Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள்மேல் அன்பு காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?

கடவுள்மேல் அன்பு காட்டுவது ஏன் கஷ்டமாக இருக்கிறது?

அட்டைப் படம் | கடவுளை அன்பில்லாதவர் போல காட்டும் பொய்கள்

“ ‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை.”இயேசு கிறிஸ்து, கி.பி. 33 *

கடவுளை நேசிப்பது என்றாலே சிலருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், கடவுளை ‘புரியாத புதிர்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் நம்மைவிட்டு ரொம்ப தூரமாக இருக்கிறார் என்றும் ரொம்ப கொடூரமானவர் என்றும் நினைக்கிறார்கள். இதைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள் என்று இப்போது பார்க்கலாம்:

  • “நான் உதவிக்காக கடவுள்கிட்ட வேண்டுனேன். அதே சமயத்துல அவர்கிட்ட என்னால நெருங்கிப்போக முடியாதுனு நினைச்சேன். ஏன்னா அவரு எங்கேயோ இருக்குறாரு நான் எங்கேயோ இருக்குறேனு தோணுச்சு. என்னோட உணர்ச்சிகள எல்லாம் அவரால புரிஞ்சுக்கவே முடியாதுனு நினைச்சேன்.”​—மார்கோ, இத்தாலி.

  • “எனக்கு கடவுள்னா ரொம்ப பிடிக்கும். அவருக்காக நிறைய செய்யணும்னு ஆசப்பட்டேன். ஆனா, அவரு என்னவிட்டு ரொம்ப தூரமா இருக்குற மாதிரி தோணுச்சு. அவரு ரொம்ப கடுமையா தண்டிக்குற ஒருதர்னுதான் நினைச்சேன். ஆனா, அவருக்கும் இளகிய மனசு இருக்கும்னு என்னால நம்பவே முடியல.”​—ரோஸா, குவாதமாலா.

  • “நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ நான் என்ன தப்பு பண்றேன், அதுக்கு என்ன தண்டனை கொடுக்குறதுனு கடவுள் பாத்துட்டே இருக்குறாருனு நினைச்சேன்; கடவுள ரொம்ப தூரமானவரா பாக்க ஆரம்பிச்சேன். கடவுள் ஒரு உயர்ந்த அதிகாரி மாதிரி தனக்கு கீழ இருக்குற மக்களோட தேவைகள கவனிச்சிக்குறாரு. ஆனா, அவங்கமேல தனிப்பட்ட அக்கறை இல்லனு நினைச்சேன்.”​—ரேமன்ட், கனடா.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கடவுள் அன்பில்லாதவரா? பல நூற்றாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுடைய மனதில் இந்தக் கேள்வி இருந்துகொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால், கிட்டதட்ட கி.பி. 500-லிருந்து 1500-வது ஆண்டு வரைக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிறைய பேர் சர்வவல்லமையுள்ள கடவுளிடம் வேண்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால், கடவுளை நினைத்து மக்கள் ரொம்ப பயந்தார்கள். “தப்பு செய்ற ஒரு சாதாரண மனுஷனால எப்படி அவ்ளோ பிரமாண்டமான உயர்ந்த இடத்துல இருக்குற கடவுள்கிட்ட பிராத்தனை செய்ய முடியும்” என்று சரித்திராசிரியர் வில் டூரன்ட் கேட்கிறார்.

மக்கள் ஏன் கடவுளை அவ்வளவு “தூரமானவராக” நினைக்கிறார்கள்? கடவுளைப் பற்றி பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது? கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்போது உங்களால் அவர்மேல் அன்பு காட்ட முடியுமா?