Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக கடவுள் என்ன செய்திருக்கிறார்

மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக கடவுள் என்ன செய்திருக்கிறார்

அதிகாரம் 7

மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக கடவுள் என்ன செய்திருக்கிறார்

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக, ஒரு வசந்த கால பிற்பகலில், ஒரு ரோம நூற்றுக்கு அதிபதி மூன்று மனிதர்கள் சிறிதுசிறிதாக பொறுக்கமுடியாத வேதனையோடு மரித்துக்கொண்டிருப்பதை கவனித்தான். அந்தப் போர்ச்சேவகன், விசேஷமாக அவர்களில் ஒருவராகிய இயேசு கிறிஸ்துவை கவனித்தான். இயேசு ஒரு மரத்தாலான கழுமரத்தில் அறையப்பட்டிருந்தார். அவர் மரிக்கும் நேரம் நெருங்கிய போது நண்பகல் வானம் இருளடைந்தது. அவர் மரித்தபோது, பூமி மிகவும் நடுங்கியது, போர்ச்சேவகன் ஆச்சரியப்பட்டு, “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்,” என்றான்.—மாற்கு 15:39.

2தேவனுடைய குமாரன்! அந்தப் போர்ச்சேவகன் சொன்னது சரியே. எக்காலத்திலும் நிகழ்ந்துள்ளவற்றிலேயே அதிமுக்கியமான ஒரு சம்பவத்தை அவன் அப்போதுதானே நேரில் பார்த்திருக்கிறான். இதற்கு முந்தைய சந்தர்ப்பங்களில், கடவுள்தாமே இயேசுவை தம்முடைய நேசகுமாரன் என்பதாக அழைத்திருக்கிறார். (மத்தேயு 3:17; 17:5) யெகோவா ஏன் தம்முடைய மகனை மரிப்பதற்கு அனுமதித்தார்? ஏனென்றால் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சிப்பதற்கு இதுவே கடவுளுடைய வழிமுறையாக இருந்தது.

விசேஷித்த ஒரு நோக்கத்துக்காக தெரிந்துகொள்ளப்படுதல்

3இந்தப் புத்தகத்தில் நாம் ஏற்கெனவே கற்றறிந்தபடி, இயேசு மனிதனாவதற்கு முன்பாகவே வாழ்ந்திருந்தார். யெகோவா அவரை நேரடியாக படைத்த காரணத்தால் அவர் கடவுளுடைய ‘ஒரேபேறான குமாரன்,’ என்பதாக அழைக்கப்படுகிறார். அதற்குப்பின் கடவுள் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு இயேசுவைப் பயன்படுத்தினார். (யோவான் 3:18; கொலோசெயர் 1:16) இயேசு மனிதவர்க்கத்தில் விசேஷமாக பிரியமுள்ளவராயிருந்தார். (நீதிமொழிகள் 8:30, 31) மனிதவர்க்கம் மரணத்தீர்ப்பின்கீழ் வந்தபோது விசேஷித்த ஒரு நோக்கத்தைச் சேவிப்பதற்காக யெகோவா தம்முடைய ஒரேபேறான குமாரனை தெரிந்துகொண்டது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை!

4ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் மற்றும் சாத்தான்மீது தம்முடைய தீர்ப்பைக் கூறியபோது, கடவுள் எதிர்கால விடுவிப்பாளரைக் குறித்து “வித்து” என்பதாக பேசினார். ‘ஆதி சர்ப்பம்,’ பிசாசாகிய சாத்தான் கொண்டுவந்திருக்கும் பயங்கரமான கேடுகளைத் துடைத்தழிப்பதற்கு இந்த வித்து அல்லது சந்ததி வருவார். உண்மையில், வாக்குப்பண்ணப்பட்ட வித்து சாத்தானையும் அவனைப் பின்பற்றிய அனைவரையும் நசுக்கிவிடுவார்.—ஆதியாகமம் 3:15; 1 யோவான் 3:8; வெளிப்படுத்துதல் 12:9, NW.

5நூற்றாண்டுகளின்போது, மேசியா என்றும்கூட அழைக்கப்படும் வித்தைப் பற்றி கடவுள் அதிகத்தைப் படிப்படியாக வெளிப்படுத்தினார். பக்கம் 37-ல் உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி, எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள் பூமியில் அவருடைய வாழ்க்கையின் அநேக அம்சங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்தன. உதாரணமாக, கடவுளுடைய நோக்கத்தில் அவருடைய பங்கை நிறைவேற்றும்பொருட்டு அவர் பயங்கர மோசமாக நடத்தப்படுவதை சகித்திருக்க வேண்டியதாயிருந்தது.—ஏசாயா 53:3-5.

