Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவை கடைசி நாட்கள்!

இவை கடைசி நாட்கள்!

அதிகாரம் 11

இவை கடைசி நாட்கள்!

நம்முடைய கொந்தளிப்பு நிறைந்த உலகம் எவ்வாறு இந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறது? நாம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்? இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் எப்போதாவது கேட்டதுண்டா? அநேகர் உலக நிலைமையைப் பார்க்கும்போது ஓரளவு தடுமாற்றம் அடைகின்றனர். போர், நோய் மற்றும் குற்றச்செயல் போன்ற மெய்ம்மைகள், எதிர்காலம் எதைக் கொண்டுவரும் என்பதாக மக்களை யோசிக்கும்படிச் செய்திருக்கின்றன. அரசாங்க தலைவர்கள் நம்பிக்கை அளிப்பதில்லை. என்றபோதிலும், இந்த இக்கட்டான நாட்களைப்பற்றி நம்பத்தகுந்த விளக்கம் கடவுளிடமிருந்து அவருடைய வார்த்தையில் கிடைக்கிறது. காலத்தின் ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் காண பைபிள் நம்பத்தக்க வகையில் நமக்கு உதவிசெய்கிறது. நாம் தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் “கடைசிநாட்களில்” இருக்கிறோம் என்பதை அது நமக்கு காண்பிக்கிறது.—2 தீமோத்தேயு 3:1.

2உதாரணமாக, இயேசு தம்முடைய சீஷர்கள் எழுப்பின சில கேள்விகளுக்கு கொடுத்த பதிலைச் சிந்தித்துப்பாருங்கள். இயேசு மரிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் அவரிடமாக கேட்டனர்: “உம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?” a (மத்தேயு 24:3, NW) இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவபக்தியற்ற இந்த ஒழுங்குமுறை அதனுடைய கடைசி நாட்களில் பிரவேசித்துவிட்டது என்பதைத் தெளிவாக காண்பிக்கும் திட்டவட்டமான உலக சம்பவங்களையும் நிலைமைகளையும் இயேசு சொன்னார்.

3முந்தைய அதிகாரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, கடவுளுடைய ராஜ்யம் ஏற்கெனவே ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது என்ற முடிவுக்கு பைபிள் கால கணக்கு வழிநடத்துகிறது. ஆனால் இது எவ்வாறு இருக்கமுடியும்? நிலைமைகள் மோசமாகியிருக்கின்றன, மேம்பட்டவையாகவில்லையே. உண்மையில், கடவுளுடைய ராஜ்யம் ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இது பலமான அறிகுறியாகும். ஏன் அப்படி? ஆம், சங்கீதம் 110:2, கொஞ்ச காலத்துக்கு இயேசு ‘தம்முடைய சத்துருக்களின் மத்தியில்’ ஆட்சிசெய்வார் என்பதாக நமக்குச் சொல்லுகிறது. ஆம், சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பூமிக்கு அருகாமையில் கீழே தள்ளிவிடுவதே பரலோக அரசராக அவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. (வெளிப்படுத்துதல் 12:9) அதன் பாதிப்பு என்ன? அதைத்தான் வெளிப்படுத்துதல் 12:12 முன்னறிவித்தது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” நாம் இப்பொழுது அந்தக் “கொஞ்சக்கால”த்தில் வாழ்ந்துவருகிறோம்.

4எனவே, இயேசுவிடமாக அவருடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாக இருக்கும் என்பதாக கேட்கப்பட்டபோது, அவருடைய பதில் ஆழ்ந்து சிந்திக்க வைப்பதாய் இருந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. அடையாளத்தின் பல்வேறு அம்சங்கள் பக்கம் 102-ல் உள்ள பெட்டியில் காணப்படுகின்றன. நீங்கள் பார்க்கும் விதமாகவே, கிறிஸ்தவ அப்போஸ்தலராகிய பவுல், பேதுரு மற்றும் யோவான் கடைசி நாட்களைப் பற்றி கூடுதலான விவரங்களை நமக்கு அளிக்கின்றனர். அந்த அடையாளத்தின் மற்றும் கடைசி நாட்களின் பெரும்பாலான அம்சங்கள் துயர் தரும் நிலைமைகளை உட்படுத்துவது உண்மையே. என்றபோதிலும், இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அதன் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறது என்பதை இந்தத் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் நம்மை நம்பும்படி செய்யவேண்டும். கடைசி நாட்களின் முக்கியமான சில அம்சங்களை நாம் கூர்ந்து ஆராய்வோமாக.

