Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேள்வி 7

செக்ஸ் வைத்துக்கொள்ள தொந்தரவு செய்தால் என்ன செய்யலாம்?

செக்ஸ் வைத்துக்கொள்ள தொந்தரவு செய்தால் என்ன செய்யலாம்?

ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

செக்ஸ் பற்றி நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் உங்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கலாம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

இதைக் கற்பனை செய்து பாருங்கள்: ஹீத்தரும் மைக்கும் இரண்டு மாதங்களாகத்தான் காதலிக்கிறார்கள். ஆனால், மைக்கை ரொம்ப காலமாகத் தெரிந்ததுபோல் ஹீத்தர் உணர்கிறாள். அவர்கள் எப்போதும் மெசேஜ் அனுப்பிக்கொள்வார்கள், ஃபோனில் மணிக்கணக்காகப் பேசுவார்கள். ஒருவர் சொல்ல ஆரம்பிப்பதை இன்னொருவர் சொல்லிமுடித்து விடுவார்கள்! ஆனால், இப்படிப் பேசிக்கொண்டிருப்பதைவிட இன்னும் ஒரு படி மேலே போக வேண்டுமென்று மைக் விரும்புகிறான்.

கடந்த இரண்டு மாதங்களாக, கைகோர்த்துக்கொண்டதையும், முத்தம் கொடுத்துக்கொண்டதையும் தவிர மைக்கும் ஹீத்தரும் வேறு எதையும் செய்யவில்லை! இதற்கு மேல் எதையும் செய்ய ஹீத்தர் விரும்பவில்லை. அதேசமயத்தில், மைக்கும் வேண்டுமென்று ஆசைப்படுகிறாள். அவளை இவ்வளவு அழகானவளாக, விசேஷமானவளாக யாரும் நினைக்க வைத்ததில்லை. ‘அதுமட்டுமில்ல, நானும் மைக்கும் காதலிக்கிறோம்...’ என்று அவள் மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.

உங்களுக்கு டேட்டிங் செய்யும் வயது இருந்தால், நீங்கள் ஹீத்தருடைய இடத்தில் இருந்தால், என்ன செய்வீர்கள்?

நன்றாக யோசியுங்கள்!

செக்ஸ் என்பது கல்யாணம் ஆனவர்களுக்கு மட்டுமே கடவுள் கொடுத்த பரிசு. கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துகொண்டால், அந்தப் பரிசை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். யாரோ ஒருவர் உங்களுக்குக் கொடுத்த அழகான உடையை துடைப்பதற்குப் பயன்படுத்துவதைப் போல அது இருக்கிறது

புவி ஈர்ப்பு சக்தி போன்ற இயற்கை சட்டங்களை நீங்கள் மீறினால் அதனுடைய விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒழுக்க சட்டத்தைப் பொறுத்ததிலும் இதுதான் உண்மை. உதாரணத்துக்கு, “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்று சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற ஒழுக்க சட்டங்களை நீங்கள் மீறினால் அதனுடைய விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.—1 தெசலோனிக்கேயர் 4:3.

இந்த ஒழுக்க சட்டத்துக்குக் கீழ்ப்படியவில்லை என்றால் என்ன ஆகும்? “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18) இது உண்மையென்று எப்படிச் சொல்லலாம்?

கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்ளும் நிறைய இளைஞர்கள், பொதுவாகக் கீழே சொல்லப்பட்டிருக்கும் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான விளைவுகளை அனுபவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  • மன வேதனை. கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொண்ட நிறைய இளைஞர்கள், அதை நினைத்து பின்பு வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

  • அவநம்பிக்கை. செக்ஸ் வைத்துக்கொண்ட பிறகு ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படி யோசிக்கிறார்கள்: ‘இவன்/இவள் வேற யாரோட செக்ஸ் வைச்சிருப்பான்/வைச்சிருப்பாள்?’

  • ஏமாற்றம். பொதுவாக, பெண்கள் நிறைய பேர் தங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் ஆண்களைத்தான் விரும்புவார்கள், தங்களிடம் தவறாக நடந்துகொள்ளக் கூடாது என்று எதிர்பார்ப்பார்கள். அதேபோல் ஆண்கள் நிறைய பேர், கெட்ட ஆசைகளுக்கு இணங்கிவிடும் பெண்களை விரும்புவதில்லை.

  • முக்கியமான விஷயம்: நீங்கள் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்வதால், ரொம்ப மதிப்புள்ள ஒன்றை நாசப்படுத்தி, உங்களையே இழிவுபடுத்திக்கொள்கிறீர்கள். (ரோமர் 1:24) உங்களுடைய உடல் ரொம்ப ரொம்ப மதிப்புள்ளது, அதை இழிவுபடுத்தக் கூடாது!

“பாலியல் முறைகேட்டிற்கு” விலகியிருப்பதற்கான உறுதி உங்களிடம் இருக்கிறது என்பதைக் காட்டுங்கள். (1 தெசலோனிக்கேயர் 4:3) உங்களுக்குக் கல்யாணம் ஆகும்போது, நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். அப்போது அதை முழுமையாக அனுபவிக்க முடியும். அதோடு, கல்யாணத்துக்கு முன்பே அப்படிச் செய்வதால் வரும் வேதனை, கஷ்டம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றையும் தவிர்க்க முடியும்.நீதிமொழிகள் 7:22, 23; 1 கொரிந்தியர் 7:3.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • உங்களை உண்மையாக நேசிக்கிறவர், உங்களுடைய உடலுக்கும் உணர்ச்சிகளுக்கும் விரோதமாக நடந்துகொள்வாரா?

  • உங்கள்மீது உண்மையான அக்கறை இருக்கிறவர், கடவுளோடு இருக்கிற பந்தத்தைக் கெடுத்துக்கொள்கிற விதத்தில் நடக்க உங்களைத் தூண்டுவாரா? —எபிரெயர் 13:4.