மேசியா ஏன் மரிப்பார்

6தானியேல் 9:24-26-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் மேசியா—கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்டவர்—பெரிய ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதாக முன்னுரைத்தது. அவர் என்றுமாக “மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும்” பூமிக்கு வருவார். உண்மையுள்ள மனிதவர்க்கத்தாரின் மரணத் தீர்ப்பை மேசியா நீக்கிவிடுவார். ஆனால் அவர் எவ்வாறு இதைச் செய்வார்? அந்தத் தீர்க்கதரிசனம் அவர் “சங்கரிக்கப்படுவார்,” அல்லது மரணத்துக்கு உட்படுத்தப்படுவார் என்பதாக விளக்குகிறது.

7அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணும் கருத்து பண்டைய இஸ்ரவேலருக்குப் பழக்கப்பட்ட ஒன்றாயிருந்தது. மோசேயின் மூலமாக கடவுள் அவர்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தின்கீழ் தங்களுடைய வணக்கத்தில் அவர்கள் மிருக பலிகளை வழக்கமாகச் செலுத்தி வந்தனர். இது தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அல்லது மூடுவதற்கு மனிதர்களுக்கு ஏதோவொன்று தேவை என்பதை இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைப்பூட்டியது. அப்போஸ்தலன் பவுல் இவ்விதமாக நியமத்தை சுருக்கமாகச் சொன்னார்: “இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.” (எபிரெயர் 9:22) கிறிஸ்தவர்கள் பலிகள் போன்றவற்றைத் தேவைப்படுத்திய மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லை. (ரோமர் 10:4; கொலோசெயர் 2:16, 17) மிருக பலிகளால் நிரந்தரமான மற்றும் முழுமையான பாவ மன்னிப்பைக் கொடுக்க முடியாது என்பதையும்கூட அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மாறாக, செலுத்தப்பட்ட இந்தப் பலிகள் மிக அதிகமான மதிப்புள்ள ஒரு பலியை—மேசியா அல்லது கிறிஸ்துவினுடைய பலியை—முன்நிழலாக குறிப்பிட்டன. (எபிரெயர் 10:4, 10; ஒப்பிடுக: கலாத்தியர் 3:24.) இருப்பினும், ‘மேசியா மரிப்பது உண்மையில் அவசியமாக இருந்ததா?’ என்பதாக நீங்கள் ஒருவேளை கேட்கலாம்.

8ஆம், மனிதவர்க்கம் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் மேசியா மரித்தே ஆகவேண்டும். ஏன் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, ஏதேன் தோட்டத்தை நினைவில் கொண்டுவந்து கடவுளுக்கு எதிராக கலகம் செய்து ஆதாமும் ஏவாளும் இழந்துபோன அந்த மிகப் பெரிய காரியத்தை கிரகித்துக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும். நித்திய ஜீவன் அவர்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது! கடவுளுடைய பிள்ளைகளாக, அவர்கள் அவரோடுகூட நேரடியான ஒரு உறவையும்கூட அனுபவித்து மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் யெகோவாவின் அரசாட்சியை நிராகரித்துவிட்டபோது, அவை அனைத்தையும் இழந்துபோனார்கள், மனித இனத்தின்மேல் பாவத்தையும் மரணத்தையும் கொண்டுவந்தார்கள்.—ரோமர் 5:12.

9நம்முடைய முதல் பெற்றோர் செய்த காரியம் அதிகமான செல்வத்தை விரயம் செய்து தங்களைத் தாங்களே மிகப் பெரிய கடனுக்குள் துணிந்து இறக்கிக்கொண்டது போல இருந்தது. ஆதாமும் ஏவாளும் அந்தக் கடனை தங்கள் சந்ததிக்குக் கடத்தினர். நாம் பரிபூரணராகவும் பாவமற்றவராகவும் பிறவாத காரணத்தால், நம்மில் ஒவ்வொருவரும் பாவமுள்ளவர்களாக இருந்து மரித்துக்கொண்டிருக்கிறோம். நாம் வியாதிப்படுகையில் அல்லது புண்படுத்தும் எதையோ சொல்லிவிட்டு பின்னர் அதைத் தவிர்த்திருக்கலாம் என்பதாக நினைக்கும்போது நம்முடைய சுதந்தரிக்கப்பட்ட கடனை—மனித அபூரணத்தின் விளைவுகளை—நாம் அனுபவிக்கிறோம். (ரோமர் 7:21-25) நம்முடைய ஒரே நம்பிக்கை ஆதாம் இழந்ததை மீண்டும் பெறுவதில் சார்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், நாம் பரிபூரண மனித வாழ்க்கையை சம்பாதிக்க முடியாது. எல்லா அபூரண மனிதர்களும் பாவம் செய்யும் காரணத்தால், நாம் அனைவரும் ஜீவனை அல்ல, மரணத்தையே சம்பாதிக்கிறோம்.—ரோமர் 6:23.