கடைசி நாட்களின் அம்சங்கள்

5 “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:4) எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெம்மிங்வே, முதல் உலகப் போரை “பூமியில் எக்காலத்திலும் சம்பவித்திருப்பவற்றுள் அதிக பிரமாண்டமான, கொடுங்கொலைக்குரிய, தவறாக நடத்தப்பட்ட படுகொலை,” என்பதாக அழைத்தார். கடுஞ்சோதனையில் உலகம்—1914-1919 என்ற ஆங்கில புத்தகத்தின்படி, இது “போருக்குப் புதிய செயல் எல்லையாக, மனிதவர்க்க அனுபவத்தில் முதல் முழுவலிமை ஈடுபாட்டு போராக இருந்தது. அது நீடித்த காலம், அதன் தீவிரம் மற்றும் அளவில் இதற்கு முன்னர் அறியப்பட்டிருந்த அல்லது பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட எதையும் விஞ்சிவிட்டது.” அடுத்து இரண்டாம் உலகப் போர் வந்தது, இது முதல் உலகப் போரைக் காட்டிலும் அதிகமான அழிவை ஏற்படுத்தியது. “இருபதாம் நூற்றாண்டை இயந்திர துப்பாக்கியும், இயங்கும் பீரங்கிப் படை வண்டியும், B-52 வெடிகுண்டு விமானமும், அணுகுண்டும் கடைசியாக ஏவுகணையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. வேறு எந்தச் சகாப்தத்திலிருந்ததைக் காட்டிலும் அதிக இரத்தவெறிகொண்ட மற்றும் அழிவுண்டாக்கும் போர்களினால் இது வேறுபடுத்திக்காட்டப்படுகிறது,” என்பதாக சரித்திர பேராசிரியர் ஹ்யூ தாமஸ் சொல்கிறார். உண்மைதான், பனிப்போர் முடிந்தப் பின்னர் போர்கருவிகளைக் களைவதைக் குறித்து அதிகம் பேசப்பட்டது. இருந்தாலும், திட்டமிடப்பட்ட குறைப்புகளுக்குப் பின், சுமார் 10,000 முதல் 20,000 வரையிலான அணுகுண்டு தாங்கிய ஏவுகணைகள் இன்னும் மீந்திருக்கும் என்று ஒரு அறிக்கை மதிப்பிடுகிறது—இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடி சக்தியைக்காட்டிலும் இது 900 மடங்குக்கும் அதிகம்.

6 ‘பஞ்சங்கள் இருக்கும்.’ (மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:5, 6, 8) 1914 முதற்கொண்டு குறைந்தபட்சம் 20 பெரிய பஞ்சங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பாதிக்கப்பட்ட இடங்களுள் இந்தியா, எதியோபியா, கம்போடியா, கிரீஸ், சீனா, சூடான், சோமாலியா, நைஜீரியா, பங்ளாதேஷ், புருண்டி, ரஷ்யா, ருவாண்டா ஆகியவை அடங்கும். ஆனால் பஞ்சம் எப்பொழுதுமே உணவு பற்றாக்குறையினால் ஏற்படுவது இல்லை. “சமீப பத்தாண்டுகளில் உலகின் உணவு சப்ளை, அதன் மக்கள்தொகையைவிட வேகமாக வளர்ந்திருக்கிறது,” என்பதாக வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் பொருளியலர்களின் ஒரு தொகுதி ஆராய்ந்து முடிவுசெய்தது. “ஆனால் குறைந்தபட்சம் 80 கோடி மக்கள் கடும் வறுமையான நிலையில் இருப்பதால் . . . தீராத ஊட்டக்குறைவிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு அபரிமிதமாய் உள்ள உணவில் போதியதை விலைகொடுத்து வாங்க இயலாதவர்களாய் இருக்கின்றனர்.” மற்ற சமயங்களில் அரசியல் முறைகேடு உட்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடிமக்கள் பட்டினியாயிருக்கையில், அவர்களுடைய நாடுகளோ ஏராளமான அளவுகளில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்ததாக இரண்டு உதாரணங்களை டோரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்டெல்கேலல் எல்மெக்கி குறிப்பிடுகிறார். அரசாங்கங்கள் தங்களுடைய குடிமக்களுக்கு உணவளிப்பதைவிட தங்கள் போர்களுக்கு செலவழிக்க அந்நிய செலாவணியை அதிகரிப்பதிலேயே அதிக அக்கறையாய் இருந்ததாக தோன்றின. டாக்டர் எல்மெக்கியின் முடிவு? பஞ்சம் என்பது அநேகமாக “விநியோகம் மற்றும் அரசாங்க கொள்கையின்மீது சார்ந்த ஒரு விஷயமாக” இருக்கிறது.

