின்றனர். ஆனால் இந்தப் பணம் செலவழிந்துவிட்டால் அல்லது போதவில்லையென்றால், பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கென்று தங்களால் முடிந்ததைச் செய்வதன்மூலம் பெற்றோரைக் கனம்பண்ணுகின்றனர். உண்மையில், வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளுதல் தேவபக்தியின் வெளிக்காட்டாக இருக்கிறது, அதாவது, குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவா தேவனிடம் ஒருவர் கொண்டுள்ள பக்தியைக் காண்பிக்கிறது.
அன்பும் சுயதியாகமும்
6. தங்கள் பெற்றோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கென சிலர் என்ன தங்கும் ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்?
6 அநேக வயதுவந்த பிள்ளைகள் உடல் வலிமையிழந்த தங்கள் பெற்றோரின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு அன்பையும் சுயதியாகத்தையும் காண்பித்திருக்கின்றனர். சிலர் பெற்றோரை தங்கள் சொந்த வீட்டுக்கு கூட்டிச்செல்கின்றனர் அல்லது அவர்களுக்கு அருகாமையில் இருப்பதற்கென்று மாறிச்செல்கின்றனர். மற்றவர்கள் தங்கள் பெற்றோரோடு சேர்ந்து வாழ்கின்றனர். பெரும்பாலும் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாய் நிரூபித்திருக்கின்றன.
7. வயதான பெற்றோரைக் குறித்து தீர்மானங்களை எடுக்கையில் அவசரப்பட்டு செயல்படுவதைத் தவிர்ப்பது ஏன் நல்லது?
7 ஆனால், சில சமயங்களில் அப்படி மாறிச்செல்வது நல்ல விளைவை ஏற்படுத்துவதில்லை. ஏன்? ஏனென்றால், ஒருவேளை சில சமயங்களில் தீர்மானங்கள் மிகவும் அவசரப்பட்டு எடுக்கப்படுவதால் இருக்கலாம் அல்லது அவை வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டுமே சார்ந்தவையாக இருக்கலாம். “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்,” என்று பைபிள் ஞானமாய் எச்சரிப்பு தருகிறது. (நீதிமொழிகள் 14:15) உதாரணமாக, வயதான உங்கள் தாய் தனிமையாய் வாழ்வதைக் கடினமாகக் காண்கிறார்கள், ஆகையால் அவர்கள் உங்களோடு வந்து வசித்தால் அவர்களுக்கு பயன் ஏற்படும் என்று நீங்கள் நினைப்பதாக வைத்துக்கொள்வோம். விவேகத்தோடு உங்கள் நடைகளின் பேரில் கவனமாயிருப்பதற்கு, நீங்கள் கீழ்க்காண்பவற்றை சிந்தித்துப் பார்க்கலாம்: அவர்களுடைய உண்மையான தேவைகள் யாவை? வேறு ஏதாவது விரும்பத்தக்க தீர்வை அளிக்கும் தனியார் அல்லது அரசு-ஆதரவளிக்க முன்வரும் பொதுநல சேவைகள் இருக்கின்றனவா? அவர்கள் மாறிச்செல்ல விரும்புகிறார்களா? அவ்வாறு அவர்கள் மாறிச்சென்றால், அவர்களுடைய வாழ்க்கை எந்த வழிகளில் பாதிக்கப்படும்? அவர்கள் நண்பர்களை விட்டுப் பிரிந்துவர வேண்டியிருக்குமா? இது அவர்களை எவ்வாறு உணர்ச்சிப்பூர்வமாக பாதிக்கும்? நீங்கள் இந்த விஷயங்களை அவர்களோடு கலந்து பேசியிருக்கிறீர்களா? அப்படி மாறிவருவது உங்களையும் உங்கள் துணையையும் உங்கள் சொந்த பிள்ளைகளையும் எவ்வாறு பாதிக்கும்? உங்கள் தாய்க்கு கவனிப்பு தேவைப்பட்டால், அதை யார் அளிப்பது? அந்தப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? அதில் நேரடியாக உட்பட்டிருக்கும் எல்லா குடும்ப அங்கத்தினர்களோடும் நீங்கள் அந்த விஷயத்தைக் கலந்து பேசியிருக்கிறீர்களா?