10ஆதாம் தண்டனையால் இழந்துவிட்ட ஜீவனுக்குப் பதிலாக ஏதாவது செலுத்தப்பட முடியுமா? கடவுளுடைய நீதியான தராதரம் சரிநிகரானதை, ‘ஜீவனுக்கு ஜீவனை’ தேவைப்படுத்துகிறது. (யாத்திராகமம் 21:23) ஆகவே இழந்துபோன ஒரு ஜீவனுக்கு ஒரு ஜீவன் செலுத்தப்பட வேண்டும். வெறுமனே ஏதாவது ஒரு மனித ஜீவன் போதுமானதாக இருக்காது. சங்கீதம் 49:7, 8 அபூரணமான மனிதர்களைப் பற்றி சொல்கிறது: “ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங் கூடாதே. (அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது, அது ஒருபோதும் முடிவடையாது).” ஆகவே நிலைமை நம்பிக்கையற்றதாக உள்ளதா? நிச்சயமாகவே இல்லை.

11எபிரெய மொழியில், “மீட்கும் பொருள்” என்ற வார்த்தை பிணையாளை மீட்க செலுத்தப்படும் தொகையைக் குறிக்கிறது, அது சமமதிப்பைக்கூட சுட்டிக்காட்டுகிறது. ஒரு பரிபூரண மனித ஜீவனையுடைய ஒரு மனிதனால் மாத்திரமே ஆதாம் இழந்ததற்கு சமமானதை செலுத்தமுடியும். ஆதாமுக்குப் பிறகு பூமியின்மீது பிறந்த ஒரே பரிபூரண மனிதன் இயேசு கிறிஸ்துவாக இருந்தார். ஆகவே, பைபிள் இயேசுவை “பிந்தின ஆதாம்” என்று அழைத்து கிறிஸ்து ‘எல்லாரையும் மீட்கும் ஈடு பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார்,’ என்பதாக நமக்கு உறுதியளிக்கிறது. (1 கொரிந்தியர் 15:45; 1 தீமோத்தேயு 2:5, 6, NW) ஆதாம் தன்னுடைய பிள்ளைகளுக்கு மரணத்தைக் கடத்தியபோது, இயேசு கடத்தியது நித்தியமான வாழ்க்கையாகும். ஒன்று கொரிந்தியர் 15:22 விளக்குகிறது: “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” அப்படியென்றால் இயேசு “நித்திய பிதா” என்பதாக அழைக்கப்படுவது பொருத்தமாகவே இருக்கிறது.—ஏசாயா 9:6, 7.

மீட்கும் பொருள் செலுத்தப்பட்டது எவ்வாறு

12பொ.ச. 29-ன் இலையுதிர்காலத்திலே, இயேசு முழுக்காட்டப்படுவதற்காகவும் இப்படியாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு தம்மை அளிப்பதற்காகவும் தம்முடைய உறவினனான யோவானிடம் சென்றார். அந்தச் சமயத்தில் யெகோவா இயேசுவை பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்தார். இப்படியாக இயேசு மேசியா அல்லது கடவுளால் அபிஷேகம் பெற்ற கிறிஸ்துவாக ஆனார். (மத்தேயு 3:16, 17) அதற்குப்பின் இயேசு தம்முடைய மூன்றரை ஆண்டுகால ஊழியத்தில் ஈடுபட்டார். அவர் தம்முடைய சொந்த ஊர் முழுவதிலும் பிரயாணம்செய்து கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்து உண்மையுடன் தம்மைப் பின்பற்றுவோரை கூட்டிச்சேர்த்துக் கொண்டுவந்தார். இருந்தபோதிலும், முன்னறிவிக்கப்பட்டபடி, அவருக்கு எதிர்ப்பு அதிகமானது.—சங்கீதம் 118:22; அப்போஸ்தலர் 4:8-11.