7 “கொள்ளைநோய்கள்.” (லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8) 1918-19-ன் ஸ்பானிஷ் காய்ச்சல் குறைந்தபட்சம் 2.1 கோடி உயிர்களைப் பறித்துக்கொண்டுவிட்டது. “வரலாற்றிலேயே இத்தனை வேகமாக இவ்வளவு அநேக உயிர்களை அழித்துவிட்ட இதைப்போன்ற ஒரு கொலையாளியால் உலகம் முன்னொருபோதும் நாசமாக்கப்பட்டது கிடையாது,” என்பதாக பெரிய கொள்ளைநோய் என்ற ஆங்கில புத்தகத்தில் ஏ. ஏ. ஹோலிங் எழுதுகிறார். இன்று, கொள்ளைநோய்கள் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் இருந்துவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், புற்றுநோய் 50 லட்சம் பேரைக் கொன்றுவிடுகிறது, வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட நோய்கள் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசுக்கள் மற்றும் பிள்ளைகளின் உயிர்களை பறித்துவிடுகின்றன, காசநோய் 30 லட்சம் ஆட்களின் மரணத்தை உண்டுபண்ணுகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட தொற்றுநோய்கள், முக்கியமாக கபவாதம், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கும் உட்பட்ட 35 லட்சம் சிறுபிள்ளைகளை கொன்றுவிடுகின்றன. பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையான 250 கோடி பேர்—உலகின் மக்கள்தொகையில் பாதிபேர்—தண்ணீர் பற்றாக்குறை அல்லது மாசுபட்ட தண்ணீர் மற்றும் போதிய கழிவுநீக்க ஏற்பாடுகள் இல்லாதது ஆகிய காரணங்களால் உண்டாகும் நோய்களில் அவதியுறுகின்றனர். மனிதனின் குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனைகளின் மத்தியிலும் கொள்ளைநோய்களை அவனால் ஒழிக்க இயலாதிருப்பதற்கு கூடுதலான ஒரு நினைப்பூட்டுதலாக எய்ட்ஸ் அச்சுறுத்தும் எழுச்சி இருக்கிறது.

8 ‘மனுஷர்கள் பணப்பிரியராய் இருப்பார்கள்.’ (2 தீமோத்தேயு 3:2) உலகமுழுவதிலுமுள்ள தேசங்களில் மக்கள் அதிகமான செல்வத்துக்காக தீராத ஒரு பசியைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அநேகமாக “வெற்றி,” என்பது ஒருவரின் சம்பளப் பணத்தின் அளவினாலும், “சாதனை” என்பது ஒருவரின் உடைமைகளாலும் அளவிடப்படுகிறது. “அமெரிக்க சமுதாயத்தில் பொருளாசை தொடர்ந்து உந்துவிக்கும் ஒரு சக்தியாகவும் . . . பொருளாதார வளர்ச்சியடைந்த மற்ற முக்கிய இடங்களிலும் அதிகமதிகமாக முக்கியத்துவமடையும் ஒரு சக்தியாகவும் இருக்கும்,” என்பதாக விளம்பர ஏஜென்சி ஒன்றின் துணைத் தலைவர் அறிவித்தார். நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் இடத்திலும் இது சம்பவிக்கிறதா?