8. உங்கள் வயதான பெற்றோரை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதை தீர்மானிக்கையில் நீங்கள் யாரோடு கலந்துபேசலாம்?
8 கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு குடும்பத்திலுள்ள எல்லா அங்கத்தினர்களுக்கும் இருப்பதால், தீர்மானங்களை எடுக்கையில் எல்லாரும் பங்குகொள்வதற்கென குடும்ப கலந்தாலோசிப்பு ஒன்றை ஏற்பாடு செய்வது ஞானமானது. கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்களிடம் பேசுவது அல்லது அதுபோன்ற சூழ்நிலையை எதிர்ப்பட்ட நண்பர்களிடம் பேசுவதும்கூட பலனளிப்பதாய் இருக்கும். “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்” என்று பைபிள் எச்சரிக்கிறது, ஆனால் “ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.”—நீதிமொழிகள் 15:22.
ஒற்றுணர்வுள்ளவர்களாகவும் புரிந்துகொள்கிறவர்களாகவும் இருங்கள்
9, 10. (அ) வயது அதிகரித்துக்கொண்டே சென்றபோதிலும், முதியோருக்கு என்ன கவனம் கொடுக்கப்பட வேண்டும்? (ஆ) வளர்ந்த பிள்ளை தன் பெற்றோர் சார்பாக என்ன படிகள் எடுத்தாலும், அவர்களுக்கு எப்போதும் எதை அளிக்க வேண்டும்?
9 நம் வயதான பெற்றோரைக் கனம்பண்ணுவதற்கு ஒற்றுணர்வும் புரிந்துகொள்ளுதலும் தேவைப்படுகிறது. வருடங்கள் கடந்து செல்லச்செல்ல, வயதானவர்கள் நடப்பதற்கும், சாப்பிடுவதற்கும், ஞாபகத்தில் வைப்பதற்கும் அதிகமதிகமாக கஷ்டப்படுவர். அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டு, அவர்களுக்கு வழிநடத்துதலை அளிக்க முயற்சி செய்யலாம். ஆனால் வயதானவர்களோ, வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்திருக்கும் ஞானமும் அனுபவமும் பெற்றிருக்கும் வயதுவந்தோராயும், தங்கள் சொந்த தீர்மானங்களை தாங்களே செய்து தங்களையே கவனித்துக்கொண்ட வாழ்க்கையை நடத்தியிருக்கும் வயதுவந்தோராயும் இருக்கின்றனர். பெற்றோராகவும் வயதுவந்தோராகவும் அவர்கள் வகிக்கும் ஸ்தானத்தின் பேரில் அவர்களுடைய தனித்துவமும் சுயமரியாதையும் மையங்கொண்டிருக்கலாம். தங்கள் வாழ்க்கையை தங்கள் பிள்ளைகளின் கட்டுப்பாட்டின்கீழ் இசைந்துகொடுத்துவிட வேண்டும் என்று உணரும் பெற்றோர் மனச்சோர்வடையலாம் அல்லது கோபமடையலாம். தங்கள் சுதந்திரத்தைப் பறித்துப்போடுவதற்கான முயற்சிகள் என்று அவற்றை கருதி சில பெற்றோர் கோபாவேசத்தோடு எதிர்க்கின்றனர்.
