அதைவிட சிறந்ததைக் கண்டுபிடித்தார்கள்
லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்களா அல்லது எதையாவது இழந்ததைப் போல உணருகிறார்களா? அவர்களுடைய பிள்ளைகள் இதை நினைத்து வருத்தப்படுகிறார்களா? உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இயேசு கிறிஸ்துவை நினைத்துப் பார்ப்பது பற்றி: “யெகோவாவின் சாட்சியா ஆகறதுக்கு முன்னாடி நான் அவ்வளவா சர்ச்சுக்கு போக மாட்டேன். அப்படியே போனாலும், கிறிஸ்மஸ் இல்லனா ஈஸ்டருக்குத்தான் போவேன். அப்பக்கூட நான் இயேசு கிறிஸ்துவ பத்தி யோசிப்பேன்னு சொல்ல முடியாது. இப்போ நான் கிறிஸ்மஸ் கொண்டாடுறது இல்லதான். ஆனா, வாரத்துல ரெண்டு தடவ கிறிஸ்தவ கூட்டங்கள்ல கலந்துக்குறேன். இயேசுவ பத்தி பைபிள் சொல்ற விஷயங்கள மத்தவங்களுக்கும் சொல்லித்தரேன்!”—ஈவ், ஆஸ்திரேலியா.
கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றி: “திடீர்னு யாராவது எனக்கு ஏதாவது கிஃப்ட் கொடுத்தாங்கனா நான் ரொம்ப குஷியாயிடுவேன். ஏன்னா, எனக்கு சர்ப்ரைஸ்னா ரொம்ப பிடிக்கும். நானும் மத்தவங்களுக்கு கிரீட்டிங் கார்டு செஞ்சு கொடுப்பேன் இல்லனா படம் வரைஞ்சு கொடுப்பேன். அப்போ, அவங்களும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க, எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”—ரூபன், வட அயர்லாந்து.
தேவையில் இருப்பவர்களுக்கு உதவுவதைப் பற்றி: “உடம்பு சரியில்லாதவங்களுக்கு ஏதாவது சமைச்சு கொடுக்குறதுனா எங்களுக்கு ரொம்ப இஷ்டம். சிலசமயம் அவங்கள சந்தோஷப்படுத்துறதுக்காக ஒரு பூக்கொத்து, கேக், இல்லனா ஒரு சின்ன கிஃப்ட் எடுத்துட்டு போவோம். இதெல்லாம் செய்ய எங்களுக்கு ரொம்ப பிடிக்கும், ஏன்னா வருஷத்துல ஒரு தடவைனு இல்லாம எப்ப வேணா அவங்கள போய் பார்க்கலாம்.”—எமிலி, ஆஸ்திரேலியா.
சொந்தபந்தங்களோடு சேர்ந்து சந்தோஷமாக இருப்பதைப் பற்றி: “நாங்க குடும்பமா ஒண்ணுசேர்றப்போ, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டினு எல்லார்கூடயும் எங்க பிள்ளைங்களால ஜாலியா இருக்க முடியுது. அதோட, குறிப்பிட்ட பண்டிகை நாள்னு இல்லாம, தோணுறப்ப எல்லாம் அவங்கள போய் பார்க்குறதுனால அவங்கமேல நாங்க எவ்ளோ பாசம் வெச்சிருக்கோம்னு அவங்களால புரிஞ்சுக்க முடியுது.”—வென்டி, கேமன் தீவுகள்.
சமாதானத்தைப் பற்றி: “கிறிஸ்மஸ் சமயத்துல எல்லாரும் ஏதோவொரு வேலைய செஞ்சுகிட்டு பரபரப்பாவே இருக்குறதால சமாதானத்த பத்தி யாரும் யோசிக்கிறது இல்ல. ஆனா, எதிர்காலத்துல நாம சமாதானமா வாழப்போறதா பைபிள் சொல்றத நான் தெரிஞ்சுகிட்டேன். அதனால ரொம்ப நிம்மதியா இருக்கேன். என்னோட பிள்ளைங்களும் எதிர்காலத்துல சமாதானமா, சந்தோஷமா இருக்கப்போறாங்க.”—சாண்டிரா, ஸ்பெயின்.