9 “தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்.” (2 தீமோத்தேயு 3:2) இந்நாளில் பெற்றோரும், ஆசிரியர்களும் மற்றவர்களும் அநேக பிள்ளைகள் அவமரியாதையுள்ளவர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருப்பதை நேரில் பார்த்திருக்கும் அத்தாட்சியைக் கொண்டிருக்கின்றனர். இந்த இளைஞர்களில் சிலர் தங்களுடைய பெற்றோரின் தவறான நடத்தைக்குப் பிரதிபலிக்கவோ அதைப் பார்த்து பின்பற்றவோ செய்கின்றனர். அதிகமதிகமான எண்ணிக்கையில் பிள்ளைகள் பள்ளி, சட்டம், மதம் மற்றும் தங்கள் பெற்றோர் ஆகியவற்றில் நம்பிக்கை இழந்து அவற்றுக்கு எதிராக கலகம் செய்கின்றனர். “எதற்குமே அவர்கள் மரியாதை காட்டாமலிருப்பது ஒரு பொதுவான போக்காக தெரிகிறது,” என்பதாக அனுபவமுள்ள ஒரு பள்ளி ஆசிரியர் சொல்கிறார். ஆனால் கடவுள் பயமுள்ள அநேக பிள்ளைகள் நடத்தையில் முன்மாதிரியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கிறது.

10 “கொடுமையுள்ளவர்களாயும்.” (2 தீமோத்தேயு 3:3) “கொடுமை” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை ‘பயிற்றுவிக்கப்படாத, மூர்க்கமான, மனித அநுதாபமும் உணர்ச்சியுமற்ற’ என்பதாக பொருள்படுகிறது. இன்று வன்முறையில் ஈடுபடுகிற அநேகரை இது எவ்வளவு நன்றாக விவரிக்கிறது! “வாழ்க்கை அத்தனை அதிர்ச்சியூட்டுவதாய், இரத்தக் கறைபடிந்த பயங்கரத்தால் நிறைந்திருப்பதால், அன்றாட செய்திகளை வாசிப்பதற்கு ஒருவர் தன் உணர்ச்சிகளை இரும்பைப்போல் கடினமாக்கிக்கொள்ள வேண்டும்,” என்பதாக ஒரு தலையங்கம் சொன்னது. வீடுகளைக் காக்கும் ஒரு காவல்துறை முகவர், அநேக இளைஞர்கள் தங்கள் செயல்களின் பின்விளைவுகளைக் குறித்து சிந்திக்க மறுப்பவர்களாக தோன்றுகின்றனர் என்று குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “‘நாளைய தினத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, எனக்கு வேண்டியதை இன்றே நான் எடுத்துக்கொள்வேன்,’ என்ற ஒரு மனநிலை இருந்துவருகிறது.”

11 “சுபாவ அன்பில்லாதவர்களாயும்.” (2 தீமோத்தேயு 3:3) இந்தச் சொற்றொடர் “இருதயமில்லாத, மனிதத் தன்மையற்ற” என்ற பொருளுடைய, “சுபாவமான, குடும்ப பாசமில்லாதிருப்பதை” குறிப்பிடும் ஒரு கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (புதிய ஏற்பாட்டு இறையியல் பற்றிய புதிய சர்வதேச அகராதி) ஆம், பாசம், அது தழைத்தோங்க வேண்டிய இடமாகிய வீட்டிலேயே அநேகமாக இல்லாமல் போய்விடுகிறது. விவாகத் துணைவர்கள், பிள்ளைகள், வயதான பெற்றோருங்கூட தவறாக நடத்தப்படுவது பற்றிய அறிக்கைகள் அமைதியைக் குலைக்கும் வண்ணம் மிகச் சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன. ஆய்வுக்குழு ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “மனிதர்களின் வன்முறை—அது அறைதல், தள்ளுதல், கத்தியால் குத்துதல் அல்லது துப்பாக்கியால் சுடுதல், அது எதுவாக இருந்தாலும்—நம்முடைய சமுதாயத்தில் வேறு எங்கேயும் நடப்பதைவிட குடும்ப வட்டாரத்துக்குள்ளேதான் மிக அதிகமாக நடைபெறுகிறது.”