10 இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வுகள் எதுவும் இல்லை, ஆனால் வயதான பெற்றோர் தங்களையே கவனித்துக்கொள்ளும்படி விடுவதும், கூடுமானவரை தங்கள் சொந்த தீர்மானங்களை எடுக்கும்படி விடுவதும் தயவானதாய் இருக்கும். அவர்களிடம் முதலில் அதைப் பற்றி பேசாமல் அவர்களுக்கு சிறந்தது எது என்பதைப் பற்றி தீர்மானங்கள் எடுப்பது ஞானமானதல்ல. வயதாகிக்கொண்டே செல்வதால் அவர்கள் அதிகத்தை இழந்திருக்கலாம். அவர்கள் தாங்களாகவே செயல்படும்படி விட்டுவிடுங்கள். உங்கள் பெற்றோரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு கட்டுப்படுத்தாமலிருக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்களோடு நீங்கள் வைத்திருக்கும் உறவு மேலானதாய் இருக்கும். அவர்களும் மகிழ்ச்சியாயிருப்பார்கள், நீங்களும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். அவர்களுடைய நன்மைக்காக சில காரியங்களை வற்புறுத்துவது தேவையாயிருந்தாலும்கூட, உங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுதல் என்பது அவர்கள் பெறத் தகுதியாயிருக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் செலுத்துவதைத் தேவைப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தை அறிவுரை கூறுகிறது: ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு.’—லேவியராகமம் 19:32.
சரியான மனநிலையைக் காத்துவருதல்
11-13. வயதுவந்த பிள்ளை தன் பெற்றோரோடு கடந்த காலத்தில் நல்ல உறவை கொண்டிருக்கவில்லை என்றாலும், அவர் எவ்வாறு அவர்களை வயதாகிக்கொண்டு செல்லும் வருடங்களில் கவனித்துக்கொள்ளும் சவாலை தொடர்ந்து சமாளிக்கலாம்?
11 பிள்ளைகள் இளைஞராயிருக்கையில் தங்கள் பெற்றோரோடு வைத்திருந்த உறவு சம்பந்தமாக தங்கள் வயதான பெற்றோரை கனம்பண்ணுவதில் வயதுவந்த பிள்ளைகள் சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்ப்படுகின்றனர். ஒருவேளை உங்கள் தகப்பன் உணர்ச்சியற்றவராகவும் பாசமில்லாதவராகவும், உங்கள் தாய் அதிகாரம் செலுத்துபவராகவும் கொடூரமானவராகவும் இருந்திருக்கலாம். நீங்கள் இப்போதும் ஏமாற்றமடைந்தவராக, கோபமுற்றவராக, அல்லது புண்படுத்தப்பட்டவராக உணரலாம், ஏனென்றால் நீங்கள் விரும்பிய பெற்றோரைப் போல் அவர்கள் நடந்துகொள்ளாமல் இருந்ததன் காரணத்தால் அவ்வாறு இருக்கலாம். நீங்கள் அப்படிப்பட்ட உணர்வுகளை மேற்கொள்ள முடியுமா? *
12 பின்லாந்தில் வளர்ந்துவந்த பாச என்பவர் விவரமாகச் சொல்கிறார்: “என் மாற்றாந்தந்தை நாசி ஜெர்மனியில் எஸ்எஸ் அதிகாரியாக இருந்திருக்கிறார். அவர் எளிதில் கோபமடைந்து விடுவார், பின்பு அவர் ஆபத்தானவராகவும் இருந்தார். அவர் என் கண்களுக்கு முன்பே என் தாயை அநேக தடவை அடித்திருக்கிறார். ஒரு சமயம் அவர் என்மீது கோபமாயிருக்கையில், அவருடைய பெல்ட்டை வேகமாக வீசியெறிந்து அதன் பக்கிளை என் முகத்தில் அடித்தார். அது என்மீது அவ்வளவு கடுமையாய் பட்டதால் நான் என் படுக்கையிலிருந்து தாறுமாறாகப் புரண்டு விழுந்தேன்.”