13இயேசு தைரியமாக மதத் தலைவர்களின் மாய்மாலத்தை அம்பலப்படுத்தினார், அவர்கள் அவரை கொலைசெய்ய முயற்சித்தனர். கடைசியாக அவர்கள், காட்டிக்கொடுக்கப்படுதல், அநியாயமாக கைதுசெய்யப்படுதல், சட்டவிரோதமான விசாரணை மற்றும் தவறான ராஜதுரோக குற்றச்சாட்டு ஆகியவற்றை உட்படுத்திய ஒரு அருவருப்பான சதித்திட்டத்தை உருவாக்கினர். இயேசு குத்தப்பட்டார், துப்பப்பட்டார், பரிகசிக்கப்பட்டார், சதையைக் கிழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வாரினால் அடிக்கப்பட்டார். ரோம அதிபதி பொந்தியு பிலாத்து பின்னர் அவரைக் கழுமரத்தின்மீது மரிப்பதற்கு தீர்ப்பளித்தார். அவர் மரத்தாலான ஒரு கம்பத்தின்மீது ஆணி அடிக்கப்பட்டு நேராக தொங்கவிடப்பட்டார். ஒவ்வொரு மூச்சும் கடும்வேதனையளிப்பதாக இருந்தது, அவர் மரிப்பதற்கு பல மணிநேரங்கள் எடுத்தன. அந்தக் கடுமையான சோதனை முழுவதிலுமாக இயேசு கடவுளுக்குப் பரிபூரண உத்தமத்தைக் காத்துக்கொண்டார்.

14இவ்விதமாக, பொ.ச. நிசான் 14-ல் தானே, இயேசு “அநேகரை மீட்கும்பொருளாகத்” தம்முடைய ஜீவனைக் கொடுத்தார். (மாற்கு 10:45; 1 தீமோத்தேயு 2:5, 6) பரலோகத்திலிருந்து, யெகோவாவால் தம்முடைய அருமையான மகன் துன்பப்படுவதையும் மரிப்பதையும் பார்க்க முடியும். ஏன் இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான சம்பவம் நிகழுவதை கடவுள் அனுமதித்தார்? அவர் மனிதவர்க்கத்தை நேசித்த காரணத்தால் அப்படிச் செய்தார். இயேசு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) யெகோவா பரிபூரணமான நீதியின் கடவுள் என்பதைக்கூட இயேசுவின் மரணம் நமக்குக் கற்பிக்கிறது. (உபாகமம் 32:4) ஜீவனுக்கு ஜீவனைத் தேவைப்படுத்தும் தம்முடைய நீதியின் நியமங்களை ஏன் கடவுள் விட்டுக்கொடுத்துவிட்டு ஆதாமின் பாவமுள்ள போக்கை ஈடுசெய்வதைப் பொருட்படுத்தாமல் விடவில்லை என்பதாக சிலர் யோசிக்கக்கூடும். காரணம் என்னவென்றால், யெகோவா எப்பொழுதும் தம்முடைய சட்டங்களைப் பின்பற்றி தமக்கு அது எவ்வளவு இழப்பை உட்படுத்தினாலும் அவற்றை உறுதியாக கடைப்பிடிக்கிறார்.

15இயேசுவின் மரணம் மகிழ்ச்சியான விளைவைக் கொண்டிருக்கவேண்டும் என்பதையும்கூட யெகோவாவின் நீதி தேவைப்படுத்தியது. எப்படியிருந்தாலும், உண்மையுள்ள இயேசுவை மரணத்தில் என்றுமாக உறங்கும்படி அனுமதிப்பது நீதியாக இருக்குமா? நிச்சயமாகவே இருக்காது! கடவுளுடைய பரிசுத்தர் கல்லறையிலேயே தங்கியிருக்கமாட்டார் என்பதாக எபிரெய வேதாகமம் முன்னறிவித்திருந்தது. (சங்கீதம் 16:10; அப்போஸ்தலர் 13:35) மூன்று நாட்களின் பகுதிகளில் அவர் மரணத்தில் உறங்கிக்கொண்டிருந்தார், பின்னர் யெகோவா தேவன் அவரை வல்லமையுள்ள ஒரு ஆவி ஆளாக உயிர்த்தெழுப்பினார்.—1 பேதுரு 3:18.