12 “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.” (2 தீமோத்தேயு 3:5) வாழ்க்கையை மேம்பட்டவிதமாக மாற்றும் வல்லமை பைபிளுக்கு உண்டு. (எபேசியர் 4:22-24) என்றபோதிலும், அநேகர் இன்று தங்கள் மதத்தை ஒரு திரையாக பயன்படுத்தி அதற்குப் பின்னால் இருந்துகொண்டு கடவுளுக்கு வெறுப்புண்டாக்கும் அநீதியான காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றனர். பொய் சொல்லுதல், திருடுதல் மற்றும் பாலுறவு சம்பந்தமான தவறான நடத்தை ஆகியவற்றை மத தலைவர்கள் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அநேக மதங்கள் அன்பைப் பிரசங்கிக்கின்றன ஆனால் போரை ஆதரிக்கின்றன. “உன்னதமான படைப்பாளரின் பெயரில், மனிதர்கள் மிகவும் வெறுக்கத்தக்க அட்டூழியங்களைத் தங்களுடைய உடன் மனிதர்களுக்கு விரோதமாக செய்திருக்கின்றனர்,” என்பதாக இந்தியா டுடே பத்திரிகையின் ஒரு தலையங்கம் குறிப்பிடுகிறது. உண்மையில், சமீப காலங்களின் அதிக இரத்தவெறிகொண்ட போர்கள்—முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள்—கிறிஸ்தவமண்டலத்தின் நடுவில்தானே துவக்கத்தைக் கொண்டிருந்தன.

13 ‘பூமி கெடுக்கப்படுதல்.’ (வெளிப்படுத்துதல் 11:18) அக்கறையுள்ள அறிவியல் அறிஞர் குழு வெளியிட்ட ஒரு எச்சரிக்கையை உலகம் முழுவதிலுமுள்ள, நோபல் பரிசு பெற்ற 104 பேர் உட்பட, 1,600-க்கும் அதிகமான விஞ்ஞானிகள் உறுதிசெய்திருக்கின்றனர். அது சொன்னதாவது: “மனிதர்களும் இயற்கை உலகமும் மோதல் பாதையில் இருக்கின்றனர். . . . வரவிருக்கும் பேராபத்தைத் தடுப்பதற்கான வாய்ப்பு ஒருசில பத்தாண்டுகளுக்குள் இழக்கப்பட்டு போய்விடும்.” உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனிதரின் பழக்க வழக்கங்கள், “நாம் அறிந்திருக்கும் வண்ணமாக உயிரைக் காக்கமுடியாதபடி உலகினை அவ்வளவாக மாற்றிவிடக்கூடும்,” என்பதாக அறிக்கை சொன்னது. ஓசோன் குறைவு, தண்ணீர் தூய்மைக்கேடு, காடுகளை அழித்தல், மண் வள இழப்பு, அநேக விலங்கு மற்றும் தாவர இனங்களின் அழிவு போன்றவை கவனிக்கப்படவேண்டிய அவசர பிரச்சினைகளாக குறிப்பிடப்பட்டன. “ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உயிரினத்தின் பின்னல்வலையை நாம் கையாடி கெடுப்பது, நாம் சரியாக புரிந்துகொண்டிராத உயிராதரவு மண்டலத்தின் இயக்கம் நின்றுபோய்விடுவது உட்பட மிகப் பரவலான பாதிப்புகளை துவக்கி வைக்கக்கூடும்,” என்பதாக அக்கறையுள்ள அறிவியல் அறிஞர் குழு குறிப்பிட்டது.