13 இருப்பினும், அவருடைய ஆளுமையில் மற்ற அம்சங்களும் இருந்தன. பாச கூடுதலாக சொல்கிறார்: “மறுபட்சத்தில், அவர் மிகவும் கடினமாக உழைத்து, குடும்பத்தின் பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் தன்னையே முழுவதுமாக அளித்தார். அவர் என்மீது தந்தைக்குரிய பாசத்தைக் காண்பிக்கவேயில்லை, ஆனால் அவர் உணர்ச்சிப்பூர்வமாய் காயமுற்றிருந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் சிறு பையனாய் இருக்கையில், அவருடைய தாய் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்கள். அவர் சண்டை போடுபவராக வளர்ந்து, இளம் மனிதனாக போரில் ஈடுபட ஆரம்பித்தார். என்னால் அவரை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது, ஆகையால் நான் அவரைக் குறைகூறவில்லை. எனக்கு வயது அதிகரிக்கையில், அவர் இறந்துபோகும் வரை என்னால் முடிந்த அளவு அவருக்கு உதவிசெய்ய வேண்டும் என்று விரும்பினேன். அது சுலபமானதாய் இருக்கவில்லை, ஆனால் என்னால் முடிந்த அளவு செய்தேன். கடைசிவரை ஒரு நல்ல மகனாக இருக்க முயற்சி செய்திருக்கிறேன், அவ்வாறே அவரும் என்னை ஏற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கிறேன்.”
14. வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் சூழ்நிலை உட்பட, எல்லாவற்றுக்கும் என்ன வேதவசனம் பொருந்துகிறது?
14 மற்ற விஷயங்களில் இருப்பது போல், குடும்ப சூழ்நிலைகளிலும் பைபிளின் ஆலோசனை பொருந்துகிறது: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:12, 13, NW.
கவனித்துக்கொள்வோருக்கும்கூட கவனிப்பு தேவை
15. பெற்றோரைக் கவனித்துக்கொள்வது ஏன் சில சமயங்களில் வேதனை தருவதாய் இருக்கிறது?
15 முதுமையால் தளர்ந்துவிட்டிருக்கும் பெற்றோரைக் கவனித்துக்கொள்வது கடினமான வேலை, அநேக கடினமான வேலைகளும், மிகுதியான பொறுப்பும், நீண்ட மணிநேரங்களும் அதில் உட்பட்டிருக்கின்றன. ஆனால் அதில் மிகவும் கடினமான பாகம், பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமானதாகவே இருக்கிறது. உங்கள் பெற்றோர் தங்கள் ஆரோக்கியம், ஞாபகசக்தி, சுதந்திரம் ஆகியவற்றை இழந்துகொண்டிருப்பதைக் காண்பது வேதனை தருவதாய் இருக்கும். பியூர்டோ ரிகோவில் வசித்து வரும் சான்டி கூறுகிறார்: “என் தாய் எங்கள் குடும்பத்தில் முக்கிய நபராக இருந்தார். அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைக் காண்பதும் அவர்களை கவனித்துக்கொள்வதும் அதிக வேதனை தருவதாய் இருந்தது. முதலில் அவர்கள் நொண்டி நடக்க ஆரம்பித்தார்கள்; பின்னர் அவர்களுக்கு கைத்தடி தேவைப்பட்டது, பின்னர் பிடித்துக்கொண்டு நடப்பதற்கு சட்டம் தேவைப்பட்டது, பின்னர் சக்கரநாற்காலி தேவைப்பட்டது. அதற்குப் பிறகு, அவர்களுடைய நிலை இறந்துபோகும் வரை படிப்படியாக மோசமடைந்தது. அவர்களுக்கு எலும்பு புற்றுநோய் பற்றிக்கொண்டது, இரவும் பகலும் எப்போதும் கவனிப்பு தேவைப்பட்டது. நாங்கள் அவர்களைக் குளிப்பாட்டி, அவர்களுக்கு உணவளித்து, வாசித்துக் காண்பிப்போம். விசேஷமாக உணர்ச்சிப்பூர்வமாய் அது மிகவும் கடினமாய் இருந்தது. என் தாய் இறந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தபோது, நான் அவர்களை மிகவும் நேசித்ததால் அழுதேன்.”
16, 17. விஷயங்களை சமநிலையோடு நோக்குவதற்கு என்ன புத்திமதி கவனித்துக்கொள்வோருக்கு உதவலாம்?