16அவருடைய மரணத்தின்போது, இயேசு எல்லா காலத்துக்குமாக தம்முடைய மனித ஜீவனை ஒப்புக்கொடுத்தார். பரலோகத்தில் ஜீவனுக்கு எழுப்பப்பட்ட போது, அவர் ஜீவனை அளிக்கும் ஆவியானார். மேலுமாக, சர்வலோகத்திலும் மகா பரிசுத்த ஸ்தலமாக இருக்கும் இடத்துக்கு இயேசு எழுந்து சென்றபோது, அவர் தம்முடைய அருமையான தந்தையோடு மீண்டும் சேர்க்கப்பட்டு, முறைப்படியாக தம்முடைய பரிபூரண மனித உயிரின் மதிப்பை அவரிடமாக சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:23-28) அந்த விலைமதிப்புள்ள உயிரின் மதிப்பு அப்பொழுது கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின் சார்பாக பிரயோகிக்கப்பட முடியும். உங்களுக்கு அது எதை அர்த்தப்படுத்துகிறது?

கிறிஸ்துவின் மீட்கும் பொருளும் நீங்களும்

17கிறிஸ்துவின் மீட்கும் பலி இப்பொழுதேகூட உங்களுக்குப் பயனுள்ளதாயிருக்கும் மூன்று வழிகளைச் சிந்தியுங்கள். முதலாவது, அது பாவ மன்னிப்பைக் கொண்டுவருகிறது. இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் வைப்பதின் மூலம், நமக்கு “பாவமன்னிப்பாகிய மீட்பு” கிடைக்கிறது. (எபேசியர் 1:7) ஆகவே நாம் வினைமையான ஒரு பாவத்தைச் செய்துவிட்டிருந்தாலும்கூட, இயேசுவின் நாமத்தில் கடவுளிடமாக மன்னிப்பைக் கேட்கலாம். நாம் உண்மையில் மனந்திரும்பினால், யெகோவா தம்முடைய மகனின் மீட்கும் பலியின் மதிப்பை நமக்குப் பிரயோகிக்கிறார். கடவுள் நம்மை மன்னித்து, பாவம் செய்வதன் மூலம் நாம் வருவித்துக்கொள்ளும் மரண தண்டனையைக் கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக நல்மனச்சாட்சியின் ஆசீர்வாதத்தை நமக்கு அருளிச்செய்கிறார்.—அப்போஸ்தலர் 3:19; 1 பேதுரு 3:21.

18இரண்டாவதாக, கிறிஸ்துவின் மீட்கும் பலி நமக்கு எதிர்கால நம்பிக்கைக்கான ஆதாரத்தை அளிக்கிறது. தரிசனத்தில் அப்போஸ்தலன் யோவான், வரவிருக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் பேரழிவை உட்படுத்தும் முடிவை “ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” தப்பிப்பிழைப்பர் என்பதாக கண்டார். இத்தனை அநேக மற்ற ஆட்களை கடவுள் அழிக்கையில் அவர்கள் ஏன் தப்பிப்பிழைப்பர்? திரள் கூட்டத்தார் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய [இயேசு கிறிஸ்து] இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்,” என்பதாக ஒரு தூதன் யோவானிடம் சொன்னார். (வெளிப்படுத்துதல் 7:9, 14) இயேசு கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசத்தை அப்பியாசித்து, தெய்வீக தேவைகளுக்கு இசைவாக நாம் வாழும்வரையில், கடவுளுடைய பார்வையில் நாம் சுத்தமுள்ளவர்களாக இருப்போம், நித்திய ஜீவனின் நம்பிக்கை நமக்கு இருக்கும்.

19மூன்றாவதாக, மீட்கும் பலி யெகோவாவின் அன்புக்கு முடிவான அத்தாட்சியாக இருக்கிறது. கிறிஸ்துவின் மரணம் சர்வலோகத்தின் வரலாற்றில் நடப்பிக்கப்பட்ட இரண்டு மிகப் பெரிய அன்பின் செயல்களை வெளிப்படுத்தியது: (1நமக்காக தம்முடைய மகனை அனுப்பினதில் கடவுளுடைய அன்பு; (2மீட்கும் பொருளாக தம்மையே மனமுவந்து அளித்ததில் இயேசுவின் அன்பு. (யோவான் 15:13; ரோமர் 5:8) நாம் உண்மையிலேயே விசுவாசத்தை அப்பியாசித்தால், இந்த அன்பு நம் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது. அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: ‘தேவனுடைய குமாரன் என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.’—கலாத்தியர் 2:20; எபிரெயர் 2:9; 1 யோவான் 4:9, 10.