14 ‘ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும்.’ (மத்தேயு 24:14, NW) ராஜ்யத்தின் நற்செய்தி பூமி முழுவதிலும் சகல தேசங்களுக்கும் சாட்சியாக பிரசங்கிக்கப்படும் என்பதாக இயேசு முன்னறிவித்தார். தெய்வீக உதவியுடனும் ஆசீர்வாதத்துடனும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இந்தச் சாட்சிகொடுக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் கோடிக்கணக்கான மணிநேரங்களை செலவிடுகின்றனர். (மத்தேயு 28:19, 20) ஆம், சாட்சிகள் தாங்கள் நற்செய்தியை அறிவிக்காவிட்டால் இரத்தப்பழி குற்றமுள்ளவர்களாக இருப்பர் என்பதை அறிந்திருக்கின்றனர். (எசேக்கியேல் 3:18, 19) ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் ராஜ்ய செய்திக்கு நன்றியுணர்வோடு பிரதிபலித்து உண்மை கிறிஸ்தவர்களாக, அதாவது, யெகோவாவின் சாட்சிகளாக தங்களுடைய நிலைநிற்கையை எடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. யெகோவாவை சேவித்து இவ்விதமாக தேவனை அறியும் அறிவை பரப்புவது மதிப்பிடமுடியாத ஒரு சிலாக்கியமாகும். குடியிருக்கப்பட்ட பூமி முழுவதிலும் இந்த நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டபின், இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையின் முடிவு வரும்.

அத்தாட்சிக்குப் பிரதிபலியுங்கள்

15இந்த ஒழுங்குமுறை எவ்விதமாக முடிவுக்கு வரும்? இந்த உலகின் அரசியல் ஆக்கக்கூறு பொய் மத உலக பேரரசாகிய ‘மகா பாபிலோனைத்’ தாக்குவதோடு ஆரம்பமாகும் ஒரு ‘மிகுந்த உபத்திரவத்தை’ பைபிள் முன்னறிவிக்கிறது. (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 17:5, 16) இந்தக் காலப்பகுதியின்போது, ‘சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்,’ என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 24:29) இது சொல்லர்த்தமாக வானத்தில் நிகழப்போகும் அதிசய சம்பவங்களைக் குறிக்கக்கூடும். எப்படியிருந்தாலும், மத உலகின் பிரகாசிக்கும் வெளிச்சங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிடும். அப்பொழுது “மாகோகு தேசத்தானான கோகு” என்றழைக்கப்படும் சாத்தான் யெகோவாவின் மக்கள்மீது முழு வேகத் தாக்குதலைச் செய்வதில் சீர்கெட்ட மனிதர்களைப் பயன்படுத்துவான். ஆனால் சாத்தான் வெற்றிபெற மாட்டான், ஏனென்றால் கடவுள் அவர்களைக் காப்பாற்றிவிடுவார். (எசேக்கியேல் 38:1, 2, 14-23) “மிகுந்த உபத்திரவம்,” ‘தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தமாகிய’ அர்மகெதோனில் அதனுடைய உச்சக்கட்டத்தை அடையும். அது சாத்தானுடைய பூமிக்குரிய அமைப்பில் எஞ்சியிருக்கும் அனைத்தையும் ஒழித்து, தப்பிப்பிழைக்கும் மனிதவர்க்கத்துக்கு முடிவில்லா ஆசீர்வாதங்கள் வழிந்தோடுவதற்காக வழியைத் திறந்துவைக்கும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 11:15; 16:14, 16; 21:3, 4.