16 அதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு ஏற்படுமானால், அதைச் சமாளிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? பைபிள் வாசிப்பின்மூலம் யெகோவா சொல்வதைச் செவிகொடுத்துக்கேட்பது, ஜெபத்தின்மூலம் அவரோடு பேசுவது போன்றவை உங்களுக்கு பெரும் உதவியாய் இருக்கும். (பிலிப்பியர் 4:6, 7) நடைமுறையான விதத்தில், நீங்கள் ஊட்டச்சத்துள்ள உணவை உண்டு, போதுமான உறக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியோடிருக்க முயற்சிசெய்யுங்கள். இதைச் செய்வதன்மூலம், நீங்கள் நேசிக்கும் நபரை கவனித்துக்கொள்வதற்கு உணர்ச்சி சம்பந்தமாகவும் உடல் சம்பந்தமாகவும் சிறந்த நிலையில் இருப்பீர்கள். ஒருவேளை தினந்தோறும் வழக்கமாக செய்யும் வேலைகளிலிருந்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள நீங்கள் ஏற்பாடு செய்யலாம். நீண்ட ஓய்வெடுத்துக்கொள்ள முடியாவிட்டாலும்கூட, ஓய்வெடுப்பதற்காக நேரத்தை ஒதுக்கி வைப்பது ஞானமானது. உடல் நலமின்றி இருக்கும் உங்கள் பெற்றோரோடு தங்குவதற்கு வேறு யாரையாவது ஏற்பாடு செய்துவிட்டு நீங்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்.
17 வயதுவந்த நிலையில் இருக்கும் கவனித்துக்கொள்வோர், தங்களிடமிருந்தே நியாயமற்ற காரியங்களை எதிர்பார்ப்பது வழக்கத்திற்கு மாறான காரியமல்ல. நீங்கள் செய்யமுடியாததைக் குறித்து குற்ற உணர்வு கொள்ளாதீர்கள். சில சூழ்நிலைகளில், நீங்கள் நேசிக்கும் நபரை நர்ஸிங் ஹோமில் கவனித்துக்கொள்ளும்படி ஒப்படைத்துவிட வேண்டியிருக்கலாம். நீங்கள் கவனித்துக்கொள்பவராக இருந்தால், உங்களுக்கென்று நியாயமான எதிர்பார்த்தல்களை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பெற்றோரின் தேவைகளை மட்டுமல்லாமல், உங்கள் பிள்ளைகள், உங்கள் துணைவர், மேலும் உங்களுக்கே தேவையான காரியங்களையும்கூட சமநிலைப்படுத்த வேண்டும்.
இயல்பான அளவுக்கும் மேலான சக்தி
18, 19. ஆதரவளிப்பதாக கூறும் என்ன வாக்குறுதியை யெகோவா அளித்திருக்கிறார், அவர் இந்த வாக்குறுதியை மீறாது நிறைவேற்றுவார் என்பதை என்ன அனுபவம் காண்பிக்கிறது?
18 வயதாகிக்கொண்டிருக்கும் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளும் நபருக்கு பெரிதளவில் உதவக்கூடிய வழிநடத்துதலை யெகோவா அன்பாக அவருடைய வார்த்தையாகிய பைபிளின்மூலம் அளிக்கிறார், ஆனால் அந்த உதவியை மட்டும் அவர் அளிப்பதில்லை. ‘தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் யெகோவா சமீபமாயிருக்கிறார்’ என்று சங்கீதக்காரன் பரிசுத்த ஆவியின் ஏவுதலின்மூலம் எழுதினார். “அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.” யெகோவா உண்மைத்தன்மையோடு நிலைத்திருப்பவர்களை மிகவும் கடினமான சூழ்நிலைகளினூடேயும் இரட்சிப்பார் அல்லது பாதுகாப்பார்.—சங்கீதம் 145:18, 19, NW.