20ஆகவே, இயேசுவின் மீட்கும் பலியின் மேல் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலம் கடவுளும் கிறிஸ்துவும் காண்பித்த அன்புக்காக நம்முடைய நன்றியறிதலைக் காட்டுவோமாக. அவ்விதமாகச் செய்வது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. (யோவான் 3:36) என்றபோதிலும், பூமியின்மீது இயேசுவின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நம்முடைய இரட்சிப்பு அதிமுக்கியமான ஒரு காரணமாக இல்லை. அவருடைய முக்கிய அக்கறை, அதைவிட பெரிய ஒரு விவாதத்தை, சர்வலோகத்துக்குரிய ஒன்றைப் பற்றியதாய் இருந்தது. அடுத்த அதிகாரத்தில் நாம் பார்க்கப் போகிற விதமாக, கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் ஏன் இவ்வளவு காலமாக இந்த உலகத்தில் நிலைத்திருக்கும்படியாக அனுமதித்திருக்கிறார் என்பதை காண்பிப்பதன் காரணமாக அந்த விவாதம் நம் அனைவருக்கும் பொருத்தமாய் இருக்கிறது.

உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்

மனிதவர்க்கத்தை இரட்சிப்பதற்காக இயேசு ஏன் மரிக்க வேண்டியதாய் இருந்தது?

மீட்கும் பொருள் எவ்வாறு செலுத்தப்பட்டது?

மீட்கும் பொருளிலிருந்து நீங்கள் என்ன வழிகளில் பயனடைகிறீர்கள்?

[கேள்விகள்]

1, 2. (அ) ரோம நூற்றுக்கு அதிபதி ஒருவர், கடவுளுடைய குமாரன் யார் என்பதை எவ்விதமாக போற்றுகிறவரானார்? (ஆ) இயேசு மரிக்கும்படி யெகோவா ஏன் அனுமதித்தார்?

3. மனிதவர்க்கத்தின் சார்பாக விசேஷித்த ஒரு நோக்கத்துக்காக கடவுளுடைய ஒரேபேறான குமாரன் தெரிந்துகொள்ளப்பட்டது ஏன் பொருத்தமாயிருந்தது?

4, 5. இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பாக, மேசியானிய வித்தைப் பற்றி பைபிள் என்ன வெளிப்படுத்தியது?

6. தானியேல் 9:24-26-ன்படி, மேசியா என்ன செய்து முடிப்பார், மேலும் எவ்விதமாக?

7. யூதர்கள் ஏன் மிருக பலிகளைச் செலுத்தினர், இவை எதை முன்நிழலாக குறிப்பிட்டன?

8, 9. விலைமதிப்புள்ள என்ன காரியங்களை ஆதாமும் ஏவாளும் இழந்தனர், அவர்களுடைய செயல்கள் அவர்களுடைய சந்ததியாரை எவ்வாறு பாதித்தன?

10. ஆதாம் இழந்துபோனதை மீட்க என்ன தேவைப்பட்டது?

11. (அ) எபிரெயுவில் “மீட்கும் பொருள்” என்ற வார்த்தை எதைச் சுட்டிக்காட்டுகிறது? (ஆ) யார் மாத்திரமே மனிதவர்க்கத்தை மீட்க முடியும், ஏன்?

12. இயேசு எப்பொழுது மேசியாவானார், அதற்குப்பின் அவர் என்ன வாழ்க்கைப் போக்கைப் பின்தொடர்ந்தார்?

13. உத்தமத்தைக் காப்பவராக இயேசுவின் மரணத்துக்கு வழிநடத்திய சம்பவங்கள் யாவை?

14. கடவுள் ஏன் தம்முடைய மகன் துன்பப்படவும் மரிக்கவும் அனுமதித்தார்?

15. இயேசுவின் வாழ்க்கை நிரந்தரமாக முடிவுக்கு வர அனுமதிப்பது அநீதியாக இருந்திருக்கும் என்பதால் யெகோவா என்ன செய்தார்?

16. பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றபோது இயேசு என்ன செய்தார்?

17. கிறிஸ்துவின் மீட்கும் பலியின் அடிப்படையில் நாம் எவ்வாறு நமக்குப் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்?

18. இயேசுவின் பலி என்ன விதத்தில் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது?

19. கிறிஸ்துவின் பலி எவ்வாறு அவரும் அவருடைய தந்தையும் உங்களை நேசிப்பதை நிரூபிக்கிறது?

20. இயேசுவின் மீட்கும் பலியில் நாம் ஏன் விசுவாசத்தை அப்பியாசிக்க வேண்டும்?

[பக்கம் 67-ன் முழுபடம்]