16கடைசி நாட்களை விவரிக்கும் தீர்க்கதரிசனங்களின் ஒருசில அம்சங்கள் தாமே, தனியாக காண்கையில் வரலாற்றின் மற்ற காலப்பகுதிகளுக்குப் பொருந்துவதுபோல தோன்றக்கூடும். ஆனால் அவற்றை சேர்த்துக் காண்கையில், முன்னுரைக்கப்பட்ட அத்தாட்சிகள் நம்முடைய நாளைச் சுட்டிக்காட்டுகின்றன. இதை விளக்குவதற்கு: ஒரு நபரின் கைரேகையை உண்டுபண்ணும் கோடுகள் வேறு எந்த ஒரு நபருக்குமுரியதாயிராத ஒரு மாதிரியை உண்டுபண்ணுகின்றன. அதேவிதமாகவே, கடைசி நாட்கள் அவற்றிற்கே உரிய சொந்த தனிச்சிறப்பான அம்சங்களின் அல்லது சம்பவங்களின் மாதிரியைக் கொண்டிருக்கின்றன. இவை வேறு எந்தக் காலப்பகுதிக்கும் உரியதாக இல்லாத “கைரேகையை” உண்டுபண்ணுகின்றன. கடவுளுடைய பரலோக ராஜ்யம் இப்பொழுது ஆளுகை செய்கிறது என்ற பைபிள் அறிகுறிகளோடு சேர்த்து சிந்தித்துப் பார்க்கையில், இந்த அத்தாட்சி, இவை உண்மையிலேயே கடைசி நாட்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு உறுதியான ஆதாரத்தை அளிக்கிறது. மேலுமாக, தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை சீக்கிரத்தில் அழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு தெளிவான வேதப்பூர்வமான அத்தாட்சி இருக்கிறது.

17இவை கடைசி நாட்கள் என்ற அத்தாட்சிக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? இதைச் சிந்தித்துப்பாருங்கள்: பயங்கரமாக அழிவுண்டாக்கும் ஒரு புயல்காற்று வந்துகொண்டிருக்கிறதென்றால், நாம் தாமதமின்றி எச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆம், பைபிள் இந்தத் தற்போதைய ஒழுங்குமுறைக்கு முன்னறிவிக்கும் காரியமானது நம்மை செயல்படும்படித் தூண்டவேண்டும். (மத்தேயு 16:1-3) நாம் இந்த உலக ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக பார்க்கமுடிகிறது. இது கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கு தேவையான எந்தச் சரிப்படுத்துதல்களையும் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும். (2 பேதுரு 3:3, 10-12) தம்மை இரட்சிப்பின் அதிபதியாக குறிப்பிட்டு, இயேசு அவசரமான இந்த அழைப்பை விடுக்கிறார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப் போலவரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்.”—லூக்கா 21:34-36.

[அடிக்குறிப்புகள்]

a சில பைபிள்கள் “காரிய ஒழுங்குமுறை” என்பதற்குப் பதிலாக “உலகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன. டபிள்யூ. இ. வைன் எழுதிய புதிய ஏற்பாட்டின் வார்த்தைகளுக்கு விளக்க அகராதி (ஆங்கிலம்) ai·onʹ என்ற கிரேக்க வார்த்தை “உறுதியான வரையறையற்ற காலப்பகுதியை, அல்லது அக்காலத்தில் நடைபெறும் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படும் காலத்தைக் குறிப்பிடுகிறது,” என்று சொல்கிறது. பார்க்ஹர்ஸ்டின் புதிய ஏற்பாட்டுக்கு கிரேக்க மற்றும் ஆங்கில சொற்களஞ்சியம் என்ற ஆங்கில புத்தகம் (பக்கம் 17) எபிரெயர் 1:2-ல் ai·oʹnes (பன்மை) என்பதன் உபயோகத்தை கலந்தாலோசிக்கையில் “இந்தக் காரிய ஒழுங்குமுறை” என்ற சொற்றொடரை சேர்க்கிறது. ஆகவே “காரிய ஒழுங்குமுறை” என்ற மொழிபெயர்ப்பு மூல கிரேக்க வாசகத்தோடு இணக்கமாயிருக்கிறது.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

கிறிஸ்துவின் ஆட்சியின் ஆரம்பத்தில் நடக்கும் உலக சம்பவங்களைக் குறித்து பைபிள் என்ன முன்னறிவித்தது?

கடைசி நாட்களின் ஒருசில அம்சங்கள் யாவை?

இவை கடைசி நாட்கள் என்பதாக உங்களை எது நம்பச்செய்கிறது?

[கேள்விகள்]

1. உலகின் காட்சியைக் குறித்து சிந்திக்கையில் அநேகர் ஏன் ஓரளவு தடுமாற்றம் அடைகின்றனர், ஆனால் உலக சம்பவங்களைக் குறித்த நம்பத்தகுந்த விளக்கத்தை எங்கே காணமுடியும்?