19 பிலிப்பீன்ஸில் வசிக்கும் மர்னா என்பவர், தன் தாய் பாரிசவாயு நோயினால் செயலிழந்தபோது அவர்களை கவனித்துக்கொள்கையில் இதைக் கற்றுக்கொண்டார். “நீங்கள் நேசிக்கும் ஒருவர் கஷ்டப்படுவதைப் பார்ப்பதைக் காட்டிலும் அதிக மனச்சோர்வளிக்கும் விஷயம் வேறு எதுவுமில்லை, எது வருத்தமுண்டாக்குகிறது என்பதைச் சொல்வதற்கு முடியாத நிலை,” என்று மர்னா எழுதுகிறார். “அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்ந்துகொண்டே செல்வதைக் காண்பது போல் இருந்தது, நான் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தேன். நான் அநேக சமயங்களில் முழங்கால்படியிட்டு, எவ்வளவு சோர்வுற்று களைப்பாயிருக்கிறேன் என்பதைப் பற்றி யெகோவாவிடம் பேசுவேன். தாவீது தன் கண்ணீரை துருத்தியில் வைத்து அவரை நினைவில் வைக்கும்படி யெகோவாவை நோக்கி கெஞ்சிக்கேட்டுக் கொண்டதைப் போல் நான் அவரை நோக்கி அழுதேன். [சங்கீதம் 56:8] யெகோவா வாக்களித்தபடியே, எனக்குத் தேவைப்பட்ட சக்தியை அளித்தார். ‘யெகோவாவோ எனக்கு ஆதரவாயிருந்தார்.’”—சங்கீதம் 18:18, NW.
20. தாங்கள் கவனித்துக்கொள்ளும் நபர் இறந்துபோனாலும்கூட, கவனித்துக்கொள்வோர் நம்பிக்கையுள்ள மனநிலையைப் பெற்றிருப்பதற்கு என்ன பைபிள் வாக்குறுதிகள் உதவிசெய்கின்றன?
20 வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வது, “சந்தோஷமான முடிவில்லாத ஒரு கதை” என்று சொல்லப்படுகிறது. மிகச் சிறந்த முறையில் நன்றாக கவனித்துக்கொண்டாலும், மர்னாவின் தாயைப் போன்று வயதானவர்கள் இறந்துவிடுவர். ஆனால் யெகோவாவின் பேரில் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ, மரணம்தான் அக்கதையின் சந்தோஷமற்ற முடிவு அல்ல என்பதை அறிந்திருக்கின்றனர். அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . தேவனிடத்தில் . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) தங்கள் வயதான பெற்றோரை மரணத்தில் இழந்திருப்போர் உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் ஆறுதலடைகின்றனர், கடவுள் உருவாக்கப்போகும் மகிழ்ச்சி நிரம்பிய புதிய உலகில் ‘இனி மரணமே இல்லாமல்’ இருக்கும் நிலமையில் வாழ்வர் என்ற வாக்குறுதியையும் அதோடுகூட பெற்றிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 21:4.
21. வயதான பெற்றோரைக் கனம்பண்ணுவதிலிருந்து என்ன நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன?
21 தங்கள் பெற்றோர் வயதுசென்றவர்களானாலும்கூட கடவுளுடைய ஊழியர்கள் அவர்களிடமாக ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கின்றனர். (நீதிமொழிகள் 23:22-24) அவர்களை கனம்பண்ணுகின்றனர். அவ்வாறு செய்கையில், அவர்கள் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கும் நீதிமொழி சொல்வதை அனுபவிக்கின்றனர்: “உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்: உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.” (நீதிமொழிகள் 23:25) எல்லாவற்றுக்கும் மேலாக, தங்கள் வயதான பெற்றோரைக் கனம்பண்ணுவோர் யெகோவாவையும்கூட பிரியப்படுத்தி கனம்பண்ணுகிறார்கள்.
^ குற்றச்செயல் இழைத்தவர்களாக கருதப்படும் அளவுக்கு, தங்கள் அதிகாரத்தையும் நம்பிக்கையையும் அளவுக்கு மீறி துர்ப்பிரயோகம் செய்ததால் குற்ற உணர்வு கொண்டிருந்த பெற்றோரின் சூழ்நிலைகளை நாம் இங்கே கலந்தாலோசித்துக் கொண்டில்லை.