2. சீஷர்கள் இயேசுவிடம் என்ன கேள்வியைக் கேட்டனர், அவர் எவ்விதமாக பதிலளித்தார்?

3. இயேசு ஆட்சிசெய்ய ஆரம்பித்தபோது, பூமியில் நிலைமைகள் ஏன் மோசமடைந்துவிட்டன?

4. கடைசி நாட்களின் சில அம்சங்கள் யாவை, அவை எதை சுட்டிக்காண்பிக்கின்றன? (பெட்டியைக் காண்க.)

5, 6. யுத்தத்தையும் பஞ்சத்தையும் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேற்றமடைந்துவருகின்றன?

7. இன்று கொள்ளைநோய்களைப் பற்றிய உண்மைகள் என்னவாக இருக்கின்றன?

8. மக்கள் எவ்வாறு ‘பணப்பிரியராய்’ நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்?

9. முன்னறிவிக்கப்பட்டுள்ள பெற்றோருக்குக் கீழ்ப்படியாமையைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?

10, 11. மக்கள் கொடுமையுள்ளவர்களாயும் சுபாவ அன்பில்லாதவர்களாயும் இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

12. மக்கள் தேவபக்தியின் வேஷத்தை மாத்திரமே உடையவர்களாயிருக்கின்றனர் என்று ஏன் சொல்லப்படலாம்?

13. பூமி கெடுக்கப்பட்டு வருவதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

14. மத்தேயு 24:14 நம்முடைய நாளில் நிறைவேறி வருவதை நீங்கள் எவ்வாறு நிரூபிக்க முடியும்?

15. தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை எவ்வாறு முடிவுக்கு வரும்?

16. கடைசி நாட்களைப்பற்றி முன்னறிவிக்கப்பட்ட அம்சங்கள் நம்முடைய காலத்துக்கே பொருந்துகின்றன என்பது நமக்கு எப்படித் தெரியும்?

17. இவை கடைசி நாட்கள் என்று அறிவது நம்மை என்ன செய்யும்படியாக தூண்டவேண்டும்?

[பக்கம் 102-ன் பெட்டி]

கடைசி நாட்களின் ஒருசில அம்சங்கள்

• முன்னொருபோதும் சம்பவிக்காத போர்.—மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:4.

• பஞ்சம்.—மத்தேயு 24:7; வெளிப்படுத்துதல் 6:5, 6, 8.

• கொள்ளைநோய்கள்.—லூக்கா 21:11; வெளிப்படுத்துதல் 6:8.

• அக்கிரமம் மிகுதியாதல்.—மத்தேயு 24:12.

• பூமி கெடுக்கப்படுதல்.—வெளிப்படுத்துதல் 11:18.

• பூமியதிர்ச்சிகள்.—மத்தேயு 24:7.

• கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்.—2 தீமோத்தேயு 3:1, NW.

• தீராத பண ஆசை.—2 தீமோத்தேயு 3:2.

• பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை.—2 தீமோத்தேயு 3:2.

• இயல்பான அன்பில்லாமை.—2 தீமோத்தேயு 3:3, NW.

• கடவுளை நேசிப்பதற்குப் பதிலாக இன்பங்களை நேசித்தல்.—2 தீமோத்தேயு 3:4, NW.

• தன்னடக்கமில்லாமை.—2 தீமோத்தேயு 3:3.

• நற்குணத்தின்மேல் அன்பில்லாமை.—2 தீமோத்தேயு 3:3, NW.

• வரவிருக்கும் ஆபத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிருப்பது.—மத்தேயு 24:39.

• பரியாசம் செய்பவர்கள் கடைசி நாட்களின் அத்தாட்சியை தள்ளிவிடுகின்றனர்.—2 பேதுரு 3:3, 4.

• கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி உலகம் முழுவதிலும் பிரசங்கித்தல்.—மத்தேயு 24:14.

[பக்கம் 101-ன் முழு படம்]